
WRITTEN by S Nagarajan
swami_48@yahoo.com
Date: 2 May 2019
British Summer Time uploaded in London – 12-59
Post No. 6334
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))
ரிஷிகள் சரித்திரம் – அகத்தியர் பெருமை
அகத்தியர் கூறிய தீப மஹிமை!
ச.நாகராஜன்

கிருத யுகத்தில் நடந்த சம்பவம் இது.
பத்திராசுவன் என்று ஒரு அரசன் இருந்தான். அவனுக்கு 500 மனைவிகள். அவர்களில் காந்திமதி என்பவள் பேரழகி. தன் கணவனின் மீது எல்லையற்ற அன்பு கொண்டவள். அவளை அவன் பட்டமகிஷி ஆக்கினான். மன்னனின் இதர மனைவிகளும் காந்திமதி மீது மிக்க மரியாதையும் மதிப்பும் கொண்டிருந்தனர்.
நல்ல முறையில் பத்திராசுவன் தனது நாட்டை ஆண்டு வருகையில் ஒரு நாள் அகத்திய முனிவர் அவனது அரண்மனைக்கு வந்தார். பத்திராசுவன் பெரு மகிழ்ச்சி அடைந்து அவரை உரிய முறையில் வரவேற்று உபசரித்தான்.
அகத்தியர் அவனை நோக்கி, “மன்னா! நான் இங்கு ஏழு நாட்கள் தங்க விரும்புகிறேன்” என்று கூறினார்.
“தாங்கள் எத்தனை காலம் தங்க விரும்புகிறீர்களோ அத்தனை காலம் இங்கு தங்கலாம்” என மன்னன் பதில் கூறினான்.
முதல் நாளில் அகத்தியர் கூறியது:
முதல் நாளன்று அகத்தியர் பத்திராசுவனின் மனைவியான காந்திமதியைப் பார்த்து, “ஸாது, ஸாது, ஜெகந்நாத!” என்றார். அதாவது, “ஹே! லோக நாயகனே! நன்று , நன்று” என்பது இதன் பொருளாகிறது.
இரண்டாம் நாளில் அகத்தியர் கூறியது :
இரண்டாம் நாளன்று அகத்தியர் ராஜ பத்னியான காந்திமதியை நோக்கி, “இந்த உலகம் மோசம் போயிருக்கிறது. ஆ! என்ன ஆச்சரியம், என்ன ஆச்சரியம்!” என்றார்.
மூன்றாம் நாளில் அகத்தியர் கூறியது :
மூன்றாவது நாளன்று அகத்தியர் பட்டமகிஷியை நோக்கி, “ஒரே தினத்தில் செய்த பகவத் கைங்கரியத்தினால் சந்தோஷமடைந்து அரசன் ஆகும்படியான் பதவியை அளித்த மஹாவிஷ்ணுவின் பெருமையை இந்த மூடர்கள் அறியவில்லையே! ஆ! கஷ்டம்! கஷ்டம்!!” என்றார்.
நான்காவது தினத்தில் அகத்தியர் கூறியது :
நான்காம் தினத்தன்று அகத்தியர் காந்திமதியைப் பார்த்துக் கை கூப்பிக் கொண்டு, “ஓ! ஜெகந்நாதரே! நல்லது, நல்லது, ஓ, பிராமணர்களே, க்ஷத்ரியர்களே, வைச்யர்களே, சூத்திரர்களே! பெண்களே! உங்களின் அனுஷ்டானங்கள் வெகு அழகாயிருக்கின்றன. பத்ராசுவனே! நீ ஒருவன் நல்ல யோக்கியன்!
உயர்ந்த விரத சீலர்களான பிரகலாதரே, துருவரே! நீங்கள் பரம சாதுக்கள்” என்று கூறினார். பின்னர் அரசன் முன் ஆனந்தக் கூத்தாடினார்.
பத்திராசுவன் இதைப் பார்த்து வியப்படைந்தான்.

அகத்தியரிடம் தன் பத்னியுடன் வந்து கை கூப்பி வணங்கியவாறே, “ஓ! மாமுனிவரே! தாங்கள் இப்படி சந்தொஷமடைந்து ஆனந்தக் கூத்தாடுவதன் காரணம் என்ன? எங்களுக்குச் சொல்லுங்கள்” என்று பணிவுடன் வேண்டினான்.
அகத்தியர் மன்னனைப் பார்த்து, “ ஓ! மன்னா! நீ ஒன்றும் அறியாத நிந்திக்கத் தக்க மூடனே! கஷ்டம், கஷ்டம், உன் பரிவாரங்களும் கூட மூடர்களே! உன்னுடைய அரசவை புரோகிதர்களும் கூட மூடர்கள் தாம்! உங்களில் ஒருவர் கூட என் கருத்தை அறியவில்லை” என்றார்.
அரசன் அவரிடம், “ஐயனே! நீங்கள் கூறுவதை எங்களால் அறியவே முடியவில்லை; விளக்கமாகக் கூறி அருள வேண்டும்” என்று விண்ணப்பித்தான்.
அகத்தியர் தான் கூறியதை நன்கு விளக்க ஆரம்பித்தார் இப்படி :
“ஓ மன்னா! உனது பத்தினியாகிய காந்திமதி முன் ஜென்மத்தில் ஒரு வணிகனின் வீட்டில் வேலை பார்த்து வந்தாள். அப்போது அவளுடைய கணவனாக நீ இருந்தாய்; அதே வணிகனிடம் நீயும் ஊழியம் செய்து வந்தாய். ஒரு நாள் அந்த வணிகன் ஐப்பசி மாத துவாதசி விரதத்தை மஹாவிஷ்ணுவின் கோவிலில் அனுஷ்டித்தான்; பின்னர் உங்கள் இருவரையும் கோவிலில் ஏற்றி வைத்த விளக்குகள் அணைந்து போகாமல் ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்ளும்படி கட்டளையிட்டான். பின்னர் வீட்டிற்குத் திரும்பினான்.
எஜமானின் கட்டளையை சிரமேற்கொண்ட நீங்கள் இருவரும் ஊக்கத்துடன் இரவு முழுவதும் விழித்திருந்து காலை வரை தீபங்கள் பிரகாசித்துக் கொண்டிருக்கும்படி அவற்றைப் பாதுகாத்துக் கொண்டிருந்தீர்கள். அந்தப் புண்ணியத்தால் நீ ப்ரியவிருதனுடைய வம்சத்தில் ஜெனிக்கும்படியாகவும் இந்த புண்ணியவதி உனக்கு பட்டமகிஷி ஆகும்படியாகவும் உள்ள பாக்கியத்தை அடைந்தீர்கள்.
பிறர் சம்பந்தமான தீபங்களைப் பாதுகாத்துப் பிரகாசிக்கச் செய்த ஒரு செய்கையினாலேயே இவ்வித விசேஷ பலன்கள் கிடைக்கும் போது தனது சொந்தப் பணத்தினாலும் சேவையினாலும் தீபங்களைப் பிரகாசிக்கச் செய்யும் ஒருவனுடைய புண்ணியத்தை எப்படி அளவிட முடியும்?

இதனால் தான் நான் ஏன் இதை ஒருவரும் அறிய முடியாத மூடர்களாக இருக்கிறார்கள் என்று கூத்தாடினேன்.
பிரகலாதர் அசுர குலத்தில் பிறந்தவர்; துருவரோ சிறு குழந்தை, பட்டத்துக்கு உரியவர். என்ற போதிலும் அவர்கள் இருவரும் மிகுந்த பக்தியுடன் விஷ்ணுவை ஆராதித்து ஒப்பற்ற உயர்ந்த பதவிகளை அடைந்தனர்.”
அகத்தியர் இவ்வாறு விரிவாகக் கூறி முடித்தார்.
இதைக் கேட்ட மன்னனும் அரசியும் ஆனந்தமடைந்தனர். அகத்தியரை வணங்கி தங்களுக்கு பத்மநாப துவாதசி விரதத்தை முறைப்படி அனுஷ்டிக்க உபதேசித்து அருள வேண்டுமென்று பிரார்த்தித்தனர்.
அகத்தியரும் அந்த விரத முறையை அவர்களுக்கு உபதேசித்து அருளினார்.
பின்னர் அவர் புஷ்கர க்ஷேத்திரம் நோக்கிச் சென்றார்.
மன்னனும் அரசியும் அந்த விரதத்தை அனுஷ்டித்து நீண்ட காலம் அரசை ஆண்டனர்; பின்னர் வைகுண்ட பதவியையும் அடைந்தன்ர்.
வராக புராணத்தில் வரும் சரித்திரம் இது.
இதனால் அகத்தியரின் மஹிமையும் அவரது ஆற்றலையும் தெரிந்து கொள்கிறோம்.
சிறிய புண்ணிய காரியம் கூட பெரிய நல்ல விளைவை வாழ்வில் ஏற்படுத்தும்.
***

You must be logged in to post a comment.