அசோகனுக்கு ஒரே நாளில் 84,000 கடிதங்கள்!!

letter-writing

ஆராய்ச்சிக் கட்டுரை எழுதியவர் — லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்:-1314; தேதி:– 28 September 2014.

மகாவம்ச ஆராய்ச்சிக் கட்டுரை வரிசையில் இது 12-வது கட்டுரை.

மகாவம்சத்தில் கடிதம் எழுதும் கலை!

இந்தியர்களுக்கு எழுதத் தெரியுமா, தெரியாதா? அப்படி எழுதத் தெரிந்தால் அதை யாரிடம் கற்றார்கள்? என்று 100 ஆண்டுகளுக்கு முன் வெள்ளைக்காரர்கள் ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதி —ஆங்கிலத்தில் எழுதி!!!!! — பல கட்டுரைகளை வெளியிட்டார்கள். இந்தியர்களுக்கு எழுதத்தெரியாது அதை சுமேரியர்கள் அல்லது பீனிசியர்கள் இடமிருந்து கற்றார்கள் என்று எழுதி முடித்தார்கள். மார்கசீய வரலாற்று ‘’அறிஞர்களும்’’ ஆமாம், ஆமாம் அது உண்மையே என்று முத்திரை குத்தினார்கள்.

அதாவது கிரேக்கர்கள், எகிப்தியர்கள், சுமேரியர்கள், மாயா இன மக்கள், சீனர்கள் ஆகிய எல்லோரும் எழுத்துக்களைத் தானாக உருவாக்கும் வல்லமை படைத்தவர்கள். ‘’முட்டாள் இந்தியர்கள்’’ மட்டும் எதையுமே இறக்குமதி செய்யும் ‘’கடன் வாங்கிகள்’’ என்று முத்திரை குத்தினர். நம்மூர் திராவிடங்களுக்கும், அதுகளுக்கும் இதுகளுக்கும் ஒரே மகிழ்ச்சி. ஆமாம் ஆமாம், ஆரியப் பார்ப்பனர்கள் சைபிரீயவிலிருந்து வந்த காட்டு மிராண்டிகள் என்று மேடை போட்டு முழக்கி தமிழர்களுக்கு இருந்த மூளை எல்லாவற்றையும் மழுங்கடித்தனர்.

உண்மை என்ன?

கடிதம் எழுதும் கலை, 2500 ஆண்டுகளுக்கு முன் எப்படி வளர்ச்சி அடைந்தது என்பதற்கு மகாவம்சம் என்னும் இலங்கை வரலாற்று காவியத்தில் குறந்தது ஆறு எடுத்துக்காட்டுகள் உள.
அசோகன் என்னும் மாமன்னன் கல்லிலே எழுத்துக்களைப் பொறித்ததால் நமக்குக் கொஞ்சமாவது தடயங்கள் கிடைத்தன. அதே காலத்தில் – 2300 ஆண்டுகளுக்கு முன்னர் —- இலங்கையிலும் கல்வெட்டுகள் உள. இதிலிருந்து நாம் அறிவதென்ன?

காஷ்மீர் முதல் கண்டி வரை எழுத்துக்கள் இருந்தன. அது மட்டுமல்ல. அதை எல்லோரும் படிக்க முடியும் அளவுக்கு அறிவுத் தீ கொழுந்துவிட்டு எரிந்தது. அப்படி இல்லையானால் ஆப்கனிஸ்தான் முதல் கர்நாடகம் வரை அசோகன் கல்வெட்டில் எழுதி இருக்கமாட்டான்.

அது சரி! 2300 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த நிலவரம் என்ன? நம்மிடையே இருக்கும் சிந்து சமவெளி எழுத்துக்கள் 4000 ஆண்டு பழமை உடையவை. ஆனால் அவர்கள் என்ன எழுதினர் என்பதை இதுவரை கண்டறிய முடியவில்லை. மேலும் அசோகனுக்கும் சிந்து வெளி நாகரீகத்திற்கும் இடையே 1500 முதல் 2000 ஆண்டுவரை இடைவெளி இருக்கிறது. இந்தியர்கள் எழுத்தையே மறந்துவிட்டார்களா?

இல்லை! இந்தியர்கள் எழுதிக் கொண்டேதான் இருந்தார்கள். ஆனால் மரவுரியிலும், பனை ஓலைகளிலும் எழுதினார்கள். அவை சில நூறு ஆண்டுகளுக்கு மேல் இரா. அழியக்கூடிய பொருட்கள்.
இதற்கு என்ன ஆதாரம்?

சிசுபாலவாதம் என்னும் நாடகத்தில் ருக்மினி, கிருஷ்ண பரமாத்மாவுக்கு எழுதிய காதல் கடிதம் பற்றி வருகிறது.

Love Letters from Ancient India – posted on 21st April 2012
Techniques of Secret Writing in India –posted on 19th March 2013

இதை இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே எழுதி இருக்கிறேன். பெண்கள் ரகசிய சங்கேத மொழியில் எப்படிக் கடிதம் எழுத வேண்டும் என்று 64 கலைகளைப் பட்டியலிட்டுக் கொடுத்த காமசூத்திர ஆசிரியர் வத்ஸ்யாயன மகரிக்ஷி கற்றுத் தருகிறார். அதையும் மேற்கூறிய இரு கட்டுரைகளில் காண்க. பத்தாம் நூற்றாண்டில் சிலை வடித்த சிற்பிகளும்கூட பெண்கள் கடிதம் எழுதுவது போல சிலை வடித்தானேயன்றி ஆண்கள் எழுதுவது போல வடிக்கவில்லை!!

கிருஷ்ணர் காலம் கி.மு. 3100-க்கு முன்னர். அதாவது கலியுகம் தொடங்கியதற்கு முன்னர். அதே காலத்தில் வாழ்ந்த வியாசன் என்னும் மாமுனிவன் மஹாபாரதம் என்னும் உலகிலேயே நீண்ட காவியத்தை எழுத முயன்றபோது பிள்ளையாரை அழைத்ததையும் அதற்கு ஒருவருக்கு ஒருவர் ‘’நிபந்தனை– பதில் நிபந்தனை’’ என்று போட்ட கதையையும் நாம் அறிவோம்.

letter writing

மஹாபாரதத்துக்கு முந்தி நடந்தது ராமாயணம். அதில் ராமன் என்ற பெயர் அம்புகளில் எழுதப்பட்டதையும். இலங்கைக்கு கடல் பாலம் கட்டுகையில் ராம என்று எழுதிய கற்கள் மிதந்ததையும் நாம் கதைகளில் படிக்கிறோம். ஆனால் இவைகளுக்கு தொல்பொருட் துறை சான்றுகள் இல்லாததால் அறிஞர் பெருமக்கள் ஏற்கமாட்டார்கள். போகட்டும்.

மகாவம்சத்திம் வரும் சாட்சியங்களைப் பார்ப்போம். அத்தியாயம் 5-ல் ஆசோகனுக்கு வந்த கடிதங்கள் பற்றி சொல்லப்படுகிறது. 84,000 ஊர்களிலும் புத்த விகாரைகள் கட்டி முடிக்கப்பட்ட செய்தி ஒரே நாளில் கடிதங்கள் மூலம் வந்ததாக மகாவம்சம் இயம்பும். இதிலிருந்து நாம் அறிவதென்ன?

அருமையான அஞ்சல்துறை அக்காலத்தில் செயல்பட்டது. ஒரே நேரத்தில் மன்னன் வீட்டில் (அரண்மனையில்) கடிதங்கள் டெலிவரி ஆயிற்றூ!! ஐயா! 84,000 ஊர்கள் என்பது மிகைப்படுத்த எண்ணிக்கையாக இருக்கிறதே என்று சிலர் அங்கலாய்க்கலாம். அப்படிப்பட்டவர்கள் கபிலர் பாடிய புறநானூற்றுப் பாடலை நினைவிற் கொள்ள வேண்டும். பாரி என்னும் சிற்றரசன் வசத்தில் இருந்த 300 ஊர்களையும் பாரி வள்ளல் ஏற்கனவே தானம் செய்துவிட்டதாக மூவேந்தர்களுக்குச் செய்தி தருகிறார் கபிலர். சின்ன பாரியிடமே 300 ஊர்கள் இருந்தால் ஆப்கனிஸ்தான் முதல் கர்நாடகம் வரை ஆண்ட அசோகனிடம் 84,000 ஊர்கள் இருந்ததில் வியப்பில்லையே. பிற்காலத்தில் வந்த யுவாங் சுவாங் போன்ற சீன யாத்ரீகர்களும் இதை உறுதி செய்கின்றனர்.

சுவையான காதல் கடிதம்

அத்தியாயம் 22-ல் காதல் கடிதம், அதைத் தொடர்ந்து நடந்த படுகொலைச் செய்திகள் வருகின்றன.. கோதபயனுடைய மகன் காகவன தீசன் ராஜாவாகப் பதவியேற்ற காலத்தில் நடந்தது இது. அவனுடைய மனைவி பெயர் விஹாரதேவி. புத்த விஹாரத்தின் பெயரில் ஒரு ராணியா என்று வியப்போருக்கு மஹாவம்சம் விளக்கம் தருகிறது.

கல்யாணி என்னும் பகுதியை தீசன் என்பவன் ஆண்டு வந்தான். அவன் தம்பி உதிகன் என்பான் ராணியையே (அண்ணன் மனைவி) காதலித்தான். மன்னனுக்கு இது தெரிந்தவுடன் அவன் தம்பி ஊரை விட்டே ஓடிவிட்டான். இருந்தாலும் காதல் தீ அணையவில்லை. ஒருவருக்கு புத்தபிட்சு வேடம் போட்டுக் காதல் கடிதம் கொடுத்து அனுப்பினான். அந்தத் ‘’திறமைசாலி’’ அரண்மனை வாயிலில் இருந்த தேரர் குழுவுடன் கூட்டத்தோடு கூட்டமாக உள்ளே சென்று விடுகிறான். போஜனம் முடிந்து ராஜா ராணி கிளம்பும் தருணத்தில் ராஜா முன்னே சென்றார். ராணி பின்னே ஏகினாள். ராணியின் காலடியில், போலி புத்தபிட்சு காதல் கடிதத்தை வீசி எறியவே அந்தக் காகித சப்தம் கேட்டு ராஜா திரும்பிப் பார்க்கிறார். நடந்ததை அறிந்தவுடன் உண்மையை விசாரித்தரியாமல் புத்த குருவான தேரரையும் போலி புத்த பிட்சுவையும் தலையைச் சீவி கடலில் எறிந்து விடுகிறான்.

உண்மையான தேரரையும் மன்னன் கொன்றதால் இலங்கையை சுனாமி தாக்கி ஊருக்குள் கடல் அலைகள் பொங்கி வந்தன. உடனே கடல் தேவனின் கோபத்தை தணிக்க தனது அழகிய மகள் தேவியை பொற்கலத்தில் வைத்து கடலில் மிதக்க விடுகிறான். அது லங்கா விஹரை அருகே ஒதுங்கியது. அவளைக் காகவனதீசன் கல்யாணம் செய்துகொண்டு ராணி ஆக்குகிறான். அவள் பெயரே விஹார தேவி.

இதில் நமக்கு முக்கியமான விஷயம் புத்தபிட்சு மூலம் ராணிக்குப் போன லிகிதமே (கடிதம்)!

அத்தியாயம் 8-ல் 2500 ஆண்டுகளுக்கு முன்னர், முதல் மன்னன் விஜயன் எழுதிய கடிதம் பற்றிய செய்தி கிடைக்கிறது. அவன் முதல் மனைவி யக்ஷிணி என்பதால் அவளையும் அவள் மூலம் பிறந்த இரண்டு குழந்தைகளையும் விரட்டிவிட்டான். பின்னர் கல்யாணம் கட்டிய தமிழ்ப் பெண் மூலம் குழந்தை கிடைக்கவில்லை. சாகப்போகும் தருணத்தில் தன் சொந்த நாடான வங்க தேசத்துக்கு கடிதம் அனுப்பி தன் தம்பியை வரவழைக்கிறான். இதன் மூலம் 2500 ஆண்டுகளுக்கு முன் இருந்த அஞ்சல் சேவையை (தபால் துறை) நாம் அறிய முடிகிறது

letter writing4

அத்தியாயம் 10-ல் பாண்டுகாபயனுக்கு அரசன் எழுதிய கடிதம் பற்றிப் படிக்கலாம். அவன் மாமன்மார்களை வெற்றி கொண்டு படைகளுடன் முன்னேறி வந்தவுடன் அரசன் கடிதம் அனுப்புகிறான். கங்கைக் கரையைத் தாண்டாதே. அதற்குப்பின் நீ வசப்படுத்திய பகுதிகளை வைத்துக் கொள் என்று கடிதம் கூறியது. ஆக உள்நாட்டு கடித சேவைபற்றியும் நாம் அறிய முடிகிறது.

அத்தியாயம் 33-ல் ரோஹனாவில் கலகம் செய்த பிராமணனுக்கு அரசன் அனுப்பிய செய்தி வருகிறது முதலில் ஏழு தமிழர்களுடன் சேர்ந்து கொண்டு அந்த பிராமணன் ‘’ஆட்சியை ஒப்படைத்துவிடு’’ என்று மன்னன் காமனிக்கு கடிதம் அனுப்புகின்றான். அவன் கலகம் செய்த பிராமணன் தீசனுக்கு பதில் அனுப்புகிறான். ‘’இந்த அரசு இப்போது உன்னுடையது முதலில் தமிழர்களைப் போரிட்டு வெல்வாயாக’’– என்று அரசன் பதில் கூறுகிறது.

அத்தியாயம் 23-ல் வேறு ஒரு தண்டச் சோறு உண்ணூம் இளைஞன் பற்றிய கதை வருகிறது. சங்கன் என்பனுக்கு ஏழு பிள்ளைகள் அதில் நிமிலன் என்பவன் வெட்டிச் சோறு உண்டு பொழுதை வீணாய்க் கழித்துவந்தான். அவன் சகோதர்களுக்கு ஏக கோபம். அப்போது அந்தப் பகுதிக்குக் காவலுக்குக் குடும்பத்துக்கு ஒருவர் வரவேண்டும் என்று கட்டளை இட்ட உடன் அவனே சென்று இளவரசனைக் கண்டான்.

இளவரசன் இந்த ஆள்– நல்ல உடல் வலுவோடு இருக்கிறான். இவனுக்கு ஒரு சோதனை வைப்போம் என்று கருதி தொலை தூரத்தில் என்னுடைய பிராமண நண்பன் குண்டலி வசிக்கிறான். அவனிடம் இந்தக் கடிதத்தைக் கொடுத்துவிட்டு அவன் கொடுக்கும் வெளிநாட்டுச் சரக்குகளை வாங்கி வா என்கிறான். அவன் அந்தத் தேர்வில் வெற்றி பெறவே அவனுக்கு பெரும் பதவிகள் கிடைக்கின்றன. இங்கு நாம் கவனிக்க வேண்டிய விஷயம் பிராமணனுக்கு அனுப்பிய கடிதம் என்பதே!

கட்டுரையில் நாம் கண்டது என்ன?
2500 ஆண்டுகளுக்கு முன்னர், கண்டி முதல் காஷ்மீர் வரை கடிதப் போக்குவரத்து நடந்தது. மக்கள் எல்லோருக்கும் எழுதப் படிக்கத் தெரியும். காதல் கடிதம் முதல் மிரட்டல் கடிதம் வரை பலவகையான கடிதங்கள் எழுதப்பட்டன. அசோகன் காலத்தில் பிரம்மாண்டமான கடிதப் போக்கு வரத்து நடந்தது. இந்த எழுத்துக் கலை ராமாயண, மஹாபாரத காலத்திலேயே தோன்றிவிட்டது.

வளர்க கடிதம் எழுதும் கலை!! வாழ்க கடிதம் எழுதுவோர்!!