அனுமனுக்கு அயிந்திரம் தெரியும்! கம்பன் தகவல் (Post No.4989)

அனுமனுக்கு அயிந்திரம் தெரியும்! கம்பன் தகவல் (Post No.4989)

 

Written by London Swaminathan 

 

Date: 8 May 2018

 

Time uploaded in London – 9-19 am (British Summer Time)

 

Post No. 4989

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

இயைந்தன இயைந்தன இனைய கூறலும்

மயிந்தம் துயிந்தனும் என்னும் மாண்பினார்

அயிந்திரம் நிறைந்தவ நானை ஏவலால்

நயம் தெரி காவலர் இருவர் நண்ணினார்

 

பொருள்

படையின் முன்பக்கத்தில் இருந்த வானரர் இவ்வாறு மனத்திற்பட்டதைச் சொல்லுகையில், நீதி முறை அறிந்த காவலர்களான மயிந்தன், துமிந்தன் என்ற சிறப்புமிக்க இரு வானரர்கள் ஐந்திர இலக்கணத்தை நன்கு அறிந்தவனான அனுமன் கட்டளையால் அங்கு வந்தனர்.

–வீடணன் அடைக்கலப் படலம், யுத்த காண்டம்

 

இப்படிப் போகிற போக்கில் அனுமனுக்கு அயிந்திரம் தெரியும் என்று சொல்லிவிட்டுப் போகிறான கம்பன்.

 

அனுமனை நவ வியாகரண பண்டிதன் என்றும் ராமாயணம் வருணிக்கும். நவ என்றால் இரண்டு பொருள் உண்டு. புதிய மற்றும் ஒன்பது என்று.

அயிந்திரம் பற்றிய குறிப்பு தொல்காப்பியத்திலும் வருகிறது.

தொல்காப்பியனார் பாடிய தொல்காப்பியத்துக்கு பனம்பாரனார் அளித்தச்  சிறப்புப் பாயிரத்தில்

ஐந்திரம் நிறைந்த

தொல்காப்பியன் எனத் தன்பெயர் தோற்றிப்

பல்புகழ் நிறுத்த படிமையோனே

 

இதற்கு உரை எழுதிய பாஷ்யக்காரர்கள், “வடமொழிக் கண் புகழ்பெற்ற ஐந்திரம் என்னும் இலக்கணத்த்தைக் கற்றுப் புலமை வாய்ந்தவரும்’ என்று எழுதியுள்ளனர்.

 

ஆக ஐந்திரம் என்பது சம்ஸ்க்ருத இலக்கண

நூல் என்பது தெரிகிறது. இது கம்பன் காலத்தில் கூடக் கிடைத்ததாக தோன்றுகிறது.

 

பிருஹஸ்பதி என்பவர் தேவர்களின் குரு. அவர் எழுதிய நூலுக்குப் பெயர் ‘சப்த பாராயணம்’. அதை அவர் இந்திரனுக்குப் போதித்தார். வ்யாகரணம் (இலக்கணம்) என்பது ‘மரணாந்த வியாதி’ என்று உசநா என்ற மாபெரும் கவி கூறியதாக பிருஸ்பதி சொல்கிறார். அதாவது ‘ இலக்கணம் என்பது சாகும் வரை உள்ள நோயாம்’. உண்மைதான்! இலக்கணம் படித்தவன் அதை சாகும் வரை பின்பற்றி, விவாதித்து, வரம்பு மீறியவர்களைக் குறை கூறி, அதிலேயே பொழுதைக் கடத்துவான்.

 

பாரதியார் வாழ்க்கையில்…….

பாரதியார் வாழ்க்கையில் கூட இப்படி ஒரு சம்பவம் நடந்ததை ஆக்கூர் அநந்தாச்சாரியார் எழுதியுள்ளார். சிலர் பாரதியின் பாட்டில் இலக்கணப் பிழை கண்டனர். பாரதி அவர்களை அழைத்தார். உம் கவிதையில் குறை உளது என்றனர்.

என்ன குற்றம்? சொற் குற்றமா? பொருட் குற்றமா ? என்று அவர் வினவினார்.

இரண்டும் இல்லை இலக்கணப் பிழை என்றனர்.

அவர் கேட்டார்? கவிதை முதலில் வந்ததா?

அல்லது இலக்கணம் முதலில் வந்ததா?

 

வந்தவர்கள் சொன்னார்கள்: கவிதைதான் முதலில் வந்தது- என்று.

நான் கவிதைதான் எழுதுகிறேன்; இலக்கணம் அன்று- என்று சொல்லி அவர்களை ஓட்டி விட்டார் பாரதியார்.

‘’இலக்கியமன்றேல் இலக்கணம் இல்லை’’ — என்பது ஆன்றோர் வாக்கு.

 

பிருஹஸதியின் கதைக்குத் திரும்பி வருவோம்.

யார் இந்த தகவலைக் கூறியது. பாணினியின் வியாகரண நூலான அஷ்டாத்யாயீக்கு பேருரை எழுதியவர் பதஞ்சலி முனிவர். அவர் எழுதிய மஹாபாஷ்யம்தான் இந்திரனுக்கு பிருஹஸ்பதி உபதேசித்த சப்த பாராயணம் பற்றி விளம்புகிறது.

 

இது பற்றி தைத்ரீய ஸம்ஹிதை மேலும் ஒரு சுவையான செய்தியைச் சொல்லுகிறது; அந்தக் காலத்தில் லக்ஷண விதிகள் இல்லையாம். லக்ஷண என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லில் இருந்து வந்ததே இலக்கணம்; இதே போல லக்ஷியம் என்ற சொல்லில் இருந்து வந்ததே இலக்கியம் என்று ஆன்றோர் வழங்குவர். ஆக இந்திரன் பகுதி, விகுதி— இவைகளை எல்லாம் பிரித்து ஒரு இலக்கண நூல் செய்தான். அதுதான் ஐந்திரம்;

அயிந்திரம் என்பதே இந்திரன் என்ற சொல்லில் இருந்து பிறந்ததே!

 

தைத்ரீய ஸம்ஹிதைக்கு உரை எழுதிய ஸாயணாச்சாரியார் சொல்கிறார்:-

முன் காலத்தில் சொல் என்பது விளக்கப்படாமல் இருந்தது. தேவர்கள் வந்து அதை விளக்கும் படி கேட்டனர்; அப்போதுதான் இந்திரன் சொல்லின் ‘பகுதி, விகுதி’களைப் பிரித்து தனி இலக்கணம் எழுதினான்.

அந்தக் காலத்தில் இரண்டு வகையான இலக்கண மரபுகள் இருந்தன. ஐந்திர மரபு, மாஹேஸ்வர மரபு என்று.

இந்திரன் உண்டாக்கியது ஐந்திரம்.

பாணினி உண்டாக்கியது மாஹேஸ்வர மரபு- பாணிணீயம்

மொத்தம் எட்டு வகை இலக்கணங்கள் இருந்ததாகத் தெரிகிறது: பிரம்மா, சிவன், இந்திரன், பிருஹஸ்பதி, ப்ரஜாபதி, த்வஷ்டா, அபிசலி, பாணினி—-

 

ரிக்வேத கல்பத்ருமமும் எட்டு பேர் இலக்கணம் இயற்றியதாக இயம்பும்: வாயு, வருணன், ஸோமன், விஷ்ணு, இந்திரன், யமன், சந்திரன், ரௌத்தன்

 

பிற்கால நூலான, போப தேவர் இயற்றிய, ‘கவி கல்பத்ருமம்’ எட்டு இலக்கண ஆசிரியர்களின் பெயர்களை விளம்பும்; ஆபிசலி, பாணினி, காசக்ருத்சனன், சாகடாயனன்,இந்திரன், சந்திரன், ஜைனேந்திரன்.

 

ஸ்ரீ தத்வநிதி என்ற வைணவ நூல் ஒன்பது பெயர்களைத் தெரிவிக்கிறது—

 

ஐந்திரம், சாந்த்ரம், காச கிருஷ்த்ணம், கௌமாரம், சாகடாயனம், ஸாரஸ்த்வம், சாகல்யம், ஆபீசலம், பாணீணீயம்

 

ஐந்திரம் முதலியவை லௌகீக சாஸ்திர இலக்கணங்கள்; ப்ரதிசாக்யம் முதலியன வைதீக நூல் இலக்கணங்கள்.

 

பாணீணீயம், ஆபிசலம் ஆகியன லௌகீக, வைதீக நூல்கள் இரண்டுக்கும் பொருந்துவன.

 

பாணினி 2700 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தார் (கி.மு ஏழாம் நூற்றாண்டு). அவருக்கு முன்னர் 35 ஸம்ஸ்க்ருத இலக்கண வித்தகர்கள் இருந்தனர்!! ஐந்திர வ்யாகரண நூலை நிறைய ஸம்ஸ்க்ருத, தமிழ், ப்ராக்ருத நூல்கள் குறிப்பிடுகின்றன.

 

 

25 மடங்கு பெரிது!

 

12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மஹாபாரத உரை ஆசிரியர் தேவ போதர் செப்புகிறார் :— பாணினி இலக்கண நூலைப் போல 25 படங்கு பெரியது ஐந்திர வ்யாகரண நூல்!

 

ஐந்திர இலக்கண நுல் வெகு காலத்துக்கு முன்னரே அழிந்துவிட்டது என்று கதைக் கடல் (கதா சரித் சாகரம்) சொல்லும்.

 

ஆனால் பிற்கால நூல்கள் ஐந்திர இலக்கண நூலின் சூத்ரங்களை மேற்கோள் காட்டுவதால் இப்படி ஒரு நூல் இருந்தது என்பதில் எள் அளவும் சந்தேகம் இல்லை!

 

கி.மு முதல் நூற்றாண்டைச் சேர்ந்த  பட்டாரக ஹரிச்சந்திரர், ‘ஸரக ந்யாச’ என்ற உரை நூலில் ஒரு சூத்திரத்தை மேற்கோள் காட்டுகிறார்.

 

‘’அத வர்ண ஸமூஹ’’ என்பது ஐந்திரத்தின் முதல் சூத்திரம்; இதன் பொருள்:- ‘பிறகு எழுத்துக்களின் தொகுப்பு’—

 

தொல்காப்பியமும் முதலில் எழுத்துகளைப் பற்றியே நுவலும்:

எழுத்தெனப்படுப

அகர முதல் னகரம் இறுவாய்

முப்பஃது என்ப

சார்ந்துவரல் மரபின் மூன்று அலங்கடையே.

 

‘அர்த்த: பதம்’ என்னும் இன்னொரு சூத்திரத்தை துர்காச்சாரியாரின் நிருக்த விருத்தியில் காண்கிறோம்; இதன் பொருள்:-  ‘பொருள் உள்ள எழுத்துக்களின் கூட்டுதான்’ சொல் எனப்படும்.

 

பிற்காலத்தில் சுஷேண வித்யாபூஷணர் எழுதிய ஒரு நூலிலும், பரதர் எழுதிய நாட்டிய சாஸ்திரத்திலும் ஐந்திரம் குறிப்பிடப்படுவதால் அவர்கள் காலத்தில் இது இருந்திருக்கவேண்டும். ஆயினும் பாணினியின் இலக்கணம் பிரபலமானவுடன் ஐந்திரம் வழக்கொழிந்து போயிருக்கலாம்.

 

ஐந்திரம் பற்றிப் பல தவறான கருத்துகளும் உண்டு; சமண மதத்தின் 24ஆவது தீர்த்தங்கரரான மஹாவீரர், அல்லது பௌத்த சமயத்தைச் சேர்ந்த இந்திர கோமீதான் இதை இயற்றியவர் என்றும் இயம்புவர்.  இது தவறு.

 

தேவநந்தி என்ற பூஜ்யபாதர் எழுதிய ஜைனேந்திர வியாகரணம்தான் ஐந்திரம் என்ற தவறான பிரச்சாரமும் உள்ளது.

 

–Subham–