அளவறிந்து வாழ்க! (Post No.2710)

borosilicate-glass-beaker-lf

Written by S NAGARAJAN

Date: 10 April 2016

 

Post No. 2710

 

Time uploaded in London :–  7-07  AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

வள்ளுவர் வழி

 

அளவறிந்து வாழ்க!

 

ச.நாகராஜன்

 

 

அளவறிந்து வாழ்க!

 weights

உலகில் யாரும் சொல்லாத சூத்திரங்களைத் தொகுத்துச் சுருக்கமாக ஆங்காங்கே குறளில் சொல்லியுள்ளார் வள்ளுவர்.

வாழ்க்கை நெறிகளைப் பற்றிச் சொல்லும் போது அளவறிந்து என்ற வார்த்தையை அவர் மூன்று இடங்களில் பயன்படுத்துகிறார்.

 

 

அளவறிந்து உண்க!

 

ஒன்றின் மூலம் பெறுதற்கரிய வாழ்க்கையைப் பெற்ற போது நீண்ட நாள் வாழ வழியைச் சொல்கிறார்.

 

அற்றால் அளவறிந்து உண்க அஃது உடம்பு                        பெற்றான் நெடிது உய்க்கும் ஆறு     குறள் 943

 

அளவறிந்து உண்க என்பதன் மூலம் ஆழ்ந்த பொருளை விளக்குகிறார். அதனால் உடம்பு பெற்ற பயனைக் கொண்டு நீண்ட நாள் வாழ முடியும்.

 

 

அளவறிந்து கற்க!

 

அடுத்து அளவறிந்து கற்க என்கிறார் அவர். கற்க வேண்டியதைக் கசடறக் கற்பதோடு அளவறிந்து கற்க வேண்டும் என்பது அவர் அறிவுரை.

 

ஆற்றின் அளவறிந்து கற்க அவையஞ்சா                 மாற்றம் கொடுத்தற் பொருட்டு         குறள்  725

 

இதனால் எந்த அவையின் முன்னாலும் பேசலாம். உலகப் பெரும் தலைவர் ஆகலாம் என்பது அவரது வழிகாட்டுதல்!

ounce

 

அளவறிந்து ஈக!

 

அடுத்து பெற்ற பொருளைப் பேணிக் காக்க ஒரு வழியையும் கூறுகிறார். அளவறிந்து ஈக என்பது அவரது அறிவுரை.

 

ஆற்றின் அளவறிந்து ஈக அது பொருள்                         போற்றி வழங்கும் நெறி              குறள் 477

 

வருவாய்க்குத் தக்கபடி கொடுக்க வேண்டும் என்பது சுருக்கமான சூத்திரம் போன்ற அறிவுரை.

ஒன்றின் மூலம் நீண்ட நாள் வாழ வழி தந்து, இன்னொன்றின் மூலம் அவையஞ்சா தலைமை கொள்ள வழி காட்டி கடைசிக் குறளின் மூலம் சம்பாதித்த பொருளைப் போற்றும் நெறியைக் காட்டுகிறார்.

 

 

அளவறிந்து வாழவில்லையேல்?

 

இப்படி அளவறிந்து வாழவில்லை என்றால் என்ன ஆகும்?

அதற்கும் அவர் பதில் தருகிறார் இப்படி:

 

அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உள போல                   இல்லாகித் தோன்றாக் கெடும்                    குறள் 479

 

தன் வலிமையை அறிந்து வாழ்; தன் வரவை அறிந்து வாழ்; தன் அறிவை அறிந்து வாழ்; தன் உடம்பை அறிந்து வாழ்; அப்படி வாழவில்லையேல் அது வாழ்க்கை நன்றாக இருப்பது போல ஒரு மாயத் தோற்றத்தைக் காட்டி உன்னைக் கெடுத்து விடும் என்கிறார் அவர்.

 

units_of_measure

அறம் நிற்கும் இடம்!

 

அளவறிந்தார் நெஞ்சத்  தறம் போல் நிற்கும்                 களவறிந்தார் நெஞ்சில் கரவு           குறள் 288

 

அறம் எங்கே நிற்கும்? உலகின் தர்ம மரபுகளை அறிந்து வாழ்க்கையை அளவோடு வாழ வேண்டும் என்று நினைப்பவரின் மனதில் அறம் நிற்கும். அது எப்படி இருக்கிறது என்றால் பாவச் செயல்களைச் செய்வதிலேயே பழக்கப்பட்டவர்களின் மனதில் வஞ்சனை நீங்காது நிலைத்துக் குடி கொள்வது போல இருக்கும்!

என்ன அழகான விளக்கம்!

 

 

அளவறிந்து என்ற சொல்லின் பொருளை அறிய வள்ளுவரின் குறளில் அளவு என்ற வார்த்தையை அவர் பயன்படுத்திய இதர சில குறள்களையும் படித்தால் முழுப் பொருளையும் அறியலாம்.

வாழ்க்கை முழுவதும் கற்க வேண்டிய நூல் வள்ளுவரின் குறள்!

அதைப் பயில்வது தமிழரின் பாக்கியம்!

 

********