உலகின் அதி வித்தியாசமான வல்லுநர்கள்! – 5 (Post No.6700)

WRITTEN by S NAGARAJAN

swami_48@yahoo.com

 Date: 30 JULY 2019


British Summer Time uploaded in London – 6-59 AM

Post No. 6700

 Pictures are taken by London swaminathan ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

பாக்யா மாதமிருமுறை வெளிவரும் இதழில் 1-7-19 தேதியிட்ட இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள ஒன்பதாம் ஆண்டு பதினொன்றாம் கட்டுரை – அத்தியாயம் 427

உலகின் அதி வித்தியாசமான வல்லுநர்கள்! – 5

ச.நாகராஜன்

எஸ்கில் ரோனிங்ஸ்பேக்கன் – சிகரங்களுக்கு இடையில் நடப்பவர் (Eskil Ronningsbakken)

அஞ்சாநெஞ்சன் எஸ்கில் ரோனிங்ஸ்பேக்கன் நார்வேயைச் செர்ந்தவர். 1979, ஜூன் 24ஆம் தேதி பிறந்தவர். பெரும் மலைப் பள்ளத்தாக்குகளுக்கு இடையேயும் பிரம்மாண்டமான 3500 அடி உயரமுள்ள இரு சிகரங்களுக்கு இடையேயும் பாலன்ஸ் செய்து நடக்கும் இவரைக் கண்டால் உலகமே பிரமிக்கிறது. யோகா, தியானம் ஆகியவற்றை முறைப்படி பயிற்சி செய்து இந்த அபூர்வ சாதனையை அவர் நிகழ்த்தி வருகிறார்; சிறு வயதில் தொலைக்காட்சியில் இந்திய யோகி ஒருவர் இப்படி பாலன்ஸ் செய்யும் நிகழ்ச்சியைப் பார்த்த அவர் தானும் அது போல ஆக வேண்டும் என்று விரும்பினார். நார்வேயின் கிராமப்புறத்தில் உள்ள மரங்களின் மீதும் வீட்டுக் கூரைகளின் மீதும் ஏற ஆரம்பித்தார்; 12 வயதில் சர்கஸ் கம்பெனி ஒன்றில் சேர்ந்த அவர் பீட்டர் ஜாகோப் என்ற சர்கஸ் மாஸ்டரிடம் பல கலைகளையும் கற்றுத் தேர்ந்தார். பின்னர் உலகம் முழுவதும் வலம் வந்து நிகழ்ச்சிகளை நடத்துகிறார்! இவரது சாகஸ செய்கைகளை உடனே யூ டியூபில் கண்டு மகிழலாம்.

வலுவான குழந்தை வீரன் லையாம் ஹோக்ஸ்ட்ரா

ஒரு சிறுவனா இப்படிச் செய்வது என்று உலகை அதிசயிக்க வைத்த லையாம் ஹோக்ஸ்ட்ரா மிச்சிகனில் 2005இல் பிறந்தவன். ஐந்தே மாதக் குழந்தையாக இருந்த போது இரும்பில் ஒரு சிலுவையைப் போட்டுக் காண்பித்த இந்தக் குழந்தையின் செய்கை தாயை ஆச்சரியப்பட வைத்தது. பல்வேறு உடல் பிரச்சினைகளைச் சந்தித்த குழந்தையைத் தாய் தத்துக்குக் கொடுத்து விட்டார். லையாமைப் பரிசோதித்த டாக்டர்கள் ஒரு மிக அரிய நிலையான மசில் ஹைபர்ட்ரோபி (Muscle Hypertrophy) இருப்பதாகக் கண்டு பிடித்தனர். அதாவது குழந்தையாக இருக்கும் போதே உடல் திசுக்கள் அபாரமான உடல் வலிமையைத் தரும் நிலை இது. மூன்றே வயதில் லையாமின் உடல் திசுக்கள் 40 சதவிகிதம் வலிமை கொண்டதாக ஆகி கொழுப்பு மிகவும் குறைவாக இருந்த நிலையை எய்தினான். காமிக் புஸ்தகங்களில் வரும் சூப்பர்மேன் வேலையை நிஜமாகவே நேரடியாகச் செய்து காண்பிக்கவே உலகில் உள்ள அனைத்து தொலைக்காட்சி நிலையங்களும் லையாமின் வீட்டு வாசலில் அணி வகுத்து நின்றன! எந்த வித கனமான பொருளையும் ஒரு வினாடி நேரத்தில் தூக்கி நிறுத்தும் லையாமை உலகமே பார்த்து அதிசயித்தது! லையாமின் சாகஸங்களை நெட்டில் பார்க்கலாம். இரும்புக் கதவுகளை அனாயாசமாகத் திறப்பது, உடைப்பது, துப்பாக்கிக் குண்டைத் தடுத்து நிறுத்துவது .. அடேயப்பா நம்ப முடியாத இந்த செய்கைகளைக் கண்டு அயல்கிரக மனிதனைச் சித்தரிக்கும் திரைப்பட டைரக்டர்கள் கூட அரண்டு போய் மிரள்கின்றனர்! உலகில் சிறியதாக இருப்பவர்கள் கூட அரிய சாதனைகளைச் செய்ய முடியும் என்பதே லையாம் உலகிற்குத் தரும் செய்தி. மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது!

சித்திரவதை செய்தாலும் வலி இல்லாத டிம் க்ரிட்லேண்ட்!

அமெரிக்காவைச் சேர்ந்த டிம் க்ரிட்லேண்ட் (Tim Cridland) எவ்வளவு சித்திரவதை செய்தாலும் வலி இல்லாத அல்லது வலியைப் பொறுத்துக் கொள்ளும் ஒரு அதிசயப் பிறவி. ஜமோரா தி டார்ச்சர் கிங் (Zamora the Torture King), – சித்திரவதை மன்னன் ஜமோரா – என்பது இவரது செல்லப் பெயர். நம் ஊரில் அலகு குத்திக் கொள்வது போல ஒரு கன்னத்திலிருந்து கூரிய ஊசியை விட்டு அதை இன்னொரு கன்னம் வழியே எடுக்கிறார் இவர்.  அதை விட இன்னும் ஒரு படி அதிகமாகப் போய், வாய் வழியே அலகு ஊசிகளைக் குத்தி அதைக் கழுத்தின் கீழ் வழியாக எடுப்பது இவருக்குக் கை வந்த கலை! கத்தியை முழுங்குவது, தீக் கங்குகளை உண்பது, மின் ஷாக்கை வாங்கிக் கொள்வது என்று இப்படி எத்தனை விதமான சித்திரவதை உண்டோ அத்தனையையும் செய்து கொண்டு வலியே தெரியாமல் இருப்பது எப்படி என்பதை இவர் உலகிற்குக் காட்டுகிறார். வலி தெரியாமல் இருக்க மனதை வெளிப்புறத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும் என்கிறார் இவர். ரிப்ளியின் பிலீவ் இட் ஆர் நாட் தொடர் இவர் சாகஸங்களைச் சித்தரித்துப் பாராட்டுகிறது!

108 வயதான சீக்கிய சூப்பர் மேன் பௌஜா சிங்!

1911ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் தேதி பிறந்த பௌஜா சிங் உலகின் மிக மூத்த சாதனையாளர்! பிரிட்டன் பிரஜா உரிமை பெற்ற இவர் தனது 100ஆம் வயதில் ஒண்டேரியா மாஸ்டர்ஸ் அசோஷியேஷன் நடத்திய ஒரு விசேஷ நிகழ்ச்சியில் எட்டு சாதனைகளை ஒரே நாளில் நிகழ்த்திப் பெரும் பாராட்டைப் பெற்றார். இஞ்சி கலந்த தேநீரை அருந்துவது, காலையில் சீக்கிரம் எழுந்திருப்பது, இரவில் சீக்கிரமே உறங்கச் செல்வது, கடவுள் நாமத்தை இடைவிடாமல் உச்சரிப்பது ஆகியவையே தன் நீடித்த ஆயுளுக்குக் காரணம் என்கிறார் இவர். 2003ஆம் ஆண்டு நிகழ்ந்த லண்டன் மாரத்தானை ஆறு மணி நேரம் இரண்டு நிமிடங்களில் இவர் முடித்தார். இவரைப் பற்றி யூ டியூபில் காணலாம்.

அடுத்து இன்னும் சில அதிசய வல்லுநர்களைக் காண்போம்.

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

விண்வெளியில் விண்கலத்தைத் தட்டும் சத்தம்!

2003ஆம் ஆண்டு யாங் லிவி (Yang Liwei) என்னும் சீன விண்வெளி வீரர் ஷென்ஷோ 5 (Shenzhou 5) என்ற சீன விண்கலத்தில் விண்ணில் பறந்தார். ஷென்ஷோ கலங்களின்  தொடர் பயணங்களில் இதுவும் ஒன்று. அப்போது அக்டோபர் 16ஆம் தேதி அவர் ஒரு விசித்திரமான சத்தத்தைக் கேட்டார். விண்கலத்தின் கதவை யாரோ தட்டுவது போன்ற ஒரு சத்தம்! இரும்பு வாளியை ஒரு சுத்தியலால் தட்டுவது போன்ற பலமான சப்தத்தை அவரால் நன்கு கேட்க முடிந்தது.

விண்வெளி வெற்றிடத்தால் நிரம்பியது. அங்கு ஒலி அலைகள் ஊடுருவிச் செல்ல வேண்டுமெனில் ஒரு ஊடகம் வேண்டும். விண்வெளியில் நீரோ அல்லது காற்றோ ஊடகமாக இல்லை. அப்படியானால் எப்படிச் சத்தம் வருகிறது.

அவர் திகைத்தார். தனது இந்த அனுபவத்தைக் கீழே தரையில் இறங்கியவுடன் அவர் கூறிய போது அனைவரும் நகைத்தனர். அவர்  ஏதோ கதை கட்டுகிறார் என்று அனைவரும் கூறினர். ஆனால் அதிசயமான விஷயம் என்னவெனில் இதை அடுத்து விண்வெளிக்கு ஷென்ஷோ 5 மற்றும் 6 கலங்களில் சென்ற விண்வெளி வீரர்களும் இதே போன்ற சத்தத்தைக் கேட்டனர்!

அகண்டாகாரமான விண்வெளியில் விண்கலத்தின் கதவை யார் தட்டியது? இந்த மர்மம் இன்னும் விடுபட்ட பாடில்லை!

***