வேத நாயும் மாதா கோவில் நாயும்

படத்தில் சர்ச்சில் பிரார்த்தனை செய்யும் அதிசய நாய்

உலகில் முதல் முதலில் நாயின் பெருமையைப் போற்றியது உலகின் மிகப் பழைய மத நூலான ரிக் வேதம் ஆகும். இந்துக்கள் எப்போதுமே பிராணிகள் தாவரங்களின் பால் அன்பு மழை பொழிபவர்கள். சம்ஸ்கிருத, தமிழ் இலக்கியங்களில் உள்ள ஆயிரக் கணக்கான குறிப்புகள் இதை உறுதி செய்கின்றன. மஹா பாரதத்திலும் ராமாயணத்திலும் வியாசரும் வால்மீகியும் நாய்கள் பற்றிய சுவையான கதைகளைச் சேர்த்துள்ளனர். டோக்கியோ விலுள்ள நாய் சிலை உலகப் புகழ்பெற்றது. இப்போது இத்தாலிய மாதா கோவில் நாய்க் கதை ஒன்றும் லண்டன் பத்திரிக்கைகளில் படங்களுடன் வெளியாகி இருக்கிறது. இதோ சுவையான நாய்க் கதைகள்:

 

இத்தாலியில் சான் டொனாசி என்னும் ஊரில் சாண்டா மரியா அசுந்தா மாதாகோவில் இருக்கிறது. அங்கு மரியா மார்கரிட்டா லோசி என்ற பெண்மணி ஏழு வயதான ‘டாம்மி’ என்ற நாயுடன் சர்ச்சுக்கு (மாதாகோவில்) போவது வழக்கம். இதை யாரும் பொருட்படுத்துவதில்லை. அவர் காலடியில் ‘டாம்மி’ அமைதியாக அமர்ந்திருக்கும். சென்ற ஆண்டு அவர் இறந்துவிட்டார். அந்த நாய் திடீரென்று கடந்த இரண்டு மாதங்களாக தினமும் சர்ச் மணி அடித்தவுடன் பிரார்த்தனைக் கூட்டத்துக்கு வந்துவிடுகிறது! அங்குள்ள பாதிரியாரும் அதை அன்புடன் உபசரிக்கிறார்.

 

நாய்கள் நன்றியுள்ள பிராணிகள். மேலை நாடுகளில் இரண்டாம் உலகப் போரில் சேவையாற்றிய பல நாய்களுக்கு சிலைகள் உண்டு. ஆயினும் போரில் சம்பந்தப்படாத ஜப்பானிய ஹசிகோவின் கதை மிகவும் உருக்கமானது. டோக்கியோ பல்கலைக்கழகத்தில் விவசாயத் துறை பேராசிரியர் யுனோ ஒரு நாயை வளர்த்தார். அதன் பெயர்தான் ஹசிகோ (எட்டாம் எண் என்று அர்த்தம்). பேராசிரியர் தினமும் பல்கலைக்கழகத்தில் இருந்து வரும்போது சிபுயா என்ற ரயில் நிலைய வாசலில் அது காத்து நிற்கும். அவர்களது இந்த நட்பு ஓராண்டு நீடித்தது. ஆனால் அவர் 1925ல் மூளையில் ரத்தம் உறைந்து இறந்துவிட்டார். அவர் எப்படி ரயில் நிலையத்துக்கு வருவார்? ஆயினும் ஹசிகோ ஒன்பது ஆண்டுகளுக்கு அதே ரயில் நிலையத்துக்கு அதே நேரத்துக்கு தவறாமல் போய் பேராசிரியருக்காக காத்து நின்றது. ஜப்பானின் மிகப்பெரிய பத்திரிகை இந்த நாய் பற்றி ஒரு கட்டுரை வெளியிட்டவுடன் அது உலகப் புகழ் பெற்றது. 1934 ஆம் ஆண்டு அந்த ரயில் நிலைய வாயிலில் நாயுக்கு ஒரு வெண்கலச் சிலை வைத்தனர். அந்த சிலைத் திறப்புவிழாவுக்கு ஹசிகோவும் வந்தது!

படத்தில் ஹசிகோ சிலை

1935ல் ஹசிகோ புற்றுநோய் காரணமாக இறந்தது. அதன் உடலைப் பதப்படுத்தி டோக்கியோ தேசிய மியூசியத்தில் வைத்திருக்கின்றனர். மஹா பாரதத்திலும் ராமாயணத்திலும் ரிக் வேதத்திலும் இந்துக்கள் ஏன் நாய்க் கதைகளை எழுதினர் என்பது இப்போது நமக்கு நன்கு விளங்கும்.

நாய்கள் நன்றியுடையவை மட்டும் அல்ல. அபூர்வ சக்திகளை யுடையதும் கூட. மனிதனை விட 3000 மடங்கு அதிகம் மோப்ப சக்தி/முகரும் சக்தி கொண்டவை. பூகம்பம், சுனாமி, எரிமலைச் சீற்றம் ஆகியவற்றை பல நாட்களுக்கு முன்னரே அறிந்து ஊளை இடத் துவங்கிவிடும். பூமிக்கடியில் கேட்கும் உறுமல் சப்தத்தை அவை கேட்கின்றன என்று விஞ்ஞானிகள் சொல்கின்றனர்.

 

ரிக் வேதத்தில் நாய்

ரிக் வேதம் இற்றைக்கு 3500 ஆண்டுகளுக்கு முன் உலகில் எழுந்த முதல் மத நூல். அதில் ‘சரமா’ என்ற நாய் இந்திரன் வளர்த்த நாய். அதற்கு சரமேயஸ் என்ற பெயரில் இரண்டு குட்டிகளும் உண்டு. அவை ஒவ்வொன்றுக்கும் 4 கண்கள். அதாவது அவற்றின் சக்தியைக் குறிப்பிட இப்படி சங்கேத மொழியில் வேத காலப் புலவர்கள் மொழிவர். பாணிக்கள் இந்திரனின் பசுக்களைத் திருடிய போது சரமாதான் அவைகளைக் கண்டுபிடித்தது. அதன் குட்டிகளான சரமேயஸ் யம தர்ம ராஜனின் காவலர்கள். அதாவது சாவு வருவதை முன் கூட்டி அறிவிக்கும் சக்தி படைத்தவை!

(கிரேக்கர்கள் இதை ஹெர்மிஸ் என்று மாற்றி அவர்கள் புராணத்தில் சேர்த்துவிட்டனர். சம்ஸ்கிருத ‘ஸ’ கிரேக்க மொழியில் ‘ஹ’ ஆக மாறும். இதனால்தான் ‘சி’ந்து நதி ஆட்களை ‘ஹி’ந்துக்கள் என்று மொழிந்தனர்)

ரிக் வேத காலத்தில் மனிதன் நாய் வளர்த்த செய்தி இதில் கிடைக்கிறது. அது மட்டுமா? அதற்கு பெயர் வைத்தது, அதன் சேவைக்கு நன்றி கூறும் முகத்தான் அவை பற்றி கவிதை பாடியது ஆகியவற்றையும் எண்ணி இந்துக்கள் பெருமைப்படலாம்.

படத்தில் தத்தாத்ரேயர் (ரவிவர்மா ஓவியம்)

மகாபாரதத்தில் நாய்

பாண்டவர்கள் தங்கள் இறுதிக் காலத்தை புனித திசையான வடக்கில் இருக்கும் மேரு மலையை நோக்கி நடந்தே கழிக்க எண்ணுகின்றனர். தர்மபுத்திரனை ஒரு நாய் பின்தொடர்ந்து செல்கிறது. இப்படிப் போகும் வடதிசைப் பயணத்தை மகா பிரஸ்தானம் என்பர். சங்க காலத் தமிழர்கள் வட திசை நோக்கிச் செல்லுவதற்குப் பதிலாக வட திசை நோக்கி அமர்ந்து உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்தது புறநானூற்றில் உள்ளது பாண்டவர்கள் ஒவ்வொருவராக சுருண்டு விழுந்து இறந்தனர். கடைசியாக மிஞ்சியது தர்மனும் நாயும்தான். சொர்க்கத்துக்குப் போனபோது நாயை உள்ளேவிட முடியாது என்று சொல்லிவிட்டனர். நாய்க்கு அனுமதி இல்லாவிடில் எனக்கு சொர்க்கமே வேண்டாம் என்று சொன்னார் தர்மர். உடனே அந்த நாய் தான் தர்ம தேவதை என்று சுய ரூபத்தைக் காட்டி இறுதிக் காலத்திலும் தர்மன் கடைப்பிடித்த தர்மத்தைப் பாராட்டியது.

 

ராமாயணத்தில் நாய்

உத்தரகாண்டம் 60, 61 அத்தியாயத்தில் வால்மீகி முனிவர் ஒரு நாயின் கதையைக் கூறுகிறார். ஒரு நாயை ஒரு பிராமணன் அடிக்கவே அது ராம பிரானிடத்தில் புகார் செய்கிறது. ராமன அந்த பிராமணனுக்கு ‘சம்மன்’ அனுப்பவே அவன் கோர்ட்டில் ஆஜர் ஆனான். அவனுக்கு என்ன தண்டனை கொடுப்பது என்று மந்திரிகளைக் கேட்டபோது பிராமணர்களைத் தண்டிக்கமுடியாது என்று கூறிவிட்டனர். ஆனால் ராமன் அந்த பிராமணனை ஒரு மடத்துக்குத் தலைமை அதிகாரியாக நியமித்து ‘தண்டணை’ கொடுத்தார்! எல்லோருக்கும் ஒரே ஆச்சரியம். உத்தமபுத்திரன், சத்திய ஆத்மா ராமனா இப்படிச் செய்கிறான்? என்று புருவத்தை உயர்த்தினர். இதன் காரணம் நாய்க்குக் கூடத்தெரியுமே என்று ராமன் குறிப்பால் உணர்த்தினார்.

நாய் தன் கதையைக் கூறியது. பூர்வ ஜன்மத்தில் ஒரு மடத்தின்/ கல்வி நிறுவனத்தின் தலைவர் தாம் என்றும் அப்போது பணத்தைக் கையாண்ட குற்றத்தால் இப்போது அந்த பிராமணன் கையில் அடிபட நேரிட்டது என்றும் விளக்கியது. எல்லோருக்கும் விளங்கியது. அந்தப் பிராமணன்அதிகாரியாகப் பதவி ஏற்று தவறு செய்வான், தன்னாலேயே நரகத்துக்குப் போவான் என்று.

இந்தக் கதையில் பல நீதிகள் இருக்கிறது. விரிவஞ்சி விடுக்கிறேன்.

 

ஆதி சங்கரர் கண்ட 4 நாய்கள்

உலக மகா தத்துவ மேதை ஆதி சங்கரர் காசி மாநகரத்தில் 4 நாய்களுடன் வந்த சண்டாளனைப் பாதையில் இருந்து விலகச் சொன்னபோது அவன் கேட்ட கேள்வி ஆதி சங்கரருக்கு ஞானம் அளித்தது. அந்த சண்டாளனை பரமேஸ்வரனாகவும் 4 நாய்களை 4 வேதங்களாகவும் அவர் உணர்ந்தார்..

தத்தாத்ரேயர் என்னும் திரிமூர்த்தி அவதாரம் 4 வேதங்களை 4 நாய்களாக அழைத்து வரும் அற்புதமான படத்தை பாரதம் போற்றும் ஓவியர் ரவிவர்மா அழகாக வரைந்துள்ளார்.

புண்ய சீலர் நாமதேவ் வைத்திருந்த உணவுப் பண்டத்தில் ஒரு பகுதியை நாய் திருடிக் கொண்டு ஓடியது. அவரும் அதன் பின்னால் ஒடினார். எதற்காக? நெய் இல்லாமல் அதைச் சப்பிட்டால் நாயின் குடல் வெந்து விடுமே என்று எண்ணி நெய்யையும் அதற்குக் கொடுக்க ஓடினார்.

இந்து மதம் முழுதும் மரம், செடி, கொடி, பிராணிகள் எல்லாம் போற்றப்படுகின்றன. இப்போது வெளி நாட்டினர் இதை எல்லாம் படம் பிடித்து நாம் இன்று கூறும் புறச் சூழல் விடயங்களை இந்துக்கள் 3000 ஆண்டுகளுக்கு முன்னரே கூறிவிட்டனர் என்று டெலிவிசனில் காட்டுகின்றனர் (அண்மையில் நாகப் பாம்புகளைப் போற்றும் நாக பஞ்சமி நிகழ்ழ்சிகளை லண்டனில் கண்டோம்)

இந்து என்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா!!

 

Please read other animal stories posted earlier in this blog:

1. Animal Einsteins (Part 1 and Part 2)

2. Can parrots recite Vedas?

3. Why do animals worship Gods?

4. Mysterious Messengers for Ajanta, Angkor Wat and Sringeri

5. Elephant Miracles

6). 45 Words for Elephant

7. Can Birds Predict your Future?

8. Two Little Animals That Inspired Indians

9. Three Wise Monkeys from India

10. Mysterious Tamil Bird Man

11. Gajendra Moksha in Africa

12.அதிசய பறவைத் தமிழன்

Contact London Swaminathan at swami_48@yahoo.com

 

சம்பந்தருக்கு அடிமை அருணகிரிநாதர்

 

Murugan Statue at Batu Caves, Malaysia

திருப்புகழ் ஆராய்ச்சிக் கட்டுரை- 3

சம்பந்தருக்கு அடிமை அருணகிரிநாதர்

அருணகிரிநாதரின் திருப்புகழில் அப்பர், சுந்தரர், சம்பந்தர் ஆகியோரின் தேவார செல்வாக்கையும் மாணிக்கவாசகரின் திருவாசகச் செல்வாக்கையும் நன்கு காணமுடியும். இருந்தபோதிலும் அவர் சம்பந்தருக்குதான் அடிமை என்பதை அவரே திருப்புகழ் பாடல்களில் கூறுகிறார். 1300க்கும் அதிகமான திருப்புகழ் பாடல்கள் நமக்குக் கிடைத்துள்ளன. இதில் 149 பாடல்களில் அவர் திரு ஞான சம்பந்தப் பெருமானை நெஞ்சாரப் புகழ்கிறார், போற்றுகிறார். அவரைப் போல அமிர்த கவி இயற்ற அருள்  புரியுமாறு முருகப் பெருமானிடம் இறைஞ்சுகிறார். இந்த 149 பாடல் மேற்கோள்களையும் இங்கே கொடுத்தால் இந்தக் கட்டுரை புத்தக அளவுக்குப் பெருத்துவிடும். இதோ ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல சில எடுத்துக் காட்டுகள்:

 

புமியதனில் ப்ரபுவான

புகலியில்வித் தகர்போல

அமிர்தகவித் தொடைபாட

அடிமைதனக் கருள்வாயே;

சமரிலெதிர்த் தசுர்மாளத்

தனியயில்விட் டருள்வோனே

நமசிவயப் பொருளானே

ரசதகிரிப் பெருமானே

 

சம்பந்தரைப் புகலி (சீர்காழி) வித்தகர் என்று புகழ்ந்து அவரது பாடல்களை அமிர்தம் போன்றவை என்றும் போற்றுகிறார்.

பொதுவாக அவர் நால்வரின் தெய்வத் தமிழ் பாடல்களை “ஆரண கீத கவிதை, உபநிடத மதுர கவிதை, ஞானத் தமிழ் நூல்தாளக் கவிதை, பக்திமிக இனிய பாடல்” எனப் பாராட்டுகிறார்.

ஞான சம்பந்தருடன் வாதம் செய்து தோற்றுப்போன சமணர்கள் கழுவில் ஏறிய மதுரை சம்பவத்தைப் பல பாடல்களில் குறிப்பிடுகிறர். எப்போதெல்லாம் சம்பந்தரைச் சொல்கிறாரோ அப்போதெல்லாம் தமிழைப் புகழ்வதையும் காண்கிறோம். அன்று ஞான சம்பந்தர் இல்லாவிடில் தமிழே அழிந்திருக்கும் என்பது அருணகிரியின் கணிப்பு.

 

செந்தமிழ் நாளும் ஓதி உய்ந்திட ஞானமூறு

செங்கனி வாயிலோர் சொல் அருள்வாயே

பஞ்சவனீடு கூனுமொன்றிடு தாபமோடு

பஞ்சவறாதுகூறு சமண்மூகர்

பண்பறுபீலியோடு வெங்கழுவேற வோது

பண்டித ஞான நீறு தருவோனே

 

இன்னொரு பாடலில்

அழுதுலகை வாழ்வித்த கவுணியகுலாதித்த

அரிய கதிகாமத்தில் உரிய அபிராமனே—என்பார்.

சம்பந்தரின் ஊராகிய சீர்காழியில் பாடிய திருப்புகழ்களில் மறவாமல் அவரைப் பாடுகிறார்.

சேனக்குரு கூடலில் அன்று ஞானத் தமிழ் நூல்கள் பகர்ந்து

சேனைச் சமணோர் கழுவின் கண்மிசையேறத்

தீரத் திருநீறு புரிந்து மீனக்கொடியோன் உடல் துன்று

தீமைப் பிணி தீர உவந்த குருநாதா

என்று அற்புதமாகப் பாடுகிறார்.

 

அதே சீர்காழியில் பாடிய வேறு ஒரு பாடலில்

சமயமும் ஒன்றிலை என்ற வரும்பறி

தலையரு நின்று கலங்க விரும்பிய தமிழ் கூறும்

என்று தமிழையும் ஞான சம்பந்தரையும் ஒருங்கே புகழ்கிறார்.

 

ஒரு பாடலில் பாண்டிய மன்னனை தெற்கு நரபதி என்றும் சம்பந்தரை கவுணியர் பெருமான் என்றும் துதிக்கிறார்:

 

புத்தர் அமணர்கள் மிகவே கெடவே

தெற்கு நரபதி  திருநீறிடவே

புக்க அனல்வய மிகஏடுயவே உமையாள்தன்

புத்ரனென இசைபகர் நூல் மறநூ

கற்றதவமுனி பிரமாபுரம்வாழ்

பொற்ப கவுணியர் பெருமான் உருவாய் வருவானே.

 

சம்பந்தரை முருகப் பெருமானின் அவதாரம் என்று போற்றுவது சைவ மரபு. அதை இந்தப் பாடல் உறுதிசெய்துவிட்டது.

சம்பந்தப் பெருமான் ஞானப் பாலருந்தியதையும் பாட மறக்கவில்லை:

உமைமுலைத் தருபாற்கொடு

உரிய மெய்த் தவமாக்கி நலுபதேசத்

தமிழ்தனை கரைகாட்டிய திறலோனே

சமணரைக் கழுவில் ஏற்றிய பெருமாளே— என்பர்.

ஞானசம்பந்தரைப் பர சமயக் கோளரி என்றும் போற்றிப்பரவுகிறார். இருபது பாடலுக்கு ஒரு பாடல் வீதம் சம்பந்தரையும் அவர்தம் லீலைகளையும் துதிபாடுவதால் அருணகிரியை சம்பந்தரின் அடிமை என்பதில் தவறு ஒன்றுமிலை.

 

நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பிய ஞான சம்பந்தர் வாழ்க! புகலி வித்தகன் புகழ் பாடிய அருணகிரி வாழ்க!! தெய்வத் தமிழ் வாழ்க!!!

 

முந்தைய திருப்புகழ் ஆராய்ச்சிக் கட்டுரைகள்:

1.தனிமையில் இனிமை: அருணகிரிநாதர்

2.அருணகிரிநாதருடன் 60 வினாடி பேட்டி

3.டாக்டர் முருகனும் ‘பேஷன்ட்’ அருணகிரிநாதரும்

Contact London Swaminathan at swami_48@yahoo.com for the list of all the 400+ articles.

 

நல்லவர்களை யாருடன் தான் ஒப்பிடுவது?

சம்ஸ்கிருதச் செல்வம்-3 by S Nagarajan 

நல்லவர்களை யாருடன் தான் ஒப்பிடுவது?

 

அந்தப் புலவர் ஊர் ஊராகச் செல்பவர். பலரையும் பார்த்த பழுத்த அனுபவஸ்தர். ஒரு நாள் தான் கண்ட நல்லவர்களை எண்ணி எண்ணி நெஞ்சம் நெகிழ்ந்தார். அவர்களின் மேன்மையை ஒரு பாடலாகப் பாட எண்ணினார். அவர்களை யாருடன் ஒப்பிடலாம்? யோசித்தார்.

 

முதலில் பரந்த கடலைப் பரந்த நெஞ்சம் உள்ள அவர்களுடன் ஒப்பிடலாமா! அது உப்புக் கரிக்குமே

க்ஷாரோ வாரிநிதி:

 

குளிர்ந்த சந்திரனுக்கு அவர்களின் குளிர்ந்த பார்வை மற்றும் மனத்திற்காக ஒப்பிடலாமா?

சந்திரனுக்குக் களங்கம் உண்டே! நல்லவருக்குக் களங்கமே கிடையாதே!

களங்க கலுஸ்சந்த்ரோ

 

பிரகாசமான சூரியனுக்கு அவர்களின் பிரகாசத்தை ஒப்பிடலாமா?

ஆனால் சூரியன் சுட்டெரிக்குமே! அவர்கள் ஒரு நாளும் யாரையும் எரித்தது இல்லையே!

ரவி ஸ்தாபக்ருத:

 

மழை பொழியும் மேகத்திற்கு அவர்களது வள்ளன்மையை ஒப்பிடலாமா? ஆனால் மேகமோ சபல புத்தியுடையது. சில சமயம் பொழியும். சில சமயம் பொழியவே பொழியாது. என்றுமே பொழியும் வள்ளல்களுக்கு அதை ஒப்பிடுவது சரியில்லையே!

சரி வானம் ஒப்பிடுவதற்கு சரிப்படுமா. அதன் அகன்ற தன்மையைச் சொல்லலாமா! ஆனால் வெறும் சூன்யமான இடமாயிற்றே! சரிப்படாது.

 

பர்ஜன்யஸ்சபலாஸ்ரயோ(அ)ப்ரபடலாத்ருஷ்ய: ஸுவர்ணாசல:

 

சரி ஆழ்ந்த தன்மையைக் குறிக்க பாதாளத்தை ஒப்பிடலாமா! அங்கு பாம்புகள் அல்லவா நிறைந்திருக்கும். நல்லோரிடம் விஷம் ஏது?

சரி, ஸ்வர்க்கத்தில் உள்ள கேட்டவற்றையெல்லாம் வாரி வழங்கும் காமதேனுவுடன் ஒப்பிடலாமா? ஆனால் அது  கேவலம் ஒரு மிருகம் தானே! நல்லவர்கள் மனிதர்கள் ஆயிற்றே! ஒப்பிடுவது சரியில்லையே!

 

ஷூன்யம் வ்யோம ரஸா த்விஜிஹ்ன விதூதா ஸ்வர்கமதேனு: பசு:

 

சரி,கற்பகத் தருவை ஒப்பிடலாமா! அதுவோ மரம்; அதுவும் சரியில்லை.

சரி,நினைத்ததை வழங்கும் சிந்தாமணிக்கு ஒப்பிடலாமா. ஹூம், அது வெறும் கல்! கல்லுடனா நல்லவர்களை ஒப்பிடுவது?

காஷ்டம் கல்பதருர்த்ருஷஸ்த்சுரமணிஸ்தத்

கேன சாம்யம் சதாம் II

 

புலவர் குழம்பிப் போனார். நல்லவர்களை யாருடன் தான் ஒப்பிடுவது?

யாருடனும் ஒப்பிட முடியாது. தன் இயலாமையை அப்படியே கவிதையாகப் பொழிந்து விட்டார். பாடலை

முழுவதும் பார்ப்போம்:

 

க்ஷாரோ வாரிநிதி: களங்க கலுஸ்சந்த்ரோ ரவி ஸ்தாபக்ருத:

பர்ஜன்யஸ்சபலாஸ்ரயோ(அ)ப்ரபடலாத்ருஷ்ய: ஸுவர்ணாசல: I

ஷூன்யம் வ்யோம ரஸா த்விஜிஹ்ன விதூதா ஸ்வர்கமதேனு: பசு:

காஷ்டம் கல்பதருர்த்ருஷஸ்த்சுரமணிஸ்தத்

கேன சாம்யம் சதாம் II

 

 

கடலோ உப்புக் கரிக்கும்.சந்திரனோ களங்கமுடையது. சூரியனோ சுட்டெரிக்கும். மழைமேகமோ சபலமானது.வானமோ சூன்ய மயம். பாதாளமோ பாம்புகள் நிறைந்தது.ஸ்வர்க்கத்தில் உள்ள காமதேனுவோ ஒரு மிருகம். கற்பகத் தருவோ ஒரு மரம். சிந்தாமணியோ ஒரு கல். நல்லவர்களை யாருடன் தான் ஒப்பிடுவது?!

 

இது அமைந்துள்ள சந்தம்  சார்தூலவிக்ரிதம் என்னும் சந்தம்.

 

*****************  

டாக்டர் முருகனும் ‘பேஷன்ட்’ அருணகிரிநாதரும்

திருப்புகழ் ஆராய்ச்சிக் கட்டுரை 2

டாக்டர் முருகனும் ‘பேஷன்ட்’ அருணகிரிநாதரும்

தமிழ் இலக்கியத்தில் மருத்துவ நூல்களில் நோய்களின் பட்டியலைப் பார்ப்பதில் வியப்பொன்றும் இல்லை. ஆனால் பக்தி இலக்கியத்தில் ஏராளமான நோய்களை பல (திருப்புகழ்) பாடல்களில் பட்டியலிட்ட ஒரே பக்தர் அருணகிரிநாதராகத் தான் இருப்பார்! இதற்கு என்ன காரணம்?

அருணகிரிநாதர் எல்லோருக்கும் உடலிலும் உள்ளத்திலும் ஏற்படும் நோய்களுக்கு ஒரே டாக்டர் முருகப் பெருமான்தான் என்று உணர்ந்ததே ஆகும். கடவுளை டாக்டராகப் பார்ப்பது ஒன்றும் புதிதல்ல. ‘ருத்ரம்-சமகம்’ என்ற யஜூர் வேதப் பகுதியில் கடவுளை டாக்டர் என்று துதி பாடுகின்றனர்.

‘அத்யவோசததி வக்தா ப்ரதமோ தைவ்யோ பிஷக்’ என்பதில் பிஷக் என்பது டாக்டர் என்று பொருள்.

இந்த ருத்ரத்தில்தான் முதல் முதலாக நமச்சிவாய என்ற அரிய பெரிய மந்திரம் வெளியானது.

பிறவிப் பிணிக்கு மட்டும் இன்றி வாழும் போது உடலில் ஏற்படும் உபாதைகளுக்கும் முருகனே அருமருந்து என்பது அருணகிரிநாதர் முடிவு.

அருணகிரிநாதர் அவர்தம் திருப்புகழ் பாடல்களில் நோய்களை வரிசைபடுத்தி பாடும் அழகே தனி அழகுதான். அந்தக் காலத்தில் பொதுவாக கவலை தந்த நோய்கள் என்ன என்னும் சமூகவியல் ஆய்வுக்கும் இவை துணை செய்யும் என்பதில் ஐயமில்லை. இதோ சில பாடல்கள்:

 

தலைவலி மருத்தீடு காமாலை சோகைசுரம்

விழிவலி வறட்சூலை காயாசுவாசம்வெகு

சலமிகு விஷப்பாக மாயாவி கார பிணி—-யணுகாதே

 

பொருள்: தலைவலி, வசிய மருந்தால் வரும் நோய், மஞ்சள்காமாலை ரத்தசோகை, சுரம், கண்வலி, வறள் என்ற வயிற்று வலி, காச நோய் (டி.பி.), மூச்சுப் பிடிப்பு, நீரிழிவு, கொடிய விஷ நோய்கள், மாயையால் வரும் விகாரமான நோய்கள் என்னை அணுகாதவாறு காப்பாயாக

டயாபடீஸ் என்னும் சர்க்கரை வியாதி மிக நீண்ட காலமாக இந்திய மக்களை வாட்டிவருவதால பல பாடல்களில் நீரிழிவு, வெகு சலம் என்று குறிப்பிடுகிறார். கண் வலிக்கு தூய தமிழில் விழி வலி என்று கூறுவதும் படித்து இன்புறத்தக்கது.

இன்னும் ஒரு பாடலில்

 

இருமலு ரோக முயலகன் வாத

மெரிகுண நாசி—விடமே நீ

ரிழிவுவிடாத தலைவலி சோகை

யெழுகளமாலை—யிவையோடே

பெருவயி றீளை யெரிகுலை சூலை

பெருவலி வேறுமுள நோய்கள்

பிறவிகள் தோறு மெனை நலியாத

படியுன தாள்கள்—அருள்வாயே

 

இருமல், முயலகன் என்னும் வலிப்பு நோய், வாதம், மூக்கு எரிச்சல், விஷ நோய்கள், நீரிழிவு (டயபடீஸ்), நீங்காத தலைவலி, ரத்த சோகை, கழுத்தைச் சுற்றிவரும் கழலை, மகோதர நோய், நுரை ஈரலில் ஏற்படும் கோழை, நெஞ்சு எரிச்சல், தீராத வயிற்றுவலி, மிகவும் வலி தரக் கூடிய பிற நோய்கள் எந்தப் பிறவியிலும் என்னை அணுகாதபடி அருளவேண்டும் என்று வேண்டுகிறார்.

தீராத தலை வலி என்பது மைக்ரைன் என்னும் ஒற்றைத் தலைவலி ஆகும்.நெஞ்சு எரிச்சல் என்பது அல்சர் எனப்படும் வயிற்றுப் புண் நோயாக இருக்கலாம். இதோ இன்னும் ஒரு வியாதிப் பாடல்:

 

வாதம் பித்தமிடா வயிறீளைகள்

சீதம் பற்சனி சூலை மகோதர

மாசங்கட் பெரு மூல வியாதிகள்— குளிர் காசம்

மாறுங் கக்கலொ டேசில நோய்பிணி

யோடுந் தத்துவ காரர் தொணூற்று

வாறுஞ் சுற்றினில் வாழ் சதிகாரர்கள்—-வெகுமோகர்

 

இதில் வாத, பித்த, கப நோய்கள், பானை வயிறு, சீதபேதி, ஜன்னி, வயிற்றுவலி, மகோதரம், கண் நோய்கள், மூல வியாதி, குளீர் ஜுரம்,காச நோய், தொடர்ந்து வரும் வாந்தி என பெரிய பட்டியலிட்டுவிட்டார்.

இவ்வாறு வியாதிகளைப் பட்டியல் இட்டுவிட்டு இவைகள் வரக்கூடாதென்று அவர் வேண்டுவது அவருக்காக அல்ல என்பதை நாம் அறிய வேண்டும். முருக பக்தர்களை இந்த நோய்கள் அணுகாது என்பதோடு, அப்படியே முன்கூட்டியே நோய்வந்தவர்கள் இந்த திருப்புகழ் பாடல்களைப் படித்தால அந்த நோய்கள் பறந்தோடிவிடும் என்பதும் கண்கூடு.

கந்த சஷ்டிக் கவசம் உள்பட பெரும்பாலான கவசங்களில் நோய்களின் பெயர்கள் சுருக்கமாக மட்டுமே வரும். ஆனால் நம் மீது கருணைகொண்ட அருணகிரி அத்தனை நோய்களையும் பட்டியல் போட்டு முருகனிடம் வேண்டி நமக்கு அருள் பாலிக்கிறார்.

இதோ இன்னும் இரண்டு பாடல்களை மட்டும் தருகிறேன்:

 

நீரிழிவு குட்ட மீளை வாதமொடு பித்தமூல

நீள்குளிர் வெதுப்புவேறு—முளநோய்கள்

நேருரு புழுக்கள் கூடு நான்முக நெடுத்த வீடு

நீடிய விரத்த மூளை— தசைதோல் சீ

பாரிய நவத்துவார நாறுமு மலத்திலாறு

பாய்பிணி யியற்று பாவை— நரி நாய் பேய்

 

இதில் முன்கூறியவாறு வியாதிகளை வரிசைப்படுத்திவிட்டு இந்த 9 துவாரங்கள் உள்ள உடல், புழுக்கள் உடையது. நரியும் நாயும் கோட்டானும் கழுகுகளும் உண்ணும் பாழான உடல் எடுத்து வீண்பொழுது போக்கமாட்டேன் என்கிறார். கடைசியாக சிவஞான சித்தி பெற நோயற்ற உடல் வேண்டும் என்று வேண்டுகிறார்.

வலிவாத பித்தமொடு களமாலை விப்புருதி

வறல் சூலை குட்டமொடு—குளிர்தாகம்

மலநீ ழிச்சல்பெரு வயிறீளை கக்குகளை

வருநீர டைப்பினுடன் …….. வெகுகோடி

சிலை நோயடைத்தவுடல் புவிமீதெ டுத்துழல்கை

தெளியாவெ னக்குமினி—முடியாதே

சிவமார் திருப்புகழை எனு நாவினிற்புகழ

சிவஞான சித்திதனை—யருள்வாயே

 

இதிலும் வலிப்பு, பித்தம் கண்டமலை, சிலந்திப் புண், உடல் இளைப்பு, வயிற்று உளைவு, குஷ்டம், குளிர் தாகம் நீரிழிவு, மகோதரம், கபம், வாந்தி, மூத்திரக் கடுப்பு முதலான கோடிக்கணக்கான நோய்களை பெற்று உடல் எடுத்து இனியும் திரிய முடியாது. மங்கலம் நிறைந்த உன் திருப்புகழை நாவாரப் பாட சிவஞான சித்தி அருளவேண்டும் என்று வேண்டுகிறார்.

மீண்டும் ஒருமுறை நினைவுகூறுவதில் தவறில்லை. இது அருணகிரி தனக்கு வந்த நோய்கள் அல்லது வரக்கூடிய நோய்கள் என்று நினைத்துப் பாடவில்லை. நம்மை எச்சரிக்கவும், நோய்வந்தாலும் திருப்புகழைப் பாடுவோரை அது ஒன்றும் பாதிக்காது என்று உணர்த்தவுமே இப்படி பல பாடல்களில் கொட்டித் தீர்த்திருக்கிறார்.

நாமும் டாக்டர் முருகனை வணங்கிப் பிறவிப் பிணியிலுமிருந்தும் உடற்பிணியிலிருந்தும் விடுதலை பெறுவோமாக.

 

திரு கோபால சுந்தரம் கொடுத்த பொருள் விளக்க உரையை பெரும்பாலும் பயன்படுத்தியுள்ளேன். கௌமாரம்.காம்—க்கு நன்றி.

முந்தைய திருப்புகழ் ஆராய்ச்சிக் கட்டுரைகள்:

1.தனிமையில் இனிமை: அருணகிரிநாதர்

2.அருணகிரிநாதருடன் 60 வினாடி பேட்டி

Contact London Swaminathan at swami_48@yahoo.com for the list of all the 400+ articles.

யார் மிக மிகக் கீழானவன்?

 

Picture of Hare Krishna Bhajan and dance

சம்ஸ்கிருதச் செல்வம்-2 by S Nagarajan

2. யார் மிக மிகக் கீழானவன்?

 

கவிஞருக்கு ஒரு சந்தேகம் வந்து விட்டது – யார் மிக மிகக் கீழானவன் என்று! அது தெரிந்து விட்டால் அப்படிப்பட்டவருடைய தொடர்பை அறுத்து விடலாமில்லையா!

 

சிலர் சொன்னார்கள் பணம் இல்லாதவன் தான் கீழானவன் என்று.

 

கேசித் வதந்தி தனஹீன ஜனோ ஜதன்ய:

சிலர் தனஹீனனைக் கீழானவன் என்று சொல்கின்றனர்

என்று பதிவு செய்து கொண்டார்.

 

பின்னர் மற்றும் சிலரைப் பார்த்துக் கேட்டார். அவர்களோ குணமில்லாதவன் தான் கீழானவன் என்றனர். நற்குணமில்லாதவர்கள் தாம் கீழானவர்கள் என்று அவர்கள் சொல்வதும் கவிஞருக்குச் சரியாகத் தான் பட்டது. அப்படியே அதைப் பதிவு செய்து கொண்டார்.

 

கேசித் வதந்தி குணஹீன  ஜனோ ஜதன்ய:

சிலர் குணஹீனனையே கீழானவன் என்று சொல்கின்றனர்.

 

தனஹீனனா அல்லது குணஹீனனா – இருவரில் யார் கீழானவன்!

 

குழம்பிய கவிஞரின் முன் வியாஸ பகவான் வந்தார்.

கவிஞர் தன் சந்தேகத்தை அவரிடம் கேட்க அவர் புன்முறுவல் பூத்தார். இருவரும் கீழானவர் இல்லை என்று கூறிய அவர் சரியான பதிலைச் சொல்லி விட்டுச் சென்றார்.

 

புளகாங்கிதம் அடைந்த கவிஞர் அதை அப்படியே பதிவு செய்து உலக மக்களின் நன்மைக்காக முழுவதுமாகப் பாடி வைத்தார்.

Picture of Harekrishna Chariot Procession in London

வியாஸர் சொன்னது என்ன?

 

வ்யாஸோ வதத்யகிலவேத விசேஷவிக்ஞோ

நாராயண ஸ்மரணஹீன  ஜனோ ஜதன்ய:

 

அகில வேதத்திலும் விசேஷ ஞானத்தை உடைய வியாஸ பகவானோ நாராயணனை ஸ்மரணம் செய்யாதவனே உண்மையில் மிக மிகக் கீழானவன் என்றார்.

 

பாடலை முழுவதுமாகப் படித்து பெரும் உண்மையை நமக்காகத் தந்த கவிஞருக்கு நன்றி சொல்வோம்!

 

 

கேசித் வதந்தி தனஹீன ஜனோ ஜதன்ய:

கேசித் வதந்தி குணஹீன  ஜனோ ஜதன்ய: I

வ்யாஸோ வதத்யகிலவேத விசேஷவிக்ஞோ

நாராயண ஸ்மரணஹீன  ஜனோ ஜதன்ய: II

 

சிலர் தனஹீனனாக உள்ளவர்களைக் கீழானவர் என்று சொல்கின்றனர். சிலரோ குணஹீன ஜனங்களைக் கீழானோர் என்று சொல்கின்றனர். அனைத்து வேதங்களிலும் விசேஷ அறிவு படைத்தவரான வியாஸரோ நாராயண ஸ்மரண ஹீனனாக உள்ளவரையே மிகக் கீழானவர் என்று சொல்கிறார்!

 

அரிய உண்மையைத் தெரிந்து கொண்டோமல்லவா! நாராயணனை அனுதினமும் ஸ்மரிப்போமாக!!

 

இது அமைந்துள்ள சந்தம் வசந்ததிலகா சந்தம்!

 

***************

தனிமையில் இனிமை:- அருணகிரிநாதர்

திருப்புகழ் ஆராய்ச்சிக் கட்டுரை-1

தனிமையில் இனிமை:- அருணகிரிநாதர்

அவ்வையாரிடம் இனியது எது என்று முருகப் பெருமான கேள்வி கேட்க அவர் கூறிய பதில் இது: ஏகாந்தமே இனிது என்று கூறிவிட்டு அதைவிட இனிது ‘சத் சங்கமே’ என்று கூறுகிறார். ஆதி சங்கரரும் பஜ கோவிந்தம் (சத் சங்கத்வே நிஸ் சங்கத்வம்…..) பாடலில் இந்தக் கருத்தை வலியுறுத்துகிறார்.

 

இனியது கேட்கின் தனிநெடு வேலோய்!
இனிது இனிது ஏகாந்தம் இனிது;
அதனினும் இனிது ஆதியைத் தொழுதல்;
அதனினும் இனிது அறிவினர்ச் சேருதல்;
அதனினும் இனிது அறிவுள்ளாரைக்
கனவினும் நனவினும் காண்பது தானே! (அவ்வையார்)

அருணகிரிநாதரும் திருப்புகழில் இதே கருத்தை ‘தனிமையில் இனிமை’ என்று வருணிக்கிறார்.

 

இனிமை தருமொரு தனிமையை மறைகளி

னிறுதி யறுதியி டவரிய பெறுதியை

இருமை யொருமையில் பெருமையை  வெளிபட மொழிவாயே

என்று பாடுகிறார்.

 

இதன் பொருள்: இன்பத்தை தருகின்ற ஒப்பற்ற தனி நிலையை, வேதங்களின் முடிவான பொருள்களும் முடிவுசெய்ய முடியாத இருமையில் ஒருமை என்ற கருத்தை அடியேனுக்கு உபதேசித்து அருளவேண்டும் (இருமையில் ஒருமை என்பது சக்தி, சிவம் என்ற பேதமற்ற தன்மை அல்லது அஹம் பிரம்மாஸ்மி= அவன் நானே என்ற அத்வைதப் பெரு நிலை)

 

இன்னொரு பாட்டிலும் ஏகாந்த மவுன நிலை பற்றிப் பாடுகிறார்:

பறவையான மெய்ஞ்ஞானிகள் மோனிகள்

அணுகொனா வகை நீடுமிராசிய

பவன பூரக வேகிக மாகிய விந்துநாதம்

 

இதில் பறவை மெய் ஞானிகள் என்பது பரமஹம்சர் என்பதன் மொழிபெயர்ப்பாகும். ராமகிருஷ்ண பரமஹம்சர் போன்ற ஞானிகள் இகலோகத்தில் இருந்தும் மெய்ஞ் ஞானத்தை அடைந்தவர்களாவர். எப்படி ஹம்சம் (அன்னப் பறவை) தண்ணீரும் பாலும் கலந்திருந்தாலும் பாலை மட்டும் எடுத்துக் கொள்ளுமோ அது போல ஞானிகள் நல்லதை மட்டும் எடுத்துக்கொள்ளும் பக்குவம் பெற்றவர்களாவர்.

மேலும் ஹம்சம் என்ற சொல் அஹம் ச: = அவன் நானே என்ற இருமையற்ற ஒருமை நிலையை (அத்வைத) உணர்த்துவதாகும். மூச்சு வெளியே போகும் போது ஹம் என்ற சப்தத்துடனும் உள்ளே வரும் போது ச என்ற சப்தத்துடனும் வருவதாக ஞானிகள் கூறுவர்.

வேறு ஒரு இடத்தில் உபநிஷதக் கருத்துக்களை அற்புதமாகப் பாடுகிறார்:

 

வாசித்துக் காணொ ணாதது

பூசித்துக் கூடொ ணாதது

வாய் விட்டுப் பேசொ ணாதது

மாசர்க்குத் தோணொ ணாதது

நேசர்க்குப் பேரொ ணாதது

மாயைக்குச் சூழொ ணாதது

என்று பாடி மெய்ஞ் ஞானம் அருள வேண்டுகிறார்.

பொருள்: நூல்களால் அறியமுடியாதது, பூஜை புனஸ்காரத்தால் அடைய முடியாதது, வார்த்தைகளால் வருணிக்க முடியாதது, குற்றமுடையோரால் உணர முடியாதது, அன்புடையோரிடமிருந்து விலக முடியாதது, மாயையினால் சூழ முடியாதது.

சொற்கள் எங்கு செல்லாவோ அங்குதான் மெய்ஞ் ஞானம் பிறக்கிறது என்பது உபநிஷத முடிபு. கடவுளைக் கண்டவர் அவனைப் பற்றிப் பேசமுடியாது. அவனைப் பற்றிப் பேசுபவர்கள் அவனைக் காணவில்லை என்றே அர்த்தம். இதைத்தான் தமிழில் கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர் என்பர்.

 

பேசா அநுபூதி

அருணகிரி நாதரே பேசா அநுபூதி பிறந்ததுவே என்றும் சும்மா இரு சொல் அற என்றும் கந்தர் அநுபூதியில் பாடுகிறார்.:

செம்மான் மகளைத் திருடும் திருடன்

பெம்மான் முருகன் பிறவான் இறவான்

சும்மா இரு சொல் அற என்றலுமே

அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலனே

 

தூசா மணியும் துகிலும் புனைவாள்

நேசா முருகா நினது அன்பு அருளால்

ஆசா நிகளம் துகளாயின பின்,

பேசா அநுபூதி பிறந்ததுவே

 

கடவுளைக் கண்டவர்கள் சும்மா இருப்பார்கள், மோனிகள் (மவுன நிலை) ஆகி சொல்லற்றுப் போய்விடுவார்கள். இதுதான் பேசா அநுபூதி.

ஆயினும் ராமகிருஷ்ண பரமஹம்சர் ஒரு ரகசியத்தை வெளியிட்டுள்ளார். சிலர் மட்டும் பிரம்ம சாகரத்தில்= பேரானந்தக் கடலில் குதித்து முத்தெடுக்கப் போகும் முன், “அடடா, இப்பேற்பட்ட பேருண்மையை மக்களுக்கும் சொல்லிவிட்டு வருவோம்” என்று ஓடிவந்து விடுவார்களாம். அப்படிப்பட்ட ஞானிகளில் பரமஹம்சரும் ஒருவர். ஆகையால்தான் நமக்கு இந்த ரஹசியம் தெரிந்தது. ஞானசம்பந்தர், விவேகானந்தர், மாணிக்கவாசகர் எல்லோரும் இளம் வயதிலேயே இறைவனை அடைந்துவிடுவதன் ரகசியமும் இதுவே. சில ஞானிகள் தன்னுடன் மற்றவர்களையும் அழைத்துச் செல்வர். ஞான சம்பந்தர், ராம பிரான் ஆகியோர் இப்படி தன்னுடன் இருந்தவர்களையும் முக்தி நிலைக்கு அழைத்துச் சென்றனர்.

 

கீதையில்

கீதையில் கண்னபிரானும் ஏகாந்தம் பற்றிப் பேசுகிறார் (6-10)

யோகி யுஞ்சீத சததம் ஆத்மானம் ரஹசி ஸ்தித:

ஏகாகி யதசித்தாத்மா நிராசீ: அபரிக்ரஹ:

பொருள்: எப்போதும் ஏகாந்தத்தில் (ரஹசி) இருக்க வேண்டும் தன்னந்தனியனாய் உடலையும் உள்ளத்தையும் கட்டுப் படுத்த வேண்டும். ஆசை இருக்கக் கூடாது. உடமைகள் எதுவும் இருக்கக் கூடாது. யோகியானவுடன் இப்படி உறுதிபெற வேண்டும்.

நாமும் தனிமையில் இனிமை காணும் பக்குவம் பெறுவோம்.

contact london swaminathan at swami_48@yahoo.com

பல்லாங்குழி ஆட்டம் பரவிய மர்மம்!

பல்லாங்குழி விளையாட்டு உலகின் பல பகுதிகளில், குறிப்பாக ஆப்பிரிக்காவின் கிழக்குக் கடற்கரை நாடுகளிலும் இந்தோநேசியா உள்பட தென் கிழக்கு ஆசிய நாடுகளிளும் பரவலாக விளையாடப்படுகிறது. தமிழ்நாட்டின் கிராமப் புறங்களில் தூய தமிழ்ச் சொற்கள் அல்லது சில சம்ஸ்க்ருத சொற்களுடன் ஆடப்படும் இந்த ஆட்டம் எங்கே தோன்றியது என்று ஆராய்ந்தேன். தமிழ்நாட்டில்தான் இது பெரும்பாலும் தோன்றியிருக்க வேண்டும் பின்னர் தமிழர்கள் வணிகத்துக்காக சென்ற இடங்கள் எல்லாம் இதை எடுத்துச் சென்று பரப்பியிருக்கலாம். இவ்வாறு நம்புவதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன.

1.நாம் இந்தோநேசியா, வியட்நாம், மலேசியா முதலிய நாடுகளுடன் தொடர்பு கொண்டிருந்தோம். பல்லவ கிரந்தம் என்னும் வட்டெழுத்துதான் தென்கிழக்காசிய நாடுகளின் எழுத்து வடிவங்களுக்கு மூலம். இதை

1.India-Madagascar Link via Indonesia,

2.Sanskrit Inscriptions in Strange Places,

3.Pandya King who ruled Vietnam,

4.Did Indians build Pyramids?

ஆகிய கட்டுரைகளில் ஏற்கனவே விளக்கிவிட்டேன். 2.இரண்டாவது காரணம் காசி, பசு, மூன்று விரை(விதை) ஆட்டம், ஆறு விரை ஆட்டம், சீதா பாண்டி, ராஜா பாண்டி, காசி பாண்டி முதலிய சொற்கள் அனைத்தும் தமிழ் அல்லது வடமொழிச் சொற்கள் ஆகும் 3. சீதை அசோகவனத்தில் ஆடிய ஆட்டம் என்பதே சீதாப் பாண்டி என்று மக்கள் நம்புவதாகும். இது இலங்கையிலும் பழங்காலம் முதலே இருக்கிறது. 4.எண்கள், கணக்கு விஷயத்தில் இந்தியர்கள் கண்ட முன்னேற்றத்தை உலகமே ஒப்புக் கொள்கிறது. செஸ் விளையாடு நம் நாட்டிலேயே தோன்றியது. பிதகோரஸ் தியரம், பை என்பன எல்லாம் இந்தியாவில் தோன்றியனவே. செஸ் தோன்றிய சுவையான கதையை “இந்தியா மீண்டும் உலக செஸ் சாம்பிய”னென்ற கட்டுரையில் கொடுத்துவிட்டேன். 5. தமிழ்நாட்டின் பழைய செப்பேட்டில் பல்லாங்குழி என்ற சொல் இருக்கிறது.

தென்கிழக்கு ஆசிய நாடுகளுடன் நமக்குள்ள தொடர்பை அங்குள்ள 800 சம்ஸ்கிருத கல்வெட்டுகளும் காளிதாசர் முதலியோரின் குறிப்புகளும் காட்டுகின்றன. இந்தோநேசியா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் பல்லாங்குழியை சொங்கக் ,சுங்க என்று அழைக்கிறார்கள். இது சங்க்யா(எண்ணிக்கை) என்ற சம்ஸ்கிருத சொல்லின் திரிபாகும். தென் கிழக்காசிய நாடுகளின் சொற்களில் ஏராளமான சம்ஸ்கிருத சொற்கள் இருப்பது மொழியியல் நிபுணர்கள் அறிந்த விஷயமே.

செப்பேட்டில் பல்லாங்குழி

பல்லாங்குழி என்ற சொல் கி.பி 550-இல் பல்லவ மன்னன் சிம்மவர்மன் வெளியிட்ட பள்ளன்கோவில் செப்பேட்டில் காணப்படுகிறது. வஜ்ரநந்தி குரவர்க்கு பள்ளிச் சந்தமாகக் கொடுக்கப்பட்ட நிலத்துக்கு நாற்பால் எல்லைகளைச் சொல்லுகையில் கீழ்க்கண்ட வரி வருகின்றது:

“ வட பால் எல்லை பல்லாங்குழிக் காவின் தெற்கும்”

பல்லாங்குழிகள் நிறைந்த தோட்டம் அல்லது பல்லாங்குழி போல பல குண்டும் குழியும் நிறைந்த தோட்டம் என்று இதற்குப் பொருள் கொள்ளலாம். என்ன பொருளாக இருந்தாலும் பல்லாங்குழி என்ற சொல் அப்போதே புழக்கத்தில் இருந்ததை அறிகிறோம்.

இந்தியில் மங்கலா

இந்தி மொழியில் இந்த ஆட்டத்துக்கு மங்கலா என்று பெயர். இது அராபிய சொல் நகலா (நகர்த்தல்) என்பதில் இருந்து வந்ததாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள் இது சரியில்லை என்றே தோன்றுகிறது. முதலில் நகலா என்பதே தமிழ் சொல் நகர்த்து என்பதுடன் தொடர்புடையது! இந்தியாவின் வடகோடி முதல் இலங்கையின் தென்கோடி வரை ராமாயண காலத்தில் இருந்து ஆடப்படும் (சீதாப் பாண்டி) ஆட்டம் எப்படி அராபிய நாட்டில் இருந்து வந்திருக்க முடியும்? மேலும் நகலா என்பதற்கும் மங்கலாவுக்கும் தொடர்பு மிகவும் குறைவு.

உண்மையில் அராபியர்கள் விஞ்ஞான விஷயங்கள் முழுதையும் நம்மிடம் கற்று மேலை உலகத்துக்கு எடுத்துச் சென்றனர். இதனால்தான் இந்து எண்களை அராபிய எண்கள் என்று மேலை உலகம் கூறுகிறது. அல்பெருனி, இபின் படூடா போன்ற எழுத்தர்கள் இந்திய அறிவியல் முன்னேற்றத்தைப் பற்றி வியந்து போற்றி இருக்கிறார்கள்.

மங்கலா என்பது மங்களம் (சுபம்) என்ற சொல்லில் இருந்தே வந்திருக்க வேண்டும் இதை எதிர்ப்போர் நம் எல்லோருக்கும் வேறு ஒரு கேள்விக்கு பதில் சொல்ல வேண்டி இருக்கும். உலகம் முழுதும் 800 வகையான பல்லாங்குழி ஆட்டங்கள் இருப்பதாக விக்கிபீடியா கூறுகிறது. இந்திக்காரர்களைத் தவிர மற்ற எல்லோரும் புதுப் பெயர் வைத்துக் கொண்டார்கள் என்பதை நம்ப முடியாது. அப்படியானால் உண்மை என்ன? மண் கல என்பது மண் குழி என்பதன் திரிபாகவும் இருக்கலாம். பலர் மண்ணில் குழி செய்தும் விளையாடும் படங்கள் என்னிடம் உள்ளன.

இந்த விளையாட்டு தென் இந்தியாவில் தோன்றி மெல்ல மெல்ல இந்தோநேசியா மூலம் மடகாஸ்கர், மொசாம்பிக் மற்றும் ஆப்பிரிக்க எல்லை நாடுகளுக்குள் நுழைந்திருக்கவேண்டும். ஆப்பிரிக்காவிலும் கிழக்குக் கரை அருகிலேயே இது பரவி இருப்பது நோக்கற்பாலது.

ஓவாரி, நானோவாரி ஆவாரி(அவாலி) என்ற ஆப்பிரிக்க பல்லாங்குழி ஆட்டப் பெயர்களில் உள்ள வாரி என்பது தமிழ் சொல்லாகும். வாரி எடுத்தல் அல்லது விரை=வாரி என்று மருவி இருக்கலாம். சிரியா, எகிப்து, லெபனான் நாடுகளில் கூட மங்கலா என்பது ஒரே ஆட்டத்தைக் குறிக்கவில்லை.

இந்தியர்களின் கணிதப் புலமை, செஸ் முதலிய ஆடங்களை உண்டாக்கிய பழமை, தென்கிழக்காசிய நாடுகளை 1300 ஆண்டுகளுக்கு ஆண்ட திறமை, பல்லாங்குழி ஆட்டச் சொற்களின் வளமை ஆகியவற்றைப் பார்க்கையில் நாம் இதை உலகுக்கு ஏற்றுமதி செய்தோமா அல்லது நாம் வேற்று நாட்டிலிருந்து இறக்குமதி செய்தோமா என்பதை வாசகர்களே உய்த்துணர்வது கடினமல்ல.

பல்லாங்குழி என்றால் என்ன?

“இது ஒரு விளையாட்டுப் பலகை. இதில் பக்கத்திற்கு ஏழாக இரண்டு பக்கத்திற்கு 14 குழிகளில் குழிக்கு ஐந்தாக 70 காய்களைக் கொண்டு ஒவ்வொரு குழியிலுள்ள காயை ஒவ்வொன்றாக எடுத்து இருவர் குழியிற் போட்டு ஆடுகையில் யாருடைய பக்கத்தில் காய்கள் எல்லாம் சேர்ந்துவிடுகின்றனவோ அவர்கள் வென்றவர்களாம். இது ஒரு வகை. இதிற் இன்னும் பலவகை யுண்டு” (பக்கம் 1052, அபிதான சிந்தாமணி)

பல்லாங்குழி ஆட்டத்தின் மூலம் மனக்கணக்கு, மனதைக் குவியப்படுத்தும் சக்தி, பொதுவாக கணக்கில் ஆர்வம் உண்டாகும்.

Who is Dhananjayan?

Picture: Dhananjayan with folded hands on left & Pandya king on the right.

 

I was fascinated by the name DHANANJAYAN when I found it in Mahabharata, Alupa coins, Cambodian folk tales, Vishnu Sahasranama, Nagas and history of Madurai Meenakshi temple. I also knew that Dhanajayans are famous names in Bharatanatyam. But I was provoked to do some research in to it when I read Dhanajayan under baby names it is the name of Murugan (Lord Skanda). I think it is wrong because I found no proof for that claim.

 

The most famous Dhanajayan was Arjuna. One of his ten names was Dhanajayan. If the roar of thunder is heard, Hindus used to recite the ten names of Arjuna to avoid thunder striking them. Arjuna got this name when he won the wealth (Dhanam= wealth, Jayan= victor) of Uttarakuru country in the north.

 

Bhagavad Gita Dhanajayan

The name Dhananjayan comes in Vishnu Sahasranama (couplet 70) as one of the names of Lord Vishnu. The meaning according to Sahasranama bhasyam is:

“Arjuna is called so because by his conquest of the kingdoms in the four quarters, he acquired great wealth (Dhanam). Arjuna is a Vibhuti, a glorious manifestation of the Lord, according to the statement of the Gita (10:57): Panadavanam dhananjaya:–among the Pandavas, I am Dhananjaya, says Krishna.”

Pandya Dhanajaya on Coins:

The Alupas, one of the very ancient dynasties of Karnataka, ruled for over a thousand years in the coastal tract of Karnataka. Even Ptolemy (79  to 168 AD) refers to the Alupas. They are referred to in the famous Halmidi (500 AD) inscription. The Alupas belonged to the lunar race and had fish as their royal emblem, exactly like the Pandyas of Madurai. Among the most important titles of the Alupas, were Pandita Pandya and Pandya Dhananjaya. This has been found on coins and inscriptions in Kannada. This shows Pandyas were very familiar with the name Dhanajaya. This takes us to the history of Madurai Meenakshi Temple.

 

Picture of Golden Lotus tank in Madurai Temple

 

Dhanajaya statue in Madurai

The story of the world famous Madurai Meenakshi Temple begins with a merchant called Dhananjaya. (Please read my article THE WONDER THAT IS MADURAI MEENAKSHI TEMPLE in this blog). A merchant by this name travelled to a neighbouring town and returned to his home town Manavur through the thick forest of Kadamaba trees. Since the sun was already set he took rest under a tree. Suddenly he saw bright lights. He hid himself and watched Indra and other angels from the heaven came down to earth doing Puja to a Linga (formless Shiva). He was so excited and reported it to the Pandya king Kulasekara the very next morning. The king visited the place with all his retinue immediately and built a temple over the Shiva Lingam and a city slowly came up around this temple. Anyone can see Madurai as a well planned city in the shape of squares within squares round the temple. It is called lotus city.

The statue of Dhanjaya is in the Golden Lotus Tank pillar inside Maduari temple. This story is narrated in Thiru Vilayadal Puranam in Tamil.

 

Surprise from Cambodia

Mahabharata’s character Arjuna had good connection with the south of India by marrying Chitrangada. They had a son by name Babruvahana/bull vehicle which also links to Shiva whose vehicle is a bull. When we read that Dhananjaya Pandya in Karnataka and Dhannjaya’s early connection with Manalur, the previous capital of Pandya, we see a link between Arjuna-Pandya-Dhananjaya-fish symbol- Bull Vahana/vehicle etc. This calls for deeper research in to this area.


Picture of Halmidi Kannada inscription

 

The next surprise comes from Cambodia. If someone sees names like Rama, Krishna, Buddha in Cambodia one won’t be surprised because we have a history of Hindu rule in South East Asia for 1300 years. (Please read my article THE PANDYA KING WHO RULED VIETNAM). This Dhananjayan is neither a king nor a historical figure. But he was a jester in a folk tale. The famous stories of Tenali Rama are duplicated in Cambodia by replacing Tenali Rama’s name with Dhananjaya. How did his name travel that far from India and how did he become a jester or clown is a mystery. This calls for more research.

Judith Jacob in her book ‘Cambodian linguistics, literature and history’ says:

“Thmenh Chey (Dhmen Jay or Dhananjay) is a story known also in Burma and Thailand. Thmenh Jay is a poor boy who rise, first to be the servant of a rich man, then to upon to attend the king and finally to be the most eminent man in the land. All this he does by his wits and in particular by outwitting his current master in verbal adroitness”.

I have read some of the stories and they are very similar to stories of Tenali Rama.

 

Asvagosha’s Dhanajaya

Asvagosha was one of the great writers of ancient India. He lived in the period of Kushan emperor in first century AD. Unlike other Buddhist writers he wrote in Sanskrit. Many Kavyas and dramas are attributed to him. One of the characters in Asvagosha’s drama was Dhananjaya! Probably Cambodian’s followed this fictional character to create their jester.

 

More Dhananjayans

Dhananjayan is a famous name in Bharatnatyam in Chennai. The couple started their own school in their names. The ancient Djhanajayas include the son of Naga woman Kadru, a Jain author who wrote ‘Dhananjayam’ and a commander in Lord Muruga’s army. This is the only link with Muruga/Skanda. Dhanajayan is one of the names of Agni/fire. Since Vedas connect Agni to Lord Skanda/Murugan we may see some distant link to Murugan.

மனிதர்களைச் சுற்றி ஒளிவட்டம் இருப்பது உண்மையே!

This is already posted in English by me: swami

மனிதர்களைச் சுற்றி ஒளிவட்டம் இருப்பது உண்மையே!

பிரபல விஞ்ஞான பத்திரிக்கை செய்தி!

மனிதர்களின் தலையைச் சுற்றி ஒளிவட்டம் இருப்பது உண்மைதான் என்பதை பிரபல அறிவியல் வார பத்திரிக்கை ஜனவரி 5ம் தேதி இதழில் வெளிட்டிருக்கிறது. ஆதி சங்கரர், புத்தர், ஏசு கிறிஸ்து, குரு நானக் முதலிய பெரியோர்களின் தலையைச் சுற்றி ஒரு வட்டம் பிரகாசமாக வரையப் பட்டிருக்கும். இது தவ சீலர்களின் கண்களுக்கு மட்டுமே தெரியும். ஆனால் நம்மைப் போன்றோர் படங்களில் மட்டுமே காண்கிறோம்.

இவ்வளவு காலமாக இதை ‘பாரா நார்மல்’ (மாய மந்திரம்) என்று அறிவியலுக்கு அப்பால் வைத்திருந்தனர். இப்போது ஒரு ஆராய்ச்சியின் மூலமாக இதை விஞ்ஞானிகளும் ஒப்புக் கொண்டுள்ளனர்.

 

இதோ நியூ சைன் டிஸ்ட் செய்தியின் சுருக்கம்:

“ ஒரு கிராமப் புற கதை போலத் தோன்றும் செய்தி இது. ஒரு சில மக்கள் மனிதர்களைச் சுற்றி இருக்கும் ஒளி வளையத்தைக் காணமுடியும். ஐம்புலன்கள் ஒன்றை ஒன்று குறுக்கிடும் போது சிலர் மற்றவர்களைச் சுற்றி இருக்கும் வண்ண ஒளியைக் காணமுடியும், இது மன உணர்ச்சிக்குத் தக்கவாறு கலரில் வேறுபடும்.

டி.கே. என்னும் ஒருவர் ஆஸ்பர்கர் நோயால் கஷடப்பட்டுவந்தார். அவருக்கு வயது 23. அவர் இப்படி ஒளி வட்டத்தைக் காண்பதாகக் கூறியவுடன் வில்லயனூர் ராமசந்திரன் கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில் ஒரு சோதனை நடத்தினார். சோதனைக்காக அவர் முன் ஒரு ஆளை நிறுத்தியவுடன் அவரை சுற்றி நீல வண்ணம் இருப்பதாகக் கூறினார். நீல வண்ணத்தில் நீல எழுத்துக்கள் தெரியாது. மற்ற வண்ண எழுத்துக்கள் தெரியும் அல்லவா? ஆகையால் அவரை ஒரு வெள்ளைத் திரையின் முன் நிற்க வைத்து அவர் தலையைச் சுற்றி நீல வண்ண எழுத்துக்களை காட்டினர். யார் ஒளிவட்டத்தைக் கண்டாரோ அவரால் நீல வண்ண எழுத்துக்களைப் படிக்க முடியவிலை. தலையில் இருந்து விலகி அதே எழுத்துக்களைப் போட்ட போதும் வேறு வண்ண எழுத்துகளைப் போட்டபோதும் அவரால் படிக்க முடிந்தது. இதன் மூலம் நீல நிற ஒளிவட்டம் நிரூபணமானது.

இந்தியாவில் சில சன்யாசிகள், சிலருக்கு உடனே அநுக்ரகம் செய்கிறார்கள் இன்னும் பலரைப் பாராமுகமாக இருந்து விடுகிறார்கள் இதற்கும் நம் தலையைச் சுற்றி இருக்கும் ஒளிவட்டமே காரணம். குழந்தைகளுக்கு இது நன்றாகத் தெரியுமாம். அம்மா அப்பா தலையை சுற்றி இருக்கும் அதே ஒளி வளையம் உள்ளவர்களிடம் குழந்தைகள் எளிதில் போகும். மற்றவர்களைக் கண்டாலேயே அலறும்.

ஒருவர் நல்ல எண்ணத்துடன், நல்ல செயல்கள் செய்தால் இது பிரகாசமாக தெரியும். கெட்டவர்களாக இருந்தாலோ பூர்வஜன்மத்தில் கெட்டது செய்திருந்தாலோ தலையைச் சுற்றி கருப்பு வளையம் தான் இருக்கும். ஞானிகளுக்கு இது நன்கு தெரியும். விவேகானந்தரைப் பார்த்த மாத்திரத்தில் ராமகிருஷ்ண பரமஹம்சர் அருள் மழை பொழிந்தார். விவேகானந்தர் நாஸ்தீக வாதம் பேசியபோதும் அவருடைய பூர்வ ஜன்ம புண்யம் நல்லது என்பதால் உடனே உபதேசம் கிடைத்தது. ஒளி வளையத்தை ஒருவரின் ஆன்மீகக் கைஎழுத்து அல்லது தலை எழுத்து என்று சொன்னால் மிகை இல்லை.

 

எனக்கும் கூட இதில் சில அனுபவங்கள் உண்டு. என் தந்தைக்கு மிகவும் வேண்டிய சுவாமிஜி பெரிய கணபதி உபாசகர். மதௌரையில் ஒரு நகரசபை வார்டு தேர்தலில் போட்டியிட்ட ஒரு வேட்பாளரை என் தந்தை ழைத்துச் சென்று அந்த சுவாமிஜியிடம் ஆசி பெற முயன்றார். ஆனால் ஒவ்வொரு முறை அவரை அறிமுகப் படுத்த என் தந்தை முயன்றபோதெல்லாம் சுவாமிஜி வேண்டும் என்றே முகத்தை எதிர்ப்புறம் திருப்பினார். என் தந்தைக்கு தர்ம சங்கடமாகப் போய்விட்டது. இறுதியில் மதுரைக்குக் கிளம்ப விடை பெறும் போது, இவர் மதுரையில்………….. என்று என் தந்தை துவங்கியதுதான் தாமதம். நீ தேர்தலில் வெற்றி பெறுவாய் போ என்று அவரை ஆசிர்வதித்தார். என் தந்தைக்கும் மிக்க மகிழ்ச்சி. அவர் சொன்னது போலவே தேர்தலில் வெற்றியும் பெற்றார்.

சில மாதங்களுக்குப் பின்னர் அந்த சுவாமிஜியை வேறு ஒரு நிகழ்ச்சியில் சந்தித்தபோது அவரே விளக்கம் கொடுத்தார்; “ சந்தானம் (எனது தந்தையின் பெயர்)  தனது குடும்பத்துக்காகக் கூட எதையும் கேட்டதில்லை. ஆனால் ஜெயிக்காத ஒரு ஆளைக் கூட்டிக் கொண்டுவந்து கேட்டவுடன் நான் கனபதியுடன் “சண்டை போட்டு” அவருக்கு வெற்றி பெற ஆசியை வாங்கினேன் என்றார். எனது தந்தை அழைத்துச் சென்ற ஆள் எல்லா கெட்ட பழக்கங்களும் உடையவரே. நண்பர் என்ற முறையில் என் தந்தை அவருக்கு உதவி செய்யச் சென்றபோது இத்தனையும் நடந்தது. ஆக ஆளைக் கண்டவுடனேயே சந்யாசிகளுக்கு நம்மைப் பற்றித் தெரிகிறது.

 

கூத்தனூர் சிங்கார சுப்ரமண்ய சாஸ்திரிகள் ரிக் வேதத்தில் ஒரு சாகை முழுதையும் அத்யயனம் செய்து காஞ்சி பரமாசார்ய சுவாமிகளிடம் தங்கக் காசு, சால்வை ஒரு வீடு ஒரு பசு மாடு பெற்றவர். மதுரைக்கு டி.வி.எஸ். பஸ் நிறுவனத்தார் அழைப்பின் பேரில் ஆண்டுதோறும் உபந்யாசம் செய்ய வருவார். எங்கள் வீட்டில் தங்குவதால் பல உண்மைச் சம்பவங்களைச் சொல்லுவார். ஒரு நாஸ்தீகர் அவரைச் சோதிக்க இறந்தவரின் ஜாதகத்தை அவரிடம் கொடுத்தபோது அதைத் தொட்டவுடன் அவருக்கு ‘ஷாக் அடித்தது போல இருந்தது. உடனே வந்தவரை எச்சரித்து வெளியேற்றினார்.

 

சென்னையில் என் அண்ணன் பொழுதுபோக்காக அரசியல் துறை சினிமா துறையைச் சேர்ந்தோருக்கு ‘ஓஸி’யாக ஜோதிடம் சொல்லுவதுண்டு. சில பாப ஜாதகங்களைக் கையில் எடுத்தவுடன் ஒரே களைப்படைந்து கொட்டாவி விடத் துவங்கி விடுவார். கண்களில் இருந்து கண்ணீர் வழியத் தொடங்கும். தான் முதல் நாள் இரவில் தூங்காததால் களைப்பாக இருப்பதாக சாக்கு போக்குக் கூறி வந்தவர்களை திருப்பி அனுப்பி விடுவார்.

 

இந்த சம்பவங்கள் மனிதர்களுக்கு மட்டும் இன்றி ஜட வஸ்துகளுக்கும் பாப புண்யம் இருப்பதைக் காட்டுகிறது—அதாவது மக்களுடைய பாப புண்யத்தை அது எதிரொலிக்கிறது. என் அண்ணன் லண்டன் வந்தபோது எனக்கு நீண்ட காலமாக வேலை இடத்தில் தொல்லை கொடுத்து வந்த ஒரு பெண்மணியையும் மரியாதையின் பொருட்டு அறிமுகப் படுத்தி வைத்தேன். அவரைக் கண்டவுடன் என அண்ணன் மிக நல்ல பலன்களாகப் பொழியத் துவங்கிவிட்டான். எனக்கோ ஆத்திரம் தாங்க முடியவில்லை. அந்தப் புறம் அழைத்துச் சென்று ஏன் ‘எதிரிக்கு’ உதவினாய் என்று கடிந்து கொண்டபோது அந்தப் பெண் நாட்டை விட்டு லண்டனுக்கு வந்த காலம் முதல் தன் மகள் நன்றாக இருக்கவேண்டும் என்று அவருடைய தாய் கந்த சஷ்டிக் கவசம் படித்ததாகவும் அந்தத் தாயின் பிரார்த்தனை இந்தப் பெண்ணைச் சுற்றி பாதுகாப்பு வளையம் போட்டிருப்பதாகவும் கூறினான. என்னுடைய விருப்பு வெறுப்புகளுக்காக் புனிதமான ஜோதிட சாஸ்திரத்தை மாற்றமுடியாது! என்றான்.

ஆக ஒருவரின் தாய் தந்தையின் பிரார்த்தனையும் கூட ஒருவரைச் சுற்றி கவசமாக நிற்கமுடியும்!

 

எனது தந்தை ஒரு புத்தகத்தில் இருந்து ஒரு பகுதியைப் படித்துக் காட்டியதும் நினைவுக்கு வருகிறது. “யமதர்ம ராஜனின் உதவியாளர் பெயர் சித்திரகுப்தன். இவந்தான் நம்முடைய பாவ புண்ணீயங்களைக் கூட்டிக் கழித்துப் போடும் கணக்குப் பிள்ளை. உண்மையில் சித்திர குபதன் என்ரு யாரும் ஒரு ஆள் இல்லை. சித்திர குப்தன் என்ற வடமொழிச் சொல்லுக்கு ரகசிய வரைபடம், மரைட்ந்த ஓவியம் என்று பொருள். அதாவது நாம் மனோ, வாக் காயம் ( மனம் மொழி மெய்) ஆகியவற்றால் செய்யும் ஒவ்வொரு செயலும் வரைபடம் போலப் பதிவாகி நம்முடைய உண்மைப் படத்தை வரைந்துவிடுகிறது!”

நம்மைச் சுற்றி ஒளி வளையம் பிரகாசம் அடைய நாம் நற்சிந்தனையுடன் வாழ்வோமாக.

எண்ணிய முடிதல் வேண்டும், நல்லவே எண்ணல் வேண்டும்–பாரதி

1. சிவனுக்கு இணை இல்லை!

Picture of Ardhanareeswara (Shiva and Parvati 50+50)

சம்ஸ்கிருதச் செல்வம்-1 by S Nagarajan

 

  1. 1.  சிவனுக்கு இணை இல்லை!

 

சிறந்த சிவ பக்தர் ஒருவர். அவர் நல்ல கவிஞரும் கூட. சிவனை நினைத்தவுடன் வார்த்தைகள் பிரவாகமாகப் பொங்கி வருகின்றன. பாடுகிறார் இப்படி:

 

கிரீடே நிஷேஷோ லலாடே ஹுதாஷோ

புஜே போகிராஜோ கலே காலிமா ச I

தனௌ காமினீ யஸ்ய தத்துல்யதேவம்

ந ஜானே ந ஜானே ந ஜானே ந ஜானே II

 

கிரீடே நிஷேஷோ – அவனுடைய தலையிலே சந்திரன்!

லலாடே ஹுதாஷோ – நெற்றியில் தீ !

 

புஜே போகிராஜோ –புஜங்களைச் சுற்றி பாம்புகளின் ராஜா

 

கலே காலிமா – கழுத்தில் கறுப்பு வண்ணம்!

தனௌ காமினி யஸ்ய தத்துல்யதேவம் – அவனுடைய மனைவி அவனுடைய தேஹத்திலேயே!

 

இப்படிப்பட்டவனுக்கு நிகரான ஒரு தெய்வத்தை நான் அறிந்ததே இல்லை! (ந ஜானே)

Picture of Ardhanareeswara (Shiva and Parvati 50+50)

 

இவ்வளவு ஆச்சரியகரமான ஒரு அற்புத தெய்வத்தைக் கண்ட பரவசத்தில் அவர் இது போல ஒரு தெய்வத்தை நான் அறிந்த்தே இல்லை (கண்டதே இல்லை) என்று நான்கு முறை கூறி வியக்கிறார்.

 

நாமும் ‘ந ஜானே ந ஜானே ந ஜானே ந ஜானே’ என்று கூறி அவரைப் போல வியந்து சிவபிரானைத் தொழ வேண்டியது தான்!

 

கவிஞர் சிவபிரானைக் கண்ட வடிவம் அர்த்தநாரீஸ்வர வடிவம் என்பதால் ஆணுக்குப் பெண் சமம் என்ற அற்புத உண்மையையும் மனதில் கொள்கிறோம். சிவபிரானைத் தொழும் அதே சமயத்தில் தேவியையும் தொழுது வணங்குகிறோம்!

 

கவிஞரின் பக்திப் பரவசம் நம்மையும் தொற்றி விடுகிறது அவரது கவிதை மூலம்!

இது அமைந்துள்ள சந்தம் : புஜங்கப்ரயாதா என்ற சந்தம்!

 

***************