Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 19 November 2018
GMT Time uploaded in London –11-17 am
Post No. 5678
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog
ஜெர்மானிய தத்துவ அறிஞர் Frederich Schleilermarcher பிரெடெரிக் ஸ்லைச்மார்ஷெர். அவரிடம் ஒருவர் உங்கள் கூட்டங்களுக்கு நிறைய கூட்டம் வருகிறதே. அது எப்படி? (சாதாரணமாக தத்துவம் போன்ற விஷயங்களை விவாதிக்கும் கூட்டங்களில் அதிக ஆட்கள் வர மாட்டார்கள்.)
அவர் சொன்னார்,
நான் தேர்வுகள் போர்டில் (BOARD OF EXAMINERS) அங்கத்தினர். இதை மனதிற் கொண்டு மாணவர்கள் என்னை மொய்க்கின்றனர். ஆங்கே வரும் மாணவ , மாணவிகளை ஒருவர் ஒருவர் கண்டு மோஹிக்க ( ‘சைட்’ அடிக்க) இரு பாலரும் வருவர். அங்கே வரும்
இளம் பெண்களைக் காண துருப்புகள் (படை வீரர்) வருகின்றனர்!
(எல்லோரும் ஒரு விஷயத்தை எதிர் பார்த்து வருகின்றனரே அன்றி தத்துவத்துக்காக வரவில்லை என்பதை அழகுபட விளக்கினார்).
xxxxx
அமெரிக்க நகைச்சுவை
ஆர்டிமஸ் வார்ட் என்ற பிரபல பேச்சாளரை ஒரு சங்கத்தில் பேச அழைத்தனர் அவருக்கு ‘அமெரிக்க மக்களின் நகைச்சுவை ரசனை’ என்ற தலைப்புக் கொடுத்திருந்தனர். அந்த சங்கத்தின் தலைவர் ‘மைக்’-கைப் பிடித்தார். பேச்சாளரை அறிமுகம் செய்து வரவேற்பதற்குப் பதிலாக, அமெரிக்க மக்களின் நகைச் சுவை பற்றி தனக்குத் தெரிந்த எல்லா விஷயங்களையும் எடுத்துரைத்து தனது மேதாவிலாஸத்தை காட்டினார்.
முக்கியப் பேச்சாளரின் நேரம் வந்தது. அப்போது ஆர்டிமஸ் சொன்னார்
அன்பர்களே! நண்பர்களே!
எனக்குக் கொடுத்த தலைப்பில் நான் சொல்ல வேண்டிய விஷயங்களை எல்லாம் சங்கத் தலைவரே செப்பி விட்டார். நான் சொல்வதற்கு எதுவும் மிச்சம் வைக்கவில்லை. ஆகையால் நான் ‘’இந்திய உணவு வகைகள்’’ பற்றி உரையாற்றுவேன் என்று உணவு வகைகள் பற்றிப் பேசி முடித்தார்.
xxxx
மார்க் ட்வைனின் பிரபல சொற்பொழிவு
மார்க் ட்வைன் என்ற பிரபல அமெரிக்க எழுத்தாளர், கதாசிரியர், நகைச் சுவை மன்னனை, சான் பிரான்ஸிஸ்கோ நகரிலுள்ள அவருடைய நண்பர்கள் ஒரு முறை பேச அழைத்தனர்.
‘ஐயா, என்னை விட்டு விடுங்கள்; நான் எழுத்தாளனேயன்றி பேச்சாளன் அல்ல’ என்று மன்றாடினார். அதுவும் இது அவரது படைப்புகளின் ஆரம்ப காலத்தில் நடந்தது.
‘இல்லை, கவலையே படாதீர்கள்; ஹவாய் தீவில் நான் கண்ட அதிசயங்கள் என்று தலைப்பு கொடுக்கிறோம்; சுவையான
விஷயங்களைச் சொல்லுங்களேன் என்றனர்.
அது மட்டுமல்ல; நாங்கள் ஆங்காங்கே நமது ரஸிகர் பட்டாள ஆட்களை உட்கார வைத்துள்ளோம் அவர்கள் நீங்கள் அடிக்கும் ஒவ்வொரு ‘ஜோக்’குக்கும் பயங்கர கைதட்டல் கொடுத்து உங்களை ஊக்குவிப்பர் என்றனர்
‘சரியப்பா! நான் சொல்லும் ஜோக் புரிந்தாலும் புரியாவிட்டாலும் பலமாகச் சிரிக்கச் சொல்லுங்கள். அது போதும்’ என்றார் மார்க் ட்வைன் (அவரது உண்மைப் பெயர் ஸாமுவேல் க்ளெமென்ஸ்).
ஒருவாறாக கூட்டத்தில் கூலிப் பட்டாளம் கைதட்டவும் சிரிக்கவும் தயாராக வைக்கப்பட்ட நிலையில் மார்க் ட்வைன் மேடைக்கு வநதார். இது அவரது கன்னிப்[ பேச்சு என்பதால் கை, கால் உதறத் தொடங்கியது. ஆள் மயக்கம் போட்டு விழுந்து விடுவாரோ என்று கூட்ட ஒருங்கிணப்பாளர்கள் தீயணைக்கும்படை போல தயார் நிலையில் நின்றனர். அவர் ஒருவாறாகச் சமாளித்துக் கொண்டு தன்னை சுதாரித்துக் கொண்டார்.
எனக்கு முன்னே சித்தர் பலர் இருந்தாரப்பா– என்று பாரதியார் பாடிய ஸ்டைலில் மார்க்கும் சொன்னார்
எனக்கு முன்னே ஜூலியஸ் ஸீஸர் இருந்தான்; செத்தான்
ஷேக்ஸ்பியர் இருந்தான்; செத்தான்
நெப்போலியன் இருந்தான்; செத்தான்
ஆப்ரஹாம் லிங்கன் இருந்தான்; செத்தான்
நானும் அவர்கள் நிலைக்கு நெருக்கமாகத்தான் உள்ளேன்-
இப்படித் துவங்கியவுடன் கூட்டத்தில் உண்மையாகவே கரகோஷம் எழுந்து விண்ணைப் பிளந்தது.
அந்த ஊக்குவிப்பில் மார்க், விட்டு விளாசினார். கூட்டம் முடிந்தபோது எல்லோரும் வயிறு வெடிக்கச் சிரித்து ‘ஐயோ, அம்மா, அப்பாடா– சிரித்துச் சிரித்து வயிறு எல்லாம் புண் ஆகிவிட்டதே’ என்று கஷ்டப்பட்டுக்கொண்டே எழுந்தனர். அது மார்க் ட்வைனின் பிரபல சொற்பொழிவு எனப் பெயர் எடுத்தது.
TAGS–மார்க் ட்வைன், அமெரிக்க நகைச்சுவை, கூட்டம் சேருவது
–சுபம்–