Post No 1937; Date: 17th June 2015
Compiled by S NAGARAJAN
Uploaded from London at 6-14 am
By ச.நாகராஜன்
திருப்புகழின் பலன்
“ஞானம் பெறலாம் நலம் பெறலாம் எந்நாளும்
வானம் அரசாள் வரம் பெறலாம் – மோனவீ
டேறலாம் யானைக் கிளையான் திருப்புகழைக்
கூறினார்க் காமேயிக் கூறு”
ஆனைமுகனுக்கு இளையவனின் திருப்புகழைக் கூறினால் ஞானம் பெறலாம், நலம் பெறலாம், வானம் அரசாள் வரம் பெறலாம், மோன வீடு பெறலாம் என்பது பெரியோர் கூற்று.
அரும் திருப்புகழை உலகிற்கு அளித்த அருணகிரிநாதரின் அருளுரைகள் அற்புதமானவை. வெவ்வேறு நுணுக்கங்களை விண்டு உரைப்பவை. மரண ப்ரமாதம் நமக்கில்லை என்ற துணிச்சலை பக்தர்களுக்கு அருள்பவை.
முருகனே சம்பந்தர்
அவரது முக்கிய உரைகளில் ஒன்று முருகனின் அவதாரமே ஞானசம்பந்தர் என்பது.
சமணர்களும் பௌத்தர்களும் நாடு கெடும் படி எல்லையற்ற துன்பங்களை சிவ, சக்தி, விநாயக, முருகனை வழிபடுவோருக்கு இழைத்து வந்த கால கட்டத்தில் அவற்றை ஒரு நொடியில் பொடிப் பொடியாக்கிய அவதாரமாக உதித்தவர் திருஞானசம்பந்தர்.
அருணகிரிநாதர், இதை.
புத்தர் அமணர்கள் மிகவே கெடவே
தெற்கு நரபதி திருநீறிடவே
புக்க அனல்வய மிக ஏடுயவே உமையாள் தன்
புத்ரனென இசை பகர் நூல் மறை நூல்
கற்ற தவமுனி பிரமாபுரம் வாழ்
பொற்ப கவுணியர் பெருமானுருவாய் வருவோனே
என்று அழகுறத் தெளிவு படுத்துகிறார். (நெய்த்த கரிகுழலறலோ எனத் தொடங்கும் பாடல்)
பிரமாபுரம் வாழ் ஞானசம்பந்தரின் உருவாய் வந்தவன் முருகனே’ அவனே புத்தர், சமணரை ஓட்டி தெற்கு தேச அரசன் திருநீறிடும்படி அனல் வாதத்தில் ஜெயித்தவன் என்பதை இப்படி அழகுறக் கூறும் போது சின்னஞ் சிறு வயதில் சம்பந்தர் எப்படி எண்ணாயிரம் சமணரை வெல்ல முடிந்தது என்ற ரகசியத்தை அறிய முடிகிறது! முருகன் அல்லவா புத்த சமணரை, வென்றது!
சம்பந்தர் எனும் முருகனன்றி வேறு தெய்வம் இல்லை
கந்தர் அந்தாதியில் 29ஆம் பாடலில்
திகழு மலங்கற் கழல்பணிவார் சொற்படி செய்யவோ
திகழு மலங்கற் பகவூர் செருத்தணி செப்பிவெண்பூ
திகழு மலங்கற் பருளுமென்னாவமண் சேனையுபா
திகழு மலங்கற் குரைத்தோனலதில்லை தெய்வங்களே
என்று பாடுகிறார்.
திருஞானசம்பந்தரின் ஒவ்வொரு பதிகத்தின் 11ஆம் பாட்டும் திருக்கடைக்காப்பு என அழைக்கப்படும். அப்பதிகத்தைப் பாடுவோர்க்கு என்ன பலன் கிடைக்கும் என்பது இறுதிப் பாடலில் மிகத் தெளிவாக, உறுதியாகச் சொல்லப்பட்டிருக்கும்.
“தேவாரத் திருப்பதிகங்களை ஓதி தான் அவதரித்த சீர்காழியையும், தான் காத்தளித்த அமராவதியையும், கல்யாண சுபுத்திரனாக தான் நிற்கும் திருத்தணியையும் துதித்து அணியும் திருநீறு மும்மலத்தைப் போக்கும்.
முழுப் பொருள் இதுவே என நம்பும் கற்புடமையையும் தரும் என்று நினைக்காத சமண கூட்டங்களை வருத்தம் தரும் கழுமரத்தில் ஏற்றி கலக்கம் அடைந்து அழியும் படி வாது புரிந்த சம்பந்தப் பெருமான் ஆகிய முருகனன்றி வேறு பிரத்யட்சமான தெய்வங்கள் கிடையாது” என்பதே பாடலின் பொருள்.
முருகனே சம்பந்தர் என்பதைத் தெளிவாக அருணகிரிநாதர் சுட்டிக் காட்டிய இடங்களில் இதுவும் ஒன்று.
ஆக தேவார திருப்பதிகங்களை ஓதும் படி அருணகிரிநாதர் அருளுரை பகர்கிறார். திருஞானசம்பந்தரே முருகன் என்பதால் அவரது பதிகங்கள் குமரக் கடவுளின் வாயிலிருந்து உதித்த நேர் சொற்கள் என்பதையும் தெளிவு படுத்துகிறார்.
திருப்புகழை ஊன்றிப் படிப்போர்க்குப் பல ரகசியங்கள் தெரியவரும். முக்கியமான ரகசியங்களுள் ஒன்று முருகனே சம்பந்தராக அவதரித்துப் பல அற்புதங்களை நிகழ்த்தினார் என்பதாகும்!
****************
You must be logged in to post a comment.