துவாரகா திருத்தலம்; ஆலயம் அறிவோம் (Post No.10,285)

WRITTEN BY BRHANNAYAKI SATHYANARAYANAN

Post No. 10,285

Date uploaded in London – –   1 NOVEMBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

லண்டனிலிருந்து ஞாயிறுதோறும் இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் தமிழ்முழக்கம் நிகழ்ச்சியில் 31-10-2021 அன்று ஒளிபரப்பான உரை!

த்வாரகா!

அதரம் மதுரம் வதனம் மதுரம் நயனம் மதுரம் ஹஸிதம் மதுரம்

ஹ்ருதயம் மதுரம் கமனம் மதுரம் மதுராதிபதேரகிலம் மதுரம்

ஆலயம் அறிவோம்! வழங்குவது பிரஹன்நாயகி சத்யநாராயணன்.  

   ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம் பெறுவது ஏழு மோக்ஷபுரிகளில் ஒன்றாக அமைவதும்  108 வைணவ திவ்ய க்ஷேத்திரங்களுள் ஒன்றாகத் திகழ்வதுமான த்வாரகா திருத்தலம் ஆகும். “அயோத்யா மதுரா மாயா காசி காஞ்சி அவந்திகா புரித்வாரகாவதீ சைவ சப்தைதே மோக்ஷதாயிகா” என்பது அனைவரும் அறிந்த ஏழு மோக்ஷபுரிகளைப் பற்றிய ஸ்லோகமாகும்.

குஜராத் மாநிலத்தில் உள்ள இத்தலம் பகவான் ஸ்ரீ கிருஷ்ணருடன் தொடர்பு கொண்ட தலமாகும்.

மூலவர் திரு நாமம் : த்வாரகாதீசன், கல்யாண நாராயணன்.

கருப்பு நிறத்தில் மேற்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் இவர் காட்சி அளிக்கிறார்.

தாயார் திரு நாமம் : கல்யாண நாச்சியார், ருக்மிணி                                        தீர்த்தம் :கோமதி நதி அல்லது சமுத்ர சங்கமம் அல்லது பிரபாச தீர்த்தம்                           விமானம் : ஹேமகூட விமானம்          

இத்தலத்தைப் பற்றிய ஏராளமான புராண மற்றும் இலக்கிய வரலாறுகள் உண்டு. ஒரு சமயம் ஜராசந்தன் மக்களைப் பெரிதளவும் கொடுமைப் படுத்த, உடனே ஸ்ரீ கிருஷ்ணர் சமுத்திர ராஜனிடம் இந்த இடத்தைக் கேட்டுப் பெற்றார்; விஸ்வகர்மாவை வைத்து இந்த நகரை நிர்மாணித்தார். உலகமே வியக்கும் வண்ணம் ஸ்வர்க்கத்திற்கு நிகராக அகன்ற சாலைகளுடனும் பல தீர்த்தங்களுடனும் இந்த நகர் நிர்மாணிக்கப்பட்டது.  அவரது கொள்ளுப் பேரனான வஜ்ரநாபன் ஐந்து அடுக்கு நிலைகொண்ட த்வாரகாதீசர் ஆலயத்தை நிர்மாணித்தார்.

இப்போதுள்ள த்வாரகா பொதுவாக இரு பகுதிகளாக அழைக்கப்படுகிறது. த்வாரகா புகைவண்டி நிலையத்திற்கு அருகில் உள்ள பகுதி கோமுகி த்வாரகா ஆகும். இன்னொரு பகுதி பேட் த்வாரகா ஆகும்.

ஸ்வர்க்கத்திற்கு செல்லும் வாயிலாக இது அமைவதால் இது த்வாரகா என்ற பெயரைப் பெற்றது. இங்கிருந்து தான் யாதவர்கள் அனைவரும் மோக்ஷம் அடைந்தனர்.

இங்குள்ள கோவிலில் அனைத்து பக்தர்களும்  ஸ்வர்க வாயிலின் வழியே உள்ளே சென்று மோக்ஷ வாயில் வழியே வெளியே வருவது வழக்கம்.

கோவிலிலிருந்து அருகே உள்ள கோமதி நதி கடலில் கலக்கும் சங்கமத்தை அடையலாம். இந்த சங்கமத்தில் நீராடி விட்டுப் பின்னர் கோவில் தரிசனத்தை மேற்கொள்வது ஐதீகம். கோவிலிலிருந்து படகு  மூலம் சென்றால் பேட் துவாரகையை அடையலாம். இங்கு கிருஷ்ணரின் அஷ்ட பட்டமகிஷிகளுக்கான கோவில்கள் உள்ளன. பேட் த்வாரகா என்ற சிறு தீவில் தான் கிருஷ்ணர் வாழ்ந்து வந்தார். இங்கு தான் அவரது அரண்மனை, அந்தப்புரம் ஆகியவை அமைந்திருந்தன. பால்ய கால நண்பரான குசேலர் இங்கு தான் வாழ்ந்து வந்தார். இங்கு தான் கிருஷ்ணர் சங்காசுரனை வதம் செய்தார்.

த்வாரகா ஆலயத்தில் லக்ஷ்மிநாராயணர், ருக்மிணி, திரிவிக்ரமன், தேவகி, ஜாம்பவதி ஆகியோரின் சந்நிதிகள் உள்ளன.

இங்குள்ள சங்கமத்தில் ரங்கன் காட், நாராயண் காட், காவூகாட், வசுதேவ காட், பாண்டவன் காட், பிரம்ம காட், பார்வதி காட், கங்கா காட், சுரதன் காட், கர்க்காரி காட், அனுமன் காட், நாராயண பலி காட் என பன்னிரெண்டு துறைகள் உள்ளன. இங்குள்ள ரிஷபா குண்டத்திலும் பக்தர்கள் நீராடுவது மரபாகும். இத்தலம் பற்றி வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது.

இங்கு ஏராளமான மகான்களும் அருளாளர்களும் காலம் காலமாக வந்து கிருஷ்ணரை தரிசித்து பல பாடல்களைப் புனைந்துள்ளனர். ஆதி சங்கரர், ராமானுஜர், மத்வர், ஞானேஸ்வரர், பக்த மீரா, கிருஷ்ண சைதன்யர், வல்லபாசாரியர் என்று இங்கு வந்த அருளாளர்களின் பட்டியல் மீக நீண்ட ஒன்றாகும். கிருஷ்ணரைப் பற்றிப் பாரத தேச மொழிகள் அனைத்திலும் அற்புதமான இலக்கியங்கள் ஆயிரக்கணக்கில் புனையப்பட்டுள்ளன. கிருஷ்ணரைப் பற்றிய பாடல்களோ பல்லாயிரம் ஆகும்.

பெரியாழ்வார் ஐந்து பாசுரங்கள், ஆண்டாள் நான்கு பாசுரங்கள், திருமழிசை ஆழ்வார் ஒரு பாசுரம், திருமங்கை ஆழ்வார் இரண்டு பாசுரங்கள், நம்மாழ்வார் ஒரு பாசுரம் ஆக மொத்தம் 13 பாசுரங்களை ஆழ்வார்கள் இத்தலம் பற்றி மங்களாசாஸனம் செய்து அருளியுள்ளனர்.

இங்கு 1963ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து பல வருடங்கள் நடந்துள்ள பல அகழ்வாராய்ச்சிகளில் இந்தத் தலம்  பண்டைய காலத்தில் புகழோங்கி இருந்ததற்கான பல ஆதாரங்கள் கிடைத்து உலகையே மகிழ வைத்துள்ளன.          வசுதேவருக்கும் தேவகிக்கும் மதுராபுரியில் மகனாக அவதரித்த கிருஷ்ணர் ஆயர்பாடியில் யசோதா பாலனாக வளர்ந்தார். ஏராளமான அருள் லீலைகளைப் புரிந்தார். த்வாரகாவை நிர்மாணித்து, ஆண்டு, மறத்தை அழித்து அறத்தை நிலைநாட்டிய பின்னர் தனது அவதார காரியம் நிறைவேறியவுடன் அவர் இங்கிருந்து தான் தனது விஷ்ணு லோகத்திற்குச் சென்றார்.   

   காலம் காலமாக ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் ருக்மிணி சத்யபாமா சமேத ஸ்ரீ கிருஷ்ண பகவான் அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம்.                  

       

                             

 பெரியாழ்வாரின் அருள் வாக்கு இது:      

                                                              தடவரைவாய் மிளிர்ந்து மின்னும் தவள நெடுங்கொடி போல் 
சுடரொளியாய் நெஞ்சினுள்ளே தோன்றும் என் ஜோதி நம்பி! 
வடதடமும் வைகுந்தமும் மதிள் துவராபதியும் 
இடவகைகள் இகழ்ந்திட்டு என்பால் இடவகை கொண்டனையே   

அனைவருக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள்!

நன்றி, வணக்கம்!    

tags– துவாரகா , ஆலயம்,  அறிவோம்

கூத்தனூர் ஸ்ரீ  சரஸ்வதி தேவி! (Post No.10,256)

WRITTEN BY BRHANNAYAKI SATHYANARAYANAN

Post No. 10,256

Date uploaded in London – – 25 OCTOBER 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com

லண்டனிலிருந்து ஞாயிறுதோறும் இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் தமிழ்முழக்கம் நிகழ்ச்சியில் 17-10-2021 அன்று ஒளிபரப்பான உரை!

கூத்தனூர் ஸ்ரீ சரஸ்வதி தேவி!

ஆய கலைகள் அறுபத்து நான்கினையும்
ஏய உணர்விக்கும் என் அம்மை – தூய
உருப்பளிங்கு போல்வாள், என் உள்ளத்தின் உள்ளே
இருப்பள், இங்கு வாராது இடர்!

கவிச் சக்கரவர்த்தி கம்பர் வாழி!


ஆலயம் அறிவோம்! வழங்குவது பிரஹன்நாயகி சத்யநாராயணன்.

ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம் பெறுவது தமிழகத்தில் சரஸ்வதி தேவிக்கென உள்ள ஒரே ஆலயம் அமைந்துள்ள கூத்தனூர் ஆகும். இந்தத் தலம் தமிழ்நாடு திருவாரூர் மாவட்டத்தில் மயிலாடு துறையிலிருந்து திருவாரூர் செல்லும் மார்க்கத்தில் பூந்தோட்டம் என்னும் ஊரின் அருகில் அரிசிலாற்றங்கரையில் அமைந்துள்ளது. இந்த ஊருக்கு ஹரிநாதேஸ்வரம் என்ற இன்னொரு பெயரும் உண்டு. கங்கை, யமுனா, சரஸ்வதி ஆகிய மூன்று புனித நதிகளும் அரிசிலாற்றில் பாய்வதாக ஐதீகம்.


இங்கு அருள் பாலித்து வீற்றிருக்கும் சரஸ்வதி தேவி வெண்ணிற ஆடையுடன் நான்கு கைகளுடனும் வெண்தாமரை மலரின் மேல் பத்மாஸனத்தில் அமர்ந்து காட்சி அளிக்கிறார். அவர் கையில் வீணை இல்லை. வலது கீழ்க்கையில் சின் முத்திரையும் இடது கீழ் கையில் புஸ்தகமும், வலது மேல் கையில் அக்ஷரமாலையும் இடது மேல் கையில் அமிர்த கலசமும் தாங்கி கிழக்கு நோக்கி அமர்ந்து ஞான சரஸ்வதி அருள் பாலிக்கிறார்.


இந்தக் கோயில் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இருந்து வந்துள்ளது என்பதற்கான கல்வெட்டு ஆதாரங்கள் உள்ளன. இடைக்காலச் சோழர்கள் அரசாண்ட காலத்தில் விக்கிரம சோழனுக்கும் அவன் மகன் இரண்டாம் குலோத்துங்க சோழனுக்கும் ஒட்டக்கூத்தர் என்னும் மாபெரும் புலவர் ஆசிரியராக விளங்கினார். இவர் கலைமகளை வழிபட, அவள் தன் தாம்பூலத்தை இவருக்குத் தர பெரும் கவிஞராகிப் பெயர் பெற்றார் இவர். இவர் மூன்று உலாக்கள், இரண்டு பரணிகள், ஒரு பிள்ளைத் தமிழ், இராமாயணத்தில் உத்தரகாண்டம் உள்ளிட்ட ஏராளமான அரும் நூல்களை இயற்றியுள்ளார். இவர் மூன்று தலைமுறைகள் வாழ்ந்து நூறு ஆண்டுகளுக்கும் மேல் வாழ்ந்தவர் என வரலாறு கூறுகிறது. இவர் கவிச்சக்கரவர்த்தி கம்பன் காலத்தவரும் கூட!

சைவ சமயத்தவரான இவருக்கு நடராஜப் பெருமானாகிய சிதம்பரக் கூத்தரின் பெயரையொட்டி, கூத்தர் என்ற பெயர் சூட்டப்பட்டதாகத் தெரிகிறது. இன்னொரு செய்தியின் படி ஒரு சமயம் விக்கிரம சோழனின் விருப்பப்படி நயம் பொருந்திய கண்ணியை ஒட்டி, ஒரு வெண்பா பாட, அதனால் மகிழ்ந்த விக்கிரமன் இவரை ஒட்டக்கூத்தர் என்று அழைத்ததாகக் கூறப்படுகிறது. இன்னும் ஒரு செய்தியின் படி இவர் ‘ஈட்டி எழுபது’ என்ற பாடல்களின் மூலம் வெட்டுண்ட தலைகளை முண்டங்களுடன் ஒட்டச் செய்ததால் இவருக்கு அப்பெயர் எற்பட்டது எனத் தெரிய வருகிறது.


இப்படி கவித்வம் பெற்றதற்கான காரணம் இவர் இங்கு வழிபட்ட ஞான சரஸ்வதியின் அருளே ஆகும். தீயவர்களிடம் அகப்பட்ட ஒட்டக்கூத்தரை பரணி பாட வைத்து தன்னைத் தப்பிக்க வைத்த தேவியை ஒட்டக்கூத்தர் ‘ஆற்றங்கரை சொற்கிழத்தி வாழியவே’ என்று போற்றிப் புகழ்ந்து துதித்தார். சோழ மன்னன் தானமாக அளித்த இடத்தில், இவரே, தன் வழிபடு தெய்வமாகிய கலைமகளுக்கு இந்தக் கோவிலை அமைத்தார்.இந்த ஊரிலேயே பல ஆண்டுகள் அவர் வாழ்ந்தார். ஆகவே இந்த ஊர் கூத்தனூர் என்ற பெயரைப் பெற்றது.

இந்தக் கோவிலில் ஒட்டக்கூத்தருக்கு ஒரு சிலையும் இருக்கிறது. இந்த சரஸ்வதி தேவியே கம்பனுக்காக கிழங்கு விற்றதாகவும் மோர் விற்றதாகவும் வரலாறு உண்டு. இன்னொரு சுவையான வரலாறும் உண்டு. கும்பகோணத்தைச் சேர்ந்த சாரங்கபாணி தீக்ஷிதர் என்பவரின் புதல்வரான புருஷோத்தமனுக்குப் பேசும் திறன் வரவில்லை. அவன் இங்கு வந்து சரஸ்வதியை வழிபட தேவியானவள் தாம்பூலத்தைத் தன் வாயில் தரித்து அவனுக்குத் தந்தாள். சரஸ்வதி அருளால் விஜயதசமி முதல் பேசத் தொடங்கிய அவர் புருஷோத்தம பாரதி என்ற சிறப்புப் பெயரைப் பெற்றார்.

முன்புறத்தில் மூன்று நிலை ராஜகோபுரத்தினைக் கொண்டுள்ளது இந்தக் கோயில். கோபுரத்தில் ஐந்து கலசங்கள் உண்டு. முன் மண்டபம் வேலைப்பாடுகளுடன் உள்ளது. நவராத்திரி நாட்களில் சிறப்பான விழா நடைபெற, இங்கு ஏராளமான பக்தர்கள் வந்து குழுமுகின்றனர். கல்வி அறிவைப் பெற இதுவே சிறந்த இடம் என்பதால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வித்யாரம்பத்திற்கும் மற்ற நாட்களிலும் அழைத்து வந்து புத்தகம் பேனா உள்ளிட்டவற்றை கர்பக்ருஹத்தில் வைத்து சரஸ்வதியின் அருளைப் பெறுவது தொன்று தொட்டு இருந்து வரும் வழக்கமாக இருந்து வருகிறது. அத்துடன் இத்தலத்தில் ஆரம்பித்து ருத்ர கங்கை வரையிலான சுமார் இரண்டரை கிலோமீட்டர் நீளமுள்ள அரசலாற்றுக் கரையில் தர்ப்பணம் முதலான பித்ரு கர்மங்கள் செய்வது சிறப்பானதாகக் கருதப்படுகிறது. அவரவர் பாபங்களிலிருந்து விடுபட திரிவேணி சங்கம நீராடலுக்கும், கணவன் மனைவி பிரிவிலிருந்து மீள்வதற்குமான பிராத்தனைத் தலமாகவும் இது ஆகிறது. காலம் காலமாக ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் ஞான் சரஸ்வதி தேவி அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம்.
கவிச்சக்கரவர்த்தி கம்பரின் அருள் வாக்கு இது :

படிகநிறமும் பவளச் செவ்வாயும்
கடி கமழ் பூந்தாமரை போல் கையும் – துடியிடையும்
அல்லும் பகலும் அனவரதமும் துதித்தால்
கல்லும் சொல்லாதோ கவி?!
நன்றி வணக்கம்!


tags — கூத்தனூர் ,ஸசரஸ்வதி தேவி, ஆலயம் ,அறிவோம்

ஆலயம் அறிவோம்! ஒப்பிலியப்பன் கோவில் (Post No.9922)

WRITTEN BY BRHANNAYAKI SATHYANARAYANAN

Post No. 9922

Date uploaded in London – –   2 AUGUST  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

லண்டனிலிருந்து ஞாயிறுதோறும் இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் தமிழ்முழக்கம் நிகழ்ச்சியில் 1-8-2021 அன்று ஒளிபரப்பான உரை!

போதார் தாமரையாள் புலவிக் குல வானவர் தம்

கோதா! கோதில் செங்கோல் குடை மன்னரிடை நடந்த

தூதா! தூமொழியாய்ச் சுடர் போல் என் மனத்திருந்த

வேதா! நின்னடைந்தேன், திருவிண்ணகர் மேயவனே!

திருமங்கையாழ்வார் திரு நாமம் வாழி!

ஆலயம் அறிவோம்! வழங்குவது பிரஹன்நாயகி சத்யநாராயணன்.

ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம் பெறுவது 108 வைணவ திவ்ய க்ஷேத்திரங்களுள் ஒன்றாக அமைவதும் தென் திருப்பதி என்று அனைவராலும் அழைக்கப்படும் திருவிண்ணகர்த் தலமாகும்.

ஒப்பிலியப்பன் கோவில் என்று அனைவராலும் அறியப்படும் இந்தத் தலமானது தமிழகத்தில், கும்பகோணம் நகருக்குத் தெற்கில் 7 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

ஆகாச நகரம், வைகுண்ட நகரம், ஒப்பிலியப்பன், உப்பிலியப்பன் ஆகிய பெயர்களையும் கொண்டுள்ள இந்தத் தலம் ஏராளமான பக்தர்களைத் தினமும் ஈர்க்கும் திருத்தலமாகும்.

மூலவர் நாமம் : திருவிண்ணகரப்பன் – ஒப்பிலியப்பன் – உப்பிலியப்பன். பிராட்டியின் திரு நாமம் – பூமி தேவி அல்லது பூமி நாச்சியார்

பெருமாள் கிழக்கு நோக்கி நின்ற கோலத்திலும் பிராட்டியார் வடக்கு நோக்கி அமர்ந்த திருக்கோலத்திலும் இருந்து அருள் பாலிக்கின்றனர்.

இங்குள்ள விமானத்தின் பெயர் சுத்தானந்தம். இங்குள்ள புஷ்கரணி அஹோராத்ர புஷ்கரணி என அழைக்கப்படுகிறது. காலை, மாலை என எந்த நேரமும் நீராடலாம் என்பதால் இது இந்தப் பெயரைப் பெற்றது. கோவிலுக்கு வெளியே சார்ங்க தீர்த்தம், சூர்ய தீர்த்தம், இந்த்ர தீர்த்தம், ப்ரஹ்ம தீர்த்தம் என நான்கு தீர்த்தங்கள் உள்ளன.

இங்கு எம்பெருமான் நம்மாழ்வாருக்கு பொன்னப்பன், மணியப்பன், முத்தப்பன், என்னப்பன், திருவிண்ணகரப்பன் ஆகிய  ஐந்து வடிவங்களுடன் காட்சி அளித்துள்ளார் என்பதை வரலாறு தெரிவிக்கிறது. நம்மாழ்வார் எம்பெருமானைப் பிரிந்து மிகவும் வருந்தினார். அப்போது எம்பெருமான் தானே அவர் மேல் விழுந்து ஆழ்வாரை அணைத்து அருளினார். ஆகவே எம்பெருமான் எந்நாளும் பிரியாத தலமாக இதை முன்னோர்கள் கண்டனர். மேலும் இத்தலத்தில் ஒன்பது பாசுரங்களில் ஒன்றுக்கு ஒன்று முரண்பட்ட பொருள்களைச் சொல்லி அவற்றிற்கெல்லாம் அந்தர்யாமியாக இருப்பவன் எம்பெருமானே என அவர் நிறுவி “சேராத பொருள்களைச் சேர்க்கும் பெருமையன்” என்று பாடினார்.

கருடன், காவேரி, தர்ம தேவதை, மார்க்கண்டேயர் ஆகிய நால்வருக்கும் இத்தலத்தில் எம்பெருமான் தரிசனம் தந்துள்ளதாகப் புராணம் கூறுகிறது.

இந்த தலத்தின் சிறப்பைப் பற்றி பிரம்மாண்ட புராணம் விரிவாக விவரிக்கிறது.

மிருகண்டு மஹரிஷியின் புத்திரரான மார்க்கண்டேய மஹரிஷி பூமா தேவி தனக்கு மகளாகவும், திருமால் மாப்பிள்ளையாகவும் ஆக வேண்டும் என நெடுங்காலம் தவம் செய்தார். ஒரு நாள் துளசி வனத்தில் ஒரு அழகிய பெண்குழந்தையை அவர் கண்டார். அதை எடுத்து பூமாதேவி என்ற பெயரைச் சூட்டி அதை வளர்த்தார். குழந்தை வளர்ந்து திருமண வயதை அடைந்தது. ஒரு நாள் திருமால் ஒரு வயதான அந்தணர் வேடத்தில் மார்க்கண்டேய மஹரிஷியை அணுகி அவரது பெண்ணைத் தனக்கு  மணம் முடித்துத் தருமாறு வேண்டினார். மார்க்கண்டேயர் அதற்கு மறுத்து பல காரணங்களைக் கூறினார். ஆனால் வந்தவர் விடவில்லை. கடைசியில் தன் பெண்ணுக்கு உப்புப் போட்டுச் சமைக்கத் தெரியாது என்று கூறினார் மார்க்கண்டேயர். அதற்கும் திருமால் விடவில்லை. செய்வதறியாது மார்க்கண்டேயர் திகைத்து நின்றார். திருமாலை வேண்டினார். உடன் திருமால் அவர் முன் தோன்றி உனக்கு மகளாக வந்தது பூமா தேவியே என்று கூறி அருளினார். அவர் வேண்டியபடியே பூமாதேவியை மணந்தார். பூமாதேவியை மணந்து அவள் சமைத்த உப்பில்லாத உணவை உண்டதால் அவர் பெயர் உப்பிலியப்பன் என்று ஆனது. இன்றும் உப்பிலியப்பனுக்கு உப்பு இல்லாத நைவேத்யமே செய்யப்பட்டு வருகிறது.

இந்தத் திருமண வைபவம் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் சிரவண நக்ஷத்திர தினத்தன்று இங்கு நடைபெறுகிறது.

கருட சந்நிதிக்கு அப்பால் எந்த விதமான உப்பு சேர்த்த பண்டமும் உள்ளே கொண்டு செல்லப்படுவதில்லை என்பது இன்று வரை கடைப்பிடிக்கப்பட்டு வரும் ஒரு மரபாகும்.

பங்குனி மாதம் சிரவண நாளன்று இங்கு எம்பெருமான் அவதரித்தார். ஆகவே இந்த அவதார தினத்தில் திருத்தேருடன் ஒன்பது நாள் ப்ரஹ்மோத்சவம் நடைபெறுகிறது. அத்துடன் சிரவண தினம் மிக முக்கியமான தினம் என்பதால் இங்கு சிரவண தீபம் ஒவ்வொரு சிரவண நாளன்றும் ஏற்றப்படுகிறது.

இங்குள்ள பெருமாள் திருப்பதி பெருமாளுக்கு அண்ணனாகக் கருதப்படுகிறார்.

ஆலயத்திற்குள் கர்பக்ருஹத்திற்கு வெளியே ஸ்ரீ தேசிகன் சந்நிதியும், வெளி மண்டப தென்புறத்தில் அனுமன் சந்நிதியும், வடபுறத்தில் ஆழ்வார்கள் சந்நிதியையும், அதன் கிழக்கே ஸ்ரீ ராமன் சந்நிதியையும் காணலாம்.

குருவாயூர் கோவிலில் உள்ளது போலவே பக்தர்கள் தம் பிரார்த்தனைகளை நிறைவேற்றிக் கொள்ள ஒரு துலாபாரமும் இந்தக் கோவிலில் உள்ளது. இந்த திவ்ய தேச தலத்தில் நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், பொய்கையாழ்வார், பேயாழ்வார் ஆகிய நான்கு ஆழ்வார்கள் மங்களாசாஸனம் செய்து அருளியுள்ளனர். ராஜராஜசோழன் காலத்துக் கல்வெட்டுக்கள் இந்தக் கோவிலைப் பற்றிச் சிறப்புறக் குறிப்பிடுகின்றன.

 காலம் காலமாக ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் உப்பிலியப்பனும் பூமி தேவியும் அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம்.     பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் அருள் வாக்கு இது.  

கையும் உரையும் கருத்தும் உனக்கே அடிமை

செய்யும்படி நீ திருத்தினாய் – ஐயா!

திரு விண்ணகராளா! சிந்தையிலும் எண்ணேன்,

பெரு விண்ணகர் ஆளும் பேறு!   

நன்றி வணக்கம்!       

****

tags–ஒப்பிலியப்பன், உப்பிலியப்பன், கோவில் , ஆலயம், அறிவோம்

கன்யாகுமரி – ஆலயம் அறிவோம்(Part 9669)

WRITTEN BY BRHANNAYAKI SATHYANARAYANAN

Post No. 9669

Date uploaded in London – – 31 May   2021          

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

லண்டனிலிருந்து ஞாயிறுதோறும் இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் தமிழ்முழக்கம் நிகழ்ச்சியில் 30-5-2021 அன்று ஒளிபரப்பான உரை!

பூலோக குமாரி, ஹே, அம்ருத நாரி!

பாலே – ரஸ ஜாலே, பகவதி ப்ரஸீத காலே

நீல ரத்நமய நேத்ர விசாலே, நித்ய யுவதி பத நீரஜ மாலே

லீலா ஜ்வாலா நிர்மித வாணி நிரந்தரே நிகில லோ கேஸாநி

நிருபம ஸுந்தரி நித்ய கல்யாணி, நிஜம் மா குரு ஹே மன்மத ராணி!

மஹாகவி பாரதியார் வாழி!   ஆலயம் அறிவோம்! வழங்குவது

பிரஹன்நாயகி சத்யநாராயணன்.

ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம் பெறுவது நீலத்திரைகடல் ஓரத்திலே நின்று நித்தம் தவம் செய்யும் குமரி எல்லை என்று மஹாகவியால் போற்றப்படும் குமரி எல்லையில் கோவில் கொண்டு அருள் பாலிக்கும் கன்யாகுமரி திருத்தலம் ஆகும். பாரதத்தின் தென் கோடியில் உள்ள இந்தத் தலம் நாகர்கோவிலிலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இந்து மா கடல் தெற்கிலும் வங்காள விரிகுடா கிழக்கிலும் அரபிக்கடல் மேற்கிலும் இருக்க இந்த முப்பெரும் கடலின் சங்கம இடத்தில் இந்தத் தலம் அமைந்திருக்கிறது. இது 51 சக்தி பீடங்களில் ஒன்றாகும். தேவியின் முதுகுப் பகுதி விழுந்த இடம் இது. இந்தத் தலத்தைப் பற்றிய புராண வரலாறு ஒன்று உண்டு.

முன்னொரு காலத்தில் பாணாசுரன் என்னும் அசுரன் பிரம்மாவை நோக்கிக் கடும் தவம் புரிய பிரம்மா அவன் முன் தோன்றி அவனுக்கு வரம் அளிக்கத் திருவுள்ளம் கொண்டார். ஒரு கன்னிப் பெண்ணைத் தவிர வேறு யாராலும் தனக்கு மரணம் வரக் கூடாது என்று அந்த அசுரன் வேண்ட, அந்த வரத்தை அருளினார் பிரம்மா. மிக்க வலிமை உடைய அசுரன் கன்னிப் பெண்ணால் தனக்கு அழிவு ஏற்படவே முடியாது என்ற எண்ணத்தால் தேவர்கள் உள்ளிட்ட அனைவரையும் கொடுமைப் படுத்த ஆரம்பித்தான். தேவர்கள் திருமாலை அணுக அவர் பாணாசுரனின் வரம் பற்றி விளக்கி சிவனை அணுகுமாறு கூறினார். சிவபிரானை அணுகிய தேவர்கள் தங்களின் குறையை முறையிட்டனர். சிவபிரான் இந்த அசுரனை அழிக்கத் தகுதி வாய்ந்தவள் தேவியே என்று கூற, தேவர்கள் தேவியை நோக்கித் தவம் புரிந்து வேண்டினர். அவர்களுக்கு அருள் புரிய எண்ணிய தேவி கன்யாகுமரி தலத்தில் ஒரு பெண்ணாக அவதரித்தாள்.

கன்னியாக இருந்த தேவி சிவபிரானை மணக்க எண்ணிக் கடும் தவம் புரிந்தாள். அப்போது அருகில் சுசீந்திரத்தில் தாணுமாலயனாக இருந்த சிவபிரான் தேவியை மணக்க எண்ணினார். மணம் முடிந்தால் தங்கள் துயர் தீராதே என்று இதனால் தேவர்கள் பயந்தனர். ஆனால் தேவரிஷியான நாரதர் இதுவும் சிவபிரானின் அருள் விளையாடலே என்பதை உணர்ந்தார். சிவபிரானின் முன், அவர் ஒரு கோரிக்கையை வைத்தார். மணம் முடிக்கும் இடத்திற்கு மாப்பிள்ளையான சிவபிரான் சூரியோதயத்திற்கு ஒரு நாழிகை முன்னதாகவே வந்து விட வேண்டும் என்றும் அப்படி வரவில்லை எனில் மணம் நடக்காது என்றும் அவர் கூற அதை அப்படியே சிவ பிரான் ஏற்றார். மண நாளன்று தாணுமாலயன் கன்யா குமரி இருந்த இடத்தை நோக்கி வரும் போது நாரதர் சேவல் வடிவில் இருந்து கூவினார். சிவபிரான் விடிந்து விட்டது என்பதால் தன் இருப்பிடம் திரும்பினார்.

தன்னை மணக்க சிவபிரான் வருவார் என்று காத்திருந்த குமரியம்மன் அவர் வராததால் எல்லையற்ற கோபம் கொண்டாள். திருமணத்திற்கென வைக்கப்பட்டிருந்த பண்டங்களையும் வண்ண மலர்களையும் கடற்கரைப் பரப்பில் வீசினாள். இதுவே கன்யாகுமரி கடற்கரை வண்ணமயமாக இன்றும் காட்சி அளிப்பதற்கான காரணம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் பாணாசுரன் கன்யாகுமரியின் அழகில் மயங்கித் தன்னை மணக்குமாறு கோரினான். தேவி மறுத்தாள். ஆனால் தேவியை மணக்க எண்ணிய அசுரன் அவள் அருகில் வந்த போது தேவியானவள் வானுயரும் வடிவம் எடுத்து அசுரனைக் காலில் போட்டு வதம் செய்தாள். தேவர்கள் பூ மழை பொழிந்து தேவியின் உக்கிரத்தைத் தணித்தனர். தேவி சாந்தம் அடைந்து சிவபிரானை நோக்கிக் கடும் தவம் செய்ய ஆரம்பித்தாள்.

குமரி அம்மன் என்றும் பகவதி அம்மன் என்றும் துர்க்கை என்றும் பல்வேறு பெயர்கள் தேவிக்கு உண்டு. தன் யோக சக்தி அனைத்தையும் அம்மன் தனது மூக்குத்தியில் இறக்கி வைத்திருப்பதால் அந்த மூக்குத்தி ஜொலிக்கும் ஒன்றாக அமைந்திருக்கிறது. தூரத்தில் வரும் கப்பல்கள் மூக்குத்தி ஒளியால் வழி காட்டப்பட்டு வந்தன. சில மாலுமிகளோ மூக்குத்தி ஒளியை கலங்கரை விளக்கம் என்று எண்ணி விபத்துக்குள்ளாயினர். ஆகவே கோவிலின் முன்புற வாயில் மூடப்பட்டு, வடக்குப் புறமாக வாயில் வைக்கப்பட்டது. கிழக்கு நோக்கி கொண்டு பகவதி அம்மன் உள் மண்டப கர்பக்ருஹத்தில் எழுந்தருளியுள்ளாள். ஒரு கரத்திலே இலுப்பைப் பூ மாலையை தரித்து மற்றொரு கரத்தைத் தொடை மீது அமர்த்தி தவக்கோலத்தில் அம்மன் காட்சி அளிக்கிறாள். கோவிலின் உள்பிரகாரத்து தென் மேற்குக் கோடியில் விநாயகர் சந்நிதி உள்ளது. அங்குள்ள மணி மண்டபம் ஆறு தூண்களுடன் அமைந்திருக்க அதன் முன்னே சபா மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.

கன்யாகுமரி ஹிந்து மதத்தின் எழுச்சிக்கு வழி கோலிய அற்புதத் தலமாகும். இங்கு தான் ஸ்வாமி விவேகானந்தர் தனது பாரத யாத்திரையின் போது வந்து 1892 டிசம்பரில் அருகிலிருந்த பாறைக்கு நீந்திச் சென்று மூன்று நாட்கள் தவம் புரிந்தார். அலைகடலின் மீது தோன்றிய ராமகிருஷ்ணர் அவரை வா என்று அழைக்கவே அவர் அமெரிக்கா செல்ல இறுதி முடிவு எடுத்தார்; அங்கு சென்றார். உலகையே வென்றார். அவர் தவம் புரிந்த இந்தப் பாறையில் விவேகானந்தர் மணி மண்டபம் அமைக்கப்பட்டு அவரது திருவுருவச் சிலை நிறுவப்பட்டு 1972இல் இது திறக்கப்பட்டது. இங்கு செல்ல படகு வசதிகளும் உண்டு.

 இந்தப் பாறையின் முக்கிய சிறப்பு அம்சம் இங்கு தேவியின் ஸ்ரீ பாதம் அமைந்திருப்பது தான். தேவி தவம் புரிந்த பாறை இது என்பதால் இது ஸ்ரீபாதப்பாறை என்று அழைக்கப்படுகிறது. தேவியின் பாதச் சுவடு உள்ள இடம் தரிசனம் செய்யக் கூடியபடி அழகுற பாதுகாக்கப்பட்டிருக்கிறது;

காலம் காலமாக ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் கன்யாகுமரி பகவதி அம்மன் அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம்.   

ஓம் சக்தி ஓம் பராசக்தி ஓம் சக்தி ஓம்! ஓம் சக்தி ஓம் பராசக்தி ஓம் சக்தி ஓம்!! நன்றி, வணக்கம்!

tags- கன்யாகுமரி ,ஆலயம் , அறிவோம்

ஆலயம் அறிவோம்! இராமேஸ்வரம் (Post No.9263)

WRITTEN BY BRHANNAYAKI SATHYANARAYANAN

Post No. 9263

Date uploaded in London – –14 FEBRUARY  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

லண்டனிலிருந்து ஞாயிறு தோறும் இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பப்படும் தமிழ் முழக்கம் நிகழ்ச்சியில் 14-2-2021 அன்று ஒளிபரப்பான உரை!

ஆலயம் அறிவோம்!     வழங்குவது பிரஹன்நாயகி சத்யநாராயணன்.

“அணை அலை சூழ் கடல் அன்று அடைத்து வழி செய்தவன்,

பணை இலங்கும் முடி பத்து இறுத்த பழி போக்கிய

இணை இலி, என்றும் இருந்த கோயில், இராமேச்சுரம்

துணைஇலி தூ மலர்ப்பாதம் ஏத்த துயர் நீங்குமே”

வாழி திருஞானசம்பந்தர் திருநாமம்!  ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம் பெறுவது 12 ஜோதிர்லிங்க ஸ்தலங்களில் ஒன்றான இராமெஸ்வரம் ஆகும். இது சென்னையிலிருந்து 555 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. இத்தலம் சரித்திர பூர்வமான ஒன்று என்பதோடு, நாஸாவினால் சேது பாலம் இருப்பது சாடலைட் மூலமாக நிரூபிக்கப்பட்டிருப்பதனால், அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட மிகப் பழமை  வாய்ந்த, உலகின் ஒரே திருத்தலம் இது தான் என்ற பெருமையைப் பெறுகிறது. உலகின் வேறு எந்தத் தலமும் விஞ்ஞான பூர்வமாக இப்படி நிரூபிக்கப்படவில்லை என்பது இதன் தனிச் சிறப்பாகும்.

பாரதத்தின் பழம் பெரும் இதிஹாஸமான ராமாயணத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்ட தலம் இது என்பதால் இலக்கிய முத்திரையையும் பெற்றுள்ளது இது. வானர வீரர்களுடன் இராமேஸ்வரத்தில் தங்கி இருந்து, அவர்களின் துணை கொண்டு, சேது பாலம் அமைத்து, ராமர் இலக்குவனுடன் இலங்கை மீது போர் தொடுத்து, ராவணனை வதம் செய்து, சீதையை மீட்டார். பிராமணனான ராவணனைக் கொன்ற பிரம்மஹத்தி தோஷம் நீங்க, இந்த இராமேஸ்வர தீவில் ஜோதிர்லிங்க பிரதிஷ்டை செய்து வழிபட, பெரியோர்களின் உபதேசப்படி, எண்ணினார். அநுமனை கைலாயத்திலிருந்து ஒரு லிங்கம் கொண்டு வருமாறு அவர் பணித்தார். ஆனால் அனுமன் வரச் சற்று தாமதமானது. அப்போது சீதா தேவி மணலினால் பிடித்து ஒரு லிங்கத்தைக் கொடுத்தார். அதை இராமர் வழிபடத் தொடங்கினார். அனுமன் சிவனை வணங்கி கைலாயத்திலிருந்து பெற்ற லிங்கம் வரவே அதையும் பிரதிஷ்டை செய்தார். இராமநாத லிங்கத்தை வழிபடும் முன்னர் அனுமன் கொண்டு வந்த விஸ்வலிங்கத்தையும் முன்னதாக வழிபட வேண்டும் என்ற நியமத்தை ஏற்படுத்தினார். ஆதி சங்கரர் இங்கு ஸ்படிக லிங்கத்தை ஸ்தாபித்துள்ளார். அதற்கு முதலில் பூஜை நடைபெறுகிறது. சைவ-வைணவ ஒற்றுமைக்கு ஒரு உதாரணமாகத் திகழும் இந்தத் தலத்தில் சிவன் சந்நிதியில் பெருமாளுக்குரிய தீர்த்தம் பிரசாதமாக வழங்கப்படுகிறது.

கோவிலுக்கு அருகே உள்ள சமுத்திரம் அக்னி தீர்த்தமாகும். சீதை தனது கற்பை நிரூபிப்பதற்காக அக்னி ப்ரவேசம் செய்யவே, அவளது கற்பின் சூடு தாங்க முடியாமல், அக்னி இந்தக் கடலில் மூழ்கி தனது வெப்பத்தைத் தணித்துக் கொண்டதோடு, அக்னியிலிருந்து சீதையை வெளிப்படுத்தி, உலகிற்கு சீதா தேவியின் தூய்மையையும் நிரூபித்தார். இந்த அக்னி தீர்த்தத்தில் பித்ரு கடன்களைச் செய்வது காலம் காலமாக இருந்து வரும் மரபாக விளங்குகிறது. குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இங்கு வந்து நீராடி வழிபாடு செய்தால் புத்திர பாக்கியம் ஏற்படும் என்பது அனுபவபூர்வமான உண்மையாகும்.  ‘ஆ ஸேது ஹிமாசலம்’ என்ற பழம் பெரும் மொழியால் சேது முதல் இமயம் வரை பாரத நாடு ஒரே நாடு என்ற உண்மை வலுப்பட்டு, ஒற்றுமை ஓங்குகிறது. இங்கிருந்து மணலை எடுத்துக்கொண்டு காசி சென்று கங்கையில் கரைத்து விட்டு அங்கிருந்து கங்கை நீரைக் கொண்டு வந்து இராமநாதருக்கு அபிஷேகம் செய்து வருவது தொன்று தொட்டு நடந்து வரும் பாரம்பரியப் பழக்கமாகும். சிறிய தீவான இராமேஸ்வரம் சங்கு வடிவத்தில் அமைந்துள்ள ஒரு தீவு.

மூலவர் – இராமநாதர்; அம்மன்: பர்வதவர்த்தனி. சேது சக்தி பீடம் என்று அழைக்கப்படும் இது, சக்தி பீடங்களில் ஒன்று. பர்வதவர்த்தனி அம்பிகை பீடத்திற்குக் கீழே ஆதிசங்கரர் ஸ்தாபித்த ஸ்ரீசக்கரம் உள்ளது. நான்கு மதில்களைக் கொண்டு பிரம்மாண்டமான பிரகாரத்தைக் கொண்டு தனக்கு நிகர் இல்லாத கோவிலாக விளங்குகிறது இராமநாதர் ஆலயம். மொத்த பிரகாரங்களின் நீளம் 3850 அடி. மூன்றாவது பிரகாரத்தில் மட்டும் 1212 தூண்கள் உள்ளன. 690 அடி நீளமும் 435 அடி அகலமும் கொண்டு உலகின் பெரிய பிரகாரம் என்ற முதலிடத்தை இது பெறுகிறது.  

                                                    இராமேஸ்வரத்தில் உள்ள உயரமான இடம் கந்தமாதன பர்வதமாகும். இங்கிருந்து தான் ராமர் இலங்கையை நோக்கினார் என்பது குறிப்பிடத்தகுந்தது. இங்குள்ள முக்கியமான 22 தீர்த்தங்களின் மஹிமை எல்லையற்ற ஒன்றாகும். மஹாலக்ஷ்மி தீர்த்தம், சாவித்திரி தீர்த்தம்,காயத்ரி தீர்த்தம், சரஸ்வதி தீர்த்தம், சங்கு தீர்த்தம், சுர தீர்த்தம், சேது மாதவ தீர்த்தம், நள தீர்த்தம், நீல தீர்த்தம், குவய தீர்த்தம், கவாட்ச தீர்த்தம், கந்தமாதன தீர்த்தம், பிரம்மஹத்தி விமோசன தீர்த்தம், கங்கா தீர்த்தம், யமுனை தீர்த்தம், கயா தீர்த்தம், சர்வ தீர்த்தம், சிவ தீர்த்தம், சத்யாமிர்த தீர்த்தம், சந்திர தீர்த்தம், சூரிய தீர்த்தம், கோடி தீர்த்தம் ஆகியவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு வரலாறைக் கொண்டு  ஒவ்வொரு வளத்தை அருள்பவை. இவற்றில் 14 தீர்த்தங்கள் கோவிலுக்கு உள்ளேயே உள்ளன. அன்பர்கள் தாங்களே கயிறு, வாளி கொண்டு சென்று அனைத்து தீர்த்தங்களிலும் நீராடி அனைத்து வளங்களையும் பெறலாம்; சகல தோஷங்களையும் போக்கிக் கொள்ளலாம். ராமர் தனது ஜடையைக் கழுவிக் கொண்ட தீர்த்தம் ஜடா தீர்த்தமாகும்.

இது தவிர கந்தமாதன பர்வதம் அருகே 8 தீர்த்தங்களும் திருப்புல்லாணி, தங்கச்சிமடம், தேவிபட்டினம், தனுஷ்கோடி ஆகிய இடங்களிலும் பல தீர்த்தங்கள் உள்ளன. தனுஷ்கோடி, ராமேஸ்வரத்திற்கு தென்புறம் 17 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. இங்கு முதலில் நீராடுவது மரபாகும். திருஞானசம்பந்தர் இரு பதிகங்களையும் திருநாவுக்கரசர் ஒரு பதிகத்தையும் இந்தத் தலத்தில் பாடி அருளியுள்ளனர். அருணகிரிநாதர் இரு திருப்புகழ் பாடல்களை இத்தலத்தில் பாடி அருளியுள்ளார்.

காலம் காலமாக கோடானு கோடி பக்தர்கள் வழிபடும் இராமநாதரும் பர்வதவர்த்தனி தேவியும் அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திகிறோம். அப்பர் அருள்வாக்கு :                                                                                     “ஆர் வலம் நம்மின் மிக்கார் என்ற, அவ் அரக்கர் கூடிப்                                       போர் வலம் செய்து மிக்குப் பொருதவர் தம்மை, வீட்டித்,                                     தேர் வலம் செற்ற மால் செய் திரு இராமேச்சுரத்தைச்                                       சேர் மட நெஞ்சமே, நீ செஞ்சடை எந்தை பாலே”  

         நன்றி, வணக்கம்.

tags- ஆலயம் , அறிவோம்,  இராமேஸ்வரம்,