2 கதைகள்- பனை விதையும் ஆலம் விதையும் (Post No.5331)

Akbar worshiping Sun

Written by London swaminathan

Date: 17 August 2018

 

Time uploaded in London – 7-34 AM  (British Summer Time)

 

Post No. 5331

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

தேம்படு பனையின் திரள்பழத் தொருவிதை

வானுற வோங்கி வளம்பெற வளரினும்

ஒருவர்க்கிருக்க நிழலாகாதே –

நறுந்தொகை (வெற்றி வேற்கை)

அதிவீரராம பாண்டியன்

 

இனிமை மிக்க பனையின் ஒரு பழத்தை விதையாக ஊன்றி அது வானோங்கி செழித்து வளர்ந்தாலும் ஒருவர்கூட நிற்கக் கூடிய நிழலை அது தராது.

மொகலாய மன்னனான ஷாஜஹானின் புதல்வனான அவுரங்கசீப் , கல்வி கேள்விகளில் சிறந்தவன்; ஆனால் மஹா மூர்கன். மதவெறியன்; பேராசை பிடித்த கொலைகாரன். தனது மூன்று சஹோதர்களை அவர்களின் புதல்வர்களோடு கூண்டோடு கொலை செய்து சிங்காதனம் ஏறினான். ஷாஜஹானை நீ கட்டிய தாஜ்மஹலை பார்த்துக்கொண்டே செத்துப்போ என்று சாகும் வரை சிறையில் அடைத்தான். ராஜ்யத்தை சரியாக ஆளத் தெரியாமல் குடிமக்களையும் சிற்றரசர்களையும் பகைத்துக் கொண்டான். அனைவராலும் வெறுக்கப்பட்டு, முடிவில் உதவி செய்ய யாரும் இல்லாமல் கஷ்டப்பட்டு செத்தான். அவனோடு மொகலாய சாம்ராஜ்யம் முடிவுக்கு வந்தது. பின்னர் பெயரளவுக்கு அரசர் என்று ஓரிருவர் இருந்தனர். அரச சம்பத்து கோடிக்கணக்கில் இருந்தும் அவனோ அவனது குடிமக்களோ மகிழ்ச்சியாக வாழ முடியவில்லை. அவன் பனை விதபோல ஓங்கி வளர்ந்தான். ஆனால் ஒருவருக்கும் நிழல் தர முடியவில்லை.

xxx

 

தெள்ளிய வாலின் சிறு பழத்தொரு விதை

தெண்ணீர்க் கயத்துச் சிறுமீன் சினையினும்

நுண்ணிதே யாயயினும் அண்ணல் யானை

அணிதேர்ப் புரவி ஆள் பெரும்படையொடு

மன்னர்க்கிருக்க நிழலாகும்மே

நறுந்தொகை (வெற்றி வேற்கை)

அதிவீரராம பாண்டியன்

 

தெள்ளி எடுக்கத்தக்க ஆல மரத்தின் சிறு விதையானது, தெளிந்த நீர்க்குளத்தில் உள்ள சிறிய மீனின் முட்டையை விடச் சிறிதானாலும், பெருமை பொருந்திய யானையோடு அழகிய தேரும், குதிரையும் காலாட் படைகளும் கொண்ட மன்னரோடு தங்குவதற்கு நிழல் தரும்.

 

பெரிய விதையுடைய பனை மரம் நிழல் தராது. சிறிய விதையுடைய ஆல மரம் மன்னரின் நாற்படைக்கும் நிழல் தரும். ஆகவே மக்கள் இரு தரப்பட்டவர்கள்; சிலர் பனை மரம்; சிலர் ஆலமரம்.

 

ஹுமாயூன் புத்திரனான அக்பர் நிராதரவற்ற நிலையில், தாயாரான ஹாமிடாவுக்கும் சாப்பாடு போட முடியாத நிலையில் ஸிந்து தேச காட்டுப் பகுதியில் பிறந்தார். அவர் பட்ட கஷ்டம் சொல்லத் தரமன்று; தனது 18ஆவது வயதில் வளர்ப்புத் தந்தையான பைராம்கானை அடக்கிவிட்டு தானே சிங்காதனம் ஏறினார். பின்னர் படிப்படியாக உயர்ந்து வட இந்தியா முழுதையும் வசப்படுத்தி ஆட்சி புரிந்தார். அவர் ஆட்சிக் காலத்தில் போர்கள் நடந்தன; ஆனால் மக்கள் கலகம் என்பது கிடையாது. அவரும் ஜாதி மத வேறுபாடின்றி கல்வி, கேள்விகளில் சிறந்தோருக்கு பெரிய பதவிகளைக் கொடுத்தார்.

மக்களின் சௌகரியங்களுக்கு வேண்டிய அனைத்தையும் செய்தார். எப்போதும் தத்துவ விசாரத்தில் ஈடுபட்ட அறிஞர் குழுவால் சூழப்பட்டு கீர்த்தி பெற்றார். அவர் கூட்டிய தர்பாரில் பொதுமக்கள் யார் சிபாரிசு இன்றியும் மனுக்களைத் தரமுடிந்தது. உடனே அதற்கு நடவடிக்கையும் எடுத்து புகழ் பெற்றார். மக்கள் அவரை பழமரத்தை நாடும் பறவைகள் போல நாடினர்.

 

-SUBHAM-

அண்ணன் தலையைக் கண்டு ஆனந்தம் அடைந்த அவுரங்கசீப் (Post No.4540)

Image of Shah jahan

Written by London Swaminathan 

 

Date: 24 DECEMBER 2017 

 

Time uploaded in London- 12-42

 

 

Post No. 4540

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks

 

 

மொகலாயர் வரலாறு கொலைகார வரலாறு; அப்பாவை மகன் கொல்வது பரம்பரையாக நடந்தது; சஹோதர்களை சஹோதரர்கள் தீர்த்துக்கட்டுவதும் தொடர்ந்து நடந்தது.

 

நிக்கலோ மனூச்சி (Nicolao Manucci  1638- 1717) என்பவர் இதாலிய பயணி; அவர் இந்தியாவுக்கு வந்து மொகலாய மன்னர்களிடம் வேலை பார்த்தார். தாரா சிகோஹ், ஷா ஆலம், ராஜா ஜெய் சிங், கிராட் சிங் ஆக்யோர் சபைகளில் வேலை பார்த்தார். அவர் நிறைய சுவையான — சோகமான- விஷயங்களை எழுதிவைத்துள்ளார். இதோ ஒரு சோகக் கதை.

Image of Aurangazeb

ஷாஜஹானின் மகன் தாரா சிகோஹ்; அவருடைய தம்பி மதவெறி பிடித்த அவுரங்கசீப்.

 

மொகலாய மன்னன் ஷாஜஹானுக்கு பல புதல்வர், புதல்வியர் உண்டு. அவருக்கு அடுத்தாற்போல அரசு கட்டிலைப் பிடிப்பது யார் என்பதில் அவருடைய புதல்வர் தாரா ஷிகோஹுக்கும் அவுரங்கசீப்புக்கும் இடையே பெரிய போட்டி நடந்தது போட்டி அல்ல; யுத்தமே நடந்தது. ஷாஜஹானைச் சிறைப்பிடித்து ஆக்ரா  சிறையில் வைத்தனர். இங்கிருந்தவாறே தாஜ் மஹலைப் பார்த்துக்கொண்டு செத்துப்போ என்று விட்டனர்.

 

 

தாரா சுகோஹ், தோற்கடிக்கப்பட்ட செய்தியை ஒரு தூதன் அவுரங்கசீப்பிடம் தெரிவித்தான். ஆனால் தோற்றுப்போன தாரா ஓடிவிட்டதாகவும் சொன்னான். உடனே அவுரங்கசீப் ஒரு சபதம் செய்தான். அண்ணனைச் சிறைப்பிடித்து தலையை வெட்டி அவர்களுடைய தந்தையான ஷாஜஹானுக்கு அனுப்பிவைப்பேன் என்று வீர சபதம் எடுத்தான். இதை இதாலிய பயணி மனூச்சி அப்படியே எழுதி வைத்துள்ளான்.

அவுரங்க சீப்பின் துஷ்ட ஆசையும் நிறைவேறியது. தாராவின் தலையை அவன் முன்னால் கொண்டு வந்தனர். ஒரு கத்தியை எடுத்து மூன்று வெட்டு வெட்டினான் . இதை கண் முன் காட்டாமல் தூக்கிக்கொண்டு போங்கள் என்று கட்டளையிட்டான்.

 

அவுரங்கசீப்பின் சஹோதரி (தாராவுக்கும் சஹோதரிதான்) ரோஷநாரா பேஹம் இந்தத் தலையை நமது தந்தை ஷாஜஹானிடம் கொண்டு காட்ட வேண்டும் என்று அவுரங்கசீப்பைத் தூண்டிவிட்டாள். அவள் அன்று மாலையே ஆக்ரா கோட்டையில் ஒரு விருந்தும் ஏற்பாடு செய்தாள்; தாரவைக் கொன்றதற்காக.

 

 

தலை வந்தபோது சிறைச் சாலையில் ஷாஜஹான் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தான். தாரவின் தலையைப் பார்த்தவுடன்  ‘ஓ’ என்று கதறி ‘டின்னர் டேபிள்’ மீதே மயக்கம் போட்டு விழுந்தான்.

 

அவுரங்க சீப் அந்த தலையை மூன்றுமுறை வெட்டியபோது அந்தத் தலை ஹா, ஹா, ஹா என்று சிரித்ததாகவும் சொல்லுவர்.

 

ஆக்ராவில் தாஜ்மஹல் உள்ளேயுள்ள கல்லறையில் அந்தத் தலையைப் புதைக்குமாறு அவுரங்கசீப் கட்டளை இட்டதாக மனூச்சி எழுதியுள்ளார்.

அதே காலத்தில் இந்தியாவுக்கு வந்த பெர்னியர் என்ற மேல்நாட்டு யாத்ரீகரும் இதே சம்பவம் பற்றி எழுதிவைத்துள்ளார்.

 

 

தாராவின் மரண தண்டனையை நிறைவேற்றிய அவுரங்க சீப்பின் ஆட்கள், அவன் தலையை அவுரங்க சீப்பிடம் கொண்டுபோனபொது அதை ஹுஆமாயூன் கல்லறையில் புதைக்கச் சொன்னானாம்.

 

தாராவின் புகழைப் பாடும் பல பாடல்களை மக்கள் நாட்டுப் புறக் கதைப் பாடலாக பாடியதாகவும் அதைத் தடுக்க அவுரங்கசீப் முயன்றும் முடியவில்லை என்றும் அக்கால வரலாற்று ஆசிரியர்கள் எழுதி வைத்துள்ளனர்.

 

தாராவின் தலையை ஒரு அழகான பெட்டியில் வைத்து உங்கள் மகன் உங்களுக்கு அனுப்பிய பரிசு என்று படைவீரர்களிடம் சொல்லச் சொன்னானாம். அவர்கள் அப்படிச் சொன்னபோது ‘அட, என் மகன் என்னை ஞாபகமாவது வைத்துக் கொண்டிருக்கிறானே என்று சொல்லிக் கொண்டு பெட்டியைத் திறந்தானாம். தாராவின் தலை ரத்தவெள்ளத்தில் இருந்ததைக் கண்டு மூர்ச்சை அடைந்தானாம்.

 

தாராவின் தலையை சீவுவதற்கு முன்னர் அவனை விலங்கு மாட்டி யானை மீது வைத்து ஊர்வலமும் விட்டானாம் அவுரங்கசீப்.

 

தாராவின் மரணம் இந்துக்களுக்கு ஒரு பெரிய இழப்பு. அவன் ஏழாவது சீக்கிய குருவின் நண்பன். இந்து மத உபநிஷத்துகளை பாரசீக மொழியில் மொழி பெயர்த்தவன்

 

–சுபம்–

இசை மேதையின் அபார ஞாபக சக்தி!

Written by  London Swaminathan 

 

Date: 14 DECEMBER 2017 

 

Time uploaded in London-  7-26 am

 

 

Post No. 4493

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

ஆர்டுரோ டோஸ்கானினி  (ARTURO TOSCANINI) இசை இயக்குநர் ஆவார். ஆரம்ப காலத்தில் அவர் ஸெல்லோ (CELLO) வாத்தியம் வாசிப்பவராக இருந்தார். பிரபல வயலின் வித்வான்கள்; சாஹித்ய கர்த்தாக்ளுடன்க நல்ல தொடர்பு வைத்திருந்தார். வயலின் மேதைகள்  ரோமானினி, என்ரிகோ போலோ, இசை அமைப்பாலர் போல்சோனி ஆகியோர் ஒரு முறை சந்தித்தனர் அவர்கள் அப்பொழுது போல்சோனி எழுதிய அடாகியோ ஒன்றை வாசித்தனர்.

 

அடாகியோ (ADAGIO) என்பது ஆமைவேகத்தில் ஊர்ந்து செல்லும் ஒரு (ITEM) ஐட்டம். நம்மூர் தில்லானாவுக்கு எதிர்ப்பதம் என்றும் சொல்லலாம்.

 

மற்றொருத் தடவை போல்சோனி தவிர மற்ற எல்லோரும் சந்திக்கும் வாய்ப்பு கிடடைத்தது. அவர்களுக்குள் போல்ஸோனி பற்றி சம்பாஷணை எழுந்தது. அடடா! அவருக்குதான் இசை அமைப்பதில் என்ன திறமை? அவர் மட்டும் இப்பொழுது இருந்தால் அடகியோவை மீண்டும் வாசித்து இன்புறலாமே! அதை எழுதி வைத்துக் கொள்ளாமல் விட்டுவிட்டோமே என்று அங்கலாய்த்தனர்.

 

திடீரென்று டோஸ்கானினி  ஒரு பேப்பரும் பென்ஸிலும் கொடுங்கள் என்றார். காகிதம் கையில் கிடைத்தவுடனே, ம்ள மளவென்று அடாகியோவுக்கான நொடேஷன் எல்லாவற்றையும் ஸ்வரம் தப்பாமல் எழுதிக் கொடுத்தார். அனைவரும் அதை வாசித்து மகிழ்ந்தனர்.

அந்த அடாகியோவில் நான்கு பகுதிகள் உண்டு

நம்ம ஊரில் ஒரு சாகித்யகர்த்தா எழுதிய ஒரு பாடலை அவர் கச்சேரி முடிந்து திரும்பியவுடன் அவர் பாடிய புதிய பாடலை ஸ்வரம் தப்பாமல் எழுதிக்கொடுப்பது போலாகும் இது.

 

XXXX

ஆசை, அகந்தை, அலட்சியம்!!!

 

ப்ரூனோ வால்டர்ஸ் (BRUNO WALTERS) நல்ல இசை அமைப்பாளர். மிகவும் அமைதியானவர்; அடக்கம் உடையவர்; பழகுதற்கு இனியர்.

அவர் முதல் தடவை நியூயார்க் பிலார்மானிக் நிகழ்ச்சி நடத்தியபோது முதல் ஸெல்லோ வாத்யம் (CELLIST) வாசிப்பவற்கான நாற்காலியில் ஆல்ப்ரெட் வாலென்ஸ்டைன் (ALFRED WALLENSTEIN)  உட்கார்ந்து கொண்டார்.அத்தோடு நில்லாமல் ஒத்திகை நடந்தபோதும் சரி, இன்னிசை நிகழ்ச்சியிலும் சரி,  நடத்துநர் ப்ரூனோவைக் கண்டுகொள்ளவில்லை. வேண்டுமென்றே அலட்சியம் செய்தார். அங்குமிங்கும் ‘பராக்’ பார்த்துக் கொண்டிருந்தார். வேறு ஒரு இசை அமைப்பாளராக இருந்தால், கோபத்தில் அவரை திட்டியிருப்பார். ஆனால் ப்ரூனோ அவரிடம் சென்று, என்னைத் தனியாகச் சந்தியுங்கள் என்றார்.

 

வாலென்ஸ்டைனும் தனிச் சந்திப்புக்காக வந்தார்.

 

“வாலன்ஸ்டன், உங்களுக்கு என்னதான் வேண்டும்? ஒருமாதிரி இருக்கிறீர்களே, உங்கள் ஆசை அபிலாஷைகள்தான் என்ன? சொல்லுங்கள்”.

 

வாலன்ஸ்டைன் சொன்னார்: “நான் ஒரு சிறந்த இசை நடத்துநர் (CONDUCTOR) ஆக வேண்டும்”.

 

உடனே ப்ரூனோ, அமைதியாகச் சொன்னார்:

“அதற்கென்ன, ஆகுங்களேன் ஆனால் வாலன்ஸ்டைன் போன்றவரை முதல் வரிசையில் உட்கார வைத்துவிடாதீர்கள்!”

 

XXXX

சங்கீத அவுரங்கஸீப்புக்கு சிபாரிசுக் கடிதம்!

 

லியோபோல்ட் ஸ்டோகோவ்ஸ்கி (LEOPOLD TOKOWSKI) என்பவர் பெரிய இசை அமைப்பாளர் (MUSIC CONDUCTOR); அவருக்கு ஒரு பிரபல வயலின் வித்வான் சிபாரிசுக் கடிதத்துடன்,  வேறு ஒரு இளம் வயலின் வித்வானை அனுப்பி இருந்தார்.

 

அது நல்ல சிபாரிசு என்பதால், ‘இப்போதைக்கு பிலடெல்பியாவில் இசைக் குழுவில் இடம் இல்லை. சில நாட்கள் பிலடெல்பியாவில் தங்கினால் ஏதேனும் உதவி செய்வேன்’ என்றார் ஸ்டோகோவ்ஸ்கி.

 

வந்த ஆளின் அதிர்ஷ்டம், ஒரு முக்கியக் கச்சேரிக்கு முன், இசைக்குழு வயலின் வித்வானுக்கு உடம்பு சரியில்லாமல் போய் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.

 

ஆகையால் சிபாரிசுக் கடிதத்துடன் வந்தவரிடம் டோகோவ்ஸ்கி வந்து, பீதோவனின் (BEETHOVEN SYMPHONY) பாட்டுக்கு நீங்கள் ஈடுகொடுத்து வாசிப்பீர்களா? என்றார். அவரும் தலையை அசைத்துவிட்டு, அவ்வாறே வாசித்தார்.

 

ஆனால் நேரம் ஆக ஆக அவர் முகத்தில் கொஞ்சமும் சுரத்து இல்லை; பிடிக்காத விஷயமாக இருந்தால் குழந்தைகள் எப்படி நெளியுமோ, முகத்தைச் சுழிக்குமோ அப்படி சுழித்தார்.

டோகோவ்ஸ்கி அவரிடம் சென்று என்ன விஷயம்? என்று கேட்டார்.

உடம்பெல்லாம் சரியா? ஏதேனும் உடம்பு கோளாறா? டாக்டரைக் கூப்பிடவா? என்று கேட்டார்.

அவர் இல்லை என்று சொன்னவுடன்,

மிகவும் கோபத்துடன், பின்னர் ஏன் இப்படி முகத்தை, குரங்கு மூஞ்சி போல வைத்துக்கொண்டு முழிக்கிறீர்கள் என்று விரட்டினார்.

 

அதுவா……….. அதுவா,,,,,,,,,,,,,,,,, எனக்கு சங்கீதம் பிடிக்கவே பிடிக்காது! — என்றார் கோணமூஞ்சி வயலின் வித்வான்!

 

 

Tags:-சங்கீத சம்பவங்கள், அபார ஞாபக சக்தி, வயலின் வித்துவான், அவுரங்கசீப், அகந்தை

 

–சுபம்–

யானையின் எடை என்ன? அவுரங்கசீப்பை அசத்திய படகுக்காரன்!

vesswic-86-1024x678

Article No. 2045

Written by London swaminathan

Swami_48@yahoo.com

Date : 5  August  2015

Time uploaded in London : – 12-05

மஹாராஷ்டிர  மாநிலத்தில் புனே நகருக்கு அருகில் துலாப்பூர் என்ற சிற்றூர் இருக்கிறது. இவ்வூர் பல சிறப்புகளை உடையது:

1.துலாப்பூர் என்று பெயர் ஏற்படக் காரணமான இரண்டு சம்பவங்கள்

2.வீர சிவாஜியின் புதல்வன் சம்பாஜி,வெட்டிக் கொலை செய்யப்பட இடத்தில் உள்ள சமாதி

3.பீமா, இந்த்ராயனி, பாமா ஆகிய மூன்று நதிகள் சங்கமிக்கும் இடத்திலுள்ள சங்கமேஸ்வரர் சிவன் கோவில்

4.சம்பாஜியின் உடலைத் தைத்து ஈமச் சடங்கு செய்த செவாலி இனம்.

OLYMPUS DIGITAL CAMERA

சத்ரபதி சம்பாஜி

காட்டுமிராண்டி வம்சம்

மொகலாய சாம்ராஜ்யத்தை நடுநடுங்கவைத்த சிவாஜியின் மகன் பெயர் சம்பாஜி. அவனைப் பிடித்த அவுரங்கசீப், அவனது உடலைக் கண்டம் துண்டமாக வெட்டி பீமா நதியில் தூக்கி எறிந்தான். நம் நாட்டின் மீது படை எடுத்த முஸ்லீம்கள் வெறியர்கள். எதிரிகளைச் சாகடிக்கும் முறையும் அவர்கள் சடலங்களை அவமதிக்கும் விதமும் அவர்களை காட்டுமிராண்டிகள் என்பதைத் தெள்ளிதின் விளக்கும். ஆப்கனிஸ்தானத்தில் இருந்த உலகிலேயே மிக உயரமான 2000 ஆண்டுப் பழமையான புத்தர் சிலைகளை குண்டு வைத்து தகர்த்ததையும், இராக், சிரியாவிலுள்ள சுமேரிய, பாபிலோனிய சின்னங்களை சின்னாபின்ன மாக்கியதையும் இப்பொழுதும் உலகமே கண்டிக்கிறது.

Tulapur-5sambhaji-maharaj-samadhi-tulapur

(சம்பாஜியின் 2 சமாதிகள்)

இது அவுரங்க சீப்புக்கும் முன்னால் துவங்கிய அநாகரீக வழக்கம். மதுரைக்கு வந்த மொராக்கோ நாட்டுப் பயணி இபின் படுடா எழுதிய குறிப்புகள் மிகவும் பிரசித்தமானவை. மதுரையை ஆண்ட கியாசுத்தீன் என்பவன்,  வீர வல்லாளன் என்ற ஹொய்சாள மன்னனைப் பிடித்து ஆசை வார்த்தை காட்டி அத்தனை செல்வத்தையும் பிடுங்கிக் கொண்டு அவன் தோலை உரித்து, வைக்கோலை அடைத்து, மதுரைக் கோட்டை வாசலில் தொங்கவிட்டான் என்று 1341ல் இபின் படுடா எழுதிவைத்தான்.

மதுரை மீது படை எடுத்து வந்த விஜய நகர மன்னன் குமார கம்பன்னன் 1346-ஆம் ஆண்டில் துலுக்க ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்து 40 ஆண்டுகள் மூடிக் கிடந்த மீனாட்சிம்மன் கோவிலை திறந்துவத்தான். அவனுடன் வந்த அவனது மனைவி கங்காதேவி “மதுரா விஜயம்” என்னும் நூலில் மதுரைத் தெருக்களின் இருமருங்கிலும் ஈட்டியில் சொருகப்பட்ட பாண்டிய நாட்டு வீரர் தலைகள் இருந்ததை அப்படியே அவளுடைய சம்ஸ்கிருத நூல் “மதுரா விஜய”த்தில் எழுதி வைத்துள்ளார்.

இதே காட்டுமிராண்டிததனத்தை அவுரங்க சீப்பும் செய்தான். சிவாஜியின் புதல்வன் சம்பாஜியின் உடலை வெட்டி பீமா ஆற்றில் எறிந்தான். அந்தக் கரையில் வாழ்ந்த வீரப் புதல்வர்கள் நீந்திச் சென்று உடல் உறுப்புகளைச் சேகரித்து அவைகளை ஒன்றாகத் தைத்து சம்பாஜிக்கு இந்து முறைப்படி தகனக் கிரியைகளைச் செய்தனர் ஆகையால் இவர்களுக்கு இன்றுவரை செவாலியர் (தையல் போட்டோர்) என்ற பெயர் நீடித்து வருகிறது.

சம்பாஜிக்கு துலாப்பூரிலும், தகனம் நடந்த ‘வது’ என்னும் கிராமத்திலும் இரண்டு சமாதிகள் உள்ளன.

sangameswar

(சங்கமேஸ்வரர்  கோவில்)

துலாக் கதை 1

துலா என்றால் நிறுக்கும் தராசு. சங்க இலக்கியத்தில் ஒரு சிறுமிக்கு மரண தண்டனை விதித்த நன்னனிடம் எடைக்கு எடை தங்கம் தருவதாக ஊரே கெஞ்சியது. இது பற்றி முன்னரே எழுதி விட்டேன். தமிழகத்திலும் சுமேரியாவிலும், சிபிச் சக்ரவர்த்தி கதையிலும் இப்பொழுது குருவாயூர், திருப்பதி முதலிய கோவில்களிலும் துலா பாரச் சடங்குகளைப் பார்க்கிறோம். இதேபோல அக்காலத்தில் ஒருவர் எடைக்கு எடை 24 பொருள்களை நிறுத்துக் கொடுத்ததால் இந்த ஊருக்கு துலாப்பூர் என்று பெயர் ஏற்பட்டது; முதலில் நகர்கவன் என்ற பெயரே இருந்தது.

அடில்ஷா சபையில் பெரிய பதவி வகித்த முராபந்த் ஜகதேவின் உடலில் வெள்ளைப்பட்டை விழுந்ததால் அவர் துலாப்பூரில் வசித்த ருத்ர தேவ் மஹராஜ் என்னும் மஹானின் காலில் வந்து விழுந்தார். அவர், முராபந்தின் வியாதியைக் குணப்படுத்தியவுடன் தங்கம், வெள்ளி முதலிய எல்லாவற்றையும் தன் எடைக்கு எடை தந்தார். அத்தனையையும் ஏழை மக்களுக்கும், சங்கமேஸ்வரர் கோவிலுக்கும் தானம் செய்யும்படி சாமியார் கட்டளையிட்டார். ஒரு முறை ஒரு யானையின் எடைக்கு தங்கத்தை நிறுத்துக் கொடுததால் இவ்வூருக்கு துலாப்பூர் என்று பெயர் உண்டாகியது.

elephant weight

துலாக் கதை 2: யானையை நிறுக்க முடியுமா?

இன்னொரு கதை அவுரங்க சீப் பற்றியது. சிவாஜியின் மகனை வெட்டிக்கொலை செய்த பின்னர் பீமா நதியைக் கடக்க யானை, குதிரைகளுடன் வந்த போது ஒரு படகுக்காரனைச் சந்திதார். படகில் எவ்வளவு எடை ஏற்ற முடியும் என்று கவலை கொண்டார்.

படகுக்காரனிடம் எவ்வளவு எடை ஏற்ற முடியும் என்று கேட்டார். அவனோ தான் உலகிலுள்ள எந்தப் பொருளுக்கும் எடை சொல்ல முடியும் என்று பெருமை பேசினான். உடனே அவுரங்கசீப், எங்கே, என் யானையின் எடை என்ன? என்று சொல் பார்ப்போம் என்றார்.

மன்னவா, இதுவா கஷ்டம்? இதோ சொல்கிறேன். உங்கள் யானையை அதோ அந்தப் படகில் நிறுத்திவைக்கும் படி உங்கள் வீரர்களுக்குக் கட்டளை இடுங்கள் – என்றான்.

மன்னனும் அப்படியே செய்தான். படகின் வெளிப்பகுதி எந்த அளவுக்கு தண்ணீரில் அமிழ்ந்தது என்று குறித்து வைத்துக் கொண்டான். பின்னர் யானையை இறக்கிவிட்டு கற்களை ஏற்றச் சொன்னான். நீர்மட்டம் பழைய குறியீட்டுக்கு வரும் வரை கற்களை ஏற்றச் செய்தான் யானை ஏறியபோது அடைந்த நீர்மட்டத்தை எட்டியவுடன் அந்தக் கற்களை நிறுத்தான். அந்த எடையைக் குறித்துக் கொண்டு அவுரங்க சீப்பிடம் யானையின் எடை இதோ, என்று கொடுத்தான்.

pluto3

(படம்: புளூட்டோ கிரஹத்தில் யானையி்ன்  எடை)

படகுக்காரனின் புத்திசாலித்தனத்தை மெச்சி அவனுக்கு பெரும் பரிசுகள் கொடுத்தான் அவுரங்க சீப்.

—-சுபம்—

முகலாய சாம்ராஜ்ய அழிவுக்கு மகாகவி பாரதி கூறும் காரணம்!-1

IMG_4438

Article No.2012

Written by S NAGARAJAN

Swami_48@yahoo.com

Date : 23  July 2015

Time uploaded in London : காலை 8-26

 

By .நாகராஜன்

 

பாரதியாரின் தெளிவான சிந்தனை

மகாகவி பாரதியாரின் தெளிவான சிந்தனையும், தீர்க்கதரிசனமும் எண்ணி எண்ணி வியக்கப்பட வேண்டிய விஷயங்கள்!

அவர் தொடாத விஷயங்களே இல்லை; பல பிரச்சினைகளில் தெளிவான தம் வழிகாட்டுதலைத் தருவது அவருடைய தனி பாணி.

 

புராதனமான பாரதப் பண்பாட்டு உலகிலேயே சிறந்த பண்பாடு என்பதையும், இந்தியாவில் உள்ள முஸ்லீம்கள் முன்பு ஹிந்துக்களாகவே இருந்தவர்கள் என்பதையும், ஹிந்து முஸ்லீம் ஒற்றுமை சிறந்து ஓங்க வேண்டும் என்பதையும் அவர் நன்கு விளக்கியுள்ளார்.

 

இந்த விஷயங்கள் அடங்கிய கட்டுரைகள் பொதுவாக வெளியிடப்பட்டுள்ள பாரதியார் கட்டுரைத் தொகுப்பு நூல்களில் இடம் பெறவில்லை. இதன் காரணம், இந்தக் கட்டுரைகள் விஜயா, இந்தியா ஆகிய பத்திரிகைகளின் பல இதழ்கள் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் நமக்குக் கிடைத்தவையாகும். ஆகவே அவற்றை முயன்று தேடிப் பிடித்துப் படிக்க வேண்டும்.

 

முகலாய சாம்ராஜ்ய அழிவுக்கான காரணங்களாக பாரதியார் இனம் கண்டு தெரிவிப்பது:- 1)அதர்மம் 2) சமுசயம் 3) வினாசம்

இது பற்றிய கட்டுரையை அவர் நடத்திய விஜயா பத்திரிக்கையில் ‘மொகலாய ராஜ்யத்தின் அழிவு’ என்ற கட்டுரையில் காணலாம்.

விஜயா, இந்தியா, சூரியோதயம் ஆகியவை சகோதர பத்திரிகைகள் என்பதால் ஒன்றில் வெளியிடப்பட்டுள்ள கட்டுரை இன்னொன்றில் வெளியிடுவது வழக்கமாக இருந்தது. ஆக இந்தியா பத்திரிகையில் 1909ஆம் ஆண்டு அக்டோபர் 9ஆம் தேதி இதழில் வெளியிடப்பட்ட கட்டுரை மீண்டும் விஜயா இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

 IMG_3762

அவுரங்கஜீப்பின் நோக்கமும் முயற்சியும்

இதே கட்டுரையில் அவுரங்கசீப்பைப் பற்றிய விவரங்களையும் அவர் தந்துள்ளார். பாரதியாரின் கட்டுரையின் சில பகுதிகளைக் காண்போம்:-

“அவுரங்கஜீப் பெரிய பண்டிதன். கூர்மையான அறிவுடையவன்; சோம்பரென்பதே அறியாதவன்: எப்போதும் ஊக்கம், எப்போதும் செய்கை. ‘அரசர்களும், தண்ணீரும் ஒரேயிடத்தில் தங்கியிருக்கலாகாது. அப்படியிருந்தால் தண்ணீர் அழுகிப் போய் விடும். அரசன் கையிலிருந்த அதிகாரம் நழுவி விடும் என்று அவுரங்கஜீப் தனது மக்களிடம் அடிக்கடி சொல்வதுண்டு.

இதை அவன் தனது ஜீவ தர்மங்களில் ஒன்றாகக் கொண்டிருந்தான். இப்படி எத்தனையோ விதமான நற்குணங்களிலிருந்தும் பயனில்லை. பாரத ராஜ்யம் மொகலாயர் கையினின்றும் நழுவ வேண்டுமென்று கால சக்தி நிர்ணயம் செய்து விட்டது. அவுரங்கஜீப் தனது அரிய திறமைகளையும், சிறந்த குணங்களையும் துணையாக வைத்துக் கொண்டு எப்படியேனும் பாரத நாட்டை மொகலாய அதிகாரத்தின் கீழ் சாசுவதமாக ஒருமைப்படுத்தி வைக்க வேண்டுமென்று முயற்சி செய்தான். 1658-ம் வருஷம் முதல் 1707-ம் வருஷம் வரை அவன் ஆட்சி புரிந்த ஐம்பது வருஷ காலத்திலும் ஒவ்வொரு கணமும் ‘மொகலாய ராஜ்யம் ஒருமைப்பட வேண்டும்; பலப்பட வேண்டும், சாசுவதப்பட வேண்டும்’ என்ற கருத்துடன் பாடுபட்டான். அவனுடைய ஒவ்வொரு செய்கையும் மொகலாய ராஜ்யத்தின் அழிவுக்கு ஹேதுவாயிற்று.

bharati malar thani oruvanukku

அவுரங்கஜீப்பின் அழிவு

கேடு வருமுன்பாகவே மதி கெட்டுவரத் தொடங்கி விட்டது. அவன் படித்த படிப்பெல்லாம் விழலுக்கிறைத்த நீராய் விட்டது. அவனுடைய சக்திகளும் குணங்களும் நெருப்புப் பிடித்த வீட்டிலுள்ள மரக்கட்டைகளையும், எண்ணெய்க் குடங்களையும் போல அவனுடைய நோக்கம் நாசமடைவதற்கே துணையாயிருந்தன. அவனுடைய வீரியம், தீரத்தன்மை, சித்த திடம் – இவையெல்லாம் இராவணனுடைய வீரியம், தீரத்தன்மை, மனோதிடம் இவற்றைப் போல நாசத்திற்கே காரணங்களாக மூண்டன. சாக விதியுடையவனுக்கு அமிருதமும் விஷமாக ஸம்பவிக்கிறது.”

அவுரங்கஜீப் பற்றிய பாரதியாரின் கணிப்பு தான் எவ்வளது துல்லியமானது!

மேலும் அவர் கூறுவதை அடுத்த கட்டுரையில் தொடர்வோம்.

********************

அன்னிய மத மன்னர்களுக்கும் அருளிய மகான்கள்!

tansen

தான்ஸேன்   தபால்தலை

Written  by S NAGARAJAN

Article No. 1963

Dated 30 ஜூன் 2015.

Uploaded at London time : 7-47 am

By ச.நாகராஜன்

மகமதிய படையெடுப்பு

வில் டியூரண்ட் என்ற பிரபல அறிஞர் மனித குலத்தின் சரித்திரத்தை எழுதும் போது மனித குல சரித்திரத்திலேயே இந்தியாவின் மீதான முகமதியர்களின் படையெடுப்பு தான் மகா மோசமானது என வர்ணிக்கிறார். அழிந்த ஆலயங்கள் ஆயிரக் கணக்கில்; வதை பட்ட ஹிந்துக்களோ பல்லாயிரக் கணக்கில்!

என்றாலும் கூட இந்த தேசத்தையும் அதன் பண்பையும் அழிந்து விடாமல் காக்க இந்த மோசமான கால கட்டங்களிலும் மகான்கள் தோன்றி ஒரு பெரும் அரணாக விளங்கி ஹிந்து மதத்தைக் காத்து வந்துள்ளனர். சமர்த்த ராமதாஸர் – சிவாஜி, வித்யாரண்யர் – ஹரிஹர புக்கர் போன்ற ஏராளமான உதாரணங்கள் இந்த சரித்திரத்தில் உள்ளன. இந்த சரித்திரத்தின் தொடர் வரிசையில் அக்பரின் வாழ்விலும் ஔரங்கசீப் வாழ்விலும் ஏற்பட்ட இரு சம்பவங்கள் பிரமிப்பை ஊட்டுபவை.

அக்பரும் தான்ஸேனும்

அக்பர் காலத்தில் பிரசித்தி பெற்ற பாடகராக விளங்கிய தான்ஸேன் ஒப்புவமை இல்லாத உயர்ந்த இசை விற்பன்னராகத் திகழ்ந்தார். தனது அரசவையில் இப்படிப்பட்ட பெரும் பாடகர் இருப்பது குறித்து அக்பருக்கு சொல்லவொண்ணாப் பெருமை.ஒரு சமயம் தான்ஸேன் பாடக் கேட்ட அக்பர் அப்படியே உருகி விட்டார். கண்கள் ஆறாய்ப் பொழிய பாட்டு முடிந்த பின்னரும் நெடு நேரம் அப்படியே உருகிப் போய் அமர்ந்திருந்தார். அவையினரும் அப்படியே மெய்மறந்து இருந்தனர். நேரம் சென்றது. மெதுவாகத் தன் இயல்பு நிலைக்குத் திரும்பிய அக்பர் தான்ஸேனை தழுவிப் புகழ்ந்து, “எனக்கு ஒரே ஆச்சரியமாக இருக்கிறது. எப்படி ஒரு மனிதனால் இப்படிப்பட்ட தேவ கானத்தைத் தர முடியும்? இது எப்படி உங்களுக்கு வந்தது. காரணத்தைக் கட்டாயம் கூற வேண்டும்!” என்றார்.

தான்ஸேன், “இசை நுணுக்கங்களையும் நுண்ணிய உணர்ச்சிகளின் வெளிப்பாடுகளும் என்னிடம் சிறிதளவே இருக்கின்றன! இதையே இப்படிப் புகழ்கிறீர்களே! இதற்கெல்லாம் காரணமான என் குரு நாதரின் இசையைக் கேட்டால் நீங்கள் எப்படி உணர்வீர்களோ! என் சிறிதளவு திறமைக்கு என் குருநாதர் போட்ட பிச்சையே காரணம்!” என்று அடக்கத்துடன் கூறினார்.

அக்பர் எல்லையற்ற ஆர்வத்துடன், “உடனே உங்கள் குருநாதரை அரசவைக்கு அழைத்து வாருங்கள். அவரை நன்கு கௌரவிக்க வேண்டும்” என்றார்.

தான்ஸேனோ, “அரசே! என் குருநாதர் வனத்தில் குடில் ஒன்றைக் கட்டிக் கொண்டு இறைவன் புகழ் பாடி வாழ்ந்து வருபவர். அவர் பொன்னுக்கும் புகழுக்கும் ஆசைப் படுபவர் இல்லை” என்று பணிவுடன் கூறினார்.

அக்பருக்கு ஒரே ஆச்சரியம். பேரரசனான தன்னைப் பார்க்கக் கூட விரும்பாத ஒரு ‘மனிதர்’ இருக்க முடியுமா என்ன?! அவர் யோசித்தார். தான்ஸேனை நோக்கி, “சரி, அவர் இங்கு வராவிட்டால் என்ன? நான் அவர் இருக்குமிடம் வருகிறேன். அவருக்கே தெரியாமல் செல்வோம். குடிலின் அருகில் என்னை அழைத்துச் செல்லுங்கள்” என்றார்.

ஆரவாரமின்றி அக்பரின் சிறு படை குடிலை நோக்கிச் சென்றது. ஒரு பல்லக்கில் பொன் நாணயங்களும் பவளம், முத்து, வைரம் முதலிய நவமணிகள் தட்டு தட்டாக எடுத்துச் செல்லப்பட்டன. குடிலுக்கு அருகில் யாரையும் வரவிடாது தான்ஸேனும் அக்பரும் மட்டும் சென்றனர்.

ஆஹா, அற்புதமான கான மழை பொழிந்து கொண்டிருந்தது. அக்பர் பிரமித்து சிலை போல நின்றார். தான்ஸேனை விட பல மடங்கு உணர்ச்சி பாவங்களை எழுப்பிய அந்த இசையில் அவர் முற்றிலுமாகக் கரைந்து போனார்.

வீசி எறியப்பட்ட நவமணிகள்

நீண்ட இசை நின்றது. அக்பர் சுய உணர்வுக்குத் திரும்பினார். ஏவலாள்களை அழைத்து அனைத்துத் தட்டுக்களையும் கொண்டு வரச் சொன்னார். வைரங்களையும், முத்துக்களையும், பவழம், கோமேதகம், பொன் நாணயங்கள் அனைத்தையும் இரு கரங்களாலும் வாரி வாரி எடுத்து குடிலின் முன் புறம் வீசலானார்.

தான்ஸேன் திகைத்து நின்றார். என்ன இது? அக்பரை நோக்கி, “அரசே! என்ன, இப்படிச் செய்கிறீர்கள்?” என்றார்.

“தான்ஸேன்! இந்த நவ மணிகளையும் பொற்காசுகளையும் கொடுத்து இவரைக் கௌரவிக்க நான் இங்கே வந்தது உண்மை தான்! ஆனால் இறைவனைப் பாடி இவர் உதிர்த்த ஸ்வர வரிசைகளுக்கு முன்னர் என் மணிகள் எம்மாத்திரம்! இறைவனைப் பற்றிய இசை மணிகள் அல்லவோ மணிகள்!” அது தான் ஒன்றுக்கும் உதவாத இவற்றை அவர் குடில் முன்னேயே வீசி எறிந்து விட்டேன். வாருங்கள், உள்ளே சென்று அவரை வணங்கி வருவோம்!” என்றார் அக்பர்.

எல்லையற்ற மகிழ்ச்சியுடன் தான்ஸேன் அக்பரை தன் குருநாதரான ஹரிதாஸ் ஸ்வாமியிடம் அழைத்துச் சென்றார். ஹரிதாஸர் அக்பரை ஆசீர்வதித்து இறைவன் ஒருவனே என்பதையும் அவனைப் பல வழிகளிலும் அடையலாம் என்பதையும் உணர்த்தினார்.

பல மதங்களையும் ஒன்று இணைத்து தீன் இலாஹி காண அக்பரை உத்வேகமூட்டிய சம்பவங்களுள் இது முக்கியமான ஒன்று!

kumaraguruparar-1

ஔரங்கசீப்பும் குமரகுருபரரும்

அக்பரின் கால கட்டத்திற்குப் பின்னர் டில்லி பாதுஷாவாக அரசாண்ட ஔரங்கசீப்பைக் காண அருளாளரான குமர குருபரர் விரும்பினார். (சிலர் காசியை ஆண்ட பாதுஷாவையே குமரகுருபரர் கண்டதாகக் கூறுவதும் உண்டு) காசியில் ஓரிடத்தைக் கேட்டு அங்கு ஒரு மடம் அமைக்க வேண்டும் என்பது அவரது உன்னத நோக்கம். சைவம் பரப்பும் ஒரு மடத்தைக் காசியில் அதுவும் ஔரங்கசீப்பின் அனுமதி பெற்று அமைக்க முடியுமா! யாருக்கும் நம்பிக்கை இல்லை.

அரசனைப் பேட்டி காண அரசவைக்கு வந்த குமரகுருபரர் திடீரென அரசன் பேசும்  அவனது மொழியிலேயே பேசலானார்.

முதல் நாள் சரஸ்வதியை துதி செய்து சகலகலாவல்லி மாலையை அவர் இயற்றி  அநுக்ரஹம் பெற்று அரசனுடன் பேச அவன் அறிந்ததற்கும் மேலாக அந்த மொழியில் புலமை பெற்றிருந்தார். பாதுஷா திடுக்கிட்டார். குமரகுருபரருக்கு ஆசனம் கொடுக்காமல் அவரை எதிரிலே நிறுத்தி, “என்ன விஷயம்!” என்று கேட்டார்.

சிங்கமே சரியாசனம்

தனக்கு ஆசனம் தரப்படாததை எண்ணிய குமரகுருபரர், ஒரு சிங்கத்தை வரவழைத்து அதன் முதுகின் மீது அமர்ந்தார். அரசவையில் உள்ளோர் பயந்தனர்; திடுக்கிட்டனர்; பிரமித்தனர். பாதுஷா கேள்விகளைக் கேட்க குமரகுருபரர் பதில் சொல்ல, அனைவருக்கும் அவரது மெய்ஞானத்தைப் பற்றிய மெய் சிலிர்ப்பு ஏற்பட்டது. மறுத்துக் கூற முடியாத இறை மொழிகள்!

அரசனிடம் மகமதிய குருமார்கள் சென்று, “இவரது தெய்வம் உண்மை என்றால் பழுக்கக் காய்ச்சிய இரும்பைக் கையில் ஏந்தி பதில் தரச் சொல்லுங்கள்” என்றனர்.

குமரகுருபரர் புன்சிரிப்போடு அந்த சவாலை ஏற்றார். பழுக்கக் காய்ச்சிய இரும்புத் துண்டைக் கையில் ஏந்தி இன்னும் ஆணித்தரமாக உவமைகளுடன் தன் பதில்களைக் கூறினார். அடுத்து என்ன செய்வது?! தன் பதில்களைக் கூறிய குமரகுருபரர், பாதுஷாவை நோக்கி, “மன்னா! நான் இதைப் பிடித்தவாறே என் தெய்வத்தின் துணையோடு பதில்களைக் கூறி விட்டேன். இப்போது இவர்கள் முறை!” என்றார். பழுக்கக் காய்ச்சிய இரும்புக்கும் அவரின் கேள்விகளுக்கும் பயந்த அவர்கள் அனைவரும் வெளியே ஓடினர்.. பாதுஷா அவரை வணங்கித் தன் கடைசி சோதனையைச் செய்தான். அனைவரும் சமம் எனில் தன்னுடன் விருந்துண்ண முடியுமா என்பதே அவன் கேள்வி. ஒரு செவ்வலரி மலரைத் தட்டில் வைத்து அதை மூடி மன்னனிடம் குருபரர் அளித்தார். அதில் என்ன இருக்கிறது என்று பாதுஷா கேட்க பன்றியின் மாமிசம் என்று அவர் பதிலளித்தார். பாதுஷா வெறுப்புடன் விழித்துப் பார்க்க, “அனைத்துமே சமம் என்று பாருங்கள்” என்று கூறிய குமரகுருபரர் விருந்தில் வைக்கப்பட்ட புலால் வகை உணவுகளை சைவ உணவுகளாக மாற்றி அனைவரையும் திகைக்க வைத்தார்.

 

ஶ்ரீ காசி மடம் உருவானது

எல்லையற்ற விளையாட்டின் முடிவில் அவரின் மெய்யான நிலைகயைக் கண்ட பாதுஷா, “உங்களுக்கு நான் என்ன செய்ய வேண்டும், கூறுங்கள்” என்று பணிவுடன் வினவினான்.

“மடம் ஒன்றைக் காசியில் துவங்க நமக்கு உத்தேசம். அதற்கு இடத்தையும் இதர வசதிகளையும் செய்ய வேண்டும்” என்று அருளினார் குமரகுருபரர்.

ஶ்ரீ காசி மடம் உருவானது; பாதுகாப்புடன் அது அன்னியர் காலத்தில் நடந்ததோடு சைவ சமயத்தைப் பரப்ப ஆரம்பித்தது.

இன்றும் காசியில் அற்புதமாக நடந்து வரும் ஶ்ரீ காசி மடம் உருவான வரலாறு இது தான்!

மிக பிரம்மாண்டமான ஆலமரமான ஹிந்து மதத்தின் விழுதுகள் போல அவ்வப்பொழுது தோன்றிய மகான்கள் ஏராளம்; அவர்கள் அருளிய விளையாடல்களும் ஏராளம்.

சகலகலாவல்லி மாலை உள்ளிட்ட அருள் நூல்களைப் படித்து ஹிந்து மதத்தின் எல்லையற்ற பெருமையை உணர்வோம்; அதை ஏற்றம் பெறச் செய்து ஏற்றமுறுவோம்!
நன்றி ஞான ஆலயம்

(This article was written by my brother S Nagarajan for Jnana alayam magazine:London swaminathan.)

ஜூலை 2015 ஞான ஆலயம் இதழில் வெளியான கட்டுரை