மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 36 (Post No.4144)

Written BY S NAGARAJAN

 

Date: 10 August 2017

 

Time uploaded in London:- 5-22 am

 

 

Post No.4144

 

 

Pictures are taken from different sources such as Face book, Wikipedia, Newspapers etc; thanks.

 

 

பாரதி இயல்

 

மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 36

பாரதிதாசன் கவிதைகள்!

 

ச.நாகராஜன்

 

பாரதியாருடன் நெருங்கிப் பழகி அவரது கவிதா சந்நிதானத்தில் பெரிதும் ஆழ்ந்து ஈடுபட்டு மகிழ்ந்தவர்; பாரதியின் புகழை இடைவிடாது பரப்பியவர்; பாரதியாருக்குத் தன் அருமையான கவிதைகளினால் புகழாரம் சூட்டியவர் – இத்தனை பெருமைக்கும் உரியவர் பாரதிதாசன்.

 

புதுவையில் வாழ்ந்த காலத்தில் பாரதியார் பற்றி அதிகாரபூர்வமாக நடந்த நிகழ்ச்சிகளைச் சொல்லும் பாங்கும் வன்மையும் தொடர்பையும் பெற்றவர் பாரதி தாசன் என்பதால் பாரதியார் பற்றிய அவரது எழுத்துக்களும் கவிதைகளும் மிக முக்கியமானவை.

 

பாரதிதாசன் கவிதைத் தொகுப்புகளில் அவர் பாரதிக்குச் சூட்டிய கவிதை முத்தாரங்களைப் படித்து மகிழலாம்.

அனைவரின் உள்ளத்தையும் கொள்ளை கொண்ட கவிதை ‘புதுநெறி காட்டிய புலவன்” என்ற கவிதையாகும்.

அதில் வரும் வரிகள் வைர வரிகள்:

 

பைந்தமிழ்த் தேர்ப்பாகன். அவனொரு

செந்தமிழ்த் தேனீ, சிந்துக்குத் தந்தை!

குவிக்கும் கவிதைக் குயில்! இந் நாட்டினைக்

கவிழ்க்கும் பகையைக் கவிழ்க்கும் கவிமுரசு;

நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா;

காடு கமழும் கற்பூரச் சொற்கோ;

கற்பனை ஊற்றாம் கதையின் புதையல்

திறம் பாட வந்த மறவன்; புதிய

அறம் பாட வந்த அறிஞன்; நாட்டிற்

படரும் சாதிப் படைக்கு மருந்து!

மண்டும் மதங்கள் அண்டா நெருப்பவன்;

அயலார் எதிர்ப்புக் கணையா விளக்கவன்;

என்னென்று சொல்வேன் என்னென்று சொல்வேன்’                   தமிழால், பாரதி தகுதி பெற்றதும்

தமிழ், பாரதியால் தகுதி பெற்றதும்

எவ்வாறென்பதை எடுத்துரைக்கின்றேன்

 

இப்படி இனிய கம்பீரமான அழகிய சொற்களால் பாரதியைப் போற்றி மகிழ்ந்தார் பாரதிதாசன்; இந்தப் பாடலைப் பாடி மகிழ்கிறோம் நாம்!

“பாரதி உள்ளம்” என்ற கவிதையில்,

மேலவர் கீழவர் இல்லைஇதை

மேலுக்குச் சொல்லிட வில்லை

 

என்று கூறும் கவிஞர் பாரதியார் ‘நாலாயிரத்தவர் காண, தோலினில் தாழ்ந்தவ்ர் என்று சொல்லும் தோழர் சமைத்ததை உண்பார்’ என்று கூறுகிறார்.

 

கல்கி ஆரம்ப காலத்தில் பாரதியாரை உலக மகாகவி என்று சொல்ல முடியாது என்று ஆனந்தவிகடனில் எழுதிய போது வெகுண்டெழுந்தார் பாரதிதாசன்.

 

ஞானரதம் போலொரு நூல் எழுதுதற்கு

    நானிலத்தில் ஆளில்லை; கண்ணன் பாட்டுப்

போல் நவிலக் கற்பனைக்குப் போவதெங்கே?

    புதிய நெறிப் பாஞ்சாலி சபதம் போலே

தேனினிப்பில் தருபவர் யார்? மற்றும் இந் நாள்

  ஜெய பேரிகை கொட்டடா என் றோதிக்

கூனர்களும் குவலயத்தை அளாவும் வண்ணம்

  கொட்டி வைத்த கவிதை திசை எட்டும் காணோம்

 

என்று முழங்கி அடுக்கடுக்கான காரணங்களை அள்ளி வீசி மஹாகவி சாதாரண கவிஞர் அல்ல; உலக மகா கவி என்று சான்று காட்டி நிறுவினார்.

 

பின்னால் கல்கி மனம் மாறி பாரதிக்கு மணி மண்டபம் அமைத்ததை நாம் அறிவோம். அதற்குக் காரணமாய் அமைந்த பாரதி தாசர்களில் முத்ல் தாசனாக பெயரில் மட்டுமல்லாமல் செயலிலும் அமைந்தார் பாரதி தாசன்.

 

 

செந்தமிழ் நாடெனும் போதினிலே என்ற கவிதையில் இந்தத் தலைப்பில் பாரதியார் பாடிய கவிதை எப்படி எதனால் பிறந்தது என்ற கதையைச் சொல்கிறார் பாரதிதாசன்.

 

மதுரைத் தமிழ்ச்சங்கம் “தமிழ்நாட்டைப் பற்றித் தமிழ்ப்பாக்கள் தந்தால் அமைவான பாட்டுக்களிப்போம் பரிசு” என்று அறிவிப்பை வெளியிட அதனால் அன்பர்கள் பாரதியாரை வேண்ட அவர் எழுதிய கவிதை தான் செந்தமிழ் நாடெனும் போதினிலே என்ற கவிதை!

 

 

திருப்பள்ளியெழுச்சி என்ற பாடலை பாரதியார் ஏன் பாடினார்? அதற்கான விடையைத் தருகிறார் தன் கவிதையில் பாரதிதாசன்.

ஒரு நாள், “பொற்பு மிகும் மடு நீரினில் ஆடிடப் போகும் வழியினில்” நண்பர் ஒருவரைப் பெற்ற முதுவயதன்னையார் அவரை வேண்டிக்கொள்ள, அவர் திருப்பள்ளி எழுச்சி பாடலைப் பாடினார்.

 

 

நாடக விமர்சனம் என்ற கவிதையில் பாரதியார் வாழ்க்கையில் நடந்த நகைச்சுவை நிகழ்ச்சி ஒன்றைக் கவிஞர் தருகிறார்.

ஒரு நாள் அனைவருடனும் ஒரு நாடகம் பார்க்கச் சென்றார் பாரதியார். அதில் விஷமருந்திய மன்னன் ஒருவன், “என்றனுக்கோ ஒருவித மயக்கந்தானே வருகுதையோ” என்று பாடத் தொடங்கினான். இதைக் கேட்ட பாரதியார், மயக்கம் வந்தால் படுத்துக் கொள்ள வேண்டியது தானே! வசங்கெட்ட மனிதனுக்குப் பாட்டா?” என்றார்.

 

 

அனைவரும் சிரித்தனர். இயல்புக்கு அல்லாததை ஒரு நாளும் ஏற்றவர் இல்லை கவிஞர் பிரான்.

 

பாரதியாரைப் பற்றி தெள்ளு தமிழ் வார்த்தைகளில் பாரதி தாசன் எழுதிய கவிதைகள் காலத்தால் அழியாதவை.

 

பாரதி இயலில் ஆர்வம் கொண்டோர் பாரதியாரைப் போற்றி பாரதிதாசன் இயற்றிய கவிதைகளைப் படித்தால் களியுவகை கொள்வது நிச்சயம்!

***

ஔரங்கசீப் பயன்படுத்திய கங்கை நீர்! (Post No.4136)

Date: 7 August 2017

 

Time uploaded in London:- 6-51 am

 

 

Post No.4136

 

 

Pictures are taken from different sources such as Face book, Wikipedia, Newspapers etc; thanks. 

 

புனித கங்கை

 துக்ளக், அக்பர் ஆகியோர் போற்றிப் பயன்படுத்திய கங்கை நீர் பற்றிய கட்டுரைகளின் தொடர்ச்சியாக இந்தக் கட்டுரை வெளி வருகிறது.

ஔரங்கசீப் பயன்படுத்திய கங்கை நீர்!

 

ச.நாகராஜன்

 

 

முகலாய மன்னர்களில் ஹிந்து பண்பாட்டையும் ஹிந்துக்களையும் அதிகமாக வெறுத்த ஒரு மன்னன் ஔரங்கசீப் (பிறப்பு :14-10-1618 – மறைவு : 20-2-1707).

 

ஹிந்துக்களுக்கு இஸ்லாமின் பெயரால் அவன் ஆற்றிய கொடுமைகளை எழுத கை நடுங்கும். படித்தாலோ உள்ளம் பதறும்.

அப்படி ஒரு கோரமான பிறவி.

 

அவன் காலத்தில் பிரான்ஸை சேர்ந்த வைத்தியரும் யாத்ரீகருமான பெர்னியர் (Francois Bernier  பிறப்பு: 25-9-1620  மறைவு: 22-9-1688) இந்தியாவில் சுமார் 12 வருட காலம் தங்கி இருந்தார்.

ஔரங்கசீப்பைப் பற்றி அதிகாரபூர்வமான தகவல்களை அவர் தனது நூலான ‘டிராவல்ஸ் இன் தி முகல் எம்பயர்’ (Travels in the Mughal Empire) என்ற நூலில் தந்துள்ளார்.

 

அதில் ஒன்று ஔரங்கசீப் கங்கை நீரைப் பயன்படுத்தியது பற்றியது:

 

He (Aurangzeb) keeps in Delhi and Agra…. Kitchen apparatus, Ganges water and all the other articles necessary for the camp, which the Moghal has always about him, as in his capital, things which are not considered necessary in our kingdoms in Europe”

 

டெல்லியோ ஆக்ராவோ, அவர் (ஔரங்கசீப்) சமையலறை உபகரணங்கள், கங்கை நீர் மற்றும் இதர முகாமிற்குத் தேவையான சாமான்களை தலைநகரில் இருக்கிறார் போலவே தனக்குத் தேவையானவற்றை வைத்துக் கொள்கிறார். அவை ஐரோப்பாவில் உள்ள நமது அரசுகளில் தேவை என்று கருதப்படாதவை.

 

பெர்னியரும் கூட கங்கை நீரைப்  பயன்படுத்தியவரே. அதைப் பற்றி அவர் தனது பயண நூலில் தரும் தகவல்கள் இவை:

 

I shall not be exposed to any of these inconveniences and dangers, as my Nawab has with marked kindness ordered that a new loaf of his own household bread and a Sourai of Ganges water (with which, like every person attached to the court, he has laden several camels) should be presented to me every morning. A Sourai is that tin flagon of water covered with red cloth which a servant carries before his master’s horse.”

356ஆம் பக்கத்தில் அவர் கூறுவது இது:

 

“எனக்கு இது போன்ற அசௌகரியங்களோ அல்லது அபாயங்களோ வராது. ஏனெனில் நவாப் அதீதமான அன்புடன் எனக்கு அவருக்குத் தயாரிக்கப்படும் ரொட்டியையும் ஒரு சௌராய் கங்கை நீரையும் எனக்கு ஒவ்வொரு நாள் காலையும் தருமாறு ஆணையிட்டுள்ளார்.(அரசவையில் உள்ள ஒவ்வொருவருக்கும் பல ஒட்டகங்கள் உள்ளன) ஒரு சௌராய் என்பது தனது எஜமானனின் குதிரைக்கு முன்னால் ஒரு வேலையாள் ஏந்திச் செல்லும் சிவப்புத் துணியால் மூடப்பட்ட குவளையாகும்.

 

 

இதிலிருந்து நாம் அறிவது ஔரங்கசீப் மட்டுமல்ல, அவனது அரசவையில் இருந்த பிரபுக்கள் அனைவருமே கங்கை நீரைப் பயன்படுத்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர் என்பது தான்.

 

லாகூரிலிருந்து 1665ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 25ஆம் தேதி எழுதிய தனது கடிதத்தில் பெர்னியர் மீண்டும் கங்கை நீரைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.

 

அவரது குறிப்பு:

 

The fruits, the sweet meats, the Ganges water, the saltpetre with which it is cooled and the betel are kept in four other tents.”  (page 365)

 

“பழங்கள், இனிப்பூட்டிய மாமிசம், கங்கை நீர், அதைக் குளிர வைக்கும் வெடியுப்பு மற்றும் வெற்றிலை ஆகியவை இதர நான்கு கூடாரங்களில் வைக்கப்பட்டுள்ளன.

 

ஹிந்து கலாசாரம். ஹிந்து மதம், ஹிந்துக்கள் – ஆகிய இவற்றை அறவே வெறுத்த முகலாயர்கள் – துக்ளக் முதல் ஔரங்கசீப் வரை – கங்கை நீரை விரும்பினார்கள்.

அதைத் தாங்கள் செல்லுமிடமெல்லாம் கொண்டு சென்றார்கள்.

 

 

தங்கள் சமையலுக்கு அதை மட்டுமே பயன்படுத்தினார்கள்.

அது மட்டுமல்ல, அரசாங்கத்தைச் சேர்ந்த செல்வந்தர்களும், பிரபுக்களும், உயர் அதிகாரிகளும் கூட கங்கை நீரையே பயன்படுத்தினர் என்பது மேற்கூறிய பல குறிப்புகளினால் தெரிய வருகிறது.

 

காலம் காலமாகத் தொன்று தொட்டு ஹிந்துக்கள் போற்றி வரும் கங்கா மாதாவை கடுமையான விதிகளை அனுசரிக்கும் இஸ்லாமியர்களும் போற்றி பயன்படுத்தினார்கள் என்பது சரித்திரம் தரும் உண்மை!

 

கங்கை போன்ற ஒரு புனித நதி உலகில் வேறெங்கும் இல்லை என்பதும் உண்மையே!!

***

 

 

 

 

 

துன்முகனுக்கு உண்டோ சுகம்? (Post No.4112)

Written by London Swaminathan
Date: 25 July 2017
Time uploaded in London-17-21
Post No. 4112
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

‘இடும்பைக்கு  இடும்பை படுப்பர்’ — துன்பத்துக்கு துன்பம் செய்வர் என்று வள்ளுவனும் நெப்போலியனும் சொன்னார்கள். அதாவது அறிவில் சிறந்தவர்கள் துன்பத்தையே திணறடித்துவிடுவார்கள்; அது பயந்துகொண்டு ஓடிவிடும்!

 

நீதி வெண்பா என்னும் நூலில் ஒரு அழகான செய்யுள்:-

 

தூய அறிவினர் முன் சூழ்துன்ப மில்லையாம்

காயும் விடங்கருடற் கில்லையாம் — ஆயுங்காற்

பன்முகஞ்சேர் தீமுன் பயில் சீத மில்லையாம்

துன்முகனுக்  குண்டோ சுகம்

 

பொருள்:-

ஆயுங்கால் = ஆராய்ந்து பார்க்குமிடத்து

காயும் விடம் கருடற்கு இல்லை = கொல்லுகின்ற விஷம் கருடனுக்கு ஒன்றும் செய்வதில்லை

(அது போல)

தூய அறிவினர் முன் சூழ் துன்பம் இல்லை = நல்ல அறிவினர்க்கு வரும் துன்பம் அவருக்கு ஒரு தீங்கும் செய்யாது

பன் முகம் சேர் தீ முன் = நாலா பக்கங்களிலும் பற்றி எரியும் தீக்கு முன்னால்

பயில் சீதம் இல்லை = குளிர் என்பது நெருங்காது.

(அது போல)

துன்முகனுக்கு உண்டோ சுகம் = தீயோருக்கு சுகம் என்பது உண்டோ (கட்டாயம் இல்லை)

 

திருக்குறளில் இடுக்கண் அழியாமை என்னும் அதிகாரத்தில் திருவள்ளுவர் அழகான பத்து குறள்களை அமைத்து இருக்கிறார்.

இடுக்கண் வருங்கால் நகுக (621)

இடும்பை அறிவுடையான் உள்ளத்தின் உள்ளக் கெடும் (622)

இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு

இடும்பை படா அதவர் (623)

இப்படி அடுக்கிக் கொண்டே போவார்.

சுருக்கமாகச் சொன்னால் அறிவுடையோர் துன்பத்துக்கே துன்பம் செய்வர்!

 

பகவான் கிருஷ்ணர் பகவத் கீதையில் ஞானிகளை இன்பமும் துன்பமும் ஒன்றும் செய்யாது  என்பார். இதைப் பல இடங்களில் திரும்பத் திரும்ப உரைப்பார்.

 

 

ஆத்திச் சூடி பாடிய அவ்வையோ மனந்தடுமாறேல், “துன்பத்திற்கிடங்கொடேல் என்கிறார்.

 

கேட்டிலுறுதி கூட்டுமுடைமை — என்று கொன்றை வேந்தன் செப்பும்

 

கேட்டில் உறுதி = கைப்பொருளை இழந்த காலத்தில் மனம் தளராமல் இருப்பது

உடைமை கூட்டும் = இழந்த அப்பொருளை உண்டாக்கும் அல்லது ஈடு செய்யும். அதாவது அதை இழந்த உணர்வே இல்லாமற் செய்துவிடும்.

 

போனால் போகட்டும் போடா’— என்ற தத்துவ உணர்வு பிறந்து விடும்!

துன்பம் வெய்யோர்க்கு இன்பம் எளிது என்று முதுமொழிக் காஞ்சி சொல்லும்

துன்பம் வெய்யோர்க்கு = துன்பத்தை விரும்பி பொறுத்துக் கொள்ளுவோருக்கு

இன்பம் எளிது = இன்பம் எளிதாகும்

 

ஒரு காரியத்தைச் செய்வோருக்கு அப்படிச் செய்யும்போது வரும் துன்பங்களை விரும்பி ஏற்கும் பக்குவம் வந்துவிட்டால் அந்தக் காரியம் எளிதில் முடியும்; சந்தோஷமும் ஏற்படும் என்பது பொருளாம்.

TAGS:–துன்பம், இடும்பை, குறள், அவ்வை, இன்பம்

 

–SUBHAM–

தமிழ்க் கல்வெட்டுகளில் விநோதப் பெயர்கள் (Post No.4092)

Written by London Swaminathan


Date: 18 July 2017


Time uploaded in London-14-06


Post No. 4092


Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

மனிதர்களுடைய பெயர்கள் காலத்துக்கு காலம் மாறுபடும்; சங்கத் தமிழ் நூல்களில் வழங்கும் பல பெயர்கள் இப்பொழுது புழக்கத்தில் இல்லை; இதே போல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த பல பெயர்களை நாம் இப்பொழுது நமது குழந்தைகளுக்கு சூட்டுவதில்லை. உலகில் மாறாத பொருட்கள் இல்லை. மாற்றம் என்பது தவிர்க்க இயலாதது (Change is inevitable) . உடை, உணவு, மொழி எல்லாமே மாறுபடும் என்பது அனுபவத்தில் கண்ட விஷயம்!

சுமார் ஐந்தாம் நூற்றாண்டிலேயே புனிதவதி, திலகவதி, பரம தத்தன் போன்ற சம்ஸ்கிருதப் பெயர்கள் பயன்படுத்தப்பட்டதை காரைக்கால் அம்மையார் சரித்திரம் அதற்குப்  பின்னர் வந்த அப்பர் சரித்திரம் ஆகியன காட்டும். ஆனால் நப்பசலை, நச்செள்ளை போன்ற பெண்களின் பெயர்களை நாம் இப்போது பயன்படுத்துவதில்லை. ஆயினும் சங்க காலத்தில் கேசவன், தாமோதரன், வால்மீகி, பிரம்மா, கபிலர், பரணர் போன்ற சம்ஸ்கிருதப் பெயர்களை சர்வ சாதாரணமாகப் பயன்படுத்தினர்.

சங்கத் தமிழ்ப் புலவர்களின் பெயர்களில் நிறைய சம்ஸ்கிருதப் பெயர்கள் இருக்கின்றன. இன்னும் சிலர் சம்ஸ்கிருதப் பெயர்களை தமிழில்  மொழி பெயர்த்து வைத்துக் கொண்டனர். காமக்கண்ணி என்ற சங்கப் புலவரின் பெயர் காமாக்ஷி என்ற தெய்வத்தின் பெயராகும். வேத கால இந்திரனின் பெயரை காஷ்மீர் முதல், இலங்கையின் கண்டி வரையுள்ள எல்லோரும் பயன்படுத்துகிறோம். ஜாதி வித்தியாசமின்றி எல்லோரும் ராஜேந்திரன், மஹேந்திரன், உபேந்திரன் என்றெல்லாம் இந்திரன் பெயரை வைத்துக் கொள்கிறோம். இதே போல ஊர் என்பது சங்க காலத்திலேயே உள்ளது. இது புரம், பூர் (Jaipur, Nagpur, Jodhpur) என்ற சம்ஸ்கிருதச் சொல்லுடன் தொடர்புடையது. சங்க காலத்துக்கு முன்னமே சம்ஸ்கிருத நூல்களில் உள்ளது.

 

(என்னுடைய கொள்கைப்படி தமிழும் சம்ஸ்கிருதமும் ஒரே மூலத்திலிருந்து பிறந்ததால் இப்படி நூற்றுக்கணக்கான ஒற்றுமைகளைக் காணலாம். இவை எல்லாம் ஐரோப்பிய மொழிகளில் இல்லாததால் மாக்ஸ்முல்லர், வில்லியம் ஜோன்ஸ் போன்றவர்கள் சொன்னதெல்லாம் வெறும் ஊகமே — தவறான ஊகங்களே — என்பது உறுதியாகின்றது)

 

இதோ சில சுவையான கல்வெட்டுப் பெயர்கள்:

கல்வெட்டுகள் அனைத்தும் இந்து முறைப்படிதான் திசைகளைக் குறிக்கும்— பூர்வ, தக்ஷிண, பஸ்சிம, உத்தர = கீழ் பாலெல்லை, தென்பாலெல்லை, மேல் பாலெல்லை, வட பாலெல்லை). இது இந்துக்களின் கண்டுபிடிப்பு. கோவிலை வலம் வருதல், கடிகராத்தில் முள் வலமாகச் சுற்றல் எல்லாம் , உலகிற்கு இந்துக்கள் கற்பித்த நாகரீகம்!

 

கி.பி. 550

சிம்மவர்மன் (சிம்ஹவர்மர்), வஜ்ர நந்தி, நரபயன் (ஆணத்தி)

 

கி.பி.675

பரமேச்சுரன், அநந்தசிவ ஆசாரியர்

 

ஒன்பதாம் நூற்றாண்டு

சதுர்புஜன், சதுர்வக்த்ரன்,, அத்ரி, புரூரன், நஹுஷன், தசவதனன், தார்தராஷ்டிரன், வானரத்வஜன், ஹரிச்சந்திரன், சிரிவல்லன், வரகுணன், சிரிகண்டராசன், வீரநாரணன், ஸ்ரீ பராந்தக மஹாராஜன், பரமேஸ்வரன், காடக ஸோமயாஜி, மாயா நாராயண பட்டர், நாராயணங் கேசவன், கண சுவாமி பட்டர், யோகேசுவர பட்டர், மாதவன், சிரீவல்லன், நக்கன்

11ஆம் நூற்றாண்டு

வீர கேரளன், வீர பாண்ட்யன், வினைய கஞ்சுகன், விசால சீலன், கோவிந்த சுவாமி பட்டச் சோமாசி, வாசுதேவ பீதம்பரப் பட்டன்,

ப்ரஹ்ம ஸ்ரீதுங்க ராஜ, ராஜ சிம்ஹ, மாங்குடிச் சோலைக் கிழவன், இளவளம்புல்லன், அரையன், வேற்சாத்தன், சாத்தன்.

 

கி.பி.865

கருநந்தடக்கன், விஷ்ணு பட்டாரகன், குமாரசுவாமி பட்டன், இளையான் கண்டன், வெண்ணீர் வெள்ளாளன், சாத்த முருகன், சிங்கங்குன்றப் போழன்.

 

ராரஜராஜன் லெய்டன் செப்பேடு

கிருஷ்ணன் ராமன், பருத்திக் குடையான் வேளான், மூவேந்த வேளான், ஆரூரன்,  தத்தன் சேந்தன்,  பொற்காரி, , தாமோதர பட்டன், , கற்குடையான் பிசங்கன்,  சங்கர நாராயணரங்கன், , தம்மடி பட்டன், தியம்பக பட்டன், கொற்றன் பொற்காரி, சூற்றியன் தேவடி, தேவன் சாத்தன்,

தளிக்குளவன், குமரன் ரங்கன், சிங்கன் வெண்காடன்,   தம்மடிப் பட்டன், ஸ்ரீதரபட்டன், பற்பநாப பட்டன், வெண்ணைப் பட்டன்,  நந்தீஸ்வர பட்டன், அமுதன் தீர்த்தகரன், அரைசூர் மறியாடி, வேட்கோவன் மாதேவன், காஸ்யபன் ஸூர்யரங்கன், பாரத்வாஜி திரித்தி வைகுந்தன், சதுர்முகனரங்கன், கண்ணன், தேவன் குடையான், பூவத்தபட்டன், நள்ளாறன், கற்பகஞ் சோலை, கணவதி, முண்டனரங்கன், ராஜேந்திர சோழ பட்டன்.

TAGS: கல்வெட்டு, தமிழ்ப் பெயர்கள், லெய்டன், சங்கப்புலவர்

 

–சுபம்-

 

கடவுள் கண்டெடுத்த முத்து! (Post No.4071)

Translated by London Swaminathan
Date: 11 July 2017
Time uploaded in London- 10-15 am
Post No. 4071

 
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

வேதம் என்பது சம்ஹிதை (துதிப்பாடல் பகுதி), பிராமணம் (யாகம் செய்யும் வழிமுறைகள்), ஆரண்யகம், உபநிஷத் (தத்துவ விளக்கங்கள்) நிறைந்தது.

 

இதில் ரஹசிய மொழியில்தான் விஷயங்களைச் சொல்லுவர். இதில் ரிஷிகளுக்குள் ஒரு போட்டி! பேரானந்தம்!

 

ஆங்கிலம் மட்டுமே படித்த, இந்து கலாசாரமே தெரியாத– புரியாத – அறிவிலிகள் இது பற்றி ஏராளமாகப் பிதற்றியுள்ளன. வெளிநாட்டாருடன் போட்டி போட்டுக் கொண்டு மார்கஸீய அரை வேக்காடுகளும் குட்டையைக் குழப்பியுள்ளன.

 

யார் சொல்லுவதை நம்பலாம்?

காஞ்சி, சிருங்கேரி சங்கராசார்யார்கள் போன்ற சந்யாசிகள் சொல்லுவதை நம்பலாம். இந்து மதத்தில் நம்பிக்கை உடையோர் சொல்லுவதை நம்பலாம்.

 

யார் சொல்லுவதை நம்பக் கூடாது?

ஒழுக்கங் கெட்ட, வாழ்க்கையில் சத்தியத்தை, நேர்மையைக் கடைப்பிடிக்காத அதுகளையும் இதுகளையும் நம்பக்கூடாது. வெளிநாட்டிலிருந்து வந்து வேதத்தை மொழி பெயர்த்த பல அதுகளும் இதுகளும் நம்ம ஊர் அரசியல்வாதிகள் மாதிரித்தான். அதாவது ஒரு சாரார் இடமிருந்து காசு வாங்கி மற்றவர்களைத் திட்டுவது,

‘ஊருக்குத்தாண்டி உபதேசம் உனக்கல்ல’ என்று வீட்டில் பேசுவது இவர்களுடைய வாடிக்கை. நிற்க. நல்ல விஷயங்களுக்கு வருவோம்.

பிராமண நூல்களில் கிடைக்கும் சில அற்புதமான மேற்கோள்களைப் பார்ப்போம்

 

“சமுத்ரே த்வா மதனே சாதயாமி இதி.

மனோ வை சமுத்ர:

மனஸோ வை சமுத்ராத் வாசா அ ப்ரயா தேவாஸ் த்ரயீம் வித்யாம் நிரகனன்”

 

“மனம் தான் கடல்;

வாக்குதான் மண்வெட்டி (கரண்டி).

தேவர்கள் அந்த மூன்று வேதங்களையும் தோண்டி எடுத்தனர்”– சதபத பிராமணம் (7-5-2-52)

 

நாம் தமிழில் “கடலில் மூழ்கி முத்து எடுப்போம்” வாருங்கள் -என்று பல சந்தர்ப்பங்களில் சொல்கிறோம். அந்த இடத்தில், படிப்போருக்கு நாம் அரிய விஷயங்களை ஆழ்ந்து இறங்கி கண்டு பிடிப்போம் வாருங்கள், என்பது புரியும். அதைப் போல வேதங்கள் என்பது தேவர்கள்  — அல்லது அவர்களைப் போன்ற ரிஷிகள் — கண்டவை — மனக் கண்ணில் கண்டவை –என்பது தெளிவாகத் தெரியும். இதை அறியாத ஆங்கில மாக்கள் ” பாருங்கள் வேதங்கள் என்பவை பற்றி பலவிதமான கருத்துகள் இருக்கின்றன– ஆகவே அவைகளும் கவிஞர்களால் இயற்றப் ப ட்டவையே’’ என்று வாதிப்பர்.

ஆனால் நம்முடைய நூல்கள் ரிஷிகளை ‘மந்த்ர த்ருஷ்டா’ — மறை மொழிகளைக் ‘கண்டவர்கள்’ என்று சொல்லுகின்றன. ‘இயற்றியவர்கள்’ என்று எண்ணிவிடக்கூடாதே என்பதற்காக ‘அபௌருஷேயம்’ (மனிதர்களால் இயற்றப்படாதவை) என்றும் தெளிவாகச் செப்புகின்றன.

 

இப்போது நீங்களே தெரிந்து கொள்ளலாம். வேத வாழ்வைக் கடைப்பிடிக்காத வெளிநாட்டினர் சொல்லுவது சரியா? அல்லது நம்முடைய மூதாதையர்கள் சொல்லுவது சரியா என்று.

 

இங்கு அப்பர் தேவாரப் பாடலை ஒப்பிடுவது சாலப் பொருந்தும்

 

விறகில் தீயினன் பாலில்படு நெய்போல்

மறைய நின்றுளன் மாமணிச் சோதியான்

உறவு கோல்நட்டு உணர்வுக் கயிற்றினால்

முறுக வாங்கிக் கடையமுன் நிற்குமே

xxx

 

பிரஜாபதியின் தாடி

பிரஜாபதியின் (பிரம்மா) தாடி முடிதான் வேதங்கள்!

ப்ரஜாபதேர் வை ஏதானி ஸ்மஸ்ரூணி யத் வேத:

–தைத்ரீய பிராமணம் 3-39-1

xxx

சொற்களே வேதங்களின் தாய்!

“வாக் அக்ஷரம் ப்ரதமஜா ருதஸ்ய வேதானாம் மாதா அம்ருதஸ்ய நாபி:”

–தைத்ரீய பிராமணம் 2-8-85

“சொல் என்பது அழியாதது, முதலில் பிறந்தது, வேதங்களின் தாய், மரணமிலாப் பெருவாழ்வின் அச்சு (மூலாதாரம்)”

xxx

சரஸ்வதி

வாக், வாக் தேவி என்பதெல்லாம் சரஸ்வதியையும் குறிக்கும். சாதாரண மக்களுக்கு — பாமர மக்களுக்கு — இப்படி தத்துவ விஷயங்களைச் சொன்னால் புரியாதே என்பதற்காக பிற்காலத்தில் சரஸ்வதி முதலிய உருவங்களைப் படைத்து விளக்கினர். அதாவது எப்படி ரஹஸிய மொழி மூலம் அரிய கருத்துக்ளைத் தந்தனரோ, அதே போல சாதாரண கற்சிலை- விக்ரஹ — உருவங்கள் மூலம் அரிய– பெரிய கருத்துக்களை மனதில் பதிய வைத்தனர்.

xxx

பாகவத புராணம் சொல்லும்:

நான்முகனிடமிருந்து வேதங்கள் தோன்றின; “முன்போல எப்படி சொல் தொகுப்பை உண்டாக்கலாம் என்று எண்ணிக் கொண்டிருந்த போது கிழக்கு, தெற்கு, மேற்கு, வடக்கு ஆகிய நான்கு முகங்களில் இருந்து ரிக், யஜூர், சாமம், அதர்வணம் என்னும் நான்கையும் படைத்தார். அத்தோடு யாக யக்ஞங்கள், துதிகள் ஆகியவற்றையும் உருவாக்கினார்” — பாகவதம் 3-12-34)

(விஷ்ணு புராணமும் இதைச் சொல்கிறது).

xxxx

 

காயத்ரியிலிருந்து உண்டானது வேதம்

ஹரிவம்சம் சொல்கிறது–

“உலகைப் படைத்த பிரம்மா, மூன்றே வரிகள் உள்ள காயத்ரீயைப் படைத்தார் – அதுதான் வேதங்களின் தாய் – அந்த காயத்ரீயில் இருந்து நான்கு வேதங்களும் உருவாயின”

(இதன் உட்பொருள்- நான்கு வேதங்களில் காணப்படும் காயத்ரீ மந்திரம் முழு வேதங்களுக்கும் சமம் ஆனவை.

xxxx

மஹாபாரதம் சாந்தி பர்வதத்திலும்

“வேதானாம் மாதரம் பஸ்ய மஸ்தாம் தேவீம் சரஸ்வதீம், அதாவது, வேதங்களின் தாயான சரஸ்வதி என்னிடம் வசிக்கிறாள்” என்று சொல்லும்.

 

இவ்வாறு வேத, இதிஹாச, புராணம் மூலம் இழையோடும் கருத்துக்களை நாம் நுணுகி ஆராய்ந்தால் என்றுமுள – சாஸ்வதமான-  சத்தியத்தையே வேதங்கள் உரைக்கின்றன என்பது தெளிவுபடும்.

 

 

சுபம்–

ஆயுர்வேதம் கூறும் ஐந்து உணவு தோஷங்கள்! (POST NO.4070)

Written by S NAGARAJAN

 

Date: 11 July 2017

 

Time uploaded in London:- 5-44 am

 

 

Post No.4070

 

 

Pictures are taken from different sources such as Face book, Wikipedia, Newspapers etc; thanks. 

 

 

ஆயுர்வேதம் கூ உணவு இரகசியம்

 

ஆயுர்வேதம் கூறும் ஐந்து உணவு தோஷங்கள்!

 

ச.நாகராஜன்

உணவு என்பது உடலை போஷிக்கும் ஒன்று மட்டும் அல்ல, அது உள்ளத்தை உருவாக்கவும் உதவும் ஒன்று. ஆன்மீக வளர்ச்சிக்கோ அல்லது வீழ்ச்சிக்கோ அது அடிகோலும் என்கிறது ஆயுர்வேதம்.

ஹிந்து வாழ்க்கை முறையில் உணவை எப்படி, எங்கே யார் மூலம் செய்யப்பட்டு பரிமாறப்பட்டு சாப்பிடுகிறோம் என்பது மிகவும் முக்கியமானது.

அன்னம் என்பது ப்ராணனைத் தாங்குவது. ஆகவே அதை யார் சமைக்கிறார்கள், எப்படி சமைக்கிறார்கள் என்பதும் கூட முக்கியம் தான்.

உணவில் ஐந்து தோஷங்கள் உண்டு.

  • அர்த்த தோஷம்
  • நிமித்த தோஷம்
  • ஸ்தான தோஷம்
  • ஜாதி தோஷம்
  • சம்ஸ்கார தோஷம்

இது பற்றி ஆஸ்ரம்ஜி பாபு தனது உரைகளில் ஒன்றில் விரிவாக எடுத்துரைக்கிறார். அதன் சாராம்சத்தைப் பார்க்கலாம்.

 

அர்த்த தோஷம்

பண்டிதர் ஒருவர் தனது சீடர் ஒருவரின் வீட்டிற்கு உணவருந்த வந்தார். உணவருந்தி முடியும் போது அவரது வாடிக்கையாளர் ஒருவர் பணம் நிரம்பிய மூட்டை ஒன்றை சீடரிடம் தந்ததைப் பார்த்தார்.

உணவருந்தி முடிந்து தனியே அறையில் இருக்கும் போது அவருக்கு பணத்தாசை தோன்றியது. சீடருக்கு வந்த பைக்குள் கைவிட்டு கை நிறைய பணத்தை எடுத்துக் கொண்டார். பின்னர் விடை பெற்றுக் கொண்டு வீடு திரும்பினார்.

மறு நாள் காலையில் பூஜை செய்யும் போது முதல் நாள் தான் செய்ததை நினைத்துப் பார்த்தார். அடடா,என்ன தவறு செய்து விட்டோம், இந்தத் தவறை நான் எப்படி செய்தேன் என்று நினைத்து வருந்தினார்.

பணத்தை எடுத்துக் கொண்டு நேரடியாகத் தன் சீடனின் வீட்டிற்குச் சென்றார். நடந்ததைச் சொல்லி தான் எடுத்த பணத்தைத் திருப்பிக் கொடுத்தார்.

சீடனின் வீட்டில் உணவருந்திய பின்னர் இந்தக் கெட்ட எண்ணம் தோன்றியதும் இரவில் அது ஜீரணமாகி கழிவுகள் வெளியேறிய பின்னர் மனம் பரிசுத்தம் ஆனதையும் அவர் நினைத்துப் பார்த்தார்.

தன் சீடனிடம், ‘நீ சம்பாதித்த பணம் எப்படி வந்தது’ என்று கேட்டார்.

வெட்கமடைந்த சீடன் தான் நேர்மையற்ற வழியிலேயே பணம் சம்பாதிப்பதாக ஒப்புக் கொண்டு மன்னிப்பும் கேட்டான்.

இது பொருளால் வரும் தோஷம் – அதாவது அர்த்த தோஷம்! அர்த்தம் என்றால் பொருள் என்று அர்த்தம்.

நாம் சமைக்கும் உணவுப் பொருள்கள் நியாயமான சம்பாத்தியத்தில் வாங்கியதாக இருத்தல் வேண்டும்.

நிமித்த தோஷம்

அடுத்தது நிமித்த தோஷம். உணவைச் சமைக்கும் சமையல்காரர் நல்ல மனதைக் கொண்டிருத்தல் அவசியம். நேர்மையானவராகவும், அன்பானவராகவும் நல்ல் சுபாவம் உடையவராகவும் அவர் இருத்தல் வேண்டும்.

அத்தோடு சமைக்கப்பட்ட உணவு நாய்,எறும்பு, பல்லி, காகம் போன்ற ஜந்துக்களால் தொடப்படாமல் இருத்தலும அவசியம்.

அப்படித் தொடப்பட்ட உணவுகள் அசுத்தமானவை.

உணவில் தூசி, தலை மயிர், புழுக்கள் போன்றவையும் இருக்கக் கூடாது.

பீஷ்மர் 27 நாட்கள் அம்புப் படுக்கையில் இருந்தார். கிருஷ்ணரும் பஞ்ச பாண்டவர்களும் அவரைச் சுற்றி இருந்தனர். திரௌபதி மனதிற்குள் தன்னை சபையில் துரியோதனன்  ஆடையை அவிழ்க்க உத்தரவிட்ட போது இந்த பீஷ்மர் வாயை மூடிக் கொண்டு ஏன் இருந்தார் என்று எண்ணினாள். அவளது மன ஓட்டத்தைப் புரிந்து கொண்ட பீஷமர், “அம்மா, நான் துரியோதனனது ஆதரவில் அவனால் படைக்கப்பட்ட உணவை சாப்பிட்டு வந்தவன். என் அறிவை முற்றிலுமாக அந்த உணவு மறைத்து விட்டது. இதோ இந்த 27 நாட்களில் சாப்பிடாமல் இருக்கும் போது என் பழைய ரத்தம் சொட்டுச் சொட்டாக வெளியேறும் போது நான் பரிசுத்தனாகிறேன். எனது அறிவு பிரகாசிக்கிறது” என்று கூறினார்.

அசுத்தமான உணவு அனர்த்தத்தையே விளைவிக்கும்.

தீயவன் சமைத்த உணவு தீமையான எண்ணங்களையே உருவாக்கும்.

நல்லவன் சமைத்த உணவு நல்ல எண்ணங்களையே உருவாக்கும்.

 

ஸ்தான தோஷம்

அடுத்தது ஸ்தான தோஷம். எந்த இடத்தில் உணவு சமைக்கப்படுகிறதோ அங்கு நல்ல அதிர்வுகள் இருத்தல் அவசியம். சமைக்கும் போது அனாவசிய சண்டைகள், அற்ப விவாதங்கள் நடந்தால் அந்த உணவு அசுத்தப்பட்டு விடும்.

அதுமட்டுமின்றி கழிப்பறை, மருத்துவ மனை, யுத்த களம், கோர்ட் ஆகியவற்றின் அருகே சமைக்கப்படும் உணவும் சாப்பிடுவதற்கு உகந்தது அல்ல.

துரியோதனன் 56 விதமான விசேஷ உணவு வகைகளைத் தயாரித்து கிருஷ்ணரை சாப்பிடக் கூப்பிட்டான். அவரோ மறுத்து விட்டார். அவரை சிறைப்பிடிக்கவும் அவன முயன்றான். ஆனால அவரோ நேராக விதுரன் வீட்டிற்குச் சென்றார். அவரைப் பார்த்த விதுரரின் மனைவி புளகாங்கிதம் அடைந்தாள்.

எதைத் தருகிறோம் என்பதே தெரியாமல் வாழைப்பழத்தை உரித்து பழத்தைத் தூக்கி எறிந்து விட்டு தோலை அன்புடன் கிருஷ்ணருக்குத் தந்தாள். அதை வாங்கித் தின்ற கிருஷ்ணர் ஆனந்தமுற்றார். இதைப் பார்த்துப் பதறிப் போன விதுரர் மனைவியை நோக்கிக் கோபமான பார்வையை வீசவே கிருஷ்ணர், “விதுரா! நான் அன்பிற்காகத் தான் ஏங்குகிறேன். எனக்கு உள்ளன்புடன் ஒரு துளி ஜலம், ஒரு இலை, ஒரு பழம் எதைத் தந்தாலும் அதுவே எனக்குப் போதும்” என்று அருளினார்.

உள்ளன்புடன் உணவு படைக்கப்பட வேண்டியது அவசியம்

 

ஜாதி தோஷம்

அடுத்தது ஜாதி தோஷம். உணவில் அடங்கி இருக்கும் மூலப் பொருள்கள் சாத்வீக குணமுடையதாக இருத்தல் அவசியம். பால், நெய், அரிசி, மாவு, பருப்பு போன்றவை சாத்வீகமானவை. புளிப்பு, உரைப்பு,உப்பு உள்ளவை ராஜஸிகமானவை. உள்ளிப்பூண்டு, வெங்காயம், மாமிசம், முட்டை போன்றவை தாமஸிகமானவை.

சாத்விக உணவு ஆன்மீக முன்னேற்றத்தைத் தருகிறது.

ராஜஸிக உணவு உலோகாயத உணர்வைத் தூண்டி சுயநலத்திற்கு வழி வகுக்கிறது.

தாமஸிக உணவு தீய பிசாசு குணத்தை வளர்க்கிறது.

 

சம்ஸ்கார தோஷம்

அடுத்தது சம்ஸ்கார தோஷம். தூய்மையாக உணவு சமைக்கப்பட்டாலும் கூட, உணவு வகைகள் ஒன்றுடன் ஒன்று மாறுபட்டிருகக்க் கூடாது. அதிகமாக வேக வைத்தல், அதிகமாக வறுத்தல், பழைய உணவு போன்றவை தோஷமானவை. உடம்புக்கும் உள்ளத்திற்கும் ஊறு விளைவிப்பவை.

ஆக இந்த ஐந்து வித தோஷங்களையும் விலக்கி ஒருவன் உணவை உண்ண வேண்டும். தாயார் அல்லது மனைவி இல்லத்தில் சமைத்துப் பரிமாறும் உணவை ஏற்புடையது என்று அதனால் தான் முன்னோர்கள் சொல்லி வைத்தனர்.

இன்றோ ஃபாஸ்ட் புட், ஜங்க் புட் என்று அசுத்த உணவை ஆரவாரத்துடன் சாப்பிடுகிறோம்.

அசைவ உணவைத் தயாரிக்கும அதே பாத்திரத்தில் தான் சாம்பார், அரிசி, பருப்பு போன்றவை தயாராகின்றன.

தட்டுகள் உரிய முறைப்படி கழுவப் படுகிறதா இல்லையா என்று யாருக்கும் தெரியாது.

மக்டொனால்ட், கெல்லாக் என்று இப்படி பிராண்டட் அயிட்டங்களில் மோகம் உச்சமடைந்திருக்கும் காலம் இது.

அதன் விளைவையும் அனுபவித்துத் தானே ஆக வேண்டும்.

ஆசாரத்தைக் கடைப்பிடி என்றனர் ஆன்றோர். ஆசாரம் என்றால் சுத்தம்.

அதைக் கடைப்பிடித்து எளிமையான உணவை உண்டு உயர்ந்த உள்ளம் கொண்டு வாழ்ந்தனர் சில தலைமுறைகளுக்கு முன்னர் வாழ்ந்த நம் முன்னோர்.

 

இன்றோ…

இப்படிப்பட்ட ஐந்து உணவு தோஷங்கள் உண்டு என்பது கூட  தெரியாத காலம் ஆகி விட்டது.

என்றாலும் கூட ஆயுர்வேதத்தை மதிப்போர் உணவு பற்றிய இந்த தோஷங்களை அறிந்து அவற்றை நீக்கி உணவை உண்ண ஆரம்பித்தால் அது உடல் ஆரோக்கியத்தையும் மன ஆரோக்கியத்தையும் தருவதுடன் ஆன்ம முன்னேற்றத்தையும் தரும்.

இதுவே ஆயுர்வேதம் உணவு பற்றிக் கூறும் இரகசியமாகும்!

 

***

உ.வே.சா.வுக்கு புரியாத பாண்டவ பாஷை! (Post No.4056)

Written by London Swaminathan
Date: 6 July 2017
Time uploaded in London- 6-10 am
Post No. 4056

 
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

சங்கீத மேதை மஹா வைத்யநாதையர் பற்றி தமிழ் தாத்தா உ.வே.சாமிநதையர் எழுதிய புத்தகத்தில் ஒரு அரிய விஷயத்தைச் சொல்லுகிறார். ஆனால் இது பற்றி அதிகம் பிரஸ்தாபிக்காமல் ஒரே ‘பாரா’வில் விஷயத்தை முடித்துவிட்டு ஓடி விடுகிறார்.

பாண்டவ பாஷை!

 

இப்படி உண்மையிலேயே ஒரு பாஷை இருந்ததா? அல்லது மதுரை வணிகர்கள், அல்லது நாம் சிறு பிள்ளைகளுக்குப் புரியக் கூடாதென்பதற்காக உபயோகப் படுத்தும் ஒரு மொழி (உத்தி) யா என்று விளங்கவில்லை.

முதலில் உ.வே.சா. சொல்லுவதைப் படியுங்கள்:-

 

“சகோதரர்களோடு பேசுங்காலத்தில் ஏதோ ஒரு பாஷையில் அவர் (மகா வைத்யநாதையர்) பேசுவார்; அஃது இன்ன பாஷையென்று யாருக்கும் விளங்காது. ஒரு முறை நான் என்ன பாஷையென்று கேட்டேன்; அவர் இதனைப் பாண்டவ பாஷையென்று சொல்வதுண்டு. விராட நகரத்தில் பாண்டவர்கள் அஞ்ஞாதவாசம் செய்த காலத்தில் தமக்குள் வழங்கி வந்ததைப் போன்றதென்று கேள்வி” என்றார்.

 

மதுரையில் வணிகர்கள், வாடிக்கையாளர்கள் பேரம் பேசுகையில், தமக்குள் சில சங்கேத சொற்களைப் பரிமாறிக்கொள்வார்கள். ‘இந்த ஆளுக்கு விலையை  இவ்வளவு குறைக்கலாம் அல்லது கூட்டு என்றோ, வந்த வாடிக்கையாளர் ஒரு சாவுக் கிராக்கி; நேரத்தை வீணடிக்காதே; ஆளை புறக்கனி என்றோ சங்கேத மொழியில் பேசிக் கொள்வார்கள்.

 

இதே போல நாம் வீட்டில் சிறு குழந்தைகளுக்குத் தெரியக் கூடாதென்பதற்காக “ நான் சாக்லெட்டை அங்கே வைத்திருக்கிறேன்” என்று சொல்லாமல் ‘அசா அல் அலெ அட் அங்கே இருக்கிறது’ என்று சொல்லுவோம். சிலர் ‘அ’ என்பதற்குப் பதிலாக ‘க’  என்பதைப் பயன்படுத்துவர் ‘கசா கக் கலெ கட்’ என்பர். ஒவ்வொரு குடும்பத்திலும் இப்படி சில உத்திகள் இருக்கும்.

 

இது பற்றி உவே.சா. வேறு எங்கும் சொல்லி இருக்கிறாரா என்று தெரியவில்லை. இப்படி உண்மையிலேயே வேறு ஒரு பாஷையைப் பாண்டவர்கள் விராட தேசத்தில் பேசினார்களா என்றும் தெரியவில்லை.

 

என்னுடைய சம்சயம் (ஐயப்பாடு)!

இப்படி பாண்டவ பாஷை என்று ஒன்று இருந்ததா? அல்லது மஹா வைத்திய நாத அய்யர் கிண்டலாக இப்படிக் பகன்றாரா? என்பதே.

 

வாசகர்களுக்கு ஏதேனும் தெரிந்தால் எழுதுங்கள்.

-சுபம்-

 

மஹா வைத்திய நாத அய்யரின் தமிழ் அறிவு (Post No.4048)

Written by London Swaminathan
Date: 3 July 2017
Time uploaded in London-22-42
Post No. 4048

 
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

மஹாவைத்திய நாத அய்யர் பெரிய சங்கீத மேதை. அவருடைய சங்கீத அறிவுக்கு யாரும் ‘சர்ட்டிபிகேட்’ கொடுக்க வேண்டாம். ஆனால் அவருடைய தமிழ் அறிவு மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களாலும் பாராட்டப்பட்டத்தை உ.வே சாமிநாத அய்யர் எழுதும்போது அவருக்கு இரட்டைப் பட்டம் கிடைத்தது போலாகும்.

 

தமிழறிஞர் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள் கையில் திருக்குற்றாலப் புராணத்தின் அச்சுப் பிரதி ஒன்று கிடைத்தவுடன் ஒவ்வொரு பாடலாகப் படித்து பொருள் சொல்லிக்கொண்டே வந்தார். அப்பொழுது மஹா வைத்யநாத அய்யரும் இருந்தார். அவரும் தமக்குத் தோன்றியதை சொல்லிக்கொண்டு வந்தார். அதில் சண்டிகேசுவர வணக்கம் பற்றிய பாடல் வந்தது

 

தான் பிறந்த தந்தையையும் இனிப்பிறக்கும் நிந்தையையும் தடிந்து சேயென்

றான்பிறங்கு மழவிடைமே லொருவரழைத்திடவிருவர் அயிர்ப்பவேகிக்

கான்பொலிதா ரரிபிரமா தியர்க்குமெய்தா விருக்கையெய்திக்கடவுட்சேடம்

வான்புலவர் பெறாப்பேறு பெற்றவனை நற்றவனை வழுத்தல் செய்வாம்

 

என்னும் செய்யுளில் “சேயென்று ஒருவர் அழைத்திட இருவர் அயிர்ப்பவேகி” என்ற பகுதியில் இருவர் என்பது யார்? என்று விளங்கவில்லை; உடனிருந்தவர்களும் யோசித்தார்கள்; சிலர் பிரம்மா-விஷ்ணு என்றனர். ஆனால் அது பொருத்தமாக இல்லை. அப்பொழுது மஹா   வைத்யநாதய்யர், விநாயகர், சுப்பிரமணியர் என்று பொருள் சொல்லலாமோ என்றா ர் அது அந்த இடத்திற்கு மிகப் பொருத்தமாக இருந்தவுடன் பிள்ளையவர்களும் அதை ஆமோதித்தார்.

 

ஐயா, நீங்கள் சொன்னதுதான் நன்றாக இருக்கிறது. உங்களுடைய ஈஸ்வர பக்தியே இவ்வாறு தோன்றச் செய்தது என்றார். அவருடைய தமிழறிவை மஹாவித்துவானே கொண்டாடிவிட்டார்கள் என்றால் வேறு புதிதாக என்ன சொல்ல வேண்டும் என்று கேட்கிறார் உ.வே.சா.

 

மஹா வைத்தியநாதரும் அவருடைய தமையனாரும் சிலேடையாகப் பேசுவதில் வல்லவர்கள்

மேலகரம் சுப்பிரமணிய தேசிகர் தென்னாட்டு யாத்திரை சென்றபோது இருவரும் உடன் சென்றனர். கம்பனேரி புதுக்குடி என்ற இடத்தில்  அவர்கள் இருவர் மற்றும் உ.வே.சா. ஆகிய மூவரும் அணிந்திருந்த ஏறுமுக ருத்திராட்சக் கண்டியில் இருந்த தங்க முலாம் கொடுத்த வெள்ளி வில்லைகளை அகற்றிவிட்டு தங்க வில்லைகளைப் போடும்படி தேசிகர்  செய்வித்தனர்.  அப்பொழுது இராமஸ்வாமி அய்யர், “வெள்ளிவில்லை தங்க வில்லை” என்று சிலேடை மொழியில் பேசி அனைவரையும் மகிழ்வித்தார்.

 

இதே போல குற்றாலம் சென்றபோது அவருடைய தமையனார் ” எவ்வளவு கல் (மைல்) தாண்டி இருப்போம்? என்றார். மஹா வைத்திய நாதய்யர் “எல்லாங் கல்லுத்தானே” என்றனர்.

 

 

மஹா வைத்திய நாதய்யர் கூறும் சொல் விளக்கங்கள் மிக நன்றாக இருக்கும். தமிழ் மற்றும் சம்ஸ்கிருத நூல்களிலிருந்து மேற்கோள்காட்டி விளக்குவார். அப்பொழுது அவரது ஆராய்ச்சியின் ஆழம் புலப்படும். தேவர-உபநிஷத் கருத்துகளை ஒப்பிட்டுப் பேசுவார்.மங்களம் பாடுகையில் சஹானா ராகத்திலுள்ள நந்திகேசாய மங்களம் என்பதைப் பாடி நிறைவு செய்வார்.

அப்பூதி நாயனார் சரித்திரப் பிரசங்கம் செய்தபோது பெரியபுராணக் கீர்த்தனையில்  திங்களூர் மாடத்திங்களூர் என்ற வரிக்குப் பொருள் சொல்கையில் ‘சந்திரன், மேல் மாடத்தில் ஊர்ந்து செல்லும் ஊர்’ என்று பொருள் சொன்னார். சந்திரன், குருத் துரோகம் செய்த பாவத்தில் சிக்கியதால் அப்பூதி அடிகள் வாழும் ஊரின் மாடத்தில் ஊர்ந்தாதாலாவது பாவம் போகும் என்று “நிலவு சென்ற ஊர்” என்று விளக்கம் தந்தார்.

 

சோமாசிமாறநாயனார் சரித்திரம் சொல்கையில் எப்படியாவது, சுந்தரமூர்த்தி நாயனாரின் உதவிபெற்று  தியாகேசப் பெருமானைத் தன் யாகத்துக்கு வரவழைக்க திட்டமிட்டார். இதற்காக சுந்தரமூர்த்தி நாயனாருக்குப் பிடித்த தூதுவளைக் கீரையை நாள்தோறும் அவர் அனுப்பிவந்தாராம். அதைக்கூறும் கீர்த்தனம் “தூதுவளைக் கீரையைக் காதலாய்க் கொடுத்துவந்தார்” என்று தொடங்குவது. இதைப்  பாடிப் பிரசங்கம் செய்கையில் வைத்திய நாதய்யர், அந்தக் கீரையின் பெயர் ‘தூதுவளை’. உங்களுக்குத் தூதாகச் சென்ற  சிவபெருமானை இணங்கச் செய்யவேண்டும் என்பதால்தான் தூதுவளைக் கீரையை தினமும் சப்ளை செய்தார் போலும் என்றார் வைத்திநாதய்யர்.

 

–சுபம்–

பெரியவாளின் நகைச்சுவை! (Post No.4035)

Written by S NAGARAJAN

 

Date: 29 June 2017

 

Time uploaded in London:-  5-51 am

 

 

Post No.4035

 

 

Pictures are taken from different sources such as Face book, Wikipedia, Newspapers etc; thanks. 

 

 

 

காஞ்சி பெரியவா மஹிமை

 

பெரியவாளின் நகைச்சுவை!

 

ச.நாகராஜன்

 

காஞ்சி மஹா பெரியவா அத்வைத ஞானி. என்றாலும் கூட லௌகிக உலகத்திற்கு அவர் நாசுக்காக சொல்ல வேண்டியதைச் சொல்லுவார்.

 

பி.நாராயண மாமா பகிர்ந்து கொண்ட சம்பவம் இது:

ஒரு முறை உடல் பருமனான ஒரு குண்டு மாமி பெரியவாளை தரிசிக்க வந்தார்.

 

அவரால் நமஸ்காரம் பண்ணக் கூட முடியவில்லை. அவ்வளவு குண்டான மாமி.

 

பக்தி இருந்தாலும் நமஸ்காரம் பண்ண உடல் வாகு இடம் தராததால் ஒரு வித சங்கடம் கலந்த குழப்பத்தில் அவர் ஒரு ஓரமாக கூப்பிய கரங்களுடன் நின்று கொண்டிருந்தார்.

பின்னர் பெரியவாளை அணுகினார்.

 

“எனக்கு டயபடீஸ் (Diabetes) இருக்கிறது.டாக்டர் எடையைக் குறைக்க வேண்டும் என்று சொல்லி விட்டார். அதற்காக தினமும் ஒரு மணி நேரம் நான் நடக்க வேண்டும் என்று அவர் சொல்கிறார். ஆனால் என்னாலோ ஒரு பத்து நிமிடம் கூட நடக்க முடியவில்லை.” என்று கூறிய அவர், “பெரியவாள் தான் எனக்கு ஒரு சுலபமான வழியைக் காண்பிக்க வேண்டும்” என்று விண்ணப்பித்தார்.

“இந்த டாக்டர்கள் எல்லாம் ஒரே மாதிரி தான். மெடிகல் புஸ்தகங்களில் இருப்பதை அப்படியே திருப்பித் திருப்பிச் சொலவதே அவர்களின் வழக்கமாக ஆகி விட்டது. பிராக்டிகலாக அவர்கள் ஒரு விஷயத்தை அணுக மாட்டேன் என்கிறார்கள்” என்று ஆரம்பித்தார் பெரியவாள்.

 

குண்டு மாமியின் முகம் விகசித்தது.பெரியவாள் ஏதோ ஒரு சுலபமான வழியைச் சொல்லப் போகிறார் என்று அவர் எதிர்பார்த்தார்.

 

“ஒருவருக்கு வியாதி இல்லாத ஆரோக்கியமான வாழ்வு வேண்டுமென்றால் பகவானின் அனுக்ரஹம் வேண்டும்.”

பெரியவாளின் பேச்சை உன்னிப்பாகக் கவனிக்கலானார் அந்த மாமி.

 

“ உன் ஆத்துக்குப் பக்கத்தில் ஏதேனும் கோவில் இருக்கா?” – பெரியவாள் கேட்டார்.

 

“இருக்கிறது. பெரிய சிவன் கோவில் இருக்கிறது.” – மாமி பதில் சொன்னார்.

 

“நல்லதாப் போச்சு. அங்கு தினமும் காலையும் மாலையும் ஆறு ஆறு பிரத்க்ஷிணம் பண்ணு. துடைப்பக்கட்டையால் ஒரு நூறு அடி மட்டும் கோவிலை சுத்தம் செய்.”

 

பெண்மணிக்குச் சந்தோஷம் தாங்கவில்லை. பெரியவாளின் பிரசாதத்துடன் வீட்டிற்குக் கிளம்பினார்.

 

பெரியவாளின் பக்கத்தில் நின்று கொண்டிருந்த பக்தர் ஒருவருக்கு அடக்க முடியாத சிரிப்பு.

 

அவரைப் பார்த்த் பெரியவாள்,”என்ன, நான் ஏதேனும் தப்பா சொல்லிட்டேனா?” என்று கேட்டார்.

 

“இல்லை பெரிய்வா! டாக்டர் நடைப் பயிற்சி – வாக்கிங் போ என்று சொன்னார். ஆனால் பெரிய்வா பிரதக்ஷிணம்னு பிரஸ்கிரைப் (prescribe) பண்ணேள்.” என்றார் அவர்.

 

“ஓ! மருந்தாக இரண்டு பேரும் பிரஸ்கிரைப் (Prescribe) பண்ணது அத்வைதம் தான். ஆனால் பேர் தான் த்வைதம் என்கிறாயா?”

என்றார்  பெரியவாள்.

 

அவரது நுட்பமான நகைச்சுவையை அனைவரும் ரசித்தனர்.

***                                                        நன்றி திலிப் அக்டோபர்/டிச்மப்ர் 2016 இதழ்

ராக்பெல்லரும் ராமகிருஷ்ண பரமஹம்சரும் (Post No.4029)

Written by London Swaminathan
Date: 27 June 2017
Time uploaded in London- 7-19 am
Post No. 4029
Pictures are taken from various sources such as Face book, Wikipedia and newspapers; thanks.

 

 

உலகின் மிகப் பெரிய பணக்கார குடும்பங்களில் ஒன்று ராக்பெல்லர் குடும்பம். எண்ணெய், எரி வாயு ஆகிய இரண்டு  தொழில்களிலும் கோடிக் கணக்கில் சம்பாதிப்பவர்கள். ஒரு முறை ஒரு அமெரிக்க பத்திரிக்கை  நிருபர் அவரிடம் கேள்வி கேட்டார்.

 

மிஸ்டர் ராக்பெல்லர், பில்லியன் டாலர் கணக்கில் சம்பாதிக்கிறீர்கள். இன்னும் எவ்வளவு சம்பாதிக்கப் போகிறீர்கள்? உங்கள் நோக்கம் என்ன? என்று கேட்டார்.

 

ராக்பெல்லர் சிறிதும் தயங்கவில்லை; தனது கை விரல்களை ஒரு அங்குல இடைவெளிக்கு ( கட்டை விரல் கீழே, மற்ற நான்கு விரல்களும் மேலே) விரித்துக்கொண்டு இன்னும் கொஞ்சம்தான் என்றார். எவ்வளவு பொருள் பொதிந்த வாசகம்; எவ்வளவு அர்த்த புஷ்டியான வாக்கியம்! அக்ஷர லக்ஷம் பெறும்.

 

ஆசைக்கு அளவே இல்லை என்பதை சிறு விரல்களால் காட்டி விட்டார். அலை ஓய்ந்து சமுத்திர ஸ்நானம் செய்தவனும் இல்லை; போதும் இனிமேல், எனக்கு வேண்டாம் என்று சொல்லும் பணக்காரனும் இல்லை.

 

ஆர். எஸ்.எஸ் தலைவர் குருஜி மாதவ சதாசிவ கோல்வல்கர் மதுரை முகாம் ஒன்றில் பேசுகையில் கூறினார்; ஆசையே கூடாது; எல்லாம் பொது மக்களுடையது என்பதை உணர்த்தும் முகத்தான் நம் முன்னோர்கள் யாகத்தில் நெய்யை விடும் போது “இதம் ந மம” (இது என்னுடையது அல்ல) என்று சொல்லி விடுவர். அது மட்டுமல்ல. ஆசைத் தீயை அணைக்க முடியாது என்பதையும் இந்த யாக யக்ஞங்கள் உணர்த்தும். எப்படி நெய்யை  விட விட அக்னி சுவாலை விட்டு எரியுமோ அதே போல ஆசைக்குத் தீனி போடப் போட, ஆசைத்தீயும் வளரும் என்றார்.

ராம கிருஷ்ண பரமஹம்சர் இதை ஏழு ஜாடி அம்பட்டன் கதையில் இன்னும் அழகாக விளக்குகிறார். மஹாத்மா காந்தியும் போதும் என்ற எண்ணம் வளர வேண்டும் ;எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும் என்றார். தமிழர்களோ ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே “போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து” என்று சொல்லி வைத்தனர்.

நான் முன்னரே எழுதிய ஏழு ஜாடி அம்பட்டன் கதையைப் படிக்கவில்லையானால் இதோ படியுங்கள்:–

ராமகிருஷ்ண பரமஹம்சர் சொன்ன பேய்க்கதையை வள்ளுவன் குறள் 565-ல் சொன்னதை 20 ஆண்டுகளுக்கு முன் லண்டனில் இருந்து வந்த ‘’மேகம்’’ பத்திரிக்கையில் எழுதினேன்.

ஏற்கனவே எழுதிவிட்டதால் பேய்க் கதையை மிகவும் சுருக்கமாகப் பார்போம்:

‘’ராஜாவுக்கு முடிவெட்டும் ஒரு நாவிதன் காட்டு வழியாக வந்தான். மரத்தின் மீதிருந்த பிரம்ம ராக்ஷசன் (பேய்), உனக்கு ஏழு ஜாடி தங்கம் வேண்டுமா? என்று கேட்டது. யாருக்குதான் ஆசை இருக்காது? நாவிதனும் வேண்டும் என்று சொல்லவே ஏழு ஜாடி தங்கம் கிடைத்தது. ஆனால் ஒரே ஒரு குறை! ஒரு ஜாடியில் மட்டும் தங்கம் கொஞ்சம் குறைவாக இருந்தது. அதை எப்படியாவது நிரப்பவேண்டும் என்ற ஆசை வந்தது. உழைத்து உழைத்து ஓடாகிப் போய் எத்தனை போட்டாலுல் ஜாடி நிரம்பவே இல்லை.

ராஜாவுக்கு முடி வெட்டப் போகும் போதெல்லாம் மகிழ்ச்சியாக அவருடன் பேசிவிட்டு கூடுதலாகப் பணத்துடன் திரும்புவது அவனது வாடிக்கை. ஆனால் ஏழு ஜாடி தங்கம் வந்த பின் அந்த மகிழ்ச்சி எல்லாம் மாயமாய்ப் பறந்தோடி விட்டது. முகம் வாடியது, உடலும் மெலிந்தது. இவனது நடத்தையில் மாற்றம் வந்தது ராஜாவுக்கும் தெரிந்தது. எவ்வளவோ கேட்டுப் பார்த்தார். ஒரு வேளை நாடே சீர் கெட்டுப் போய்விட்டதோ என்று ராஜாவை வேறு வகை பயம் பிடித்துக்கொண்டது.. இவன் எவ்வளவு கேட்டும் சொல்லாமல் எப்போது பார்த்தாலும், கூடக் காசு வேண்டும் என்று சொன்னவுடன், ஒரு நாள் ராஜாவுக்குக் கோபம் வந்துவிட்டது, ‘’ஏ, சனியனே, என்ன? எங்கேயாவது ஏழு ஜாடித் தங்கத்தை எடுத்துவந்து விட்டாயா?’’ இப்படிப் பணத்துக்காக பேயாகப் பறக்கிறியே!’’ என்று திட்டினார்.

 

நாவிதனுக்குத் தூக்கிவாரிப் போட்டது, ‘’ராஜா, மன்னித்துவிடுங்கள், புதையல் கிடைத்ததை உங்களிடம் சொல்லவில்லை. மன்னித்துவிடுங்கள். வீட்டுக்கு ஓடிப்போய் கொண்டுவந்து 7 ஜாடி தங்கத்தையும் ஒப்படைத்துவிடுகிறேன் என்றான் நாவிதன். ராஜாவோ, சிரித்துக் கொண்டே, ‘’அந்த ஏழு ஜாடி தங்கத்தை இங்கே கொண்டுவந்து விடாதே. ஓடிப்போய் மரத்துக்கு அடியில் வைத்துவிட்டுத் திரும்பிப் பார்க்காமல் வந்து விடு’’ என்றார்.

நிறையாத ஏழாவது ஜாடி என்பது மனிதனின் பேராசையைக் குறிக்கும். அது எப்போதுமே நிறையாதது. அதுதான் வள்ளுவர் சொன்ன ‘பேய் காத்த செல்வம்’. ராமகிருஷ்ண பரமஹம்சரும் சொன்ன இக்கதை, நாடு முழுதும் நிலவிய கதை. அதைத் தமிழ்நாட்டோரும் அறிந்திருந்தனர். வள்ளுவன் இதை

‘’அருஞ்செவ்வி இன்னாமுகத்தான் பெருஞ்செல்வம்

பேஎய்கண் டன்னது உடைத்து’’ (குறள் 565)—என்றார்.

பொருள்: மக்களால் எளிதில் காண முடியாத, கோபம் கொண்ட மன்னனிடம் இருக்கும் செல்வம், பேய் காத்த செல்வம் போலப் பயன்படாது.

ஆசைத் தீயை அணைப்போம்; அமைதியாக, இன்பமாக வாழ்வோம்.

–subham–

 

The above story is from my old post —வள்ளுவன் சொன்ன சுவையான கதைகள்; posted on 18 July 2012

Tiruvalluvar statue in London | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/tiruvalluvar-statue-in-london/

 

மரத்தின் மீதிருந்த பிரம்ம ராக்ஷசன் (பேய்), உனக்கு ஏழு ஜாடிதங்கம் வேண்டுமா? என்று கேட்டது. யாருக்குதான் ஆசை இருக்காது?

 

இதம் ந மம | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/இதம்-ந-மம/

 

31 Oct 2016 – இந்த,” இதம் ந மம” ( என்னுடையது அல்ல) என்பது புறநானூற்றில் கடலுள் மாய்ந்த இளம் பெருவழுதி என்ற மன்னர் பாடிய பாட்டிலும் …

 

 

–subham–