Written S NAGARAJAN
Date: 11 December 2016
Time uploaded in London: 5-35 am
Post No.3437
Pictures are taken from different sources; thanks.
contact; swami_48@yahoo.com
பாரதி இயல்
டிசம்பர் 11. மஹாகவி பாரதியாரின் பிறந்த தினம். அவர் கண்ட அற்புதமான அகண்ட பாரதத்தை அமைக்க உறுதி பூணுவோம்!
மஹாகவி பாரதியார் கண்ட அகண்ட பாரதம்!
ச.நாகராஜன்
மஹாகவி பாரதியாரின் தெளிவான சிந்தனை
மஹாகவி பாரதியாரின் சிந்தனைகள் தெளிவானவை. சமச்சீர் தன்மை உடையவை. காலத்தால் முற்பட்டுத் தரப்பட்டவை. காலத்தை விஞ்சி நிற்கும் அறப்பண்புகளின் அடிப்படையிலானவை. ஆகவே தான் அந்த மஹாகவியை உலக மஹாகவியாக உலகம் போற்றுகிறது.
இந்தியா பற்றிய தெளிவான சிந்தனையை அவர் தான் நடத்திய ;இந்தியா’ பத்திரிகை வாயிலாக 27-4-1907 இதழில் தெரிவிக்கிறார்.
அதை அப்படியே பார்ப்போம்:
கட்டுரையின் தலைப்பு :
“ஸ்வராஜம்” என்பதில் “ஸ்வ” என்பது யார்?
கட்டுரை :-
ஸ்வராஜ்யம் வேண்டுமென்று நாம் ஏன் கேட்கிறோம்? இங்கே “ஸ்வ” என்பது யாரைக் குறிப்பிடுகிறது? ஸ்வராஜ்யம் வரும்போது அது மகமதிய ராஜ்யமாக இருக்குமா? அல்லது ஹிந்து ராஜ்யமா? எது?
“ஸ்வ” என்றால் “தனது” என்று அர்த்தமாகிறது. யாருடையது? இந்தக் கேள்விக்கு நாம் மறுமொழி சொல்வதென்னவென்றால், பாரத தேவியுடையது.
பாரத தேவி தன்னைத் தானே பரிபாலனம் செய்து கொள்வது ஸ்வராஜ்யம் ஆகும். “ஸ்வ” என்பது பாரத தேவியைக் குறிப்புடுகிறது.
பாரத தேவி என்றால் கிறிஸ்தவர் மட்டுமன்று, மகமதியர் மட்டுமன்று, எல்லா ஜனங்களும்;; அகண்ட பாரதம், பிரிவு செய்யப்படாத பாரதம்.
பிரிவு செய்யப்படாத அகண்ட பாரதம் தன்னைத் தானே ஆள்வதென்றால் என்ன அர்த்தம்? ஒரு தனி ராஜா ஆள்வதென்று அர்த்தமில்லை. ஒரு சந்ததியார் ஆள்வதென்று அர்த்தமில்லை. பிரஜா பரிபாலனம் அல்லது ஸர்வ ஜன ராஜ்யம் என்று அர்த்தம்.
ஸர்வ ஜன ராஜரீகம் என்றால் அது அராஜரீகமாய் விட மாட்டாது. இப்பொழுது இங்கிலாந்திலே கூட. பெயர் மட்டிலே ஒரு ராஜவமிசத்தார் இருக்கிறார்களேயல்லாமல் வாஸ்தவத்திலே, பிரஜைகள் தான் ஆட்சி புரிகிறார்கள்.
அமெரிக்க ஐக்கிய மாகாணங்களிலே பெயர் மாத்திரத்திற்குக் கூட ராஜா இல்லாமல் பிரஜா ராஜ்யம், அதாவது குடியரசு நடந்து வருகிறது.
இந்தியாவிலேயும் ஜனராஜ்யம் ஏற்பட் வேண்டுமென்பதே நாட்டவர்களின் அபீஷ்டம். இது இங்கிலாந்திலிருப்பது போல ஒரு ராஜா வைத்துக் கொண்டு நடத்தப்படுமா, அல்லது அமெரிக்காவைப் போல் குடியரசாக நடக்குமா என்பது இப்போது ஊஹித்துக் கூற முடியாது. அது அந்தச் சமயத்திலுள்ளதால் தேச வர்த்தமானங்களைப் பொறுத்த விஷயமாகும்.
***
சேதமில்லாத ஹிந்துஸ்தானம்
ஆக பாரதியார் கனவு கண்டது அகண்ட பார்தம்; குடியரசு. மக்களின் ஆட்சி. இதில் முதலாவதைத் தவிர மற்ற இரண்டும் நனவாகி விட்டதென்றே கூறலாம்.
பாப்பா பாட்டில் கூட பாரதி சேதமில்லாத ஹிந்துஸ்தானத்தையே தெய்வமென்று கும்பிட பாப்பாவிற்கு அன்புரை வழங்குகிறான்.
வேதம் உடையதிந்த நாடு – நல்ல
வீரர் பிறந்ததிந்த நாடு
சேதமில்லாத ஹிந்துஸ்தானம் – இதைத்
தெய்வமென்று கும்பிடடி பாப்பா
எல்லாரும் ஓர் நிறை, எல்லாரும் இந்நாட்டு மன்னர்
மஹாகவி கனவு கண்ட பாரத ஸமுதாயம் பற்றி அவரே மிகத் தெளிவாக தனது பாடலில் கூறி இருக்கிறார்:
பாரத ஸமுதாயம் வாழ்கவே – வாழ்க, வாழ்க,
பாரத ஸமுதாயம் வாழ்கவே – ஜய ஜய ஜய ஜய ஜய ஜய
பாரத ஸமுதாயம் வாழ்கவே
என்று ஆரம்பிக்கும் மஹாகவி,
,முப்பது கோடி ஜனங்களின் ஸங்கம்
முழுமைக்கும் பொது உடைமை
ஒப்பிலாத ஸமுதாயம்
உலகத்துக்கொரு புதுமை – வாழ்க!
என்று கூறி, அங்கு,
எல்லோரும் ஓர் குலம் எல்லாரும் ஓர் இனம்
எல்லாரும் இந்திய மக்கள்
எல்லாரும் ஓர் நிறை எல்லாரும் ஓர் விலை
எல்லாரும் இந்நாட்டு மன்னர் – நாம்
எல்லாரும் இந்நாட்டு மன்னர் – ஆம்
எல்லாரும் இந்நாட்டு மன்னர் –வாழ்க
பாரத ஸமுதாயம் வாழ்கவே!
என்று முடிக்கிறார்
இப்படி மிகத் தெளிவாக பாரத நாட்டின் குடியாட்சி பற்றியும் அகண்ட பாரதம் பற்றியும் பாரத ஜன ஸமுதாயம் பற்றியும் தான் கண்டிருக்கும் காட்சியை ம்ஹாகவி நம் முன் வைத்துள்ளார்.
இந்த அகண்ட பாரதக் காட்சியை ஒவ்வொரு இந்தியனும் தன் உளத்துள்ளே கண்டு அதை அமைக்கப் பாடுபட வேண்டும்.
அதுவே அவருக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாக அமையும்!
****
You must be logged in to post a comment.