மாநுடப் பிறவி அரிது! அரிது!!

Article written by london swaminathan

evolution

மாநுடப் பிறவி எவ்வளவு அரிது என்பதை சிந்தாமணிச் செய்யுள் ஒன்று மிகமிக அழகாகக் கூறுகிறது. இதில் தத்துவம் ஒரு புறம் இருக்க தமிழர்களுக்கு கடல் பற்றி எவ்வளவு அறிவு இருந்தது என்பதையும் இது காட்டும். சீவக சிந்தாமணி என்பது திருத்தக்க தேவரால் எழுதப்பட்ட நூல். தமிழில் ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்று. அவர் கூறுவார்:

“பரவை வெண் திரை வடகடல் படு நுகத் துளையில்
திரை செய் தென் கடல் இட்டதோர் நோன் கழி சிவணி
அரச அத்துளை அகவயிற் செறிந்தென அரிதால்
பெரிய மோனிகள் பிழைத்து இவண் மாநிடம் பெறலே” (சீவக.2749)

வட கடலில் நுகத் துளையோடு கூடிய ஒரு கழி தண்ணீரில் மிதந்து செல்கிறது; தென் கடலில் மற்றொரு கழி மிதந்து செல்கிறது. இந்த இரண்டும் ஒன்றை ஒன்று சந்திப்பது மிக மிக அரிது. அப்படியே சந்தித்தாலும் அவ்விரண்டு துளைகளிலும் ஒரு கோல் நுழைவது அரிதினும் அரிது. இந்த இரண்டு கழிகளும் ஒன்றை ஒன்று சந்தித்து ஒரு கோல் நுழைந்துவிட்டால் அது எவ்வளவு பெரிய அதிசயம் ஆகும்? அத்துணை அரிது நமக்கு மாநுடப் பிறவி கிடைத்திருப்பது என்கிறது சிந்தமணிச் செய்யுள்

இந்த உவமை நச்சினார்க்கினியர் உரையிலும் வருகிறது:
‘தென்கடலிட்டதோர் திருமணி வான்கழி வடகடனுகத்துளை வந்து பட்டாஅங்கு’ என்று சிந்தாமணியில் வேறு ஒரு இடத்திலும் ‘வடகடலிட்ட ஒரு நுகத்தின் ஒரு துளையில் தென்கடலிட்ட ஒரு கழி சென்று கோத்தாற் போல’ எனவும் (இறை – சூ உ. உரை) ‘வளைபயில் கீழ்கட னின்றிட மேல்கடல் வானுகத்தின், துளை வழி நேர்கழி கோத்தென’ ( திருச்சிற். 6 ) எனவும் பல இடங்களில் காண்கிறோம்.
இந்துக்கள் உயிர்வாழும் பிராணிகளை நான்கு வகையாக பிரித்தனர்.

1.அண்டஜம்: முட்டையில் இருந்து பிறப்பவை
2.ஜராயுதம்; கருப்பையில் பிறப்பவை
3.உத்பிஜம்: வித்து, வேர், கிழங்கு மூலம் பிறப்பவை
4.சுவேதஜம்: வேர்வையில் (கிருமிகள், பாக்டீரியாக்கள்) பிறப்பவை

evolutionary_tree_003

ஆறுமுக நாவலர் என்ற சைவப்பெரியார் இதற்கு கீழ்கண்ட விளக்கம் கொடுக்கிறார்:
“நால்வகைத் தோற்றங்களாவன: அண்டசம், சுவேதசம், உற்பிச்சம், சராயுசம் என்பவைகளாம். அவைகளுள் அண்டசம் முட்டையில் தோன்றுவன. சுவேதசம் வேர்வையில் தோன்றுவன. உற்பிச்சம் வித்து வேர் கிழங்கு முதலியவைகளை மேற்பிளந்து தோன்றுவன. சராயுசம் கருப்பையில் தோன்றுவன. எழுவகைப் பிறப்புக்களாவன: தேவர், மனிதர், விலங்கு, பறவை, ஊர்வன, நீர்வாழ்வன, தாவரம் என்பவைகளாம். தாவரங்களென்றது மரம் செடி முதலியவைகளை.

கருப்பையிலே தேவர்களும், மனிதர்களும், நாற்கால் விலங்குகளும் பிறக்கும். முட்டையிலே பறவைகளும், ஊர்வனவும், நீர்வாழ்வனவும் பிறக்கும். வேர்வையிலே கிருமி, கீடம், பேன் முதலிய சில ஊர்வனவும், விட்டில் முதலிய சில பறவைகளும் பிறக்கும். வித்தினும் வேர் கொம்பு கொடி கிழங்குகளினும் தாவரங்கள் பிறக்கும். தாவரமென்றாலும், நிலையியற் பொருளென்றாலும், அசரமென்றாலும் பொருந்தும். தாவரமல்லாத மற்றை ஆறு வகைகளும் சங்கமங்களாம். சங்கமமென்றாலும், இயங்கியற் பொருளென்றாலும், சரமென்றாலும் பொருந்தும்.

தேவர்கள் பதினொரு நூறாயிர யோனிபேதம், மனிதர்கள் ஒன்பது நூறாயிர யோனிபேதம். நாற்கால்விலங்கு பத்து நூறாயிரயோனிபேதம். பறவை பத்து நூறாயிர யோனிபேதம். நீர்வாழ்வன பத்து நூறாயிர யோனிபேதம். ஊர்வன பதினைந்து நூறாயிர யோனிபேதம். தாவரம் பத்தொன்பது நூறாயிர யோனிபேதம். ஆகத்தொகை எண்பத்து நான்கு நூறாயிர யோனிபேதம்.”

மேலை நாட்டினர் 400 ஆண்டுகளாகத்தான் சார்லஸ் டார்வினின் பரிணாமக் கொள்கையையும் லின்னேயஸின் தாவரஉலக்ப் பிரிவினையையும் பின்பற்றுகின்றனர். அதற்கு முன் அரிஸ்டாடில் என்ற கிரேக்க அறிஞர் சொன்னதைப் பின்பற்றினர். 2300 ஆண்டுகளுக்கு முன் அரிஸ்டாடில் கூறியதைவிட நம்மவர்கள் ந்ன்றாகப் பாகுபாடு செய்துள்ளனர். அதுமட்டுமல்ல. இதுவரை விஞ்ஞானிகள் ஏற்றுக்கொள்ளாத சூப்பர்மேன் (தேவர்கள்) பற்றியும் நாம் கூரிவிட்டோம். இதை அறிவியல் உலகம் ஏற்க இன்னும் நீண்டகாலம் தேவை.
தாவரம் முதல் தேவர்கள் வரை உள்ளவர்களை ஏழுவகையாகப் பிரித்தனர்:

1.தேவர்
2.மனிதர்
3.விலங்கு: சிங்கம், புலி, யானை, ஆடு, மாடு முதலியன
4.பறவை: காகம்,குயில், மயில், குருவி, கொக்கு முதலியன
5.ஊர்வன: பாம்பு, பூரான், தேள், பல்லி முதலியன
6.நீர்வாழ்வன: மீன், ஆமை, முதலை, திமிங்கிலம் முதலியன
7.தாவரம்: மரம், செடி, கொடி, பாசி, புல், பூண்டு முதலியன
இவைகளை 84 லட்சம் (8400000) வகைகள் என்றும் கூறினர். இது இன்றைய விஞ்ஞானிகளின் கூற்றுக்கு நெருங்கிய எண் ஆகும்.

tree-o-life

“அண்டசஞ் சுவேதசங்கள் உற்பிச்சம் சராயுசத்தோ
டெண்தரு லெண்பத்து நான்கு நூறாயிரந்தான்
உண்டுபல் யோனியெல்லாம் ஒழித்து மாநுடத்துதித்தல்
கண்டிடில் கடலைக் கையால் நீந்தினன் காரியங்காண்”

என்று சிவஞான சித்தியார் கூறுகிறார். அதாவது மாநுடப் பிறவி கிடைப்பது மிக மிக அரிது. 84 லட்சம் வகை உயிரினங்களில் உயர்ந்த மாநுடப் பிறவி கிடைப்பது கடலைக் கையால் நீந்திக் கடப்பது எவ்வளவு அபூர்வமோ அவ்வவளவு அபூர்வம். சம்பந்தரும் தேவாரத்தில் 84000 நூறாயிரம் யோனிபேதங்கள் பற்றிப்பாடுகிறார்.

evolution1

அரியது கேட்கின் வரிவடி வேலோய்!
அரிதரிது மானிடர் ஆதல் அரிது
மானிடராயினும் கூன் குருடு செவிடு
பேடு நீக்கிப் பிறத்தல் அரிது
பேடு நீக்கிப் பிறந்த காலையும்
ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது
ஞானமும் கல்வியும் நயந்த காலையும்
தானமும் தவமும் தான்செயல் அரிது
தானமும் தவமும் தான்செய்வராயின்
வானவர் நாடு வழிதிறந் திடுமே

என்று அவ்வைப் பாட்டியும் கூறுவர்.

ஆதிசங்கரர் கூற்று

ஆதிசங்கரர் பல இடங்களில் மாநுடப் பிறவியின் அரிய தன்மை பற்றிக் கூறுகிறார்: “ஜந்தூனாம் நரஜன்ம துர்லபத:” (அரிது அரிது மானுடராதல் அரிது). அவர் எழுதிய விவேக சூடாமணியில் 2, 3, 4– ஆவது ஸ்லோகங்களிலேயே இதைப் பற்றிப் பிரஸ்தாபிக்கத் துவங்கி விடுகிறார்.

அரிது அரிது மனிதப் பிறவி, அதிலும் அரிது பிரம்மத்தை நாடும் பிறவி
அதனிலும் அரிது வேத அறிவு, அதனிலும் அரிது ஆத்ம ஞானம்
முக்தி பெறுவதோ நூறு கோடியில் ஒன்றே!

மூன்றாவது ஸ்லோகத்தில் மூன்று அரிய விஷயங்களைக் கூறுகிறார்: மனுஷ்யத்வம், முமுக்ஷுத்வம், மஹா புருஷர்களின் அருள். மனிதப் பிறவி, வீடு பேற்றை நாடல், பெரிய குருவின் பூரண பாதுகாப்பு என்பதே அவர் கூறுவது.

வேதத்தைப் படித்த பின்னரும் முக்தியை நாடாதவன் தற்கொலை செய்துகொள்வதற்குச் சமம் என்கிறார் நாலாவது ஸ்லோகத்தில்.

tree of life colour

மாணிக்கவாசகர ஒரு மனிதனுக்குள்ள எல்லாப் பிறப்புகளையும் அழகாகப் பாடிவிட்டார்:

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல்விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல்லரசுராகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லா அ நின்ற தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்
–சிவ புராணம், திருவாசகம் (மாணிக்கவாசகர்)

Pictures are taken from various sites;thanks.
contact london swaminathan at swami@yahoo.com