வேத நாயும் மாதா கோவில் நாயும்

படத்தில் சர்ச்சில் பிரார்த்தனை செய்யும் அதிசய நாய்

உலகில் முதல் முதலில் நாயின் பெருமையைப் போற்றியது உலகின் மிகப் பழைய மத நூலான ரிக் வேதம் ஆகும். இந்துக்கள் எப்போதுமே பிராணிகள் தாவரங்களின் பால் அன்பு மழை பொழிபவர்கள். சம்ஸ்கிருத, தமிழ் இலக்கியங்களில் உள்ள ஆயிரக் கணக்கான குறிப்புகள் இதை உறுதி செய்கின்றன. மஹா பாரதத்திலும் ராமாயணத்திலும் வியாசரும் வால்மீகியும் நாய்கள் பற்றிய சுவையான கதைகளைச் சேர்த்துள்ளனர். டோக்கியோ விலுள்ள நாய் சிலை உலகப் புகழ்பெற்றது. இப்போது இத்தாலிய மாதா கோவில் நாய்க் கதை ஒன்றும் லண்டன் பத்திரிக்கைகளில் படங்களுடன் வெளியாகி இருக்கிறது. இதோ சுவையான நாய்க் கதைகள்:

 

இத்தாலியில் சான் டொனாசி என்னும் ஊரில் சாண்டா மரியா அசுந்தா மாதாகோவில் இருக்கிறது. அங்கு மரியா மார்கரிட்டா லோசி என்ற பெண்மணி ஏழு வயதான ‘டாம்மி’ என்ற நாயுடன் சர்ச்சுக்கு (மாதாகோவில்) போவது வழக்கம். இதை யாரும் பொருட்படுத்துவதில்லை. அவர் காலடியில் ‘டாம்மி’ அமைதியாக அமர்ந்திருக்கும். சென்ற ஆண்டு அவர் இறந்துவிட்டார். அந்த நாய் திடீரென்று கடந்த இரண்டு மாதங்களாக தினமும் சர்ச் மணி அடித்தவுடன் பிரார்த்தனைக் கூட்டத்துக்கு வந்துவிடுகிறது! அங்குள்ள பாதிரியாரும் அதை அன்புடன் உபசரிக்கிறார்.

 

நாய்கள் நன்றியுள்ள பிராணிகள். மேலை நாடுகளில் இரண்டாம் உலகப் போரில் சேவையாற்றிய பல நாய்களுக்கு சிலைகள் உண்டு. ஆயினும் போரில் சம்பந்தப்படாத ஜப்பானிய ஹசிகோவின் கதை மிகவும் உருக்கமானது. டோக்கியோ பல்கலைக்கழகத்தில் விவசாயத் துறை பேராசிரியர் யுனோ ஒரு நாயை வளர்த்தார். அதன் பெயர்தான் ஹசிகோ (எட்டாம் எண் என்று அர்த்தம்). பேராசிரியர் தினமும் பல்கலைக்கழகத்தில் இருந்து வரும்போது சிபுயா என்ற ரயில் நிலைய வாசலில் அது காத்து நிற்கும். அவர்களது இந்த நட்பு ஓராண்டு நீடித்தது. ஆனால் அவர் 1925ல் மூளையில் ரத்தம் உறைந்து இறந்துவிட்டார். அவர் எப்படி ரயில் நிலையத்துக்கு வருவார்? ஆயினும் ஹசிகோ ஒன்பது ஆண்டுகளுக்கு அதே ரயில் நிலையத்துக்கு அதே நேரத்துக்கு தவறாமல் போய் பேராசிரியருக்காக காத்து நின்றது. ஜப்பானின் மிகப்பெரிய பத்திரிகை இந்த நாய் பற்றி ஒரு கட்டுரை வெளியிட்டவுடன் அது உலகப் புகழ் பெற்றது. 1934 ஆம் ஆண்டு அந்த ரயில் நிலைய வாயிலில் நாயுக்கு ஒரு வெண்கலச் சிலை வைத்தனர். அந்த சிலைத் திறப்புவிழாவுக்கு ஹசிகோவும் வந்தது!

படத்தில் ஹசிகோ சிலை

1935ல் ஹசிகோ புற்றுநோய் காரணமாக இறந்தது. அதன் உடலைப் பதப்படுத்தி டோக்கியோ தேசிய மியூசியத்தில் வைத்திருக்கின்றனர். மஹா பாரதத்திலும் ராமாயணத்திலும் ரிக் வேதத்திலும் இந்துக்கள் ஏன் நாய்க் கதைகளை எழுதினர் என்பது இப்போது நமக்கு நன்கு விளங்கும்.

நாய்கள் நன்றியுடையவை மட்டும் அல்ல. அபூர்வ சக்திகளை யுடையதும் கூட. மனிதனை விட 3000 மடங்கு அதிகம் மோப்ப சக்தி/முகரும் சக்தி கொண்டவை. பூகம்பம், சுனாமி, எரிமலைச் சீற்றம் ஆகியவற்றை பல நாட்களுக்கு முன்னரே அறிந்து ஊளை இடத் துவங்கிவிடும். பூமிக்கடியில் கேட்கும் உறுமல் சப்தத்தை அவை கேட்கின்றன என்று விஞ்ஞானிகள் சொல்கின்றனர்.

 

ரிக் வேதத்தில் நாய்

ரிக் வேதம் இற்றைக்கு 3500 ஆண்டுகளுக்கு முன் உலகில் எழுந்த முதல் மத நூல். அதில் ‘சரமா’ என்ற நாய் இந்திரன் வளர்த்த நாய். அதற்கு சரமேயஸ் என்ற பெயரில் இரண்டு குட்டிகளும் உண்டு. அவை ஒவ்வொன்றுக்கும் 4 கண்கள். அதாவது அவற்றின் சக்தியைக் குறிப்பிட இப்படி சங்கேத மொழியில் வேத காலப் புலவர்கள் மொழிவர். பாணிக்கள் இந்திரனின் பசுக்களைத் திருடிய போது சரமாதான் அவைகளைக் கண்டுபிடித்தது. அதன் குட்டிகளான சரமேயஸ் யம தர்ம ராஜனின் காவலர்கள். அதாவது சாவு வருவதை முன் கூட்டி அறிவிக்கும் சக்தி படைத்தவை!

(கிரேக்கர்கள் இதை ஹெர்மிஸ் என்று மாற்றி அவர்கள் புராணத்தில் சேர்த்துவிட்டனர். சம்ஸ்கிருத ‘ஸ’ கிரேக்க மொழியில் ‘ஹ’ ஆக மாறும். இதனால்தான் ‘சி’ந்து நதி ஆட்களை ‘ஹி’ந்துக்கள் என்று மொழிந்தனர்)

ரிக் வேத காலத்தில் மனிதன் நாய் வளர்த்த செய்தி இதில் கிடைக்கிறது. அது மட்டுமா? அதற்கு பெயர் வைத்தது, அதன் சேவைக்கு நன்றி கூறும் முகத்தான் அவை பற்றி கவிதை பாடியது ஆகியவற்றையும் எண்ணி இந்துக்கள் பெருமைப்படலாம்.

படத்தில் தத்தாத்ரேயர் (ரவிவர்மா ஓவியம்)

மகாபாரதத்தில் நாய்

பாண்டவர்கள் தங்கள் இறுதிக் காலத்தை புனித திசையான வடக்கில் இருக்கும் மேரு மலையை நோக்கி நடந்தே கழிக்க எண்ணுகின்றனர். தர்மபுத்திரனை ஒரு நாய் பின்தொடர்ந்து செல்கிறது. இப்படிப் போகும் வடதிசைப் பயணத்தை மகா பிரஸ்தானம் என்பர். சங்க காலத் தமிழர்கள் வட திசை நோக்கிச் செல்லுவதற்குப் பதிலாக வட திசை நோக்கி அமர்ந்து உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்தது புறநானூற்றில் உள்ளது பாண்டவர்கள் ஒவ்வொருவராக சுருண்டு விழுந்து இறந்தனர். கடைசியாக மிஞ்சியது தர்மனும் நாயும்தான். சொர்க்கத்துக்குப் போனபோது நாயை உள்ளேவிட முடியாது என்று சொல்லிவிட்டனர். நாய்க்கு அனுமதி இல்லாவிடில் எனக்கு சொர்க்கமே வேண்டாம் என்று சொன்னார் தர்மர். உடனே அந்த நாய் தான் தர்ம தேவதை என்று சுய ரூபத்தைக் காட்டி இறுதிக் காலத்திலும் தர்மன் கடைப்பிடித்த தர்மத்தைப் பாராட்டியது.

 

ராமாயணத்தில் நாய்

உத்தரகாண்டம் 60, 61 அத்தியாயத்தில் வால்மீகி முனிவர் ஒரு நாயின் கதையைக் கூறுகிறார். ஒரு நாயை ஒரு பிராமணன் அடிக்கவே அது ராம பிரானிடத்தில் புகார் செய்கிறது. ராமன அந்த பிராமணனுக்கு ‘சம்மன்’ அனுப்பவே அவன் கோர்ட்டில் ஆஜர் ஆனான். அவனுக்கு என்ன தண்டனை கொடுப்பது என்று மந்திரிகளைக் கேட்டபோது பிராமணர்களைத் தண்டிக்கமுடியாது என்று கூறிவிட்டனர். ஆனால் ராமன் அந்த பிராமணனை ஒரு மடத்துக்குத் தலைமை அதிகாரியாக நியமித்து ‘தண்டணை’ கொடுத்தார்! எல்லோருக்கும் ஒரே ஆச்சரியம். உத்தமபுத்திரன், சத்திய ஆத்மா ராமனா இப்படிச் செய்கிறான்? என்று புருவத்தை உயர்த்தினர். இதன் காரணம் நாய்க்குக் கூடத்தெரியுமே என்று ராமன் குறிப்பால் உணர்த்தினார்.

நாய் தன் கதையைக் கூறியது. பூர்வ ஜன்மத்தில் ஒரு மடத்தின்/ கல்வி நிறுவனத்தின் தலைவர் தாம் என்றும் அப்போது பணத்தைக் கையாண்ட குற்றத்தால் இப்போது அந்த பிராமணன் கையில் அடிபட நேரிட்டது என்றும் விளக்கியது. எல்லோருக்கும் விளங்கியது. அந்தப் பிராமணன்அதிகாரியாகப் பதவி ஏற்று தவறு செய்வான், தன்னாலேயே நரகத்துக்குப் போவான் என்று.

இந்தக் கதையில் பல நீதிகள் இருக்கிறது. விரிவஞ்சி விடுக்கிறேன்.

 

ஆதி சங்கரர் கண்ட 4 நாய்கள்

உலக மகா தத்துவ மேதை ஆதி சங்கரர் காசி மாநகரத்தில் 4 நாய்களுடன் வந்த சண்டாளனைப் பாதையில் இருந்து விலகச் சொன்னபோது அவன் கேட்ட கேள்வி ஆதி சங்கரருக்கு ஞானம் அளித்தது. அந்த சண்டாளனை பரமேஸ்வரனாகவும் 4 நாய்களை 4 வேதங்களாகவும் அவர் உணர்ந்தார்..

தத்தாத்ரேயர் என்னும் திரிமூர்த்தி அவதாரம் 4 வேதங்களை 4 நாய்களாக அழைத்து வரும் அற்புதமான படத்தை பாரதம் போற்றும் ஓவியர் ரவிவர்மா அழகாக வரைந்துள்ளார்.

புண்ய சீலர் நாமதேவ் வைத்திருந்த உணவுப் பண்டத்தில் ஒரு பகுதியை நாய் திருடிக் கொண்டு ஓடியது. அவரும் அதன் பின்னால் ஒடினார். எதற்காக? நெய் இல்லாமல் அதைச் சப்பிட்டால் நாயின் குடல் வெந்து விடுமே என்று எண்ணி நெய்யையும் அதற்குக் கொடுக்க ஓடினார்.

இந்து மதம் முழுதும் மரம், செடி, கொடி, பிராணிகள் எல்லாம் போற்றப்படுகின்றன. இப்போது வெளி நாட்டினர் இதை எல்லாம் படம் பிடித்து நாம் இன்று கூறும் புறச் சூழல் விடயங்களை இந்துக்கள் 3000 ஆண்டுகளுக்கு முன்னரே கூறிவிட்டனர் என்று டெலிவிசனில் காட்டுகின்றனர் (அண்மையில் நாகப் பாம்புகளைப் போற்றும் நாக பஞ்சமி நிகழ்ழ்சிகளை லண்டனில் கண்டோம்)

இந்து என்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா!!

 

Please read other animal stories posted earlier in this blog:

1. Animal Einsteins (Part 1 and Part 2)

2. Can parrots recite Vedas?

3. Why do animals worship Gods?

4. Mysterious Messengers for Ajanta, Angkor Wat and Sringeri

5. Elephant Miracles

6). 45 Words for Elephant

7. Can Birds Predict your Future?

8. Two Little Animals That Inspired Indians

9. Three Wise Monkeys from India

10. Mysterious Tamil Bird Man

11. Gajendra Moksha in Africa

12.அதிசய பறவைத் தமிழன்

Contact London Swaminathan at swami_48@yahoo.com