புலவரின் வேதனை: சிவன் இப்படிச் செய்யாமல் விட்டு விட்டானே!

Pictures of Shiva and Brahma

சம்ஸ்கிருதச் செல்வம்-5

 

புலவரின் வேதனை: சிவன் இப்படிச் செய்யாமல் விட்டு விட்டானே!

 

By ச.நாகராஜன்

 

பொல்லாத வார்த்தைகளில் ஒன்று விதி என்பது! புரிந்து கொள்ள முடியாததும் கூட!

சோக மனத்துடன் வருந்தும் ஒருவனுக்கு ஆறுதல் அளிக்கிறார் ஒரு புலவர் இப்படி:-

 

ஏன் அதிகமாக சிந்திக்கிறாய்?

கிம் சிந்த்தேன பஹுனா?

 

ஏன் அவன் சோக மனத்துடன் வருந்துகிறான்?

கிம் வா சோகேன மனஸி நிஹிதேன?

 

முன் நெற்றியில்  விதியால் என்ன எழுதப்பட்டிருக்கிறதொ அது நிச்சயம் நடக்கும்!

தன்னிஸ்சித்தம் பவிஷ்யதி

   விதினா லிகிதம் லலாடே யத்

 

தீர்க்கமாக விதியைப் பற்றிச் சொல்லி விட்டார் அவர் இப்படி:-

கிம் சிந்த்தேன பஹுனா?

   கிம் வா சோகேன மனஸி நிஹிதேன? I

தன்னிஸ்சித்தம் பவிஷ்யதி

   விதினா லிகிதம் லலாடே யத் II

 

  (லலாடம் – முன் நெற்றி லிகிதம் – எழுதப்பட்டது)

 

ஆனால் இன்னொரு புலவரோ உலகத்தில் நடப்பதை எல்லாம் நன்கு கூர்ந்து கவனிக்கிறார். நல்லவனுக்கு ஏகப்பட்ட சோதனைகள்! தீயவர்களோ கொடி கட்டிப்

பறக்கிறார்கள். செல்வத்தில் புரள்கிறார்கள்.

அனைவரையும் இஷ்டத்திற்கு வாட்டுகிறார்கள். இது சரியா? விதி இப்படி இருக்குமானால் அது சரி இல்லையே! வருகிறது கோபம் அவருக்கு. சிவன் செய்தது சரி இல்லை என்று ஒரே போடாகப் போடுகிறார் சிவன் மேல் ஏன் கோபம்? சிவனுக்கும் விதிக்கும் என்ன சம்பந்தம்?

 

அனுசிதமேவாசரிதம்

     பசுபதினா யத்திதே: சிரச்சின்னம்

சிவன் செய்தது முறையில்லை. பிரம்மாவின் தலையை மட்டும் தான் அவர் அறுத்தெறிந்தார்.

 

சின்னோ ந சாஸ்ய ஹஸ்தோ

    யேனாயம் துர்லிபிம் லிகதி

எந்தக் கையால் மோசமான எழுத்துக்களை (விதியை) அவர் எழுதுகிறாரோ அந்தக் கையை அறுக்கவில்லையே!

 

பாடலை முழுதுமாகப் பார்ப்போம்:-

அனுசிதமேவாசரிதம்

     பசுபதினா யத்திதே: சிரச்சின்னம் I

சின்னோ ந சாஸ்ய ஹஸ்தோ

    யேனாயம் துர்லிபிம் லிகதி II

 

(அனுசிதம் – முறையில்லை; பசுபதி – சிவன் துர்லிபி – மோசமான எழுத்து – அதாவது விதி)

 

பிரம்மாவின் தலையை அறுத்து என்ன பிரயோஜனம்? மோசமான விதியை எழுதும் பிரம்மாவின் கையை அல்லவா சிவன் அறுத்தெறிந்திருக்க வேண்டும்!

 

நாட்டு நடப்பைப் பார்த்தால் கவிஞரின் கோபம் நியாயமானது தான் என்று நமக்கும் அப்படியே தான் தோன்றுகிறது. ஆனால் விஷயம் பற்றி நன்கு ஆய்ந்த கவிஞர் இதற்குச் சமாதானம் கூறுகிறார் இப்படி:-

 

க்ருத கர்மக்ஷயோ நாஸ்தி

   கல்பகோடி ஷதைரபி I

அவஸ்யமேவ போக்தவ்யம்

    க்ருதம் கர்ம சுபாசுபம் II

 

ஒருவன் செய்த கர்மம் அவனை கோடி கல்பம் சென்றாலும் விடாது. அவன் செய்ததற்கான பலனை அனுபவித்தே ஆக வேண்டும். அது நல்ல செயலோ அல்லது கெட்ட செயலோ பலனை அனுபவித்தே ஆக வேண்டும்!

 

க்ருத கர்மம் – ஒருவன் செய்த செயல்களின்

க்ஷயோ நாஸ்தி –விளைவுகள் நாசமடைவதில்லை

அவஸ்யம் ஏவ –நிச்சயமாக

போக்தவ்யம் – அனுபவித்தே ஆக வேண்டும்

கல்ப கோடி ஷதைரபி– நூறு கோடி கல்பம் சென்றாலும் சரி

சுபாசுபம் – நல்ல மற்றும் தீய

க்ருதம் கர்ம – செயல்களைச் செய்ததற்கான பலன்களை அனுபவித்தே தீர வேண்டும்.

 

இப்படி கர்மம் பற்றிய உண்மையை நமக்குக் கூறி நம்மைத் தெளிவு படுத்துகிறார்கள் நம் பெரியோர்!

 

இப்போது நமக்கு மனம் ஆறுதல் அடைகிறது. செய்ததன் விளைவை ஒரு நாள் தீயவன் அனுபவித்தே ஆக வேண்டும் என்ற எண்ணம் நம்மை நல்ல பாதையில் செல்லத் தூண்டுகிறது!

 

*********************

 

அருணகிரிநாதரின் சொற்சிலம்பம்

Photos from Face Book; Thanks.

திருப்புகழ் ஆராய்ச்சிக் கட்டுரை -8

அருணகிரிநாதரின் சொற்சிலம்பம்

திருப்புகழ் என்பது இறைவனின் புகழ் பாடும் துதிப் பாடல்கள்தான். ஆயினும் அதில் தமிழ் கொஞ்சி விளையாடுகிறது. பல இடங்களில் அருணகிரிநாதர் சொற் சிலம்பம் ஆடுகிறார். முருகனை மறந்து விட்டு தமிழின் அழகை ரசிக்கத் துவங்கிவிடுகிறோம். ஏனெனில் ஆழ்வார்கள், நாயன்மார்கள் துவங்கி பாரதி வரை வந்த அடியார்கள் அனைவரும் தமிழையும் தெய்வத்தையும் ஒன்றாகவே கண்டார்கள். இதோ சில எடுத்துக் காட்டுகள்:

மனித்தர் பத்தர் தமக்கு எளியோனே

மதித்த முத்தமிழில் பெரியோனே

என்ற வரியிலிருந்து இது தெளிவாகிறது.

 

காமாரி, தீயாடி, ஆசாரி

விராலிமலை பாடலில் காமாரி, தீயாடி, ஆசாரி என்று சிவ பெருமானைப் பாடுகிறார். ஏதோ திட்டுவது போல இருக்கும்.

கரி புராரி காமாரி திரிபுராரி தீயாடி

கயிலையாளி காபாலி            கழியோனி

கரவு தாசன் ஆசாரி பரசு பாணி பானாளி

கணமொடாடி காயோகி           சிவயோகி

என்று பாடுகிறார். இதன் பொருள்: யானைத் தோலை உரித்து அணிந்தவர், காமனையும் திரிபுரங்களையும் எரித்தவர், சுடலையில் ஆடுபவர், கயிலை மலையை ஆளுபவர், கபாலத்தைக் கையில் ஏந்தியவர், மூங்கில் கழியின் கீழ் பிறந்தவர்,  கையில் தீயை ஏந்தி ஆடும் ஆசார்யர் (குரு), பரசு எனும் ஆயுதத்தை உடையவர், நள்ளிரவில் ஆடுபவர், பூத கணங்களுடன் ஆடுபவர், காப்பாற்றும் யோகி, சிவயோகி என்று சிவ பெருமானைப் புகழ்கிறார்.

சலா சலா, சிலீர் சிலீர், அளா அளா, சுமா சுமா

திருக்கழுக்குன்ற திருப்புகழில் தனா தனா, பளீர் பளீர், கலீர் கலீர், குகூ குகூ, சலா சலா, சிலீர் சிலீர், அளா அளா, சுமா சுமா, எழா எழா, குகா குகா, செவேல் செவேல் என்று ஓசை நயத்துடனும் பொருள் நயத்துடனும் பாடி இருக்கிறார். இதோ சில வரிகள் மட்டும்:

ஓலமிட்ட சுரும்பு தனாதனாவென

வேசிரத்தில் விழுங்கை பளீர் பளீரென

வோசை பெற்ற சிலம்பு கலீர் கலீரென             விரக லீலை

ஓர் மிடற்றில் எழும் புள் குகூ குகூவென…………..

 

பழமுதிர்ச் சோலையில் பாடிய சீர் சிறக்கு மேனி பசேல் பசேல் என

என்ற பாடலும் இதே பாணியில் அமைந்துள்ளது. ஓசை நயத்துடன் அத் திருப்புகழைப் பாடுகையில் நம்மை அறியாமலே உற்சாஅகம் கொப்பளிக்கும்.

 

தகப்பன் சாமி, நடிக்கும் சாமி, ஒழிக்கும் சாமி, பொறுக்கும் சாமி

சிவ பெருமானுக்கே ஓம்காரப் பொருளை உரைத்தவன் ஆதலால் முருகனை தகப்பன் சுவாமி என்பர். ஆனால் அருணகிரி சாமி என்ற சொல்லை வைத்துக் கொண்டு எப்படிச் சிலம்பம் ஆடுகிறார் என்று பாருங்கள்:

புவிக்குன் பாத—— என்று துவங்கும் பாடலில் சாமி என்ற சொல்லை வைத்துக் கொண்டு சாமி ஆடி விடுகிறார்!!

சிவத்தின் சாமி மயில் மிசை நடிக்குஞ் சாமி எமதுளம்

சிறக்குஞ் சாமி சொருப மீது ஒளி காணச்

செழிக்குஞ் சாமி பிறவியை ஒழிக்கும் சாமி பவமதை

தெறிக்குஞ் சாமி முனிவர்களிடம் மேவும்

தவத்தின் சாமி புரி பிழை பொறுக்கும் சாமி குடிநிலை

தறிக்கும் சாமி அசுரர்கள் பொடியாகச்

சதைக்கும் சாமி எமை பணிவிதிக்கும் சாமி சரவண

தகப்பன் சாமி எனவரு பெருமாளே

சாமியையே கிண்டல் செய்வது போல சொற் பிரயோகம் இருந்தாலும் ஒவ்வொரு சொல்லும் ஆழந்த பொருள் உடையது.

எண் ஜாலம்

எண்களை வைத்துக் கொண்டு ஜால வித்தை காட்டும் திருப்புகழ் இதோ:

சுருதி மறைகள் இருநாலு திசையில் அதிபர் முனிவோர்கள்

துகளில் இருடி எழுபேர்கள்             சுடர் மூவர்

சொலவில் முடிவில்  முகியாத பகுதி புருடர் நவநாதர்

தொலைவிலுடு வினுலகோர்கள் மறையோர்கள்;

அரிய சமய மொருகோடி அமரர் சரணர் சத கோடி

அரியும் அயனும் ஒருகோடி            இவர்கூடி

அறிய  அறிய அறியாத அடிகளறிய  அடியேனும்

அறிவு ளறியு மறிவூர அருள்வாயே

 

2,4,7,3,9 என்று சொல்லிவிட்டு கோடி, சத கோடி என்று அடுக்கியதோடு அறிய என்ற சொலை வைத்தும் சிலம்பம் ஆடுகிறார்! விஷ்ணுவும் பிரம்மனும் அறிய முயன்றும் அறியாத உன்னை எனது அறிவுக்குள் அறியும் அளவுக்கு அறிவு ஊர அருளவேண்டும் என்பது இதன் பொருள்.

 

அணிகலம் எது?

ஆலுக்கு அணிகலம் வெண்தலை மாலை

மாலுக்கு அணிகலம் தண் அம் துழாய், மயில் ஏறும் ஐயன்

காலுக்கு அணிகலம்  வானோர் முடியும் கடம்பும் கையில்

வேலுக்கு அணிகலம்  வேலையும் சூரனும், மேருவுமே

பொருள்: ஆலமர்ச் செல்வன் சிவனுக்கு அணி மண்டைஓட்டு மாலை, திருமாலுக்கு அணி துளசி மாலை, மயில் ஏறும் முருகன் காலுக்கு, தேவர்களின் முடியும் கடம்பும் அணிகலம். கையில் உள்ள வேலுக்கு அணி அதன் மூலம் துணிக்கப்பட்ட சூரனும் மலையும் கடலும் ஆகும்.

 

காணி நிலம் வேண்டும் பராசக்தி…….

பாரதி பாடிய பாடலில் காணி நிலம், மாளிகை, கிணறு, 10, 12 தென்னை மரங்கள் நிலவொளி, குயில் ஓசை ஆகியவற்றைக் கேட்டுவிட்டு அமைதியை வேண்டுகிறார். அதற்கு முன்னரே அதே பாணியில் அருணகிரி பாடிவிட்டார். பாரதியே இதைப் படித்துதான் காணி நிலம் வேண்டும் பாட்டை எழுதினாரோ !

உடுக்கத் துகில் வேணும் நீள் பசி

அவிக்கக் கன பானம் வேணும் நல்

ஒளிக்குப் புனலாடை வேணும் மெய்யுறு நோயை

ஒழிக்கப் பரிகாரம் வேணும் உள்

இருக்கச் சிறு நாரி வேணும் ஓர் படுக்கத்

தனி வீடு வேணும்……………… என்று அடுக்கிக் கொண்டே போகிறார்.

(நாரி=மனைவி)

 

உருகவில்லை, அறியவில்லை, விழையவில்லை

தீர்த்தமலையில் பாடிய பாடலில் என்ன என்ன செய்யவில்லை என்பதைப் பட்டியல் போடுகிறார்:

பாட்டில் உருகிலை, கேட்டும் உருகிலை,

கூற்று வழி பார்த்தும் உருகிலை

பாட்டை அநுதினம் ஏற்றும் அறிகிலை       தினமானம்

பாப்பணியருள் வீட்டை விழைகிலை

நாக்கின் நுனி கொண்டு ஏத்த அறிகிலை என்று பாடுகிறார்.

 

முந்தைய ஏழு திருப்புகழ் ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் கண்டு களிக்க.

swami_48@yahoo.com

சங்கீத ரகசியம்: இளமையில் கல்

Picture: My Friend Violinist Nagaraju’s son

சங்கீத ரகசியம்: இளமையில் கல்

 

தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற வேண்டுமா? சங்கீதம் கற்றுக் கொள்ளுங்கள்.

ஞாபக சக்தி வளர வேண்டுமா? சங்கீதம் கற்றுக் கொள்ளுங்கள்.

வயதான போதும் இளமை திரும்ப வேண்டுமா? சங்கீதம் கற்றுக் கொள்ளுங்கள்.

அதுவும் இளமையில் இசையைக் கற்கவேண்டும்!!!

பிரிட்டனில் இருந்து வெளியாகும் ‘நியூ சை ன்டிஸ்ட்’ New Scientist பத்திரிக்கை ஒரு நல்ல சுவையான செய்தியை வெளியிட்டிருக்கிறது. இதற்கு முன்பாக ‘சைன் டிFபிக் அமெரிக்கன்’, ‘நேச்சர்’ Nature, Scientific American ஆகிய பத்திரிக்கைகளிலும் நியுரோ சை ன்டிஸ்ட்’ பத்திரிக்கைகளிலும் இதே கருத்து வெளியாகி இருக்கிறது.

பார்ப்பனச் சிறுவர்களை ஐந்து வயதிலேயே வேதத்தின் ஒரு ஷாகையயும் வேதத்தின் ஆறு அங்கங்களையும் (ஷட்+ அங்கம்= சடங்கு) கற்க அனுப்பியதால், அவர்கள் பெரிய அறிவாளிகளாக விளங்கினர். நீண்ட ஆயுளுடனும் நல்ல ஞாபக சக்தியுடனும் விளங்கினர். இதே முறையை சங்கீதப் பயிற்சிக்கும் பின்பற்றினர். வேதமும் இசையை அடிப்படையாக உடையது. இரண்டும் பய பக்தி கலந்த, மரியாதை மிக்க குரு குல வாச முறையில் பயிலப் பட்டன.

பள்ளிக்கூடத்தில் சேர வருவோருக்கு கணிதமும் சங்கீதமும் தெரிந்திருக்க வேண்டும் என்று கிரேக்க அறிஞர் பிளாட்டோ வலியுறுத்தினார்.

இசை என்பது காதோடு மட்டும் நிற்பதல்ல. இசையின் நுண்ணலைகள் நம்முள் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும் வல்லமை படைத்ததவை.

முதலில் புதிய செய்தியைப் பார்ப்போம்:

சங்கீதத்தில் புகழ்பெற்ற, திறமைமிக்க 36 பேர்களைத் தேர்ந்தெடுத்தனர். அவர்களில் பாதிப்பேர் ஏழு வயதுக்கு முன்னரே இசையைக் கற்கத் துவங்கினர். மீதி பாதிப்பேர் ஏழு வயதுக்குப் பின்னர் இசையைக் கற்கத் துவங்கினர். எல்லோரையும் எம்.ஆர். ஐ. ஸ்கேன் (Magnetic Resonance Imaging Scan) செய்து பார்த்தனர். ஒரு அதிசயமான உண்மை அம்பலத்துக்கு வந்தது.

மனிதர்களின் மூளையில் இரண்டு பிரிவுகள் உள்ளன. இதை இணைக்கும் வெள்ளைத் திசுவுக்கு கார்ப்பஸ் கல்லோசம் என்று பெயர். நாம் ரேடியோ அல்லது கம்ப்யூட்டர் ஆகியவற்றைப் பிரித்துப் பார்த்தால் பினபக்கத்தில் ஏராளமான இணைப்புகளைப் பார்க்கலாம். அது போல முளையின் இரண்டு பகுதிகளை இணக்கும் பகுதியே கார்பஸ் கல்லோசம். யார் சின்ன வயதிலேயே இசையைக் கற்கச் சென்றார்களோ அவர்களுக்கு இந்தப் பகுதி நன்றாக வளர்ச்சி பெற்று இருக்கிறது. ஏழு வயதுக்குப் பின்னர் பயின்றவர்களுக்கு இசைப் பயிற்சி இல்லாதவர்களின் அளவுக்கு இந்த வெண்ணிறப் பகுதி இருக்கிறது.

இந்த வெண்ணிறப் பகுதியின் வளர்ச்சி எதைக் காட்டுகிறது? இடது கையும் வலது கையும் ஒருங்கிணைந்து செயல்படுவதைக் காட்டுகிறது. சங்கீதம் கற்பவர்கள் ஒரு கருவியைக் கற்கவோ கைகளால் தாளம் போடவோ இது மிகவும் அவசியம்

இதை ஜெர்மனியில் லைப்சிக் நகரில் இருக்கும் மூளை, மனித அறிவு ஆராய்ச்சி நிலையம் வெளியிட்டுள்ளது. இதை கிறிஸ்டோபர் ஸ்டீல்,

( மாக்ஸ் பிளன்க் நிறுவனம் Max Planck Institute for Human Cognitive and Brain Sciences, Leipzig, Germany) அறிவித்தார். இளமையில் சங்கீதம் கற்போர் மற்றவர்களை விஞ்சிவிடுவர் என்பது இந்த ஆய்வின் துணிபு.

நம் முன்னோர்கள் “இளமையில் கல்” என்றும் “ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது” என்றும் சொன்னது எவ்வளவு உண்மை?

****

இசையும் செயல்பாடும்

இதோ இன்னொரு செய்தி:

வெளிநாடுகளில் இருந்து மூன்று பிரபல விஞ்ஞானப் பத்திரிக்கைகள் வருகின்றன.: New Scientist, Nature, Scientific American. இந்த மூன்று பத்திரிக்கைகளில் வெளியாகும் செய்திகளுக்கு தனி மதிப்பு உண்டு.

பாட்டுக் கேட்டாலே போதும். மூளை வளர்ச்சி பெறும் என்று இந்த செய்தி கூறுகிறது! சங்கீதம் கற்போருக்கு பல மொழிகளைக் கற்கும் திறன் அதிகரிக்கும் என்றும் பெரும் இரைச்சலில் இருந்து சொற்களைப் பிரித்தெடுக்கும் சக்தி அதிகம் என்றும் இந்த ஆய்வுகள் காட்டின. 45 பேரைத் தேர்ந்தெடுத்து  பல உரையாடல்களை பயங்கர இரைச்சலுக்கு இடையே ஒலிபரப்பினர். சங்கீதம் கற்றோர் மற்றவர்களை விட உரையாடல்களை நன்கு கேட்க முடிந்தது.  Journal of Neuroscience இந்தச் செய்தியை வெளியிட்டது.

பிரபல இசை மேதை மோசார்ட்டின் இசையை ரசிப்போருக்கு சில விஷயங்களில் அறிவும் திறமையும் கூடுதலாக இருப்பதாக 1993ல் நேச்சர் பத்திரிக்கை ஒரு ஆய்வை வெளியிட்டது. இளம் வயதில் சிறிது இசைப் பயிற்சி பெற்றாலும் வயதான பின்னரும் அவர்களின் கேள்வி ஞானம் சிறப்பாக இருக்கிறது என்று நார்த் வெஸ்டர்ன் பல்கலைக்கழகம் (அமெரிக்கா) 2012ல் இதை உறுதி செய்துள்ளது. (A Little Music Training Goes a Long Way: Practicing Music for Only Few Years in Childhood Helps Improve Adult Brain)

 

வயது ஆக ஆக ஆக மூளையின் செயல்பாடு குறையும் என்பது பொது விதி. ஆனால் சங்கீதம் கற்றுத் தொடர்ந்து பயிற்சி செய்வோரிடம் இந்த தேய்மானம் அந்த வேகத்தில் இல்லை. ஞாபக சக்தித் தேர்விலும், வேகமாக எதையும் புரிந்து கொள்ளும் தேர்விலும் சங்கீதக்காரர்கள் அதிகம் மதிப்பெண் பெறுகிறார்கள் (ஆதாரம்: 2012 July issue of Frontiers in Human Neuroscience).

*****

இதை எழுதும்போது, எனக்கு 1960களில் என் பெரிய அண்ணன் செய்த ஒரு செயல் நினைவுக்கு வருகிறது. மதியம் ஒலிபரப்பாகும் ‘விவித் பாரதி’ ஹிந்தி பாட்டுகளைக் கேட்டுகொண்டேதான் பாடங்களைப் படிப்பான். அவன் ஏமாற்றுவதாக அம்மாவும் சகோதரர்களும் அவனைக் கேலி செய்வோம். இப்போது நிறைய பேர் காதில் ‘இயர் போனை’ வைத்து பாட்டுக் கேட்டுக்கொண்டு பாடப் புத்தகங்களைப் படிப்பதைப் பார்க்கிறோம். இதிலும் பலன் உண்டு என்றே சொல்லத் தோன்றுகிறது!

மோட்சார்ட் இசையைக் கேட்ட பின்னர் புத்திசாலித்தன (ஐ.க்யூ) சோதனைய்ல் மானவர்கள் அதிகம் மதிப்பெண் பெற்றதாக முதலில் கலிபோர்னியா பல்கலைகழகம் செய்தி வெளியிட்டது ஆனால் பின்னர் மற்ற பல்கலைகழகங்கள் இதே சோதனையைச் செய்து பார்த்தபோது அந்தப் பல்ன்கள் கிடைக்கவில்லை . ஆகவே இந்த சோதனை ஒத்துக்கொள்ளப் படவில்லை.

*****

இசையும் பிராணிகளும்

25/05/1983ல் ஹிந்து நாளேடு வெளியிட்ட செய்தி என் கோப்பில் இருக்கிறது. அதில் பக்திப் பாடல்கலைக் கேட்ட பசு மாடுகள் அதிகம் பால் சுரந்ததாக ஆராய்ச்சி முடிவு வெளியானது. இன்று வரை அது நடக்கிறதா என்று தெரியவில்லை. அன்னமாசார்யா கீர்த்தனைகள், வெங்கடேஸ்வர சுப்ரபாதம் ஆகியன பாடப்பட்டபோது பால் உற்பத்தி அதிகரித்தது.

சங்க இலக்கியத்தில் தினைப்புனத்தை மேயவந்த யானை கூட இசைக்குக் கட்டுபட்டு நின்ற செய்தி உளது. பிருந்தாவனத்தில் ஆநிரைகள் கண்ணனின் புல்லாங்குழலுக்குக் கட்டுப்பட்டு மெய்மறந்து நின்றதையும் நினைவு கூறுவோமாக.

Contact London Swaminathan at swami_48@yahoo.com

பொறுமையே அழகு!

ராமாயண வழிகாட்டி

அத்தியாயம் – 2

ச.நாகராஜன்

 

பொறுமையே அழகு!

 

அலங்காரோ ஹி நாரீனாம் க்ஷமா ஹி புருஷஸ்ய வா I

 

பொறுமையே பெண்களுக்கும் புருஷர்களுக்கும் அழகு.இது பிரசித்தம்.

பாலகாண்டம் 33ஆம் ஸர்க்கம் 8ஆம் ஸ்லோகம்

******

பொறுமையே தானம், ஸத்தியம்,யாகம், கீர்த்தி, தர்மம் எல்லாமும்!

 

க்ஷமா தானம் க்ஷமா ஸத்யம் க்ஷமா யக்ஞஸ்ய புத்ரிகா: I

க்ஷமா யக்ஞ: க்ஷமா தர்ம: க்ஷமாயாம் விஷ்டிதம் ஜகத் II

 

புத்திரிகளே! பொறுமை தானம்;  பொறுமை ஸத்தியம்: பொறுமை யாகம்: இன்னும் பொறுமை கீர்த்தி; பொறுமை தர்மம்; பொறுமையில் உலகம் நிற்கிறது.

பாலகாண்டம் 33ஆம் ஸர்க்கம் 10ஆம் ஸ்லோகம்

 

(வாயு குசநாபருடைய 100 புத்திரிகளை மணந்து கொள்ள விரும்பியபோது அவர்கள் அரசனை அணுகி முறையிட அரசன் அவர்களிடம் கூறியதையே மேலே காண்கிறோம்.)

*********

 

அவமரியாதையோடு பரிசை வழங்கக்கூடாது!

 

அவக்ஞயா ந தாதவ்யம் கஸ்யசில்லிலயா(அ)பி வா I

அவக்ஞயா க்ருதம் ஹன்யாத்தாதாரே நாத்ர் சம்ஸய: II

 

அவமரியாதையோடும் அலக்ஷ்யத்தோடும் ஒருவனுக்கு கொடுக்கத் தக்கது இல்லை. அவமானத்தோடு செய்யப்பட்டது கொடுப்பவனைக் கொல்லும். இவ்விஷயத்தில் சந்தேகம் இல்லை.

பாலகாண்டம் 13ஆம் ஸர்க்கம் 30ஆம் ஸ்லோகம்

 

(ஒருவருக்கு பரிசை வழங்கும் போது எப்படி வழங்க வேண்டும் என்பதை இங்கு தெரிந்து கொள்கிறோம். மிகுந்த மரியாதையுடனும், பயபக்தியுடனும் கொடுக்க வேண்டும் என்பதை நன்கு உணர்ந்து கொள்ள வேண்டும்.)

*********** 

 

கர்மபூமியில் நல்ல கர்மங்களையே செய்ய வேண்டும்!

 

கர்மபூமிமிமாம் ப்ராப்ய கர்தவ்யம் கர்ம யஸ்சுபம் I

அக்னிர் வாயுஸ்ச சோமஸ்ச கர்மணாம் பலபாகின: II

 

இந்தக் கர்மபூமியை அடைந்தவர்கள் புண்ணியமாயுள்ள கர்மம் எதுவோ அதையே செய்ய வேண்டும்.

அக்னிபகவானும் வாயுபகவானும் சந்திரனும் கர்மங்களுடைய பலனைத்தான் அனுபவிக்கின்றன!

   அயோத்யா காண்டம் 109ஆம் ஸர்க்கம் 30ஆம் ஸ்லோகம்

 

(புனிதமான இந்த பூமி மட்டுமே கர்மபூமி. ஸ்வர்க்கத்தில் கூட புண்யபலன்களை அனுபவித்தவர்கள் அது முடிந்தவுடன் இங்கு தான் வந்து பிறக்க வேண்டும்.ஆகவே இந்த ஸ்லோகத்தின் அர்த்தம் பொருள் பொதிந்தது.)

 

**************

 

தமிழ் எழுத்துக்கள் முப்பதா? ஐம்பத்தொன்றா?

திருப்புகழ் ஆராய்ச்சிக் கட்டுரை -7

தமிழ் எழுத்துக்கள் முப்பதா? ஐம்பத்தொன்றா?

 

51 எழுத்துக்கள் 51 தேவதைகள் 51 புலவர்கள்

சம்ஸ்கிருதத்தில் அ முதல் க்ஷ வரை 51 எழுத்துக்கள் உள்ளன. இதையே தமிழ்ப் புலவர்களும் ஏற்றுக்கொண்டு பாடல்களில் பரவலாகப் பயன்படுத்துகின்றனர். திருமூலர், அருணகிரிநாதர், பரஞ்சோதி முனிவர் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். சங்கத் தமிழ் புலவர்கள் 49 பேரும் 49 எழுத்துக்களின் வடிவம் என்ற திருவிளையாடல் புராணக் கதையும் சுவையானது.

51 எழுத்துக்களை பீஜாக்ஷரங்கள் (வித்து எழுத்துக்கள்) என்பர் அவற்றால் ஏற்படும் மாலை மந்திர மாலை அல்லது மாத்ருகா புஷ்ப மாலை எனப்படும். 51 எழுத்துக்களுக்கும் தனித் தனி தேவதைகள் உண்டு.

 

விராலிமலையில் அருணகிரிநாதர் பாடிய திருப்புகழில்:

“ ஐந்து பூதமும் ஆறு சமயமும்

மந்த்ர வேத புராண கலைகளும்

ஐம்பத்தோர்விதமான லிபிகளும்    வெகுரூப ”

என்றும் இன்னுமோர் இடத்தில்

“ அகர முதலென உரை செய் ஐம்பதொரக்ஷரமும்

அகில கலைகளும் வெகுவிதங் கொண்ட தத்துவமும்

அபரிமித சுருதியும் அடங்கும் தனிப் பொருளை ”

 

என்றும் பாடுகிறார். இந்தப் பாடல்களுக்கு திரு. கோபாலசுந்தரம் எழுதிய உரை மற்றும் ஆங்கில மொழிபெயர்ப்பில் மிகவும் தெளிவாக 51 சம்ஸ்கிருத எழுத்துகள் என்றே விளக்குகிறார். ஆக சம்ஸ்கிருத 51 எழுத்துக்களையே தமிழ்ப் புலவர்கள் 51 என்று குறிப்பிடுதல் தெளிவு. ஏனெனில் தமிழில் எக்காலத்திலும் 51 எழுத்துகள் இருந்ததற்கு பழந்தமிழ் நூல்களில் ஆதாரம் இல்லை.

கந்தர் அநுபூதியை 51 பாக்களில் அருணகிரி அமைத்தமைக்கும் மாணிக்கவாசகரின் திருவாசகம் 51 பாடல்களில் அமைந்தமைக்கும் இந்த மந்திர எழுத்துக்களே காரணம் என்றும் பெரியோர் கூறுவர்.

 

திருமந்திரம்

திருமந்திரத்தில் 51 எழுத்துக்கள் என்பதை திருமூலர் பல பாடல்களில் பாடுகிறார். இவைகளுக்கு உரை எழுதியோர் தொல்காப்பிய காலத்துக்கு முன் தமிழிலும் 51 எழுத்துக்கள் இருந்ததாக எழுதியுள்ளனர். பின்னர் அது 33 ஆகவும் முப்பதாகவும் குறைக்கப்பட்டதாகச் சொல்லுகின்றனர். (பக்கம் 366, பாடல் 878க்கு திரு ப ராமநாத பிள்ளை எழுதிய உரையில் இவ்வாறு கூறுகிறார்.) ஆனால் இதற்கு ஆதாரம் எதையும் அவர் காட்டவில்லை. ஆதாரம் இருப்பதாகவும் தெரியவில்லை.

“ இணையார் திருவடி எட்டெழுத்தாகும்

இணையார் கழலிணை யீரைந்தாகும்

இணையார் கழலிணை ஐம்பதொன்றாகும்

இணையார் கழலிணை ஏழாயிரமே” (878)

( பாடல் 925,942,944,904, 1195, 1200, 1209, 1726,2650, 2826 ஆகியவற்றிலும் இதை திருமூலர் வலியுறுத்துகிறார்.)

12 உயிர் ,18 மெய், ஒரு ஆயுதம் உட்பட 31 தமிழ் எழுத்துகளே இன்று வரிவடிவத்தில் இருக்கின்றன. இத்தோடு உயிர்மெய் எழுத்துக்கள் 216 ஐயும் சேர்த்து 247 எழுத்துகள என்று சொல்லுவது வழக்கம்.

 

திருவிளையாடல் புராணம்

பரஞ்சோதி முனிவர் எழுதிய திருவிளையாடல் புராணத்தில் சங்கப் பலகை தந்த படலத்தில் ,” ஓ வாணியே,  உன் சொரூபமான ஐம்பத்தோரெழுத்தில் அகர முதலாக நாற்பத்தெட்டு எழுத்துகளும் நாற்பத்தெட்டு புலவர்களாக உலகத்தில் பிறக்ககடவன. திருவாலவாயானும் ஒரு புலவராகத் தோன்றி 49ஆவது புலவராக சங்கத்தில் அமரட்டும் என்று பிரம்ம தேவன் கூறியதாக உள்ளது.

 

காஞ்சிப் பெரியவர் 14-10-1932-ல் சென்னையில் ஆற்றிய சொற்பொழிவு

“அம்பிகையே வாக் ஸ்வரூபமாக இருப்பவள். அம்பாள் உருவம் முழுவதும் அக்ஷரங்கள். நம்முடைய உடம்பில் எல்லாம் நாற்றமுள்ள வஸ்துக்களெ நிரம்பி இருக்கின்றன. இந்த ஆசாபாசங்களுள் அறிவு என்ற ஒரு மணி இருக்கிறது அம்பாள் உடம்போ அகாராதி க்ஷகாராந்தம் இருக்கும் அக்ஷரங்கள்தான. தர்க்கத்தில் முக்தாவளியில் சப்தத்தைப் பற்றி இரண்டு நியாயங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. வீசிதரங்க நியாயம், கதம்பமுகுள நியாயம் என்பவை அவை.

வீசிதரங்க நியாயம் என்பது அலைகளில் இருந்து அலை பிரிவது. அதாவது பெரிய அலைகளில் இருந்து சிறு சிறு அலைகள் பிரிந்து சென்று கடைசியில் சிறிதாகி அடங்குவதைப் போல்வது.

சப்தம் கொப்பளித்து வெவ்வேறு ஒலியாக விழுதல் கதம்ப முகுள நியாயம். இந்த சப்தங்கள் தாம் 51 அக்ஷரங்கள். அவற்றிற்கு மாத்ருகா என்று பெயர். இந்த அக்ஷரங்கள் ஒரு உருவம் எடுத்ததுதான் அம்பிகையின் வடிவம், அக்ஷரமாலிகை, மாத்ருகா ஸ்வரூபம் என்பர். ‘ஸர்வ வர்ணாத்மிகே’ என்று காளிதாசர் சொல்லி இருக்கிறார். எல்லா எழுத்துக்களின் வடிவமாய் இருப்பவளே என்பது அதன் கருத்து.

நாம் ஜபத்தில் அங்கந்யாச கரன்யாசங்கள் செய்கிறோம். அந்த அந்த மந்த்ர தேவதைக்கு அந்த அந்த அக்ஷரம் அந்த அந்த அங்கங்களாக இருக்கின்றன என்பது குறிப்பு”.

ருத்ராக்ஷ மாலா, ஸ்படிகாக்ஷ மாலா என்பனவற்றை விளக்குகையில் அ முதல் க்ஷ வரை உள்ள 51 எழுத்துக்களைக் குறிக்கவே அக்ஷ என்பதைச் சேர்த்திருபதாகவும் பெரியவர் விளக்குகிறார். எழுத்துக்கு வடமொழியில் அக்ஷ—ரம் என்பர். இதிலேயே முதல் அ–வும் கடைசி க்ஷ–வும் இருக்கிறது.

 

மந்திர சாஸ்திர விளக்கம்

அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உண்டு என்ற பழமொழிக்கிணங்க 51 சக்தி பீடங்களும் தேவியின் 51 மாத்ருகா அக்ஷரங்களைக் குறிக்கும் என்றும்  உடலில் ஆறு ஆக்ஞா சக்ர ஸ்தானங்களில் இந்த 51 அக்ஷரங்களும் உள்ளதாகவும் மந்திர சாஸ்திரம் அறிந்தோர் விளக்குவர்.

கொரிய மொழியில் சாமா என்ற 51 எழுத்துக்கள் (27+24) உண்டு.

உலகில் தமிழையும் சம்ஸ்கிருதத்தையும் சிவன், முருகன், தேவியர் ஆகியோருடன் தொடர்பு படுத்தும் அளவுக்கு வேறு எந்த மொழியும் கடவுளுடன் தொடர்பு படுத்தப்படவில்லை!!

கடந்த சில நாட்களில் வெளியான ஏனைய திருப்புகழ் ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் படித்து இன்புறுக. இன்னும் வரும்…………..

Contact london swaminathan at :  swami_48@yahoo.com

நரகத்துக்கு போவோர் பட்டியல்

 

Picture of Skanda/Kartikeya/Murugan in Cambodia (from Wikipedia)

திருப்புகழ் ஆராய்ச்சிக் கட்டுரை -6

நரகத்துக்கு போவோர் பட்டியல்

யார் யார் நரகத்துக்குப் போவார்கள் என்று ஒரு சுவயான பட்டியலைத் தருகிறார் அருணகிரிநாதர்:

 

ஓதுவித்தவர் கூலிகொடாதவர்

மாதவர்க்கு அதிபாதகமானவர்

ஊசலில் கனலாய் எரி காளையர்         மறையோர்கள்

ஊர்தனக்கு இடரே செயும் ஏழைகள்

ஆர்தனக்கும் உதாசினதாரிகள்

ஓடி உத்தமர் ஊதிய நாடினர் இரவோருக்கு

ஏதும் இத்தனை தானம் இடாதவர்

பூதலத்தினில் ஓரமதானவர்

ஈசர் விஷ்ணுவை சேவை செய்வோர்தமை இகழ்வோர்கள்

ஏகசித்த தியானமிலாதவர்

மோகமுற்றிடு போகிதம் ஊறினர்

ஈனர் இத்தனை பேர்களும் ஏழ்நரக உழல்வாரே

 

பொருள்: குரு தட்சிணை கொடுக்காதவர்கள், தவ வலிமை மிக்க பெரியோர்களுக்கு ஊறுவிளைவிப்போர், காம வெப்பத்தில் நெருப்பாய் எரியும் இளையோர், வேதம் அறிந்த பார்ப்பனர் ஊர்களுக்கு கெடுதி செய்வோர், எல்லோரையும் உதாசினம் செய்து பேசுவோர், உத்தமர்களின் செல்வத்தை ஏமாற்றிப் பறிப்போர், பிச்சை கேட்போருக்கு தானம் இடாதவர், பூவுலகில் பாரபட்சமாகப் பேசுவோர், சிவனையும் விஷ்ணுவையும் க்உம்பிடுவோரை கேலி செய்வோர், ஒரு முகப் பட்ட மனத்துடன் தியானம் செய்யாதவர்கள், மோகத்தில் மூழ்கி காமத்தில் திளைப்பவர்கள், இன்னர்கள் இத்தனை பேரும் ஏழுவகை நரகங்களில் துன்புறுவார்கள்.

இதன் ஆங்கில மொழி பெயர்ப்பு வேண்டுவோர் கௌமாரம்.காம்  –இல் திரு கோபாலசுந்தரம் அவர்களின் அற்புதமான மொழிபெயர்ப்பைப் படிக்கவும்.

 

“ கடவுள் ஒரு திருடன் “

ஒரு நாஸ்தீகர் இப்படிச் சொல்லியிருந்தால் நாம் இது அவர்களின் வாடிக்கையான வசனம் என்று தள்ளிவிடலாம். அருணகிரிநாதரும் ஞான சம்பந்தரும் மீரா பாயும் சொன்னால் ஒதுக்கிவிட முடியுமா? கொஞ்சம் ஆழ்ந்து படிக்க வேண்டும்.

கண்ணபிரானைப் பற்றிப் பாடுவோர் எல்லாம் அவனை ‘சோர்’ (சம்ஸ்கிருத இந்தி மொழியில் சோர, சோர் என்றால் திருடன்) என்று புகழ்ச்சியாகப் பாடுவதைக் கேட்கிறோம். வெண்ணையை மட்டுமா திருடினான். கோபியரின் புடவையையும் அல்லவா திருடினான் கள்ளக் கிருஷ்ணன். ஆனால் இந்தத் திருட்டுக்கும் நம்ம ஊர் அரசியல் திருடர்களுக்கும் வித்தியாசம் உண்டு. கண்ணன் திருடினால் அவன் அன்பின் காரணமாக நம் வீட்டில் செல்வம் குவியும். நாம்ம ஊர் அரசியல்வாதிகள் திருடினால் நம் வாழ்வில் இருள் கவியும்.

அருணகிரிநாதர் கூட கண்ணனின் பெருமையைப் பாடுகிறார்:

 

சிகர குடையினி னிரைவர இசைதெரி

சதுரன் விதுரனில்  வருபவ னளையது

திருடி யடிபடு சிறியவ நெடியவன் மதுசூதன்

என்று பழனி திருப்புகழில் பாடுகிறார்.

 

சம்பந்தப் பெருமான் சிவனுக்கும் திருட்டுப் பட்டம் சூட்டினார். சிவனை உள்ளம் கவர் கள்வன் என்று மூன்று வயதிலேயே முதல் பாட்டிலேயே அடையாளம் கண்டுவிட்டார்:

 

தோடுடைய செவியன், விடை ஏறி ஓர் தூவெண் மதி சூடி

காடுடைய சுடலைப் பொடி பூசி என் உள்ளம் கவர் கள்வன்

ஏடுடைய மலரான் உனை நான் பணித்து ஏத்த அருள் செய்த

பீடுடைய பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன்  அன்றே

 

மூன்று வயதிலேயே சம்ப்ந்தரின் உள்ளத்தைக் கவர்ந்ததால் ஞான சம்பந்தர் இந்து சமய வரலாற்றில் அழியாத இடம் பெற்றுவிட்டார்.

முருகனுக்கும் திருட்டுப் பட்டம் உண்டு என்பது பலருக்கும் தெரியாது. அருணகிரிநாதர் போன்ற அருளாளர்கள் தான் இப்படிச் சொல்லமுடியும்.

 

பெண் திருடி

செம்மான் மகளைத் திருடும் திருடன்

பெம்மான் முருகன், பிறவான், இறவான்,

‘சும்மா இரு சொல் அற’ என்றலுமே

அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலனே

(கந்தர் அநுபூதி, பாடல் 12)

இறைவனின் திருவிளையாடல்கள் எண்ணிலடங்கா. எவ்வளவோ அடியார்கள் வாழ்வில் கொள்ளையர் ரூபத்தில் வந்தும் அருள் பாலித்தான். இதுபோல பல அரசர்களும் புலவர்கள் பேரில்கொண்ட அன்பின் காரணமாக அவரை மீண்டும் ஊருக்கு வரவழைக்க இப்படி வழிப்பறிக் கொள்ளை அடித்ததுண்டு.

 

எனது முந்தைய திருப்புகழ் ஆராய்ச்சிக் கட்டுரைகள்

1.தமிழில் திட்டத் தெரியுமா? வசை பாடுவது எப்படி?

2.சம்பந்தருக்கு அடிமை அருணகிரிநாதர்

3. தனிமையில் இனிமை: அருணகிரிநாதர்

4. டாக்டர் முருகனும் ‘பேஷன்ட்’ அருணகிரிநாதரும்

5. அருணகிரிநாதருடன் 60 வினாடி பேட்டி

6.’திருப்புகழ் நெருப்பு என்று அறிவோம் யாம்’

Contact London Swaminathan at swami_48@yahoo.com for the list of all the 400+ articles.

பணக்காரனுக்கும் கவலை! யாசகனுக்கும் கவலை!!

சம்ஸ்கிருதச் செல்வம்-4  by S Nagarajan 

4. பணக்காரனுக்கும் கவலை! யாசகனுக்கும் கவலை!!

 

காலம் கலியுகம். இந்த யுகத்தில் நடக்கும் கூத்துக்களை எல்லாம் கண்டு வியக்கிறார் பெரும் கவிஞர் நீலகண்ட தீக்ஷிதர்.

 

கலிவிடம்பனா என்ற அற்புதமான நையாண்டி நூலையே படைத்து விட்டார். நூறு பாக்கள் இதில் அடங்கியுள்ளன. பிரபலமான அத்வைத வேதாந்தியும் கவிஞரும் பேரறிஞருமான அப்பய்ய தீக்ஷிதரின் தம்பி நாராயண தீக்ஷிதரின் மகன் நீலகண்ட தீக்ஷிதர். மதுரையில் திருமலை நாயக்க மன்ன்னிடம் முதல் அமைச்சராக இருந்தவர்.

 

கலிவிடம்பனாவில் 76-வது பாடலாக அமைந்துள்ள பாடல் இது.

 

பணக்கார பிரபுவிடம் ஒரு ஏழை பிச்சைக்காரன் யாசகத்திற்கு வருகிறான். அவன் முகத்தைப் பார்க்கிறார் கவிஞர். அவன் முகத்தில் ஒரே கவலை தெரிகிறது. அவன் கவலை அவருக்குப் புரிகிறது. யாசகம் கேட்கிறோமே, பிரபு என்ன தருவான், எவ்வளவு தருவான், தருவானா என்றெல்லாம் அவனுக்குக் கவலை. அது புரிகிறது கவிஞருக்கு.

 

ஆனால் பணக்காரனைப் பார்த்தால் அவன் முகத்திலும் கவலை. அவனுக்கு என்ன கவலை? கவிஞர் வியக்கிறார். பின்னர் புரிந்து கொள்கிறார். கலியுகத்தின் அவலத்தை நினைத்து ஒரு பாடலைப் பாடுகிறார். பாடல் இது தான்:-

 

கிம் வக்ஷ்யதீதி தனிகோ யாவதுத்விஜதே மன: I

கிம் ப்ரக்ஷ்யதீதி லுப்தோ(அ)பி தாவதுத்விஜதே தத: II

 

(தனிகன் – பணக்காரன்)

   

   பிச்சை கேட்க வந்தவன் என்ன கேட்கப் போகிறானோ என்று பணக்காரனுக்குக் கவலை; அவன் என்ன சொல்லப் போகிறானோ என்று கேட்க வந்தவனுக்கும் கவலை!

 

 ஆக இருவருக்கும் கவலை! இது தானோ கலியுகம் என்பது?!

 

***************

“திருப்புகழ் நெருப்பு என்று அறிவோம் யாம்”

திருப்புகழ் ஆராய்ச்சிக் கட்டுரை -5

“திருப்புகழ் நெருப்பு என்று அறிவோம் யாம்”

 

அருணகிரிநாதர் பாடியதில் நமக்குக் கிடைத்த திருப்புகழ் பாடல்கள் 1300க்கும் சற்று அதிகம். அவைகளில் அவரே திருப்புகழின் பெருமையைக் கூறும் இடங்கள் நவில்தொறும் நூல்நயம் பயக்கும். படிக்கப் படிக்கத் தெவிட்டாதது. திருப்புகழைப் பழிப்பவர்க்கு விடும் எச்சரிக்கையைப் பாருங்கள்:

 

“சினத்தவர் முடிக்கும் பகைத்தவர் குடிக்கும்

செகுத்தவர் உயிர்க்கும் சினமாகச்

சிரிப்பவர் தமக்கும் பழிப்பவர் தமக்கும்

திருப்புகழ் நெருப்பு என்று அறிவோம் யாம்

நினைத்தது அளிக்கும் மனத்தையும் உருக்கும்

நிசிக்கரு அறுக்கும்       –பிறவாமல்

நெருப்பையும் எரிக்கும் பொருப்பையும் இடிக்கும்

நிறைப் புகழ் உரைக்கும்   –செயல் தாராய்

 

திருத்தணியில் பாடிய இன்னொரு பாட்டில்

பலகாலும் உனைத் தொழுவோர்கள்

மறவாமல் திருப்புகழ் கூறி

படி மீது துதித்துடன் வாழ        –அருள்வாயே

என்பார்.

 

திருப்புகழ் படித்தால் இடர்கள் பறந்தோடும் என்று உறுதிபடக் கூறுகிறார்:

இருப்பவல் திருப்புகழ் விருப்பொடு படிப்பவர்

இடுக்கினை அறுத்திடும் எனவோதும்”

இதே கருத்தை வேல் வகுப்பிலும் கூறுவார்:

“ துதிக்கும் அடியவர்க்கு ஒருவர் கெடுக்க இடர்

நினைக்கின் அவர் குலத்தை முதல் அறக் களையும்

எனக்கோர் துணையாகும்

சொலர்க்கறிய திருப்புகழை உரைத்தவரை

அடுத்த பகை அறுத்து எறிய உறுக்கி எழு

மறத்தை நிலை காணும்”

 

சந்த நடை

சந்த நடை என்ற சொல் வரும் திருச்செங்கோட்டுப் பாடலில்:

“பத்தர் கணப்ரிய நிர்த நடித்திடு

பக்ஷி நடத்திய           குகபூர்வ

பச்சிம தக்ஷிண உத்தர திக்குள

பத்தர்கள் அற்புதம்        எனவோதும்

சித்ர கவித்துவ  சத்த மிகுத்த  தி

ருப்புகழைச் சிறிது அடியேனும்”

வரும் வரிகள் படிக்கப் படிக்கச் சுவைதரும்

கிருஷ்ண தேவராயரின் கல்வெட்டுகளில் பூர்வ தக்ஷிண உத்தர பச்சிம சதுஸ் சமுத்ராதிபதி என்று எழுதி இருக்கிறார். நான்கு திசைகளிலும் அவர் வெற்றி வாகை சூடியதை இது குறிக்கும். ஏறத்தாழ அதே காலத்தில் வாழ்ந்த அருணகிரியின் பாடல்களில் அதன் தாக்கம் தெரிகிறது.

 

 

எல்லோரும் நன்கு அறிந்த சின்ன எட்டு வரிப் பாடல்

பத்தியால் யான் உனைப் பலகாலும்

பற்றியே மா திருப்புகழ் பாடி என்று துவங்கும் பாடல்.

பெங்களூர் ரமணி அம்மாளின் இனிய குரலில் இந்தப் பாட்டைக் கேட்டவர்கள் மீண்டும் மீண்டும் கேட்பார்கள்.

 

வயலூர் திருப்புகழில்

“வீசா விசாலப் பொருப்பெடுத்து எறி

பேர் ஆரவாரச் சமுத்திரத்தினில்

மீளாமல் ஓடித் துரத்தியுட் குறுஒருமாவை (மா மரம்)

வேரோடு வீழத் தறித்து அடுக்கிய

போராடும் சாமர்த்திய திருக் கையில்

வேல் ஆயுதம் மெய்த் திருப்புகழ் பெறு வயலூரா”

என்றும் பாடுகிறார்.

 

 

அற்புதத் திருப்புகழ்

அவரே தன் வாயால் ‘அற்புதத் திருப்புகழ்’ என்றும் முருகன் புகழைப் பாடுவார்:

யானாக நாம அற்புதத் திருப்புகழ்’

தேனூற ஓதி எத்திசைப் புறத்தினும்

ஏடேவு ராஜ தத்தினைப் பணித்ததும் இடர் ஆழி”

 

 

யமன் வரும் போதும் முருகன் வந்து ‘அஞ்சாதே’ என்று சொல்லிக் காப்பாற்றுவானாம்:

“ படிக்கும் திருப்புகழ் போற்றுவன், கூற்றுவன் பாசத்தினால்

பிடிக்கும் பொழுது வந்து அஞ்சல் என்பாய் ”

நாமும் திருப்புகழைப் பாடி இடர் களைந்து இன்புறுவோமாக.

(படங்கள்: முக நூல்; நன்றி.)

 

 

எனது முந்தைய திருப்புகழ் ஆராய்ச்சிக் கட்டுரைகள்

1.தமிழில் திட்டத் தெரியுமா? வசை பாடுவது எப்படி?

2.சம்பந்தருக்கு அடிமை அருணகிரிநாதர்

3. தனிமையில் இனிமை: அருணகிரிநாதர்

4. டாக்டர் முருகனும் ‘பேஷன்ட்’ அருணகிரிநாதரும்

5. அருணகிரிநாதருடன் 60 வினாடி பேட்டி

Contact London Swaminathan at swami_48@yahoo.com for the list of all the 400+ articles.

தமிழில் திட்டத் தெரியுமா? வசைபாடுவது எப்படி?

439px-Murugan_by_Raja_Ravi_Varma

திருப்புகழ் ஆராய்ச்சிக் கட்டுரை -4

தமிழில் திட்டத் தெரியுமா?

வசைபாடுவது எப்படி?

திருப்புகழில்  இருந்து பத்து வசவுப் பாட்டுகளைத் தேர்ந்தெடுத்து அதிலுள்ள வசவுகளைத் தொகுத்து உள்ளேன். அருணகிரிநாதரின் இளமைக் காலம் முழுதும் தீய பழக்க வழக்கங்களில் கழிந்ததால் அவர் இந்த வசவுகளில் ஒரு நிபுணர். ஆனால் அவர் முருகனால் காப்பாற்றப்பட்ட பின்னரும் இப்படி தன்னையே தாழ்த்திப் பாடுவது இது போன்ற ஆட்களையும் முருகன் காப்பாற்றுவான் என்பதைக் காட்டவே. பொதுவாக அவர் வசைமாறி பொழியும் இடங்கள் உண்மையில் இன்றும் தீய நிலையில் இருப்பவர்களைக் குறிப்பதாகும்.

 

அசடன், கவடன், விகடன், ஆதாளிவாயன்

 

அவகுண விரகனை வேதாள ரூபனை

அசடனை மசடனை ஆசார ஈனனை

அகதியை மறவனை ஆதாளிவாயனை— அஞ்சுபூதம்

அடைசிய சவடனை மோடாதி மோடனை

அழிகருவழி வரு வீணாதி வீணனை

அழுகலை அவிசலை ஆறான வூணனை  அன்பிலாத

கவடனை விகடனை நானா விகாரனை

வெகுளியை வெகுவித மூதேவி மூடிய

கலியனை அலியனை ஆதேச வாழ்வனை வெம்பி வீழுங்

களியனை அறிவுரை பேணாத மாநுட

கசனியை அசனியை மாபாதனாகிய

கதியிலி தனையடி நாயேனை ஆளுவது எந்நாளோ

I am a scoundrel, devil, wicked, stupid, refugee, loud mouth, hunter, stupid of all the stupid persons, idler of idlers, rotten stale foodstuff, glutton, cunning fellow devoid of love, sadist with a crooked mentality, man of foul temper, wretched harbinger of disasters, human scum, drinker, man of fickle life, sinner என்று அருணகிரி நாதர் தன்னையே நொந்துகொண்டு எனக்கு என்று அருளப் போகிறாய் என்கிறார்.

(திரு கோபாலசுந்தரம் அவர்களின் திருப்புகழ ஆங்கில மொழிபெயர்ப்பைப் பயன்படுத்தி இருக்கிறேன்).

 

துட்டர்கள் பட்டியல்

 

ஆசார வீனக் குதர்க்க துட்டர்கள்

மாதா பிதாவைப் பழித்த துட்டர்கள்

ஆமாவினைச் செகுத்த துட்டர்கள்   பரதாரம்

ஆகாத எமனாற் பொசித்த துட்டர்கள்

நானாவு பாயச் சரித்ர துட்டர்கள்

ஆவேச நீரைக் குடித்த துட்டர்கள்  தமியோர்சொங்

கூசாது சேரப் பறித்த துட்டர்கள்

ஊரார்க ஆசைப் பிதற்று துட்டர்கள்

கோலால வாவிற் செருக்கு துட்டர்கள்  குரு சேவை

கூடாத பாவத் தவத்த துட்டர்கள்

ஈயாது தேடிப் புதைத்த துட்டர்கள்

கோமாள நாயிற் கடைப் பிறப்பினில் உழல்வாரே

List of bad people: Those despicable people lacking in discipline, engaging in arguments, base people who abuse their parents, who kill the cows and eat beef, who cohabit with others wives, confident tricksters, immoral people who get intoxicated by drinking alcohol, thieves who usurp others wealth, blabbermouths, arrogant rogues, sinful people who don’t serve their masters, stingy people who amass wealth—those people will take birth baser than a boisterous mad dog.

ஆவேச நீரைக் குடித்த துட்டர்கள் என்று குடிகாரகளைச் சாடும் அழகு தனி அழகு

 

கசுமாலம்

சென்னை வாசிகளுக்கு மிகவும் பிடித்த வசவு கசுமாலம். இதை பகவத் கீதையில் அர்ஜுனனை நோக்கி கண்ண பிரானும் பயன்படுத்துகிறார். இந்த சம்ஸ்கிருத சொல்லுக்கு அழுக்கு என்று பொருள்

ஊனேறெலும்பு சீசீமலங்க

ளோடே நரம்பு  கசுமாலம்

Bones wrapped in flesh and skin along with disgusting faeces and discharged slags, nervous system, other dirts……

 

சங்காளர் சூது கொலைகாரர் குடிகேடர் சுழல்

சிங்கார தோளர் பண ஆசையுளர் சாதியிலர்

சண்டாளர் சீசீயவர் மாயவலை………..

Cut throats, gamblers, murderers, destroyer of families, women loitering around with sensuous shoulders covetous after money, indulging in carnal pleasures, coming from the basest lineage

 

தரையினில் வெகுவழி சார்ந்த மூடனை

வறியனை நிறை பொறை வேண்டிடாமத

சடலனை மகிமைகள் தாழ்ந்த வீணனை மிகு கேள்வி

தவ நெறி தனைவிடு தாண்டு காலியை

அவமதி அதனில் பொலாங்கு தீமை செய் சமடனை வலிய அசாங்க மாகிய தமியேனை

I am an utter fool, crazy drunkard, arrogant scum, wastrel, roaming loafer, deliberately harmed others, an outcast, who went chasing after women என்று அருணகிரி நாதர் தன்னையே நொந்துகொண்டு எனக்கு என்று அருளப் போகிறாய் என்கிறார். காலி என்ற சொல் குறிப்பிடத்தக்கது.

 

பித்தர், அஞ்சர்,அவலர், பேய்க்கத்தர்

அறிவிலாப் பித்தர் உன்றன் அடிதொழாக் கெட்ட வஞ்சர்

அசடர் பேய்க் கத்தர் நன்றி அறியாத

அவலர், மேற் சொற்கள் கொண்டு கவிகளாகப் புகழ்ந்து

அவரை வாழ்த்தித் திரிந்து பொருள்தேடிச்

Stupid fools, evil people who never worship your feet, idiots, indulging in devilish deeds, thankless miserable ones—these are the people on whom I wasted words composing poems praising them, I went on heaping plaudits on them to make money.

 

சகல கருமிகள் சௌவிய சமயிகள்

சரியை கிரியைகள் தவமெனு மவர்சிலர்

சவலை யறிவினர் நெறியினை விடைனி யடியேனுக்

Ritualists, religious fanatics, those who worship through offerings and meditation, confused and unwise ones— I wanted to give up all these things.

தவநெறி தவறிய குருடுகள் தலைபறி கதறிய பரபாதத்

தருமிகள் கருமிகள் வெகுவித சமயிகள் அவரொடு சருவாநின்

The blind people who departed from the righteous path, the proponents of other religions who boisterously thrust their tenets by plucking hairs (like the Jains), the evil doers and various religious zealots—I have been locking horns with all these people. ‘தவநெறி தவறிய குருடுகள்’ என்பது படித்து இன்புறத் தக்கது.

 

பாவி, கோபி, பேடி, மோடி, லோபி, கோழை, பேய்

 

மதிதனை யிலாத பாவி குரு நெறி இலாத கோபி

மனநிலை இலாத பேயன்   அவ மாயை

வகையது விடாதபேடி தவநினைவிலாத மோடி

வரும் வகை யிதேது காயம் எனநாடும்

Sinner, coward, devil, hot tempered, ruffian, wicked miser, worthless fellow எனக்கும் அருள்புரி என்கிறார். பேடி, மோடி, கோபி, லோபி என்பன படிக்க சுவையாக இருக்கின்றன.

இன்னொரு இடத்தில் தேரா வ்ருதா, காமா விகாரன், ஆபாச ஈனன், அசாப சாசன், மோடாதி மோடன், கேடன், துரோகன், லோபன், வீணன் என்று அடுக்குகிறரர்.

 

குபேரன் யார்?

கொடாதவனை யேபு கழ்ந்து

குபேரனென வேமொ ழிந்து

குலாவியவ மேதி ரிந்து புவிமீதே

I used to praise a miser who had never given charity calling him the greatest giver like Kuberan and I kept on flattering him and wandering with him in vain!

பிறந்தார் கிடந்தார் இருந்தார் தவழ்ந்தார்

நடந்தார் தளர்ந்து பிணமானார்.

இந்தக் கருத்தை ஆதி சங்கரர், அப்பர் பெருமான் போன்றோர் அழகிய பாடல்களில் பாடியுள்ளனர் ( பாலனாய்க் கழிந்த நாளும்——-தேவாரம்; பாலஸ்தாவத் க்ரீடா சக்த:- ஆதி சங்கரரின் பஜ கோவிந்தம்)

 

contact london swaminathan at swami_48@yahoo.com

ராமாயண வழிகாட்டி -1

ராமாயண வழிகாட்டி

அத்தியாயம் – 1

ச.நாகராஜன்

 

வால்மீகி முனிவரால் இயற்றப்பட்ட ராமாயணத்தில் இல்லாத நன்னெறிகளே இல்லை. வேதத்திற்குச் சமானம் என்று ஆன்றோர்களால் கொண்டாடப்பட்ட இந்த நூலை தினமும் பாராயணம் செய்ய வேண்டும் என்பது அவர்களின் அறிவுரை!

 

சூக்தி சதகம் என்னும் சுபாஷித தொகுப்பு நூலில் வரும் ஒரு அற்புதமான கவிதை வால்மீகியை ராம ராம என்று கூவும் குயில் என்று வர்ணிக்கிறது. ராமாயணத்தை பாராயணம் செய்யும் பக்தர்கள் முதலில் சொல்லும் ஸ்லோகங்களில் இதுவும் ஒன்று.

 

கூஜந்தம் ராம ராமேதி மதுரம் மதுராக்ஷரம் I

ஆருஹ்ய கவிதா ஷாகாம் வந்தே வால்மீகி கோகிலம் II

 

ஆருஹ்ய கவிதா ஷாகாம் – கவிதை என்னும் மரத்தின் உச்சியில் ஏறி

கூஜந்தம் ராம ராமேதி மதுரம் மதுராக்ஷரம் – ராம ராம என்னும் இனிய அக்ஷரங்களை இனிமையாகக் கூவும்

வந்தே வால்மீகி கோகிலம் – அந்த வால்மீகி என்னும் குயிலை வணங்குகிறேன்

 

முதல் காவியத்தை இயற்றியதால் வால்மீகி ஆதி கவி எனப்படுகிறார். முதல் காவியம் ராமாயணம் என்பதால் இது ஆதி காவியம் என அழைக்கப்படுகிறது. கவிதையின் சிகரத்தில் ஏறியவர் என்பதோடு ராம நாமத்தைக் கூவிக் கூவிப் பாடும் குயில் என வால்மீகி அழைக்கப்படுகிறார்.

 

24000 ஸ்லோகங்களில் ஏகைகமக்ஷரம் ப்ரோக்தம் மஹாபாதக நாசனம் என்று ஒரு அக்ஷரத்தைச் சொன்னாலே மஹா பாதகங்களும் நாசமடையும் என்று உறுதி சொல்லப்பட்டிருப்பதால் முடிந்த அளவு அதை நாம் கற்று பாராயணம் செய்வது நலம் பயக்கும்.

ராமாயணத்தில் நிச்சயம் தெரிந்து கொள்ள வேண்டிய சில நல்ல ஸ்லோகங்களை இனம் காட்டும் முயற்சியே ராமாயண வழிகாட்டி.

இதன் மூலம் மூல ராமாயணத்தின் அனைத்து ஸ்லோகங்களையும் படிக்கும் ஆசை எழுந்தால் அதுவே இந்த முயற்சிக்கான வெற்றி.

 

மனப்பூர்வமாகக் கொண்டாடப்பட வேண்டியவர்கள் யார்?

 

தன்யா: கலு மஹாத்மானோ முனயஸ்த்யக்த கில்பிஷா

ஜிதாத்மானோ மஹாபாகா யேஷாம் நஸ்த: ப்ரியா ப்ரியே

 

எவர்களுக்கு சுகதுக்கம் இரண்டும் இல்லாமல் இருக்கின்றதோ   அவர்கள் தான் மஹாத்மாக்கள். ஜிதேந்திரியர்கள். மஹாபாக்கியசாலிகள்.முனிவர்கள்.தன்யர்கள். மனப்பூர்வமாகக் கொண்டாடப்பட வேண்டியவர்கள்.

(கொடிய ராக்ஷஸிகள் சீதையை மிரட்ட வருந்தி சீதை புலம்பும் போது கூறியது – வால்மீகி ராமாயணம்; சுந்தர காண்டம் இருபத்தாறாவது ஸர்க்கம் 49ஆம் ஸ்லோகம்)

 

மஹான்களுக்கு சீதையின் நமஸ்காரம்

 

ப்ரியாந்ந ஸம்பவேத் து:க்க

       மப்ரியா ததிகம் பயம்

தாப்யாம் ஹி யே வியுஜ்யந்தே

       நமஸ்தேஷாம் மஹாத்மனாம்

 

சுகமெனக் கொண்டதால் மன அஸந்துஷ்டி இல்லாதிருக்கிறது. துக்கமெனக் கொண்டதால் அனாவஸ்யமான மன ஏக்கம் உண்டாகிறது. எவர்கள் அவ்விரண்டுகளாலும் விடுபட்டிருக்கிறார்களோ அந்த மஹாத்மாக்களுக்கு நமஸ்காரம்

(கொடிய ராக்ஷஸிகள் சீதையை மிரட்ட வருந்தி சீதை புலம்பும் போது கூறியது – வால்மீகி ராமாயணம்; சுந்தர காண்டம் இருபத்தாறாவது ஸர்க்கம் 50ஆம் ஸ்லோகம்)

 

மஹாத்மாக்களை நமஸ்கரிப்பதால் ஆபத்து, மா சம்பத்து ஆகி விடுகிறது! By S Nagarajan

****************