மெகஸ்தனீஸ், அர்ரியன், ப்ளினி பொய் சொல்வார்களா?

indaca

கட்டுரையை எழுதியவர் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1431; தேதி 23 நவம்பர், 2014.

இந்திய வரலாற்றை விரைவில் மாற்றி எழுத வேண்டும். இதற்காக பல் துறை வித்தகர் அடங்கிய இந்திய வரலாற்று சங்கம் அமைக்கவேண்டூம். வேத ஆராய்ச்சிக்கு என ஒரு சங்கம் அமைக்கவேண்டும். ஏனெனில் சிந்து சமவெளி நாகரீகம் பற்றி ஆராய்வோர் பக்கத்துக்கு பக்கம் வேதங்களை மேற்கோள் காட்டித்தான் எழுத முடிகிறது. அஸ்கோ பர்போலாவின் டிசைபரிங் தெ இண்டஸ் ஸ்க்ரிப்ட் Deciphering the Indus Script புத்தகத்தைப் பார்த்தால்—படித்தால் இது விளங்கும். வேதங்களோ வெகு வேகமாக அழிந்து வருகிறது. எல்லோரும் வேதத்தைப் புத்தகத்தை வைத்துப் படிக்கத் துவங்கி விட்டனர். மனப்படாமாக வைத்துக் கொள்ளும் சக்தி மிகவும் குறைந்து விட்டது. போன் நம்பரைக் கேட்டால்கூட அந்த போனை on ‘ஆன்’ செய்து அதைப் பார்த்துப்படித்தாதால்தான் தன்னுடைய போன் நம்பர் தெரியும்!!

உலகின் மிகப் பழைய (Rig Veda) ரிக் வேதப் புத்தகத்தில் 150 அரசர்களின் பெயர்கள் மற்றும் மிகவும் பழமையான – அருமையான ரஹசியங்கள் உள. நிற்க

கட்டுரைத் தலைப்பு அர்ரியன், மெகஸ்தனீஸ், பிளினி என்று சில புரியாத கிரேக்க, ரோமானிய பெயர்களைச் சொல்கிறதே ! இவர்கள் யார்?

யார் இந்த அர்ரியன்?
அர்ரியன் (கி.பி.92-175):- கிரேக்க நாட்டு வரலாற்று அறிஞர்—தத்துவ வித்தகர். துருக்கியில் பிறந்தார். ஏதென்ஸில் இறந்தார்.

யார் இந்த பிளினி?
பிளினி மூத்தவர், பிளினி இளையவர் என்று இருவர் உண்டு. இருவரும் சொந்தக்காரர்களே. ரோமானிய எழுத்தாளரும் தத்துவ ஞானியுமான மூத்த பிளினி கி.பி. 23- கி.பி.79 க்கு இடையே வாழ்ந்தார். இளைய பிளினி ரோம் நகரில் மாஜிஸ்டிரேட் பதவி வகித்தார் புத்தகங்கள் எழூதினார். வாழ்ந்த காலம் கி.பி. 61- கி.பி.112.

யார் இந்த மெகஸ்தனீஸ்?
இவர் மகத சாம்ராஜ்யத்தின் மாபெரும் மன்னன் சந்திர குப்த மௌர்யனியிடம் செல்யூகஸ் நிகோடரின் தூதராக இருந்தவர். அர்த்த சாஸ்திரம் என்னும் உலகின் முதல் பொருளாதார நூலை எழுதிய சாணக்கியன் காலத்தவர். இற்றைக்கு 2300 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர். இண்டிகா என்ற நூலை எழுதியவர். ஆனால் நமக்கு அந்த நூல் கிடைக்க வில்லை. மற்றவர்கள் இங்குமங்கும் காட்டிய மேற்கோள்கள் மூலம் சிற்சில பகுதிகள் கிடைத்தன. வாழ்ந்த காலம் கி.மு..350- கி.பி.290.
arrian
Picture of Arrian

இந்த மூவரும் அவரவர்தம் துறைகளில் கரை கண்டவர்கள். மேலும் இந்து ஆதரவு பாரதீய ஜனதா கட்சியையோ, இந்து விரோத திராவிடக் கட்சி களையோ, கடவுள் விரோத மார்கஸீய கட்சிகளையோ சாராதவர்கள். ஆகையால் இவர்களை யாரும் சந்தேகிக்க முடியாது. இவர்கள் மூவரும் தங்கள் நாடுகளுக்கும் மேலாக அல்லது சமமாக வைத்து இந்தியாவைப் பாராட்டுபவர்கள். கிருஷ்ணரையும் ஹெர்குலீஸையும் ஒன்று என்று கருதியவர்கள். மெகஸ்தனீஸ் என்பவரோ மதுரை மீனாட்சியின் புகழையும் பாடியவர்!

அதிசயத்திலும் அதிசயம்—உலக மஹா அதிசயம்— இந்தியாவுக்கு வந்த எந்த வெளி நாட்டு யாத்ரீகர்களும் வெள்ளைக்கரர்கள் எட்டுக் கட்டிய ஆரிய—திராவிட பொய்மைக் கதைகளை குறிப்பிடவில்லை. ஆரிய—திராவிட வாதம் பொய்மை வாதம் என்பது இதன் மூலம் வெள்ளிடை மலையென விளங்கும்.

இந்த மூவரும் இந்திய வரலாறு பற்றிக் கூறும் செய்தி மிகவும் வியப்பானது. இவர்கள் மூவரும் அவர்கள் காலத்துக்கு முந்திய சுமார் 150 அரசர்கள் வரை குறிப்பிடுவர். இது 2000 ஆண்டுகளுக்கு முன், இந்தியர்கள் என்ன நம்பிக்கை கொண்டிருந்தனர் என்று காட்டுகிறது. நாம் இப்பொழுது படிக்கும் வரலாற்றுப் புத்தகம் வின்ஸென் ட் ஸ்மித் என்பவர் எழுதியது. அக்காலத்தில் பைபிள் பிரசாரகர்கள் உலகம் என்பது கி.மு.4004 அக்டோபர் 23 ஆம் தேதி காலை ஒன்பது மணிக்குப் பிறந்தது என்று சொல்லியதை நம்பியவர். இந்தியாவுக்கு மன்னர்களும் இல்லை, வரலாறும் இல்லை எல்லாம் புத்தர் காலம் முதற்கொண்டே வந்தன — என்று கதை எழுதியவர்.

india_as_known_to_kautilya_and_megasthenes_idj539

ஆனால் அர்ரியன் என்பவர் மஹா பாரத கால மன்னர்கள் 6000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்ததாகக் கூறுகிறார். 153 மன்னர்கள் 6042 ஆண்டுகள் ஆண்டதாக அர்ரியனும், 154 மன்னர்கள் 6451 ஆண்டுகள் ஆண்டதாக பிளினியும் கூறுகின்றனர். இந்தக் கணக்கெல்லாம் அவர்கள் வாழ்ந்த காலத்துக்கு முந்தையது என்பதைக் கருத்திற்கொண்டால் இன்னும் 2000 ஆண்டுகளை நாம் சேர்க்கவேண்டும்.

கிருஷ்ணருக்கும் மௌர்ய சந்திர குப்தனுக்கும் இடையே 138 மன்னர்கள் ஆண்டதாக மெகஸ்தனீஸ் சொல்லுகிறார். ஒரு மன்னருக்கு 35 ஆண்டு ஆட்சிக்காலம் வைத்தாலும் 4830 ஆண்டுகள் ஆகும். மெகஸ்தனீஸோ நமக்கும் 2300 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர். கண்ணபிரான் ஆட்சி செய்தது ஏழாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஆகும்.

இவர்கள் கூறுவதில் கொஞ்சம் முரண்பாடுகள் இருந்தாலும் எவ்வளவு பழமையானது என்று 2000 ஆண்டுகளுக்கு முன்னரே நம் மக்கள் நம்பினர் என்பது புலனாகும்.

பதிற்றுப் பத்து என்னும் சங்க இலக்கிய நூல் இமயவரம்பன் நெடுஞ் சேரலாதன் 58 ஆண்டுகளும், சேரன் செங்குட்டுவன் 55 ஆண்டுகளும், ஆடுகோட்பாட்டு சேரலாதன் 35 ஆண்டுகளும் ஆண்டதாகச் செப்பும். மேலைநாட்டு ரத்தக்களரிகளையோ மொகலாய சாம்ராஜ்ய படுகொலைகளையோ பழைய இந்திய வரலாற்றில் காண முடியாது. ரகுவம்ச காவியத்தில் காளிதாசன் சொன்னது போல வயதான மன்னர்கள் தாங்களாகவே வலிய வந்து தன் மகனிடம் ஆட்சி ஒப்படைத்து வானப்ரஸ்தம் சென்றனர்.

pliny-the-elder-greek-philosopher
Pliny the Elder

கபிலரும் புறநானூற்றுப் பாடல் 201-ல் இருங்கோவேளின் 49 தலைமுறை பற்றிப் பேசுவார். கபிலரே 2000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர். அவருக்கு 1500 முதல் 1800 ஆண்டுகளுக்கு முன் இருங்கோவேளின் முதல் தலைமுறை துவாரகையிலிருந்து யாதவர்களை அழைத்துக் கொண்டு தமிழகம் வந்தது.

பாணினி தனது இலக்கண சூத்திரங்களில் பாரத்வாஜரின் 21-ஆவது தலைமுறை, கௌதம மஹரிஷியின் 53-ஆவது தலைமுறை என்றெல்லாம் எடுத்துக்காட்டுவார். பிருஹத் ஆரண்யக உபநிஷத்தில் நீண்ட குருமார்கள் பட்டியல் உள்ளது. எல்லாப் புராணங்களிலும் மன்னர் பரம்பரைகள் 130 முதல் 150 வரை உள்ளது.

ஆக பாணினி, கபிலர், அர்ரியன், பிளினி, மெகஸ்தனீஸ், உபநிஷத், புராணங்கள் ஆகிய அனைத்தையும் நம்பி நம் வரலாற்றைத் திருத்தி எழுதுவது நம் கடமை. முதலில் இப்போதுள்ள வரலாற்றுக்கு அருகிலேயே இவைகளின் மாற்றுக் கருத்துகள் என்று கொடுப்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்காது. நமது தலைமுறை மாணவர்கள் அவைகள மேலும் ஆராய்ந்து புது வரலாறு எழுதட்டும். இதன் மூலம் தமிழர்தம் பழமையும் பெருமையும் மேலும் ஓங்கும்.

Ancient-India-as-De

குதிரை போட்ட வெடிகுண்டு

குதிரை பற்றிய அமெரிக்க ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சி நேற்று எல்லா இந்தியப் பத்திரிக்கைகளிலும் வந்துள்ளது. ஆரிய – திராவிட வாதம், உளுத்துப்போன கட்டை என்பது இதிலிருந்து தெரிகிறது. இந்தச் செய்தி அந்த வாதத்தில் மீது வீசிய வெடி குண்டாகும்.

குதிரையும் காண்டாமிருகமும் 54 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் இந்திய துணைக்கணத்தில் தோன்றிய பிராணீகள் என்பதை மஹாராஷ்டிர மாநில நிலக்கரிச் சுரங்கத்தில் கிடைத்த படிம அச்சு எலும்புகளைக் கொண்டு அவர்கள் முடிவு செய்துள்ளனர். நாம்தான் உலகிற்கு பசுமாடுகளையும், குதிரைகளையும் அறிமுகப்படுத்தி மனித குலத்தை நாகரீகப் படுத்தினோம் என்பது இதன் மூலம் தெளிவாகிறது. இது நாள் வரை ஆரிய—திராவிடம் பற்றிப் பிதற்றி வந்தோர், சைபீரியாவில் இருந்து குதிரை வந்ததா? அரேபியாவில் இருந்து வந்ததா? ஸ்டெப்பி புல்வெளியில் இருந்து வந்ததா? என்று பி.எச்.டி பட்டத்துக்காக பொய்யுரைகளை எழுதி வந்தனர்.

சிந்து சமவெளி மக்களோவெனில், பசு மாடு, குதிரை ஆகியவற்றின் புனிதம் கருதி அவைகளை முத்திரையில் பொறிக்கவில்லை. காளை மாட்டை ஆயிரம் முத்திரைகளில் பொறித்த நம்மவர் ஒரு முத்திரையிலும் பசுவைப் பொறிக்கவில்லை. இது போலவே குதிரையும்.

india_as_known_to_kautilya_and_megasthenes_idj539

அயஸ் என்பது பற்றி நான் முன்னரே சொல்லிவிட்டேன். தமிழர்கள் பொன் என்பதை தங்கத்துக்கும், இரும்புக்கும், ஐம்பொன் சிலகளில் உள்ள ஐந்து உலோகங்களுக்கும் பயன்படுத்தியது போலவே ரிக்வேதத்தில் அயஸ் என்பதைப் பயன்படுத்தினர். இதைச் சரியாக மொழி பெயர்க்காமல் இரும்பு என்று எழுதி காலக் கணக்கீட்டைப் பின்னுக்கு இழுத்தனர். உண்மையில் இரும்பு கண்டு பிடித்ததும் நாமே —– சிவபெருமான் எரித்த முப்புரங்களில் இரும்பு, தங்கம், வெள்ளி என்ற 3 கோட்டைகள் உள்ளன!
–சுபம்–

contact swami_48@yahoo.com