மாமன்னன் அலெக்ஸாண்டரின் குதிரையும் நாயும்!

Stamp_Greece_1968

கட்டுரையை எழுதியவர் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1436; தேதி 25 நவம்பர், 2014.

மாமன்னன் அலெக்ஸாண்டர் எவ்வளவு புகழ்பெற்றவரோ அவ்வளவு புகழ்பெற்றவை அவருடைய நாயும் குதிரையும்!

அலெக்ஸாண்டரின் குதிரையின் பெயர் பூசெபலஸ்
அலெக்ஸாண்டரின் நாயின் பெயர் பெரிடாஸ்.

கிரேக்க நாட்டிலிருந்து பல்லாயிரம் மைல்கள் பயணம் செய்து இந்தியாவுக்கு வந்த அலெக்ஸாண்டரை அந்த பூசெபலஸ்தான் சுமந்து வந்தது. ஆனால் கி.மு.326 ஆம் ஆண்டில் நடந்த ஹைடஸ்பஸ் யுத்தத்துக்குப் பின் போரில் பெற்ற விழுப் புண்களால் அது இறந்துவிட்டது. அப்போது அந்தக் குதிரைக்கு வயது 20. அதன் வாழ்நாள் முழுதும் தனக்கு உழைத்த காரணத்தால் அதற்கு நன்றி செலுத்தும் முகத்தான் மாமன்னன் அலெக்ஸாண்டர் அந்தக் குதிரைக்கு ஒரு சமாதி கட்டி அந்த நகருக்கு அலெக்ஸாண்டரியா பூசெபலஸ் என்று நாமகரணம் செய்தார்.

இப்பொழுது அந்த நகர் எது என்பது குறித்து வரலாற்றாய்வாளர்கள் முட்டி மோதிக் கொள்கின்றனர். இரண்டு மூன்று நகரங்கள் இந்தக் குதிரையின் புகழ் பாட போட்டியிடுகின்றன. ஆயினும் ஜீலம் நதிக்கரையில் பாகிஸ்தானில் அந்த நகரம் இருக்கிறது எனப்தில் இரு வேறு கருத்துக்கு இடமே இல்லை. அலெக்ஸாண்டர் தான் வென்ற இடமெல்லாம் தனது பெயரில் அலெக்ஸாண்ட்ரியா என்று 20 நகரங்களுக்கு மேல் ஸ்தாபித்தார். பூசெபலஸ் என்றால் ‘’காளைத் தலையன்’’ என்று பெயர். அதாவது காளை போன்று வீரம் உடைத்து என்பது அதன் பொருள்.

Seleucos_I_Bucephalos_coin

அவருடைய நாய் பெரிடாஸ் பற்றியும் இந்தக் குதிரை பூசெபலஸ் பற்றியும் பிளினி, ப்ளூடார்ச், பெரிப்ளூஸ் என்று பல பழங்கால எழுத்தாளர்கள் சுவை மிகு கதைகளை எழுதி வைத்தனர். பெரிடாஸ் என்ற நாய்க்கும் அவர் ஒரு நகரம் உருவாக்கினார். அந்த நாய் ஒரு சிங்கத்தையும் யானையையும் கொன்றதால் வீரமிகு நாயை அவர் தத்து எடுத்தார் என்றும் அது ஒரு இந்திய அரசனால் கொடுக்கப்பட்டது என்றும் அவர்கள் எழுதி வைத்தனர். நிற்க.

அது சரி , உங்கள் ‘’இந்தியவியல்– இந்து கலாசார’’ பிளாக்கில் பூசெபலஸ், பெரிடாஸ் புகழை எதற்கு பாடிக்கொண்டு இருக்கிறீர்கள் என்று உங்களில் சிலர் எண்ணலாம். நான் சொல்ல வந்த விஷயம் வேறு. இந்த நாய், குதிரை, யானை இவைகளுக்கு எல்லாம் பெயர் வைத்து அவைகளை அன்பாகப் போற்றி வளர்க்கும் கலையையும் பண்பையும் உலகிற்கு கற்பித்தவர்களே நாம்தாம்!!

alexander dog

ரிக் வேதத்தில் நாய் வளர்ப்பு
இதற்கு என்ன ஆதாரம்?

1. இந்த நாய் வளர்க்கும் வழக்கமும், அதற்குப் பெயர் வைக்கும் வழக்கமும் ரிக் வேத காலத்திலேயே துவங்கிவிட்டது. இப்பொழுது அமெரிக்கர்கள் ரிக் வேதத்துக்குக் கொடுக்கும் கி.மு.1700 என்று கொண்டாலும் இற்றைக்கு 3700 ஆண்டுகளுக்கு முன்னரே இந்திரன் வளர்த்த சரமா என்ற பெண் நாய் மற்றும் அதன் இரண்டு குட்டிகள் சரமேயஸ் பற்றி ரிக் வேதப்பாடல்கள் மூலம் அறிகிறோம் (R. V. 7-55-2 and 10-108). இதை வழக்கம் போல கிரேக்கர்கள் ‘’திருடி’’ பெயரை ஹரமஸ் என்று மாற்றி கதை எழுதிவிட்டனர். அவர்கள் மூலம் வேறு பல கலாசாரங்களிலும் இது நுழைந்துவிட்டது. கிரேக்கர்களுக்கு ‘’எஸ்’’ வராது என்பதால் சிந்து என்பதை ஹிந்து என்பது போல சரமாவும் ஹரமஸ்—ஹெர்மஸ் ஆகிவிட்டது. ஆக முதலில் நாய் வளர்த்தவர்களும் நாமே. அதற்குப் பெயர் சூட்டு விழா நடத்தியதும் நாமே!

2.தர்மபுத்திரன் தனது ஆட்சியை முடித்துக் கொண்டு, சகோதரர்களுடன் வடதிசைப் பயணத்தை மேற்கொண்டான். அதாவது சாகும் வரை நடந்து கொண்டே இருக்க வேண்டும். தமிழ் மன்னர்களும் இதைச் செய்ததை கோப்பெருஞ்சோழன் — -பிசிராந்தையார் – பொத்தியார் கதைகளில் விரிவாகச் சொல்லிவிட்டேன். ஒவ்வொரு சகோதரராக ‘’தொப்பு தொப்பு’’ என்று கீழே விழுந்து இறந்தனர். ஆனால் தர்மபுத்திரன் மட்டும் வடதிசையை நோக்கி தொடர்ந்து நடந்தார். அவருடன் ஒரு நாய் மட்டும் தொடர்ந்து சென்றது. சொர்க்கத்தின் வாசலுக்குச் சென்ற போது, ‘’வெரி ஸாரி, சொர்க்கத்தில் நாய்களுக்கு அனுமதி கிடையாது. அதை வெளியில் அம்போ என்று விட்டுவிட்டு உள்ளே வாருங்கள்’’ — என்றனர் வாயிற் காப்போர். தருமனோ அதற்கு மறுத்து விட்டான். பின்னர் யம தர்மராஜனே இவ்வாறு தர்மன் இறுதிவரை தர்மத்துடன் இருக்கிறானா என்பதைக் காணவந்ததாக மஹாபாரதம் கதையை முடிக்கிறது.
ரிக் வேத நாயும், மஹாபாரத நாயும் யமனுடன் தொடர்புடைய கதைகள்.

macedonia

தமிழ் கல்வெட்டில் நாய்
3.மஹேந்திர பல்லவன் கால எடுத்தனூர் நடுகல்லில் கோவிவன் என்ற நாயின் பெயர் வருகிறது. தமிழர்களும் 1400 ஆண்டுகளுக்கு முன் நாய்களை வளர்த்து அவைகளுக்கு அன்பான பெயர் சூட்டுவதும் அதை யுத்த களம் வரை அழைத்துச் சென்றதும் இதனால் தெரிகிறது. யுத்த வீரனுடன் அந்த நாயும் இறக்கவே அது கல்வெட்டில் அழியா இடம் பெற்று அமரத்துவம் பெற்று விட்டது. ஆக பாரதம் முழுதும் ஒரே கலாசாரம் இருந்தமைக்கு நாயும் சான்று பகரும்!

4.பசுமாடுகளுக்கு அன்பான பெயர் சூட்டுவதால் காமதேனு சுரபி போன்ற பெயர்களை நாம் அறிகிறோம். பாற்கடலைக் கடைந்த போது வெளியே வந்த குதிரை உச்சைஸ்ரஸ், யானை ஐராவதம் ஆகியவற்றின் கதைகளை நாம் அறிவோம். பகவத்கீதையில் உச்சைஸ்ரவஸ் பெயர் வருவதால் அதுவும் அழியா இடம் பெற்றுவிட்டது.

Greece 1956 1000 Greek Paper Money Banknote

தமிழ் குதிரை காரி!
5. கடை எழு வள்ளல்களில் ஒருவர் காரி. அவர் வளர்த்த குதிரை பெயரும் காரி. அலெக்சாண்டர் மட்டும்தான் குதிரை வளர்த்தாரா? நாமும் வளர்த்தோம்; அதற்கு நாமகரணமும் செய்தோம்!

6. இது எல்லாவற்றையும் விட யானைதான் அதிகமான பெயர்களுடன் நம் இலக்கியங்களில் அடிபடுகிறது:
முருகனின் யானையின் பெயர் பிணிமுகம்
இந்திரன் யானையின் பெயர் ஐராவதம்
மஹாபாரத கால யானையின் பெயர் அஸ்வத்தாமா. அஸ்வததாமா அதோஹத: — என்று தர்மன் (பொய்) சொன்னது போரின் போக்கையே மாற்றிவிட்டது.
கிருஷ்ணன் அடக்கிய யானையின் பெயர் குவலயாபீடம்.
புத்தர் அடக்கிய யானையின் பெயர் தனபால.
உதயணன் அடக்கிய யானையின் பெயர் நளகிரி
சம்ஸ்கிருத நாடகத்தில் வரும் யானையின் பெயர் சந்திரலேகா.
நமது காலத்தில் உயிர்நீத்த குருவாயூர் யானையின் பெயர் கேசவன்.
அஷ்ட திக் கஜங்கள் என்று எண் திசைகளுக்குக் காவலாக இருக்கும் யானைகளுக்கும் தனித்தனி பெயர்கள் உண்டு.

ரிக்வேத காலம் முதல் இன்று வரை வழங்கும் பெயர் சூட்டும் இவ்வழக்கம் நம்மால் உலகம் முழுதும் பரப்பபட்டது என்பதில் இனியும் ஐயம் உண்டோ?

கொடிகள், சின்னங்கள், தேசிய கீதங்கள் என்று எல்லவாற்றையும் சொல்லிக் கொடுத்து மனித குலத்தை நாகரீகப்படுத்தியதற்கு ரிக் வேதம் முதல் இன்று வரை தொடர்ச்சியாக சான்றுகள் கிடைக்கையில் இதை மறுப்பதற்கு எவருக்குத் துணிவு வரும்?

பாரத சமுதாயம் வாழ்கவே! வாழ்க, வாழ்க!
பாரத சமுதாயம் வாழ்கவே! – ஜய ஜய ஜய…………. (பாரதியார்)

–சுபம்–

அலெக்ஸாண்டரும் பட்டினத்தாரும்

அலெக்ஸாண்டர் மாமன்னன். 2300 ஆண்டுகளுக்கு முன் மாசிடோனியாவில் இருந்து புறப்பட்டு இந்தியா வரை வந்து உலகின் பல நாடுகலை வென்ற பெரு வீரன். இந்து மதக் கருத்துக்களில் பெரும் ஈடுபாடுகொண்டவன் என்பதை நிர்வாண சாமியார்களுடன் அலெக்ஸாண்டர் என்ற கட்டுரையில் எழுதியுள்ளேன். நிலையாமை பற்றி இந்து மதம் சொல்லும் கருத்தை அவன் வியப்பான ஒரு செயல் மூலம் உலகிற்கு உணர்த்திச் சென்றான்.

 

சாகும் தருவாயில் அவனுக்கு ஞானோதயம் வந்தது. தன்னுடைய அமைச் சர்களை அழைத்தான். நான் இறந்த பின்னர் என்னுடைய உடலை அடக்கம் செய்யுங்கள். ஆனால் என்னுடைய உடல் முழுவதையும் மூடிவிட்டு இரண்டு கைகளும் திறந்த நிலையில் வெளியே தெரியும்படி விட்டுவிடுங்கள் என்றான். அவன் உலகிற்கு அளிக்க விரும்பிய செய்தி இதுதான்: வரும்போது எதையும் கொண்டுவரவில்லை. போகும்போது எவ்வளவு பெரிய மன்னனாலும் வெறும் கைகளோடுதான் போக வேண்டும்.

 

அலெக்ஸாண்டர் கூறியபடியே அவரது சடலம் புதைக்கப்பட்டது. அலெக்ஸாண்ட்ரியா நகரில் தங்க சவப்பெட்டியில் அவன் சடலம் புதைக்கப்பட்டது. அலெக்ஸாண்டர் எதை செயலில் செய்து கட்டினானோ அதை பட்டினத்தார் பாடலில் பாடிவிட்டார்.

 

பட்டினத்தார் சோழ நாட்டின் காவிரிபூம்பட்டினத்தில் பெரும் வணிகர் குலத்தில் பிறந்தார். கொடிகட்டிப் பறந்தும் அவருக்கு குழந்தைகுட்டி இல்லை. திருவிடைமருதூர் தோட்டத்தில் கண்டு எடுக்கப்பட்ட ஒரு பிள்ளையை வளர்ப்பு மகனாக வளர்த்தார். ஒரு நாள் அந்தப் பையன் ஒரு சிறிப பெட்டியை அம்மாவிடம் கொடுத்துவிட்டு மாயமாய் மறைந்தான். அதில் காதற்ற ஊசியுடன் ஒரு புதிரையும் எழுதிவிட்டுச் சென்றான். அது பட்டினத்தாரின் கண்களைத் திறந்தது. சிவபெருமானே அந்தப் பையன் உருவில் தன் மகனாக வளர்ந்தான் என்று அவர் எண்ணினார். அவர் பாடிய திரு ஏகம்ப மாலையில் வரும் பாடல் அலெக்ஸாண்டரின்  கருத்தை அப்படியே பிரதிபலிக்கிறது. இதோ 2 பாடல்கள்:

Countries conquered by Alexander the Great.

 

பிறக்கும்பொழுது கொடுவந்ததில்லை பிறந்து மண்மேல்

இறக்கும்பொழுது கொடுபோவதில்லை இடை நடுவில்

குறிக்கும் இச்செல்வம் சிவன் தந்ததென்று கொடுக்கறியா

திறக்கும் குலாமருக்கு என் சொல்லுவேன்கச்சி ஏகம்பனே

 

முடிசார்ந்த மன்னரும் மற்றுமுள்ளோரும் முடிவில் ஒரு

பிடி சாம்பராய் வெந்து மண்ணவதுங் கண்டு பின்னும் இந்தப்

படிசார்ந்த வாழ்வை நினைப்பதல்லால்  பொன்னின் அம்பலவர்

அடிசார்ந்து நாம் உய்யவேண்டும் என்றே அறிவாரில்லையே.

 

(பட்டினத்தார் பாடல் கருத்துக்களை நான் முன்னர் எழுதி வெளியிட்ட “பட்டினத்தாருடன் 60 வினாடி பேட்டி” என்ற கட்டுரையில் காண்க.)

Stamp for Alexander, Greece, year 1968

(இலக்கியத் திருடர்களுக்கு அன்பான வேண்டுகோள்: நான் 20 தலைப்புகளில் எழுதிய “60 வினாடி பேட்டிகள்” பல பிளாக்-குகளில் என் பெயரும் (லண்டன் சுவாமிநாதன்), பிளாக் பெயரும் இல்லாமல் அவர்களே எழுதியது போல வெளியாகி இருக்கிறது. தமிழ்த் தாய்க்கும் தமிழ் எழுத்தாளர்களுக்கும் மதிப்பு கொடுங்கள்)