ராமர் போற்றிய மஹாத்மா!

6.ராமாயண வழிகாட்டி

அத்தியாயம் – 6     By ச.நாகராஜன்

 

ராமர் போற்றிய மஹாத்மா!

 

கார்யே கர்மணி நிர்திஷ்டே யோ பஹூன் யபி ஸாதயேத் I

பூர்வகார்யாவிரோதேன ஸ கார்யம் கர்து மர்ஹதி II

 

கார்யே –  செய்து முடிக்க வேண்டிய

கர்மணி – ஒரு காரியத்தில்

நிர்திஷ்டே  ஏவப்பட்டபோது

ய: – எவனொருவன்

பூர்வகார்யாவிரோதேன – முதல் காரியத்திற்கு ஒரு கேடுமின்றி

பஹூனி அபி – அனேகங்களையும்

ஸாதயேத் – சாதிக்கின்றானோ

ஸ – அவன்

கார்யம் – காரியத்தை

கர்தும் – செய்து முடிக்க

அர்ஹதி –  திறமை உடையவனாகிறான்

 

-சுந்தரகாண்டம் 41வது ஸர்க்கம் 5ஆம் ஸ்லோகம்

 

அனுமான் சீதையை அசோகவனத்தில் கண்டதில் மகிழ்ச்சி அடைகிறார். பின்னர்  மனதில் சிறிது ஆராய்ச்சி செய்கிறார். ‘அஸி தேஷணா இயம் த்ருஷ்டா’ – ‘கருங்கண்ணாளான இந்த சீதை என்னால் கண்டுகொள்ளப்பட்டாள்’ என்று  மகிழ்ந்த அவர், “அரக்கர்களிடம் தண்டம் என்ற நான்காவது உபாயமே செல்லுபடியாகும். ஒரு காரியத்தை முடிக்கின்ற போது அத்துடன் பல காரியங்களையும் சேர்ந்து முடிப்பதே சாலச் சிறந்தது” என்று எண்ணுகிறார்.

 

சிறந்த வேலைக்காரனின் வழி அல்லது எக்ஸலண்ட் பெர்பார்மன்ஸ் (excellent performance) என்பதை அவர் விவரிக்கும் இந்த ஸ்லோகம் ஒருவர் வாழ்க்கையில் வெற்றி கொள்வதற்கான வழியைச் சுட்டிக் காட்டுகிறது.

 

சீதை இருக்கும் இடத்தைக் கண்டுபிடிப்பதே அவருக்கு இட்ட பணி.

ஆனால் அவரோ ராக்ஷஸ கிங்கரர்களை வதைத்தார். சுக்ரீவனது ஜெயத்தை கோஷித்தார். பிரஹஸ்தனுடைய மகனான ஜம்புமாலியை வதம் செய்தார். அக்னி ஒளியை உடைய ஏழு மந்திரிகுமாரர்களை வதம் செய்தார். ஐந்து சேனைத் தலைவர்களையும் அக்ஷ குமாரனையும் வதம் செய்தார்.ராவணனை நேருக்கு நேர் சந்தித்து எச்சரிக்கை செய்தார். விபீஷணனையும் இதர மந்திரிமார்களையும் நேரில் கண்டு ராவணனின் பலத்தை நிர்ணயித்தார்.  இலங்கையை எரியூட்டினார். போதாதா, என்ன?

 

அனுமனை ராமர் போற்றிக் கூறும் இடம் ராமாயணத்தில் யுத்த காண்டத்தில் முதல் ஸர்க்கத்தில் அமைகிறது. 7,8,9 ஆகிய மூன்று ஸ்லோகங்களில் ராமர் கூறுவதைப் பார்ப்போம்:

 

யோ ஹி  ப்ருத்யோ  நியுக்த: 

ஸன்பர்த்ரா கர்மணி துஷ்கரே I

குர்யாத் த்தனுராகேன

தமாஹு: புருஷோத்தமம் II

(ப்ருத்ய: – வேலைக்காரன்; பர்த்ரா –  தலைவன்/ எஜமானன்)

 

எந்த ஒரு வேலைக்காரன் தலைவனால் கஷ்டமான ஒரு காரியத்தில் ஏவப்பட்டு அதைக் குறையின்றி செய்வதோடு அநுகூலமான வேறு பல காரியங்களையும் செய்து முடிக்கிறானோ அவனை உத்தம வேலைக்காரனாகச் சொல்வர்.

நியுக்தோ ய:  பரம் கார்யம்

ந குர்யான்ந்ருபதே: ப்ரியம் I

ப்ருக்தோ யுக்த: சமர்த்தஸ்ச

தமாஹுர்மத்யமம் நரம் II

 

(யுக்த – அனுபவசாலி; சமர்த்த- சாமர்த்தியசாலி;ப்ரியம் –நன்மை விளைவிக்கத் தக்கது) 

 

எந்த ஒரு அனுபவசாலியும், திறமைசாலியுமான வேலைக்காரன் தலைவனால்  ஒரு காரியத்தில் ஏவப்பட்டு தலைவனுக்கு மேலான மேலும் பல காரியங்களைச் செய்யவில்லையோ அவனை நடுத்தரமான வேலைக்காரன் என்று சொல்வார்கள்.

 

நியுக்தோ ந்ருபதே: கார்யம் ந குர்யாத்ய: ஸமாஹித:

ப்ருத்யோ யுக்த:  சமர்தஸ்ச  தமாஹு: புருஷாதமம்

 

எந்த ஒரு அனுபவசாலியும், திறமைசாலியுமான வேலைக்காரன் தலைவனால்  ஒரு காரியத்தில் ஏவப்பட்டு தலைவனுக்குக் குறைந்தபட்ச காரியத்தைக் கூடச் சரியாகச் செய்யவில்லையோ அவனை அதம வேலைக்காரனாகச் சொல்வார்கள்

இப்படி வேலை செய்பவர்களை மூன்று விதமாகப் பிரித்துச் சுட்டிக் காட்டும் ராமர் அனுமனால் ‘பரி ரக்ஷிதா:’ (பேருதவிசெய்யப்பெற்றோம்)

என்று மனம் குளிரக் கூறுகிறார்.

 

இந்த பேருதவியைச் செய்த அனுமானை மஹாத்மன: (மஹாத்மா)

என்று அவர் புகழ்கிறார். ராமராலேயே மஹாத்மா என்று புகழப்பட்டார்  என்றால் அனுமனின் பெருமையைக் கூறவும் வேண்டுமோ!

 

அனுமனின் செயற்கரிய செயலுக்கு என்ன கைம்மாறு செய்ய முடியும்? ராமரே,”ஹனூமத: சர்வஸ்வபூதஸ்து ஏஷ பரிஷ்வங்க: து தத்த:”  (ஹனுமானுக்கு எல்லாவற்றிலும் மேம்பட்டதான இந்த ஆலிங்கனம் செய்யப்படுகிறது) என்று கூறி அனுமனை மார்போடு அணைக்கிறார்.

 

 

இதை எண்ணும் போது நம் மெய் சிலிர்க்கிறது. இப்படிப்பட்ட ஆச்சரிய புருஷரான  அனுமனை உலக மஹாகவி கம்பன் நன்கு தேர்ந்தெடுத்த சொற்களால் இப்படித்  துதிக்கிறார் :-

 

 

அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி

அஞ்சிலே ஒன்று ஆறு ஆக ஆரியர்க்காக ஏகி

அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு அயலாரூரில்

அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவன்  எம்மை அளித்துக் காப்பான்

 

ஐந்து பூதங்களில் ஒன்றான வாயு பகவான் பெற்ற மைந்தனான அனுமன் ஐந்து பூதங்களில் ஒன்றான கடல் நீரைத் தாண்டி, ஐந்து பூதங்களில் ஒன்றான ஆகாயத்தை வழியாகக் கொண்டு ஸ்ரீ ராமனுக்காக ஐந்து பூதங்களில் ஒன்றான பூமி பெற்றெடுத்த புதல்வியான சீதையைக் கண்டு ஐந்து பூதங்களில் ஒன்றான தீயை அயல் தேசமான லங்கையில் வைத்தான். அவன் எம்மை அனைத்தும் அளித்துக் காப்பான்  என்பது இதன் பொருள்.

 

ஐந்து பூதங்களையும் அஞ்சிலே என்ற சொல் சுட்டும் பாங்கு நினைத்து இன்புறுதற்கு உரியது. அனுமனின் சேவையை இதைவிடச் சிறப்பாக  எப்படிச் சொல்ல முடியும்! கம்பனால் மட்டுமே இப்படி முடியும்!

 

இந்த ஸ்லோகங்கள் சுட்டிக் காட்டும் “பணி செய்வதில் சிறப்பு” என்பதை “யோக: கர்மஸு கௌசலம்” என்று பகவத் கீதையில் (இரண்டாம் அத்தியாயம் 50ஆம் ஸ்லோகம்) கண்ணபிரான் சுருக்கமாகக் கூறி விளங்க வைப்பதையும் எண்ணி மகிழலாம்!

கர்ம யோகி அனுமனிடமிருந்து கர்ம யோகத்தையும் கற்கலாம்!!

*************