ஜோதிடத்தைக் கண்டுபிடித்தது தமிழனா?

constellation_north

Written by London swaminathan

Research Article no. 1723; dated 16 March 2015

Up loaded at 13-12 London time

சங்கத் தமிழ் நூல்களில் ஜோதிடம் பற்றிய குறிப்புகள் நூற்றுக் கணக்கில் உள்ளன. மிருகங்கள் கூட ஜோதிடம் பார்த்ததாக- சகுனம் பார்த்ததாக சங்கப் புலவர்கள் பாடி வைத்தனர். சம்ஸ்கிருதத்தில் கிரஹங்களுக்கு நிறைய பெயர்கள் உண்டு. ஆனால் தமிழில்தான் 27 நட்சத்திரங்களுக்கும் வெவ்வேறு பெயர்கள் உள்ளன. அதாவது ஒவ்வொரு நட்சத்திரத்துக்கும் நிறைய பெயர்கள் வருகின்றன. என்னிடமுள்ள புகழ் பெற்ற சம்ஸ்கிருத நிகண்டான அமரகோஷத்தில் கூட 27 நட்சத்திரங்களுக்கு இவ்வளவு பெயர்கள் இல்லை!

தமிழ் நிகண்டுகளில் உள்ள தமிழ்ப் பெயர்களைக் காண்கையில் சோதிட இயல் என்பது தமிழ்நாட்டில்தான் உண்டாயிற்றோ என்று வியக்கவேண்டி இருக்கிறது. மேலும் இந்தப் பெயர்களில் சில 2000 ஆண்டுகள் அல்லது அதற்கும்முந்தைய பழமையுடைய புறநானூற்றில் கூட காணப்படுகின்றன. இதுமட்டுமின்றி நாடி ஜோதிடம், கேரளத்தில் உள்ள சோழி சோதிடம் (பிரஸ்னம்) இவைகளும் தென் பகுதியிலேயே பயன்பாட்டில் இருக்கின்றன. இன்றும் தமிழர்களுக்கு ஜோதிடத்தில் அபார நம்பிக்கை உளது.

ஆனால் தமிழ் பெயர்களில் பல வடமொழி நம்பிக்கைகளும், பல தமிழாக்கங்களும் இருக்கின்றன. ஆகையால் சம்ஸ்கிருதம்- தமிழ் மொழி தெரிந்தவர்களே இந்தத் துறையில் ஆராய்ச்சி செய்ய தகுதி பெற்றவர்கள்;

ஒரு எடுத்துக்காட்டு தருகிறேன்:

புறநானூறு பாடல் 229 கூடலூர் கிழார் என்னும் புலவரால் பாடப்பட்டது. ஒரு எரி நட்சத்திரம் (எரி கல்) தோன்றிய வுடன் சேர மன்னன் இறக்கப்போகிறானே என்று பயந்தார் புலவர். அதே போல ஒரே வாரத்தில் சேர மன்னன் யானைக் கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை இறந்து விடுகிறான். உடனே கூடலூர்க் கிழார் பாடுகிறார் (புற.229)

இதில் பயன்படுத்தப்பட்ட வானநூல் சொற்கள்”

ஆடு=மேஷ ராசி

அழல்சேர் குட்டம்= கார்த்திகை நட்சத்திரம்

முடப்பனையம் = அனுஷம்

தலை நாள் மீன் = உத்தரம்

நிலை நாள் மீன் = எட்டாம் மீனாகிய மிருகசீருசம்

பாசி= கிழக்கு திசை

ஊசி= வடக்கு திசை

கயக்குளம்= புனர்பூசம்

பங்குனி = பங்குனி மாதம்

இதில் எல்லாம் தமிழ் சொற்கள் போலக் காணப்படும். ஆனால் ஆடு என்று மேஷ ராசியை வடமொழி சோதிட நுல்களும் குறிப்பிடும். பங்குனி என்ற மாதமும் சம்ஸ்கிருதச் சொல். பாசி என்பது = ப்ரதீச்யை/மேற்கு., ஊசி என்பது= வடக்கு/உதீச்யை; சம்ஸ்கிருதச் சொற்கள்!

பாசி,ஊசி என்பனவற்றை சம்ஸ்கிருத அறிவுடையோரே கண்டுபிடிக்க முடியும்.

இதே போல பரிபாடல் 11-லும் தமிழ்சொற்களும் சம்ஸ்கிருதச் சொற்களும் கலந்து வருகின்றன.

இனி 27 நட்சத்திரங்களுக்கான தமிழ்ப் பெயர்களைக் காண்போம். சில சொற்கள் தூய தமிழ் சொற்கள். அவைகளுக்கு தமிழர்கள் ஏன் அப்படிப் பெயர் வைத்தனர் என்பது பற்றி ஆழமான ஆராய்ச்சி செய்யவேண்டும். இன்னும் சில சொற்கள் சம்ஸ்கிருதத்தில் இருந்து தமிழாக்கம் செய்யப்பட்டவை. மிருகசீர்ஷம் என்பதை தமிழில் மான் – தலை என்பர்.

Pleiades-star-cluster

கார்த்திகை நட்சத்திரக் கூட்டம்

இதோ 27 நட்சத்திரங்களின் பெயர்கள் :–

அசுவினி = பரி, புரவி, வாசி, ஐப்பசி, இரலை, புரவி, ஏறு, யாழ், தலை நாள், மருத்து நாள், சென் பூதம், குதிரை

பரணி = காடுகிழவோன், தாழி, அடுப்பு, முக்கூட்டு, வேழம், சோறு, பகடு, பகலவன், தாசி

கார்த்திகை = அறுமீன், அழல், ஆரல், அளக்கர், எரி, அங்கி, ஆல், ஆறாமீன், அறுவாய், நாவிதன், அளகு, இறால், நாடன், வாணன், தழல்

ரோகிணி = பண்டி, மாட்டு வண்டி, உருள், வையம், ஊறல், பிரமநாள், சதி, அயன் நாள், தேர், விமானம், சகடம் (அகம் 86),

(சங்க காலத் தமிழர்கள் சகடம்/ரோகிணி நட்சத்திரம் அன்றுதான் கல்யாணம் செய்வர் என்று அகநானூறு கூறுகிறது. இது பற்றி நான் எழுதிய தனிக் கட்டுரையில் முழு விவரம் காண்க. 27 நட்சத்திரங்களின் ஆங்கிலப் பெயர்கள், அவற்றைப் பற்றிய கதைகள், 27 மீன்களுக்குப் புறம்பான அகஸ்திய நட்சத்திரம் பற்றிய கதைகளை முன்னரே இதே பிளாக்கில் வெளியிட்டுள்ளோம். ஏறத்தாழ 25 கட்டுரைகளில்! எழுதியவர்கள்:- ச.சுவாமிநாதன், ச.நாகராஜன்).

மிருகசீரிடம் = மான் தலை, மாழ்கு, மும்மீன், நரிப்புறம், பாலை வெய்யோன்.

Pleiades Star cluster

தொலைநோக்கி மூலம் கார்த்திகை நட்சத்திரங்கள்

திருவாதிரை = செங்கை, யாழ், சடை, இறைநாள் (வடமொழியில் ஆருத்ரா), மூதிரை,ஈசன் தினம்

27 நட்சத்திரங்களில் இரண்டே நட்சத்திரங்களுக்கு மட்டுமே (திரு+ஆதிரை, திரு + ஓணம்) திரு என்ற சிறப்பு அடைமொழி உண்டு. இது பற்றி காஞ்சி மஹா ஸ்வாமிகள் ஆற்றிய சொற்பொழிவினைப் படிக்க)

புனர்பூசம் = கழை, கரும்பு, ஆவனம், ஏரி, அதிதி நாள், பிண்டி, மூங்கில், பாலை

பூசம் = கொடிறு, வண்டு, காற்குளம், வியாழன் நாள் (புஷ்ய, திஷ்ய என்ற பெயர்கள் உண்டு), அண்டம், குருவின் நாள்

ஆயில்யம் (ஆஸ்லேஷா) = அரவு நாள், கௌவை, பாம்பு

மகம் = வேள்வி, வேட்டுவன், கொடுங்கம், வாய்க்கால், மாசி, முதலில் வரும் சனி, பிதிர் நாள், எழுவாயெழுஞ்சனி (திவாகர நிகண்டு)

பூரம் (பூர்வ பல்குனி) = எலி, கணை, இடை எழும் சனி, துர்க்கை, பகவதி, நாவிதன்

உத்தரம் = மானேறு, கதிர்நாள், கடை எழும் சனி, பாற்குனி, மாரி நாள்

aldebara

ரோகிணி நட்சத்திரம்

அத்தம் (ஹஸ்த) = ஐவிரல், கைம் மீன் , களிறு காமரம், அங்கிநாள், கௌத்துவம், நவ்வி, கயினி

சித்திரை =நெய்ம்மீன், பயறு, அறுவை, நடுநாள், ஆடை, தூசு, சுவை, தச்சன், துவட்டா நாள், நேர்வான்

சுவாதி = விளக்கு, வீழ்க்கை, வெறுநுகம், மரக்கால், காற்றினாள், முத்து, பவள, சோதி, அனில், காற்று

விசாகம் = முறம், முறில், சுளகு, காற்றினாள், வைகாசி, அனில நாள், சேட்டை

அனுஷம் = பனை, புள்தேள், நட்புநாள், புல், தாளி, பெண்ணை, தேள், போந்தை, மித்திர நாள்

கேட்டை(ஜேஷ்டா) = தழல், துளங்கொளி,  வல்லாரை, இந்திரன் நாள், சேட்டை, வேதி, எரி, பின்று

மூலம் = அன்றில், வில், குருகு, கொக்கு, தேட்கடை, சிலை, ஆனி, அசுர நாள்

பூராடம் (பூர்வாஷாட) = உடைகுளம், முற்குளம், நீர்நாள்

உத்திராடம் = ஆடி, கடைக் குளம், ஆனி, விச்சுவ நாள்

spica

சித்திரை (ஸ்பைகா) நட்சத்திரம்

திருவோணம் = முக்கோல், உலக்கை, மாயோன் நாள், முக்கோல், சிரவணம், சோணை, வயிரம்

அவிட்டம் (தனிஷ்டா) = பறவை, காக்கை, வசுக்கள் நாள், புள், ஆவணி

சதயம் (சதபிஷக்) = நீர்நாள், செக்கு, குன்று, போர், சுண்டன், வருணன் நாள்

பூரட்டாதி = நாழி, முக்கொழுங்கோல் (பூர்வ ப்ரோஸ்தபத), புரட்டை

உத்திரட்டாதி = மன்னன், அறிவன் நாள், பிற்கொழுங்கோல் (உத்திரப் ப்ரோஸ்தபத)

ரேவதி = இரவி நாள், கலம், தோணி, நாவாய், தொழு, பஃறி, ஆ நாள், கடை நாள், சூலம், பெரு நாள், பூடா நாள், கடை மீன்

arctoarcturus

சுவாதி நட்சத்திரம் ( ஆர்க்டுரஸ்)

என் கருத்துக்கள்:

ஒவ்வொரு நட்சத்திரத்துக்கும் உரிய வேத கால தெய்வங்களின் பெயர்கள் இப்பட்டியலில் உள.

சில விண்மீன்களின் பெயர்கள் வேறு பல விண்மீன்களுக்கும் வரும்.

பல பெயர்கள் போலக் காணப்பட்டாலும் அவை எல்லாம் ஒருபொருள் குறித்த பல சொற்களே. எடுத்துக்காட்டாக தீ என்பதற்கான — அங்கி, அழல், தழல், எரி போன்ற பல சொற்களால் — கார்த்திகை நட்சத்திரம் குறிக்கப்படுவதைக் காண்க. ஆகவே பட்டியலைச் சுருக்க முடியும்.

மேலும் வட நாட்டில் நீண்ட காலமாக 27 நட்சத்திரங்களுக்கும் போடும் படமும் பல சொற்களும் ஒரே மாதிரி இருக்கின்றன.

பல நட்சத்திரங்கள், சில கிரகங்களுடனும், சில மாதப் பெயர்களுடனும் தொடர்பு படுத்திருப்பதை நோக்குக.

orion-aldebaran-betelgeuse-rigel-pleiades

இதி்ல் திருவாதிரை, ரோகிணி, கார்த்திகை நட்சத்திரங்களளுள்ளன.

27-nakshatras

படத்தைப்  பெரிதாகப் பார்க்ககாதன் மீது க்ளிக் செய்யவும்.

இதோ ஆங்கிலப் பெயர்கள்:–

1) Ashwini –Alpha, Beta –Aries அஸ்வினி
2) Bharani – No 28,29,41 Taurus பரணி
3) Krittika – Pleiades கார்த்திகை
4) Rohini – Aldebaran Hyades, Alpha, Theta, Gama, Delta and Epsilon Taurus ரோஹிணி
5) Mrigashirsha – Lambda, Phi 1, Phi 2, Orion மிருகசீர்ஷம்
6) Aardraa –Betelgeaux – Alpha Orion திரு ஆதிரை
7) Punarvasu – Castor, Pollux with Procyon Alpha, Beta, Gemini-Alpha Canis Minor respectively புனர் பூசம்
8) Pushya – Gama, Delta and Theta of Cancer பூசம்
9) Ashlesha – Delta, Epsilon, Eta, Rho and Zeta Hydra ஆயில்யம்
10) Maagha – Regulus, Alpha, Ela, Gama, Zeta My and Epsilon Leonis மகம்
11) Poorva Phalkuni – Delta and Theta Leo பூரம்
12) Utra Phalkuni – Beta and 93 Leo உத்தரம்
13) Hasta – Delta, Gama, Eta, Virgo ஹஸ்தம்
14) Chitraa – Spica, Alpha Virgo சித்திரை
15) Swaati – Arcturus – Alpha Bootes ஸ்வாதி
16) Vishaakha – Alpha, Beta etc Libra விசாகம்
17) Anuraadha – Beta, Delta, Pi –Scorpia அனுஷம்
18) Jyestha – Antares Alpha, Sigma Tau Scorpio கேட்டை
19) Mula – Scorpio, tail stars மூலம்
20) Poorvaashadaa – Delta and Epsilon Sagittarius பூராடம்
21) Uttaraashaada – Zeta and Omicron Sagittarius உத்திராடம்
22) Shraavanaa – Altair – Alpha Aquila திரு ஓணம்
23) Dhanishtha – Delphinus அவிட்டம்
24) Shatabhisak – Lambda Aquarius சதயம்
25) Poorva Bhaadrapada – Alpha and Beta Pegasus பூரட்டாதி
26) Uttara Bhaadrapada – Gama Pagasus and Alpha Andromeda உத்திரட்டாதி
27) Revathi – Zeta Piscum ரேவதி

orion

ஒரையன் நட்சத்திரத் தொகுதி (சிவப்பாக  இருப்பது  திரு ஆதிரை)

தமிழர்கள் ஜோதிடப் பைத்தியங்கள்!

லண்டன் வெம்பிளி, மற்றும் ஹாரோ பகுதிகளில் ஆந்திரத்தில் இருந்து வரும் போலி ஜோதிடர்கள் அல்லது அரைகுறைகள் நல்ல காசு சம்பாதிக்கின்றனர். இலங்கைத் தமிழர்களுக்கு அதிகப் பிரச்சனைகளும் ஆசைகளும் இருப்பதால் “ஜோதிடர்கள் காட்டில் மழை பெய்கிறது”. எனது இலங்கைத் தமிழ் நண்பர் ஒருவர் சுமார் 500 பவுண்ட்களை (பிரிட்டிஷ் நாணயம்) ஒரு ஜோதிரிடம் ஏமாந்தார். முதலில் ‘கன்சல்டேஷன்’ கட்டணம், பிறகு, பூஜை, பெரிய பரிகாரம் என படிப்படியாக காசு பறிக்கப்பட்டது. உனக்கு என்ன விசரா (பைத்தியமா) என்று கேட்டேன். அன்றைய நாட்களில் நான் விசராகத்தான் இருந்தேன் என்று ஒப்புக்கொண்டார்.

சோதிடம் உண்மையான ஒரு கலை. அதை அறிந்தோர் வெகு சிலரே! அறிந்ததாகச் சொல்லி காசு பறிப்போர் ஆயிரம் ஆயிரம்!!!

ஆண்டுகள் அறுபது ஏன்?

60

Written by ச.நாகராஜன்

Article no. 1716; dated 14 March 2015

Up loaded at 12-30 London time

 

கலைமகளில் முன்பு வெளியான பழைய கட்டுரை இது. அன்பர்களின் வேண்டுகோளுக்கிணங்க மறுபதிப்பு செய்யப்படுகிறது.

ச.நாகராஜன்

தமிழரின் வானவியல் அறிவு

தமிழரின் வானவியல் அறிவு பிரமிக்கத் தக்கது.  பிரபவ ​தொடங்கி அக்ஷய முடிய அறுபது ஆண்டுக​ளைத் தமிழ் வருடங்கள் என்​றே கூறுகி​றோம்.  ஆண்டுகள் ஐம்பதாக​வோ, நாற்பதாக​வோ ஏன் வகுக்கப்படவில்​லை?  ​​மே​லை நாடுகளில் ஆண்டுகளுக்குப் ​பெயர் சூட்டும் வழக்கமும் இல்​லை; அறுபது வருடச் சுழற்சியால் வருடங்க​ளைப் பிரிப்பதும் இல்​லை.  நமது முன்​னோர் மட்டும் ஏன் இப்படி வகுத்தனர் என்ற வினா எழுவது இயல்​பே!  அறிவியல் ரீதியில் வானிவியல் அடிப்ப​டையில் அற்புதமாக அமைக்கப்பட்ட ஏற்பா​டே அறுபது வருடச் சுழற்சி ஆகும்.  குரு கிரகம் ஒரு மு​றை வான வட்டத்​தைச் சுற்றி வர (12 ராசிக​ளைக் கடக்க) 12 வருடங்கள் ஆகும்.  சனி கிரகம் வான வட்டத்​தைச் சுற்றி  வர 30 வருடங்கள் ஆகும்.  குருவும், சனியும் அசுவதி ​நட்சத்திரத்தில் காணப்படும் ​போது ​தோன்றும் வருட​மே பிரபவ ஆகும்.

ஐந்து மு​றை ஒரு வானவட்டத்​தைச் சுற்றி வர 60 ஆண்டுகள்.  இந்த பிரஹஸ்பதி சக்கரத்தின் அறுபது மாதங்க​ளே பிரபவ, விபவ, சுக்ல முதலான அறுபது வருடங்கள் ஆகும்.  இது மட்டுமின்றி ஆண்டுக்குப் ​பெயர்  சூட்டிய​தோடு அதன் மூலம் அந்த ஆண்டின் இயல்​பையும்  நம் முன்​னோர் குறித்து ​வைத்துள்ளனர்.  அது மட்டுமின்றி வருஷத்திய பலனுக்கான ​வெண்பா ​வேறு தனி​யே தரப்படுகிறது.  எடுத்துக்காட்டாக பிரபவ எனில் ​பொருள் உற்பத்தி ஆகுதல் என்று ​பொருள்;  விபவ என்றால் ஐஸ்வர்யம்; சுக்ல என்றால் நன்​மை.  இப்படி அறுபது வருடத்திற்கும் தனித்தனி ​பொருள் உண்டு. சித்ரபானு வருஷத்திய பலன் பற்றிய ​வெண்பா பின்வருமாறு:-

60-days-green-white-hi

சித்ர பானிற் சிறக்கம​ழை மிகுந்து

வித்துள்ள ​வெல்லாம் வி​ளையு​மே – எத்தி​சையும்

பார்பாருக் காகாது பா​வேந்தர்க்​கே நலமாம்

தீர்ப்பாக பூமிபயஞ் ​செப்பு.

​தைத்திரீய சம்ஹிதா 60 வருடங்க​ளை விரிவாக விளக்குகிறது.

 

 tamil years 

சூரிய வருடமும் சந்திர வருடமும்

சூரிய வருடம் என்றும் சந்திர வருடம் என்றும் வருடங்க​ளை இரண்டு விதமாகக் கணக்கிடுவது ​வேத காலம் தொட்டு இருந்து வருகிறது.  சூரிய வருடம் என்பது பூமி சூரிய​னைச் சுற்ற எடுத்துக் ​கொள்ளும் காலமாகும்.  சந்திர வருடம் என்பது சந்திர​னை அடிப்ப​​டையாகக் ​கொண்டது.  இரண்டுக்கும் உள்ள ​வேறுபாடு சுமார் 11 நாட்கள் ஆகும்.  5 வருடத்திற்கு ஒரு மு​றை ஏதாவது ஒரு மாதத்தில் இரண்டு அமாவா​சை வரும்.  தமிழர்கள் சூரிய​னை அடிப்ப​டையாகக் ​கொண்ட வருடத்​தை​யே க​டைப்பித்து வந்தனர்.  ஆக​வே அறுபது வருடங்களும் தமிழ் வருடங்கள் ஆகிவிட்டன.  பஞ்சாங்க கணித சாத்திரத்தில் தமிழர்கள் மிக நுணுக்கமாகக் காலத்​தை நிர்ணயிக்கும் ஆற்றல் ​பெற்றிருந்தனர்.  ஒரு சூரிய வருடத்திற்கு 365 நாட்கள், 15 நாழி​கை, 31 வினாடி, 15 தர்ப்ப​ரைகள் என்று துல்லியமாகக் கணக்கிடப்பட்டுள்ளது.  அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ என்ற ஒன்பது எழுத்துகளி​லே​யே பஞ்சாங்கத்​தைக் கணித்து விடுகின்றனர்.  இது மிக்க ஆச்சரியத்​தை வி​ளைவிக்கும் ஒன்று.

 new-year-tamil-cards

​நாரத புராணத்தில் வரும் கதை

தேவி பாகவதம் மற்றும் நாரத புராணத்தில் 60 வருடங்க​ளை நாரதருடன் ​தொடர்பு படுத்தி சுவாரசியமாக க​தை ஒன்று உள்ளது.  ஒரு மு​றை கிருஷ்ணர் நாரத​ரைத் தன் ரதத்தில் ஏற்றிக் ​கொண்டு ​சென்றார்.  வழியி​லே நீ​ரோ​டை ஒன்​றைக் கண்ட நாரதர் நீர் அருந்தச் ​சென்றார்.  முதலில் குளித்துவிட்டு நீ​​ரை அருந்துமாறு கிருஷ்ணர் கூறினார்.  ஆனால் இந்தக் கட்ட​ளை​யைப் புறக்கணித்து விட்டு நாரதர் குளிக்காம​லே​யே நீ​ரை அருந்தினார்.  என்ன ஆச்சரியம்!  உட​னே அவர் ஒரு அழகிய ​பெண்ணாக ஆகி விட்டார்.  அங்​கே கிருஷ்ணரும் இல்​லை; ரதமும் இல்​லை.  நாட்டி​லே சுற்றி அ​லைந்த ​பெண் உருவிலான நாரதர், ரிஷி ஒருவரின் ஆசிரமத்​தை அ​டைந்தார்.  சமாதியிலிருந்து மீண்ட ரிஷி தன் எதி​ரே அழகிய ​பெண் நிற்ப​தைக் கண்டார்.  தன்​னை சிஷ்​யையாக ஏற்றுக் ​கொள்ளுமாறு அவள் ​வேண்ட​வே அவ​ளை​யே மணந்தார்.  அந்தப் ​பெண்ணும் 60 பிள்​ளைக​ளைப் ​பெற்​றெடுத்தாள்.  ஒரு நாள் 60 பிள்​ளைகளும், கணவனான ரிஷியும் இறந்து விட்டனர்.  துக்கம் தாளாமல் கதறி அழுத ​பெண் ஈமக் கிரி​யைக​ளைக் கூடச் ​செய்ய முடியாத அளவில் மிகவும் ​சோர்ந்து ​போனாள்.  அதி பயங்கரப் பசி அவ​ளை வாட்டியது.

பக்கத்திலிருந்த மாமரத்தின் கனி​யைப் பறிக்க ​கை​யை உயர்த்தினாள்.  ஆனால் அது எட்டவில்​லை.  ​வேறு வழியின்றித் தன் கணவன் மற்றும் 60 பிள்​ளைகளின் பிணத்​தை ஒன்றின் மீது ஒன்று அடுக்கி ​மே​லே ஏறிக் கனி​யைப் பறித்தாள்.  அப்​போது அங்​கே வந்த ம​றையவர் ஒருவர், கணவன் பிள்​ளைகள் இறந்த தீட்​டைப் ​போக்காமல் சாப்பிடுவது தவறு என்று அறிவுறுத்தி முதலில் குளிக்குமாறு கூறினார்.  அ​தைக் ​கேட்ட ​பெண் ​கையில் மாங்கனி​யைத் தூக்கிப் பிடித்தவா​றே குளித்தாள்.  ​பெண் உரு நீங்கிப் ப​ழைய படி வ​ளையல் மட்டும் மாங்கனி​யோடு அப்படி​யே இருந்தது.  மறையவர் கிருஷ்ணனாக மாறினார்.  கிருஷ்ணரின் கட்ட​ளைப்படி மீண்டும் நீரில் இறங்கிக் குளித்த நாரதர் முழு உருவத்​தைப் ​பெற்றார்.  அவர் ​கையில் இருந்த மாங்கனி வீ​ணையாக மாறியது.  கிருஷ்ணர் நாரத​ரை ​நோக்கி, ”உங்களுடன் வாழ்ந்த ரிஷி யாரும் இல்​லை; அவ​ரே காலபுருஷன்!  60 பிள்​ளைகளும் பிரபவ, விபவ முதலான 60 வருடங்கள்” என்று கூறினார். ​

மா​யையின் மகி​மை​யை அறிய விரும்பிய நாரதர், ‘காலத்திற்கு உருவம் கி​டையாது; ஆனால் அந்தக் கால​மே மா​​யைக்கு உருவமாக இருக்கிறது’ என்ற உண்​மை​யை உணர்ந்தார்.  நம் வாழ்க்கையுடன் சம்பந்தப்பட்ட 60 ​குண வி​சேஷங்க​ளை​யே 60 பிள்ளைக​ளான வருடங்கள் ​வெளிப்படுத்துகின்றன.  இவ்வாறு காலத்தின் மகி​மை​யை ​வெளிப்படுத்தும் அழகிய புராணக் க​தை பல அரிய உண்​மைக​ளை ​வெளிப்படுத்துகிறது.

musicians-in-60-

ஜைன சித்தாந்தம்

ஜைன சித்தாந்தப்படி ஐந்து வருட சுழற்சியில் 60 சூரிய மாதங்களும், ​ 61 ருது மாதங்களும், 62 சந்திர மாதங்களும், 67 ​நட்சத்திர மாதங்களும் குறிப்பிடப்படுகிறது.  ஒரு ​சூரிய வருடத்திற்கு 366 நாளும், ஒரு ருது வருடத்திற்கு 360 நாளும் ​சித்திர வருடத்திற்கு 354 12/62 நாளும், ​ ஒரு நட்சத்திர வருடத்திற்கு 327 51/67 நாளும் குறிப்பிடப்படுகிறது. ​ என்றாலும் தமிழர்கள் ஏற்ற சூரிய வருடத்​தை​யே உல​கெங்கும் இன்று க​டைப்பிடித்து வருவ​தை நி​னைக்கும் ​போது தமிழ் ​நெஞ்சங்கள் உவ​கை அடைவதில் வியப்​பே இல்​லை!

***************************

பூவாதே காய்க்கும் மரமும் உள!

Jackfruit

பலா மரம்

Written by London swaminathan

Research Article no. 1708; dated 11 March 2015

Up loaded at 08-20 London time

 

பூவாதே காய்க்கும் மரமும் உள மக்களுளும்

ஏவாதே நின்றுணர்வார் தாம் உளரே – தூவா

விரைத்தாலு நன்றாகா வித்தெனவே பேதைக்கு

உரைத்தாலும் தோன்றாது உணர்வு 

—அவ்வையார் இயற்றிய நல்வழி

பொருள்: பூக்காது காய்க்கும் அத்தி, ஆல், அரசு, பலா முதலிய மரங்கள் உலகில் உண்டு. அது போல மக்கள் நடுவில் இதைச் செய் என்று சொல்லாமலேயே குறிப்பால் உணர்ந்து செயல்படும் நல்லோர் உண்டு. வேறு சிலரோ விதைத்தாலும் முளைக்காத வித்து (விதை) போன்றவர்கள். அவர்களுக்குச் சொன்னாலும் புரியாது- தெரியாது. மூடர்களுக்குச் சொல்லும் அறிவுரை இப்படிப் பயனற்றதே—அதாவது விதைத்தாலும் முளைக்காது.

banyan-tree-aerial-root

ஆல மரம்

தாவரவியல் அறிவு மிக்கவர்கள் இந்தியர்கள் — உயரிய கருத்துக்களைச் சொல்ல இது போன்ற அரிய உவமைகளைப் பயன்படுத்துவர்.

நல்வழி இயற்றிய அவ்வையார், சங்க கால அவ்வையார் அல்ல. சங்க காலம் முதல் தமிழகத்தில் வாழ்ந்த ஆறு அவ்வையார்களில் இவரும் ஒருவர். பிற்காலத்திய அவ்வையார். வயதான, அறிவுமிகுந்த, கணவர் இல்லாத, முது பெரும் அறிவாளிப் பெண்களை தமிழ் கூறு நல்லுலகம் “அவ்வை” என்ற அன்புப் பெயரிட்டு அழைக்கும்.

அரச மரம்

அரச மரம்

இந்தப் பாடலில் உள்ள பூவாத மரங்கள் விஷயம்  2300 ஆண்டுகளுக்கு முந்தைய மனுஸ்மிருதியிலும் உள்ளது (1-47)

பூவாது காய்க்கும் மரங்கள் ‘வனஸ்பதி’ எனப்படும். புஷ்பங்கள், பழங்களுடனுள்ள மற்றவை “மரங்கள்” எனப்படும் என்பார் மனு.

Apushpaa: falavanto ye te vanaspataya smruthaa:

Pushpina: falinas cha eva vrukshaam tu ubayata smruta:  (1-47 Manu)

அபுஷ்பா: பலவந்தோ யே தே வனஸ்பதய ஸ்ம்ருதா:

புஷ்பின: பலினஸ் ச ஏவ வ்ருக்ஷாம் து உபயத ஸ்ம்ருதா:

தீயோருடன் பேசாதே என்ற கருத்து பஞ்ச தந்திரக் கதைகளிலும் வருகிறது. குரங்குக்கு புத்திமதி சொன்ன தூக்கணங் குருவியின் கூட்டை, குரங்கு பிய்த்தெறிகிறது. இதன் மூலம் விஷ்ணுசர்மன் – “தீயோருக்கு புத்திமதி சொல்லாதே” — என்கிறார்.

இந்தப் பஞ்ச தந்திரக் கதையை விவேக சிந்தாமணி என்னும் நூலும் கூறுகிறது:-

“வானரம் மழைதனில் நனையத் தூக்கணம்

தானொரு நெறி சொலத் தாண்டிப் பிய்த்திடும்

ஞானமும் கல்வியும் நவின்ற நுல்களும்

ஈனருக்கு உரைத்திடில் இடரது ஆகுமே”.

 குருவி

தூக்கணங்குருவி — கூடு

எவ்வளவு அற்புதமான கருத்துக்களை நல்வழியும், விவேக சிந்தாமணியும் எளிய தமிழில் நமக்குத் தருகின்றன!! அதே கருத்துக்கள் வடமொழியிலும் உள்ளன. இமயம் முதல் குமரி வரை ஒரே கருத்துடைய இவ்வளவு பெரிய பூகோள நிலப்பகுதி 2000 ஆண்டுகளுக்கு முன் உலகில் வேறு எங்கும் இருந்தது இல்லை. ஒரே சிந்தனை, ஒரே பார்வை, ஒரே குறிக்கோள்!

அத்தி

அத்தி மரம்

வாழ்க தமிழ்!! வளர்க சம்ஸ்கிருதம்!! பொலிக பாரதம்!!!

தமிழ் புத்தாண்டு சித்திரையில் துவங்குவது ஏன்?

free panchang

Written by Santanam Nagarajan

Research Article no. 1707; dated 11 March 2015
by ச.நாகராஜன்
தமிழக அரசு தை மாதத்தை புத்தாண்டு துவக்கமாக அறிவித்தவுடன் எழுதப்பட்ட கட்டுரை இது; பலரும் தவறைச் சுட்டிக் காட்டிய பின் இந்த அறிவிப்பு காலாவதியாகி தற்போது தமிழ் புத்தாண்டு சித்திரை மாதமே வழக்கம் போலத் துவக்கப்படுகிறது.

தமிழ் புத்தாண்டு சித்திரையில் துவங்குவது ஏன்?
– ச.நாகராஜன்

தமிழர் வாழ்க்கை முறையில் சித்திரையே புத்தாண்டின் துவக்கம்! இதை மாற்றிய தமிழக அரசின் அறிவிப்பு சரியா?

புத்தாண்டின் துவக்கத்தையே தடுமாற வைத்த தமிழக அரசின் பார்வை சரியா? தமிழரின் வானவியல் அறிவியல் நோக்கில் ஒரு சிறிய பார்வை :-

உலகிலேயே ஆதிகாலம் தொட்டு வானவியலில் சிறந்து விளங்கியவர்கள் தமிழர்களே! சூரியனை மையமாக வைத்தே தமிழர்கள் தங்கள் வாழ்க்கை முறையை அமைத்தனர். இதையே உலகின் பல்வேறு பாகங்களும் ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்தின.

tamil years

பூமி சூரியனைச் சுற்றும் நீள்வட்டப் பாதையை சூரியனை மையமாக வைத்து தமிழன் 12 பாகங்களாகப் பிரித்தான். உண்மையில் பார்க்கப் போனால் பூமியே இந்தப் பகுதிகளில் நுழைகிறது. பூமியிலிருந்து பார்க்கும் நமக்கு சூரியன் இவற்றில் நுழைவது போலத் தோற்றமளிக்கிறது. இதை ஒப்புமை நகர்தல் (Relative Motion) என்று கூறுகிறோம். ஆகவேதான், சூரியன் இவற்றில் நுழைகிறான் என்று சொல்கிறோம்.

இந்த வான வீதியை மேஷத்தைத் தொடக்கமாகக் கொண்டு 12 பாகங்களாக மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் எனப் பிரித்தான். இவையே ராசிகள் என அழைக்கப்படுகின்றன.

மேஷம் என்பது பூஜ்யம் டிகிரியில் (அதாவது பாகையில்) ஆரம்பிக்கிறது. மொத்தம் 360 டிகிரிகள் (அல்லது பாகைகள்) என்பதால் ஒவ்வொரு ராசிக்கும் 30 டிகிரிகள் உண்டு.

சூரியன் மேஷத்திற்குள் நுழையும் ஆரம்பம் சித்திரையில் நிகழ்கிறது. ஆகவே இந்த ஆரம்பத்தையே புத்தாண்டின் தொடக்க நாளாகக் கொண்டு புது வருடத்தை அறிவியல் ரீதியாக தமிழன் ஆரம்பித்தான்.

அது மட்டுமின்றி வான வீதியில் உள்ள 27 நட்சத்திரங்களை சமமாகப் பங்கிட்டு இந்த 12 ராசிகளுள் அடக்கினான். அசுவதி தொடங்கி ரேவதி முடிய உள்ள 27 நட்சத்திரங்கள் இந்த 12 ராசிகளில் உள்ளன. அசுவதி மேஷத்தில் தொடங்குவதாலும் தமிழ் புத்தாண்டின் ஆரம்பம் சித்திரையில் ஆரம்பிப்பது உறுதிப்படுகிறது.

new-year-tamil-cards

அத்தோடு ஒரு ஆண்டை ஆறு பருவங்களாகத் தமிழன் பிரித்தான். இளவேனில் (சித்திரை, வைகாசி), முதுவேனில் (ஆனி, ஆடி), கார் காலம் (ஆவணி, புரட்டாசி), கூதிர்காலம் (ஐப்பசி, கார்த்திகை), முன் பனிக்காலம் (மார்கழி, தை) பின் பனிக்காலம் (மாசி, பங்குனி) என்ற ஆறு பருவங்களில் வசந்த காலம் எனப்படும் இளவேனில் காலம் வசந்த திருவிழாவிற்கு உரிய காலம் ஆகிறது. உற்சாக ஊற்றாக விளங்கும் இந்தக் காலத்தில் (மதுரை) சித்திரைத் திருவிழா, திருவிடை மருதூர் தேரோட்டம் மற்றும் திருச்சி, காஞ்சி உள்ளிட்ட நகர்களில் கோலாகலத் திருவிழாக்கள் தொன்று தொட்டு நடைபெற்று வருகின்றன. கோலாகலமான விழாக் காலத்தில் புத்தாண்டின் துவக்கம் அமைக்கப்பட்டது அறிவு பூர்வமானது; உணர்ச்சி பூர்வமானதும் கூட!

இத்துடன் சூரியன் மேஷத்தில் உச்சமாக விளங்குகிறான். ஆகவே பிரகாசமான சித்திரையை ‘பிறக்க இருக்கும் புத்தாண்டு’ ஒளி வீசும் ஆண்டாகத் துலங்கும் வண்ணம் ஆண்டுத் துவக்கமாக அமைத்தது மிக்க பொருத்தமாக உள்ளது அல்லவா?

சூரியனைப் பிரதானமாகக் கொண்ட இந்த வாழ்க்கை முறை, இந்தியாவின் அனைத்துப் பகுதிகளையும் ஈர்த்தது. ஆகவேதான் மலையாளம், மணிபூர், அஸ்ஸாம், வங்காளம், திரிபுரா உள்ளிட்ட அனைத்து மாநிலங்களும் சித்திரையையே புத்தாண்டாக ஏற்றுள்ளன.

அது மட்டுமல்ல, இது உலகின் பல நாடுகளையும் கவர்ந்தது. நேபாளம், பர்மா, கம்போடியா, ஸ்ரீலங்கா, தாய்லாந்து உள்ளிட்ட ஏராளமான நாடுகள் சித்திரையிலேயே புத்தாண்டுக் கொண்டாட்டத்தை அமைத்துள்ளன!

southindiacitiesbig

இன்னொரு சுவையான செய்தியும் உண்டு! வரலாற்றை ஊன்றிக் கவனித்தால் மேலை நாடுகளும் முன் காலத்தில் ஏப்ரலையே ஆண்டின் முதல் மாதமாகக் கொண்டிருந்தது தெரிய வரும். ஆனால் கிறிஸ்தவ மதம் தோன்றிய பின்னர், மாதத்தில் உள்ள நாட்களெல்லாம் மாற்றி அமைக்கப்பட்டு ஜனவரியே ஆண்டின் முதல் மாதம் என்று கொள்ளப்பட்டது.

மகரத்தில் சூரியன் நுழையும் தை மாதம் மிகுந்த புண்ய காலமாகக் கொள்ளப்படுகிறது. காரணம், உத்தராயணம் என்னும் வடக்கு நோக்கி சூரியன் பயணம் துவக்கும் காலம் அது! அது மட்டுமின்றி அறுவடை செய்யப்படும் மன மகிழ்ச்சியான காலம் இது.

ஆக, சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தைப் பொங்கல் கொண்டாட்டம் ஏற்பட்டது.

சூரியனுக்கு நன்றி தெரிவிப்பது வேறு; சூரியனின் ஆரம்பத்தை நிர்ணயிப்பது வேறு. நன்றி தெரிவிப்பது தையிலும், ஆரம்பம் சித்திரையிலும் இருப்பதே சரி!

வான வீதியை 12 பாகமாகக் கொண்டால் மகரம் 270 டிகிரியில் (அல்லது பாகையில்) வரும்.

270 டிகிரியில் பயணத்தை ஆரம்பிக்கச் சொல்லும் தமிழக அரசின் உத்தரவு காலத்தின் விசித்திரமே. ஓட்டப் பந்தய தூரத்தில் முக்கால் பகுதி கடந்த இடத்தை ஆரம்ப இடமாக நிர்ணயிப்பது போன்றது இது!

இரு முறை சனி சூரியனை சுற்ற ஆகும் காலம் 60 ஆண்டுகள். ஐந்து முறை வியாழன் சூரியனைச் சுற்ற ஆகும் காலம் 60 ஆண்டுகள். ஆகவே அறுபது ஆண்டுகள் கொண்ட சுழற்சி முறையை அறிவியல் ரீதியாக அமைத்து அறுபது ஆண்டுகளை தமிழன் அமைத்தான், இவை தமிழ் ஆண்டுகள் என்றே இன்று வரை அழைக்கப்படுகின்றன.

இப்படி இன்னும் ஏராளமான அதிசய உண்மைகள் தமிழரின் வானவியல் அறிவின் மூலமாக அறிவியல் ரீதியாக அமைக்கப்பட்டுள்ளன. இவற்றை வல்லார் வாய் கேட்டு உணரலாம். ஆனந்திக்கலாம்.

swami_48@yahoo.com

யாருக்கு ஜானகி காத்திருந்தாள்!

sita_devi_p

Written by S Nagarajan

Article No 1699; Dated 8th march 2015

 

தமிழ் திரைப்படங்களில் ராமர் – 9

by ச.நாகராஜன்

யாருக்கு ஜானகி காத்திருந்தாள்!

காதலர் எதிர்பார்ப்பு

காதலனும் காதலியும் ஒருவரை ஒருவர் சந்திக்க விரும்பி எதிர்பார்ப்பதைச் சித்தரிக்கும் திரைப்படங்கள் உலக மொழிகள் அனைத்திலுமே உண்டு. இதற்குத் தமிழ் திரைப்படங்கள் மட்டும் விதி விலக்கு அல்ல!

ராமர் விஷ்ணுவின் அவதாரம்; சீதையோ ராம பத்தினி. விஷ்ணுவின்  மார்பில் இடம் கொண்டவள். ஆகவே அவர்கள் ஒருவரை ஒருவர் சந்திப்பதை எப்படி எதிர்பார்த்தனர் என்பதைக் கம்பன் அழகுற மிதிலைக் காட்சிப் படலத்தில் சித்தரித்துள்ளான். இது போன்ற ஒரு கவிதையை உலக இலக்கியத்திலேயே அப்படிப்பட்ட  நயத்துடன் பார்க்க முடியாது (இதை அத்தியாயம் 3-இல் பார்த்தோம்)

 

“கருங்கடல் பள்ளியில் கலவி நீங்கிப் போய்

பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ!”

இதை தற்காலத்திற்கு ஏற்றவாறு தர நினைத்தார் கவிஞர் கண்ணதாசன்; பிறந்தது பாட்டு.

1962ஆம் ஆண்டு வெளியான அன்னை படத்தில் இடம் பெற்ற பாட்டிற்கு இசை அமைத்தவர் சுதர்ஸனம். பாடலைப் பாடியவர்கள் பி.பி.ஶ்ரீனிவாஸ், பி.சுசீலா.

பி.பி. ஶ்ரீனிவாஸின் குரலே மிகவும் அபூர்வமான மென்மையான குரல்; அவர் பாடிய பாடல்கள் அனைத்துமே அற்புதமானவை என்பதை ரசிகர்கள் அவர் பாடலைக் கேட்க இன்றும் விரும்புகிறார்கள் என்பதிலிருந்தே அறிய முடியும்.

ஆக, அன்னை படத்தில் இடம் பெற்ற அழகிய இந்தப் பாடலையும் இன்றும் விரும்பிக் கேட்காதவர்களே இருக்க மாட்டார்கள்!

கூடுதல் போனஸாக வீடியோ காட்சியில் பழைய சென்னையையும் கூட ஒரு ‘ரவுண்ட்’ அடித்து விடலாம்.

rama ramapriya

பாடலைப் பார்ப்போம்:-

மிதிலை நகரில் யாருக்கு ஜானகி காத்திருந்தாள்!

அழகிய மிதிலை நகரினிலே

யாருக்கு ஜானகி காத்திருந்தாள்

பழகிடும் ராமன் வரவை எண்ணி

பாதையை அவள் பார்த்திருந்தாள்

பாதையை அவள் பார்த்திருந்தாள் (அழகிய)

காவியக் கண்ணகி இதயத்திலே .. ஆ ஆ

காவியக் கண்ணகி இதயத்திலே

கனிந்தவர் யார் இளம் பருவத்திலே

கோவலன் என்பதை ஊரறியும்

கோவலன் என்பதை ஊரறியும்

சிறு குழந்தைகளும் அவன் பேரறியும் (அழகிய)

பருவத்துப் பெண்கள் தனித்திருந்தால் (ஆஹ்ஹா, ஓஹோ, ஓஹோ, ஆஹாஹா)

பருவத்துப் பெண்கள் தனித்திருந்தால்

பார்ப்பவர் மனதில் என்ன வரும்

இளையவரென்றால் ஆசை வரும்

இளையவரென்றால் ஆசை வரும்

முதியவரென்றால் பாசம் வரும்

ஒருவரை ஒருவர் உணர்ந்து கொண்டால்

உள்ளத்தை நன்றாய் புரிந்து கொண்டால்

இருவர் என்பது மாறிவிடும்

இரண்டும் ஒன்றாய் கலந்து விடும்

 

குமாரி சச்சுவும் புதுமுக ஹீரோ ஹரநாத்தும் (ஹரநாத்ராஜு – தெலுங்கு நடிகர்)) கார் ஓட்டிக் கொண்டே பாடும் கேள்வி- பதில் பாட்டான இதில் அழகான அம்சங்கள் ஏராளம் உள்ளன. இளையவர் என்றால் ஆசை வரும்; முதியவர் என்றால் பாசம் வரும் என்ற பதில் ‘இன்டெலிஜெண்ட் பதில்’, இல்லையா!

ஜனகனின் மகளான ஜானகி, ராமனை எதிர்பார்த்துக் காத்திருந்ததை காதலி காதலனின் கேள்விக்குப் பதிலாகத் தருவது, “கருங்கடல் பள்ளியில் கலவி நீங்கிப் போய்

பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ!” (பழகிடும் ராமன் வரவை எண்ணி!)

என்பதைச் சுட்டிக் காட்டுகிறது.

கடைசி சரணத்தில், இடம் பெறும்,

“ஒருவரை ஒருவர் உணர்ந்து கொண்டால்

உள்ளத்தை நன்றாய் புரிந்து கொண்டால்

இருவர் என்பது மாறிவிடும்

இரண்டும் ஒன்றாய் கலந்து விடும்

என்ற வரிகளோ

“ஒருங்கிய இரண்டு உடற்கு உயிர் ஒன்று ஆயினார்”  என்ற கம்பனின் காவிய வரியை சுருக்கமாக நவீன வடிவில் தந்ததை அல்லவா காட்டுகிறது.

ஜானகி, மிதிலை நகர் என பாரம்பரிய சொற்களைக் கையாண்டதால் அதன் பின்னணியில் வரும் கருத்துக்களையும் அல்லவா கவிஞர் பாடலில் கலந்து தருகிறார்!

ramar sayana kolam, 18 ft, vengadampettai, cuddalore Dt

Ramar Sayanam, Vengadampettai, Cuddalore District

கவிதை வண்ணம் கம்பன் வண்ணமே!

கம்பனில் மனதைப் பறி கொடுத்த கவிஞர் கண்ணதாசன் கம்பனின் கருத்துக்களை மட்டும் அவ்வப்பொழுது திரப்படங்களில் தரவில்லை; கம்பனின் ஓசை நயம் வார்த்தை நயத்தைக் கூட வாய்ப்பு வரும் போதெல்லாம் தந்து விடுவார்;

கம்ப பக்தி! அதனால் கூடவே வரும் ராம பக்தி!!

எடுத்துக் காட்டாக கம்ப ராமாயணத்தில் வரும் ஒரு பாடலைக் காண்போம்:

 

“இவ்வண்ணம் நிகழ்ந்த வண்ணம், இனி இந்த உலகுக்கெல்லாம்

உய்வண்ணம் அன்றி மற்று ஓர் துயர் வண்ணம் உறுவதுண்டோ

மைவண்ணத்து அரக்கி போரில், மழை வண்ணத்து அண்ணலே! உன்

கைவண்ணம் அங்குக் கண்டேன்; கால் வண்ணம் இங்குக் கண்டேன்!”

 

(பாலகாண்டம்-அகலிகைப் படலம் பாடல் 24)

அற்புதமான கருத்து நயம்; ஓசை நயம், எழுத்து நயம், வார்த்தை நயம் உள்ள இதற்கு இணையான இன்னொரு பாடலை எந்த இலக்கியத்திலுமே காண முடியாது என்பது மட்டும்; உண்மை!

ராமனின் கை வண்ணத்தை அரக்கி தாடகை அழிவில் கண்ட மஹரிஷி விஸ்வாமித்திரர் அவன் கால் ஒரு கல்லில் பட அகலிகை சாப விமோசனம் பெற்று எழும் போது கால் வண்ணத்தையும் கண்டு கூறிய வார்த்தைகள் இவை!

இந்த கவிதையின் தாக்கத்தை கவிஞர் 1962ஆம் ஆண்டு ‘பாசம்’ படத்திற்காக எழுதிய பாடலில் காணலாம். இது எம்,ஜி.ஆரும் அன்றைய அழகிய கதாநாயகியான சரோஜாதேவியும் மலர் மஞ்சத்தைச் சுற்றி வந்து பாடும் அழகிய பாடல். பி.பி, ஶ்ரீனிவாஸும் பி.சுசீலாவும் எம்ஜிஆர்-சரோஜாதேவிக்காக பாடிய அரிய சில பாடல்களுள் இது முக்கியமான ஒன்று. இசை அமைத்தவர் எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே.ராமமூர்த்தி

 

rama abhishek

Rama Abishek

பாடல் இது தான்:

பால் வண்ணம் பருவம் கண்டு வேல் வண்ணம் விழிகள் கண்டு மான்வண்ணம் நான் கண்டு வாடுகிறேன்

கண்வண்ணம் அங்கே கண்டேன் கை வண்ணம் இங்கே கண்டேன் பெண் வண்ணம் நோய் கொண்டு வாடுகிறேன்

கன்னம் மின்னும் மங்கை வண்ணம் உந்தன் முன்னும் வந்த பின்னும் அள்ளி அள்ளி நெஞ்சில் வைக்க ஆசையில்லையா

கார் வண்ணக் கூந்தல் தொட்டு தேர் வண்ண மேனி தொட்டு பூவண்ணப் பாடம் சொல்ல எண்ணமில்லையா

மஞ்சள் வண்ண வெயில் பட்டு கொஞ்சும் வண்ண வஞ்சிச் சிட்டு அஞ்சி அஞ்சி கெஞ்சும் போது ஆசையில்லையா

நேர் சென்ற பாதை விட்டு நான் சென்ற போது வந்து வா என்று அள்ளிக் கொண்ட மங்கை இல்லையா!

ராமரின் தாக்கம் பெற்ற, கவிஞன் கம்பனின் தாக்கம் பெற்ற, கவிஞரின் தாக்கம் பெற்ற, பாடலின் சிறப்பை விவரிக்கத் தேவையே இல்லையே!

கம்பனின் பாடல்களை ஆழ்ந்து சிந்தித்து மகிழ கண்ணதாசன் பெரிதும் உதவுகிறார், இல்லையா!

***************

swami_48@yahoo.com

தமிழில் ‘ஜ’ ‘ய’ மர்மம்!

JJJJJ

Written by London swaminathan

Article No 1698; Dated 7th march 2015

London Time 22-11

பழனி அருகில் உள்ள பொருந்தலில் ஆறு ஆண்டுகளுக்கு முன் ஒரு கல்வெட்டு கிடைத்தது. அது பிராமி (ஸரஸ்வதி என்று பொருள்) லிபியில் எழுதப்பட்டுள்ளது—ஆனால் மொழி சம்ஸ்கிருதம்! இது 2500 ஆண்டுப் பழமை உடையது. இந்த தேதி சரியென்றால் இதுதான் இந்தியாவில் கிடைத்த மிகப் பழமையான கல்வெட்டு! வஜ்ர என்ற வடசொல் வைரத்தையும் வஜ்ரம் போன்ற கடினமான வஜ்ராயுதத்தையும் குறிக்கும். இது புறநானூறு உள்பட பல சங்க இலக்கியப் பாடல்களில் பயன்படுத்தப்பட்ட சம்ஸ்கிருத சொல்.

வஜ்ரம் என்பது தமிழ் விதிகளின் படி வயிரம் ஆனது. அதாவது ஜ (J) என்னும் ஒலி ய (Y) என்னும் ஒலியாகத் திரிந்தது. ஏன்? இது உலகம் முழுதும் நடந்த ஒரு அதிசயம். “மர்மம்” என்றாலும் தவறில்லை.

ஜ (Ja) அல்லது ஆங்கில எழுத்தில் “ஜே” (J) என்ற எழுத்தின் வரலாற்றை கலைக் களஞ்சியங்களில் படித்தால் அவர்கள் பயன்படுத்தும் மொழியியல் கலைச் சொற்களைக் கேட்டு மயக்கம் போட்டு விடுவீர்கள். அவர்களும் குழம்பிப்போய், உங்களையும் குழப்பி விடுவார்கள். பல மொழிகளின் பெயர்களை சம்பந்தா சம்பந்தமில்லாமல் சேர்த்துக்கட்டியவர்கள் தமிழையோ சம்ஸ்கிருதத்தையோ எங்குமே குறிப்பிட இல்லை. உண்மையில் இவ்விரு மொழிகளில் 2500 ஆண்டுகளுக்கு முன்னரே இது காணப்படுகிறது. இவ்விரு மொழிகளையும் பயிலாதோர் இந்திய கலாசாரம் பற்றியோ வரலாறு பற்றியோ எழுதினால் அது தவறாகப் போய்விடும்.

YYY!

யாமம் =ஜாமம்

யேசு = ஜீஸஸ்

யூத மதம் = ஜூடாயிசம்

யாத்திரை = ஜாத்ரா

யவை = ஜாவா (தீவு)= சாவகம்

யாஸ்மின் = ஜாஸ்மின்

யூசுப் = ஜோசப்

அயன் = அஜன் (தானுமாலயன்)

வயிரம் = வஜ்ரம்

இப்படி எவ்வளவோ சொற்கள் உள்ளன. ஜ-வையும், ய-வையும் மாற்றிப் புழங்குகின்றனர். இதில் எது சரி?

‘ஜே’ (J) என்ற எழுத்தும் ‘வி’ (V) என்ற எழுத்தும் சாமுவேல் ஜான்ஸன் தயாரித்த புகழ் பெற்ற ஆங்கில அகராதியில் கிடையாது! அவர் 1755ல் வெளியிட்ட அகராதியில் ஆங்கில நெடுங்கணக்கில் 24 எழுத்துக்கள்தான்!! 26 இல்லை!! ஆனால் சொற்களின் ஸ்பெல்லிங்குகளில் (Spellings)  அவர் இதைப் பயன்படுத்தினார். ஜே என்பது ஒய் Y (ய) என்ற ஒலியிலும் வி V என்பது யு U என்ற ஒலியிலும் பயன்படுத்தப்பட்டன. இதுபோல பழங்கால லத்தீன் எழுத்திலும் இவ்வொலிகள் கிடையா!

ஜே என்ற ஆங்கில எழுத்தை 500 ஆண்டுகளுக்கு முன் பார்த்திருக்க முடியாது– உண்மையில் Ja ஜ-வும் Ya ய-வும் இடம் மாறி ஒலிப்பதுண்டு. ஆகையால் இதை அராபிய மொழியிலும், ஹீப்ரூ மொழியிலும் கூட சொற்களில் காணலாம். ஆனால் படிப்பது ‘ய’ என்றே படிப்பர். (யேசு YESU என்பது சரி; ஜீஸஸ் JESUS என்பது பிழை).

வெளிநாடுகளில் மொழியியல் படித்தவர்கள் தமிழையும் சம்ஸ்கிருதத்தையும் பயிலாததால் பக்கம் பக்கமாகத் தப்பான விஷயங்களை எழுதி வைத்துள்ளனர்.

JJ2

அவர்கள் சொல்லுவது என்ன?

‘ஜ’ J என்ற எழுத்து இல்லை என்றும் ஐ I (அய்) அல்லது ஒய் Y (ய) என்பதைப் பயன்படுத்த இந்தக் குறியீட்டைப் பயன்படுத்தியதாகவும் காலப்போக்கில் உச்சரிப்பு மாற்றத்தில் அது ஜ J–ஆக மாறிவிட்டதாவும் எழுதி வைத்துள்ளனர். இது முற்றிலும் தவறு.

இந்திய மொழிகளில் ஜ- வும் ய-வும் இடம் மாறும். யவை (Yava in Rig Veda) தானியம் = ஜாவா (Java Islands of Indonesia) , யாமம்= ஜாமம், அஜன் = அயன்/பிரம்மா, யாத்திரை = ஜாத்ரா எனப் பல சொற்கள் உண்டு.

வெள்ளைக்கார ஆராய்ச்சியாளர்கள் இந்த எழுத்தின் 500 ஆண்டு வரலாறு பற்றி மட்டுமே பேசுகின்றனர். ஆனால் பொருந்தலில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டில் ‘வயிர’ என்று வஜ்ரம் (டயமண்ட்) குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் கல்வெட்டு கி.மு. ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்பது அதனுடன் இருந்த நெல்லை அமெரிக்க சோதனைச் சாலைகளில் ஆராய்ந்ததில் தெரியவந்தது. துல்லியமாகச் சொன்னால்  கி.மு 499 என்ற தேதி கிடைத்திருக்கிறது. ஆகவே 2500 ஆண்டுகளுக்கு முன்னரே ஜ – ய – ஆக மாறுவதைக் காண முடிகிறது (வஜ்ர= வயிர). இவ்விரு மொழிகளும் தெரியாத “அறிஞர்கள்” பக்கம் பக்கமாக எழுதித் தள்ளிவிட்டனர்.

பொருந்தல் கல்வெட்டு கிடைக்காவிட்டாலும் கூட சங்க இலக்கியத்தில் வயிர, யாமம் என்ற சொற்கள் உள்ளன. இவை சம்ஸ்கிருதச் சொற்கள். லத்தீன், தமிழ் ஆகிய இரண்டும் ஏறத்தாழ சமகாலத்தியவை. இரண்டிலும் கி.மு. மூன்றாம் நூற்றாண்டுக்குப் பின்னரே இலக்கியம். ஆனால் லத்தீன் மட்டுமின்றி, ஹீப்ரூ (எபிரேயம்), அராபிய மொழிகளிலும் ஜ = ய மாற்றம் இருக்கிறது. ஜீஸஸ் என்பது தவறு. அவருடைய அப்பா, அம்மா வைத்த பெயர் ஏசு. ஜூடாயிஸம் என்பது தவறு யூத (யெஹுதி) என்பதே சரி.

language problem

தொல்காப்பியத்திலேயே வடசொற்களைக் கடன்வாங்குகையில் தமிழ் ஒலிக்கு மாற்ற வேண்டும் என்று சொல்லி இருப்பதால் வஜ்ர – வயிர ஆனது.

புற நானூறு பாடல் 365 ஐ எழுதியவர் பெயர் மார்க்கண்டேயன். தூய சம்ஸ்கிருதம்! அவர் பாடலில் வயிரக் குறடு என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார். அந்தப் பாடல் முழுதும் வட மொழிக் கருத்துகளே. ரிக்வேதத்தின் புருஷசூக்தம், விஷ்ணு சஹஸ்ரநாமம் முதலியவற்றில் வரும் விராட புருஷன் அதில் வருணிக்கப்படுகிறது. சூரியனும் சந்திரனும் கண்கள். மற்றும் பூமாதேவியை என்றும் கன்னிப் பெண்ணாக இரு என்று பார்வதி சபித்த கதை வருகிறது. பூமாதேவி அழுகிறாள். என்னை மணந்து கொண்ட ஒவ்வொரு அரசனும் போன பின்னரும் நான் மட்டும் என்றும் இங்கே கஷ்டப் படுகிறேனே என்று. பூமி என்பது அரசனின் மனைவி என்பதும் காளிதாசன் பாடலில் வரும் வடமொழிக் கருத்தே. இப்படியெல்லாம் மார்க்கண்டேயனார் சொல்லுவதற்கிடையில் வயிர என்ற சொல்லும் வருகிறது. விஞ்ஞான உண்மைப்படி உலகிலேயே மிகக் கடினமான பொருள் வயிரம் என்பதால், இந்திரனின் ஆயுதத்துக்கு வஜ்ராயுதம் என்று வேதங்கள் கூறும். ஆக ஜ = ய இடமாற்றம் இந்தியாவில் இருந்து உலகிற்குச் சென்றதே அல்லாமல் வெளி நாட்டு அறிஞர்கள் கூறுவது போல “உச்சரிப்பு மாற்றம்” (Pronunciation Shift), ஸ்பெல்லிங் மாற்றம் (Spelling Change) , ஸ்பெல்லிங் குழப்பம் என்பதெல்லாம் பொருந்தா வாதம். மேலும் ஹீப்ரூ, அராபிய, லத்தீன் மொழிகள் வெவ்வேறு குடும்பத்தை சேர்ந்தவை. லத்தீன் சம்ஸ்கிருதத் தொடர்புடைய மொழி! அவர்கள் இப்படி எல்லா மொழிகளையும் முடிச்சுப்போடுவது குழப்பத்தின் உச்சகட்டம்!

accent

உலகில் உள்ள எல்லா மொழிகளையும் தமிழ், சம்ஸ்கிருதம் ஆகிய மூலத்தில் கொண்டு சேர்த்து விடலாம் என்ற என் வாதம் இந்த ஜ=ய (J = Y ) மாற்றத்தால் வலுப்பெறுகிறது. பல மொழிக் குடும்பங்களில் இந்த மாற்றம் இருப்பதும் பொருந்தல் கல்வெட்டில் 2500 ஆண்டுகளுக்கு முன்னர் இது துவங்கியதும் உலக மொழிகள் அனைத்தும் தமிழ் – வடமொழியில் இருந்து சென்றவை என்பதும் தெளிவாகிறது.

முன்னரே சொன்னேன் :– ஆங்கிலத்தில் ஆயிரக்கணக்கான தமிழ் சொற்கள் உள்ளன. இவைகளைப் பட்டியலிட்ட சாத்தூர் சேகரனை 1987-ல் இலண்டன் பி.பி.சி. தமிழோசையில் பேட்டிகண்டு ஒலிபரப்பினேன்.

ஒரே ஒரு எடுத்துக் காட்டு:–ஒன்று, எட்டு என்பதை ஆங்கில எண்களில் உள்ள ONE ஒன்,  EIGHT எய்ட் என்பதில் காணலாம். ஏனைய எண்கள் எல்லாம் சம்ஸ்கிருத அடிபடையிலானவை: த்வ, த்ரீ (டூ TWO , த்ரீ THREE ). இதே போல ஆங்கிலத்தில் முதலில் சம்ஸ்கிருதப் போக்கில் எண்கள் வரும்: த்ரீ+ டென்=தர்டீன் Thirteen, போர்+டென்= fஓர்டீன் Fourteen, பைவ்+டென்=Fப்டீன் Fifteen. இருபதுக்கு மேல் தமிழ்ப்போக்கில் எண்கள் வரும்; ட்வெண்டி+ஒன்= ட்வெண்டி ஒன் Twenty One, ட்வெண்டி டூ Twenty Two என்று—  சம்கிருதத்தில் இப்படி இரா.

சுருக்கமாகச் சொன்னால் ஆங்கிலத்தில் எண்களில்கூட பாதி தமிழ் வழியிலும் பாதி சம்ஸ்கிருத வழியிலும் இருக்கும். இப்படி எல்லாப் பழைய மொழிகளிலும் தமிழ்–வடமொழித் தாக்கம் இருப்பதால் இந்தியர்களே உலகம் முழுதும் சென்று நாகரீகத்தை நிலை நாட்டியது விளங்கும்.

YY22

புணர்ச்சி/ சந்தி விதிகள் உலகில் உள்ள இரண்டே மொழிகள்:- தமிழும் சம்ஸ்கிருதமும்தான். இது பாரதீய சிந்தனையில் பிறந்த விதிகள். இன்று வரை சந்தி விதிகளுக்கு இலக்கணம் அமைத்து அவைகளைப் பின்பற்றுவது இவ்விரு மொழிகளே என்பதால் இவை இரண்டுக்கும் உள்ள தொடர்பு வேறு எந்த இரண்டு மொழிகளுக்கும் இடையில் உள்ள தொடர்புகளைவிட அதிகம்! தமிழுக்கு மிக நெருக்கமான ஒரே மொழி சம்ஸ்கிருதம் மட்டுமே.

இரண்டு சொற்கள் இணையும் போது மட்டும் மாறுவதோடு (மா+கோடு= மான்கோடு அல்லது மாங்கோடு) நில்லாமல் சொற்களுக்குள்ளும் மாறும் (பல்+கள்=பற்கள்; ஆள்+கள்= ஆட்கள், கண்+செவி=கட்செவி; மல்லிப் புத்தூர்= வில்லிப் புத்தூர், முழி-விழி). இந்தப் புணர்ச்சிவிதிகளை ஐரோப்பாவில் சம்ஸ்கிருதம் தொடர்பான மொழிகளில் இப்போது கொஞ்சம் காணலாம். தமிழிலும் வடமொழியிலும் முழுவீச்சில் பயிலப்படுவதால் இவ்விரு மொழிகளும் ஒரே சிந்தனையில் ஒரே மூலத்தில் பிறந்தவை! காலப்போக்கில் அதனதன் பாதையில் கிளைவிட்டுப் பிரிந்து சுதந்திரமான மொழிகளாகத் திகழ்ந்தன!

swami_48@yahoo.com

மாசி நிலா பாசி படரும்!

மாசி நிலா

Written by லண்டன் சுவாமிநாதன்

Research Article No. 1690; Dated 4 March 2015.

நாங்கள் தஞ்சாவூர்க்காரர்கள். நான் பிறந்தது நாகப்பட்டிணம் அருகிலுள்ள கீழ்வளூர். வளர்ந்தது மதுரையில். பெண்ணை மணந்தது நெல்லையில். ஆகையால் “யாதும் ஊரே யாவரும் கேளிர்” —என்று மூன்று மாவட்டத்தில் சொந்தம் கொண்டாடுவது வழக்கம்!

(கேளிர்= சொந்தக்காரர்கள்)

என் (தஞ்சைப்) பாட்டி முதலியோர் சொல்லிக் கேட்ட பழமொழி “மாசி நிலா பாசி படரும்” — என்பது. ஆனால் பழமொழி அகராதியில் அந்தப் பழமொழி இல்லை. “மாசிச் சரடு அல்லது மாசிக் கயிறு பாசி படரும்” என்று மாசி மாத இறுதியில் வரும் காரடையான் நோன்பைச் சிறப்பிக்கும் பழமொழியையும் காணோம். எது எப்படியாகிலும் அனுபவ உண்மை ஒன்றே போதும். கிராமப் புறங்களில் வசிப்போருக்குத் தெரியும் மாசி மாத பௌர்ணமியன்று நிலவு வெளிச்சம் மிகவும் பளிச்சென்று இருக்கும் என்பது — குளத்தில் உள்ள பாசியில் — வீட்டின் கொல்லைப் புறத்தில் உள்ள பாசியில் கூட — நிலவொளி பட்டுப் பளபளக்கும் – அதன் மீது படரும் — என்பது.

tank2

கும்பகோண மஹாமக குளம்

எல்லா மாத பௌர்ணமிகளையும் விட அதிக வெளிச்சம் உடையது மாசி நிலவு. ஆகையால்தான் பெரும்பாலான கோவில் தெப்ப உற்சவங்களையும், ரத உற்சவங்களையும் இந்த நாளில் வைத்தனர் இந்துப் பெரியோர்கள். மாசி மாதம் உற்சவம் இல்லாத கோவில்களே இராது.

இந்துக்கள் மிகவும் புத்திசாலிகள். மின்சார விளக்கு இல்லாத காலத்தில் எப்படிப் பெரிய பண்டிகளைக் கொண்டாடுவது என்று யோசித்தார்கள். பக்கத்து கிராமங்கள் எல்லாவற்றிலும் இருந்தும் கட்டை மாட்டு வண்டிகளிலும், பாத யாத்திரையாகவும் பல்லாயிரக் கணக்கான மக்கள் வர வேண்டுமே! அப்போதுதான் நமது சாது சந்யாசிகளுக்கு ஒரு யோஜனை பிறந்தது. எல்லா பௌர்ணமி நாட்களையும் பண்டிகைகளாகக் கொண்டாடுவோம் என்று.

ஒவ்வொரு மாத பௌர்ணமியும் இந்துக்களுக்கு பெரிய பண்டிகைதான். அப்போது ஒரு சிறிய பிரச்சனை எழுந்தது. நாட்டில் சில பகுதிகளில் வெவ்வேறு பருவங்களில் மழை பெய்யுமே! கேரளா, கர்நாடகம் என்றால் ஜூன் மாதம் முதல் செப்டம்பர் வரை 4 மாதங்களுக்கு மழை கொட்டித் தீர்க்குமே. தமிழ் நாடானால் ஐப்பசி –கார்த்திகை அடைமழைக் காலம் என்று பழமொழி உள்ளதே. சந்திரனையே பார்க்க முடியாதே. அப்படியானால் தை, மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி ஆகிய ஐந்து மாதப் பௌர்ணமிகளைப் பெரிதாகக் கொண்டாடுவோம் என்று தீர்மானித்தனர். அப்பொழுதும் ஒரு பெரிய பிரச்சனை எழுந்தது. சித்திரை வைகாசியில் கோடை வெய்யில் கொளுத்தித் தள்ளுமே என்றனர். அப்படியானால் மாசி மாத பவுர்ணமியை, முக்கியமாக வைத்துக் கொள்வோம் என்றனர். பருவ நிலை மிகவும் சாதகமான பௌர்ணமி மாசி என்று கண்டதால் எல்லா கோவில்களிலும் மாசியைக் கொண்டாடுவோம் என்று தீர்மானித்தனர். தைப் பூசம், மாசி மகம், பங்குனி உத்திரம், சித்திரா பௌர்ணமி, வைகாசி விசாகம் என மாதம் தோறும் பௌர்ணமி உற்சவங்களை அறிவித்து அதற்குத் தக நல்ல புராணக் கதைகளையும் கண்டுபிடித்து ஒட்டுப் போட்டனர்.அவை பொய்க்கதைகள் அல்ல. இருந்த கதைகளை அழகாக இணைத்தனர்!

mahamagam

வடலூர் தைப்பூசம், மதுரை சித்திரா பௌர்ணமி போன்ற பண்டிகைகளுக்கு லட்சக் கணக்கில் மக்கள் வந்தாலும் சிரமமின்றி. குளிக்கவும் குடிக்கவும் – தண்ணீர் பிரச்சனை இன்றி கொண்டாடும் காலம் என்பதால் மாசி மாதத்திலேயே அதிகமான பெரிய பண்டிகைகள் வருகின்றன.

சிவன் மீதே காமக் கணைகள தொடுத்த மன்மதனை எரித்த காமதகனம் (காமன் பண்டிகை), வசந்த காலம் வரப் போவதை எண்ணி வண்ணப் பொடிகளை வீசி மகிழும் ஹோலி பண்டிகை, குழந்தைகளைக் கொன்று வந்த பிரஹலாதன் சகோதரி ஹோலிகாவை சம்ஹாரம் செய்த ஹோலிகா சம்ஹாரம், அவள் உருவ பொம்மையை எரித்தல், அத்தோடு “பழையன கழிதலும் புதியன புகுதலும்” முறையே என்று பழைய பொருள்களை சொக்கப் பனை கொளுத்தல் ஆகிய எல்லாம் சேர்ந்து மாசி மாத பௌர்ணமியைன் மகிமையை உயர்த்தியது.

மாசி மாத பௌர்ணமியில் சந்திரனும் மக நடசத்திரமும் உச்சமாகும்போது சந்திரனுக்குத் தெற்கில் ஒரு நட்சத்திரம் தள்ளில் காற்பங்கு நாசம், இரண்டு தள்ளில் அரைப்பங்கு நாசம், மூன்று தள்ளில் முக்காற்பங்கு நாசம், சந்திரனுக்கு வடக்கு தள்ளில் மிகவுஞ் சவுக்கியம் என்று அபிதான சிந்தாமணி எனும் தமிழ் கலைக்களஞ்சியம் செப்பும்:–

alaivay

திருச் செந்தூர் கோவில் ( திருச் சீரலைவாய்)

காணு  மாசிக்கலை மதியை கருது மக மீனான்கதனில்

பேணும்தென்பான்  மீன் சேரிற் பெரிதாமஃ கந்தானென்ப

பூணில் இரண்டு முக்காலாம், பொருந்து மூன்றிற் பாதியதாம்

சேணில் வடபால் மீன் சேரிற் செகத்திலன்னம் சிறிதாமே

என்றும் சிந்தாமணி செப்புகிறது.

மாசி மாதத்தில் பௌர்ணமி ஏற்படுகையில் நிலவு மக நட்சத்திரத்திற்கு அருகில் இருப்பது போலத் தென்படுவதால் மாசி மகம் என்ற பெயரும் ஏற்பட்டது (வான சாத்திரப் படி சந்திரன் (நிலவு) என்பது பூமியில் இருந்து இரண்டரை லட்சம் மைல் தொலைவில் உள்ளது. ஆனால் ‘ரெகுலஸ்’ என்று அழைக்கப்டும் மக நட்சத்திரமோ கோடி கோடி கோடி மைல்கள் தள்ளி இருக்கிறது)

magam2

மஹாமகம்

இதோடு கும்பகோணத்தில் உள்ள ஆறு ஏக்கர் பரப்புடைய மஹா மக குளத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கங்கை, யமுனை, சரஸ்வதி உள்பட எல்லா புனித நதிகளும் சங்கமம் ஆவதாக நம்பிக்கை இருப்பதால் புனித நீராடலும் நடைபெறுகிறது. அடுத்த மஹாமகம் 2016-ல் நடைபெறும். சிம்ம ராசியில் குரு பிரவேசிக்கும் போது குடந்தையில் உள்ள எல்லா கோவில் கடவுளரும் மக்களுடன் சேர்ந்து நீராடி நம் பாவங்கள் அனைத்தையும் கழுவுவர்.

மாசி மாத பண்டிகைகள்: ஹோலி, காரடையான் நோன்பு, காமதகனம், நடராஜர் அபிஷேகம், மாசி மகம், பல கோவில்களில் தேரோட்டம், தெப்ப உற்சவம், திரு மோகூரில் கஜேந்திர மோட்ச லீலை, பிரம்ம ஸாவர்ணி மன்வாதி, தீர்த்தவாரி, பால்குடம். திருச்செந்தூர், கோயம்புத்தூர், பெருவயல் தேரோட்டம், திருக்கண்ணபுரம், குடந்தை கோவில்களில் விழா.மதுரை, திருப்பரங்குன்றம் கோவில் விழாக்கள், நடராஜர் உள்ள கோவில்களில் அபிஷேகம். சுருஙகச் சொன்னால் கோவில் எங்கும் விழாக்கள். இன்னும் ஒரு சிறப்பு: — வைஷ்ணவர்களும், சைவர்களும், சாக்தர்களும், கௌமாரர்களும் (குமரன் எனும் முருகனை வழிபடுவோர்) விழா எடுக்கும் ஒரே நாள்—மாசி மகத் திரு நாள்!

–சுபம்–

தமிழன் கண்ட செயல்முறை அறிவியல்! தண்ணீர்! தண்ணீர்!!

Waterpurify

Written by London swaminathan

Research Article No. 1685; Dated– 2 March 2015.

தண்ணீர் என்பது ஒரு அரிய பொருள். அது கிடைத்துக் கொண்டே இருந்தால் அதன் அருமை பெருமை தெரியாது. காசைத் ‘தண்ணீர் போல செலவழிக்கிறான்’ என்று ஊதாரி மகனைத் திட்டுவர் பெரியோர். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ‘பாலும் தேனும் தண்ணீர் போல ஓடும்’ என்பர் அரசியல் கட்சியினர். ஆனால் உண்மையில் தண்ணீர் கிடைக்காததால் எவ்வளவோ நாகரீகங்கள் தலை நகர்களையே கூட மாற்றி இருக்கின்றன!

ரிக்வேதம் முதல் திருவிளையாடல் புராணம் வரை வரும் வறட்சி பற்றிய குறிப்புளை எல்லாம் எழுதிப் பார்த்தால் நூற்றுக் கணக்கில் இருக்கும். இதனால்தான் தமிழில் “நீரையும் சீராடு” – என்று ஒரு பழமொழி யையும் சொல்லிவைத்தார்கள்.

“ஆற்றுப் பெருக்கற்று அடி சுடும் அந்நாளும் ஊற்றுப் பெருக்கால் உலகூட்டும் வைகை” என்று எங்கள் மதுரையில் ஓடும் வைகை நதியின் சிறப்பைப் போற்றுவர். ஆனால் அப்படிக் கிடைக்கும் ஊற்று நீர், களிமண் பூமியாக இருந்தால் கலங்கிப் போய் இருக்கும். அப்படியே குடிக்க முடியாது. இதற்காக தமிழன் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே, — கலங்கிய நீரைத் தெளிவிப்பது எப்படி? என்று கண்டுபிடித்து வைத்தான். அது மட்டுமல்ல! கிணற்றுக்கடியில் இருக்கும் கலங்கல் நீரைக்க்கூட சுத்தப்படுத்தி வாளியில் ஏற்ற வழி கண்டுபிடித்தான்.

Strychnos_potatorum_5

நான் 1993 முதல் லண்டனில் இருந்து வெளியான “மேகம்” மாத இதழில் “தமிழ் இலக்கியத்தில் அதிசயச் செய்திகள்” என்று கட்டுரை எழுதி வந்தேன். அது 2009-ல் புத்தக வடிவில் வெளியானது (நாகப்பா பப்ளிகேஷன்ஸ், சென்னை). அதற்கு முன்பாகவே நிலாசாரல்.காம் அதை “ஈ புக்”—ஆக வெளியிட்டது. அதில் (பக்கம் 17), கலித்தொகையில் வரும் தண்ணீர் சுத்தப்படுத்தும் முறை பற்றிய குறிப்பை சுருக்கமாக எழுதி இருந்தேன். அதை சற்று விரிவாகக் காண்போம்.

கலித்தொகை என்பது சங்க இலக்கியத்தில் எட்டுத்தொகை நூல்களில் ஒன்று. அதில் ஐந்து பகுதிகள் உண்டு. அதில் நல்லந்துவனார் பாடிய நெய்தல் கலி கடைசி பகுதியாக வருகிறது. அதில் வரும் ஒரு குறிப்பு:–

நல்கிய கேள்வன் இவன் – மன்ற, மெல்ல

மணியுள் பரந்த நீர்போலத் துணிவாம்

கலம் சிதை இல்லத்துக் காழ்கொண்டு தேற்றக்

கலங்கிய நீர்போலத் தெளிந்து, நலம் பெற்றாள்!

நல் எழில் மார்பனைச் சார்ந்து………..”

இதன் பொருள்: – மணியும் அதனுள் பரந்து விளங்கும் நீரும்போல, இவ்விருவரும் ஒருமித்த மனமுடையவர் என்று அனைவரும் துணிந்தனர்- திருமணமும் நடந்தது. அதன் பின்னர் அவளைக் கண்டவர் சொன்னார்கள்:

இல்லத்திலுள்ள நீர் கலங்கி இருந்தால், அது இருக்கும் பாத்திரத்துள் சிறிது தேற்றாவின் விதையைத் தேய்த்ததும், அந்நீர் தெளிந்து விடுவது போல, அந்த நல்ல அழகுடைய மார்பனைச் சேர்ந்ததும் இவளும் தெளிவுற்று நலம் பெற்றாளே!

water puried

தேற்றாங் கொட்டை என்பதைப் பொடி செய்து கலங்கிய நீரில் போட்டால் அது தெளிந்துவிடும் என்பது சங்க காலம் முதல் இன்றுவரை பின்பற்றப் படுகிறது. பாட்டிலில் தண்ணீர் விற்பனைக்கு வரும் காலத்துக்கு முன்னரே சுத்தமான நீரைப் பெற இதைப் பயன்படுத்தினர். (இதற்கு கதகப் பொடி என்ற பொடியை வடமொழி நூல்கள் குறிப்பிடும்)

ஆப்பிரிக்க நாடுகளில் முருங்கைக் காய்க்குள் இருக்கும் விதைகளைப் பயன்படுத்தி இதைச் செய்தனர்.

கதகப் பொடி வடமொழியில் உள்ள நியாயங்களில் ஒன்றாக வருவதும் அதை சத்திய சாய்பாபா உவமையாகப் பயன்படுத்துவதும் எஸ்.நாகராஜன் எழுதிய கட்டுரையில் இதே பிளாக் –கில் நேற்று வெளியாகியுள்ளது. (கட்டுரைத் தலைப்பு நீரில் அமிழ்ந்த சுரைக்காய், மார்ச் 1 வெளியீடு)

தமிழர்கள் அந்தக் காலம் முதல் இன்று வரை கோடைகாலத்தில் வீட்டின் ஒரு ஓரத்தில் மண்ணை நிரப்பி, அதன் மீது பானையை வைத்து, அந்த நீரில் வெட்டி வேர், விளாமிச்சை வேர் முதலியவற்றைப் போட்டு தண்ணீர் குடிப்பது நாம் அறிந்ததே. வெட்டி வேர் எஸ்ஸன்ஸ் என்பது இப்போதெலாம் மிகவும் அதிக விலைக்கு வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி ஆகிறது அவர்கள் இதை பெர்Fயூம் செய்யப் பயன்படுத்துகின்றனர்!

best water

பாதிரிப் பூவின் மகிமை

ஆனால் மற்றொரு தமிழ் இலக்கியப் பாடல் பாதிரிப் பூவின் மகிமையைப் பாடுகிறது

கல்லாரே ஆயினும் கற்றாரைச் சேர்ந்தொழுகின்

நல்லறிவு நாளும் தலைப்படுவர் – தொல் சிறப்பின்

ஒண்ணிறப் பாதிரிப்பூச் சேர்தலாற் புத்தோடு

தண்ணீர்க்குத் தான்பயந்தாங்கு – நாலடியார்

பொருள்:–பழமையான சிறப்பையும், ஒளி பொருந்திய நிறத்தையும் உடைய பாதிரிப்பூவைச் சேர்தலினால், புதுப் பானையானது தன்னிடமுள்ள தண்ணீர்க்குத் தன் மணத்தைக் கொடுத்தது போல, கல்லாதவர்களே ஆயினும் கற்றறிந்த அறிஞர்களுடன் சேர்ந்தால் அவர் சேர்க்கையால் நல்லறிவு நாளுக்கு நாள் பெருகும்

அருமையான உவமை. பானைத் தண்ணீருக்குப் பாதிரிப் பூ வாசனை தரும். கல்வி அறிவு மிக்கவர்கள், தன்னைச் சார்ந்தவர்களுக்கும் அறிவொளி பரப்புவர்.

வராஹமிகிரரும், பிருஹத் சம்ஹிதா நூலில் தண்ணீர் சுத்திகரிப்பு பற்றிப் பேசுகிறார். கடுக்காய், நெல்லிக்காய்,பத்ரமுஷ்டா புல் ஆகியவற்றை கிணற்று நீரில் போடும்படியும் அப்போது அது தெளிந்து விடும் என்றும் சொல்லுகிறார்

தமிழில் இதே கருத்தை வலியுறுத்தும் பழமொழிகளும் உண்டு. நூலோடு சேர்ந்த நாரும் மணம் பெறும் என்று கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும் கவி பாடும் என்றும் வசனங்கள் உண்டு. ஆனால் நாம் இங்கு காண்பது பாதிரிப் பூவின் பயன்பாடுதான்.

Fragrant_root_vetti-ver

வெட்டி வேர், விளாமிச்சை வேர், பாதிரிப் பூ, தேற்றாவின் கொட்டை முதலியன பயன் தரும் தாவரங்கள். ஆப்பிரிக்கர் சொல்லுவது போல முருங்கை விதைகளப் பயன்படுத்தியும் நன்மை அடையலாம். இந்தியா போன்ற வெப்ப மண்டல நாடுகளுக்கு கடவுள் கொடுத்த வரப் பிரசாதங்கள் இவை.

swami_48@yahoo.com

நீரில் அமிழ்ந்த சுரைக்காய்!

OP-Bottle-Gourd-PSPL

Written by S Nagarajan

Article No. 1683; Dated 1st March 2015.

ம்ஸ்கிருதச் செல்வம் – இரண்டாம் பாகம்

18. நீரில் அமிழ்ந்த சுரைக்காய்!

 

by ச.நாகராஜன்

 

நியாயங்களின் வரிசைத் தொடரில் மேலும் சில நியாயங்களைப் பார்ப்போம்:

जलतुंबिकान्यायः

jalatumbika nyayah

ஜல தும்பிகா நியாயம்

ஜலத்தில் இருக்கும் சுரைக்காய் பற்றிய நியாயம் இது.

bottlegourd

சுரைக்காய் ஒன்று நீரில் விழுந்து விட்ட போது அதைச் சுற்றி சேறும் சகதியும் படிந்தமையால் தனது மிதக்கும் தன்மையை இழந்து அது நீரினுள் அமிழ்ந்து விடுகிறது. ஆனால் மெதுவாக சேறும் சகதியும் அகலும் போது அது பழையபடி தனது இயல்பான தன்மையை அடைந்து மிதக்க ஆரம்பிக்கிறது.

திகம்பர ஜைனர்கள் இதை ஆன்மா உடல் தளையிலிருந்து விடுபடுவதற்கு எடுத்துக்காட்டாகக் கூறுவர்.

இது இன்னொரு விஷயத்தை எடுத்துக் காட்டவும் பயன்படும். பாண்டித்தியம் இல்லாத சாமானியன் ஒருவனை ஆழமான விஷயத்தில் ஈடுபடுத்த முடியாது என்பதற்கும் எடுத்துக் காட்டாக இந்த நியாயம் சுட்டிக் காட்டப்படுகிறது.


water puried

जलकतकरेणुन्यायः

jalakatarenu nyayah

ஜலகதகரேணு நியாயம்

 

சகதி நிறைந்த ஜலம் பற்றிய நியாயம் இது

கதக பொடி என்பது அருமையான ஒரு விதையின் பொடி ஆகும். அழுக்கு அல்லது சகதி நிறைந்த நீரை நாம் பருகவோ அல்லது சமைப்பதற்கு உபயோகிக்கவோ முடியாது. ஆனால் கதகப் பொடியை தண்ணீரில் கலந்து விட்டால் சகதியும் அழுக்கும் கீழே படிந்து விடும். தெளிந்த நீர் மேலே இருக்கும். மேலே இருக்கும் நீரை மட்டும் எடுத்து நாம் பயன்படுத்திக் கொள்ளலாம்.சாதாரணமாக கதக விதைகளை கிணறில் போடுவது நமது பழக்கம். அழுக்குகள் கீழே படிந்து விட, தெளிந்த நீரை வாளியிலோ அல்லது குடத்திலோ எடுத்துப் பயன்படுத்தலாம். இதே போன்ற விதை பற்றிய நியாயங்களைப் பல காலமாக பல நல்ல விஷயங்களுக்கு எடுத்துக்காட்டாகச் சுட்டிக் காட்டி வருகிறோம்.

Strychnos_potatorum_5

தண்ணீரைச் சுத்தப் படுத்தும் தேற்றாங்கொட்டையின் படம்

ஶ்ரீ சத்ய சாயி பாபா சேவைக்கான உதாரணமாக இதை அருமையாக எடுத்துக் காட்டியுள்ளார். எப்படி இந்த விதை அழுக்குகளை அடியில் தங்க வைத்து நல்லதை மட்டும் வெளிக் கொணருகிறதோ அதே போல சேவை புரிய விழையும் ஒருவர் சமுதாயத்தில் கலந்து அழுக்குகளை அப்புறப்படுத்தி நல்லனவற்றை மேலே கொண்டு வரச் செய்ய வேண்டும் என்பார். இத்துடன் இன்னும் ஒரு விஷயத்தையும் அவர் அற்புதமாகத் தெளிவு படுத்தியுள்ளார். இந்த விதையானது நீரில் கலந்த பின்னர் முற்றிலுமாக மறைந்து விடும். அது தான் இந்தச் செயலைச் செய்தது என்பது யாருக்கும் தெரியாது. அதே போல சேவை செய்தவர் விளம்பரம் எதையும் விரும்பாமல் தான் தான் அந்த அரிய காரியத்தைச் செய்துள்ளோம் என்பதைத் தெரிவிக்காது ஒதுங்கி விட வேண்டும் என்று அவர் அருளுரை பகர்ந்துள்ளார்.

 

யாருடன் நாம் சேர்கிறோம் என்பதைப் பொறுத்து விளைவுகள் அமையும் என்பதை எடுத்துச் சொல்லும் அருமையான நியாயம் இது.

சகவாசத்தைப் பொறுத்து நல்லது அமையும்!

 

சேருமிடம் அறிந்து சேர் என்பது பழமொழி. சாதுக்களுடனும், அருளாளர்களுடனும், மகான்களுடனும், ஞானிகளுடனும் இணக்கம் கொண்டால் நமது பாவங்கள் பொசுங்கி நல்லன நம் மனதில் ஊறி சிறப்பான வாழ்க்கையை வாழ ஆரம்பிப்போம்.இப்படி ஒரு மாற்றத்தை நமக்கு ஏற்படுத்தி உள்ளோம் என்பதையும் அவர்கள் விளம்பரப்படுத்த மாட்டார்கள்.

 

சிறிய நியாயம் தான்; ஆனால் அறிவுறுத்தும் விஷயமோ மிகவும் பெரிது!

**************

கைக்கு அழகு புத்தகம்! புஸ்தகம் ஹஸ்த லட்சணம் !!

books

Written by London swaminathan

Research Article No. 1681; Dated 28 February 2015.

“நீரளவே யாகுமாம் நீராம்பல் தான் கற்ற

நூலளவே ஆகுமாம் நுண்ணறிவு” – ஔவை

சம்ஸ்கிருதத்தில் அழகான ஒரு பொன் மொழி—“கைக்கு அழகு புத்தகம்!”– ஒருவன் படிக்கும் புத்தகத்தைக் கொண்டு அவன் யார் என்பதைக் கணித்து விடலாம். யாரையாவது ஒருவரின் ‘பெர்சனாலிட்டி’ என்ன என்று தெரிய வேண்டுமா? நீங்கள் நேரடியாக அவரைக் கேட்டால் அது இங்கிதமாக இருக்காது. பேச்சு வாக்கில் நீங்கள் படித்த ஏதாவது சில புத்தகங்களின் பெயரைச் சொல்லிவிட்டு, “உங்களுக்கு இது பிடிக்குமா? நீங்கள் கடைசியாக என்ன படித்தீர்கள்?”– என்று கேளுங்கள். அவருடைய குணநலன்களைக் கண்டுபிடித்து விடலாம்.

அவ்வையார் சொல்கிறார்:

நீரளவே யாகுமாம் நீராம்பல் தன் கற்ற

நூலளவே யாகுமாம் நுண்ணறிவு (வாக்குண்டாம்)

ஆம்பல் மலரின் உயரத்தைத் தீர்மானிப்பது குளத்தில் உள்ள நீர் மட்டம்; மனிதனின் விவேகத்தைத் தீர்மானிப்பது அவன் கற்ற நூல்கள்.

ஆயினும் வள்ளுவர் விட்ட எச்சரிக்கையையும் மனதிற் கொள்ளவேண்டும்: கற்றவர் எல்லோரும் நல்லவர் அல்ல. கற்கக் கசடற; கற்ற பின் நிற்க தற்குத் தக!

பெரிய பெரிய பேச்சாளர்களும், சாமியார்களும், அரசியல்வாதிகளும் நெய் ஒழுக , தேன் ஒழுக பேசுகிறார்கள். சுய வாழ்விலோ பெரிய பூஜ்யம்! ஊருக்குத் தாண்டி உபதேசம்; அது நமக்கல்ல – என்ற கதையாக இருக்கிறது!

girl-carrying-books-236x300

நூல் பற்றி மனு செப்பிய பொன்மொழி!

2000 ஆண்டுகளுக்கு முன் மனு ஸ்மிருதியில் ஒரு அழகான ஸ்லோகம் வருகிறது. மனுவின் பெயர் உலகின் மிகப் பழைய நூலான ரிக்வேதத்திலேயே வருவதால் அவர் மிகவும் பழைய அறிஞர். ஆனால் இன்று நமக்குக் கிடைக்கும் வடிவில் மனு ஸ்மிருதி 2300 ஆண்டு பழமை வாய்ந்தது. அவர் சொல்வதாவது:

புத்தகம் பற்றி ஒன்றுமே தெரியாதவர்களைவிட, அதைப் படிப்பவர்கள் மேல்;

படித்த விஷயங்களை நினைவிற் கொள்பவர்கள், புத்தத்தைப் படிப்பவர்களை விட மேலானவர்கள்;

நினைவு வைத்துக் கொள்பவர்களை விட, அதைப் புரிந்து கொண்டவர்கள் மேலானவர்கள்;

புரிந்து கொண்டவர்களை விட அதை வாழக்கையில் செயல்படுத்துவோர் மேலானவர்கள்!

என்ன அற்புதமான வரிகள்! கற்றால் மட்டும் போதுமா? அதைப் புரிந்து வாழ்க்கையில் செயல்படுத்த வேண்டுமல்லவா?

புராதன உலகில் அதிகமான புத்தகங்கள் உடைய நாடு இந்தியா? காகிதத்தின் நடுவில் கி.மு 1000 என்று எழுதி ஒரு கோடு போடுங்கள்! அதற்கு மேலாக எழுத வேண்டுமானால் வேத சம்ஹிதைகள், பிராமணங்கள், ஆரண்யகங்கள், உபநிஷத்துகள் மட்டுமே இருக்கும். இப்போது நாம் பயன்படுத்தும் எந்த மொழி நூலும் அங்கே காணமாட்டாது! பைபிளின் பழைய ஏற்பாடு, மோசஸின் பத்து கட்டளைகள் முதலியன எழுத்து வடிவு பெற்றது கி.மு 945! கிரேக்க மொழியில் ஹோமர் ‘ஆடிஸி’, ‘இலியட்’ காவியங்களை எழுதியது கி.மு 800 ல்!. தமிழ் என்னும் குழந்தை, லத்தீன் என்னும் குழந்தை அப்போது பிறக்கக்கூட இல்லை!

ஜில்காமேஷ் போன்ற சுமேரியப் பிதற்றல்கள்—இப்போது பயன்பாட்டில் இல்லை; அவை ‘புத்தகம்’ என்னும் இலக்கண வரையரைக்குள் வாரா!

the_adi_granth_

வழிபடும் நூல் ஆதிக் கிரந்தம்

உலகில் புத்தகததை வழிபடும் ஒரே நாடு இந்தியாதான்! சீக்கியர்களின் புனிதத் தலமான அமிர்தசரஸ் பொற்கோவிலுக்குள் போனால் அங்கே அவர்களுடைய புனித நூலான ஆதிக்கிரந்தம் வழிபடுவதைப் பார்ப்பீர்கள்! தென்னக கோவில்களில் உற்சவ மூர்த்திக்கு என்ன மரியாதை உண்டோ அததனையும் கொடுத்து குரு-வாக வழிபடுகின்றனர். பத்து சீக்கிய குருமார்களுக்கு மேல் இனி இந்தப் புத்தகமே குரு என்று அறிவித்துவிட்டார் கடைசி குருவான குரு கோவிந்த சிங் (1666—1708)!

வட இந்தியாவுக்குப் போனால் பலருடைய பூஜை அறைகளில் வால்மீகி ராமாயணமும், துளசி ராமாயணமும், பகவத் கீதையும் பூஜை அறையில் வழிபடும் இடத்தில் இருக்கும். தென் இந்தியாவில் தேவாரம், திருவாசகம், திவ்வியப் பிரபந்தத்தைக் காலையில் குளித்து விட்டு ‘மடி’யாகப் படித்துப் பாராயணம் செய்வோரைக் காணலாம்.

Bhagavad_gita_As_It_Is_Books

நூலுக்குப் பிறந்த நாள் விழா

உலகில் ஒரு புத்தகத்துக்கு பிறந்த நாள் விழா கொண்டாடும் நாடும் இந்தியதான்! பகவத் கீதை என்னும் அற்புதமான நூலில் இந்து மதக் கருத்துகள் அனைத்தும் 700 ஸ்லோகங்களில் அடக்கப்பட்டு விட்டன. இது தோன்றிய மார்கழி மாத சுக்ல பக்ஷ ஏகாதஸி ஆண்டுதோறும் பகவத் கீதையின் பிறந்த நாளாகக் (கீதா ஜயந்தி) கொண்டாடப்படுகிறது.

இப்படிப் பல்லாயிரம் புதுமைகள் இருப்பதால்தான் இன்றும் கூட இந்தியாவைப் பார்க்கும் வெளி நாட்டினர் வியக்கின்றனர்!

family-motorcycle-india

சூத்ரா = சுரா = தோரா

தமிழும் சம்ஸ்கிருதமும் ஒன்றே என்றும் — இவ்விரு மொழிகளும் பாரதீய சிந்தனையில்- இந்திய மண்ணில்- மலர்ந்த மலர்கள் என்றும் சில ஆய்வுக் கட்டுரைகள் எழுதினேன். நூல் தொடர்பான இன்னும் ஒரு விஷயத்தை இப்போது காண்போம்:

தமிழில்

நூல் = துணி நெய்யும் நூல்

நூல் = புத்தகம்

வடமொழியிலும்

சூத்ர = நூல் (தாலி=மங்கள சூத்ர)

சூத்ர = புத்தகம் ( பிரம்மசூத்திரம், பாணீனீய சூத்திரம், பதஞ்சலி யோக சூத்திரம், நாரத பக்தி சூத்திரம், தொல்காப்பிய சூத்திரம்)

இந்த சூத்ர என்னும் சொல் எகிப்திய பிரமிடு கட்டுமானப் பணியில் பயன்படுத்தப் பட்டதால் எகிப்திய பிரமிடுகளைக் கட்டியோர் இந்தியர்களே என்று இதே பிளாக்–கில் நாலைந்து ஆண்டுகளுக்கு முன் ஆங்கிலத்தில் ஆராய்ச்சிக் கட்டுரை வெளியிட்டேன். அதாவது இந்து சமய பொறியியல் அறிஞர்கள், ஒரு கட்டிடம் நேராக செங்குத்தாக இருக்கிறதா என்பதைக் காண கையில் நூல் (சூத்ர) பிடித்துக் காண்பர். நிற்க!

இந்த சூத்ர என்னும் வடமொழிச் சொல் அராபிய மொழியில் ‘சுரா’ என்றும் ஹீப்ரூவில் (எபிரேயம்) ‘தோரா’ என்றும் மருவின. எப்படி நாம் பிரம்மசூத்திரத்திலும், பதஞ்சலி எழுதிய யோக சூத்திரத்திலும் பயன் படுத்துகிறோமோ அப்படி குரானில் ‘சுரா’ என்பதை அத்தியாயம் என்னும் பொருளில் பயன் படுத்துவர். பைபிளின் பழைய ஏற்பாடு பகுதியை யூதமத அறிஞர்களின் வியாக்கியானங்களோடு பயன்படுத்தும் பகுதி –‘தோரா’.

மொழியியல் விதிகளின் படி ‘த’—வும் ‘ஸ’—வும் இடம் மாறும்! வித்தை என்பதை தமிழ் பாடல்களில் விச்சை என்பர். ஆங்கிலத்தில் டி. ஐ. ஓ. என். என்ற நான்கு எழுத்தில் முடியும் சொற்களை ‘ஷன்’ என்றே உச்சரிப்பர் (எ.கா. –எஜுகேஷன்)

ச/ஷ/ஸ = த/ ட

ramayan

ஆக செந்தமிழும், செம்மொழியும் (ஸம்ஸ்கிருதம் என்றால் செம்மை செய்யப்பட்ட மொழி = செம்மொழி= ஸம்ஸ்கிருதம்) ஒரே தாய்க்குப் பிறந்த இரு குழந்தைகள். ஸம்ஸ்கிருதம்- பெரிய அண்ணன், தமிழ்- சின்னத் தம்பி!

இதற்கு இன்னும் நூற்றுகணக்கான எடுத்துக் காட்டுகள் உள்ளன. தொல்காப்பியத்திலும், திருக்குறளிலும், புறநானூற்றிலும் பல இடங்களில் வரும் “அறம், பொருள், இன்பம்” என்பது பாரதீய சிந்தனையில் மலர்ந்த அரிய பூக்கள். இது இரு மொழியிலும் அப்படியே இருப்பது ஒரே தாய்க்குப் பிறந்த இரு மொழிகள் என்பதைத் தெள்ளிதின் விளக்கும்:

தர்ம அர்த்த காம மோக்ஷம்=

அறம் (தர்ம), பொருள் (அர்த்த), இன்பம் (காம), வீடு (விடுதல்) மோக்ஷம்.

தர்ம என்பது இந்தி மொழியில் ‘தரம்’ என மருவியது போல தமிழில் ‘அறம்’ என மருவியது!

பொருள் (அர்த்த) என்பது சம்ஸ்கிருதத்திலும் தமிழிலும் இரு பொருளில் ( பணம், அர்த்தம்) என்றே பயன்படுத்தப் படுகின்றன.

காம என்ற சொல் சங்க இலக்கியம் முதல் இன்று வரை அப்படியே பயன்படுத்தப் படுகின்றன. சில இடங்களில் இன்பம் என்ற மொழிபெயர்ப்பும் உண்டு.

தொல்காப்பியம், திருக்குறள், புறநானூற்றில் காணப்படும் “தர்மார்த்காமமோக்ஷ” சம்ஸ்கிருத இலக்கியத்தில் பல்லாயிரம் இடங்களில் வருகிறது. ஆக, 2000 ஆண்டுகளுக்கு முன்னர் இமயம் முதல் குமரி வரை ஒரே சிந்தனை – சொல் ஆக்கத்தில் கூட – ஒரே சிந்தனை இருக்குமானால் இவர்கள் யார் என்பதை சொல்லித் தெரிய வேண்டுமா?

வாழ்க தமிழ்! வளர்க ஸம்ஸ்கிருதம்!!

நூல் பல கல்: அவ்வையின் ஆத்திச் சூடி!