திருப்பாவை அதிசயம் 2- ‘அல்குல்’ பற்றி ஆண்டாள் பேசலாமா? (Post.9175)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9175

Date uploaded in London – –22 January 2021      

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

‘திருப்பாவை அதிசயம்-1’ இதே பிளாக்கில் ஜனவரி 18-ம் தேதி வெளியானது.

திருவல்லிக்கேணி தமிழ்ச்சங்க நூறாவது வெளியீடு 1957-ல் வெளியானது. அதன் பெயர் ‘திருப்பாவை மாலை’. அதில் அரிய  விஷயங்கள் தொகுத்து அளிக்கப்பட்டுள்ளன . இதோ மேலும் ஒரு அரிய தகவல்.

பதினோராவது திருப்பாவையில் “புற்றரவல்குல் புனமயிலே” — என்ற வரி வருகிறது.

ஆண்டாள் ஒரு Teen age Girl டீன் ஏஜ் கேர்ல் – பருவப் பெண் ; அவள் அல்குல் (நிதம்பம், பெண்குறி, female genital organ) பற்றிப் பாடலாமா ? அதுவும் மற்ற பருவப் பெண்கள் இடத்தில் ?

திருப்பாவையின் வரிகளின்  பொருள் —

“புற்றிற் கிடக்கும் பாம்பின் படம் போன்ற நிதம்பத்தையும் காட்டில் இஷ்டப்படி திரியும் மயில் போன்ற சாயலையும் உடையவளே” ……………..

சங்கத் தமிழ் பாடல்களில் சுமார் 100 பாடல்களில் ‘அல்குல்’ இடம்பெறுகிறது. தொல்காப்பியரும் விடவில்லை. அவரும் அல்குலைப் பாடுகிறார்.

இதற்கு ‘திருப்பாவை  மாலை’ புஸ்தகம் தரும் விளக்கத்தை முதலில் காண்போம்.

“புற்றரவு அல்குல் புனமயிலே — என்றது மல்லி நாடாண்ட மடமயில் பணிப்பு.

புற்று  அரவு அல்குல்- புறம்பு புறப்பட்டுத் திரிந்து புழுதி படைத்த உடம்புடைத்தாயிருக்கையன்றியே  தன் இருப்பிடந்தன்னிலே கிடக்கும் அரவரசின் படமும் கழுத்தும் போல ஒளியையும் அகலத்தையும் உடைய அல்குலை உடையவளே! என்றபடி. இதனால் அவயவ ஸோபை  கூறப்பட்டது .

இங்கு ஆராய வேண்டுவது ஒன்று உண்டு. அதாவது இவர்கள் தாங்களும் பெண்டிராயிருக்கச்செய்தெ இவளுடைய அல்குலை வருணித்தது பொருந்துமா என்பது. அது அவர்கள் நெஞ்சினால் ஆண்மை பூண்டமையால் என்க.

இவர்கள் இத்தனை சொல்லுவான்  என்னென்னில் ?

‘யாஸ் த்ரியோ த்ருஷ்ட வத்யஸ்தா : பும்பாவம் மனசாயுயு:’

என்னும்படியே  பெண்களை ஆண்களாக்கும் அழகிறே ;

‘பும்ஸாம் த்ருஷ்டி சித்தாப  ஹாரிணம்’ – என்று அவன் ஆண்களை பெண்ணுடையுடுக்கப்  பண்ணுமாப்போலே ” (மூவாயிரப்படி)

முன்னையது மஹாபாரதம் உத்யோக பர்வத்துள்ளது . தாமரையிதழ் போன்ற கண்களுடையவளாய் பாஞ்சாலத்தேசத்தரசன் மகளான திரெளபதி நீராடுகையில் பெரிதான அவள் அல்குலை எந்த ஸ்த்ரீகள் பார்த்தார்களோ அவர்கள் நெஞ்சினால் ஆண்மை அடைந்தனர்  என்பது முழு ஸ்லோகத்தின் பொருள்.  பின்னையது ஸ்ரீ ராமாயணத்துள்ளது (அயோத்யா காண்டம் 3-28).

சந்திரனை விட மனோகரமான திருமுக மண்டலத்தை உடையவரும் அத்யந்தம் இஷ்டமான தோற்றத்தை உடையவருமான செளந்தர்யாதி குணங்கள் என்ன, தானாதி குணங்கள் என்ன, இவற்றால் புருஷர்களுடைய கண்களையும் நெஞ்சையும் கவரா நின்ற ஸ்ரீ ராம மூர்த்தியை தசரத சக்ரவர்த்தி பார்த்தார் என்பது அம் முழுச்  ஸ்லோகத்தின் பொருள் .

சிந்தாமணியார் இலக்கணையின் அழகைப் புகழுமிடத்து ,

‘பெண்டிரும் ஆண்மை வெஃகிப் பேதுறு முலையினாள் ‘, ‘வாண் மதர் மழைக்க நோக்கி , ஆண் விருப்புற்று நின்றாரவ்வளைத் தோளினாரே ‘ என்றது காண்க

கம்ப நாடர் தாடகை வதைப்  படலத்து

…………… கண்ணிற் காண்பரேல்

ஆடவர் பெண்மையை யவாவுந்  தோளினாய்

(தம் தம் கண்களாற் காண்பார்களாயின் ஆண்மக்களும் பெண் தன்மையை விரும்பும் தோள்களின் அழகையுடைய ஸ்ரீ ராமபிரானே ) என ராமனைக் கோசிகர் கூறியதாகக் கூறினர்.

வாராக வாமனனே அரங்கா வட்ட நேமிவல

வாராகவா உன் வடிவு  கண்டால் மன்மதனு மட

வாராக ஆதரஞ்  செய்வன் …………………………

(வராகவதாரம் செய்தவனே ! வாமன மூர்த்தியானவனே! வட்ட வடிவமான சக்ராயுதத்தைப் பிரயோகித்தலில் வல்லவனே! ரகு குல ராமனாகத்  திருவவதரித்தவனே ! நினது திருமேனியழகைப் பார்த்தால் , எல்லோராலும் காமிக்கப்படும் கட்டழகு  உடைவனான மன்மதனும் தான் உன்னைக் கூடுதற்கு மகளிராய்ப் பிறக்க ஆசைப்படுவன் )

என்பது திவ்விய கவி பிள்ளைப் பெருமாளைய்யங்கார் அருளிச் செய்த திருவரங்கத்தந்தாதி

அங்கனம் ஆண் பெண்ணாகிலும் சாதாரணப் பெண்மையேயன்றி  எம் பெருமானுக்கு உரியவளாகும்  ஒரு பிராட்டியின் நிலையை அடையுமாறு எங்கனம் எனில் , கூறுதும் .

பரமாத்மாவினது தலைமையும் , ஜீவாத்மாவினது அடிமையும், ஜீவாத்மா  பரமாத்மாவுக்கே உரியதாயிருக்கையும் புருஷோத்தமனாகிய எம்பெருமானது  பேராண்மைக்கு முன்  உலக முழுதும் பெண் தன்மையாதலாலும் , ஜீவாத்மாவினது சுவாதந்திரியமின்மையும் , பாரதந்திரியமும் , தாம் எம்பெருமானது சேர்க்கையால் இன்பத்தையும், பிரிவினால் துன்பத்தையும் அடைதலும் அவனையே தம் கரணங்கள் எல்லாவற்றாலும் அனுபவித்து , ஆனந்தத்திலும் முதலிய காரணங்களால் தம்மைப் பிராட்டிமாரோடு ஒக்கக் கூறத்தகும் . சிருங்காரரஜப் பிரதானமான அகப்பொருட் கிளவித் துறைகளை  தோத்திரப் பிரபந்த ரூப மான  ஞான நூல்களிற் கூறுதற்குக் காரணம் , கடுத்தின்னாதானைக் கட்டி பூசிக் கட்டத்  தின்பிப்பார் போலச் சிற்றின்பங் கூறும் வகையாற் பேரின்பத்தைக் காட்டி நாட்டுதல் என்பர் ஆன்றோர்.”

Xxxx

என்னுடைய விளக்கம் …

ராமாயணம், மஹாபாரதம் , திருப்பாவை, சங்கத் தமிழ் பாடல் அனைத்திலும் ‘அல்குல்’ வருணனை வருகிறது. ஆதிகால இந்துக்கள் ‘செக்ஸ்’ SEX பற்றிப் பேசுவதற்கு (no taboos) தயங்கவில்லை; அஞ்ச வில்லை. வாத்ஸ்யாயன மகரிஷி காம சூத்திரம் புஸ்தகம் எழுதியத்திலிருந்தே இது தெரியும். உலகின் முதல் செக்ஸ் புஸ்தகம் அதுதான். அதுமட்டுமல்ல 2000 ஆண்டுகளுக்குப் பின்னர்தான் இது போன்ற முழு நீள விஞ்ஞான அடிப்படையிலான செக்ஸ் SEX புஸ்தகங்கள் வந்தன.

இரண்டாவது விஷயம்0– ஆண் அழகைப் பார்த்து ஆண்களே பெண்களாக மாறி அவரை  அனுபவிக்க ஆசைப்பட்டதும் , இதே போல பெண் அழகைப் பார்த்த பெண்களே ஆண்களாக மாறி அவரை அனுபவிக்க ஆசைப்ப ட்டதும் கவிகளின் அதீத கற்பனையே. அதாவது அவ்வளவு அழகு.!! இது கவிகளின் கற்பனை.

மூன்றாவது விஷயம் – பக்தி இலக்கியத்தில் இது பொருந்துமா ? நாயக – நாயகி பாவம் என்பது இந்துக்களுக்கே உரிய ஒரு சிறப்பு அம்சம் . அப்பர் பாடல் முதல் மீரா பஜன் வரை காணலாம் . மேம் போக்காக காம ரசம் நிரம்பியதாகத் தோன்றும்; ‘கோபி’யர் செயல்பாடு, ஜெயதேவரின் அஷ்டபதி ஆகியவற்றுக்கு விவேகானந்தர் போன்றோர் அளித்த விளக்கங்களைப் படித்தோருக்கு,இது உடல் ரீதியான வேட்கை அல்ல என்பது விளங்கும்.

நாலாவது விஷயம் —கழிசடைகளை வடி கட்ட இது உதவும். கம்பன் 10, 000 பாடல் பாடினாலும் அதிலுள்ள காமரசப் பாடல்களை மட்டும் ரசித்து கம்பரசம் புஸ்தகம் எழுத்தும் கசடுகளை, கழிசடைகளை இனம்பிரித்துப் பார்க்க இப்பாடல்கள் உதவும்.

ஐந்தாவதாக ஒரு விளக்கம்– அழகாக தன பெண்ணுக்கு தாழம்பூ பூச்சூட்டி பின்னல் பின்னும் தாய்மார்கள் குழந்தையின் மீது கண் பட்டு விட கூடாதென்பற்காக கன்னத்தில் ஒரு கறுப்புப் பொட்டு – திருஷ்டி கழிய — வைப்பார்கள் . இனிப்பு பண்டம் செய்யும் சமையற்காரர்கள் , இனிப்பைத் தூக்கிக் காட்ட கொஞ்சம் உப்பு போடுவார்கள் . எங்கள் லண்டனில்  தயாராகும் சாக்லேட்டுகளிலும் கூட கொஞ்சம் உப்பு இருக்கும். இப்படி சில காமப்பாடல்கள் மூலம் கவிஞர்கள் சுவை கூட்டினர் போலும் . அறிஞர்கள் இந்த இரண்டு மூன்று காமப்பாடல்களில் சிக்காமல் மேலே உயர்வர். கழிசடைகள் இவற்றின் ஆராய்ச்சியில் இறங்கி அதல பாதாளத்துக்கு சென்று உழல்வர்.

–subham—

Tags-  திருப்பாவை, அதிசயம்-2, அல்குல், ஆண்டாள் , நிதம்பம்