WRITTEN BY S NAGARAJAN
Date: 8 SEPTEMBER 2018
Time uploaded in London – 6-58 AM (British Summer Time)
Post No. 5403
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.
ச.நாகராஜன்
செம்பைப் பொன்னாக்கி அனைவருக்கும் தந்த கொங்கண சித்தர்! (Post No.5403)
செம்பைப் பொன்னாக்கும் ரஸவாதக் கலையில் தேர்ந்தவர்கள் சித்தர்கள்.கருணை பெருக ஏழைகளுக்கும் தகுந்தவர்களுக்கும் செம்பைப் பொன்னாக்கித் தருவது அவர்களின் வழக்கம். இப்படிப்பட்ட சித்தர்களுள் குறிப்பிடத்தகுந்த பெரிய சித்தர் கொங்கண சித்தர்.
இவர் கொங்கு மண்டலத்தில் உள்ள ஊதியூர் மலையில் வசித்து வந்தார்.
இவரைப் பற்றி கொங்கு மண்டல சதகம் 37ஆம் பாடலில் சிறப்பித்துக் கூறுகிறது:
தோற்றிய செம்பு தராவீயம் பித்தளை சூழ்பச்சிலைச்
சாற்றுடனாக ரசங்கந் தகமிட்டுத் தந்திரமாய்
தேற்றுந் தவம்பெற்ற கொங்கணச் சித்தர்முன் செம்பொன்செய்து
மாற்றுரை கண்டது பொன்னூர்தி யூர்கொங்கு மண்டலமே
இதன் பொருள் :- செம்பு,பித்தளை முதலிய உலோகங்களுடன் பச்சிலைச் சாறு, ரச கந்தகம் முதலியன சேர்த்துப் பொன்னாக அதை மாற்றிக் காணும் கொங்கண சித்தர் வசிக்கும் ஊதியூர் மலையும் கொங்கு மண்டலத்தில் உள்ளதே ஆகும்.
இவர் பற்றிய வரலாறு ஒன்று உண்டு.
மகதநாட்டு மன்னனுக்கு ஒரு ஆண் மகவு பிறந்தது. அதைப் பார்த்த சுராநந்த முனிவர் என்பவர் அதை நீடித்து வாழ்வாயாக என்று ஆசி கூறிக் காப்பிட்டார்.
சகல கலைகளும் கற்ற அந்த அரசகுமாரன் தேச சஞ்சாரத்தால் ஞானத்தைப் பெறலாமென்று எண்ணினான். அதைத் தன் தந்தைக்கு அவன் தெரிவிக்க உரிய பரிவாரங்களோடு மகனை அனுப்பி வைத்தார் தந்தை. பல ஊர்களையும் சென்றடைந்த பின் ஆதியூருக்கு வந்தான் அரசகுமாரன். அங்கு சுராநந்த முனிவர் தோன்றி அவனுக்கு முக்கால அடைவு உணர்வித்து ஆசி அருளினார்.
இந்த கொங்கண ராஜன் மேல் நாட்டு யாத்திரையாகக் கிளம்பி பல தலங்களையும் தரிசித்து தென் கரை நாட்டில் கொங்கணேசரைத் தரிசித்து அங்கே தங்கி இருந்தான். ஒரு நாள் புன்னாக மர நிழலிலே சிவனைத் தரிசித்து உள்ளமுருகுப் பூசிக்கும் காலத்தில் இறைவன் குருவடிவாகத் தோன்றி அஷ்ட மா சித்தியையும் சிவ யோகத்தையும் தெளிவாக உபதேசித்து அருளினார்.
கொங்கணர் தாமிர முதலியவற்றை பொன்னாக மாற்றும் சித்தியைப் பெற்றதால் விரும்பினோருக்கு அப்படிப் பொன்னாக மாற்றிக் கொடுத்து வந்தார். ஒரு சமயம் ஆகாயத்தில் பறந்த கொக்கு ஒன்று அவர் மீது எச்சமிட அதைக் கொங்கணர் விழித்துப் பார்க்கவே அது சாம்பலானது.
கொங்கணருக்கு இன்னொரு சித்தரான கோரக்கநாதரின் நட்பும் உண்டானது.
அப்பிரமேய தல புராணம் கூறும் செய்யுள் இது:-
பாத பத்திரம் பற்பல மூலி கொண்
டூது கற்புட முன்வலி யெய்திய
சூத வேதைசிந் தூரத் துகளினால்
வாத சித்தி கனகம் வழங்கினான்
தென்கரை நாட்டில் உள்ள ஊதியூர் சிவபெருமான் கொங்கணேசர் என்ற திருநாமம் கொண்டவர். இங்கு சிவபிரானின் அநுக்கிரகம் பெற்று வசித்தலால் இறைவன் திரு நாமமான கொங்கணர் என்ற பெயரைப் பெற்று வாழ்ந்து வந்தார் இந்த சித்தர்.
இராசிபுர நாட்டிலும் கொங்கண சித்தர் மலை, கொங்கண சித்தர் ஆலயம் ஆகியவை உள்ளன.
கொங்கண சித்தர் அருளிச் செய்த நூல்களாக நம்மிடையே இன்று பஞ்சபட்சி, வாதம், வைத்தியம் ஆகிய நூல்கள் உள்ளன.
கொங்கணகிரியில் அருணகிரிநாதர் அருளிச் செய்த திருப்புகழ் ஒன்று உண்டு:
ஐங்கரனை யொத்தமன மைம்புலம கற்றிவள
ரந்திபக லற்றநிலை வருள்வாயே
அம்புவித னக்குள்வளர் செந்தமிழ்வழுத்தியுனை
அன்பொடுது திக்கமன மருள்வாயே
தங்கியத வத்துணர்வு தந்தடிமை முத்தி பெற
சந்திரவெ ளிக்குவழி யருள்வாயே
தண்டிகைக னப்பவுசு எண்டிசைம திக்கவளர்
சம்ப்ரமவி தத்துடனே வருள்வாயே
மங்கையர்சு கத்தைவெகு இங்கிதமெ னுற்றமன
முன்றனைநி னைத்தமைய அருள்வாயே
மண்டலிக ரப்பகலும் வந்தசுப ரக்ஷைபுரி
வந்தனைய புந்தியினை யருள்வாயே
கொங்கிலுயிர் பெற்றுவளர் தென்கரையி லப்பரருள்
கொண்டுஉட லுற்றபொரு ளருள்வாயே
குஞ்சரமு கற்கிளைய கந்தனென வெற்றிபெறு
கொங்கணகி ரிக்குள்வள்ர் பெருமாளே
அருமையான அர்த்தத்தைக் கொண்ட இந்த அரிய திருப்புகழின் இறுதியில்,
கொங்கிலுயிர் பெற்றுவளர் தென்கரையி லப்பரருள்
கொண்டுஉட லுற்றபொரு ளருள்வாயே
குஞ்சரமு கற்கிளைய கந்தனென வெற்றிபெறு
கொங்கணகி ரிக்குள்வள்ர் பெருமாளே
என்று வரும் வரிகள் கொங்கண கிரியின் பெருமையைக் கூறுவதைக் காணலாம்.
***
You must be logged in to post a comment.