சிம்பல் SYMBOL மயம் உலகம்!(Post No.3586)

Germany Stamps with Swastika

Written by S NAGARAJAN

 

Date: 29 January 2017

 

Time uploaded in London:-  5-29 am

 

 

Post No.3586

 

 

Pictures are taken from different sources; thanks.

 

 

பாக்யா 20-1-2017 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை

 

சிம்பல் மயம் உலகம்!

 

ச.நாகராஜன்

 

சிம்பல் (Symbol) எனப்படும் அடையாளக் குறியீடு அல்லது சின்னம் இன்று உலகில் பெற்றுள்ள முக்கியத்துவம் மனித சரித்திரத்தின் பரிணாம வளர்ச்சியையே சுட்டிக் காட்டுகிறது.

ஆயிரம் மொழிகள் உலகில் இருந்தாலும் சுருங்கி விட்ட உலகத்தில் எந்த ஒரு மொழி பேசுபவருக்கும் ஒரு மௌன மொழியாக, பல இடங்களில் உயிர் காக்கும் கருவியாக, சிம்பல் விளங்குகிறது.

 

 

எதிரிலே ஒரு பாலம் வருகிறது, பாதை வளைகிறது, மெதுவாகப் போ, ஆபத்தான ஹேர் பின் பெண்ட் என்றெல்லாம் இந்த சிம்பல்கள் சுட்டிக் காட்டுவதால் அல்லவா மனிதன் உயிரிழப்பு இல்லாமல் நிம்மதியாக ஒரு இடத்தைச் சென்று சேர முடிகிறது!

மொழிகளுக்கு அப்பாற்பட்ட ஒரு உலகத்தை சிம்பல்களினால் படைக்க முடியும் என்று இந்த அடையாளக் குறியீட்டில் ஆர்வம் உள்ளவர்கள்  சொல்கின்றனர்.

 

 

ஹென்றி ட்ரைஃபஸ் (Henry Dreyfuss )   என்பவர் இந்த அடையாளங்களைத் தொகுப்பதில் முன்னோடி. சுமார் இருபதினாயிரம் சிம்பல்களை அவர் உலகெங்குமிலிருந்து பல்வேறு நாகரிகங்கள், நாடுகளிலிருந்து தொகுத்திருக்கிறார். சிம்பல் சோர்ஸ்புக் (Symbol Sourcebook) என்ற அவரது புத்தகம் ஆயிரக்கணக்கான சிம்பல்களைச் சித்தரித்து அவற்றின் அர்த்தத்தையும் விளக்குகிறது; பார்ப்போருக்குப் பிரமிப்பையும் தருகிறது.

 

 

வரலாறில் சிம்பல்களின் தாக்கம் மகத்தானது.

இரண்டாம் உலகப்போரில் அசுர சக்தியாக விளங்கிய ஹிட்லர் பல நாடுகளுக்கும் சிம்ம சொப்ப்னமாக இருந்தான். அவனது கொடியில் ஸ்வஸ்திகா பொறிக்கப்பட்டிருந்தது.

ஆனாலும் முடிவில் அவன் வீழ்ச்சியையே அடைந்தான்; தற்கொலை செய்து கொண்டான்.

ஹிந்துக்களின் நலச் சின்னமாகவும் புனித அடையாளக் குறியீடாகவும் காலமெல்லாம் விளங்கி வருவது ஸ்வஸ்திகா. கோவில்களில் தவ்றாமல் இடம் பெறும் சின்னமும் இதுவே.

இதில் இரு வகை உண்டு. வலப்பக்க சுழற்சி உடைய ஸ்வஸ்திகா தைவிக் ஸ்வஸ்திகா என்று குறிப்பிடப்பட்டு நல்லனவற்றைத் தரும் அடையாளமாகச் சொல்லப்படுகிறது. இதையே ஹிந்து ஆலயங்களில் காணலாம்,

 

 

ஆனால் உலகின் அதிர்ஷ்டத்தின் காரணமாக ஹிட்லர் ஸ்வஸ்திகாவின் சுழற்சியை இடப்பக்கமாக மாற்றி அதை 45 டிகிரி கோணத்தில் வேறு வளைத்து தீமையைத் தரும் ஆசுரிக் ஸ்வஸ்திகாவைத் தேர்ந்தெடுத்தான். விளைவு, அசுர வேகத்தில் முன்னேறிய அவன் அதல பாதாளத்தில் வீழ்ந்தான்.

பண்டைய ரோமில் பாதாளக் கல்லறைகளிலும் இந்த ஸ்வஸ்திகா சின்னம் பொறிக்கப்பட்டிருப்பது ஒரு அதிசய செய்தி. திபெத்திய சுவடிகள், குகைகள் மற்றும் ஆலயங்களிலும் ஸ்வஸ்திகா இடம் பெற்றுள்ளது.

 

 

 

இரண்டாம் உலகப் போரில் வி (V) என்ற வெற்றிச் சின்னத்தை தன் இரு விரல்களில் மூலம் காட்டினார் வின்ஸ்டன் சர்ச்சில். கையின் பின்புறம் தன்னை நோக்கி இருந்து ‘வி’-ஐப் பார்ப்போருக்குக் காண்பித்தால்,அது வெற்றி.

 

 

காண்பிப்பவரை நோக்கி உள்ளங்கை இருந்து இரு விரல்களைக் காண்பித்தால் அது அடுத்தவரை அவமானப்படுத்தும் சைகை.  சர்ச்சில் வெற்றிக்கான சைகையை வடிவமைத்து 1941, ஜூலை,20 ஆம் தேதி பிபிசி மூலம் பிரிட்டனில் அதை பிரபலப் படுத்தினார்.

மக்கள் திலகம் எம் ஜி ஆரும் இந்த வி சைகையையும் இரட்டை இலையையும் மக்களிடையே உற்சாகமாகப் பரப்பி தொடர் வெற்றி கண்டதும் இங்கு குறிப்பிடத் தகுந்தது.

ஆக உலக தலைவர்கள் அனைவருமே சிம்பல்களில் தனிக் கவனம் செலுத்துவது அதன் மூலம் மக்களை உத்வேகமூட்டி ஒரு பெரிய வெற்றிக்கு அழைத்துச் செல்வதற்கே.

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா 2008ஆம் ஆண்டு தனது தேர்தல் பிர்ச்சாரத்தின் போது தவறாமல் கையில் எடுத்துச் சென்றது ஹனுமானின் படத்தையே. இதை அப்போதைய எகனாமிக்ஸ் டைம்ஸ் (10-6-2008இதழ்) வெளியிட்டது.

 

 

இஸ்ரேலில் புனிதமாகக் கொண்டாடப்படும் ஸ்டார் ஆஃப் டேவிட் தென்னிந்தியக் கோவில்களில் தவறாமல் இடம் பெறுகிறது. முருகனின் அருளைப் பெற ஷட் கோணத்தை முருக பக்தர்கள் வீட்டில் வைத்து வழி படுகின்றனர்.

ஸ்ரீ சக்ரத்தின் பெருமையை அலெக்ஸி குலைச்சேவ் என்ற ரஷியர் பிரம்மாண்டமான் ஆய்வு செய்து பிரமிக்க வைக்கும் உண்மகளை ஆய்வு முடிவாகத் தந்திருக்கிறார்.ஸ்ரீ சக்ரத்தில் உள்ள ஒன்பது முக்கோணங்கள் ஒன்றை ஒன்று வெட்டினால் ஏற்படும் சந்திப்புப் புள்ளிகள் எவ்வாறு பல்வேறு புள்ளிகளுடன் ஒன்றோடு ஒன்று இணையும் என்ற கண்டுபிடிப்பும், அத்துடன் கூட இன்னும் விளங்கிக் கொள்ள் முடியாத விடை காண இயலாத அநேக அறிவியல் விளக்கங்களும் இந்த யந்திரத்தில் உள்ளன என்கிறார் அவர். ஸ்ரீ சக்ரத்தில் உள்ள சிக்கலான கணிதத்தை நவீன தலைமுறை கம்ப்யூட்டர்கள் கூட விடுவிக்க முடியவில்லை என்ற அவரது கூற்று நம்மை பிரமிக்க வைக்கிறது!

இந்த யந்திரத்தின் பல்வேறு ம்ஹிமைகளைப் பட்டியலிடும் அவர் எப்படி இந்த யந்திரம் பண்டைய காலத்திலேயே அமைக்கப்பட்டிருக்கிறது என்று வியக்கிறார்!

 

புத்த மதத்தினரின் தர்ம சக்கரம் உள்ளிட்ட நல்ல அடையாளக் குறியீடுகள் காலம் காலமாக பலன் அளித்து வருவதை பௌத்தர்கள் உணர்ந்து இன்றும் அவற்றை விடாமல் பயன்படுத்தி வருகின்றனர். இந்த அதிர்ஷ்ட சிம்பல்களை இனம் காட்டி உலகெங்கும் விற்பனை செய்யும் பல்வேறு நிறுவனங்கள் பணத்தில் கொழிப்பது கண்கூடாக நாம் இன்று பார்க்கும் உண்மை.

 

அமெரிக்க டாலர் இன்றும் உலகின் செல்வாக்கு மிக்க கரன்ஸியாக விளங்குவதற்கான காரணம் அதில் உள்ள பிரமிடும் கண்ணுமே என்பதை சிம்பல் ஆய்வாளர்கள் உறுதிபடத் தெரிவிக்கின்றனர் (பாக்யா இதழில் அமெரிக்க டாலர் மர்மம் பற்றி ஏற்கனவே விளக்கப்பட்டுள்ளது). அமெரிக்காவை நிறுவும் போது அதை ஸ்தாபித்த தலைவர்கள் செல்வாக்கு மிக்க சக்தியாக அமெரிக்காவை நீடுழி காலம் இருக்குமாறு செய்ய  இப்படிப்பட்ட பல இரகசிய சிம்பல்களை அமெரிக்க வாழ்க்கை முறையில் புகுத்தி விட்டிருக்கின்றனர் என்பதை வரலாறு தெரிவிக்கிறது.


 

உலகியல் வாழ்க்கைக்கு இன்று இன்றியமையாதது சிம்பலே. கணிதத்தின் சமன்பாடுகள், தொழிற்சாலையில் பல விஷயங்களை எளிதில் சுட்டிக் காட்டும் வழிகாட்டிகள், அறிவியலில் பலவற்றையும் விளக்கும் விளக்கக் குறியீடுகள், நெடுஞ்சாலைகள், விமானதளங்கள், கடல் வழிகள் என அங்கிங்கெனாதபடி எங்கும் வழிகாட்ட உதவும் அடையாளச் சின்னங்கள் ஆகியவை மட்டும் இல்லையெனில் இன்று வாழ்க்கை முறையாக நடைபெறாது. சிம்பல் இல்லாத உலகம் விபத்துள்ள உலகமாக ஆகி விடும்.

நமது அன்றாட வாழ்க்கை முறையில் ஒவ்வொருவரும் அவரவர் தேவைக்கேற்ப ஒரு சிம்பலைத் தேர்ந்தெடுக்க அவரவர் வாழ்க்கை முறை, தேசீயம், மதம் வழி வகுக்கிறது.

இந்த சிம்பல்களில் வெவ்வேறு வண்ணங்களும் சேர்க்கப்படும் போது அதன் மகத்துவம் பன்மடங்கு பெருகி விடுகிறது. கலர் தெராபி என்பது இன்றைய உலகில் பெரும் சிகிச்சை முறையாக உருவெடுத்து வரும் நிலையில் வண்ணங்களை இடம் அறிந்து பாரம்பரியமாக உள்ள சிம்பல்களில் நமது முன்னோர் இணைத்திருப்பது ஒரு பிரமிப்பூட்டும் செய்தியே!

சரியான சிம்பலை ஒருவர் நாடி அதை உரிய அளவின் படி செய்து நிர்ணயிக்கப்பட்ட வண்ணங்களையும் சேர்த்து வைத்துக் கொண்டால் அது அவருக்கு வேண்டியதைத் தந்து விடும். இதன் உண்மையை அனுபவத்தில் அறியலாம்!

மொத்தத்தில் சிம்பல்  மயம் உலகம்!

*****