நட்சத்திர அதிசயங்கள் -Part 3

நட்சத்திர அதிசயங்கள் -Part 3

அஸ்வினி தேவர்கள், இழந்த கண் பார்வையை அருளி உபமன்யுவை மஹரிஷி ஆக்கிய அற்புத சரிதத்தை சென்ற வாரம் பார்த்தோம். அஸ்வினியின் அதிசய ஆற்றல்களை மேலும் பார்ப்போம்
அஸ்வினி ரஹஸ்யம்! தொடர்ச்சி…….

எழுதியவர்: ச.நாகராஜன்

ஆயுர்வேதம் அருளும் தேவர்கள்

அஸ்வினி தேவர்களே யோகம் மற்றும் ஆயுர்வேதத்திற்கு சக்தியைத் தரும் தேவர்கள். ‘எங்களுக்கு வலிமையை அருள்க’, என அஸ்வினி தேவர்களை நோக்கி செய்யப்படும் துதி ரிக் வேதத்தில் காணப்படுகிறது. அஸ்வின் எனப்படும் ஐப்பசி மாதத்தின் பெயர் இந்த நட்சத்திரத்தில் நிறைமதி (பௌர்ணமி) சேர்வதை ஒட்டி அமைந்திருக்கிறது.

எந்த வியாதியையும் குணப்படுத்தும் இவர்களுக்கும் சூரியனுக்கும் உள்ள சம்பந்தத்தை ரிக் வேதத்தில் காணலாம். சூரிய தேவதையான உஷையிடமிருந்து வரும் சூர்ய ரஸ்மியால் ஏற்படும் நல்ல விளைவுகளையும் அஸ்வினி தேவர்களே செய்கின்றனர்!

முதுமையை இளமையாக்கும் சியவன ப்ராசம் என்னும் லேகியம் சியவன மஹரிஷி கண்டுபிடித்த ஒரு ஆயுர் வேதத் தயாரிப்பு. நெல்லிக்கனியிலிருந்து இது தயாரிக்கப்படும் விதத்தை அஸ்வினி தேவர்களே சியவனருக்குக் கற்றுத் தந்தனர். அவரும் அதை உண்டு இளமையை அடைந்தார்.
இரசாயனங்களையும் மூலிகைகளையும் இவற்றால் தயாரிக்கப்படும் மருந்துகளையும் பற்றி ரிக் வேதம் கூறுகிறது. வேதம் கூறும் சோமரஸம், சஞ்சீவனி மந்திரம் போன்ற அனைத்திற்கும் தேவ வைத்தியர்களான அஸ்வினி தேவர்களே மூலவர்கள் என்பதும் இவர்களின் எல்லையற்ற ஆற்றலைச் சுட்டிக் காட்டுகிறது!

குதிரை முகத்தால் சித்தரிக்கப்படும் அஸ்வினி தேவர்கள் அளப்பரிய ஆற்றலையும் வாகனங்களின் அதிபதியாகவும் சித்தரிக்கப்படுகின்றனர்.காலை,மாலை, மூச்சை உள்ளிழுத்தல் வெளியிடுதல் ஆகிய இரண்டிரண்டு விஷயங்களாக உள்ளவற்றை இவர்கள் குறிப்பிடுகின்றனர்.மதுவுக்கு இவர்களே அதிபதி என்பதால் இனிமைக்கும் இவர்களே அதிபதி என்பது தானாக விளங்கும்! அஸ்வதி, அஸ்வத்தா,அஸ்விஜா,வஜபா,ஷ்ரோணா, என்று பற்பல காரணப் பெயர்களால் இவர்கள் அழைக்கப்படுவதால் ஒவ்வொரு பெயரும் ஒரு வித ஆற்றலை இரகசியமாகக் குறிப்பதை உணரலாம்!

வாக்கிற்கும் ரத்ன சிகிச்சைக்கும் அஸ்வினி

இவர்களுடன் வாக் தேவியான சரஸ்வதிக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. சரஸ்வதியைத் துதிக்கும் போது இவர்களையும் சேர்த்து வேதங்கள் புகழ்கின்றன. சரஸ்வதி தேவிக்கு ‘சோமர்’ வாக் சித்தியைத் தந்ததாக ரிக் வேதம் கூறுகிறது. அத்தோடு ரத்னக்கற்களையும் அதன் ரகசிய ஆற்றல்களையும் சரஸ்வதிக்கு சோமரே தந்ததாக அது தெரிவிக்கிறது. ஆகவே இந்த ரத்ன சிகிச்சை ஆயுர் வேத சிகிச்சை ஆகிய அனைத்தும் அஸ்வினி தேவர்கள் உலகிற்குத் தந்து அருளியவையாகும்!

அஸ்வினி தேவர்கள் மூன்று சக்கரங்கள் உள்ள தங்க ரதத்தில் பயணம் செய்வதாகவும் அவர்களின் ரதத்தை மனமே கட்டுப்படுத்துகிறது என்று வேத கவிதைகள் தெரிவிக்கின்றன. எல்லையற்ற ஆற்றலையும் சித்திகளையும் அவர்கள் கொண்டுள்ளதை இந்தப் பாடல்கள் அழகுறத் தெளிவாக விளக்குகின்றன.

இழந்த அங்கங்களை மீண்டும் தருவர்

இழந்த அங்கங்களை மீண்டும் பெறவும் இவர்களையே துதிக்க வேண்டும். விஷ்பலா என்ற ராணிக்கு உலோக கால்கள் அஸ்வினி தேவர்களால் அருளப்பட்டது.கால்களை இழந்தவர்கள் அஸ்வினி அருளால் மீண்டும் நடக்க ஆரம்பித்தனர் (ரிக் வேதம் I-117-19). மூன்று பாகங்களாக வெட்டுண்டு கிடந்த ‘ச்யவ’ என்ற ரிஷிக்கு இவர்களே ஆயுளை அளித்து உயிர்ப்பித்தனர்.
இப்படி ஜெம் தெராபி, அகுபங்சர், ஆயுர்வேதம், ப்ராணிக் ஹீலிங் என்று இன்று நவீன பெயர்களில் அளிக்கப்படும் அனைத்து சிகிச்சைகளுக்கும் இவர்களே மூலம் என்பதை ரிக் வேதத்தின் பல கதைகளாலும் துதிகளாலும் நன்கு அறியலாம்.

இவ்வளவு விஷயங்களையும் தெரிந்த கொண்ட பின்னர் இவர்களின் ஆற்றலுக்கும் அருளுக்கும் ஒரு எல்லையே இல்லை என்பது சுலபமாகப் புரிந்து விடும்!உதவத் துடிக்கும் இந்த தேவதைகளை தினமும் துதித்துப் பிரார்த்தனை செய்ய வேண்டும்!

*****************************
(இந்தக் கட்டுரை ஸ்ரீ ஜோஸியம் வார இதழில் வெளி வந்தது. இதை விரும்பியோர் ச.நாகராஜன் எழுதிய இதர நட்சத்திரக் கட்டுரைகளையும் படிக்கலாம்.)