By ச.நாகராஜன்
Post No.1363; Dated 22nd October 2014
This was written by brother S Nagarajan to Tamil Magazine Bhagya:swami
Wish you all a Very Happy Deepavali
“ஒருமை நிலையைக் கண்டு பிடிப்பது தான் விஞ்ஞானம்.முழுமையான ஒருமை நிலை கிட்டியதும் அது மேலே செல்லாமல் நின்று விடும். எந்த ஓர் ஆன்மாவிலிருந்து பிற ஆன்மாக்கள் வெளிப்படுவது போன்று மாயையால் தோன்றுகிறதோ அந்த ஆன்மாவைக் கண்டு பிடித்தவுடன் மத, விஞ்ஞானம் பூரணமாகி விடும்” – ஸ்வாமி விவேகானந்தர் விஞ்ஞானம் மெய்ஞானம் பற்றிப் பேசியது
ஹிந்து மதம் மூட நம்பிக்கைகளின் மூட்டை என்றும் இந்தியாவில் வாழ்பவர்கள் தரித்திரத்திலும் அநாகரிகத்திலும் மூழ்கியவர்கள் என்றும், இந்தியருக்கு எந்தவிதமான ஒரு பெரிய கலையும் தெரியாதென்றும் திட்டமிட்டு பிரசாரம் செய்யப்பட்ட பத்தொன்பதாம், இருபதாம் நூற்றாண்டுகளில் அதை உடைத்துச் சுக்கு நூறாக்கி எறிந்து ஹிந்து மதத்தின் மகோன்னதத்தை உலகெங்கும் அறியச் செய்து அதை அறிவியல் பூர்வமான மதம் என்பதை நிரூபித்தவர் ஸ்வாமி விவேகானந்தர்.
இயற்கையிலேயே விஞ்ஞான மனப்பான்மையை இளமையிலிருந்தே கொண்டிருந்த ஸ்வாமிஜி எந்த ஒரு விஷயத்தையும் அறிவியல் பூர்வமாகவே அணுகி வந்தார் – வாழ்நாள் இறுதி வரைக்கும். அதனால் தான் விஞ்ஞானிகளையும் மெய்ஞானிகளையும் ஒருசேர அவரால் கவர முடிந்தது.
நியூயார்க்கில் ஸ்வாமிஜி தங்கி இருந்த போது ஒரு அபூர்வமான சந்திப்பு நிகழ்ந்தது.மூன்று மேதைகள் சந்தித்த நிகழ்வாக இது அமைந்தது.1896ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பிரபல விஞ்ஞானியான நிகோலா டெஸ்லாவும் பிரெஞ்சு நடிகையான சாரா பெர்ன்ஹர்ட்டும் ஸ்வாமிஜியும் ஒரு நாள் சந்தித்தனர்.
சாரா பெர்ன்ஹர்ட் நியூயார்க்கில் ‘இஸீல்’ என்னும் நாடகத்தை நிகழ்த்தி வந்தார்.பிரெஞ்சு பாணியில் ஆக்கப்பட்டுள்ள புத்தரின் வாழ்க்கை வரலாறு அது. இஸீல் என்ற நாட்டியப் பெண்மணி புத்தரை ஒரு மரத்தடியில் மயக்க விரும்புகிறாள். புத்தர் அவருக்கு வாழ்க்கையின் நிலையற்ற தன்மையை விளக்கி உபதேசிக்கிறார். அந்த நேரமெல்லாம் அவள் புத்தரின் மடி மீதே உட்கார்ந்திருக்கிறாள். இறுதியில் அஞ்ஞானம் அகன்று தன் முயற்சியில் தோற்று பெரும் தெளிவை அவள் பெறுகிறாள்.
இந்த நாடகத்தைப் பார்க்க ஸ்வாமிஜி சென்றிருந்தார். இதை எப்படியோ அறிந்து கொண்ட நடிகை பெர்ன்ஹர்ட் பெரிதும் மனம் மகிழ்ந்து எப்படியாவது ஸ்வாமிஜியிடம் பேச விரும்பினார். விஞ்ஞானியான டெஸ்லாவும் பேச்சின் போது உடனிருந்தார்.
பெர்ன்ஹர்ட் மத விஷயங்களை ஆழ்ந்து கற்றவர். டெஸ்லாவும் அதே போல பல விஷயங்களை நுட்பமாக ஆராய்ந்தவர்.
ஸ்வாமிஜி அவர்களுக்கு வேதாந்தம் கூறும் ஆகாசம், பிராணன், கல்பங்கள் போன்றவற்றை விளக்கினார். நவீன விஞ்ஞானம் ஏற்றுக் கொள்ளக் கூடிய கொள்கைகளாக இவற்றை ஸ்வாமிஜி விளக்க ஆரம்பித்த போது எல்லையற்ற வியப்புடன் அதை அனைவரும் கேட்டு பிரமித்தனர்.
ஆகாசம், பிராணன் ஆகிய இரண்டும் மஹத், பிரபஞ்ச மனம் பிரம்மா அல்லது ஈஸ்வரனிடமிருந்தே வெளிப்படுகின்றன என்றார் ஸ்வாமிஜி. சக்தி, ஜடம் ஆகிய இரண்டையும் இயங்கா ஆற்றலாக மாற்றி விட முடியும் என்பதைக் கணித முறையில் காட்ட இயலும் என்றார் டெஸ்லா.
ஸ்வாமிஜியுடனான சந்திப்பும் அவரது உபதேச உரையும் டெஸ்லாவை வெகுவாகக் கவர்ந்தது. ஸ்வாமிஜியின் கருத்துக்களை அப்படியே ஏற்றுக் கொண்ட டெஸ்லா தனது இறுதி ஆண்டுகளில் அதை அப்படியே கட்டுரைகளில் எழுதினார்.
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மேரி லூயி என்பவர் ஸ்வாமிஜியின் சிஷ்யை. அவர் இந்த மூன்று மேதைகளின் அபூர்வ சந்திப்பைப் பற்றி குறிப்பிடுகையில்,” நூற்றுக்கணக்கான அல்லது ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு ஒரு முறை விண்வெளியில் அபூர்வமாகச் சில கிரகங்களின் சேர்க்கை நிகழும். அது போல இந்த மூன்று மேதைகளின் இந்தச் சந்திப்பு நிகழ்ந்தது!” என்று கூறி, “இதனால் அவர்களின் வாழ்க்கையில் என்ன தாக்கம் ஏற்பட்டது என்பதை ஊகிக்க மட்டுமே முடியும்” என்கிறார்.
இது தவிர மின் சாதனத்தைக் கண்டுபிடித்தவரான பேராசிரியர் எலிஷா க்ரேயும் அவரது மனைவியும் ஸ்வாமிஜியைத் தங்கள் வீட்டில் விருந்துண்ண அழைத்தனர். சிகாகோவில் நிகழ்ந்த மின்சாரம் பற்றிய மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வந்த விஞ்ஞானிகள் ஸ்வாமிஜியைச் சந்தித்தனர். மின்சாரம் பற்றிய அவரது அபாரமான அறிவைக் கண்டு அவர்கள் பிரமித்தனர்.
விஞ்ஞானத்திற்கு பெரும் ஏற்றத்தைத் தந்ததன் மூலம் அவர்களை மெய்ஞானத்திற்குத் திருப்பிய மாபெரும் துறவியாகத் திகழ்ந்தார் ஸ்வாமி விவேகானந்தர்!
அறிவியல் அறிஞர் வாழ்வில் .. .
ஜப்பான் மீது அமெரிக்கா அணுகுண்டை போட்டதில் ஏராளமான ரகசிய விஷயங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று ஜனாதிபதி ட்ரூமனைப் பற்றியது. அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ரூஸ்வெல்ட் 1945ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12ஆம் தேதியன்று திடீரென மரணம் அடைந்தார். அதே தினத்தில் ட்ரூமன் ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டார். ரூஸ்வெல்ட்டுக்கு ட்ரூமனைக் கண்டாலே பிடிக்காது. அவரிடம் எந்த விதமான அந்தரங்க விஷயத்தையும் அவர் பகிர்ந்து கொண்டதில்லை; ரூஸ்வெல்ல்டைப் பற்றி ட்ரூமன் கூறுகையில்,, “ நான் அறிந்ததிலேயே மிகவும் இறுக்கமான மனிதர் அவர்” என்று வெளிப்படையாகக் கூறியுள்ளார்.அணுகுண்டைத் தயாரிக்கும் மன்ஹாட்டன் ப்ராஜெக்டைப் பற்றி ட்ரூமனுக்கு ஒன்றுமே தெரியாது. ஆனால் ஏராளமான பணம் ஒரு ரகசிய திட்டத்திற்காகச் செலவழிக்கப்படுகிற்து என்பதை மட்டும் அவர் அறிவார்.
அணு விஞ்ஞானியான லியோ ஜிலார்டை (Leo Szilard) 1945ஆம் ஆண்டு மே மாதம் 8 ஆம் தேதி ரூஸ்வெல்ட் சந்திக்கவிருந்தார். ஜப்ப்பானியருக்கு ஒரு அதி பயங்கர ஆயுதம் பற்றிய நேரடி அனுபவத்தைத் தர வேண்டுமென ஜிலார்ட் விரும்பினார். பிரபல விஞ்ஞானியான ஐன்ஸ்டீன் மார்ச் 25ஆம் தேதியிட்டு ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தில் அணு விஞ்ஞானிகளுக்கும் காபினட் உறுப்பினர்களுக்கும் போதுமான அளவு தொடர்பு இல்லை என்பதைக் குறிப்பிட்டு விட்டு ஜனாதிபதி, டாக்டர் ஜிலார்ட் சொல்வதைக் கேட்பார் என நம்புவதாக்க் குறிப்பிட்டிருந்தார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக ரூஸ்வெல்ட் ஏப்ரல் 12ஆம் தேதி மறைந்து விடவே விஞ்ஞானிகளுக்கும் ரூஸ்வெல்ட்டுக்கும் இடையே நடக்க இருந்த சந்திப்பு நின்று போயிற்று.
இரண்டாவது உலக மகாயுத்தம் முடிவுக்கு வந்து கொண்டிருந்த தருணத்தில் ஜனாதிபதி ட்ரூமன் உல்லாச கடல் பயணம் ஒன்றை மேற்கொண்டு ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார்.அதன் பின்னர் உல்லாச பயணத்தின் தொடர்ச்சியாக பெர்லின், ஜெர்மனிக்கு விஜயம் செய்தார்.
விஞ்ஞானிகளை அவர் சந்திக்க விடாமல் செய்வதற்காகவே அவர் கடல் பயணம் மேற்கொள்ளச் செய்யப்பட்டார் என்ற ரகசியம் பின்னர் வெளியானது! ஜூலை 6ஆம் தேதி கிளம்பிய அவர் ஆகஸ்ட் 7ஆம் தேதி தான் அமெரிக்கா திரும்பினார். அதாவது அதற்கு முதல் நாள் தான் அமெரிக்கா ஹிரோஷிமா மீது அணுகுண்டை வீசி இருந்தது!
67 விஞ்ஞானிகள் அணுகுண்டைப் பயன்படுத்த வேண்டாம்; அது பேரழிவை ஏற்படுத்தும் என்று எழுதி இருந்த கடிதம் ட்ரூமனுக்கு அனுப்பப்பட்டது. ஆனால் அதை அவர் பார்க்க விடாமல் செய்தனர் லீஹி மற்றும் க்ரோவ்ஸ் (Admiral Leahy, Groves) ஆகியோர். 1945, ஜூலை 8ஆம் தேதி அட்மிரல் லீஹி, செக்ரட்டரி ஆஃப் ஸ்டேட்டாக இருந்த ஜிம்மி பைர்ன்ஸ் ஆகியோர் ட்ரூமனுடன் ஜெர்மனிக்குச் செல்ல அகஸ்டா என்ற கப்பலில் ஏறினர். விந்தை என்னவெனில் இது மிகவும் மெதுவாகச் செல்லும் கப்பல்.
1945ஆம் ஆண்டு ஜூலை 17ஆம் தேதி நியூ மெக்ஸிகோவில் அலமொகோர்டோ (Alamogordo) என்னும் இடத்தில் அணுகுண்டு இரண்டாம் முறையாகச் சோதனை செய்து பார்க்கப்பட்டது.
ஆக, லீஹி, பைர்ன்ஸ், க்ரோவ்ஸ் ஆகிய மூவர் எண்ணப்படியே ஜனாதிபதி ட்ரூமனால் விஞ்ஞானிகளைச் சந்திக்க முடியவில்லை; அணுகுண்டும் போடப்பட்டது.
Contact swami_48@yahoo.com
***************
You must be logged in to post a comment.