ஞானத்தின் வகைகள்! (Post No.4472)

Date: 9 DECEMBER 2017

 

Time uploaded in London- 5-17 am

 

WRITTEN BY S NAGARAJAN

 

Post No. 4472

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

அத்வைத ஸார விளக்கம் – கட்டுரை எண் 4

முதல் மூன்று கட்டுரைகள்: எண் 4388- வெளியான தேதி: 12-11-17

இரண்டாம் கட்டுரை எண் 4406 -வெளியான தேதி : 18-11-17

மூன்றாம் கட்டுரை எண் 4445 – வெளியான தேது : 30-11-17

 

ஞானத்தின் வகைகள்!

ச.நாகராஜன்

 

அத்வைத விளக்கத்தில் ஞான வகைகளைப் பற்றிப் பார்ப்போம். இதைப் படிப்பவர்கள் வேதாந்த விசாரத்தில் ஆர்வம் உள்ளவர்களாகவும், விஷயத்தை பல முறை படித்து நுணுகி ஆராய்வதற்கான பொறுமையைக் கொண்டுள்ளவர்களாகவும் இருத்தல் அவசியம். (சிரத்தா + பொறுமை)

*

 

சரீரத்தினால் சம்சார துக்கம் வருகிறது என்கிறீர்கள். இந்த சம்சார துக்கம் எப்போது போகும்?

சரீரம் போனால் துக்கம் போகும்.

கர்மம் நசித்தால் சரீரம் போகும்.

இராக த்வேஷங்கள் முதலியவை நசித்தால் கருமம் போகும்.

அபிமானம் நசித்தால் இராக த்வேஷாதிகள் போகும்.

அவிவேகம் நசித்தால் அபிமானம் போம்.

அஞ்ஞானம் நசித்தால் அவிவேகம் போகும்.

அஞ்ஞானமோ எனில், அத்வைத ப்ரம்மஸ்வரூபமாகிய ஆத்மாவாகிய தன்னை,’பிரம்மமே நான்’, ‘நானே பிரம்மம்’என்ற ஞானத்தினால் போகும்.

அதாவது இருளும் வெளிச்சமும் போல இவைகளில் ஒன்று இருந்தால் மற்றொன்று இருக்க முடியாது. அதுபோல ஞானம் உண்டானவிடத்து அஞ்ஞானம் இருக்காது.

 

கர்மமானது மூன்று வித கரணங்களினால் உண்டாகிறது என்று சொன்னீர்கள். ஞானமும் அந்தக்கரணத்தினால் உண்டாகி விருத்தியாகி இருக்கின்றபடியால் அதுவம் கூட கர்மமே என்று ஆகிறதல்லவா? ஆகவே, அது எப்படி அஞ்ஞானத்தை நசிக்கச் செய்யும்?

விருத்தி என்பது மனத்திலிருந்து உண்டான கர்மமேயாகும். அந்த விருத்தியானது ரூபத்தை அறிகின்ற விஷயத்தில்,  கண்களைப் போல, ஞானத்திற்கு ஒரு சாதனமாக இருந்து அஞ்ஞானத்தை நிவர்த்திக்கிறது. ஞானமோ நித்தியமானது.

 

இந்த ஞானம் எத்தனை வகைப்படும்?

ஸ்வரூப ஞானம், விருத்தி ஞானம் என இப்படி ஞானம் இருவகைப் படும்.

ஸ்வரூப ஞானம் என்றால் சுஷூப்தியில் அஞ்ஞானத்தைப் பிரகாசிப்பதாம்.

ஜாக்கிர ஸ்வப்னங்களில் விஷயங்களைப் பிரகாசிப்பது விருத்தி ஞானம்.

ஞானம் ஆத்ம ஸ்வரூபம்.

அந்த ஸ்வரூபமாக இருக்கின்ற ஞானமானது, விருத்திகளில் பிரவேசித்து அஞ்ஞானத்தை நசிக்கச் செய்கிறது.

 

அதெப்படி?புரியவில்லை! உதாரணங்களுடன் விளக்குங்களேன்.

தேத்தாங்கொட்டை நியாயம் தெரியுமா? அதன்படி , அதாவது தேத்தாங்கொட்டையானது, தண்ணீரிலுள்ள அழுக்கைப் போக்கி விட்டு, அந்த அழுக்குடன் அதுவும் அடியில் தங்கி விடுவது போல, விருத்தி ஞானமும் அஞ்ஞானத்தையும், அதன் காரியத்தையும் நசிக்கச் செய்து தானும் தானாகவே நசித்துப் போகும். இப்படி விருத்தி நாசமானால், அதில் பிரதிபலித்த ஞானமும்  தனக்கு பிம்பமான ஸ்வரூப ஞானத்தை அடையும்.பிறகு அத்வைதமாகிய ஆத்ம ஸ்வரூபம் மட்டும் மிஞ்சும். இப்படிப்பட்ட ஞானம் ஆத்மனாத்மா (ஆத்மா, அனாத்மா) விசாரத்தினாலே உண்டாகிறது.

ஆத்மா யார்?

மூன்று சரீரங்களுக்கு விலக்ஷணன் ஆகியும், மூன்று அவஸ்தைகளுக்கும் சாக்ஷி ஆகியும், பஞ்ச கோசங்களுக்கு அன்னியன் ஆகியும் உள்ள சச்சிதானந்த லக்ஷணனே!

 

அனாத்மா யார்?

மூன்று சரீரங்களும் உடையவன்.

 

விளக்கமாகச் சொல்லுங்கள்.

ஸமஷ்டி  ஸ்தூல சரீரம்

ஸமஷ்டி சூக்ஷ்ம சரீரம்

ஸமஷ்டி காரண சரீரம்

என்றும்,

வியஷ்டி ஸ்தூல சரீரம்

வியஷ்டி சூக்ஷ்ம சரீரம்

வியஷ்டி காரண சரீரம்

என்று மூன்று சரீரங்களும்,

ஆக ஸமஷ்டி ,வியஷ்டியினால் இப்படி ஆறு விதமாக இருக்கிறான்.

 

ஆத்மாவுக்கு ஈஸ்வரத்துவமும்,  ஜீவாத்வமும் வாஸ்தவமாக உள்ளதா?

வாஸ்தவம் அல்ல.

ஸமஷ்டி உபாதியினால் ஈஸ்வரத்துவமும்

வியஷ்டி உபாதியினால் ஜீவாத்வமும்

மயோபாதியினால் (மய, உபாதி; மய =மாயை) ஈஸ்வரத்துவமும்

அவித்யோபாதியினால் (அவித்யா, உபாதி) ஜீவாத்வமுமே அன்றி வாஸ்தவமல்ல.

ஆத்மாவானவன் மாயையாகவும், அவித்தையாகவும் தானாகவே ஆகி,

ஜீவீஸ்வரர்களாகச் செய்து கொள்ளுகிறான்.

ஈஸ்வரனுக்கு சமஷ்டி காரண சரீரத்தில் அபிமானம் (விருப்பம்) இல்லை.

 

ஏன் இல்லை?

அகங்காரமானது மஹாசுஷூப்தியில் நசித்துப் போவதால்.

 

இந்த ஸமஷ்டி காரணோபதியான ஈஸ்வரனுக்கு என்ன பெயர்?

அவ்வியாக்ருதன் என்றும் அந்தர்யாமி என்றும் பெயர்.

 

 

ஸமஷ்டி சூக்ஷ்ம சரீரோபாதியான ஈஸ்வரனுக்கு என்ன பெயர்?

ஹிரண்யகர்ப்பன், சூத்திராத்மா, மஹாபிராணன் என்ற பெயர்கள் உண்டு.

 

ஸமஷ்டி ஸ்தூலோபாதிகனானை ஈஸ்வரனின் பெயர்கள் யாவை?

விராட்டு, வைராஜன், வைஸ்வானரணன் என்ற பெயர்கள் உண்டு.

 

நன்றி. இன்னும் சில கேள்விகள் உள்ளன, கேட்கலாமா!

கேளுங்கள், கொடுக்கப்படும் (விடை தரப்படும்)!

****

 

தலைகளை இழந்த இந்துக் கடவுள்கள்! (Post No.4425)

Written by London Swaminathan 

 

Date: 23 NOVEMBER 2017

 

Time uploaded in London- 18-30

 

 

Post No. 4425

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

விஷ்ணு ஏன் தலையை இழந்தார்?

 

பிரம்மா ஏன் தலையை இழந்தார்?

 

பிருகு ஏன் தலையை இழந்தார்?

 

தக்ஷன் ஏன் தலையை இழந்தார்?

 

கணபதி ஏன் தலையை இழந்தார்?

 

 

புராண,  இதிஹாசங்களில் சுவையான கதைகள் உள்ளன. ஆனால் அவைகளுக்குப் பின்னுள்ள தத்துவங்கள் மறைந்து விட்டன. அவைகளை பின்னொரு சமயம்  தனிதனியாகக் காண்போம். முதலில் தலை இழந்த கடவுளரின் கதைகளைச் சுருக்கமாகக் காண்போம். விஷ்ணுவுக்குத் தலை போன கதை சதபத பிராமணம் முதலிய நூல்களில் மட்டும் உள்ளது; வேறு எங்கும் காணக் கிடைக்கில.

முதலில் கணபதி!

முழு முதற் கடவுளான விநாயகப் பெருமானுக்குத் தலை கழன்று, யானைத் தலை வந்து, ஆனைமுகன் ஆனதற்கு இரண்டு வரலாறுகள் உண்டு. பார்வதி தேவி குளியல் அறைக்குள் நுழைந்த சமயம் ‘மகனே! எந்த ஆண்மகன் வந்தாலும் இந்தப் பக்கம் வராமல் பார்த்துக்கொள்’ என்று கண

பதியைக் காவல் வைவத்தாள் தேவி.

அவரும் ‘தாய் சொல்லைத் தட்டாதே’ என்று வழி மேல் விழி வைத்துக் காத்திருந்தார். அப்போது சிவ பெருமான் அங்கே வரவே அவரையும் தடுத்தார் கணபதி; யாரென்று பாராமல், அல்லது மகன் என்றும் பாராமல்– அவர் தலையைச் சிரச் சேதம் செய்தாராம் சிவ பெருமான்.

‘முப்புரம் எரிசெய்த அச்சிவன் உறை ரதம் அச்சது பொடிசெய்த அதிசூரனுக்கே’ இந்த கதி. பிள்ளைக்கு ஒரு குறை என்றால் தாய் வாளாவிருப்பாளா? சிவனைக் கோபித்தார்; உடனே தலை வேண்டும் என்றார். சிவனும் அருகில் இருந்த ஆனைத் தலையைத் தூக்கி அவர் தலையில் பொருத்தினார்.

அந்தக் காலத்தில் தலை அறுவைச் சிகிச்சை எல்லாம் சர்வ சாதாரணமாக நடந்தது போலும்! கண்ணை மாற்றி ஆபரேஷன் செய்த கண்ணப்ப நாயனாரை அறிவோம்; ஆயிரம் தாமரை மலரில் ஒன்று குறைந்ததே என்று சிவனுக்கு கண் தாமரையால் பூஜித்த விஷ்ணுவை அறிவோம்; பின்வரும் கதைகளில் தலை ஆப்ரேஷன் பற்றியும் அறிகிறோம்.

 

கணபதி பற்றிய இரண்டாவது கதை:-

சனைச்சரனைக் கண்டால் எல்லோருக்கும் பயம்; இந்துக் கடவுள்களுக்கும் பயம்! “டேய், சனியனே! அந்தப் பக்கம் சனைச்சரன் வருகிறான்; அவனைப் பார்த்து, கீர்த்து தொலைத்து விடாதே; பொல்லாத பயல்; அவனவன் கர்ம வினைக்கு ஏற்ப பலன் தருபவன்; பெரிய வீட்டுப் பிள்ளை என்றும் பார்க்க மாட்டான்” என்று எச்சரித்திருந்தாள் உமை;  கணபதி சிறு பிள்ளைதானே! தீராத விளையாட்டுப் பிள்ளை! சனைச் சரனைப் பார்த்துவிட்டார்; உடனே விநாயகப் பெருமானின் தலை சாம்பலாகப் போயிற்றாம்; ஒவென்று உமையம்மை கதற, அந்தப் பக்கம் வந்த பிரம்மதேவன் அம்மையாரே! உடனே வேறு தலையைப் பொருத்துங்கள்; மாற்று அறுவைச் சிகிச்சை செய்யும் உறுப்புகள் எல்லாம் ஒரு சில மணி நேரத்துக்குள் கிடைக்க ஆஸ்பத்திரிகள் விமானம் ஹெலிகாப்டர், அதி வேக டாக்ஸி எல்லாவற்றையும் பயன்படுத்துவதை நீர் அறியீரா? என்று பிரம்மதேவன் சொல்ல, அவரும் அருகில் கிடைத்த யானையின் தலையை அவசரம் அவசரமாகப் பொருத்தினாராம்.

கதை கேட்க வேடிக்கையாக இருக்கிறது. ஆனால் யானைக்குள்ள முழு அறிவும் சிறு வயதிலேயே பிள்ளையாருக்குக் கிடைத்ததைக் காட்ட இப்படி ஒரு கதை போலும்.

என்ன இருந்தாலும் அந்த ஆனைமுகத்தைக் காணும் போது நமக்கு ஆனந்தம் பெருகுகிறது.

ஒரு வேளை யானை வேட்டை பெருகி தந்தங்களை ஏற்றுமதி செய்தவுடன் உலக நிறுவனங்கள் யானை வேட்டைக்கும் தந்த ஏற்றுமத்திக்கும் தடை விதித்தது போல அந்தக் காலத்திலும் யானை வேட்டை அதிகரிக்கவே இப்படி கடவுள் தலையில் யானையை வைத்து அந்த வேட்டையைத் தடுத்தனர் என்று சொன்னாலும் பொருத்தமே. தசரதர் யானை வேட்டைக்குப் போய் முனிவர் மகனைக் கொன்ற கதைதான் நமக்குத் தெரியுமே.

இன்று லண்டன் முதலிய நகர்களில் யானைப் பாதுகாப்புக்காக, சிலை வைத்து நிதி சேகரிக்கின்றனர் வெள்ளைக்காரர்கள்; நாமோ சின்னக் கதை மூலம் யானை வேட்டையைத் தடுத்துவிட்டோம்!

 

லக்கி (Lucky) கடவுள் விஷ்ணு!

 

அடுத்ததாக விஷ்ணுவுக்குத் தலைபோன கதையைக் காண்போம்:-

கடவுளரிலும் ‘லக்கி’ கடவுள் உண்டாம். எல்லாக் கடவுள்களையும் விட விஷ்ணுதான் அதிர்ஷ்டசாலி என்று பிராமண நூல்கள் புகழ்கின்றன. அவரை சிரேஷ்ட (இதிலிருந்து வந்த தமிழ்ச் சொல் சிறப்பு) — சிறப்பான கடவுள் என்று அவை பகரும். ஒரு போட்டியில்     விஷ்ணு வெற்றி பெற்றார். இதனால்  இந்திரனுக்கு அவர் மீது பொறாமையாம். விஷ்ணுவின் தலையை சிரச் சேதம் பண்ணி விட்டாராம். இதற்கு முன் ரிக் வேதம், தமிழ் வேத மான திருக்குறள் ஆகியவற்றில் வாமானாவதாரம் மட்டுமே பேசப்பட்டது (அடி அளந்தான் என்பான் வள்ளுவன்) மூன்றடியால் உலகளந்தவன் என்று வேதம் கூறும். ஓங்கி உலகளந்த உத்தமனுக்கு இங்கோ தலையே போயிற்று; இது பற்றி தைத்ரீய ஆரண்யகம் முதலியவற்றில் இன்னும் ஒரு கதையும் உண்டு.

போட்டியில் விஷ்ணு வெற்றி பெறவே தேவர் தலைவனான இந்திரனுக்குப் பொறாமைத் தீ எழுந்ததாம்; உடனே ஒரு சதித் திட்டம் தீட்டப்பட்டது. ஜேம்ஸ் பாண்டு ஸ்டைலில் ஒரு புதிய திட்டம் தீட்டினர் தேவர்கள்; எறும்புகளை அனுப்புவோம் அவை விஷ்ணுவின் வில்லில் உள்ள நாணைச் சாப்பிடட்டும் . அப்பொழுது வில் ‘டமார்’ என்று விலகும்; அதை வைத்திருக்கும் விஷ்ணுவும் தலை சாய்ப்பார் என்று.

 

அவர்கள் திட்டப்படியே நடந்தது! எறும்புகள் அரிக்க, நாண் கயிறு அறுந்து போக, வில்லின் மீது சாய்ந்து நின்று கொண்டிருந்த பெருமாள் மீது வில் தெறிக்க, அவர் தலை உருண்டதாம். சதபத பிராமணத்தின் 14ஆவது பிரிவில் உள்ள கதை இது.

 

பிராமண நூல்கள் நிறைய தத்துவ கதைகளை  மறை மொழியில் மொழியும்; அது போன்ற ஒரு கதை இது.

தலை என்பது ஒருவரின் மதிப்பு, பெருமை என்ற பொருள் உடைய ஒரு சொல். ஒருவரைத் தலைவன் என்று சொன்னால் அவருக்கு மட்டும் தலை இருக்கிறது, தொண்டர்களுக்கு எல்லாம் தலை இல்லை என்று பொருளல்ல ; மந்திரி சபையில் பல தலைகள் உருண்டன என்றால் பலர் பதவி இழந்தனர் என்று பொருள்; அலுவலத்தில் நாளை மாற்றங்கள் வரப் போகிறதாம்; யார் தலை உருளப் போகிறதோ என்கிறோம்– ஆகவே தலை போதல் என்பதன் உட்பொருளைக் காண்பதே பொருத்தம்.

பிரம்மா, தக்ஷன் கதைகளை இன்னும் ஒரு பகுதியில் காண்போம்.

TAGS:– தலை போன, தலை இழந்த கடவுள், விஷ்ணு தலை, யானைத் தலை

–தொடரும்

கிரஹங்கள் நட்சத்திரங்கள் படைப்பு; மனு நீதி நூல்-பகுதி 3 (Post No.4417)

Written by London Swaminathan 

 

Date: 20 NOVEMBER 2017

 

Time uploaded in London- 21-18

 

 

Post No. 4417

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

முதலிரண்டு பகுதிகள் கடந்த இரண்டு தினங்களில் வெளியிடப்பட்டன.

 

கிரஹங்கள் நட்சத்திரங்கள் படைப்பு; மனு நீதி நூல்-பகுதி 3 (Post No.4417)

 

முதல் அத்தியாயம்

ஸ்லோகம் 21. அந்த பிரம்மானவர் வேதத்தில் சொல்லியபடி, அதனதன் அடையாளங்களுடன் மனிதனையும் பிராணிகளையும் படைத்தார். அதாவது படைக்கப்பட்ட எல்லா உயிரினங்களுக்கும் அதனதன் தொழில்கள், பெயர்கள், அடையாளங்கள் ஆகியவற்றை, வேதத்தில் சொல்லியபடி செய்தார்.

 

22.காமத்தை சுபாவமாகவுடைய இந்திராதி தேவர்களையும், சூட்சும ரூபமுள்ள சாத்திய தேவர்களையும், அழிவற்றதான யாகங்களையும், சராசரங்களையும் அந்தப் பிரபுவானவர் சிருஷ்டித்தார்.

 

 1. யாகங்கள் நிறைவேறும் பொருட்டு அக்னி, வாயு, சூரியன் ஆகியவற்றிலிருந்து ரிக், யஜூர், சாம வேதங்களை வெளிப்படுத்தினார். இவை அநாதியான வேதங்கள் (அதாவது ஆதி அந்தம் அற்றவை.)

 

24.பின்னர் காலத்தையும், காலத்தின் பிரிவான மாதங்களையும், நட்சத்திரங்களையும் நவக் கிரஹங்களையும், நதிகளையு, சமுத்திரங்களையும், மலைகளையும் மேடு பள்ளங்களையும் உண்டு பண்ணினார்.

25.தவம், வாக்கு, சுக துக்கங்கள் காம,  க்ரோதம் முதலியவற்றை, மக்களின் இனப்பெருக்கத்துக்காக உண்டு பண்ணினார்.

 1. கர்மத்தை அறிவதற்காக தர்மம், அதர்மம் மற்றும் அதைப் பின்பற்றுபவர்கள், அவர்களுக்கு வரக்கூடிய சுக துக்கங்களையும் உண்டுபண்ணினார்.

27.முன் சொன்ன பஞ்ச பூதங்களுடைய சூட்சுமமான தன்மாத்திரைகளால் இவ்வுலகம் கிரமமாக வளர்கின்றது. இந்த உலகம் சூட்சுமமாகவும், ஸ்தூலமாகவும் இருக்கிறது.

28.இறைவன் ஒவ்வொரு பிராணிக்கும் நிர்ணயித்த அதே குணங்களுடன் அவை மீண்டும் பிறந்து அதேபடி செயல்படுகின்றன.

29.கொலை செய்யும் குணத்தை சிங்கம் முதலிய மிருகங்களுக்குக் கொடுத்தார். மான்களுக்கு கொலையின்மையை அளித்தார். தயை என்னும் குணத்தை பிராமணர்களுக்கும், கொடுமை (போர்) என்பதை க்ஷத்ரியர்களுக்கும், குருவுக்குப் பணிவிடை செய்வதை பிரம்மசாரிகளுக்கும், அவர்களுக்கே மது மாமிச புசித்தல் எனும் அதர்மத்தையும், தேவர்களுக்கு சத்தியத்தையும், மனிதர்களுக்கு அசத்தியத்தையும் (பொய்) உண்டு பண்ணினார்.

 

30.வசந்தம் முதலிய பருவ காலங்கள் எப்படி மாறுதல் அடைகின்றனவோ அது போலப் பிராணிகளும் தம்தம் கர்மத்துக்குத்  தக்க  செய்கைகளைத் தாமே அடைகிறார்கள்.

 

எனது கருத்து:

டார்வினின் பரிணாமக் கொள்கைக்கு நேரடியான சான்றுகள் இல்லை. ஆயினும் இறைவன், தன்னுடைய விதையை முதலில் கடலில் வித்தித்தான் என்பது பரிணாமக் கொள்கையின் முதல் படியாக எடுத்துக் கொள்ளலாம். தசாவதாரத்தில் பரிணாமக் கொள்கை வரிசையாக இருப்பது போல இங்கு இல்லை.

 

மேலும் எதிர் எதிர் குணங்கள் இருந்தால்தான் (இன்பம்/துன்பம்; மகிழ்ச்சி- சோகம்) மனித இனம் வளர முடியும் என்பதையும் சொல்கிறார். எல்லோரும் ஒரே குணத்துடன் இருந்தால் வளராது என்று இப்படிப் படைத்தான். மின்சாரம் ஓடுவதற்கு பாஸிட்டிவ், நெகட்டிவ் மின்சாரம் (நேர்மறை, எதிர்மறை மின்சாரம் ) தேவைப்படுவது போல இது.

 

ஒவ்வொரு பிராணியும் அதே குணத்தோடு மீண்டும் மீண்டும் வரும் விஷயம் மரபியல் (Genetics) விஷயமாகும்

 

வேதம், யாக, யக்ஞம் ஆகியன ஆதிகாலம் தொட்டு  இருக்கின்றன. மனிதன், பிராணிகள் படைப்புக்குப் பின்னர் கிரஹங்கள், நட்சத்திரங்கள் படைக்கப்பட்டதாக சொல்லுவது அறிவியலுக்கு முரணானது. ஆயினும் ஸ்லோகத்தின் அல்லது வாக்கியத்தின் வரிசைக் கிரமத்தை மாற்றுவதில் தவறு ஏதுமில்லை.

 

 1. But in the beginning he assigned their several names, actions, and conditions to all (created beings), even according to the words of the Veda.
 2. He, the Lord, also created the class of the gods, who are endowed with life, and whose nature is action; and the subtile class of the Sadhyas, and the eternal sacrifice.
 3. But from fire, wind, and the sun he drew forth the threefold eternal Veda, called Rik, Yajus, and Saman, for the due performance of the sacrifice.
 4. Time and the divisions of time, the lunar mansions and the planets, the rivers, the oceans, the mountains, plains, and uneven ground.
 5. Austerity, speech, pleasure, desire, and anger, this whole creation he likewise produced, as he desired to call these beings into existence.
 6. Moreover, in order to distinguish actions, he separated merit from demerit, and he caused the creatures to be affected by the pairs (of opposites), such as pain and pleasure.
 7. But with the minute perishable particles of the five (elements) which have been mentioned, this whole (world) is framed in due order.
 8. But to whatever course of action the Lord at first appointed each (kind of beings), that alone it has spontaneously adopted in each succeeding creation.
 9. Whatever he assigned to each at the (first) creation, noxiousness or harmlessness, gentleness or ferocity, virtue or sin, truth or falsehood, that clung (afterwards) spontaneously to it.
 10. As at the change of the seasons each season of its own accord assumes its distinctive marks, even so corporeal beings (resume in new births) their (appointed) course of action.

 

सर्वेषां तु स नामानि कर्माणि च पृथक् पृथक् ।

वेदशब्देभ्य एवादौ पृथक् संस्थाश्च निर्ममे ॥ 21

 

कर्मात्मनां च देवानां सोऽसृजत् प्राणिनां प्रभुः ।

साध्यानां च गणं सूक्ष्मं यज्ञं चैव सनातनम् ॥ 22

अग्निवायुरविभ्यस्तु त्रयं ब्रह्म सनातनम् ।

दुदोह यज्ञसिद्ध्यर्थं ऋच्।यजुस्।सामलक्षणम् ॥ 23  ॥

 

कालं कालविभक्तीश्च नक्षत्राणि ग्रहांस्तथा ।

सरितः सागरान् शैलान् समानि विषमानि च ॥ 24

 

तपो वाचं रतिं चैव कामं च क्रोधमेव च ।

सृष्टिं ससर्ज चैवैमां स्रष्टुमिच्छन्निमाः प्रजाः ॥ 25

 

कर्मणां च विवेकार्थं धर्माधर्मौ व्यवेचयत् ।

द्वन्द्वैरयोजयच्चैमाः सुखदुःखादिभिः प्रजाः ॥ 26

अण्व्यो मात्रा विनाशिन्यो दशार्धानां तु याः स्मृताः ।

ताभिः सार्धमिदं सर्वं संभवत्यनुपूर्वशः ॥ 27

 

यं तु कर्मणि यस्मिन् स न्ययुङ्क्त प्रथमं प्रभुः ।

स तदेव स्वयं भेजे सृज्यमानः पुनः पुनः ॥ 28

 

हिंस्राहिंस्रे मृदुक्रूरे धर्माधर्मावृतानृते ।

यद् यस्य सोऽदधात् सर्गे तत् तस्य स्वयमाविशत् ॥29

 

यथर्तुलिङ्गान्यर्तवः स्वयमेवर्तुपर्यये ।

स्वानि स्वान्यभिपद्यन्ते तथा कर्माणि देहिनः ॥30

 

 

–சுபம் சுபம்–

 

அரங்கனைப் பாடிய வாயால் குரங்கனைப் பாடமாட்டேன் ! (Post No.4415)

Written by London Swaminathan 

 

Date: 20 NOVEMBER 2017

 

Time uploaded in London- 13-15

 

 

Post No. 4415

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் சோழநாட்டில் திருமங்கை என்னும் ஊரில் பிராமண குலத்தில் உதித்தவர். சிறுவயதிலேயே தமிழ் இலக்கண, இலக்கியங்களைக் கற்றுச் செந்தமிழில் விளையாடினார். ஆழ்வார்கள் பாடிய அமுதப் பாசுரங்களைப் பருகினார். இராமானுஜர் நூற்று அந்தாதி பாடிய திருவரங்கத்தமுதனார் வம்சத்தில் தோன்றியவர். கோனேரி அப்பனையங்கார் இவரது பேரன். ‘குலத்தளவே ஆகுமாம் குணமென்னும்’ ஔவையார் மொழிக்கேற்ப, வைணவ குலத்தின் ஆசார அனுஷ்டானங்களை அப்படியே பின்பற்றி வந்தார். வீர வைஷ்ணவராகத் திகழ்ந்தார். பெருமாளின் அருளில் பிறந்த பிள்ளை ஆதாலால் பிள்ளைப் பெருமாள் ஆனார். ஆனால் பெற்றோர் சூட்டிய திரு நாமம்- ரங்கநாததாசன். மற்றொரு பெயர் மணவாளதாசன்.

 

சுமார்  400 ஆண்டுகளுக்கு முன்னர்   திருமலை நாயக்கர் (1623-1659)  காலத்தில் வாழ்ந்த  பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் , நாயக்கரின் அரண்மனையில் செய்த அற்புதத்தை முன்னரே எழுதியுள்ளேன் ( கீழே இணைப்பு முகவரி உள்ளது). இப்பொழுது அவர் செய்த மேலும் சில அற்புதங்களைக் காண்போம். தவ வலிமையாலும், சொல் புலமையாலும் அவர் பல அற்புதங்களைச் செய்தார்; யமகம், சிலேடை, திரிபு என பல வகைப் பாடல்களை பாட வல்லவரான அவர் அஷ்டப் பிரபந்தம் என்று அழைக்கப்படும் எட்டு அருமையான தமிழ் நூல்களை மொழி அன்பர்களுக்கு வழங்கியுள்ளார். “அஷ்டப் பிரபந்தம் படித்தவன் அரைப் பண்டிதன்” என்னும் சொல் வழக்கினால் அதன் பெருமை நன்கு விளங்கும். அதாவது, அத்துணை சிறிய அளவு படித்துவிட்டாலே பண்டிதன் என்னும் பாதையில் பாதி தூரம் சென்றவர் ஆகிவிடுவோம்.

 

பாலும் தேனும் அமுதும் கைக்கும்படி பாட வல்லவர். கவிநயம் உணர்ந்த புலவரெலாம் இவரை திவியகவியெனக் கொண்டாடும் சிறப்பு வாய்ந்தவர் (திவிய= திவ்ய = தெய்வப் புலவர்)

இவர் தொடர்பாக வழங்கும் இன்னும் ஒரு சொல் வழக்கு, “அரங்கனைப் பாடிய வாயால் குரங்கனைப் பாடமாட்டேன்” — என்பதாகும் இதற்கு இரு வேறு விளக்கங்கள் உண்டு.

ஐயங்காருக்கு ஸ்ரீரங்கத்தில் குடிகொண்டுள்ள அரங்கநாதனைப் பாடுவதிலே பேரின்பம் கிடைத்தது. ஆதலால் வேறு எவரையும் பாட மாட்டேன் என்ற பிடிவாதத்தில் இருந்தார். பார் புகழும் திருவேங்கடத்தானைப் பாடாத ஆழ்வார் இலையே; அவர் மீதும் உங்கள் செந்தமிழில் இனிய கீதம் இசைக்கக் கூடாதா? என்று அன்பர்கள் வேண்டினர். ஆனால் இவரோ மாட்டேன் என்று சொல்லிவிட்டார். திருப்பதி மலையில் வீற்றிருந்த வெங்கடாசலபதியைத்தான் இவர் மலை மேதுள்ள குரங்கன் என்று சொன்னார். இரு பொருள்படும் சிலேடைக் கவியில் வல்லவர் அல்லவா?

 

கிருஷ்ணமாச்சாரியார் சொல்லும் விளக்கம்

 

“ஒரு நாள் இரவில் இவர் கனவில் திருவேங்கடத்தான் தோன்றி எம்மையும் பாடுக என்றனன். அப்போது ‘மாட்டேன்’ என்று சொல்லி மறுத்து விட்டார் இதைத் தொடர்ந்து இவருக்கு கழுத்தில் கண்டமாலை தோன்றியது உடனே தம் தவற்றை உணர்ந்து திருவேங்கட மாலை, திருவேங்கடத்தந்தாதி என்று இரண்டு பிரபந்தங்களைப் பாடினார்; கண்டமாலை நோயும் காணாமற் போயிற்று!”

 

இது 1906 ஆண்டில் திவான் பகதூர் கிருஷ்ணமச்சாரியார் எழுதிய விளக்கம்.

இது சென்னை பல்கலைக் கழக பாடபுத்தகமாக அங்கீகரிக்கப்பட்டதால் இதுவே சரியான விளக்கம்.

 

சிலர் ஐயங்கார் குறிப்பிட்டது ‘மந்தி’ பாயும் வேங்கட மலை என்ற பொருள் அல்ல; குரங்கன் என்பது மானைக் (குரங்கம்) கையில் ஏந்திய சிவனைக் குறிப்பிட்டது என்பர். சைவர்கள் இவரிடம் வந்து சிவனைப் பாடும்படி கேட்ட போது இவ்வாறு சொன்னதாகக் கதை கட்டிவிட்டனர்.

 

 

இவருடைய கவிகளில் அப்பர் பெருமான், வள்ளுவப் பெருமான் ஆகியோரின் தாக்கத்தைக் காணலாம்.

“கற்றதனால் பயன் என் கொல் வாலறிவன்

நற்றாள் தொழா அர் எனின்” என்பான் வள்ளுவன்.

ஐயாங்காரோ 14 உலகம் சுற்றி வந்தாலும், பல நூல்கள் கற்றார் எனினும் அரங்க நாதனை வழிபடாவிட்டால் யாது பயன்? என்கிறார்:

கற்றாரெனினும் பதினாலுலகுங்

கண்டாரெனினுந் தண்டா மிருபற்

ற்றாரெனினுந்த் திருமாலடியார

ல்ரல்லாதவர் வீடில்லாதவரே

பொற்றாமரையாள் கணவன் றுயிலும்

பொற்கோயிலையே புகழ்வார் பணிவார்

மற்றாரெனினும் பெற்றாரவரே

வானோர் திருமாமணி மண்டபமே

–திருவரங்கக் கலம்பகம்

 

அரங்கனைப் புகழ்வார் மட்டுமே வைகுண்டத்திலுள்ள திருமாமணி மண்டபத்தைப் பெற்றவர்கள் என்பது இதன் பொருள்.

 

 

 

சங்கநிதி பதுமநிதி யிரண்டுந் தந்து

    தரணியொடு வானாளத் தருவ ரேனும்

மங்குவார் அவர்செல்வம் மதிப்போ மல்லோம்

    மாதேவர்க் கேகாந்த ரல்லா ராகில்

அங்கமெலாங் குறைந்தழுகு தொழுநோ யராய்

    ஆவுரித்துத் தின்றுழலும் புலைய ரேனும்

கங்கைவார் சடைக்கரந்தார்க் கன்ப ராகில்

    அவர்கண்டீர் நாம்வணங்கும் கடவு ளாரே

 

என்று அப்பர் பாடினார் சிவபெருமான் மீது.

இதன் எதிரொலியை ஐயங்கார் பாடலில் காணலாம்:-

 

பாதியா யழுகிய கால்கையரேனும்

பழிதொழிலு  மிழிகுலமும் படைத் தாரேனும்

ஆதியா யரவணையா யென்பராகி

லவரன்றோ நாம் வணங்கு  மடிகளாவர்

சாதியா லொழுக்கத்தான் மிக்காரேனுஞ்

சதுர் மறையால் வேள்வியாற் றக்கோரேனும்

போதினான் முகன் பணியப் பள்ளி கொள்வான்

பொன்னரங்கம் போற்றாதோர் புலையர்தாமே.

 

 

இவர் பாடிய எட்டு நூல்கள் (அஷ்டப் பிரபந்தம்) பின் வருமாறு:

 

திருவரங்கத்தந்தாதி – 105 பாடல்கள்

திருவரங்கக் கலம்பகம் – 105

திருவரங்கத்து மாலை- 112

திருவேங்கட மாலை -103

திருவேங்கடத்தந்தாதி-101

அழகர் அந்தாதி- 101

108 திருப்பதி அந்தாதி-114

ரெங்கநாயகர் ஊசற்றிரு நாமப் பாடல்கள் -32

 

ஆகமொத்தம் – 773

 

இவர்  திரு நறையூர் நம்பி விஷயமாக மேக விடு தூது ( 205 பாடல்கள்), வீர வைணவ நிலையை நாட்டும் விடுதிக் கவிகள் 32  ஆகிய பாடல்களையும் பாடியிருக்கிறார்.

ஒருமுறை திருவரங்கத்துக் கோவில் பசு ஒன்று பொது நிலத்தில் மேய அதை சைவர்கள் பிடித்து வைத்துக்கொண்டனர். சிவன் மீது பாடல் பாடினால் அதை விடுவிப்போம் என்றனர். அவரும் சம்மதித்தார். அவர்கள் அருகிலுள்ள சிவத் தலமான திருவானைக் காவலைச் சேர்ந்தவர்கள். பசு இல்லாமல் விசுவ ரூப தரிசனம் தடைப்படுமே என்று அஞ்சிய ஐயங்கார் பாடலைப் பாடுவதாகவும் உடனே அதை விடுவிக்க வேண்டும் என்றும் நிபந்தனை போட்டார். அவர்கள் பாடலைப் பாடுங்கள் என்று சொன்னவுடன் மங்கை பாகன் என்று தொடங்கி பின்னர் முடித்துத் தருவதாகச் சொன் னார். பசுவும் விடுதலை பெற்றது பின்னர் அவர் பாடிய பாடலோ சிவனை விட உயர்ந்தவர் பெருமாள் என்று முடிந்தது! இதோ அந்தப் பாடல்:–

 

சிவனை விட உயர்ந்தவர்!

 

மங்கைபாகன் சடையில் வைத்த கங்கைநீர் யார்பதத்து நீர்

வன்சமேவு முனிவனுக்கு மைந்தனான தித்ல்லையோ

செங்கையாலிரந்தவன் பால மார கற்றினார்

செய்ய தாளின் மலரரன் சிரத்தினா தில்லையோ

வெங்கண் வேழமூலமென்ன வந்ததுங்கள் தேவனோ

வீறு வாண லமரில் அன்று விரலழிந்ததில்லையோ

அங்கண் ஞால முண்டபோது வெள்ளி வெற்பகன்றதோ

ஆதலா ரங்கனின்றி வேறு தெய்வமில்லையே

 

 

புராணக் கதைகளில் சிவனுக்கும் மேலாக விஷ்ணு செய்த விஷயங்களை உள்ளடக்கியது இப்பாடல்; கங்கை நீர் விஷ்ணுவின் பாதத்திலிருந்து சிவன் தலைமீது விழுந்தது. விஷ்ணு உல கையே உண்டபோது அதில் கயிலையும் சென்றது சிவன் கை  விரலில் சிக்கிய பிரம்மனின்  கபாலம்   விஷ்ணுவால் அகன்றது என்றெல்லாம் பாடித்தீர்த்தார்.

 

 

சுமார் எண்பது ஆண்டுக் காலம் வாழ்ந்த ஐயங்காரை, அவர் திருவரங்கத்தானை வழிபட்டுக் கொண்டிருக்கும்போதே ஒரு நொண்டிப் ப்சு மோதியது ; அவர் அங்கேயே உயிரைவிட்டு அரங்கன் திருவடிகளை அடைந்தார்.

சைவ- வைணவ சண்டை ஒரு புறம் இருக்க,செந்தமிழ்க் கடலில்  ஐயங்கார் இயற்றிய பல கவிதை முத்துக்கள், ஐயங்கார் மூலம் சேர்ந்தது என்றால் அது மிகையல்ல!

 

ஐயங்கார் செய்த அற்புதம்

ஐயங்கார் | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/ஐயங்கார்/

பிள்ளைப் பெருமாள் அய்யங்கார் என்பவர் செய்த அற்புதம்பற்றி 1908 ஆம் ஆண்டில் வெளியான தமிழ்ப் பெயரகராதியில் ஈக்காடு இரத்தினவேலு …

 

–Subham–

திருப்புகழ் ஓதுதல் : ஒரு வழிகாட்டி (Post No.4414)

Written by S.NAGARAJAN

 

 

Date: 20 NOVEMBER 2017

 

Time uploaded in London- 6-58 am

 

 

Post No. 4414

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

திருப்புகழ் பெருமை

திருப்புகழ் ஓதல் : ஒரு வழிகாட்டி (திருப்புகழ் கைட்)!

 

ச.நாகராஜன்

 

1

அருணகிரிநாதர் அருளியுள்ள திருப்புகழின் மஹிமையை முற்றிலுமாக யாராலும் உரைத்திடல் இயலாது.

திருத்தணிகையில் அவர் அருளியுள்ள திருப்புகழ் “வீ ர ஜெயத் திருப்புகழ் என்று கொண்டாடப்படுகிறது.

அந்தப் பாடல் வருமாறு:

 

 

சினத்தவர் முடிக்கும் பகைத்தவர் குடிக்குஞ்

    செகுத்தவ ருயிர்க்குஞ்               சினமாகச்

சிரிப்பவர் தமக்கும் பழிப்பவர் தமக்கும்

    திருப்புகழ் நெருப்பென்               றறிவோம்யாம்

 

நினைத்தது மளிக்கும் மனத்தையு முருக்கும்

    நிசிக்கரு வறுக்கும்                  பிறவாமல்

    நெருப்பையு மெரிக்கும் பொருப்பையு மிடிக்கும்

நிறைப்புக ழுரைக்குஞ்                    செயல்தாராய்

 

தனத்தன தனத்தந் திமித்திமி  திமித்திந்

    தகுத்தகு தகுத்தந்                     தனபேரி

தடுட்டுடு டுடுட்டுண் டெனத்துடி முழக்குந்

    தளத்துட னடக்குங்                   கொடுசூரர்

 

சினத்தையு முடற்சங் கரித்தம லைமுற்றுஞ்

   சிரித்தெரி கொளுத்துங்

தினைக்கிரி குறப்பெண் தனத்தினில் சுகித்தெண்

   திருத்தணி யிருக்கும்                 பெருமாளே

 

அற்புதமான இந்தத் திருப்புகழை எத்தனை தரம் படித்தாலும், பயின்றாலும் அதன் முழுப் பொருளையும் பெருமையையும் உணர்ந்ததாக ஆக முடியாது!

 

அத்துணை பொருள் செறிந்த புகழ்ப் பாட்டு.

 

திருப்புகழை ஓதினால் நினைத்ததும் அளிக்கும்.

மனத்தையும் உருக்கும்.

 

பிறவாமல் நிசிக் கருவறுக்கும்.

அடுத்து வரும் சொற்றொடர் அற்புதமான ஒரு சொற்றொடர்

எதையும் எரிக்கும்! நெருப்பையும் கூட எரிக்குமாம் திருப்புகழ்

 

மலையைக் கூடப் பொடிப் பொடி ஆக்கி விடும்.

அப்படிப்பட்ட பெருமையை உடைய அற்புதமான திருப்புகழை ஓதும் செயலை எனக்குத் தருவாயாக, திருத்தணி உறை பெருமாளே என்கிறார் அருணகிரிநாதர்.

அவர் பாடிய திருப்புகழுக்கான பெருமையும் இதில் தான் உள்ளது; அது உரைக்கும் முருகனின் பெருமையும் இதில் தான் உள்ளது.

 

 

2

    இரண்டாம் உலக மகா யுத்தத்தின் போது ஜப்பான், ஜெர்மனி ஆகிய பகை நாடுகள் இந்தியா மீது குண்டுகள் வீசும் அபாயம் ஏற்பட்டதால் மக்கள் மிகவும் பீதியுற்றனர்.

 

 

     அப்போது வள்ளிமலைத் திருப்புகழ் ஸ்வாமிகள் மக்களின் பீதியை அகற்ற திருப்புகழ் பாராயணக் குண்டு என்னும் நூலை 1942ஆம் ஆண்டு ஜனவரியில் வெளியிட்டார்.

அந்த நூலின் முகவுரையில், “இத்திருப்புகழ்ப் பாராயணக் குண்டு ஜெர்மனி, ஜப்பான் குண்டுகளை அடக்கவல்ல பேராற்றல் வாய்ந்த எதிர் குண்டு. சூர சம்ஹார காலத்தும் முருகன் திருப்புகழ் வெற்றியே போர்க்களத்தில் முழங்கிற்று என்பது,

 

 

   “கஜரத பதாகிநி அரக்கர் துணி பட்டுவிழு

  களமுழுதும் வாழிய திருப்புகழ் முழக்குவன

கடிய குணத்த சினத்த ஸஹத்ர யோஜனை

     நெடிய கழுத்த சுழித்த விழித்த பார்வைய

காத நூறாயிர கோடி வளைந்தன

   பூத வேதாளம அநேக விதங்களே

 

 

என வரும் பூத வேதாள வகுப்பால் ஏற்படுவதால், போர்க்களத்தும், மற்றும் எல்லாவிடத்தும் இறைவன் திருப்புகழை ஓதி எளிதில் ஸுகம் பெறலாம். திட புத்தியுடன் நித்திய பாராயணம் செய்தால் இத்திருப்புகழ்க் குண்டின் ஆற்றலையும் ப்ரபாவத்தையும் அநுபவத்தில் காணலாம் என்று இவ்வாறு ஸ்வாமிகள் அருளினார்.

அனைத்துத் துன்பங்களையும் விடுவிக்க வல்ல திருப்புகழ்த் தொகுப்பை ஸ்வாமிகள் அருளினார். அதைக் கீழே காண்போம்.

 

 

 

3

1.பாடும் பணி பெற – கந்தரனுபூதி – ஆடும் பரிவேல்

2.உயிர்க்கு ஆதரவு –  திருப்புகழ் –  உம்பர்தருத்தே

3.எழுந்தருள வேண்டுதல் – திருப்புகழ் – சென்றே இடங்கள்

4.கோள்கள் ஒடுங்க – கந்தரலங்காரம் – நாள் என் செயும்

 1. திருப்புகழ் நெருப்பு – திருப்புகழ் – சினத்தவர் முடிக்கும்
 2. தரிசனப் பாடல் – கந்தரலங்காரம் – ஓலையும் தூதரும்
 3. வேலும் மயிலும் துணை – கந்தரலங்காரம்-விழிக்குத் துணை
 4. வேலின் ப்ரபாவம் கூறி பகைவரை வெல்ல – வேல் வகுப்பு பருத்த முலை ; ஸுரர்க்குமுநிவரர்க்கும்; தருக்கி நமன்; திரைக்கடலை உடைத்து ; கந்தரலங்காரம்- தேரணியிட்டு;

வேல்வாங்கு வகுப்பு – திடவிய நெஞ்சுடை; அடவி படும்ஜடை;

வடவை இடும்படி;

 

 

 1. பிரார்த்தனை பாக்களின் அடிகள்
 2. கொள்ளித் தலையில் எறும்பது போலக் குலையும்

    என்றன் உள்ளத் துயரை ஒழித்தருளாய்

 1. அஞ்சா நெஞ்சாக்கம் தரவல பெருமாளே
 2. ஆபத்தில் அஞ்சல் என்ற பெருமாளே
 3. இடர் சங்கைகள் கலங்க அருள்வாயே
 4. ஒருக்கால் முருகா பரமா குமரா உயிர்கா என ஓதருள் தாராய்
 5. நவர் வாட்டோமர சூலம் தரியாக் காதிய சூரும்

         தணியாச் சாகரம் ஏழும்      கிரி ஏழும்

        சருகாக் காய்கதிர் வேலும் பொருகாற் சேவலும் நீலம்

         தரிகூத்தாடிய மாவும்         தினைகாவல்

       துவர்வாய்க் கானவர் மானும் சுரநாட்டாள் ஒரு தேனும்

           துணையாத் தாழ்வற வாழும்     பெரியோனே!

             துணையாய்க் காவல் செய்வாய்!

 

7.வேலுமயிலும் நினைத்தவர் தந்துயர் தீர அருள்தரு கந்த!

   

 1. பதினால் உல கத்தினில் உற்றுறு பக்தர்கள்

    ஏது நினைத்ததும் மெத்த அளித்தருள்    இளையோனே

 1. மொழியும் அடியார்கள் கோடி குறைகருதி னாலும் வேறு

          முனிய அறியாத தேவர்               பெருமாளே

 1. வேண்டிய போதடியர் வேண்டிய போகமது

      வேண்ட வெறாதுதவு               பெருமாளே

 1. வேல் எடுத்த ஸமர்த்தை உரைப்பவர்

       ஏவருக்கும் மனத்தில் நினைப்பவை அருள்வோனே

 1. அடியவர் இச்சையில் எவைஎவை உற்றன

          அவைதரு வித்தருள்          பெருமாளே

**

 

  

 1. நவக்ரஹ சேஷ்டை நீங்க- கந்தரனுபூதி – சேயவன் புந்தி

          கந்தரலங்காரம் – மயில் துணை -குசைநெகிழா

           கந்தரலங்காரம் – சேவல் துணை -படைபட்ட

11.மனக்கவலை நீங்க – கந்தரனுபூதி -எந்தாயும்

 1. அச்சமற்ற வாழ்வுற – கந்தரலங்காரம் – சேந்தனைக்
 2. தாழ்வின்றி வாழ கந்தரலங்காரம் – சேந்தனை
 3. நாம விசேஷப் பலன் – கந்தரலங்காரம் – முடியாத் துயர
 4. திக்பந்தனம் – கந்தரலங்காரம் – தடக்கொற்ற

குறிப்பு: சலங்காணும், மடங்கல் நடுங்கும், வேலன் வாய்த்த திருப்புகழ்,கருப்புகழாம்,ஏகாந்த வீரம் போற்றி ஆகிய பாடல்கள் மட்டும் இங்கு மேலே குறிப்பிடப்படவில்லை.

 

 

4

இந்தத் திருப்புகழ் பாராயணக் குண்டு யுத்த காலத்துக்கு மட்டுமானது அல்ல; தினசரி வாழ்க்கை என்னும் யுத்தத்தில் ஈடுபட்டிருக்கும் அனைவருக்கும் எந்தக் காலத்திற்கும் உகந்தது.

திருப்புகழைப் பாராயணம் செய்வோம்; இகபர சௌபாக்கியம் அடைவோம்.

*****

புறநானூற்றில் நரகம்! திருக்குறளில் நரகம்!! (Post No.4407)

Written by London Swaminathan 

 

Date: 18 NOVEMBER 2017

 

Time uploaded in London- 10-51 am

 

 

Post No. 4407

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

தமிழர்களின் பண்பாடு இந்துப் பண்பாடே. அவர்களுக்கு பாவம், புண்ணியம், சுவர்க்கம், நரகம், மறு பிறப்பு, உருவ வழிபாடு, விதி, கர்ம வினை, யாகம், யக்ஞம் முதலியவற்றில் நம்பிக்கை உண்டு என்பது சங்கத் தமிழ் இலக்கியத்தின் 18  மேல் கணக்கு நூல்களிலும் , திருக்குறள் அடங்கிய 18 கீழ்க்கணக்கு நூல்களிலும் விரவிக் கிடக்கின்றன. தொல்காப்பியமோவெனில் அறம், பொருள், இன்பம் (தர்ம-அர்த்த- காம) என்ற சொற்றொடரைப் பல இடங்களில் பகர்கின்றது.

 

இப்பொழுது நரகம் பற்றி மட்டும் காண்போம்.

 

ரிக் வேதத்தில் ஒரே ஒரு நரகம் பற்றி மட்டும் காண்கிறோம்.

மத நம்பிக்கையற்றோரை அவன் அதள பாதாளத்தில் தள்ளுகிறான் என்ற வாசகம் (9-73) ரிக்வேதத்தில் வருகிறது மனு நீதி நூல் 21 வகை நரகங்களை நாலாவது அத்தியாயத்தில் பட்டியல் இடுகிறது. சிவ புராணம் 28 வகை நரகங்களைச் சொல்லும். பவிஷ்ய புரா ணக் கதையில் யமலோகத்தில் நரகப் பகுதியில் நடக்கும் சித்திரவதைகள் பற்றி வருகிறது ஆனால் ரிக் வேதத்தில் சித்திரவதை முதலியன பற்றி இல்லை.

 

மரம் வெட்டினால் நரகம், பொய் சொன்னால் நரகம், பசுவைக் கொன்றால் நரகம்– என்று ஒவ்வொரு தப்புக்கும் ஏற்ற 21 வகையான நரகங்கள் பற்றி மனு பேசுகிறார். அதை மற்ற  ஒரு கட்டுரையில் விரிவாகக் காண்போம்.

 

தமிழில் அளறு (Tamil) , நிரயம் (Sanskrit word) என்ற இரு சொற்களில் நரகம் குறிப்பிடப்படுகிறது. சமயம் தொடர்பான சொற்கள் பெரும்பாலும் சம்ஸ்கிருதமாகவோ, அல்லது தமிழ் மயமாக்கப்பட்ட சம்ஸ்கிருதச் சொற்களாகவோ இருக்கும் ( எ.கா. யூப, ஆகுதி). ஆனால் நிரயம், அளறு என்ற சொற்கள் தூய தமிழ்ச் சொற்களாக இருப்பதால் இது இற க்குமதி செய்யப்பட்ட விஷயமன்று, தமிழர்களின் பழைய நம்பிக்கை என்பது புலப்படும்.

 

அளறு என்பது சங்க காலத்தில் சேறு, சகதி என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டு, திருவள்ளுவர் காலத்தில் நரகம் என்ற பொருளுக்கு ‘பதவி உயர்வு’ பெற்றுவிடுகிறது!

சுவர்க்கம் (துறக்கம்) பற்றிப் பெரும்பாலான இடங்களில் வருவதால் தமிழர்கள் புண்ணியவான்கள் என்பதும் பெறப்படும்.

 

முதலில் புறநானூற்று நரகத்தைப் பார்ப்போம்:-

 

இது மிகவும் பழைய பாட்டு. சுமார் 2100 ஆண்டுகளுக்கு முன் நரிவெரூஉத் தலையார் பாடியது.

சேரமான் கருவூர் ஏறிய ஒள்வாட் கோப்பெருஞ்சேரல் இரும்பொறையைக் கண்ட ஞான்று, நின் உடம்பு பெறுவாயாக! என, அவனைச் சென்று கண்டு, தம் உடம்பு பெற்று நின்ற நரிவெரூஉத் தலையார் பாடியது:-

 

எருமை அன்ன கருங்கல் இடை தோறு,

ஆனின் பரக்கும் யானைய, முன்பின்,

கானக நாடனை! நீயோ, பெரும!

நீ ஓர் ஆகலின், நின் ஒன்று மொழிவல்:

அருளும் அன்பும் நீக்கி, நீங்கா

நிரயம் கொள்பவரொடு ஒன்றாது, காவல்,

குழவி கொள்பவரின், ஓம்புமதி!

அளிதோ தானே; அது பெறல் அருங்குரைத்தே”.

 

பொருள்:

எருமை போன்ற கரிய பாதைகள் உடைய இடமெல்லாம் பசுக்கூட்டம் போல யானைகள் உலவும் காட்டிற்கு உரிய சேர மன்னனே! நீயோ பெருமகன்! ஆகையால் ஒன்று சொல்கிறேன், கேள். அருளையும் (கருணை) அன்பையும் நீக்கியவர்கள் நரகத்தில் வீழ்வர். அத்தகையோரோடு சேராதே. பெற்ற தாய் குழந்தையைப் பாதுகாப்பது போல, உன்னுடைய நாட்டு மக்களைக் காத்து வருவாயாக. அரச பதவி எளிதில் கிடைப்பதன்று. ஆகையால் கருணையுடன் செயல்படு.

 

(நரகம் பற்றிய கருத்து, ரிக் வேதக் கருத்தை ஒட்டிச் செல்கிறது).

 

திருக்குறளில் நரகம்!

 

பேதை என்பவன் யார் தெரியுமா? ஒரு பிறவியிலேயே எல்லா அட்டூழியங்களையும் செய்து ஏழு பிறவிகளில் அனுபவிக்க வேண்டிய நரகத் துன்பத்தைச் சேர்த்துக் கொள்பவன் பேதை!

 

ஒருவருக்கு லாட்டரி பரிசு கிடைத்துவிட்டால், அவனுக்கு என்ன கவலை? இனி ஏழு தலைமுறைகளுக்குக் கவலை இல்லை என்போம்.

ஒருவனுடைய தந்தை நிறைய பணத்தை ஒருவனுக்கு உயில் எழுதி வைத்துவிட்டு இறந்தால், அவன் எதற்கு வேலைக்குப் போகவேண்டும்;  அவன் அப்பன் ஏழுதலை முறைக்கான சொத்தை விட்டுச் சென்றிருக்கிறானே! என்று பேசுவது உலக வழக்கு.

 

இது போல ஒருவன் எல்லா தீய செயல்களையும் செய்வதைப் பார்த்தான் வள்ளுவன்; அம்மாடி! கவலையே இல்லை; இவன் ஏழு தலைமுறைகளுக்கு அல்லது ஏழு பிறவிகளுக்கு வேண்டிய நரகத் துன்பத்தை ஒரே பிறவியில் செய்து விட்டானே! சபாஷ்! சபாஷ்! என்கிறார் வள்ளுவர்.

 

இன்னுமொரு குறளில் செப்புவான்:

வரைவிலா மாணிழையார் மென்றோள் புரையிலாப்

பூரியர்கள் ஆழும் அளறு (919)

 

ஆரியர்களுக்கு எதிர்ப்பதம் பூரியர்கள்; இதிலிருந்து ஆங்கிலச் சொல் ஸ்பூரியஸ் SPURIOUS என்பது வந்தது

 

பொருள்

ஒழுக்கம் இல்லாத வேசிகளின் தோள், கீழ்மக்கள் (பூரியர்) சென்று விழும் நரகம் ஆகும்.

 

இதையே கிருஷ்ண பகவான் கீதையிலும் புகல்வார்:

 

த்ரிவிதம் நரகஸ்யேதம் த்வாரம் நாசனமாத்மன:

காமக்ரோதஸ் ததா லோபஸ் தஸ்மாதேதத் த்ரயம் த்யஜேத் (கீதை 16-21)

பொருள்:

ஒருவனுக்கு நாசத்தை விளைவிக்கும் நரகத்திற்கு மூன்று வாசல்கள் இருக்கின்றன; அவை காமம், க்ரோதம், லோபம்; அதாவது பெண்வழிச் சேரல், சினம் அல்லது கோபம், பேராசை. ஆகையால் இம்மூன்றையும் விலக்கிவைக்க வேண்டும்.

 

 

கீதை போன்ற சமய நூல்களில் நிறைய இடங்களில் நிரயம் பற்றிக் காணலாம்.

இறுதியாக இன்னும் ஒரு குறள்:-

உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊனுண்ண

அண்ணாத்தல் செய்யாது அளறு (255)

 

ஒருவன் மாமிசம் சாப்பிட மாட்டான் என்ற தர்மத்தின் அடிப்படையில் உயிர் வந்து, உடம்பில் தங்கி இருக்கிறது. அப்படி அவன் அதையும்  மீறி மாமிசம் சாப்பிட்டால், நரகம் வாயைத் திறந்து ‘லபக்’ என்று ஆளை விழுங்கிவிடும்.  பின்னர் நரகத்தின் வாய் திறக்காவே திறக்காது.

ஆளின் கதி– சகதி (அளறு என்பதற்கு சேறு, சகதி என்றும் நரகம் என்றும் பொருள் உண்டு; அலறு என்றாலும் பொருத்தமே. மக்கள் அலறும் இடம்தானே!!

திருவள்ளுவரின் கற்பனை மிகவும் அருமையான கற்பனை;  ‘நீ ஒரு உயிரைக் கொன்று முழுங்கினாய் அல்லவா? இப்பொழுது பார்! உன்னை நான் விழுங்கி விட்டேன்; இனி மேல் வாயைத் திறக்கவே மாட்டேன்’ என்று நரகம் சொல்லுமாம்.

 

திருக்குறள் பொது மறையன்று. யார் இந்து மதக் கொள்கைகள், கொல்லாமை ஆகியவற்றில் நம்பிக்கை கொண்டுள்ளோரோ அவர்களின் மறைதான் திருக்குறள்.

 

இதோ நான் முன் சொன்ன கதை

பவிஷ்ய புராணத்தில் சுவையான யமன் …

https://tamilandvedas.com/…/பவிஷ்ய-புராணத்தி…

 

1 Oct 2017 – பவிஷ்ய புராணத்தில் யமன் பற்றிய ஒரு சுவையான கதை உளது; அதை நான் இப்போது உரைப்பேன்: …யமன் கதை, பவிஷ்ய புராணம், விஜயா, பாவ புண்ணியம், நரகம் … கழுதைக்கும் ராஜா மகளுக்கும் கல்யாணம்; இந்திரன் மகன் பற்றி …

 

TAGS: நரகம், அளறு, நிரயம், பாவம், புறநானூறு, மனு

–சுபம், சுபம் —

 

புண்ணிய, பாவ கர்மங்களின் விளக்கம்! (Post No.4406)

Written by S.NAGARAJAN

 

 

Date: 18 NOVEMBER 2017

 

Time uploaded in London- 6-24 am

 

 

Post No. 4406

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

அத்வைத ஸார விளக்கம் – கட்டுரை எண் 2

பிறவி ஏன்? முக்தி எப்போது – கட்டுரை எண் 4388 வெளியான தேதி ̀12-11-17 – இதைத் தொடர்ந்து வெளியாகும் கட்டுரை இது.

 

புண்ணிய, பாவ கர்மங்களின் விளக்கம்!

 

ச.நாகராஜன்

அத்வைத நோக்கில் புண்ணிய, பாவ கர்மங்களைப் பற்றி இனி காண்போம்,

 

*

 

சரீர பரிக்கிரகத்தினால் ஆன்மாவுக்குத் துக்கம் எனில். அது எத்தனை விதம்?

புண்ணியம், பாவம், மிஸ்ரம் என்று மூன்று விதம்.

 

இதனால் ஏற்படும் பலன்கள் என்ன?

புண்ணிய கர்மத்தினால் தேவாதி சரீரம் உண்டாகும்.

பாவ கர்மத்தினால் மிருகாதி சரீரம் உண்டாகும்.

புண்யமும் பாவமும் இணைந்த மிஸ்ராதி (கலந்த) கர்மத்தினால் மனுஷ்யாதி சரீரம் உண்டாகும்.

 

இவைகளில் வித்தியாசம் உண்டா?

அத்ருஷ்டம், மத்யமம்,சாமான்யம் என்று தனித் தனியாக மூன்று வித பேதங்கள் (வேறுபாடுகள்) உண்டு.

இப்படிச் சொல்லப்பட்ட கர்ம பந்தத்தினால் தான் நானாவித ஜனபேதம் உருவாகிறது.

எப்படி எனப் பார்ப்போம்.

ஹிரண்யகர்ப்பாதி சரீரம் புண்யோத்க்ருஷ்ட சரீரம்.

இந்திராதி சரீரம் புண்ய மத்யமம்.

யட்ச, ராக்ஷஸ, பிசாசம் புண்ய சாமானியம்.

 

இந்த மூன்று வித கர்மங்கள் எதனால் ஏற்படுகிறது?

மூன்று வித கரணங்களினால்.

 

அப்படியா? ஆத்மாவினால் அல்லவா?

ஆத்மா அவிகாரி, நிஷ்கிரியன் (அவத்த பேதம்) அவயவம் அற்றவனாவதால் கர்த்ருத்வம் கிடையாது.

 

ஆனால் ஆத்மாவுக்குக் கர்த்ருத்வம் இருப்பது போலத் தோற்றமளிக்கிறதே. இது ஏன்?

அத்தியாசிகமே. (அதாவது ஆரோபிதமே)

 

புரியவில்லை. ஆரோபிதம் என்றால் என்ன?

ஒன்றின் தர்மங்கள் வேறொன்றில் காணப்படுதலே ஆகும்.

ஒரு உதாரணத்தைப் பார்க்கலாம்.

ஓடம் ஒன்று நதியில் ஓடிக் கொண்டிருக்கிறது. அந்த ஓடத்தின் ஓட்டம் நதிக்கரையில் இருக்கின்ற மரங்களிலும், அசையாமல் ஓரே இடத்தில் இருக்கும் தன்மையை உடைய  மரங்களின் தர்மம் ஓடத்திலும் ஆரோபிப்பது போலாகும்.

 

நல்லது, மூன்று கரணங்களும் அசேதனமாக இருக்கின்ற போது, அதற்கு எப்படி கர்த்ருத்வம் உண்டாகும்?

(குறிப்பு: சேதனம் என்றால் உயிருள்ளவைகள். ஜங்கமம் என்று சொல்லப்படும். அசேதனம் என்றால் ஸ்தாவரம் , அதாவது உயிரில்லாத ஜட வஸ்துக்கள்)

அசேதனமன நீரும், காற்றும் மரம் முதலானவற்றை வேருடன் பிடுங்கித் தூக்கிக் கொண்டுபோவது போல,தூக்கி எறிவது போல கர்த்ருத்வம் காணப்படுகிறதில்லையா?

அதே போல மூன்று கரணங்களுக்கும் வேறு கரணங்களின்றிக் கர்த்ருத்வம் காணப்படுகிறது.

 

இந்த மூன்று வித கரணங்களினால் செய்யப்படுகின்ற கர்மங்கள் யாவை?

ஸவிசேஷ சிந்தை, நிர்விசேஷ சிந்தை, பரலோக சிந்தை, பக்தி ஞான வைராக்கிய சிந்தை என்பவையேயாம்.

இவைகளில் மனதினால் செய்யப்படுபவை புண்ணிய கர்மங்கள்- விஷய சிந்தை.

மற்றவர்களுக்கு உபகார சிந்தை,

வேத சாஸ்திரங்களில் பற்றுள்ள சிந்தை,

தர்மம், அதர்மம் என்கிற சிந்தை,

இவை போன்ற புத்தி விகாரங்கள் மன சம்பந்தமான பாவ காரியங்கள்.

அவிசேஷ, நிர்விசேஷ, புண்ய விஷய சிந்தை முதலான பாவ சிந்தையுடன் கலந்து அநுஷ்டிப்பது மிஸ்ர கர்மங்களாகும்.

வேத சாஸ்திரப்படி பகவத் சங்கீர்த்தனம், சத்தியம், பரோபகார வார்த்தை, மிருதுவாகப் பேசுதல், பூர்வ பாஷணம் (தானாக முனவந்து முதலில் பேசுதல்) ஆகியவை வாசிக புண்ய கர்மங்கள் ஆகும்.

வேத சாஸ்திர தூஷணை (இழித்துப் பேசுதல்) வேத தூஷணை,அசத்தியம், கடும் சொல், பொய் சொல்லுதல், கேலி செய்தல் ஆகியவை வாக்கினால் செய்யப்படும் பாவ கர்மங்கள் ஆகும்.

 

வேதாத்தியயனம், தேவ பூஜை காலங்களில் பரநிந்தை, கேலி, அசத்தியம் ஆகியவற்றை அனுஷ்டித்தல் மிஸ்ர பாவ கர்மங்களாகும்.

இப்படியே பலவித பாவ கர்மங்கள் உண்டு.

பிரம்ம ஞானம் உண்டாயிருந்தாலும் கூ மூன்று வித கரணங்களையும் புண்ய கர்மத்திலேயே நிறுத்த வேண்டும்.

***

காரிய வெற்றிக்கு எந்தக் கிழமைகளில் எதை ஆரம்பிக்கலாம்? (Post No.4403)

Written by S.NAGARAJAN

 

 

Date: 17 NOVEMBER 2017

 

Time uploaded in London- 7-00 am

 

 

Post No. 4403

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

ஞான ஆலயம் குழுமத்திலிருந்து மாதந்தோறும் வெளியாகும் ஸ்ரீ  ஜோஸியம் பத்திரிகையில் நவம்பர் 2017 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை

 

 

காரிய வெற்றிக்கு எந்தக் கிழமைகளில் எதை ஆரம்பிக்கலாம்?

 

ச.நாகராஜன்

நமது முன்னோர்கள் இயற்கையை உன்னிப்பாகக் கவனித்த்வர்கள். தேவதைகளின் அனுக்ரஹத்திற்கு உரிய வழிகளைக் கண்டவர்கள். மஹாசக்தியின் அருள் வேண்டி உள்ளுணர்வால் தாம் கண்டவற்றை மனித குலத்திற்கு சாஸ்திரமாகத் தந்தவர்கள்.

 

 

எடுத்த காரியம் வெற்றியைப் பெறவும் அநுகூலமாக முடியவும் அவர்கள் பல எளிய வழிகளைச் சொல்லி இருக்கிறார்கள்.

இந்த வகையில் வார நாட்கள் ஏழிலும் எதை எதை ஆரம்பிக்க வேண்டும் என்றும் அருளுரை பகர்ந்திருக்கின்றனர். எந்த நாளில் எந்தத் திசையில் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்பதையும் அருளி இருக்கின்றனர்.

 

 

அதன் தொகுப்பு இதோ:-

 

எந்த திசையில் எந்த நாளில் செல்ல் வேண்டும் ?

 

அங்காரபூர்வே கமனே ச லாப:

    சோமே சனௌ தக்ஷிணம்ர்த்த லாபம் I

புதே குரௌ பச்சிமகார்யசித்தி

   ரவி ப்ருகௌ சோத்தரமர்த்த லாப: II

 

 

உபஜாதி என்ற சந்தத்தில் அமைந்துள்ள இந்த ஸ்லோகத்தின் பொருள் : :-

செவ்வாய்க்கிழமைகளில் கிழக்குத் திசையில் சென்றால் ஒருவன் லாபத்தை அடைவான்.

திங்கட்கிழமைகளிலும், சனிக்கிழமைகளிலும் தெற்குத் திசையில் சென்றால் லாபம் உண்டாகும்.

புதன்கிழமைகளிலும் வியாழக்கிழமைகளிலும் மேற்குத் திசையில் சென்றால் எடுத்த காரியம் வெற்றியை அடையும்.

ஞாயிற்றுக்கிழமைகளிலும் வெள்ளிக்கிழமைகளிலும் வடக்குத் திசையில் சென்றால் செல்வம் பெருகும்.

 

அடுத்து எந்த நாளில் எதை எதைச் செய்யலாம் என்பதற்கான அறிவுரைகளைப் பார்ப்போம்.

ஞாயிற்றுக்கிழமைகளில் எதை எதைச் செய்யலாம்?

 

ந்ருபாபிஷேக மாங்கல்ய யானாஸ்த்ர கர்ம ச I

ஔஷதா ஹவ தான்யாதி விதேயம் பானுவாஸரே II

 

1 மன்னர்களுக்கு மகுடாபிஷேகம் செய்தல் 2. மங்களகரமான காரியங்களைச் செய்தல் 3) உத்தியோகத்தை ஏற்றுக் கொள்ளுதல் 4) பணிபுரியத் தொடங்குதல் 5) பிரபு தர்சனம் (உயர் அதிகாரிகள் சந்திப்பு) செய்தல் 6) மருந்து தயாரித்தல் (மூலிகை சேர்ப்பதிலிருந்து உட்கொள்ளுதல் முடிய) 7) வாகனம் செய்தல், வாகனத்தில் ஏறி அமர்தல் 8) போர் செய்யத் தொடங்குதல், அதற்கான் ஆயுதங்களைத் தயாரித்தல் 9) தான்யம் முதலியனவற்றைச் சேகரித்து அவற்றை பத்திரப்படுத்தி வைத்தல் ஆகியவற்றை ஞாயிற்றுக்கிழமைகளில் செய்ய வேண்டும்.

 

திங்கட்கிழமைகளில் எதை எதைச் செய்யலாம்?

 

சங்கமுக்த அம்பு ரஜத வ்ருக்ஷ இக்ஷு ஸ்தீரி விபூஷணம் I

புண்யகீத க்ரதுக்ஷீ ர க்ருஷிகர்ம இந்துவாஸரே II

 

 • சங்கு, முத்து சேகரிப்பு வேலைகள் 2) நீர் சம்பந்தமான பணிகள் 3) வெள்ளி சம்பந்தமான பணிகள் 4) மரவேலைகள், கரும்பு ஆலையாட்டல் 5) பெண்களின் நலத்திற்கான அனைத்துப் பணிகள் 6) ம்லர்த் தோட்டம் அமைத்தல் 7) நல்ல சங்கீதப் பயிற்சி 8) யாகம் செய்தல் 9) பால் சம்பந்தமான பணிகள் 10) விவசாயம் செய்தல் ஆகியவற்றை திங்கட்கிழமைகளில் செய்ய வேண்டும்.

 

செவ்வாய்க்கிழமைகளில் எதை எதைச் செய்யலாம்?

 

விஷாக்னிபந்தன்ஸ்தேய சந்திவிக்ரஹகர்ஷணம் I

தாத்வாகர ப்ரவுளாதி கர்மபூமிஜாவஸரே II

 

 • விஷப் பொருள்களைச் சுத்தம் செய்தல் 2) காளவாய் அடுப்புப் போடுதல் 3) அணை கட்டல் 4) திருட்டுக் காரியங்களைச் செய்தல் 5) கலகம் செய்தல் 6) பகைவரைச் சந்தித்தல் 7) போர் 8) சுரங்க வேலை 9) பவளம் எடுத்தல்; பவள நகை செய்தல் 10) அம்பு (போர்க்கருவி) தயாரித்தல் ஆகியவற்றைச் செவ்வாய்க் கிழமைகளில் செய்ய வேண்டும்.

 

புதன்கிழமைகளில் எதை எதைச் செய்யலாம்?

ந்ருத்யஷில்பகலாகீதிலிபி பூரசஸங்க்ரஹம் I

விவாததாது சங்க்ராம கர்ம குர்யாதித்தோஹனி II

 

 • நடனம் பயிலுதல் 2) சிற்பக் கலை கற்றல் 3) பாட்டுப் பயில ஆரம்பித்தல் 4) எழுத்து வேலை 5) புஸ்தகம் எழுதல், அச்சிடல் 6) கலகம் புரிதல் 7) விவகாரம் – விவாதம் செய்தல் 8) தாதுப் பொருள் சேகரித்தல், விற்றல் 9) கலை பயிலல் ஆகியவற்றைப் புதன்கிழமைகளில் செய்ய வேண்டும்.

 

வியாழக்கிழமைகளில் எதை எதைச் செய்யலாம்?

 

யக்ஞபௌஷ்டிக மாங்கல்ய ஸ்வர்ணவஸ்த்ராதி பூஷணம் I

வ்ருக்ஷ குல்மலதாயான் கர்மதேவேத்வாஸரே II

 

 • யாகம் செய்தல் 2) புஷ்டியளிப்பன 3) மங்களகரமானவை 4) பொன்வேலை 5) ஆடை முதலியன செய்தல்,வாங்குதல் 6) நகை செய்தல் 7) மரம், செடி, கொடி நடுதல் (படரவிடல்) 8) வாகனத்தில் ஏறுதல் 9) தெய்வீகமான செயல்களைச் செய்தல் ஆகியவற்றை வியாழக்கிழ,மைகளில் செய்ய வேண்டும்.

வெள்ளிக்கிழமைகளில் எதை எதைச் செய்யலாம்?

 

ந்ருத்யகீதாதி வாதித்ர ஸ்வர்ண்ஸ்த்ரீ ரத்னபூஷணம் I

பூபண்யோத்ஸவ கோதான்யவாஜிகர்ம ப்ருகோர்தினே II

 

 • பாட்டு, நடனம் கற்றல் 2) வாத்தியம் கற்க ஆரம்பித்தல் 3) தங்க வேலை தொடங்குதல் 4) புத்தாடையுடுத்தல் 5) ஆபரணம் அணிதல் 6) புண்ணிய காரியம் செய்தல் 7) உற்சவம் முதலியன இயற்றல் 8) பசு வளர்த்தல் 9) தானியங்களைச் சேகரித்தல் 10) குதிரை வாகனம் வாங்குதல் 11) திருவிழா நடத்தல் 12) பூமி சேகரித்தல், வியாபாரம் தொடங்குதல் ஆகியவற்றை வெள்ளிக்கிழமைகளில் செய்ய வேண்டும்.

 

சனிக்கிழமைகளில் எதை எதைச் செய்யலாம்?

த்ரபு சீஸ ஆயஸ அஷ்மாதி விஷ பாப ஆஸவா ந்ருதம் I

ஸ்திரக்ர்மாகிலம் வாஸ்து சங்க்ரஹ: சௌரிவாஸரே II

 

 • துத்தநாகம், ஈயம் போன்ற தாது சம்பந்தமான வேலைகள் 2) விஷ சாயம் 3) அம்பு- யுத்த வேலை 4) கல் பணி 5) பாவ காரியங்கள் 6) கள் (ஆஸவம்) தயாரித்தல் 7) பொய் கூறுதல் 8) வீடு, மனை சேகரித்தல் ஆகியவற்றை சனிக்கிழமைகளில் செய்ய வேண்டும்.

இப்படி அந்தந்தக் கிழமைகளில் பலிக்கக்கூடிய காரியங்களைத் தெரிந்து கொண்டு அதற்கேற்ப உசிதமான நமது  பணிகளைத் தொடங்கிச் செய்தால் வாழ்வு சிறக்கும்; வெற்றி கிடைக்கும் என்பது நமது முன்னோர்களின் அறிவுரை.

கடைப்பிடிப்போம்; வெற்றி பெறுவோம்

***

 

 

 

 

 

 

 

தானம் செய்தால் வானம் திறக்கும்-புறநானூறு (Post No.4395)

Written by London Swaminathan 

 

Date: 14 NOVEMBER 2017

 

Time uploaded in London- 7-46 am

 

 

Post No. 4395

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

புறநானூற்றுப் புலவர்  ஏணிச்சேரி முடமோசியாரும், அறநெறிச் சார ஆசிரியர் முனைப் பாடியாரும் சொல்லுவர்:

 

“தானம் செய்தால் வானம் திறக்கும்”.

 

வானம் என்ற சொல்லைத் தமிழ்ப் புலவர்கள் இரு வகையில் பயிலுவர்:

வானம் = மழை

வானம் = சொர்க்க லோகம் , இந்திர லோகம்

 

மாபெரும் சம்ஸ்கிருத அறிஞனான திருவள்ளுவன் பகவத் கீதை பாணியில் (16-1) யாத்த தானம் தவம் இரண்டும் தங்கா வியன் உலகம், வானம் வழங்காதெனின் (குறள் 19)” என்னும் இடத்தில் வானம் என்பது மழையைக் குறிக்கும்; வள்ளுவன் தானம், தவம் என்னும் சம்ஸ்கிருதச் சொற்களை பகவத் கீதை ‘ஸ்டைலில்’ 19, 295 ஆகிய எண்ணிட்ட குறள்களில் பயன்படுத்துவான். சம்ஸ்கிருத ஸ்லோகக்ங்களில் இது நூற்றுக் கணக்கான இடங்களில், குறிப்பாக கீதையில், சேர்ந்தே பயிலப்படும் சொற்கள்; நிற்க

 

நாம் சொல்ல வந்த விஷயத்தைக் காண்போம். தானம் செய்தால் வானம், அதாவது சொர்க்க லோகம் திறந்து இருக்குமாம்!~

 

அறநெறிச் சாரம் என்னும் நீதி நூலில் முனைப்பாடியார் புகல்வது யாதெனின்,

ஒன்றாகநல்லது உயிரோம்பல் ஆங்கதன்பின்

நன்றாய்ந்தடங்கினார்க் கீத்துண்டல் – என்றிரண்டும்

குன்றாப் புகழோன் வருகென்று மேலுலகம்

நின்றது வாயில் திறந்து

 

–அறநெறிச்சாரம்

பொருள்:-

ஒன்றாகநல்லது உயிரோம்பல் = அறங்களில் சிறந்தது பிற உயிர்களைப் பாது காப்பது ஆகும்

 

ஆங்கு அதன் பின்  நன்கு ஆய்ந்து அடங்கினார்க்கு ஈத்து உண்டல்= ஞான நூல்களைக் கற்று, மனம் போன வழியில் செல்லாமல், அடக்கத்துடன் வாழ்வோருக்கு உணவு கொடுத்தல் மற்ற ஒரு சிறந்த தர்மம்; பிறகு தானும் உண்ணுதல் வேண்டும்.

 

என்ற இரண்டும் குன்றாப் புகழோன்= இவ்விரு தர்மங்களால் புகழ்பெற்று விளங்குபவர்களை

வருக என்று வாயில் திறந்து மேல் உலகம் நின்றது =  வருக வருக என வரவேற்பதற்காக சொர்க லோகம் அதன் வாயில் கதவுகளைத் திறந்து வைத்துக்கொண்டு காத்திருக்கின்றது.

 

அதாவது மாலையைக் கையில் வைத்துக்கொண்டு இந்திரனும் அப்சரஸ் அழகிகளும் மேள தாளத்துடன் காத்து  நிற்பர் என்பதாம்!

இந்திர லோகத்தில் டமாரம்!

ஆய் அண்டிரனை உறையூர் ஏணிச்சேரி முடாமோசியார் பாடிய புறநானூற்றுப் பாடலில் (241)

 

திண்தேர் இரவலர்க்கு, ஈத்த, தண் தார்,

அண்டிரன் வரூ உம்என்ன, ஒண்தொடி

வச்சிரத் தடக்கை நெடியோன் கோயிலுள்,

போர்ப்புறு முரசம் கறங்க,

ஆர்ப்பு எழுந்தன்றால், விசும்பினானே

 

சுருக்கமான பொருள்:

வறுமையில் வாடியோருக்கு அள்ளி, அள்ளித் தந்த ஆய் அண்டிரன் (அஜேந்திரன்) இறந்தவுடன் அவனை வரவேற்க இந்திர லோகத்தில், இந்திரன் கோவிலில், முரசுகள் முழங்கினவாம். வச்சிரத் தடக்கை நெடியோன் கோயில் என்பதற்கு பழைய உரைகாரர்கள் இந்திரலோகம் (சொர்க்கலோகம்) என்றே பொருள் கண்டுள்ளனர். பூமியில் உள்ள இந்திரன் கோயிலன்று.

 

அதாவது, பூமியில் தானம் என்னும் புண்ணிய கருமத்தைச் செய்தால் அவர்களை வரவேற்க இந்திரன் காத்திருப்பானாம்; அதுவும் எப்படி? ‘பாண்டு வாத்திய’க் குழுவுடன் வாசலில் நிற்பானாம்!

புற நூலுக்குப் பின் தோன்றிய அறநெறிச் சாரத்தில் முனைப்படியாரும் இதே கருத்தைச் சொல்லும் போது நம் ஐயமெல்லாம் பறந்தோடிப் போகின்றது.

 

–Subham, Subham–

 

எந்தப் பொருளும் கந்தப் புராணத்திலே! (Post No.4384)

Written by London Swaminathan 

 

Date: 10 NOVEMBER 2017

 

Time uploaded in London- 16-56

 

 

Post No. 4384

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

 

தமிழில் ஒரு பழமொழி உண்டு: “எந்தப் பொருளும் கந்தப் புராணத்திலே!”

ஏன் இப்படிச் சொல்லுகின்றனர்?

 

மஹாபாரதம் பற்றி நாம் கேள்விப் பட்டிருக்கிறோம்: இதில் சொல்லாத பொருள் உலகில் இல்லை என்று; அதில் வியப்பில்லை; ஒரு லட்சம் ஸ்லோகங்கள் கொண்ட மஹாபாரதம் உலகிலேயே பெரிய காவியம்; ஆகையால் எல்லாம் இருக்க வாய்ப்புள்ளது. வியாசர் தனது காலத்தில் இருந்த அத்தனை விஷயங்களையும் பாண்டவர் கதைக்குள் அழகுபடப் புகுத்திவிட்டார். அதே போல கந்தப் புராணத்தில் இருக்கிறதா?

இதோ சில சுவையான விஷயங்கள்:–

கந்த புராணத்தை இயற்றியவர் யார்?

கச்சியப்ப சிவாச்சாரிய சுவாமிகள்

 

கந்த புராணத்திலே எத்தனை செய்யுட்கள் உள்ளன?

10346

 

இதன் முதல் பாட்டு எப்படி துவங்குகிறது?

‘திகடச் சக்கரச் செம்முக மைந்துளான்’

 

இது பற்றி ஏன் சர்ச்சை எழுந்தது?

காஞ்சீபுரத்தில் கந்தபுராண நூலை அரங்கேற்ற கச்சியப்பர் வந்தபோது முதல் செய்யுளே இலக்கணப் பிழையுடையதென்று அறிஞர்கள் சிலர் ஆட்சேபித்தனர். மறு நாள் விளக்கம் தருவதாகச் சொன்ன கச்சியப்பர் அதற்கான இலக்கண விதியைக் காணாமல் பரிதவித்தார். இரவில் முருகப் பெருமானே கனவில் வந்து வீரசோழியத்தில் அதற்கான விளக்கம் இருப்பதாகச் செய்யுளைக் காட்டியவுடன், மறு நாள் அவர் அதற்கு விளக்கம் தந்து வெற்றி கரமாக அரங்கேற்றினார்.

எந்தப் பொருளும் இந்தப் புராணத்தில் உளதா?

ஆம்; எல்லா உபகதைகளும் இதில் உள்ளன. இதன் மூலம் சம்ஸ்கிருத மொழியில் உள்ள ஸ்காந்தம் ஆகும்.அதுதான் 18 புராணங்களில் மிகப் பெரியது 81,000 ஸ்லோகங்கள் உடைத்து.

 

கந்த புராணத்தின் பெருமை என்ன?

பதினெட்டு புராணங்களில் பத்து புராணங்கள் சிவ பரமானவை; அவைகளில் கந்த புராணம் சிறந்தது; ஏனெனில் வேதாந்த சித்தாந்த சாரங்களை உள்ளடக்கியது. அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு புருஷார்த்தங்களையும் எளிதில் தரவல்லது.மங்கலத்தைச் செய்விப்பது; வலிமிக்க கலித் துன்பத்தை நீக்குவது.

கச்சியப்பர் இது பற்றி செப்பியது யாது?

“காந்தம் என்னும் பெருங்கடல்”  — என்று அருளினார். 10,346 பாடல்களை ஆறு காண்டங்களாகவும் 94 படலங்களாகவும் அவர் பிரித்தார்.

 

இதைச் சுருக்க முடியுமா?

சம்பந்த சரணாலய சுவாமிகள் என்பார், கந்தப் புராணத்திலுள்ள வரலாறுகளை ‘சுருக்கித் தொகுத்தல்’ என்னும் யாப்பால் 1049 செய்யுட்களால் இயற்றி அருளினார்.

 

வடமொழியில் உள்ள ஏழாவது காண்டமான உபதேச காண்டத்தை கோனேரியப்பர் என்பவர் 4347 செய்யுட்களாகப் பாடியுள்ளார்; அதில் சூரன் முதலியோரின் முன்னை வரலாறும் உருத்திராக்க மஹிமையும்,  விபூதி மஹிமையும், சிவ நாம மஹிமையும் உளது.

கந்த புராணத்தில் உள்ள ஆறு காண்டங்கள் யாவை?

உற்பத்தி காண்டம், அசுர காண்டம் , மஹேந்திர காண்டம் , யுத்த காண்டம் , தேவ காண்டம், தக்க காண்டம் என்று ஆறு காண்டங்கள்

இவற்றில் அறுமுகக் கடவுளின் அவதாரம், தேவரை அசுரர்கள் சிறை செய்த வரலாறு,  சூரபன்மனை முருகன் வென்ற வரலாறு, வள்ளி, தெய்வயானை திருமணம், முதலியன உடைத்து.

 

 

கச்சியப்பரின் கந்த புராணத்தில் என்ன உளது?

 

கனிச்சுவை மிக்கது; நவில்தொறும் நவில்தொறும் நா நயம் பயப்பது;

பயில்தொறும் பயில்தொறும்  அறுமுகக் கடவுள் மேல் பக்தி ஞானம் விளைப்பது.

இதில் சொல்லபடாத கிளைக் கதைகள் இல; இதை ‘புதுமயிலூர்பரன் புராணத்துற்றிடாக் கதையிலை’ என்னும் செய்யுட் பகுதியால் அறியலாம்.

 

அது கிரந்தத் தொகை, கதைப் பரப்பு, அரும்பொருட்கிடக்கை, பொருள் ஆழம் என்பவைகளால் மற்றவற்றைச் விடச் சிறந்து விளங்குவதால்

கந்த புராணத்தை தமிழில் வெளியிட்டவர் யார்?

கந்த புராணத்தின் மூல பாடம் முழுவதையும் முதலில் யாழ்ப் பாணத்து நல்லூர் ஸ்ரீ ஆறுமுக நாவலர் பதிப்பித்தார். அவரே கந்தபுராணத்தை வசன நடையிலும் எழுதி  வெளியிட்டார்.

கந்த புராணத்தில் சுவையான, அதிசய விஷயங்கள்  இருக்கின்றனவா?

ஆம். யுத்த காண்டத்தில் 108 பூத கணத் தலைவர்கள் பெயர் உள்ளது. அசுர  காண்டத்தில் காச்யபர் உபதேசம், மாயாதேவி உபதேசம், சுக்கிராச்சாரியார் உபதேசம் உள்ளன. கஸ்யபருக்கு மாயைபால் தோன்றிய சூர பன்மன் , வீர வேள்வி செய்து, சிவனிடம் வரம் பெற்று 1008 அண்டங்களை 108 யுகங்களுக்கு ஆள வரம் பெற்றதையும் காணலாம். தட்ச காண்டத்தில், தக்கன் புதல்வர்களை, நாரதர் தவ வழியில் செலுத்தல், ததீசி முனிவர் பதில் கூறல், வீரபத்திரர், பத்திர காளி தோற்றம், யாக சங்காரம் ஆகியன ஆழ, ஊன்றிப் படித்தற்குரியனவாம். கந்தன் தொடர்பான விரதங்களும் நல்ல தகவல் தருவன.

 

கந்தபுராணத்தில் சோமாஸ்கந்த மூர்த்தியை, முசுகுந்த சக்ரவர்த்தி கொண்டு வந்து, திருவாரூரில் பிரதிஷ்டை செய்த வரலாறும் ஆறு மூர்த்திகளை  ஆறு ஸ்தலங்களில்  பிரதிஷ்டை செய்த வரலாறும் அறிய வேண்டிய விஷயங்கள்.

TAGS:— கந்தபுராணம், கச்சியப்ப சிவாச்சாரியார், திகடச்சக்கர, ஆறு காண்டங்கள்

 

–சுபம், சுபம் –