அரிய உயிரினம் காப்போம்

Written by S Nagarajan

swami_48@yahoo.com

 Date: 12 AUGUST 2019  


British Summer Time uploaded in London –  7-27 am

Post No. 6764

 Pictures are taken from various sources.  ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

stranded whales
crocodiles killed by villagers, Indonesia

ஆல் இந்தியா ரேடியோ, சென்னை வானொலி நிலையத்தின் வாயிலாக தினமும் இந்திய நேரம் காலை 6.55 மணிக்குச் சுற்றுப்புறச் சூழல் நிகழ்ச்சியில் 1-8-19 முதல் 10-8-19 முடிய சுற்றுப்புறச் சூழலைக் காப்பது பற்றிய ச.நாகராஜனின் 10 உரைகள் ஒலிபரப்பப்படுகின்றன. இந்த உரைகளை     www.allindiaradio.gov.in  தளத்தில் தமிழ் ஒலிபரப்பைத் தேர்ந்தெடுத்து  நிகழ்நிலையில் கேட்கலாம்.   7-8-19 அன்று காலை ஒலிபரப்பட்ட ஏழாம் உரை இங்கு தரப்படுகிறது.

அரிய உயிரின வகை வேறுபாட்டைக் காப்போம்!

ச.நாகராஜன்

இயற்கையின் ஒரு அற்புதமான அமைப்பே பயோ டைவர்ஸிடி (Bio diversity) எனப்படும் உயிரினவகை வேறுபாடாகும்.

ஆனால் அற்புதமான இந்த அமைப்பு மனிதர்களால் சிறுகச் சிறுக அழிக்கப்பட்டு வருவது வேதனைக்குரிய ஒன்றாகும்.

 மிக அதிகமாக உலகெங்கும் பெருகி வரும் ஜனத்தொகை, உலகப் பொருளாதாரம், மக்களின் நுகர்வு ஆகியவற்றால் கடந்த 50 ஆண்டுகளாக பூமியின் உயிர்க்கூறான அமைப்பு சிதைந்து வருகிறது.

ஒருபுறம் மக்களின் ஆயுட்காலம் பழைய காலத்தை விட அதிகமாகி இருக்கிறது என்பதும், மத்தியதர வர்க்கத்தினரின் வாழ்க்கை நிலை சிறப்பாக மேம்பட்டு வருகிறது என்பதும் மகிழ்ச்சிக்குரிய விஷயமாக இருந்த போதிலும் இவை உயிரினவகை வேறுபாட்டுக்கு ஊறு செய்தே அடையப்படுகிறது என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

1970ஆம் ஆண்டிலிருந்தே உயிரின வகை வேறுபாடு கீழ் நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது என்பதே விஞ்ஞானிகளின் ஆய்வுகளின் முடிவாகும். இதை அவர்கள் Great Acceleration – க்ரேட் ஆக்ஸிலரேஷன் – பெரும் முடுக்கம் என்று வர்ணிக்கின்றனர்.

பறவைகள், விலங்கினங்கள் மற்றும் மீன் உள்ளிட்ட கடல் வாழ் உயிரினங்கள் ஆகியவற்றின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது.

விலங்குகள் இயற்கையாக உயிர் வாழும் இடம் குறைந்து கொண்டே வருவது, உயிரினங்களை வேட்டையாடுவது ஆகியவையே இந்த எண்ணிக்கை குறைபாட்டிற்கான பிரதான காரணங்களாகும்.

பூமியின் ஆரோக்கியமும் சமச்சீர்தன்மையும் இந்த பல்வேறு உயிரினங்களைச் சார்ந்தே இருக்கிறது என்பது ஒரு முக்கிய செய்தி.

750 கோடி ஜனத்தொகையைக் கொண்டுள்ள உலகம் 980 கோடி என்ற அளவில் ஜனத்தொகைப் பெருக்கத்தை 2050ஆம் ஆண்டு வாக்கில் எட்டி விடும் என்கிறது அறிவியல் ஆய்வு.

பூமியில் 30 விழுக்காட்டுப் பரப்பளவே காடுகள் உள்ளன. ஆனால் இந்தக் காடுகளிலேயே பூமியில் உயிர் வாழும் பல்வேறு உயிரினங்களில் 80 விழுக்காடு வாழ்கின்றன. பூமியின் ஜனத்தொகைப் பெருக்கத்தினால் 2000ஆம் ஆண்டு முதல் 2010க்குள் 40 சதவிகிதம் காடுகள் அழிக்கப்பட்டு விளை நிலங்களாக மாற்றப்பட்டுள்ளன. இதனால் பாதிக்கப்பட்டவை பல்வேறு வகை உயிரினங்களே!

ஆக தன்னுடன் சேர்ந்து வாழும் உயிரின வகைகளை அழிக்காமலும் அவை வசிக்கும் காடுகளை அழிக்காமலும் இருக்க வேண்டிய பெரும் பொறுப்பு மனித குலத்தைச் சார்ந்திருக்கிறது. இதைக் கருத்திக் கொண்டு பயோ டைவர்ஸிடி எனப்படும் உயிரின வகை வேறுபாட்டை இயற்கை அமைத்தபடியே அப்படியே காக்க உறுதி பூணுவோம். –subham–