ஒரு அவசர செய்தியை அனைவருக்கும் பரப்புவோம்!

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,328

Date uploaded in London – –   12 NOVEMBER  2021     

  Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ச.நாகராஜன் எழுதியுள்ள சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகள் பற்றிய பத்து உரைகள் ஆல் இந்தியா ரேடியே சென்னை வானொலி A அலைவரிசையில் (720 Hz) இன்று முதல் (11-11-2021) முதல் ஒலிபரப்பாகிறது. நேரம் தினமும் காலை 6.55 (மாநிலச் செய்திகள் முடிந்த பின்னர்). இதை ஆன்லைன் வாயிலாகவும் கேட்டு மகிழலாம்.

இணையதளம் : https://onlineradiofm.in/tamil-nadu/chennai/all-india-air-chennai-pc

11-11-2021 காலை ஒலிபரப்பான முதல் உரை கீழே தரப்படுகிறது.

ஒரு அவசர செய்தியை அனைவருக்கும் பரப்புவோம்!

ச.நாகராஜன்

இன்றைய வேக யுகத்தில் ஒரு அவசர செய்தியை அனைவருக்கும் பரப்ப வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். ஆகவே அனைவரும் ஒரு நிமிடம் தங்கள் வேலையை நிறுத்தி விட்டு இந்த அவசர செய்தி என்ன என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். நாம் வாழும் பூமியின் குரல்வளை ஒவ்வொரு விநாடியும் நெரிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது என்பது தான் அதிர்ச்சியூட்டும் அவசரச் செய்தி.

புவி வெப்பம் கூடிக் கொண்டே இருப்பதால் ஒவ்வொரு விநாடியும் உலகெங்கும் வாழும் மக்கள் பெரும் அபாயத்திற்கு உள்ளாகிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை விட வேறு எது தான் அவசரச் செய்தியாக இருக்க முடியும்!

நச்சுப் புகையான கார்பன் டை ஆக்ஸைடு உலகெங்கிலும் மிக அதிகமாக பரவிக் கொண்டே இருக்கிறது என்றும் இதனால் புவி வெப்பமாவது கூடிக் கொண்டே போகிறது என்றும் உலகின் அறிவார்ந்த விஞ்ஞானிகள் எச்சரித்துக் கொண்டே இருக்கின்றனர். 1850ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை எடுத்துக் கொண்டால் பூமியின் வெப்பநிலை 1.5 (ஒன்று புள்ளி ஐந்து) டிகிரி ஃபாரன்ஹீட் கூடி இருக்கிறது. இது இன்னும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. இதனால் கடற்கரை ஓரங்களில் உள்ள நகரங்கள் கடல் பொங்கி உள்ளே நுழைவதால் அழியும். வெப்பநிலை உயர்வால் மழை பொழிவது குறையும். பல நாடுகளிலும் வரலாறு கண்டிராத அளவில் பஞ்சங்கள் உருவாகும். வெப்ப அலைகள் மனிதர்களின் உடல்நிலையைப் பாதித்து ஆரோக்கிய சீர்கேடு பெருமளவில் ஏற்படும்; அநியாயமாக மனித உயிர்கள் அழியும்! கடல் அமிலத்தன்மை உடையதாக ஆகி விடும். கடல் வாழ் உயிரினங்கள் அழியும். இதன் ஆரம்ப அறிகுறிகள் இப்போதே தெரிய ஆரம்பித்து விட்டன. 

ஆகவே ஒவ்வொரு மனிதனும் விஞ்ஞானிகளால் அறிவிக்கப்பட்ட இந்த அவசரநிலை பிரகடனத்தை உள்ளார்ந்து மனதில் ஏற்று புவி வெப்பம் உயர்வதற்கு முக்கியமான காரணங்களுள் தலையாய ஒன்றாக இருக்கும் நச்சுப்புகையான கார்பன் டை ஆக்ஸைடு வெளியேற்றத்தைத் தடுக்க வேண்டும். அதற்கு முதல் படியாக வாகனங்களிலிருந்து வெளியேற்றும் நச்சுப்புகை வெளியேற்றத்தைத் ஒவ்வொருவரும் தடுக்க வேண்டும்.

நச்சுப் புகையைக் கக்கும் வாகனப் பயன்பாட்டை முடிந்த அளவில் குறைப்பது, மின்சாரத்தினால் இயங்கும் வண்டிகளை வாங்க ஆரம்பித்துப் பயன்படுத்துவது, சூரிய ஆற்றலை முடிந்த அளவில் அதிகப்படியாக உபயோகப்படுத்துவது, குறுகிய தூரங்களில் உள்ள கடைகள் உள்ளிட்டவற்றிற்கு நடந்தோ அல்லது சைக்கிளிலோ செல்வது, ஒரே பாதையில் செல்லும் பலரும் தங்களுக்குள் ஒரு புரிதலை ஏற்படுத்திக் கொண்டு ஒரே வாகனத்தில் பயணம் செய்வது, முடிந்தவரையில் தனி நபருக்கென காரில் செல்லாமல் பஸ்களைப் பயன்படுத்துவது, அல்லது உள்ளூர் மின் ரயில் போக்குவரத்தைப் பயன்படுத்துவது போன்ற பல வழிகளையும் தங்களுக்கு உகந்த முறையில் கடைப்பிடித்தால் பெருமளவு நச்சுப் புகை வெளியேறுவது குறையும் அல்லவா?

நச்சுப் புகை பற்றிய அவசர செய்தியைப் பரப்புவோம்; அதைப் பெருமளவு குறைக்கும் வழிகளைப் பின்பற்றுவோம். புவியைக் காப்போம்; அதன் மூலம் நம் சந்ததியினரைக் காப்போம்!

**

tags– புவி வெப்பம், அவசர செய்தி, நச்சுப் புகை