
WRITTEN BY S NAGARAJAN
Post No. 9811
Date uploaded in London – 4 JULY 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great
பகவான் ரமண மஹரிஷி வாழ்வில் அற்புத சம்பவங்கள்!
ச.நாகராஜன்
பகவான் ரமண மஹரிஷி வாழ்வில் ஏராளமான அற்புத சம்பவங்கள் நடந்துள்ளன. இவற்றை மஹரிஷியின் அணுக்கத் தொண்டர்கள் நன்கு பதிவு செய்து வைத்துள்ளனர். அவற்றில் சிலவற்றை இங்கு காண்போம்:
1
ஸ்ரீ T.V. கபாலி சாஸ்திரிகள் 3-9-1886 அன்று சென்னையில் மைலாப்பூரில் பிறந்தவர். 17-8-1953 அன்று பாண்டிச்சேரியில் மறைந்தார்.
1911ஆம் ஆண்டு அவர் மஹரிஷியின் வட்டத்துக்குள் வந்தார். அவர் The Maharshi என்று ஒரு புத்தகத்தை எழுதியுள்ளார். அதில் அவர் குறிப்பிடும் ஒரு சம்பவம் இது:
ஒரு சமயம் மஹரிஷி மலை மீது வசித்துக் கொண்டிருந்தார். வேடன் ஒருவன் ஒரு மயிலைக் கொல்ல எத்தனித்தான். மஹரிஷி அவனிடம் அதைக் கொல்ல வேண்டாம் என்றார். “போ, சாமி, நீ யாரு அதைச் சொல்ல” என்று கூறிய அவன் மஹரிஷியின் வார்த்தைகளைப் புறக்கணித்தான். தனது வேலையைச் செய்து முடித்தான். மறுநாள் அவனுக்கு ஒரு விபத்து ஏற்பட்டது. எந்தக் கையால் மயிலை முடித்தானோ அதே கை வெட்டுண்டது. மஹரிஷி அதற்காக வருத்தப்பட்டார். “ஆனால் என்ன செய்யறது? விஷயத்தைக் கற்றுக் கொள்வதற்கு முன் ஜனங்கள் இப்படிப்பட்டதை அனுபவிக்க வேண்டி இருக்கிறது” என்றார்.
From Leaves from a Diary, Book : The Maharshi
2
T.K. சுந்தரேச ஐயர் பகவானின் அணுக்கத் தொண்டர்களில் ஒருவர். அவர் பகவானுடனான தனது அனுபவங்களை At the Feet of Bhagavan என்று எழுதியுள்ளார். 38 அத்தியாயங்களில் நிறைய வியப்பூட்டும் சம்பவங்களைப் படித்து மகிழலாம்.
அதில் ஒரு சம்பவம் இது:
ஒரு நாள் காலை உணவுக்குப் பின்னர் பகவானின் பக்தர்களுடன் சுந்தரேச ஐயர் ஹாலில் இருந்தார். தத்துவம் ஒன்றைப் பற்றி பகவான் விரிவாக விளக்கிக் கொண்டிருந்தார். மணி 10.45 ஆயிற்று. யாருக்கும் நேரம் போனதே தெரியவில்லை. அப்படி ஒரு ஈர்ப்பான உரை. 10.45க்கு சுந்தரேச ஐயரின் பக்கம் திரும்பிய பகவான், “அட, பையா, நீ இன்னும் ஸ்கூலுக்குப் போகவில்லையா?” என்றார்.
“பகவான், இன்றைக்கு ஞாயிற்றுக்கிழமை. ஸ்கூல் கிடையாது” என்றார் அவர்.
பகவான் சிரித்தார். “நீ ஸ்கூலுக்குப் போகற லக்ஷணம் நன்னாயிருக்கு. இன்றைக்கு திங்கள் கிழமை. ஓடு. உனது ஹெட்மாஸ்டர் உனக்காக கேட்டில் காத்துக் கொண்டிருக்கிறார்” என்றார் அவர்.
அவ்வளவு தான்; சுந்தரேச ஐயர் ஓடினார். அது இடைவேளை நேரம். கேட்டை அடைந்த போது ஹெட்மாஸ்டர் பகவான் கூறியதூ போலவே அங்கு நின்று கொண்டிருந்தார். அவரது பொடி டப்பியைக் கையில் வைத்துக் கொண்டு கொஞ்சம் பொடியை எடுத்து உறிஞ்சியவாறே அவருக்காகக் காத்துக் கொண்டிருந்தார்.
மஹரிஷி கூறிய அதே வார்த்தைகளை ஹெட்மாஸ்டர் சுந்தரேசனிடம் கூறினார்:” என்ன, சார், இன்னிக்கு திங்கள்ங்கறது மறந்து போச்சா? ஒருவேளை மஹரிஷி அதை உனக்கு ஞாபகப்படுத்தி இன்னிக்கு ஸ்கூல் உண்டுன்னு சொன்னாரோ”
உடனே சுந்தரேசன் கூறினார்:” ஆமாம், சார்! நான் மறந்து போய்விட்டேன். மஹரிஷிதான் என்னை இங்கு அனுப்பினார்.”
ஹெட்மாஸ்டர் சிரித்தார். “போ, க்ளாஸ்ரூமுக்குப் போ” என்றார் அவர்.
இப்படி மஹரிஷி தனக்கு நினைவு படுத்திய நிகழ்ச்சியை சுந்தரேச ஐயர் நினைவு கூர்கிறார்.

3
தவத்திரு குஞ்சு ஸ்வாமிகள் பகவானின் பழைய பக்தர்களில் ஒருவர். அவர் ‘எனது நினைவுகள்’ என்று ஒரு நூலை எழுதியுள்ளார். அதில் தனது பெயரை ‘குற்றேவல் குஞ்சு சுவாமி’ என்று குறிப்பிடுகிறார். 70 அத்தியாயங்களையும் 11 அநுபந்தப் பகுதிகளையும் கொண்ட அருமையான நூல் இது.
அதில் ஒரு சம்பவம் இது:
வடக்கே இருந்து பெரிய பண்டிதர் ஒருவர் ஸ்ரீ பகவானை தரிசிக்க வந்தார். சிலநாள் ஆசிரமத்திலேயே அவர் தங்கியிருந்தார். பண்டிதர் தினமும் ஸ்ரீ பகவான் அருகில் உட்கார்ந்து கொண்டு சம்ஸ்கிருதத்திலேயே உபநிஷத்துகளிலிருந்தும் மற்றும் பல நூல்களிலிருந்தும் சுலோகங்களை இடைவிடாது சப்தமாக வாசித்துக் கொண்டிருப்பார். அங்கு குழுமியிருந்த மற்றவருக்கெல்லாம் ஸ்ரீபகவானிடம் பேசவோ தியானம் செய்யவோ அது பெரிய இடையூறாக இருந்தது. ஸ்ரீ பகவான் பொறுமையாக அவர் சொல்வதை எல்லாம் கேட்டுக் கொண்டிருக்கும் போது மற்றவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. இப்படியாக பத்து தினங்கள் ஓடின. ஒரு நாள் காலையில் ஸ்ரீ பகவான் அருகில் இடம் காலியாக இருந்தது. சப்தமும் இல்லை. பண்டிதர் அங்கே ஒரு மூலையில் அடங்கி அமர்ந்திருந்தார். குஞ்சு சுவாமிகள் ஆச்சரியத்துடன் பார்ப்பதைக் கண்ட பகவான் “பண்டிதரும் நம் போல் ஆகி விட்டார்” என்று சிரித்துக் கொண்டே மலையாளத்தில் சொன்னார்.
“ஆம்! அநுபவம் ஒன்றுமில்லாமல் ஏட்டுப் படிப்பை மட்டும் வைத்துக் கொண்டு தானும் ஈடேற முடியாது. பிறரையும் தூக்கி விட முடியாது. ஞான தினகரனாம் ஸ்ரீ பகவானிடம் வந்தடைந்தவர்கள் பண்டிதராயினும், பாமரராயினும் தங்களிடம் உள்ள அறியாமை, அகங்காரம், மனச்சுமை யாவும் தீர்ந்து ஸ்ரீ பகவானின் அருட்பார்வையால் பரம சாந்தி பெற்று உய்வது யாவரும் அறிந்த உண்மையன்றோ” – என்று இப்படிக் கூறி இந்த நிகழ்ச்சியை நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார் ஸ்ரீ குஞ்சு ஸ்வாமிகள்!
எனது நினைவுகள் – குற்றேவல் குஞ்சு சுவாமி
***
INDEX
- Book The Maharshi by Sri T.V. Kapali Sastru
- Book At the Feet of Bhagavan by Sri T.K.Sundaresa Iyer
- Book : எனது நினைவுகள் – குற்றேவல் குஞ்சு சுவாமி
மயிலைக் கொன்ற வேடனுக்கு நேர்ந்த கதி
ஸ்கூலுக்கு போக நினைவு படுத்திய மஹரிஷி
தானாக அடங்கிய பண்டிதர்!
ரமணாசிரம நினைவுகள் – பகவான் ரமண மஹரிஷி
குறிப்பு: மேற்கூறிய நூல்கள் அனைத்தையும் ரமணாசிரமம், திருவண்ணாமலையிலிருந்து அன்பர்கள் பெறலாம்.
****

TAGS- ரமண மஹரிஷி, அற்புதங்கள்,
You must be logged in to post a comment.