சோம ரசம் பற்றி அபூர்வ தகவல்கள் (Post No.10,100)-1

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,100

Date uploaded in London – 16 September   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

சோம ரசம் பற்றி அபூர்வ தகவல்கள் (Post No.10,100)- part 1

ரிக் வேத கால இந்துக்கள் அபூர்வ மூலிகையான சோம லதையை (லதா= கொடி) ப்  பிழிந்து ஒவ்வொரு நாளும் மூன்று முறை இறைவனுக்குப் படைத்தனர். இது ஒரு விதமான ஆனந்தம், சக்தி, உற்சாகம் அளிக்கும் மூலிகை.

வெள்ளைக்காரர்கள் நமது மதத்துக்கு எதிரியானதாலும், நமது மதத்தை நம்பாததாலும், நமது மதத்தைப் பின்பற்றாததாலும் அவர்களுக்கு இது என்னவென்றே தெரியவில்லை. ஆகையால் இதை மயக்கம் ஊட்டும் போதை மருந்து என்று எழுதிவிட்டனர். இதை R TH GRIFFITH கிரிப்பித் வெளியிட்ட ரிக் வேத ஆங்கில மொழிபெயர்ப்பின் முதல் பக்கத்திலேயே காணலாம்.

2000 ஆண்டுகளுக்கு முன்னர் சங்கத் தமிழ்  பாடிய 450 புலவர்களுக்கே சோம மூலிகையைப் பற்றித் தெரியாது. யூபம் , வேதம், கங்கை, அமிர்தம், இமயம் என்னும் ஸம்ஸ்க்ருதச் சொற்களை அப்படியே பயன்படுத்தும் புறநானூற்றில் கூட சோமம் என்ற மூலிகை பற்றிய குறிப்பு கிடையாது. 2000 ஆண்டுகளுக்கு முன்னரே காணாமற்போன இந்த அற்புத மூலிகை பற்றி வெள்ளைக்காரன் உளறிக்கொட்டி கிளறி மூடியதில் வியப்பொன்றுமில்லை . ஆனால் பிற் கால பாண்டியர் கல்வெட்டுகளில் இதைப் பயன்படுத்தியவர்களை மனோ சுத்த சோமயாஜி — மன தைச் சுத்தப்படுத்தும் சோமயாகம் செய்தவர் என்று புகழ்கிறது  காஞ்சி பரமாசார்ய சுவாமிகளும் சோம யாகம் செய்தவர்களுக்கு அரசுக்கு நிகரான வெண்  குடை கொடுக்கப்படும் செய்தியை மொழிகிறார்.

ரிக் வேதத்தில் பல நூற்றுக் கணக்கான இடங்களில் சோம மூலிகை பற்றிய மந்திரங்கள் உள்ளன. பத்து மண்டலங்களாகப் பிரிக்கப்பட்ட ரிக் வேதத்தில்- 6000 ஆண்டுப் பழமையான ரிக் வேதத்தில் – ஒன்பதாவது மண்டலம் முழுதும் ‘பவமான சோம’ என்ற கடவுளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது . சோம என்பதற்கு பல பொருள் உண்டு. சந்திரன் என்ற பொருளும், மலைகளில் விளையும் சோமம் என்ற மூலிகைக்கும் அதிகமாகப் பயன்படும் சொல். ரிக் வேதத்தில் 9-97  துதியில் உள்ள 58 மந்திரங்களின் மூலம் சோமத்தின் ரஹஸ்யத்தைக் காண்போம் .

அதற்கு முன்பாக வெள்ளைக்காரன் கட்டுக்கதைதையைத் தவிடு பொடியாக்கும் சில விஷயங்களை சொல்கி றேன் .

ஸோமரசத்தை எல்லாக் கடவுளரின் பெயரிலும் ஒரு நாளைக்கு மூன்று முறை தீயில் ஆஹுதி செய்தார்கள்.

காலையில் சூரிய உதயத்துக்கு முன்னால் இப்படிச் செய்தார்கள்.

அந்த மூலிகையைக் கடவுள் என்று சொல்லி ஆடிப்பபாடி  மந்திரங்களை முழக்கி கற்கள் இடையே வைத்து பிழிந்து ஆட்டு ரோமத்தால் ஆன சல்லடை வழியே வடிகட்டி மரத்தால் ஆன வட்டில்கள், பாண்டங்களில் சேகரித்தார்கள்.

சிந்து சமவெளியில் இதுவரை என்ன என்றே தெரியாத ஒரு சாதனம் காளை மாட்டு முத்திரைகளுக்கு அடியே உள்ளது. இது சோமரச சாதனம்  என்பது பெரும்பாலோரின் கருத்து.

இப்போது நமக்கு நாமே சில தடைகளை எழுப்பி விடை காண்போம்.

இருபதுக்கும் மேலான இடங்களில் சோம மூலிகையை பருந்தும் கழுகும்  கொண்டுவருவதாக ரிக் வேதம் முழுதும் புலவர்கள் பாடுகின்றனர். இதற்கு சரியான விளக்கம் கிடைக்கவில்லை. சந்திரனையும் கருடனையும் அமிர்தம் தொடர்புபடுத்தி புராணக் கதைகள் பேசுகின்றன. அவற்றுடன் தொடர்புடையன போலும் !

போதை ஊட்டும் பொருளானால்  அதை ராத்திரியில் குடித்துவிட்டு கும்மாளம் போடும் வெள்ளைக்காரர்களை நாம் இன்றும் பார்க்கிறோம். எவனாவது அதி காலையில் நதியில்  குளித்துவிட்டு அதைச் சாப்பிடுவானா? அதுவும் மந்திரம் சொல்லி பெரும்பகுதியை கடவுளுக்கு என்று சொல்லி தீயில் ஊற்றி வீணடிப்பானா? சிந்தித்துப் பாருங்கள்.

.’இதுதான் சோமம்’, ‘அதுதான் சோமம்’, என்று 150 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதிய வெள்ளைக்காரப் பயல்கள் அதை ஏன் இன்று பயிரிடக்கூடாது? கொக்கோ கோலா போல ஒரு மணிக்கு கோடி டாலர் சம்பாதிக்கும் தொழிலிலை ஏன் செய்யவில்லை? இன்று போதை மருந்து விற்பனை நிமிடத்துக்கு பலகோடி டாலர் என்று நாம் பத்திரிகையில் படிக்கிறோமே . ஏன் சோமத்தைப் பயிரிடவில்லை?இது எல்லாவற்றுக்கும் ஒரே பதில்:-

சோமம் ஒரு அபூர்வ குளிகை ; ஒரு அதிசய மூலிகை. அது 2000 ஆண்டுகளுக்கு முன்னரே அழிந்துவிட்டது. அது என்ன என்று யாருக்கும் தெரியாது. ஆனால் அதன் வருணனை ரிக் வேதத்தில் முதல் பக்கம் முதல் கடைசி பக்கம் வரை உள்ளது . அது உடலுக்கு சக்தி, உற்சாகம், நீண்ட ஆயுள் தரும்; அதை சாப்பிடுவோருக்கு வீரம் மிக்க புதல்வர்கள்  பிறப்பார்கள்; அவர்களுக்கு ஏராளமான செல்வம் கிட்டும்; மனம் சுத்தம் அடையும்  என்பதை பின்வ ரும் 58 மந்திரங்கள்  காட்டுகின்றன . அப்படியே 58 மந்திரங்களையும் கொடுக்காமல் BULLET POINTS புல்லட்  பாயிண்டுகளில் தருகிறேன்.

ரிக் வேதம் – 9-97- 1 முதல் 58 வரை

பல ரிஷிகள் பாடிய கவிதை RV.9-97; மொத்தம் 58 மந்திரங்கள் / செய்யுட்கள்

சோமன், பிழியப்பட்டவுடன் முழக்கத்துடன் செல்கிறான். ரஸத்தை தேவர்களிடம் சேர்க்கிறான்

நீ மஹான், நீ கவிஞன்; நீ மங்கள போர்க் கவசங்களை அணிந்தவன்;

நீ துதிகளைப் போற்றுபவன்; நீ எல்லாம் அறிந்தவன்.

கடவுள் விருந்தில் விழித்திருப்பவன் .

புகழ் உள்ளவர் இடையே மிக்க புகழ் படைத்தவன்

புவியில் பிறந்தவன்; அன்புக்குரியவன்

சோமனைப் பாடுவோம் ; மகத்தான செல்வம் பெற சோமனைப் பாடுவோம்

வழிபடுவோருக்கு மகத்தான செல்வம் கிடைக்க அவன் இந்திரனிடம் செல்கிறான்.

பசுமை நிறத்துடனும் சுத்தமானவனாகவும் பெருகுக

இன்பம் ஊட்டும் உன் ரசம், இந்திரனை போருக்குத் தயார் செய்யட்டும்

(ரிக் வேதம் முழுதும் போர், பகைவன், பசு, குதிரை, செல்வம், தங்கம், வீரப் பு தல்வர்கள் , வீடு ; குகைகளில் மறைத்து வைக்கப்பட்ட பசுக்களை மீட்டல், தர்ப்பைப் புல்லை பரத்துதல், சோம ரசம்  ஆகியன ஆயிரக்கணக்கான இடங்களில் வருகிறது ; இவைகளில் சொல்லப்படும்  இந்தச் சொற்களுக்கு மறைமுக அர்த்தம் வேறு !!)

சோமன் காட்டுப் பன்றி போல உறுமுகிறான்

பகைவரை மிரட்டும் வாத்தியங்களை நண்பர்கள் வாசிக்கிறார்கள்

சோமன் தனி வழியில் செல்கிறான். அவனை முந்துவதற்கு எவருமிலர்.

கூரிய கொம்புள்ளவன் ; ஒளி வீசுவோன்.

பகலில் தங்க நிற ஒளி வீசுவான்; இரவில் வெள்ளி நிற ஒளி உமிழ்வான்

ஆற்றலின் அரசன்; அரக்கர்களை வீழ்த்துகிறான்.

இந்திரனுக்கு இன்பம் தந்து குஷிப் படுத்துகிறான்

இனிப்பானவன்; சுத்தப் படுத்துபவன்.

பருவத்துக்குப் பொருத்தம் உடைய காந்தி/ஒளி உடையவன்

அவனை பத்து சகோதரிகள் (விரல்கள்) களைந்து அனுப்புகிறார்கள்

பசுக்களைத் தொடர்ந்து செல்லும் காளை போல சோமன் விண்ணிலும் மண்ணிலும் ஓடுகிறான்.

அவனுடைய சப்தம் இந்திரன் சப்தம் போல (இடி முழக்கம்) முழங்குகிறது

சுவைக்க இனியன் ; பாலைச் சொரிபவன் ;

ஒளி நிற ஆடை அணிந்த  சோமனே , மேகங்களை உன் ஆயுதங்களால் வசப்படுத்து.

நாங்கள் நல்ல வழிகளையும் செல்வத்தையும் பெற உதவி  செய்

அரக்கர்களை தண்டாயுதத்தால் அடி .

(இதுவரை 16 மந்திரங்களின் சுருக்கம் கண்டோம்; மேலும் தொடர்வோம்)

TO BE CONTINUED…………………………

XXX subham xxxx

tags – சோம ரசம் , அபூர்வ தகவல்கள்,  RV 9-97, மூலிகை.,பருந்து, கழுகு 

ஏலாதி தரும் அபூர்வ செய்திகள்!

tamil veeran

ஏற்றம் தரும் ஏலாதி!-Part 2

லேடீஸ் ஸ்பெஷல் 2010ஆம் ஆண்டு தீபாவளி மலரில் வெளியான கட்டுரை (Written by Santanam Nagarajan; Part 2 about Tamil Ethical book Elathi)

By S.Nagarajan ; Post No.1101 dated 12th June 2014.

காலன் வராமல் காக்கும் வழி!
பூமியில் ஒரு ஜனனம் ஏற்பட்டவுடன் அந்தப் பிறப்புடன் உடனே ஒட்டிக் கொள்ளும் ஒரு வார்த்தை மரணம் தான்! பாரபட்சமில்லாது வரும் காலனது வருகையை ஆசிரியர் அழகுற விளக்குவதைப் பார்க்கும் போது நயமான கருத்து நம் உள்ளத்தில் ஆழப் பதிகிறது.

அழப்போகான், அஞ்சான், அலறினால் கேளான்,
எழப்போகான் ஈடு அற்றார் என்றும் – தொழப் போகான்,
என்னே இக் காலன்!ஈடு ஓரான், தவம் முயலான்,
கொன்னே யிருத்தல் குறை (பாடல் 37)

அழுதாலும் விடமாட்டான், அலறினாலும் விட மாட்டான், நீயே என் குல தெய்வம் என தொழுதாலும் விட மாட்டான்,அட எப்படிப்பட்டவனடா இந்தக் காலன்! என்னே இக் காலன் என கணிமேதாவியார் வியக்கும் போது கூடவே நாமும் வியக்க வேண்டியதாக இருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் இவனை வெல்லத் தவம் அல்லவா வழி! அதை மேற்கொள்வோம் என பாடல் வலியுறுத்துகிறது.

இந்தப் பாடலைப் படித்து விட்டு கவியரசு கண்ணதாசனின் பாடலைப் பார்ப்போம்:
போனால் போகட்டும் போடா – இந்த
பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா!
இரவல் தந்தவன் கேட்கின்றான் அதை
இல்லை என்றால் அவன் விடுவானா
உறவைச் சொல்லி அழுவதனாலே உயிரை மீண்டும் தருவானா
கூக்குரலாலே கிடைக்காது -அது
கோர்ட்டுக்குப் போனால் ஜெயிக்காது-அந்தக்
கோட்டையில் நுழைந்தால் திரும்பாது
போனால் போகட்டும் போடா (பாலும் பழமும் திரைப்படப் பாடல்).

நயமான உண்மைக் கருத்தை கண்ணதாசனுக்கு இனம் காண்பித்தவர் ஏலாதியார் என்றால் மிகை அல்ல!

எழுத்தினால் நீங்காது, எண்ணால்ஒழியாது ஏத்தி வழுத்தினால் மாறாது என அடுத்த பாடலிலும் ஜனனம் மரணம் என்பது கல்வி அறிவினாலோ, தியானத்தினாலோ, அல்லது துதிக்கும் பாடல்களினாலோ நீங்காது என்று வலியுறுத்தி நல்ல ஒழுக்கத்துடன் தவம் புரிந்தால் ஜனன மரணச் சுழலிலிருந்து விடுபடலாம் என பேருண்மையை நூலாசிரியர் கூறுகிறார்.

ஆறு மனமே ஆறு; நூல் கூறும் கட்டளைகள் ஆறு

இனி பாடல்களில் ஆறு ஆறாகக் கூறும் பல உண்மைகள் சுவை பயப்பதோடு அரிய நீதிகளையும் உணர்த்துகிறது.

போகக்கூடாத இடங்கள் ஆறு:
கொலைக்களம் வார் குத்துச் சூதாடும் எல்லை,
அலைக்களம் போர்யானை ஆக்கும், – நிலைக்களம்,
முச்சாரிகை ஒதுங்கும் ஓரிடத்தும் இன்னவை,
நச்சாமை நோக்காமை நன்று (பாடல் 12)

கொலை செய்யும் இடம், வெள்ளச் சூழல் உள்ள நீர் நிலை,சூதாடும் கழகம், சிறைச்சாலை,யானைகளைப் பழக்குகின்ற இடம், தேர்,குதிரை, யானை ஆகிய முப்படைகள் செல்லும் இடத்திற்குப் போகாதே!

????????????????????????????????????????????????????

இன்றைய சூழ்நிலைக்கு ஏற்ப இப்பாடலைப் பார்த்தால் ஏவுகணைகள் ஏவும் இடம், துப்பாக்கிப் பயிற்சி பெறும் இடம்,தரை, விமானப் படைகள் இயங்கிக் கொண்டிருக்கும் இடங்களில் ‘இந்த எல்லையில் வரக் கூடாது’ என்ற அறிவிப்புப் பலகைகளை சாதாரணமாகக் காண்கிறோம். உயிரைப் போக்க வைக்கும் அபாயங்கள் நிறைந்த இடத்திற்கு வலியப் போகாதே என்று கூறி ஆயுளை நீட்டிக்கும் வழிகளை கணி மேதாவியார் காட்டுகிறார்!

பெரியவன் யார்?
கொல்லான்கொலை புரியான்,பொய்யான் பிறர் மனை மேல்
செல்லான் சிறியார் இனம் சேரான் – சொல்லும்
மறையில் செவி இலன்,தீச்சொற்கண் மூங்கை,
இறையில் பெரியாற்கு இவை (பாடல் 19)
கொலை செய்யாதவன், பிறர் கொலை செய்வதையும் விரும்பாதவன்,பொய் சொல்லாதவன், பிறர் மனைவியிடம் செல்லாதவன்,தீயவர்களிடம் செல்லாதவன், தீய சொற்களைப் பேசாதவன், கேளாதவன் ஆகிய குணங்களை உடையவனே பெரியோன்!

தேவாதி தேவன் யார்?
உரையான் குலன் குடிமை: ஊனம் பிறரை
உரையான்:பொருளொடு வாழ்வு ஆயு உரையானாய்-
பூ ஆதி வண்டு தேர்ந்து உண்ணு குழலாய், ஈத்து உண்பான்,
தேவாதி தேவனாய்த் தேறு (பாடல் 32)

வண்டுகள் மொய்த்து உண்ணும் கூந்தலை உடைய பெண்ணே, தன் குல உயர்வு,குடிப் பிறப்பு உயர்வு ஆகியவற்றைப் பாராட்டிப் பேசாதவன்,பிறரது இழிவினை இகழ்ந்து உரைக்காதவன்,தன் பொருளை ஏழைகளுக்குக் கொடுத்து வாழ்பவன் தேவர்களுக்கெல்லாம் தேவன்!

மறை வழி நடப்போருக்கு எவையெல்லாம் வந்து சேரும்?
சென்றபுகழ் செல்வம் மீக்கூற்றம் சேவகம்
நின்றநிலை கல்வி வள்ளன்மை – என்றும்,
அளி வந்து ஆர் பூங்கோதாய் ஆறும் மறையின்
வழி வந்தார் கண்ணே வனப்பு (பாடல் 1)

திசை எங்கும் பரவிய புகழ், செல்வம்,மேன்மையான நிலை,வீரத்தில் அசையாத நிலை,கல்வி,கொடை இந்த ஆறும் மறையை நன்கு கற்று ஒழுகுவோருக்கு அழகைத் தரும்.

hairstyle2

எந்த அழகு உண்மை அழகு?
கல்வியைப் பற்றிக் கூறும் ஒரு பாடல் வழிவழியாக அனைவராலும் மேற்கோள் காட்டப்பட்டு வருகிறது.
அந்தப் பாடல்:-

இடை வனப்பும் தோள் வனப்பும் ஈடில் வனப்பும்
நடை வனப்பும் நாணின் வனப்பும் – புடைசால்
கழுத்தின் வனப்பும் வனப்பல்ல எண்ணோடு
எழுத்தின் வனப்பே வனப்பு (பாடல் 74)

இடுப்பழகு, தோளழகு,செல்வத்தின் அழகு, நடையழகு, நாணத்தின் அழகு,கழுத்தின் அழகு – இவையெல்லாம் அழகே அல்ல;எண்ணும் எழுத்தும் கூடிய கல்வி அழகே அழகு!

இந்தப் பாடலை பர்த்ருஹரியின் கீழ்க்கண்ட பாடலோடு (நீதி சதகம் பாடல் 15) இணைத்துப் பார்ப்போம்:

கேயூராணி ந பூஷயந்தி புருஷம் – மனிதனை வளைகள் அலங்கரிப்பதில்லை
ஹாரா ந சந்த்ரோஜ்வலா – சந்திரன் போல பிரகாசிக்கும் முத்து மாலைகளோ
ந ஸ்நானம் ந விலேபகம் ந குஸ¤மம் – குளிப்பதோ, சந்தனம் பூசிக் கொள்வதோ
ந அலங்க்ருதா மூர்தஜா – வாரி விட்ட சிகையோ
ந பூஷயந்தி – மனிதனை அலங்கரிப்பவையாகா
யா ஸம்ஸ்கிருதா தார்யதே ஏகாவாணீ – எது நன்கு பரிசுத்தமாகத் தரிக்கப்படுகிறதோ அந்தக் கல்வி ஒன்று தான்
புருஷம் ஸமலங்கரோதி -மனிதனை நன்கு அலங்கரிக்கச் செய்கிறது
அகில பூஷணானி க்ஷ£யந்தே வாக் பூஷணம் பூஷணம்- எல்லா அழகும் நசிக்கின்றன கல்வியுள்ள வாக்கே சிறந்த அழகு.

032maruthi

அபூர்வ செய்திகள்!
ஏலாதி சில அபூர்வமான செய்திகளையும் ஆங்காங்கே தெளித்துச் செல்கிறது!
ஒருவன் தவத்தினைச் செய்வானாயின் அவனுக்கு மூன்று அல்லது ஐந்து அல்லது ஏழாம் பிறப்பில் வீடு பேறு வாய்க்கும் என்று உறுதி படக் கூறுவது சுவையான செய்தி.

அடுத்து பல்வேறு வகையில் பிறப்பு நேரிடுவதைச் சுட்டிக் காட்டி அப்படிப் பிறக்கும் பிள்ளைகளுக்கு உரிய பெயரையும் பட்டியலிட்டுத் தருகிறது!(பாடல்கள் 31,32).இது வேறு எந்த நூலிலும் காணக் கிடைக்காத ஒரு பட்டியல்!

ஔரதன் – கணவனுக்குப் பிறந்தவன்; கேத்திரசன் – கணவன் இருக்கும் போது பிறனுக்குப் பிறந்தவன்;கானீனன் – திருமணம் ஆகாதவளுக்குப் பிறந்தவன்;கூடோத்துபன்னன் – களவில் பிறந்தவன்; கிரிதரன் – விலைக்கு வாங்கப்பட்டவன்;பௌநற்பவன் – கணவன் இறந்த பிறகு பிறனை மணந்து பெறப்பட்டவன்;தத்தன் – சுவீகார புத்திரன்;சகோடன் – திருமணத்தின் போதே கருவில் இருந்தவன்;கிருத்திருமன் – கண்டெடுத்து வளர்த்துக் கொள்ளப்பட்டவன்;புத்திர புத்திரன் – மகனுக்குப் பிறந்தவன்;அபவித்தன் – பெற்றோர்கள் கைவிட மற்றவர்களால் வளர்க்கப்பட்டவன்;உபகிருதன் – காணிக்கையாக வந்தவன்!

இப்படிப் பற்பல செய்திகளை நூலில் பரக்கக் காணலாம்!

சொல்வளம்
நூலின் சொல்வளம் மிகவும் அழகாகவும் ஆழமாகவும் இருப்பதால் படிக்கப் படிக்கச் சுவை கூடுகிறது.ஒரே ஒரு பாடலை எடுத்துக்காட்டாகச் சுட்டிக் காட்டலாம்:

பொய் தீர் புலவர் பொருள் புரிந்து ஆராய்ந்த
மை தீர் உயர் கதியின் மாண்பு உரைப்பின் – மை தீர்
சுடர் இன்று; சொல் இன்று; மாறு இன்று; சோர்வு இன்று;
இடர் இன்று; இனி துயிலும் இன்று (பாடல் 66)

பொய் இல்லாத பெரியோர் ஆராய்ந்த வீடு பேற்றின் மாட்சிமையை உணர்ந்தால் ஒளி இல்லை;சொல் இல்லை; மாறுபாடு இல்லை; சோர்வு இல்லை;துன்பமில்லை; இனி தூக்கமும் இல்லை!

tamil puu parithal

நூலின் யாப்பு
உலகிலேயே சம்ஸ்கிருதம் உள்ளிட்ட எந்த மொழியிலும் இல்லாத ஒரு பா வகை வெண்பா. சொல் நயத்தையும் ஓசை நயத்தையும் கருத்து நயத்தையும் தரும் வண்ணம் இதன் இலக்கணம் அமைக்கப்பட்டுள்ளது அதிசயத்திலும் அதிசயமே.

ஆகவே இதை மனப்பாடம் செய்வது மிகவும் சுலபம்! ஆகவே தான் ‘வெண்பா ஒரு கால் கல்லானை’ என்ற மொழி வழக்கில் உள்ளது. ஒரு முறை கேட்டாலேயே வெண்பா மனனம் ஆகி விட வேண்டுமாம்! வாழ்வியல் நீதிகளைக் கூறும் இந்த நூலை அதனால் தான் கணி மேதாவியார் வெண்பாவில் அமைத்துத் தந்தார் போலும்.அனைவரும் இதனை சுலபமாக மனத்தில் இருத்திக் கொள்ளலாமே!

ஆறு பொருள்களைச் சொல்ல வேண்டியிருப்பதால் உவமை நயங்கள், அலங்கார சாஸ்திரம், அணிகள் ஆகியவற்றிற்கு நூலில் அதிகம் இடம் இல்லாமல் போய் விட்டது. அதிலும் அழகிய பெண்ணை அழைத்து நீதியைச் சொல்வதால் அதில் சில சொற்கள் போய்விடுவதால் சொற்களின் இழப்பைப் புலவர் சந்திக்க வேண்டி இருக்கிறது. ஆனால் பெண்களின் அழகை வர்ணித்து அந்த இடத்தில் உவமை நயத்தைக் காட்டி உவமைகள் உள்ள நூலாக இதை ஆக்கியுள்ளார் அவர்!

மனிதனுக்கு ஏற்றம் தரும் வாழ்வியல் நீதிகளை எண்பது பாக்களில் தர வேண்டும் என்று நினைக்கும் கணிமேதாவியாரின் துடிப்பு ஒவ்வொரு எழுத்திலும் தெரிவதால் ஏலாதி அனைவரும் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிய நூல் ஆகி விட்டது.

பல முறை இதைப் படித்தால் அறம்,பொருள், இன்பம், வீடு ஆகிய இந்த நான்கையும் அடையும் ரகசியம் புலப்படும்!

((லேடீஸ் ஸ்பெஷல் 2010ஆம் ஆண்டு தீபாவளி மலரில் வெளியான கட்டுரை.))

****************************************************
தொடர்புடைய இதர கட்டுரைகள்: மந்திர மொழி தமிழ், பத்தும் பெற்ற தமிழ்,சர்க்கரை போற்றிப் பணிந்த தமிழ், ஆசிரியரின் மின்னஞ்சல் முகவரி: snagarajans@gmail.com