Research article written by London Swaminathan
Date: 26 September 2017
Time uploaded in London- 7-18 am
Post No. 4244
Pictures are taken from various sources such as google, Facebook friends, newspapers and Wikipedia for non-commercial use; thanks.
(இது பற்றி சின்னாட்களுக்கு முன் நான் ஆங்கிலத்தில் எழுதி, இங்கு வெளியிட்ட ஆராய்ச்சிக் கட்டுரையில், வேத மந்திரங்களின் எண்களைக் குறிப்பிட்டதால், இங்கு அவைகளை எழுதாமல் விஷயத்தை மட்டும் சுருக்கி வரைகிறேன். முழு விவரம் வேண்டுவோர் எனது ஆங்கில கட்டுரையைப் பார்க்கவும்; படிக்கவும்.)
உலகிலேயே பழமையான நூல் ரிக் வேதம்; அண்மைக்கால சரஸ்வதி நதி தீர ஆராய்ச்சியானது இதை மொஹஞ்சதாரோ, ஹரப்பா நாகரீகத்துக்கும் முந்தையது என்று காட்டிவிட்டது; அதை நாஸா விண்கலப் புகைப்படமும் உறுதி செய்தது; இதற்கு முன்னரே துருக்கியில் வேதக் கடவுளர் பெயர் பொறித்த க்யூனிபார்ம் களிமண் கல்வெட்டு கிடைத்ததால், வேத மந்திரம் கி.மு.1380 ஆம் அண்டிலேயே துருக்கி-சிரியா சென்று விட்டதை தொல் பொருட் துறை உறுதி செய்தது. அதற்கு முன்னரே கார்த்திகை நட்சத்திர ஆராய்ச்சியானது, வேதங்கள் கி.மு 4500 க்கு முன் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்று பால கங்காதர திலகரும், ஜெர்மன் அறிஞர் ஹெர்மன் ஜாகோபியும் நிரூபித்தனர்.
இவ்வளவு பழமை பொருந்திய ரிக் வேதத்தில், வியாச மஹரிஷியால் கி.மு 3100-க்கு முன் நான்காகப் பிரிக்கப்பட்ட வேதத்தில்,தங்க நகைகள், தங்கக் காசு பற்றி உள்ள விஷயங்கள் இந்தியாதான் உலகிலேயே பணக்கார நாடு என்பதையும், வேத கால மக்கள் செல்வச் செழிப்பிலும் நாகரீ கத்திலும் வானத்தைத் தொட்டுவிட்டனர் என்பதையும் காட்டுகிறது.
இது மாக்ஸ்முல்லர் வகையறாக்களுக்கும் கால்டுவெல் தொகையறாக்களுக்கும் செமை அடி கொடுக்கும்; ஏனெனில் அவர்கள் “வேத கால மக்கள் நாடோடிகள், மாடு மேய்த்துக் கொண்டு இந்தியாவுக்குள் புகுந்த நாடோடிகள், எழுத்தறிவு இல்லாதவர்கள், பெரும்பாலும் வேதத்தில் சிறுபிள்ளைத்தனமான (mostly childish) பாடல்கலைளையே காண இயலும்” என்றெல்லாம் உளறிக்கொட்டி கிளறி மூடியிருந்தார்கள்; தாங்கள் வாங்கிய கூலிக் காசுக்கு ஏற்ப தாளம் போட்டார்கள். மாறடித்தார்கள்; ஆனால் வேத கால இலக்கியத்தில் வரும் தங்கக் காசு, தங்கத்துக்கான சொற்கள், நிஷ்கா என்னும் உலகின் முதல் தங்க நாணயம் ஆகியவற்றைப் படிப்போர் வியந்து மகிழ்வார்கள்; அவர்கள் தட்சிணையா க வாங்கிய தங்க நாணயங்களைப் பார்ப்போருக்கு அடக் கடவுளே இவ்வளவு செழிப்புள்ள காலத்தில் நாமும் வாழ மாட்டோமா என்று சிந்திக்க வைக்கும்.
சேர மன்னர்கள் பிராமணப் புலவர்களுக்கு தங்க நாணயங்களை மழை போலப் பொழிந்த பாடல்கள் சங்க இலக்கியத்தின் 18 நூல்களில் ஒன்றான பதிற்றுப் பத்தில் உள்ளன. செங்குட்டுவன் தனது உடல் எடையான 50 கிலோவுக்கு நிகரான தங்கத்தை துலாபாரம் மூலம் மாடல மறையோன் என்ற பிராமணனுக்கு வழங்கிய செய்தி ‘நெஞ்சை அள்ளும்’ சிலப்பதிகார காவியத்தில் வருகிறது. பராசரன் என்ற பார்ப்பனன், திருத்தங்கலில் வேதம் சொல்லிய ஒரு சிறு பிள்ளையிடம் தனது தங்க நகை மூட்டையைக் கொடுத்துவிட்டுப் போன செய்தியும் சிலம்பில் காணக்கிடக்கிறது. அப்போதாவது, ரோமானிய சாம்ராஜ்யம், கேரளத்துக்குள் தங்க மழை பொழிந்த செய்தி சங்க இலக்கிய நூல்களிலும் ரோமானிய எழுத்தர் நூல்களிலும் உள்ளன. ஆனால் வேத கால மக்களுக்கு எங்கிருந்து தங்கம் கிடைத்தது? அதுவும் வேத கால துதிகளில் இருக்கிறது. நதிப் படுகைகளில் இருந்து அவர்கள் தங்கத்தைச் சலித்து எடுத்து தூய்மைப் படுத்திய செய்தியும் வேதத்தில் உள்ளது.
பிற்காலத்தில் தர்மபுத்திரன், அர்ஜுனன் ஆகியோர் இமய மலையிலுள்ள உத்தரகுருவில் தங்கம் எடுத்தசெய்தி உள்ளது. மெகஸ்தனிசும், ஸ்டிராபோவும் இந்தியாவின் தங்க வளத்தைப் புகழ்கின்றனர். உலகின் முதல் வரலாற்று ஆசிரியர் என்று மேலை நாட்டினர் புகழும் ஹெரடோட்டஸோவெனில் இந்தியாவில் இராட்சத எறும்புகள் பூமிக்கடியில் இருந்து தங்கத்தைக் கொண்டுவந்த்த அதிசயச் செய்தியை எழுதி வைத்துள்ளார். இந்தியா= தங்கம்!!!
தங்கத்துக்கும், தங்க நகைகளுக்கும் வேதத்தில் உள்ள சொற்கள் எல்லோரையும் மலைக்க வைக்கும்:
ஜாத ரூபம், ஹரிதம், ஹிரண்யம், ஸ்வர்ணம், நிஷ்கா, சந்த்ர — இப்படி பல பெயர்கள்!
மேலும் அண்மைக்காலம் வரை நம்மவர்கள் பயன்படுத்திய குந்துமணி எடை (கிருஷ்ணல) வேத கால நூல்களில் உள்ளது. ஆகவே தங்கத்துக்கு எடை போடும் வழக்கமும் அப்போது இருந்ததால் நல்ல தங்கநகைக் கடைகள் இருந்திருக்க வேண்டும்
ரஜத என்ற வெள்ளி பற்றியும் வெள்ளிக் காசுகள் பற்றியும் வேதங்கள் பாடுகின்றன.
உலகிலேயே மிகப் பணக்கார நாடு இந்தியாதான்! இன்றும் உலகிலேயே பணக்கார நாடு இந்தியாதான் என்றும் ஐந்து ஆறு கட்டுரைகளை இதே பிளாக்கில் சில ஆண்டுகளுக்கு முன்னர் ஆதாரங்களுடன் எழுதினேன். இப்போது வேதத்தில் இன்னும் ஒரு வியப்பான செய்தியைக் கண்டேன்.
நான் பழங்கால நாணயங்களை ஆராய்பவன். என்னிடமுள்ள ஆங்கில நூல்கள் அனைத்திலும் முதல் முதலில் உலகில் நாணயங்களை வெளியிட்டவர்கள் கிரேக்கர்கள் என்றும் கி.மு. ஆறாம் நூற்றாண்டு முதலே இவை கிடைகின்றன என்றும் எழுதியுள்ளனர். அந்த நாணயங்களும் மியூசியங்களில் உள்ளன.
நிஷ்கா என்னும் தங்க நாணயம்!
ஆனால் உலகிலேயே முதல் நாணயத்தை வெளியிட்டவர்கள் இந்துக்கள் என்ற செய்தி வேதத்தில் உள்ளது (ஆங்கிலக் கட்டுரையில் பாடல் எண்களைக் கொடுத்துள்ளேன்). அந்த நாணயத்தின் பெயர் நிஷ்கா. இதற்கு இரு பொருள் உண்டு: 1. நாணயம்/ காசு, 2. கழுத்தில் அணியும் ஆபரணம்.
இது உண்மையே; இதில் முரண்பாடு எதுவும் இல்லை; ஆதிகாலத்தில் காசு மலை செய்வது எளிதாக இருந்தது. மேலும் இது அழகானது. இன்றும் கோவில்களிலும் இந்து மாதர்களின் கழுத்திலும் காசு மாலை ஜ்வலிப்பதைக் காணாலாம். ஆக நிஷ்கா என்பது இரு பொருளிலும் வழங்கி இருக்கலாம்.
பிற்கால இலக்கியங்களில் நிஷ்கா என்பது தங்க காசு என்பது எல்லோரும் அறிந்ததே.மேலும் ஒரு பொருளை கரன்ஸி (நாணயம்) என்று அறிய அதனுடன் எண் அளவு இருக்க வேண்டும். அப்படி அஷ்ட புத் என்ற எண்ணுடனும், சதமானம் (100) என்ற எண்ணுடனும் காசுகள் கையாளபட்டுள்ளன. இன்றும் கூட கல்யாணங்களில் பரிசுகளை ஓதிவிடும் போது பிரமாணர்கள் சதமானம் பவது என்ற மந்திரத்தைச் சொல்லி லட்சம் கட்டி வராஹன் என்று மிகைப்படுத்தி பரிசை அளிப்பர் ( மாமா கொடுத்தது, அத்தை கொடுத்தது என்பதால்)
ஆக உலகிலேயே முதல் முதலில் நாணயங்களை வெளியிட்டது வேத கால இந்துக்களே. ஆனால் பெரிய துரதிருஷ்டம்! சிந்து வெளியிலோ, வேத கால புதை பொருள்களிலோ இப்படி ஒரு நாணயம் கூட நமக்குக் கிடைக்கவில்லை. இதற்கு இந்துப் பெண்களின் குணமே காரணம். அடிக்கடி தங்கத்தையும் தங்க நகைகளையும் உருக்கி புதுப் புது டிசைன்களில் நகை செய்து கழுத்தில், காதில், காலில் பூட்டி பெருமை அடித்துக்கொள்வர். குப்தர் காலத்தில் லட்சக் கணக்கில் தங்க நாணயங்கள் அடித்ததால் இன்று பிரிட்டிஷ் மியூசியத்தில் (லண்டன்) அவைகளைக் காண முடிகிறது. நம் ஊரில் கிடைத்தன வெல்லாம், பெண்களின் கழுத்தில் தொங்குகின்றன. ஒரு வேளை பத்மநாப சுவாமி கோவில் போன்ற இடங்களில் பழங்கால நாணயங்கள் இன்னும் இருக்கலாம்.
ஆக உலகிலேயே நிஷ்கா என்னும் தங்க நாணயத்தை வெளியிட்ட பெருமை நம்மையே சாரும்!
தட்சிணையில் தங்க ரதம்!!!
இதைவிட மிக மிக வியப்பான விஷயம் பிராமணர்கள் பெற்ற தங்க தட்சிணையாகும்!
ஆறு வகையான தங்க தட்சிணைகளைப் பட்டியல் இடுகின்றனர்.
யாக யக்ஞங்களில் யாக குண்டங்களை அமைப்பதற்குப் பயன்படும் செங்கற்கள் போல தங்க செங்கற்கள் தட்சிணையாக கொடுக்கப்பட்ட விஷயமும் உளது.
தங்க ஏர் (சீதா) கொண்டு மன்னர்கள் ஆண்டுதோறும் நடத்தும் சடங்கு பற்றியும் உள்ளது இப்படி ஜனகன் உழச்சென்றபோது கிடைத்தவள்தான் சீதாதேவி (ஏர்ப் பெண்)!
சேதி என்னும் மன்னனின் மகனான காசு அளித்த ஆயிரக்கணக்கான பசுமாடுகள் குதிரைகள் ஒட்டககங்கள் பற்றிய செய்தி ரிக் வேதத்தில் எட்டாம் மண்டலத்தில் இருக்கிறது.
கனிதன் என்பவனின் மகனான ப்ருதுஸ்ரவஸ் தங்க ரதமும் ஆயிரக்கணக்கில் பசுமாடுகளும் கொடுத்ததாக வாச அசவ்ய என்ற ரிஷி பாடுகிறார்.
சங்கத்தமிழ் இலக்கியத்தில் பரிசு பெற்ற புலவர்கள் மற்றவர்களை ஆற்றுபடுத்தும்போது கூறும் விஷயங்கள் போல ஒவ்வொரு பிராமணரும் பெற்ற பரிசுகள் (தட்சிணையாக) தான துதிகள் என்ற துதிகளில் வருகிறது. இதில் நம்புவதற்கரிய மிகப் பெரிய எண்ணிக்கையில் பரிசுகள் உள்ளன. வேத கால மக்களின் செல்வச் செழிப்பு அளவிடற்கரியது.
பெண்கள் அணிந்த ஆபரணங்களின் பெயர்களும், தங்க நகைகளுடன் அவர்கள் பவனி வந்த செய்தியும் வேதங்களில் உள்ளன.!
தங்கமோ தங்கம்! அவ்வளவும் சொக்கத் தங்கம்!
TAGS:- முதல் தங்கக் காசு, வேதத்தில், தங்க நகை, தங்கத் தேர்
–சுபம்–
You must be logged in to post a comment.