நற்றிணை அதிசயங்கள்!

acrobat-

கட்டுரை மன்னன் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1361; தேதி அக்டோபர் 21, 2014.

புறநானூற்றில் உள்ள அதிசயங்களை “புறநானூற்று அதிசயங்கள்” என்ற தலைப்பில் சில நாட்களுக்கு முன் எழுதினேன். இன்று நற்றிணை என்னும் நூலில் உள் அதிசயங்களைக் காண்போம். சங்க இலக்கியத்தில் 18 நூல்கள் (பத்துப்பாட்டு 10+ எட்டுத்தொகை 8 = 18) உள்ளன. இவற்றில் 2400 பாடல்களுக்கு மேல் இருக்கின்றன. சங்க இலக்கியத்தில் காணும் 18 நூல்களையும் மேல்கணக்கு நூல்கள் என்பர். அதற்குப் பின் எழுந்த திருக்குறள் முதலிய 18 நூல்களைக் கீழ்க்கணக்கு நூல்கள் என்பர். தமிழர்கள் எவ்வளவு புத்திசாலி பாருங்கள். 18 என்ற எண்ணின் சிறப்பை அறிந்து முக்கியமான 36 நூல்களை நமக்கு அழகாக வரிசைப்படுத்திக் கொடுத்து விட்டனர்.

எட்டுத்தொகை என்னும் தொகுப்பில் உள்ள எட்டு நூல்களில் ஒன்று நற்றிணை. இது அகம் என்னும் காதல், குடும்ப வாழ்வு பற்றிய 400 பாடல்களைக் கொண்டது. தமிழனுக்கு 400 என்ற எண்ணின் மீது ஒரு தனி காதல் உண்டு. புற நானூறு, அக நானூறு, நற்றிணை நானூறு, நாலடியார் நானூறு, பழமொழி நானூறு என்று அடுக்கித் தள்ளிவிட்டனர்!

அதிசயம் 1
பாடல் 132 அந்தக் காலத்தில் யாமக் காவலர் என்னும் போலீஸ் படை (Policing) தமிழ் நாட்டில் இருந்து பற்றிக் கூறும்:
காப்புடை வாயில் போற்று ஓ என்னும்
யாமம் கொள்பவர் நெடு நா ஒண்மணி
ஒன்று எறி பாணியின் இரட்டும்

எல்லோரும் அவரவர் வீட்டு வாசல் கொல்லைப்புறம் எல்லாவற்றையும் பாதுகாத்துக் கொள்ளுங்கள் என்று சத்தம் எழுப்பிக் கொண்டே பெரிய மணியை மாறி மாறி அடித்துச் செல்வார்களாம் சங்க கால போலீஸ் படை.!!

அதிசயம் 2
கடவுள் வாழ்த்து பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார். இந்தக் காலத்தில் அவரை மிஸ்டர் மஹாதேவன் என்று அழைக்கலாம். மஹாதேவன் என்று சிவன் பெயரை வைத்துக் கொண்டு இவர் பாடியது மஹாபாரதம்! சரி போகட்டும்! என்று விட்டுவிட முடியவில்லை. இவர் நற்றிணையில் பாடிய கடவுள் வாழ்த்து விஷ்ணு சஹஸ்ர நாமம் என்னும் மஹாபாரதப் பகுதியாகும்! அதில் விஷ்ணுவின் புகழைப் பாடுகையில்

மாநிலம் சேவடி ஆக, தூநீர்
வளைநரல் பௌவம் உடுக்கை ஆக
விசும்பு மெய் ஆக, திசை கை ஆக
பசுங்கதிர் மதியமொடு சுடர் கண் ஆக
இயன்ற எல்லாம் பயின்று; அகத்து அடக்கிய
வேத முதல்வன் என்ப
தீது அற விளங்கிய திகிரியோனே (கடவுள் வாழ்த்து)

இது விஷ்ணு சஹஸ்ரநாமத்தில்,

க்ஷீரோதந்வத் ப்ரதேசே சுசிமணி விலஸத்ஸைகதே
என்று துவங்கும் தியான ஸ்லோகத்தில்
“பூ: பாதௌ யஸ்ய நாபிர் வியதஸுர நில: சந்த்ர ஸூர்யௌ ச நேத்ரே
கர்ணா வாசாச் சிரோத் த்யௌர் முகமபி தஹனோ யஸ்ய வாஸ்தேயமப்தி:” — என்பதன் மொழி பெயர்ப்பாகும்.

vilakku etral

அதிசயம் 3
பரணர் பாடிய பாடல் 201 ல் பூகம்பம், நில அதிர்ச்சி (Earth quake) பற்றிக் குறிப்பிடுகிறார். தமிழ்நாடு, நில அதிர்ச்சி பாதையில் இல்லாவிட்டாலும் வட இந்தியாவில் நடந்த பூகம்பங்கள் பற்றி சங்க காலப் புலவர்களுக்குத் தெரிந்திருக்கிறது. பெரு நிலம் கிளறினும் என்ற சொல் இதைக் குறிக்கும். வேறு பல புலவர்கள் நிலம்புடை பெயரினும் என்றும் பாடுவர். இதே பாடலில் கொல்லி மலைப் பாவை பற்றிய அதிசயச் செய்தியையும் சொல்கிறார். கொல்லி மலையின் மீதுள்ள பாவை, என்ன இயற்கைச் சீற்றம் வந்தாலும் அதன் அழகை இழக்க மாட்டாளாம். இப்போது அந்தக் கொல்லிப்பாவை எங்கே என்று தெரியவில்லை. ஒரு வேளை ஏதோ ஒரு கோவிலில் இருக்கலாம்.

அதிசயம் 4
பாலை பாடிய பெருங்கடுங்கோ பாடிய 202 ஆம் பாடலில் கார்த்திகை நாளன்று அழகாக விளக்கு ஏற்றி வைத்திருப்பதை உவமையாகப் பாடுகிறார். தமிழ் இந்துக்கள் 2000 ஆண்டுகளாக இன்னும் கார்த்திகை விளக்கு ஏற்றி வழிபடுகின்றனர். எத்தனை நாத்திகப் பிரசாரம் நடந்தாலும் தமிழர்கள் அற வழியினின்று பிறழமாட்டார்கள் என்பதற்கு இதுவும் ஒரு சான்று.

அதிசயம் 5
பாடல் 95-ல் கொட்டம்பலவானர் என்னும் புலவர் அந்தக் காலத்தில் கழைக்கூத்தாடிகள் (acrobats) கயிற்றில் தொங்கி சாகசச் செய்ககளைப் புரிந்ததைப் பாடுகிறார். வாத்தியங்கள் முழங்குகையில் ஒரு பெண் கயிற்றில் ஏறி சாகசம் செய்ததைப் பார்த்து குரங்குக் குட்டியும் கயிற்றில் ஏறி சர்கஸ் செய்ததாம். இதிச் சிறுவர்கள் பார்த்து ஆரவாரம் செய்கின்றனர். 2000 ஆண்டுகளுக்குப் பின் இன்றும் இக்காட்சிகளை நாம் பார்த்து மகிழ்கிறோம். காசு இல்லாமல் பார்க்கும் ஏழைகள் சர்கஸ் காட்சி இது.

acrobat-chennai

அதிசயம் 6
பாடல் 97-ல் பூ வியாபாரம் பற்றி மாறன் வழுதி பாடுகிறார். பூ வாங்கலியோ பூவு!! பூ வாங்கலியோ பூவு!! என்று பெண்கள் கூவி வித்ததை அழகாய்ப் பாடுகிறார். 2000 ஆண்டுகளுக்குப் பின் இன்றும் இக்காட்சிகளை நாம் தமிழக வீதிகளில் பார்க்கிறோம்:
மதனின் துய்த்தலை இதழ் பைங் குருக்கத்தியொடு
பித்திகை விரவு மலர் கொள்ளீரோ? என ………………………………
பாடல் 118-ல் பாதிரிப் பூக்களை வட்டிலில் போட்டுக் கூவி விற்கும் ஒரு பெண் பற்றி பாலை பாடிய பெருங்கடுங்கோ பாடுகிறார்.

அதிசயம் 7
தமிழர்கள் ஜோதிடத்தில் அசைக்கமுடியாத நம்பிக்கை உடையவர்கள்!! பன்றி கூட பல்லி சொல் கேட்டு சகுனம் பார்த்ததை உக்கிரப் பெருவழுதி பாடுகிறார் (பாடல் 98)

அதிசயம் 8
பாடல் 90-ல் அஞ்சில் அஞ்சியார் என்னும் புலவர் அந்தக் காலத்தில் உடைகளுக்கு கஞ்சி (starch) போடும் வழக்கம் இருந்ததைக் குறிப்பிடுவார். அதுமட்டுமல்ல பெண்கள் ஊஞ்சல் ஆடுவது பற்றியும் பாடுவார். இதே போல பாடல் 222-ல் கபிலரும் ஊஞ்சலைக் குறிப்பிடுகிறார். காதல் வயப்பட்ட பெண்ணை தோழி கிண்டல் செய்கிறாள்: நீ ஊஞ்சலில் ஏறிக்கொள், நான் வேகமாக ஆட்டுகிறேன். ஊஞ்சல் உயரமாகச் செல்லும் போது மலை மீதுள்ள உன் காதலனது ஊரையும் பார்க்கலாம். அதைப் பர்த்தாலேயே உனக்கு ஆனந்தம் ஏற்பட்டுவிடுமே!!
pukkari

அதிசயம் 9
தமிழர்கள் வடமொழியில் பரத முனி இயற்றிய பரத சாஸ்திரத்தை அப்படியே பின்பற்றுபவர்கள். பரதன் கூறும் முத்திரைகள், அபிநயங்கள் (gestures) எல்லாம் சிதம்பரம் முதலிய கோவில்களில் இருப்பதை நாம் அறிவோம். பாடல் 149-ல் உலோச்சனார் ஒரு அபிநயம் பற்றிப் பாடுகிறார். பெண்கள் வியப்பையும், வம்பளப்பதையும் காட்ட மூக்கில் விரலை வைத்துக் கடைக்கண்களால் பார்ப்பர். இதை உலோச்சனார்

சிலரும் பலரும் கடைக்கண் நோக்கி
மூக்கின் உச்சிச் சுட்டுவிரல் சேர்த்தி
மறுகில் பெண்டிர் அம்பல் தூற்ற ——
என்பர் உலோச்சனார். அழகான காட்சி!

அதிசயம் 10
பாடல் 160-ஐப் பாடியவர் பெயர் இல்லை. அவர் ஆண்மகன் என்பவனுக்குரிய ஆறு பண்புகளை எடுத்துச் சொல்கிறார்:

நயனும் நண்பும், நாணு நன்கு உடைமையும்
பயனும் பண்பும் பாடு அறிந்து ஒழுகலும்

நீதி, நட்பு, இழிசெயல் கண்டு வெட்கப்படுதல், பிறருக்கு உதவுதல், நல்ல குணங்கள், பிறருக்கு இணக்கமாக நடத்தல் (அவர்கள் விரும்பும் வகையில் நடத்தல்) ஆகியன ஆண்களுக்கு வேண்டிய குணங்கள் என்பார்.

dance line drawing

அதிசயம் 11
பாடல் 172 காளிதாசனின் சகுந்தலையை நினைவுபடுத்தும். இதைப் பாடியவர் பரணர். சாகுந்தலத்தில், கவிஞன் காளிதாசன் — பிராணிக ளிடத்தும், செடி கொடிகளிடத்தும் சகுந்தலைக்கு உள்ள பேரன்பை மிக அழகாக கூறுவார். அதுபோல இங்கு ஒரு காட்சி. புன்னை மர விதையை விளையாட்டாகப் புதைத்துவைத்து மறந்து போய் கொஞ்ச காலம் ஆயிற்று. அது திடீரென வளர்ந்து தலைக் காட்டியவுடம் அதற்கு பாலும் தேனும் வார்த்து வளர்க்கிறாள் ஒரு பெண் — அவளுடைய தாயாரும் இது உன் தங்கை என்று சொல்லிப் பாராட்டுகிறாள். அந்த மரத்துக்குக் கீழ் நின்று காதல் பேச்சுகளைப் பேச அவளுக்கு வெட்கமாக இருக்கிறதாம். தங்கையை (புன்னை மரம்) வைத்துக்கொண்டு யாராவது காதலனுடன் அடல்ட்ஸ் ஒன்லி வசனங்களைப் பேச முடியுமா?

அதிசயம் 12
பாடல் 293-ல் கயமனார் என்னும் புலவர், — பெண்ணைப் பெற்ற ஒரு தாய் சாபம் (curse) இடுவதை நமக்குப் படம் பிடித்துக் காட்டுகிறார். “என் பெண்ணை சொல்லாமல் இழுத்துச் சென்ற ஆண்மகனுடைய தாயும் என்னைப் போல நடுங்கி கஷ்டப்படட்டும்” என்று சபிக்கிறாள். இதே பாட்டில் காகத்துக்கு குயவன் இடும் பலி பற்றிய குறிப்பும் வருகிறது. இப்படிக்குக் காக்கைக்குச் சோறிடும் வழக்கம் மேலும் இரண்டு பாடல்களில் உள்ளது.

400 பாடல்களில் இருந்தும் 400 சுவையான விஷயங்களை எழுதினால் இடமும் நேரமும் இரா. ஆகையால் நீங்களும் நற்றிணை பயிலவேண்டும் என்று சில பாடல்களைக் காட்டினேன். வேறு என்ன இருக்கின்றன என்பதைக் கோடி காட்டுகிறேன். நீங்களே சுவைத்து மகிழுங்கள்:

பாடல் 3: கணவன் பத்திரமாக வீடு திரும்ப வேண்டும் என்று மாலை வேலையில் மனவி விளக்கு ஏற்றுதல்
பாடல் 32: கண்ணன்/விஷ்ணு நிறத்தில் மலை உள்ளது. அதில் விழும் அருவி அவன் அண்ணன் பலராமன் போல இருக்கிறது.

பாடல் 35: நாவல் பழத்தை தம் இனத்தைச் சேர்ந்த வண்டு என்று கருதி ஒரு வண்டு வந்தது. அதையும் பழத்தையும் நாவல் பழம் என்று கருதி நண்டு கொண்டு சென்றது. உடனே வண்டு சத்தம் போட, நாரை வந்து சமாதானம் செய்தது (தமிழ் நகைச்சுவைப் பாடல்)

பாடல் 45: மஹாபாரத சந்தனு—மத்சகந்தி வாக்குவாதம் போன்றது.

பாடல் 57: குரங்குகள் பற்றிய அதிசயச் செய்திக் கட்டுரையில் குரங்கு, — பால் கறந்தது பற்றி எழுதிவிட்டேன்.

பாடல் 59: பிராமணர்கள் சைவ (vegetarian food) உணவு மட்டுமே சாப்பிட்டதாக சங்க இலக்கியம் காட்டும். ஆயினும் அசைவ உணவு பற்றி அவர்கள் எழுதத் தயங்கியது இல்லை. பாடல் 59-ல் ப்ராமண கபிலர் உடும்புக் கறி, முயல் கறி எல்லாம் பற்றிப் பாடுவார். இதே போல காளிதசனும் பாடுகிறான்.
இன்னும் நூற்றுகணக்கில் சுவைமிகு காட்சிகளைக் கண்டு மகிழ்க.

நற்றிணை தமிழர்களுக்கு “நற்றுணை” (Good Companion) எனில் மிகை அல்ல!!!

contact swami_48@yahoo.com