

WRITTEN BY S NAGARAJAN
Post No. 9162
Date uploaded in London – –19 January 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
VOICE RECORDING IS IN GNANAMAYAM PAGE; FACEBOOK, YOU TUBE
லண்டனிலிருந்து ஒவ்வொரு திங்கள்கிழமையன்றும் மாலை இந்திய நேரப்படி 6.30 மணிக்கு ஒளிபரப்பாகும் ஞானமயம் நிகழ்ச்சியில் 18-1-2021 அன்று ஒளிபரப்பாகிய உரை!
அறிவியல் வியக்கும் ஸ்ரீசக்ர ரகசியம்
ச.நாகராஜன்

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே சந்தானம் நாகராஜன் வணக்கம். அறிவியல் வியக்கும் ஸ்ரீசக்ர ரகசியம் பற்றி இன்று காண்போம்.
மந்திரம், யந்திரம், தந்திரம் மூலமாக எதையும் அடைய முடியும் என்று ஹிந்து மத சாஸ்திரங்கள் வலியுறுத்துகின்றன; உரிய வழிகளைக் காட்டுகின்றன!
யந்திரம் என்பது பல்வேறு வடிவங்களை அமைத்து அதில் மந்திரங்களைப் பிரயோகித்து ஒரு சக்தியை உருவாக்கி விரும்புவதை அடைய வழி வகுப்பதாகும்.
உலகில் வாழும் மனிதர் அனைவரும் நலம் பெற வேண்டும் என்ற நோக்குடன் அருளாளர்கள் ஆலயத்தில் மூல விக்கிரகத்தின் – பீடத்திலோ அல்லது ஆலயத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதியிலோ யந்திர பிரதிஷ்டை செய்து வந்தனர். திருப்பதியில் ஜன ஆகர்ஷண, தன ஆகர்ஷண யந்திரங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பதாலேயே அங்கு மக்கள் திரள் திரளாகக் குவிகிறார்கள், ஏராளமான செல்வமும் வந்து குவிகிறது என்று பெரியோர் கூறுவர். காஞ்சி காமாக்ஷி அம்மன் கோவில் யந்திரமும் பிரசித்தி பெற்றது.
யந்திரங்களுள் சிறந்தது அளப்பரிய ஆற்றல் கொண்டது ஸ்ரீயந்த்ரம்
இதை ஸ்ரீசக்ரம் என்று சொல்வது வழக்கம். இது இருக்கும் இடமே மங்களகரமானது.
இதன் மூலமே மஹா சக்தியை மக்கள் பெரிதும் போற்றுகின்றனர். அண்ட சராசரத்தின் அடையாளச் சின்னமே ஸ்ரீசக்ரமாகும். ஸ்ரீசக்ரம் உள்ளிட்ட பல்வேறு யந்திரங்கள் பிரக்ஞையின் பல்வேறு நிலைகளை எட்ட உதவுகின்றன. ஒரு சுவாரசியமான சம்பவத்தைப் பார்ப்போம்.
மந்திரத்திற்கு மஹிமை உண்டா என்று ஒலி அலைகளை அறிவியல் பூர்வமாக ஆராய, ஸ்விட்ஸர்லாந்தைச் சேர்ந்த விஞ்ஞானி ஹான்ஸ் ஜென்னி (Hans Jenny) (1904-1972) முனைந்தார்.
பொறுமையாக ஒவ்வொரு ஒலி அலையையும் அவர் பத்து ஆண்டுக் காலம் பரிசோதித்தார். க்ளிசரின், பாதரஸம், ஜெல் பவுடர், இரும்பு போன்றவற்றில் ஒலி அலைகள் என்ன விளைவை ஏற்படுத்துகின்றன என்பதை அவர் உன்னிப்பாக ஆராய்ந்தார். குறைவான அதிர்வுள்ள ஒலி அலைகள் (Low Frequency Sound Waves) சாதாரணமான ஜியாமெட்ரி வரைபடங்களை உருவாக்குவது அவருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது! ஒலி அதிர்வு அதிகமாக்கப்பட்டபோது இந்த சாதாரண படங்கள் சிக்கலான படங்களாக மாற ஆரம்பித்தன!

“ஓ” என்ற ஒலி அலை, ஒரு வட்டத்தை உருவாக்கியது. உடனே “ஓம்” என்ற ஒலி அலையை அவர் உருவாக்கினார். அதிலே ஸ்ரீசக்ரம் உருவானது!
ஹான்ஸ் ஜென்னி ஆச்சரியப்பட்டுப் போனார். பாரதத்தில் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக ஸ்ரீசக்ரம் வழிபடப்பட்டு வருகிறது. ஓம் உச்சரிக்கப்பட்டு வருகிறது!
ஜென்னி தன் ஆய்வுகளின் மூலம் ஒலி அலைகள் உருவங்களை உருவாக்குகின்றன என்ற முடிவுக்கு வந்தார். அத்தோடு மனித உடலில் செல்கள், திசுக்கள், உறுப்புகள் அதற்கு உரித்தான ஒலியைக் கொண்டிருக்கிறது என்ற முடிவுக்கும் அவர் வந்தார். “ஓம்” என்று உச்சரிப்பதும் அதைப் போற்றி வழிபடுவதும், ஸ்ரீசக்ர வழிபாடும் உடலுக்கும் மனதிற்கும் எல்லையற்ற சக்திகளையும் இதர நலன்களையும் நல்குகிறது என்று அவரது ஆய்வு சிறப்பான முடிவைத் தெரிவிக்கிறது!
ஸ்ரீசக்ரத்தின் பெருமையைக் கேட்ட உலகெங்குமுள்ள விஞ்ஞானிகள் இதை ஆராய ஆரம்பித்து விட்டனர். மாஸ்கோ பல்கலைக் கழக இயற்பியல் விஞ்ஞானியான அலெக்ஸி குலைச்சேவ் (Alexie Kulaichev) மற்றும் ரஷிய நாட்டு விஞ்ஞான கழகத்தைச் சேர்ந்த கோவலான் சென்கோ என்ற இருவரும் ஸ்ரீசக்ரத்தை ஆராயப் புகுந்தனர். அவர்களது ஆராய்ச்சியின் முடிவு அவர்களுக்கு எல்லையற்ற பிரமிப்பையும் வியப்பையும் தந்தது,
கம்ப்யூட்டராலேயே ஸ்ரீசக்ர கோணங்களையும் அமைப்பையும் ஆராய முடியவில்லை என்பதை அவர்கள் ஒப்புக் கொண்டனர்.
“இன்றைய கணினி தொழில்நுட்பத்தால் ஸ்ரீசக்ரத்தை ஆராய முடியவில்லை என்றும் அதை ஆராய்வதற்குச் சிக்கலான அல்ஜீப்ரா சமன்பாடுகள் உள்ளன; அது தற்போதைய கணினியின் செயல்திறனுக்கு அப்பாற்பட்டதாக உள்ளது” (Their analysis involved a complex system of algebraic equations and a complicated computations which are beyond the capability of the present generation of computers) என்று அவர்கள் ஆய்வறிக்கை கூறுகிறது.
இந்த சக்கரத்தை எப்படி முன்னோர்கள் அமைத்தனர், ஒன்பது முக்கோணங்கள் ஒன்றை ஒன்று வெட்டும் போது அதன் பல்வேறு வெட்டுப் புள்ளிகள் ஒரே இடத்தில் சேர்வதை எப்படி அவர்களால் அறிய முடிந்தது என்று அவர்கள் ஆச்சரியப்பட்டனர். இன்னும் விளங்கிக் கொள்ள முடியாத அநேக அறிவியல் விளக்கங்களும் இந்த யந்திரத்தில் பொதிந்துள்ளன என்கின்றனர் அந்த விஞ்ஞானிகள்!
“How did people come to know that nine triangles arranged in such a way intersect each other, their numerous crossing points coinciding!”
ஸ்ரீசக்ரத்தின் மஹிமையைப் பல்வேறு விதமாகவும் அவர்கள் ஆராய்ந்தனர். ஸ்ரீசக்ரம் உளவியல் சம்பந்தமான அனைத்து மனநோய்களையும் போக்க வல்லது என்று அவர்கள் அதிகாரபூர்வமாகக் கூறுகின்றனர், மிக மிக சரியான அளவுகளுடன் அதை எப்படி வரைவது என்று தெரிந்து கொண்டு அந்த முறையில் அமைக்கப்படும் ஸ்ரீசக்ரம் மட்டுமே இந்த விதமான சக்தியைப் பெறுகிறது. அலெக்ஸி குலைச்சேவ் தனது ஆராய்ச்சியில் ஸ்ரீசக்ரம் போன்ற ஒரு போலி யந்திரத்தைச் செய்து அதை ஆய்வு செய்த போது அது எந்த நோயையும் குணப்படுத்தவில்லை. ஆக உரிய அளவுகளுடன் உரிய முறையில் உள்ள ஸ்ரீசக்ரமே சக்தி வாய்ந்தது என்பதைத் தனது ஆய்வின் மூலமாக உறுதிப் படுத்தினார் அவர். அவரது ஆய்வுரையை அங்கீகரிக்க அவரது திட்டத் தலைவருக்கு அது சமர்ப்பிக்கப்பட்ட போது அவரும் இப்படிப்பட்ட பலன்களை உறுதி செய்து கொண்ட பின்னரேயே அந்த ஆய்வை அங்கீகரித்தார் என்பதும் குறிப்பிடத் தகுந்தது.
ஸ்ரீசக்ரத்தில் ஏராளமான ரகசியங்கள் புதைந்துள்ளன. நடுவில் பிந்துவும் (புள்ளி), சுற்றி ஒன்பது முக்கோணங்களும் உள்ள அமைப்பு என்று ஒரு வரியில் சுலபமாக ஸ்ரீசக்ரத்தை விவரித்துச் சொல்லி விட்டாலும் எல்லையற்ற பிரபஞ்சத்தின் மர்மத்தை அது உள்ளடக்கி இருக்கிறது என்றே அதன் ஆற்றலை உணர்ந்தோர் கூறுவர்.
ஒன்பது முக்கோணங்களில் மேல் நோக்கிய நான்கும் சிவனையும் கீழ் நோக்கிய ஐந்து முக்கோணங்கள் சக்தியையும் குறிக்கின்றன,
மஹா திரிபுரசுந்தரியின் வழிபாடாக ஸ்ரீசக்ர வழிபாடு அமைகிறது. எல்லையற்ற சக்தி, ஆரோக்கியம், செல்வச் செழிப்பு, முக்திப் பேறு என இப்படி இக பர நலன்கள் அனைத்தையும் தரும் அற்புத யந்திரம் ஸ்ரீசக்ரமாகும்!

சௌந்தர்ய லஹரிக்கு விரிவுரை எழுதிய லக்ஷ்மிதரர் பதினொன்றாம் சுலோக விரிவுரையில் ஸ்ரீசக்ரத்தை மதம், இனம், வர்ணம், பால், வயது, அந்தஸ்து, கல்வி பாகுபாடின்றி அனைவரும் வழிபடலாம் என்று உரைக்கிறார்.
அகஸ்திய மாமுனிவர் அம்பாளின் அணுக்க பக்தையான தனது மனைவி லோபாமுத்ராவிடம் திரிபுரசுந்தரியின் அருளைப் பெற்றுத் தருமாறு வேண்டுகிறார். அப்படிப்பட்ட லோபாமுத்ராவை “லோபாமுத்ராவால் அர்ச்சிக்கப்படுபவள்” என்று லலிதா சஹஸ்ரநாமம் 648வது நாமத்தில் கூறி அவரின் சிறப்பை வெளிப்படுத்துகிறது!
பவிஷ்யோத்தர புராணத்தில் அவர், ஒவ்வொரு வீட்டிலும், ஒவ்வொரு கிராமத்திலும், ஒவ்வொரு காட்டிலும் சக்தி வழிபாட்டில் ஆர்வமுள்ளோர் இதை வழிபடலாம் என ஆணித்தரமாகக் கூறுவதால் அனைவருக்கும் ஏற்ற வழிபாடு ஸ்ரீசக்ர வழிபாடு என்பது பெறப்படுகிறது.
திருவானைக்காவலில் உள்ள அகிலாண்டேஸ்வரி அம்மன் ஐந்தடி உயரம் உடையவள். அங்கே கோவிலில் அம்மனுக்கு அர்ச்சனை செய்யப் போன அர்ச்சகர்கள் வீடு திரும்பாமல் அன்றே இறந்து போவது வழக்கமாக இருந்தது. இதை எண்ணி அனைவரும் சொல்ல மாளாத துக்கம் அடைந்தனர். இதைக் கேள்விப்பட்ட ஆதி சங்கரர் அங்கே வந்து நான்கு அங்குலம் உள்ள பூப்ரஸ்தார சக்கரத்தைத் தங்கத்தில் செய்து அதில் வைரம் பதித்து அம்மனின் இரு காதுகளிலும் அணிவித்தார். அம்மனின் கடும் உக்கிரத்தைத் தணிவித்து அம்மனை அர்ச்சிக்க அனுமதியும் தந்தார். அம்மன் அர்ச்சனையை ஏற்றதுடன் அனைவருக்கும் எல்லையற்ற மகிழ்ச்சியையும் இதர சௌபாக்கியங்களையும் அருள ஆரம்பித்தாள்.
ஸ்ரீசக்ர ஆராய்ச்சியில் தன் வாழ்நாளை ஈடுபடுத்திய பலருள்ளும் குறிப்பிடத் தகுந்தவர் ஸ்வாமி ப்ரணவானந்தர். (14-1-1896 அன்று பிறந்த இவர் தநனது 93ஆம் வயதில் 17-5-1989 அன்று இறைவனுடன் கலந்தார். 1976ஆம் குடியரசு தினத்தன்று பத்மஸ்ரீ பட்டம் பெற்றவர் அவர்.
பிரபல ஆங்கில எழுத்தாளரான பால் ப்ரண்டன் அவருடனான தனது அனுபவங்களை ‘ஹெர்மிட் இன் தி ஹிமாலயாஸ்’ என்ற தனது நூலில் எழுதியுள்ளார்.
சுமார் 180க்கும் மேலான ஸ்ரீசக்ர பிரதிஷ்டைகளை நேரில் கண்டு ப்ரணவானந்தர் அவற்றை ஆராய்ந்தார். ஸ்ரீசக்ரத்தின் அனைத்து அம்சங்களையும் நலங்களையும் விளக்கும் அவர் ஸ்ரீசக்ர வழிபாடு ஒவ்வொருவருக்கும் இன்றியமையாதது என்கிறார்.
சென்னையில் திருவேற்காட்டிலும் மாங்காட்டிலும் உள்ள ஸ்ரீசக்ரம் மிக்க சக்தி வாய்ந்தவை. மாங்காட்டில் உள்ள கோயில் ஒன்றே பாரதம் முழுவதிலும் ஸ்ரீசக்ரத்திற்காக அமைந்துள்ள ஒரே கோவில் ஆகும். தஞ்சாவூர் அரண்மனையில் மரகதத்தால் ஆன ஸ்ரீசக்ரம் உள்ளது.சென்னையில், வேளச்சேரியில் தண்டீஸ்வரர் கோவிலில் அப்பைய தீக்ஷிதர் ஸ்தாபித்த பூப்ரஸ்தார யந்திரம் மிக்க சக்தி வாய்ந்தது.
தமிழகத்தில் சிதம்பரத்தில் கோகிலாம்பா கோவில், காஞ்சிபுரம் காமாக்ஷி அம்மன் கோவில் உள்ளிட்ட சுமார் 14 இடங்களில் சக்தி வாய்ந்த ஸ்ரீசக்ரங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.
யந்திரங்களிலேயே உன்னதமானது என்பதால் இதை ‘சர்வச் ரேஷ்ட யந்திரம் என்பர்.
ஸ்ரீசக்ரத்தை சுவரில் தொங்க விடக்கூடாது. கிடைமட்டமாக வைத்து வழிபட வேண்டும். சரியாக் இதை வழிபடும் முறையை குரு மூலமாகக் கற்று வழிபடுதலே சாலச் சிறந்தது. இதைத் தூய மனதுடன் வழிபடுவோர் செல்வச் செழிப்பு, ஆரோக்கியம், சகல துறைகளிலும் முன்னேற்றம் பெறுவர். தீய நோக்குடன் இதை வழிபட்டால் இது செயலிழப்பதோடு வழிபடுவோருக்குத் தீங்கையே விளைவிக்கும்.
காஞ்சி காமகோடி பீடம் ஸ்ரீ மஹா பெரியவாள் ஸ்ரீசக்ரத்தைப் பற்றி விரிவாக விளக்கியுள்ளார். அதில் அவர் கூறுகிறார்:-
“கோடுகள், வட்டங்கள், சதுரங்கள், அந்தக் கோடுகளாலான கோணங்கள் இவை எல்லாம் ஒரு சக்ர ரூபத்தில் அமைந்து, மத்ய பிந்துவோடு [நடுப் புள்ளியோடு] இருப்பதே யந்த்ரம் என்பது. இந்த மாதரி டிஸைனுக்கே ஒவ்வொரு தேவதையின் சக்தியை க்ரஹித்துக் கொடுக்கும் சக்தி – அபரிமிதமான சக்தி – இருக்கிறது. Divine Design! கெட்ட சக்திகளைத் துரத்தியடிக்கவும், திவ்ய சக்திகளை ஆகர்ஷித்துத் தருவதற்கும் சக்தி படைத்தவையாக அந்த டிஸைன்கள் இருக்கின்றன.” (தெய்வத்தின் குரல் ஆறாம் தொகுதியில் இந்த விளக்கத்தைப் பார்க்கலாம்). அவர் தரும் எச்சரிக்கையும் ஒன்று உண்டு! :- “இன்னொரு அம்சம், ஜாக்ரதை தேவைப்படும் அம்சம், என்னவென்றால், விக்ரஹம் வைத்துப் பூஜை செய்வதை விடவும் யந்திரத்திற்குச் செய்யும்போது சாஸ்திரோக்தமாகவும், மடி ஆசாரங்களோடும் செய்ய வேண்டும்.” என்கிறார் அவர். அனைத்து அதிர்ஷ்டங்களையும் நலன்களையும் ஒருங்கே அள்ளித் தரும் ஸ்ரீசக்ரத்தை அறிவியல் வியக்கும் அதிர்ஷ்ட சக்கரம் என்றே அழைக்கலாம். ஸ்ரீசக்ரத்தை உரிய முறையில் வழிபடுவோமாக; இகபர நலன்களைப் பெறுவோமாக; உயர்வோமாக! நன்றி வணக்கம்!
***
குறிப்பு:-
ஸ்வாமி ப்ரணவானந்தரின் புத்தகம் கிடைக்குமிடம்:-
A Treatise on Sri Chakra
By Swami Pravananda F.R.G.S (Of Holy Kailas Manasarovar)
240 Pages
Publishers : Sri Swami Pranavananda Trust
Yenuulamahal, East Godavari Dt, Andhra Pradesh Pincode: 533233

TAGS- அறிவியல் , ஸ்ரீசக்ர ரகசியம், ப்ரணவானந்த
You must be logged in to post a comment.