Written by london swaminathan
Date: 4 May 2016
Post No. 2780
Time uploaded in London :– 8-20 AM
( Thanks for the Pictures)
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)
சம்ஸ்கிருதத்தில் ஒரு பொன்மொழி இருக்கிறது. எது துர்லபம்? அதாவது கிடைத்தற்கு அரியது எது?
“அநாயாசேன மரணம் வினா தைன்யேன ஜீவனம்”
அநாயாசேன மரணம்= எளிதான/ கஷ்டப்படாமல் மரணம்
வினா தைன்யேன ஜீவனம் = வறுமையற்ற வாழ்வு.
‘உடம்பைக் கடம்பால் அடி’ என்பது தமிழ்ப் பழமொழி. என் பாட்டி கடம்ப மரத்தால் செய்யப்பட்ட கட்டிலில் படுத்து உறங்குவாள். அவள் இறுதி மூச்சு வரை நோய் நொடி இல்லாமல் வாழ்ந்தாள். நாங்கள் எனக்குத்தான் இறுதிக் காலத்தில் இந்த கட்டில் சொந்தம் என்று சகோதரர்களுக்குள் “ஜோக்” அடித்துக் கொள்வோம்! அக்கட்டில் இன்னும் மதுரையில் இருக்கிறது. அந்தப் பாட்டி தினமும் தூங்குவதற்கு முன் எனக்கு அநாயாச மரணதத்தைக் கொடுடாப்பா என்று பெரிதாக பிரார்த்தனை செய்துவிட்டுத் தூங்குவாள். சிறுவயதில் இந்தச் சொற்களுக்கு எங்களுக்கு அர்த்தம் தெரியாது.
இரவில் பாட்டியைப் பார்த்தால் பாட்டி சொன்னதையே திருப்பிச் சொல்லி கிண்டல் செய்வோம்.
கஷ்டப் படாமல் ஒருவர் இறப்பதற்கு புண்ணியம் செய்திருக்க வேண்டும். நான் பார்த்த பல ‘கேஸ்’கள் ஆஸ்பத்திரியில் பல காலம் கிடந்து, படுக்கையிலேயே மல, மூத்ர விசர்ஜனம் செய்து, குடும்பத்தினரே, இவர் இருந்து சித்திரவதைப்படுவதை விட, (உண்மையில்………எங்களைச் சித்திரவதைப்படுத்துவதை விட), போவதே மேல் என்று சொல்லுமளவுக்குப் போய்விடுகிறது. இன்னும் பலர் விஷயத்தில் காசுக்காக டாட்டர்களே மெஷின் மூலம் உயிரைத் தக்கவைத்து, வேண்டாதபோது நம்மைக் கூப்பிட்டு எல்லா உறவினர்களையும் வரும்படி சொல்லுங்கள், பிளக்கைப் பிடுங்கப் போகிறோம் (ஆக்சிஜன் சப்ளை, இருதயத்துடிப்புக்கு உதவும் மிஷின்) என்று சொல்லுவதைப் பார்த்திருக்கிறேன். இதையெல்லாம் பார்க்கையில் நமக்கு அநாயாச மரணம் எவ்வளவு முக்கியம் என்று தெரியும். நாமும் பிரார்த்திப்போம்.
வறுமை பற்றி பெரியகட்டுரை எழுதத்தேவையே இல்லை. எல்லோருக்கும் தெரிந்த விஷயமே. கொடிது கொடிது வறுமை கொடிது – என்று அவ்வையே பாடிவிட்டார்.
வால்மீகி கூறும் அரிய விஷயம்
எது அரிது (துர்லபம்)? என்பதற்கு வால்மீகி முனிவர் வேறு பதில் சொல்லுகிறார்.
சுலபா புருஷா ராஜன் சததம் ப்ரியவாதின:
அப்ரியஸ்ய ச பத்யஸ்ய வக்தா ஸ்ரோதா ச துர்லப:
–வால்மீகி ராமாயணம், ஆரண்ய காண்டம், 37-2
பத்யஸ்ய வக்தா = கசப்பான உண்மையைச் சொல்பவர்
பத்யஸ்ய ஸ்ரோதா = கசப்பான உண்மையைக் கேட்பவர்
கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் நமக்கு இது எவ்வளவு உண்மை என்று தெரியும். அம்மா, அப்பாவைத் தவிர வேறு எவரும் நம்மிடம் மனம் திறந்து பேசுவதில்லை. கசப்பான உண்மையை அவர்கள் மட்டுமே நமக்குச் சொல்வர். நாமோ அதைக் கேட்பதில்லை ஆகவே துர்லபம்; அதாவது அரிதே.
கசப்பான உண்மையை நமக்கு வேறு யாரும் சொலாமல் இருப்பதற்கு இரண்டு காரணங்கள்:
குடும்பத்திலும் அலுவலகத்திலும் பொது வாழ்விலும் நம் மீது பொறாமை கொண்டவர்கள், “ஆள் நன்றாகச் சிக்கித் தவிக்கட்டும்; வேடிக்கை பார்ப்போம்” என்று எண்ணலாம். இரண்டாவது காரணம்:- நமக்கு ஏன் வம்பு? கசப்பான உண்மையைச் சொன்னால் நம்மைத் தப்பாக நினைப்பார்கள் என்று பேசாமல் இருந்து விடுகிறார்கள்.ஆகவே இவ்வகை ஆட்களும் அரிதே!
அரிது அரிது ……………………….. அவ்வைப் பாட்டி சொன்னது
என்னுடைய ஒரு பழைய கட்டுரையில் நான் கூறிய விஷயம் இதோ :-மாநுடப் பிறவி அரிது! அரிது!! (21 அக்டோபர் 2013)
அரியது கேட்கின் வரிவடி வேலோய்!
அரிதரிது மானிடர் ஆதல் அரிது
மானிடராயினும் கூன் குருடு செவிடு
பேடு நீக்கிப் பிறத்தல் அரிது
பேடு நீக்கிப் பிறந்த காலையும்
ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது
ஞானமும் கல்வியும் நயந்த காலையும்
தானமும் தவமும் தான்செயல் அரிது
தானமும் தவமும் தான்செய்வராயின்
வானவர் நாடு வழிதிறந் திடுமே
என்று அவ்வைப் பாட்டியும் கூறுவர்.
ஆதிசங்கரர் கூற்று
ஆதிசங்கரர் பல இடங்களில் மாநுடப் பிறவியின் அரிய தன்மை பற்றிக் கூறுகிறார்: “ஜந்தூனாம் நரஜன்ம துர்லபத:” (அரிது அரிது மானுடராதல் அரிது). அவர் எழுதிய விவேக சூடாமணியில் 2, 3, 4– ஆவது ஸ்லோகங்களிலேயே இதைப் பற்றிப் பிரஸ்தாபிக்கத் துவங்கி விடுகிறார்.
அரிது அரிது மனிதப் பிறவி, அதிலும் அரிது பிரம்மத்தை நாடும் பிறவி
அதனிலும் அரிது வேத அறிவு, அதனிலும் அரிது ஆத்ம ஞானம்
முக்தி பெறுவதோ நூறு கோடியில் ஒன்றே!
மூன்றாவது ஸ்லோகத்தில் மூன்று அரிய விஷயங்களைக் கூறுகிறார்: மனுஷ்யத்வம், முமுக்ஷுத்வம், மஹா புருஷர்களின் அருள். மனிதப் பிறவி, வீடு பேற்றை நாடல், பெரிய குருவின் பூரண பாதுகாப்பு என்பதே அவர் கூறுவது.
வேதத்தைப் படித்த பின்னரும் முக்தியை நாடாதவன் தற்கொலை செய்துகொள்வதற்குச் சமம் என்கிறார் நாலாவது ஸ்லோகத்தில்.
இதையெல்லாம் படிப்பவர்களும் அரிதே!!!
–சுபம்–
You must be logged in to post a comment.