‘முடி மன்னர், பிடி சாம்பல் ஆவர்’ (Post No.4297)

Written by London Swaminathan

 

Date:13 October 2017

 

Time uploaded in London- 7-37 am

 

 

Post No. 4297

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

பட்டினத்தாரும் நம்மாழ்வாரும் பாடியது:

முடி மன்னர், பிடி சாம்பல் ஆவர்

இரண்டு பெரிய பக்தர்கள், ஒரே கருத்தைச் சொல்லும்போது, அதை நம் மனதில் வைப்பது எளிதாகிறது; மேலும் ஒருவர் வைணவர்கள் போற்றும் நம்மாழ்வார், மற்றொருவர் சைவர்கள் போற்றும் பட்டினத்தார் என்பதைக் காணுகையில் நம் ஆர்வம் கொப்புளிக்கிறது.

 

இருவரும் என்ன சொல்கிறார்கள்?

நீ எவ்வளவு பெரிய ஆள் ஆனாலும் இறுதியில் ஆண்டியும் அரசனும் சந்திக்கும் இடம் ஒன்றே.

 

நம் வாழ்வில் காணா சமரச இடம்

சுடுகாட்டிலோ, இடு காட்டிலோதான் நாம் அனைவரும் வித்தியாசமின்றி சந்திக்கிறோம்

ரம்பையின் காதல் என்ற தமிழ் திரைப்படத்தில் ஒரு அருமையான பாடல்:–

 

சமரசம் உலாவும் இடமே நம் வாழ்வில் காணா

சமரசம் உலாவும் இடமே நம் வாழ்வில் காணா

சமரசம் உலாவும் இடமே.

 

ஜாதியில் மேலோர் என்றும் தாழ்ந்தவர் தீயோரென்றும் பேதமில்லாது

எல்லோரும் முடிவில் சேர்ந்திடும் காடு

தொல்லையின்றினே தூங்கிடும் வீடு

உலகினிலே இது தான் நம் வாழ்வில் காணா

சமரசம் உலாவும் இடமே நம் வாழ்வில் காணா

சமரசம் உலாவும் இடமே.

 

 

ஆண்டி எங்கே அரசனும் எங்கே

அறிஞன் எங்கே அசடனும் எங்கே

ஆவி போன பின் கூடுவார் இங்கே

ஆகையினால் இது தான் நம் வாழ்வில் காணா

சமரசம் உலாவும் இடமே

 

 

பட்டினத்தார் பாடல்

பாமர மக்களுக்குப் புரியும் வகையில் எழுதப்பட்டது திரைப்படப் பாடல். இலக்கிய நயம்பட எழுதப்பட்டது பக்திப் பாடல்; மேலும் பக்திப் பாடல்களைப் பாடுவோர் அதை அடிமனதில் தோன்றும் ஆன்மீகப் பேரூற்றில் இருந்து தருகையில் நாம் மிகவும் ரசிக்கிறோம்; பருகுகிறோம். ஆகையால் காலா காலத்துக்கும் அப்பாடல்கள் அழிவதில்லை. அதே கருத்து திரைப்பாடல்களில் வருகையில் அது அழிந்துவிடுகிறது. ஏனெனில் அவர்கள் காசு, பணத்துக்கு எழுதுகிறார்கள்.

 

இதோ பட்டினத்தார் பாடல்:–

 

முடிசார்ந்த மன்னரும் மற்றுமுள்ளோரும் முடிவில் ஒரு
பிடி சாம்பராய் வெந்து மண்ணவதுங் கண்டு பின்னும் இந்தப்
படிசார்ந்த வாழ்வை நினைப்பதல்லால் பொன்னின் அம்பலவர்
அடிசார்ந்து நாம் உய்யவேண்டும் என்றே அறிவாரில்லையே.

 

 

பொருள் மிகவும் எளிது:

பெரிய  வைர, ரத்தின, தங்க கிரீடங்களை (மணி முடி) தாங்கி பாரையே ஆண்ட அரசர்களும் இறுதில் இறந்த பின்னர் எரிக்கப்பட்டு ஒரு கைப்பிடி சாம்பல் ஆகிவிடுவர். இதைப் பார்த்த பின்னரும், பலரும் போகும் வழிக்குப் புண்ணியம் சேர்க்காமல், மேலும் மேலுமாசைகளைப் பெருக்கி வாழ மக்கள் விரும்புகின்றனர். திருத் தில்லை அம்பலத்தில் ஆடும் இறைவனின் அடிகளை நாடும் நாட்டம் வரவில்லையே!

 

இது பட்டினத்தாரின் ஏக்கம்.

இதோ நம்மாழ்வார் பாசுரம்:

அடிசேர் முடியினர் ஆகி அரசர்கள் தாம் தொழ

இடிசேர் முரசங்கள் முற்றத்து இயம்ப இருந்தவர்

பொடிசேர் துகளாய்ப் போவர்கள் ஆதலில் நொக்கெனக்

கடிசேர் துழாய் முடிக்கண்ணன் கழல்கள் நினைமினோ

–திருவாய் மொழி, திவ்வியப் பிரபந்த பாடல் எண் 3009

 

பொருள்:-

 

பேரரசர்கள் ஒரு சமயம். மற்ற சிற்றரசர்களின் முடிகள் தங்கள் காலில் படும்படி (காலில் விழுந்து வணங்கும்போது) ஆட்சி புரிந்தனர். இடி போன்ற முரசங்கள் ஒலிக்கும்படி சபை வீற்றிருந்தனர். ஆனால் அவர்களே பின்னொரு நாளில் இவை அழியும்படி, போரில் தோற்று பொடியாக, துகளாக ஆனார்கள். ஆகவே மணம் பொருந்திய துளசி மாலையை அணிந்த கண்ணன் திருவடிகளை நினை மனமே; இப்போதே நினை மனமே.

 

ஆக நம்மாழ்வாரும் பட்டினத்தாரும் பேசும் பெரிய மன்னர்கள் தகுதி நமக்கு இல்லை. ஆனால் அவர்களுகே அந்தக் கதி என்றால் ஊர் பேர் தெரியாத நமக்கு எந்த கதியோ?

 

இறைவன் சந்நிதியில் மட்டுமே நாம் அனைவரும் சமம்.

 

–சுபம்–