
திசை தப்பி வந்த அழகிக்குப் புகலிடம் (Post No.9747)
Post No. 9747
Date uploaded in London – – –18 JUNE 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
if u want the article in word format, please write to us.
கொங்குமண்டல சதகம் பாடல் 66
திசை தப்பி வந்த அழகிக்குப் புகலிடம் கொடுத்துக் காத்த பண்பாளன்!
ச.நாகராஜன்
பாண்டிய நாட்டில் வாழ்ந்து வந்த செட்டி குலத்துப் பெண்மணி ஒருத்தி தன் கணவனுடன் காஞ்சிபுரத்திற்கு ஒரு முறை தல யாத்திரையாக வந்தாள். சற்று சித்தப்பிரமை உடைய அவள் வழி தப்பி, கணவனைப் பிரிந்து தன் போக்கில் சென்று குன்றவர்த்தனம் என்னும் ஊரை அடைந்தாள்.
அங்கு ஒரு வேளாளப் பெருமகன் வீட்டில் அவள் அடைக்கலம் புகுந்தாள். அவள் வரலாற்றைக் கேட்ட வேளாளன், “பயப்படாதே, தங்காய், இங்கேயே நீ இருக்கலாம். உன் கணவன் வருமளவும் இது தான் உன் தாய் வீடு” என்று சொல்லி அவளை உபசரித்துப் பாராட்டினான். அவளது கணவனோ தன் மனைவியை எங்கு தேடியும் காணாமல் கடைசியில் வேளாளன் அனுப்பிய செய்தியைக் கேட்டு குன்றவர்த்தனம் ஊருக்கு வந்தான். அவனைத் தங்கையின் கணவன் என்பதால் மைத்துனன் முறை கொண்டாடி அளவளாவி அந்த இருவருக்கும் முறைப்படி ஆடைகள் மற்றும் ஆபரணங்களை வழங்கி அவர்களுடன் கூடவே அவர்கள் வீடு வரை சென்று அவர்களை விட்டு விட்டு வந்தான் அந்த வேளாளன்.
இப்படிப்பட்ட உயர் பண்புகளை உடைய வேளாளர் கொண்ட தொண்டைமண்டலத்தின் சிறப்பைச் சொல்லவும் முடியுமா?
செண்டுகொண்டு குன்றை மோதி யன்று வென்ற பாண்டியன்
றேசவாச மாதுளந்தி கைத்துசுற்றி சுற்றரை
விண்டுதொண்டை மண்டலத்தை கண்டுகுன்ற வர்த்தனம்
மேவி வாடி தேம்பி நின்ற மின்னையன்னை வீடெனக்
கொண்டுகொண்ட பதிபின்வந்து கூடகூட னாடதிற்
கொண்டுபோய்நற் சீதனங் கொடுத்துசீர் நடத்தியே
பண்டு போலிருத்தி தங்கை முறைமைபெற்ற சீலன்பூ
பாலர் தங்கு லத்தில் வந்த பாலகிருஷ்ண சாமியே
என்ற தனிப்பாடல் அழகுற இந்த சம்பவத்தை எடுத்துரைக்கிறது.
இப்படிப்பட்ட அருமையான வேளாளர் பெருமக்களைக் கொண்டது தொண்டைமண்டலம் என்று தொண்டைமண்டல சதகம் தனது 66ஆவது பாடலில் பெருமையுறக் கூறுகிறது. பாடல் இதோ:-
கொத்தலர் கோதை வியன்பாண்டி மண்டலக் கொம்பைத் தன்பால்
வைத்திருந்தாங்கவ டன்கேள்வன்றேடி வரவவற்கே
யுய்த்திருவோர்க்கும் வரிசையுமாற்றி யுடனுஞ்சென்று
மைத்துனக்கேண்மை படைத்ததன்றோ தொண்டை மண்டலமே
பாடலின் பொருள் :- தெற்கின் கண் உள்ள பாண்டிய மண்டலத்தில்ருந்த கொத்தாகிய மலர்களை அணிந்த கூந்தலை உடைய பூங்கொம்பு போலும் அழகுடைய பெண் ஒருத்தி திசை தப்பி வந்து ஒரு வேளாளன் வீட்டில் அடைக்கலம் புக, அந்த வேளாளன் அவளைத் தன் சகோதரியாகப் பாவித்து உபசரித்து ஆதரித்து வைத்திருந்து, அந்தப் பெண்ணைத் தேடி வந்த அவள் கணவனையும் தன் மைத்துனன் முறை கொண்டு உபசரித்து அவ்விருவருக்கு ஆடை ஆபரணம் உடைய வரிசை கொடுத்து, அவர்களுடன் தானும் உடன் சென்று அவர்களை அவர் ஊரில் அவர்களைச் சேர்ப்பித்து விட்டு வந்தான். இவ்வாறு அறநெறி வழுவாது நின்று பிறர் கற்பையும் மானத்தையும் சிதையாமல் காத்து ஆதரிக்கும் நல்லொழுக்கம் உடைய வேளாளர்க்கு இருப்பிடமாக அமைவது இந்தத் தொண்டைமண்டலமே!
***

tags- திசை, அழகி, புகலிடம்,