
WRITTEN by London swaminathan
Date: 21 JULY 2018
Time uploaded in London – 16-48 (British Summer Time)
Post No. 5243
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.
மொகலாய மன்னன் அக்பர் வாழ்க்கையில் சுவையான நிகழ்வுகள்!
அபுல் பாசல் (1551 – 1602 பொது ஆண்டு) என்பவர் அக்பர் என்ற மொகலாய மன்னரின் அரசவையில் உயர் அதிகாரியாக இருந்தவர். அவர் அக்பரின் வாழ்ககையை மூன்று புஸ்தகங்களாக எழுதினார். அந்தப் புஸ்தகத்தின் பெயர் அக்பர் நாமா; அதன் மூன்றாவது புஸ்தகத்துக்கு அயினி அக்பரி என்ற பெயரும் உண்டு.
அவருடைஅய முழுப் பெயர் அபு இல் பாசல் இபின் முபாரக். அவர் அக்பர் அரசவையின் நவரத்னங்களில் ஒருவர். அவருடைய சகோ தரர் பைஜி (Faizi), அக்பரின் ஆஸ்தானப் புலவர். அவர்கள் புஸ்தகங்களை பாரஸீக மொழியில் யாத்தனர்.

இத்துடன் நூற்றாண்டுக்கு முன்னர் அரும்பொருட் திரட்டு என்னும் புஸ்தகத்தில் மதுரை எம்.கோபாலய்யர் மொழிபெயர்த்த கட்டுரை இணைக்கப்பட்டுள்ளது.
கட்டுரையின் முக்கிய அம்சங்கள் இதோ!
- அக்பர், மக்களை சந்தோஷப்படுத்துபவனே ராஜா என்னும் கொள்கை உடையவர். எப்போதும் சந்தோஷமாக இருப்பவர். ஈஸ்வரனுக்குத் திருப்தியுடைய காரியங்களையே செய்பவர்.
2.அகம்பாவமோ கோபமோ இல்லாதவர்; ஆனால் பேரறிவு உடையவர். அவரைப் பார்ப்பவர்கள் சூரியனுக்கு முன்னால் நாம் மின்மினிப்பூச்சி போல என்று நினைப்பர்.
3.இரவு தூங்குவதற்கு முன்னர், விநோதக் கதைகள் சொல்லச் சொல்வார். எந்த மதத்தையும் தூஷிக்க மாட்டார். கேலி கூட பேச மாட்டார்.
4.நான்கு நேரங்களில் ஆத்ம சோதனை செய்து கொள்ளுவார். சூரிய உதயத்துக்கு முன்னால், சூரியன் உச்சிக்கு வரும் வேளை, படுகடலில் சூரியன் பாயப்போகும் நேரம், நள்ளிரவு 12 மணி ஆகிய நேரங்களில் தான், செய்வது சரியா இல்லையா என்று சிந்திப்பார்.
5.அவர் பெரும்பாலும் மாம்ஸ போஜனத்தைத் தவிர்ப்பார்; பல மாதங்களுக்கு மாம்சத்தைப் பார்க்காமலும் இருப்பார். தீபங்களை இறைவனின் ஜோதி வடிவம் என்று கருதி வழிபடுவார்
6.பெரும் குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை அளிக்கக் கூசுவார்.
7.அவருக்கு சிற்றின்பத்திலும் ஸ்த்ரீலோலனத்திலும் விருப்பமில்லை. 24 மணி நேரத்தில் ஒரு முறை மட்டுமே உணவு உண்பார்.
8.நித்திரை செய்யும் காலம் வெகு அற்பம்; இராப்பகலாக ராஜ்ய காரியத்திலும் பகவத் தியானத்திலுமே காலம் கழிப்பார்
9.தத்துவ சாஸ்திர விற்பன்னர்களும் மகமதிய சூபி (sufi) மஹான்களும் தங்கு தடையின்றி உள்ளே நுழைவர். அவர்க ளை மரியாதையுடன் ஆஸனத்தில் அமர்த்தி விவாதிப்பார்.
10.பழைய சம்பிரதாயங்களை முரட்டுத்
தனமாகப் பின்பற்றாமல் நூதனமாக மாற்றுவார்; இளைஞர்களும் அவற்றைப் பின்பற்றுவர். அதற்குத் தக புதிய சட்டங்களை இயற்றுவார்.
11.இராக்கலத்தில் இலாகா வாரியாக உத்தரவுகளைப் போடுவார். விடிவதற்கு ஒரு ஜாமம் இருக்கையில் சகல வாத்ய விற்பன்னர்களும் வந்து இன்னிசை விருந்து அளிப்பர். அதைக் கேட்டுவிட்டு சூர்யோதய காலத்தில் சன்மானம் கொடுத்து அவர்களை அனுப்பிவிட்டு கண்களை மூடி தியானத்தில் அமர்வார். அவருடன் கூர்னிஷ் தொ ழுகையில் ஈடுபட்டுவிட்டுப் போவர்
12.பின்னர் பத்தினிமார்களும், மங்கள விலாஸ காதலிகளும் வந்து தண்டம் சமர்ப்பிப்பார்கள். அன்போடு எல்லோருடைய நலத்தையும் விசாரிப்பார்.
13.ஒவ்வொரு நாளும் இரண்டு முறை மக்களுக்கு தரிசனம் கொடுப்பார்; காலைக் கடன்களை முடித்தவுடன் ‘ஜரோகா’வில் அமர்ந்து எல்லா திகாரிகள், துருப்புகளையும் சந்தித்து நலன் விசாரிப்பார்.
- காலை ஒன்பது மணிக்கு ‘தவலத் கானா’வில் அமர்ந்து மக்கள் குறைகளைக் கேட்பார். யாரும் சிபாரிசு இல்லாமல் நேரே சென்று மனுக் கொடுக்கலாம். உடனே படித்து குறை தீர்க்க உத்தரவிடுவார்.
15.சக்கரவர்த்தி கொலு கூட்டுவதானால் பேரிகை மூலம் அறிவிப்பர். அப்போது எல்லோரும் கூடுவர்; தோட்டி முதல் தொண்டைமான் வரை வந்தவுடன் அந்தஸ்துக்கு ஏற்ப வரிசையில் நிற்பர். தட்டார், கொல்லர், நெசவாளர் எல்லோரும் கூர்னீஷ் தொழுகைக்கு தயாராக இருப்பர். உயர் அதிகாரிகள் அறிக்கை சமப்பிப்பர்.
- மல்யுத்தம், சிலம்பம் முதலியன நடக்கும்; கூர்னீஷ், தஸ்லீம் என்ற இரண்டு வகையில் மக்கள தொழுவர்.
- தஸ்லீம் என்பது தன் பிதா முன்னிலையில் தான் தெரியாமல் செய்த வணக்கம் என்றும் அதைத் தன் பிதா பாராட்டியவுடன் அதுவும் வழக்கத்தில் வந்தது என்றும் அக்பர் கூறுவார்.
18.அக்பரின் தத்துவ நம்பிக்கையை அபுல் பாஸல் விவரிக்கிறார்
19.அக்பருக்கு சிறு வயது முதலே அற்புத சக்திகள் உண்டு என்றும் இது அனைவரும் அறியும்படி வெளிப்படும் என்றும் அபுல் பாஸல் கூறுகிறார்.
20.சிலருக்கு தத்துவ விசாரம் சொல்லி கை தூக்கி விடுவார். சிலருக்கு அவர் கொள்கைக்கு விரோதமாகப் பேசுவார். சிலருக்கு அவரவர் இஷடப்படி பாடம் சொல்லுவார்.

21.சக்ரவர்த்திக்கு பல சிஷ்யர்கள் உண்டு; ஒரு மண்டலம் சநயாசிகளுக்கு சுஷ்ருசை செய்து கற்றுக் கொள்ளக்கூடிய விஷயங்கள் இவருடைய சந்நிதி விஷேஷத்தாலும், ஸ்பர்சத்தாலும், போதனா முறையாலும் உடனே ஞானம் பெறுவர். இவரை சந்திக்கும் நானாவித தொழிலாளர்களும் பரவித்தை ஞானத்துடன் திரும்புவர்.
22.பலரும் தெய்வத்துக்குப் பதிலாக இவருக்கு பிரார்த்தனையை சமர்ப்பிப்பர். அவர்கள் காணிக்கையாக வைத்திருந்த பொருள்களை இவர் முன் வந்து கொட்டுவர். மன்னர், ராஜ்யத்தைப் பார்க்கவும் வேட்டையாடவும் செல்லுகையில் அதுவரை மன்னருக்குக் காணிக்கையாக வைத்திருந்த காணிக்கைகளை, தொலை தூர கிராம மக்கள் அவரிடம் சமர்ப்பிப்பர்.
23.சக்ரவர்த்தி ஒரு மஹான்; அவர் சித்த புருஷர்; வியாதி உடையோர் இவரைப் பிராத்தித்து சுமகமடைவர்; பிள்ளைப்பேறு இல்லாதோர் அக்பரிடம் பிராத்தித்து மகப்பேறு அடைந்தனர். விரோதிகள் இவர் முன்னிலையில் வந்து பரஸ்பர மித்திரர் ஆயினர். யார் யார் என்ன வேண்டினரோ அவற்றையெல்லாம் அடைந்தனர்.
24 அவர் அற்புத சக்திகள் உடையவர். ஆகையால் மக்கள், ஜலத்தைக் கொண்டு வந்து மந்திரித்துத் தர வேண்டுவர். அவர் அந்த நீர்க்குடத்தை வாங்கி, சூரிய புடமிட்டு, மூன்று முறை வாயால் ஊதிக் கொடுப்பார். அகபர் மந்திரித்துக் கொடுத்த ஜலத்தால் பலனடந்தோர் பலர். ஆனால் ஞான த்ருஷ்டியால் பார்த்து யாருக்கு ஊதித் தர வேண்டுமோ அவருக்கு மட்டுமே அளிப்பார்.
- ஒரு முறை ஒரு துறவி வந்து மஹாத்மாவே என் இதயத்தில் ஏதேனும் நல்ல பொருள் இருக்குமானால் அதை வெளிக் கொணர்ந்து எனக்கருள் புரிக என்று வேண்டினான். அகபரும் அப்படியே செய்தார். அவன் வாயில்படிக்குச் செல்லுகையிலேயே மூர்ச்சையாகி சமாதி ஆகி விட்டான்.
26 யாரேனும் உபதேசம் கேட்டால் எனக்கு என்ன தெரியும்? நானே கற்க வேண்டி உளதே என்பார். அதையும் மீறி அவன் போகாமல் காத்திருந்தால் சூரியன் உச்சிக்கு வருவதற்குள் அவனுக்கு உபதேசம் சொல்லி கடைத் தேற்றுவார்.
27.அக்பரின் அற்புத சக்திகளைக் கண்டவர்கள் அவரைத் தெய்வமாகக் கருதி வணங்கினர்.
- இவரிடம் உபதேசம் பெற வருபவன் தலைப் பாகையைக் கழற்றி உள்ளங்கையில் வைத்துக் கொண்டு என் அகம்பாவம் தீய குணங்களையெல்லாம் விட்டுவிட்டேன் எனக்கருள்க என்றவுடன் அவரே தலைப் பாகையை அவன் தலையில் வைத்து ஒரு தங்க காசைக் கையில் கொடுத்து உனக்காக பகவானைப் பிரார்த்தித்து விட்டேன் என்பார்.
29.அவர் வெகு வினயத்தோடு தத்துவ சாஸ்திரங்களைப் பெரிய ஞானிகளோடு விவாதிப்பார். அக்பருடைய அத்தனை தெய்வீக லீலைகளையும் எழுத இங்கு இடமில்லை. நான் மட்டும் உயிருடன் இருந்தால் அவைகளை தனி புஸ்தகமாகவே எழுதுவேன்.
30.பல ஒழுக்க விதிகளையும் அக்பர் போதித்தார்; ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது ‘பகவானே பெரியவர்’ (அல்லாஹு அக்பர்) என்று சொல்ல வேண்டும் அதைக் கேட்பவன் ‘பகவானின் மஹிமையே மஹிமை’ என்று பதில் சொல்ல வேண்டும்; ஒவ்வொருவனும் பிறந்த நாளன்று விருந்து கொடுக்க வேண்டும்; சக்திக் கேற்ப பிச்சையிட வேண்டும்
- ஒவ்வொருவரும் மாமிசம் புசிப்பதைக் கைவிட வேண்டும் அல்லது புனித தினங்களில் சாப்பிடாமல் இருக்க வேண்டும் (இப்படித் தவிர்த்தால் எவரும் 45 நாட்களுக்கு மேல் மாமிசம் சாப்பிட முடியாது)
- தானே கொன்ற எந்தப் பிராணியையும் யாரும் சாப்பிடக்கூடாது. வேடர்கள், கசாப்புக் கடைக்காரர்களுடன் யாரும் உண்ணனக் கூடாது. கர்ப்ப ஸ்த்ரீக்கள், மலடிகள், பருவமடையாத கன்னிப் பெண்களுடன் சிநேகம் வைத்துக் கொள்ளக்கூடாது. இப்படிப் பல ஒழுக்க விதிகளை அக்பர் பிரபலப் படுத்தினார்”.
இவ்வாறு அபுல் பாஸல், அயினி அக்பரியில் செப்புகிறார்.


















–சுபம்–
You must be logged in to post a comment.