புறநானூற்றில் நரகம்! திருக்குறளில் நரகம்!! (Post No.4407)

Written by London Swaminathan 

 

Date: 18 NOVEMBER 2017

 

Time uploaded in London- 10-51 am

 

 

Post No. 4407

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

தமிழர்களின் பண்பாடு இந்துப் பண்பாடே. அவர்களுக்கு பாவம், புண்ணியம், சுவர்க்கம், நரகம், மறு பிறப்பு, உருவ வழிபாடு, விதி, கர்ம வினை, யாகம், யக்ஞம் முதலியவற்றில் நம்பிக்கை உண்டு என்பது சங்கத் தமிழ் இலக்கியத்தின் 18  மேல் கணக்கு நூல்களிலும் , திருக்குறள் அடங்கிய 18 கீழ்க்கணக்கு நூல்களிலும் விரவிக் கிடக்கின்றன. தொல்காப்பியமோவெனில் அறம், பொருள், இன்பம் (தர்ம-அர்த்த- காம) என்ற சொற்றொடரைப் பல இடங்களில் பகர்கின்றது.

 

இப்பொழுது நரகம் பற்றி மட்டும் காண்போம்.

 

ரிக் வேதத்தில் ஒரே ஒரு நரகம் பற்றி மட்டும் காண்கிறோம்.

மத நம்பிக்கையற்றோரை அவன் அதள பாதாளத்தில் தள்ளுகிறான் என்ற வாசகம் (9-73) ரிக்வேதத்தில் வருகிறது மனு நீதி நூல் 21 வகை நரகங்களை நாலாவது அத்தியாயத்தில் பட்டியல் இடுகிறது. சிவ புராணம் 28 வகை நரகங்களைச் சொல்லும். பவிஷ்ய புரா ணக் கதையில் யமலோகத்தில் நரகப் பகுதியில் நடக்கும் சித்திரவதைகள் பற்றி வருகிறது ஆனால் ரிக் வேதத்தில் சித்திரவதை முதலியன பற்றி இல்லை.

 

மரம் வெட்டினால் நரகம், பொய் சொன்னால் நரகம், பசுவைக் கொன்றால் நரகம்– என்று ஒவ்வொரு தப்புக்கும் ஏற்ற 21 வகையான நரகங்கள் பற்றி மனு பேசுகிறார். அதை மற்ற  ஒரு கட்டுரையில் விரிவாகக் காண்போம்.

 

தமிழில் அளறு (Tamil) , நிரயம் (Sanskrit word) என்ற இரு சொற்களில் நரகம் குறிப்பிடப்படுகிறது. சமயம் தொடர்பான சொற்கள் பெரும்பாலும் சம்ஸ்கிருதமாகவோ, அல்லது தமிழ் மயமாக்கப்பட்ட சம்ஸ்கிருதச் சொற்களாகவோ இருக்கும் ( எ.கா. யூப, ஆகுதி). ஆனால் நிரயம், அளறு என்ற சொற்கள் தூய தமிழ்ச் சொற்களாக இருப்பதால் இது இற க்குமதி செய்யப்பட்ட விஷயமன்று, தமிழர்களின் பழைய நம்பிக்கை என்பது புலப்படும்.

 

அளறு என்பது சங்க காலத்தில் சேறு, சகதி என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டு, திருவள்ளுவர் காலத்தில் நரகம் என்ற பொருளுக்கு ‘பதவி உயர்வு’ பெற்றுவிடுகிறது!

சுவர்க்கம் (துறக்கம்) பற்றிப் பெரும்பாலான இடங்களில் வருவதால் தமிழர்கள் புண்ணியவான்கள் என்பதும் பெறப்படும்.

 

முதலில் புறநானூற்று நரகத்தைப் பார்ப்போம்:-

 

இது மிகவும் பழைய பாட்டு. சுமார் 2100 ஆண்டுகளுக்கு முன் நரிவெரூஉத் தலையார் பாடியது.

சேரமான் கருவூர் ஏறிய ஒள்வாட் கோப்பெருஞ்சேரல் இரும்பொறையைக் கண்ட ஞான்று, நின் உடம்பு பெறுவாயாக! என, அவனைச் சென்று கண்டு, தம் உடம்பு பெற்று நின்ற நரிவெரூஉத் தலையார் பாடியது:-

 

எருமை அன்ன கருங்கல் இடை தோறு,

ஆனின் பரக்கும் யானைய, முன்பின்,

கானக நாடனை! நீயோ, பெரும!

நீ ஓர் ஆகலின், நின் ஒன்று மொழிவல்:

அருளும் அன்பும் நீக்கி, நீங்கா

நிரயம் கொள்பவரொடு ஒன்றாது, காவல்,

குழவி கொள்பவரின், ஓம்புமதி!

அளிதோ தானே; அது பெறல் அருங்குரைத்தே”.

 

பொருள்:

எருமை போன்ற கரிய பாதைகள் உடைய இடமெல்லாம் பசுக்கூட்டம் போல யானைகள் உலவும் காட்டிற்கு உரிய சேர மன்னனே! நீயோ பெருமகன்! ஆகையால் ஒன்று சொல்கிறேன், கேள். அருளையும் (கருணை) அன்பையும் நீக்கியவர்கள் நரகத்தில் வீழ்வர். அத்தகையோரோடு சேராதே. பெற்ற தாய் குழந்தையைப் பாதுகாப்பது போல, உன்னுடைய நாட்டு மக்களைக் காத்து வருவாயாக. அரச பதவி எளிதில் கிடைப்பதன்று. ஆகையால் கருணையுடன் செயல்படு.

 

(நரகம் பற்றிய கருத்து, ரிக் வேதக் கருத்தை ஒட்டிச் செல்கிறது).

 

திருக்குறளில் நரகம்!

 

பேதை என்பவன் யார் தெரியுமா? ஒரு பிறவியிலேயே எல்லா அட்டூழியங்களையும் செய்து ஏழு பிறவிகளில் அனுபவிக்க வேண்டிய நரகத் துன்பத்தைச் சேர்த்துக் கொள்பவன் பேதை!

 

ஒருவருக்கு லாட்டரி பரிசு கிடைத்துவிட்டால், அவனுக்கு என்ன கவலை? இனி ஏழு தலைமுறைகளுக்குக் கவலை இல்லை என்போம்.

ஒருவனுடைய தந்தை நிறைய பணத்தை ஒருவனுக்கு உயில் எழுதி வைத்துவிட்டு இறந்தால், அவன் எதற்கு வேலைக்குப் போகவேண்டும்;  அவன் அப்பன் ஏழுதலை முறைக்கான சொத்தை விட்டுச் சென்றிருக்கிறானே! என்று பேசுவது உலக வழக்கு.

 

இது போல ஒருவன் எல்லா தீய செயல்களையும் செய்வதைப் பார்த்தான் வள்ளுவன்; அம்மாடி! கவலையே இல்லை; இவன் ஏழு தலைமுறைகளுக்கு அல்லது ஏழு பிறவிகளுக்கு வேண்டிய நரகத் துன்பத்தை ஒரே பிறவியில் செய்து விட்டானே! சபாஷ்! சபாஷ்! என்கிறார் வள்ளுவர்.

 

இன்னுமொரு குறளில் செப்புவான்:

வரைவிலா மாணிழையார் மென்றோள் புரையிலாப்

பூரியர்கள் ஆழும் அளறு (919)

 

ஆரியர்களுக்கு எதிர்ப்பதம் பூரியர்கள்; இதிலிருந்து ஆங்கிலச் சொல் ஸ்பூரியஸ் SPURIOUS என்பது வந்தது

 

பொருள்

ஒழுக்கம் இல்லாத வேசிகளின் தோள், கீழ்மக்கள் (பூரியர்) சென்று விழும் நரகம் ஆகும்.

 

இதையே கிருஷ்ண பகவான் கீதையிலும் புகல்வார்:

 

த்ரிவிதம் நரகஸ்யேதம் த்வாரம் நாசனமாத்மன:

காமக்ரோதஸ் ததா லோபஸ் தஸ்மாதேதத் த்ரயம் த்யஜேத் (கீதை 16-21)

பொருள்:

ஒருவனுக்கு நாசத்தை விளைவிக்கும் நரகத்திற்கு மூன்று வாசல்கள் இருக்கின்றன; அவை காமம், க்ரோதம், லோபம்; அதாவது பெண்வழிச் சேரல், சினம் அல்லது கோபம், பேராசை. ஆகையால் இம்மூன்றையும் விலக்கிவைக்க வேண்டும்.

 

 

கீதை போன்ற சமய நூல்களில் நிறைய இடங்களில் நிரயம் பற்றிக் காணலாம்.

இறுதியாக இன்னும் ஒரு குறள்:-

உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊனுண்ண

அண்ணாத்தல் செய்யாது அளறு (255)

 

ஒருவன் மாமிசம் சாப்பிட மாட்டான் என்ற தர்மத்தின் அடிப்படையில் உயிர் வந்து, உடம்பில் தங்கி இருக்கிறது. அப்படி அவன் அதையும்  மீறி மாமிசம் சாப்பிட்டால், நரகம் வாயைத் திறந்து ‘லபக்’ என்று ஆளை விழுங்கிவிடும்.  பின்னர் நரகத்தின் வாய் திறக்காவே திறக்காது.

ஆளின் கதி– சகதி (அளறு என்பதற்கு சேறு, சகதி என்றும் நரகம் என்றும் பொருள் உண்டு; அலறு என்றாலும் பொருத்தமே. மக்கள் அலறும் இடம்தானே!!

திருவள்ளுவரின் கற்பனை மிகவும் அருமையான கற்பனை;  ‘நீ ஒரு உயிரைக் கொன்று முழுங்கினாய் அல்லவா? இப்பொழுது பார்! உன்னை நான் விழுங்கி விட்டேன்; இனி மேல் வாயைத் திறக்கவே மாட்டேன்’ என்று நரகம் சொல்லுமாம்.

 

திருக்குறள் பொது மறையன்று. யார் இந்து மதக் கொள்கைகள், கொல்லாமை ஆகியவற்றில் நம்பிக்கை கொண்டுள்ளோரோ அவர்களின் மறைதான் திருக்குறள்.

 

இதோ நான் முன் சொன்ன கதை

பவிஷ்ய புராணத்தில் சுவையான யமன் …

https://tamilandvedas.com/…/பவிஷ்ய-புராணத்தி…

 

1 Oct 2017 – பவிஷ்ய புராணத்தில் யமன் பற்றிய ஒரு சுவையான கதை உளது; அதை நான் இப்போது உரைப்பேன்: …யமன் கதை, பவிஷ்ய புராணம், விஜயா, பாவ புண்ணியம், நரகம் … கழுதைக்கும் ராஜா மகளுக்கும் கல்யாணம்; இந்திரன் மகன் பற்றி …

 

TAGS: நரகம், அளறு, நிரயம், பாவம், புறநானூறு, மனு

–சுபம், சுபம் —