ஸ்ரீ அப்பைய தீட்சிதர்  – 1 (Post No.10,229)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,229

Date uploaded in London – 19 OCTOBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

வாரந்தோறும் திங்கள் கிழமை இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் ஞானமயம் நிகழ்ச்சியில் 18-10-2021 அன்று ச.நாகராஜன் ஆற்றிய உரை.

எந்த நேரமும் ஞானமயம் நிகழ்ச்சிகளை யூ டியூபிலும் facebook.com/gnanamayam என்ற இணைய வழித் தொடுப்பிலும் காணலாம். இந்த உரை மூன்று பகுதிகளாகத் தரப்படுகிறது.

ஸ்ரீ அப்பைய தீட்சிதர்  – 1

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே, சந்தானம் நாகராஜன் வணக்கம். நமஸ்காரம்.

சிவ வைணவ பேதத்தை அகற்றி அத்வைத சித்தாந்தத்தைக் கடைப்பிடித்ததோடு யாரிடமும் பகைமை பாராட்டாமல் அற்புதமாக வாழ்ந்த ஒரு பெரும் மகான் ஸ்ரீஅப்பைய தீக்ஷிதர் ஆவார்.

வட ஆர்க்காடு மாவட்டத்தில் ஆரணிக்கு அருகில் உள்ள அடையபலம் என்ற ஊரில் புரட்டாசி மாதம் திங்கள் கிழமை கிருஷ்ண பக்ஷம், பிரதமை திதி, உத்திரட்டாதி நக்ஷத்திரத்தில் கன்யா லக்னத்தில் 1520ஆம் ஆண்டு அவர் அவதரித்தார். அவருக்கு பெற்றோர் வைத்த பெயர் விநாயக சுப்ரமண்யன்.

 தீக்ஷிதரின் தந்தையாரின் பெயர் ரங்கராஜாத்வாரி.

தந்தையார் அப்போது வேலூரை ஆண்டு வந்த சின்ன பொம்மன் நாயக்கரின் அவையை அலங்கரித்த அறிஞர். அவருடன் அப்பைய தீக்ஷிதருக்கு அடிக்கடி அரசவைக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது.    ராம கவி என்ற ஒரு வைஷ்ணவ ஆசாரியரிடமே அவர் தன் இளமைக் கல்வியைக் கற்றார். அந்தக் காலத்தில் சிவ – வைணவக் கொள்கை பற்றிய வாதங்கள் நாடெங்கும் நடந்து வந்தன.

அரசவையில் இருந்த மூத்த அறிஞர்களுள் ஒருவரான கோடிகன்னிகாதானம் ஸ்ரீநிவாஸ குரு தாத்தாசாரியார் சைவத்தைத் தாக்கி வைணவமே சிறந்தது என்று சொல்லிக் கொண்டே இருப்பார். ஒரு முறை இதனால் வெகுண்டெழுந்த அப்பைய தீக்ஷிதர் அரசவையில் சிவ நாமத்தின் பெருமையை வேத, ஆகம, சாஸ்திர மேற்கொள்களைச் சுட்டிக் காட்டிப் பேச ஆரம்பித்தார். அவையோர் பிரமித்தனர். நாடெங்கும் இந்தச் செய்தி பரவவே தஞ்சாவூர், ஸ்ரீகாளஹஸ்தி, கார்வேடி, வேங்கடகிரி உள்ளிட்ட இடங்களில் இருந்த மன்னர்கள் இவரை அழைத்துப் பேசச் சொல்லி கௌரவித்தனர்.

 வேலூரை ஒரு முறை கொடிய விஷ ஜுரம் பரவித் தாக்க மக்கள் அவதியுற்றனர். அந்த ஜுரத்தை அகற்றி மக்களை நலமுறச் செய்தார் அப்பைய தீக்ஷிதர். ஆகவே மன்னனும் மக்களும் அவரிடம் மிக்க மதிப்பும் மரியாதையும் கொண்டிருந்தனர்.

   தலம் தலமாகச் சென்று இறைவனை வழிபடும் தல யாத்திரையை அவர் மேற்கொண்ட போது செல்லும் இடமெல்லாம் சிறப்புற வரவேற்பைப் பெற்றார். அத்துடன் அங்கு தம்முடன் வாதுக்கு வந்த அனைவரையும் வாதுக்கு அழைத்து வெற்றியும் பெற்றார்.

ஒரு முறை ஸ்ரீரங்கம் சென்ற போது அவரைக் கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கவில்லை. ஹரியும் ஹரனும் ஒன்றே, சிவ வைஷ்ணவ பேதம் கூடவே கூடாது என்று சொல்லிப் பார்த்தார் தீக்ஷிதர். ஆனால் கோவில் அர்ச்சகர்கள் இவரது வாதத்தை ஏற்கவில்லை. உடனே திருமாலை சிவனாக எண்ணி இவர் பாடலானார். உடனே திருமாலே சிவச் சின்னங்களுடன் அங்குள்ள வைணவர்களுக்குக் காட்சியளிக்க அனைவரும் தீக்ஷிதரது மேன்மையை உணர்ந்து அவரை கோவிலுக்குள் மரியாதையுடன் அழைத்துச் சென்று கௌரவப்படுத்தினர்.

அரசவையில் அனைவரும் வலக்கரத்தால் ஆசீர்வதிப்பது வழக்கம். ஆனால் தீக்ஷிதரோ மன்னன் உட்பட அனைவரையும் இடக்கரம் கொண்டு ஆசீர்வதித்து வந்தார். அவர் மீது பொறமைகொண்ட வித்வான் ஒருவர் மன்னனிடம் இப்படிச் செய்து அவர் மன்னனை அவமானப் படுத்துகிறார் என்று அரசவையில் பகிரங்கமாக அவர் மீது குற்றம் சுமத்தினார். ஆனால் அவரது வலது கையில் அக்னி இருக்கிறது, அதனாலேயே அவர் வலது கையால் ஆசீர்வதிப்ப்தில்லை என்பதை மன்னர் அறியவில்லை. புன்சிரிப்புடன் அரசவையினரை நோக்கி அரசனின் படம் ஒன்றைக் கொண்டு வரச் செய்த அவர், தனது வலது கையினால் அந்தப் படத்தை ஆசீர்வதிக்க அது குப்பென்று தீப்பற்றி எரிய ஆரம்பித்தது. அவரது தவ வலிமையையும் அக்னியை அவர் வலது கரம் கொண்டிருக்கிறது என்பதையும் உணர்ந்த அனைவரும் ஆவென்று கூவ அவர் மீது குற்றம் சுமத்தியவரோ பயந்து நடுநடுங்கிப் போனார்.   

 இவரது பெருமை எல்லை கடந்து செல்வதைக் கண்ணுற்ற அரசவை வைணவ ஆசாரியர் சதி ஒன்றைச் செய்தார். விஷ்ணு ஆலயத்திற்கு தரிசனத்திற்காக அவர் வந்த போது அவருக்கு தீர்த்த பிரஸாதத்தை பட்டாசாரியார் அளிக்கையில் அதில் விஷத்தைக் கலந்து தர அதை அப்படியே  அருந்தினார் அப்பைய தீக்ஷிதர். ஆனால் அந்த விஷம் கழுத்துக்குக் கீழே செல்லாமல் அப்படியே கழுத்தில் நின்றது. இதனால் சந்தேகமுற்ற அரசன் கோவில் பட்டாசார்யரை வரவழைத்து விசாரிக்க அவர் தான் செய்த தவறைக் கூறி தன்னை மன்னிக்குமாறு இறைஞ்சினார். அப்பைய தீக்ஷிதர் அவரை உடனே மன்னித்து விட்டார்.

அடையபலத்தில் அவர் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்த ஸ்வாமியின் பெயர் ஸ்ரீ காலகண்டேஸ்வரர். அவரது அருள் இருக்கும் போது விஷம் அவரை என்ன செய்ய முடியும் என அனைவரும் வியந்து கூறினர். சிவார்க்க மணி தீபிகை என்ற நூலை அவர் இயற்ற அதனால் மகிழ்ந்த  சின்னபொம்ம நாயக்கர் தீக்ஷிதருக்கு கனகாபிஷேகம் செய்தார். அந்தப் பணத்தைக் கொண்டு அவர் பார்வதி சமேத ஸ்ரீ காலகண்டேஸ்வரர் ஆலயத்தை அடையபலத்தில் நிறுவினார். அவருக்குக் கிடைத்த மானியத்தைக் கொண்டு 500 மாணவர்களைத் திரட்டி அவர்களுக்கு வேண்டியதை எல்லாம் செய்தார். வைணவர்கள் தீவிரமாக எதிர்க்க ஆரம்பித்ததை நாடெங்கும் சந்திக்கவே இந்த மாணவர்களை இப்படி அவர் ஒருங்கிணைத்தார்.

  • தொடரும்
  • tags —அப்பைய தீட்சிதர்