
WRITTEN BY S NAGARAJAN
Post No. 8516
Date uploaded in London – – –16 August 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
அன்னா கரீனா – 2
ச.நாகராஜன்
1
அன்னா கரீனா நாவலின் முதல் பக்கத்தில்,
அன்னா கரீனா
I
ஆசிரியர் :
லியோ டால்ஸ்டாய்
மொழிபெயர்ப்பு:
தினமணி உதவி ஆசிரியர்
வெ.சந்தானம்
தமிழ்ச் சுடர் நிலையம்
திருவல்லிக்கேணி : : சென்னை
உரிமை பதிவு
என்ற பதிவுகளைக் காணலாம்.
அடுத்த பக்கத்தில் உள்ள விவரங்கள் இவை:
முதல் பதிப்பு : மார்ச்சு 22, ‘47
மலிவுப் பதிப்பு விலை ரூ 7 8 0
ஆண்டிக் — }
இரண்டு வால்யூம்} ரூ 10 0 0
Printed at Thompson co ltd., (Minerva Press)
Q.H.Ma 15 – (22-31947)
2
தமிழ்ச் சுடர் நிலையம் உரிமையாளரான திரு அ.கி.கோபாலன் சிறந்த தமிழ் அன்பர். நல்ல நூல்களைத் தேடித் தேடி தமிழில் வெளியிட்டிருக்கிறார்.
அவர் அன்னா கரீனா நூலுக்கு அளித்துள்ள பதிப்புரை முதலில் இடம் பெறுகிறது.
அவரது பதிப்புரையை இங்கு காண்போம்:
பதிப்புரை
உலகப் புகழ்பெற்ற ‘அன்னா கரீனா’வின் தமிழ் மொழிபெயர்ப்பைத் தமிழர்கள் முன் சமர்ப்பிக்கிறோம். மகான் டால்ஸ்டாயின் உன்னத திருவடிகளில் இந்தக் கதையும் ஒரு ரத்தினம் போன்றதாகும். மனிதனின் தினசரி வாழ்க்கையையும் பொது வாழ்க்கையையும் கலைப்பண்புடன் சித்தரிப்பதில் டால்ஸ்டாய்க்கு நிகரான கலைஞர் அவரே தாம். அந்த ஈடு இணையற்ற பெரியாரின் இந்தக் கதையைத் தமிழாக்கிவிட வேண்டும் என்ற ஆர்வமே இப்புத்தகம் இன்று வெளியாகியிருப்பதற்குக் காரணம்.
நிற்க, கதையைப் பற்றியோ, அதை எழுதியவரைப் பற்றியோ அல்லது மொழிபெயர்த்தவரைப் பற்றியோ நாங்கள் அதிகமாக எதுவும் இங்கு குறிப்பிட விரும்பவில்லை. கதையைப் பற்றியும், இலக்கிய சரித்திரத்திலேயே பல விந்தைகள் புரிந்து அதன் ஆசிரியரைப் பற்றியும் மனத்தில் பதியுமாறு ஆராய்ச்சி முகவுரை எழுதிக் கொடுத்துதவிய அறிஞர் ஸ்ரீ ரா.ஸ்ரீ. தேசிகன் அவர்களுக்கு நாங்கள் வாசகர்கள் சார்பாக முதலில் நன்றி கூறக் கடமைப் பட்டிருக்கிறோம்.
அடக்கம், பண்பு, அமைதி ஆகிய இம் மூன்றும் ஒருங்கே குடி கொண்டுள்ள நண்பர் ஸ்ரீ வெ. சந்தானம் அவர்களின் மொழிபெயர்ப்பைப்பற்றி ஒரு விஷயத்தை மட்டும் கூற வேண்டியது அவசியமாகிறது.
‘அன்னா கரீனா’வை மிக அழகிய, எளிய பாஷையில் தம்முடையை இடைச் செருகல் எதுவுமின்றி, மூலம் எப்படியோ அப்படியே, ஓரிரண்டு பகுதிகளை மட்டும் சுருக்கி இந்தக் கலைப் பொக்கிஷத்தைத் தமிழில் சமைத்த பெருமை அவருடையதாகும்.
‘அன்னா கரீனா’வைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட வேண்டுமென்று நாங்கள் தீர்மானித்துச் சில கையெழுத்துப் பிரதிகளை வாங்கிப் பார்த்தபோது அவை யாவும் சுருக்கமானதாகவும், தழுவலாகவும், நடுநடுவே சிற்சில முக்கிய பாகங்கள் மொழி பெயர்க்காமல் விடப்பட்டனவாகவும் கிடைத்தன. அதன் பின்னரே ஸ்ரீ சந்தானம் அவர்களைச் சந்தித்து அவரைக் கலந்து பேசியபோது, அவரும் இது தமிழில் வெளிவர வேண்டும் என்ற எங்கள் ஆர்வத்தை வெகுவாக ஆதரித்து, இதை அப்பட்டமாக மொழிபெயர்த்துக் கொடுக்க இசைந்தார். அதன்படியே இலக்கிய மணங் கமழ மொழிபெயர்த்தும் கொடுத்துள்ளார். அன்னாருக்கு எங்கள் இதய பூர்வமான நன்றி.
கடைசியாக ரஸிகர்களுக்கும் எங்கள் நன்றி உரியதாகும். காந்திஜிக்குக் குரு போன்ற டால்ஸ்டாயின் மற்றொரு சிருஷ்டி, ‘புத்துயிர்’ (Resurrection) தமிழில் வெளிவர இருக்கிறது. அது எப்பொழுது வரும் என்று ‘அன்னா கரீனா’வைப் படித்துவிட்டு எழுதப்போகும் எல்லா அன்பர்களுக்கும், “தமிழர்களாகிய தங்களின் ஆசியைப் பொறுத்தது அவ்விஷயம்!” என்பதை முன் கூட்டியே தெரிவித்துக் கொண்டு விடுகிறோம்.
திருவல்லிக்கேணி அ.கி.கோபாலன்
22-3-’47 தமிழ்ச் சுடர் நிலையம்
*
எனது தந்தையாரைப் பற்றி, “அடக்கம், பண்பு, அமைதி ஆகிய இம் மூன்றும் ஒருங்கே குடி கொண்டுள்ள நண்பர் ஸ்ரீ வெ. சந்தானம்” என்று திரு அ.கி. கோபாலன் குறிப்பிட்டுள்ளார். அவருக்கும் இந்த நேரத்தில் எங்கள் சிரந் தாழ்ந்த அஞ்சலியைச் செலுத்துகிறோம்.
TAGS- அன்னா கரீனா – 2
***