Written by S NAGARAJAN
Date: 12 JUNE 2018
Time uploaded in London – 6-18 am (British Summer Time)
Post No. 5101
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.
வில்லிபுத்தூராரை பாரதம் பாடச் செய்த ஆட்கொண்டான்!
ச.நாகராஜன்
மஹாபாரதத்தை அழகுறத் தமிழில் பாடியவர் வில்லிப்புத்தூரார்.
இவரை பாரதம் பாடச் செய்தவர் ஆட்கொண்டான்.
இவர் வக்கபாகையில் (சோழநாடு) வசித்தவர் என்று சொல்லப்பட்டாலும் கூட இவரது மரபு கொங்கு மரபே என்று சொல்ல வேண்டும்.
பாரதத்திலேயே கொங்கர்பிரான் ஆட்கொண்டான் என்று வருகிறது.
ஆகவே இவரது முன்னோர்கள் சோழ மன்னனின் அழைப்பின் பேரில் அங்கு சென்று காணி நிலம் பெற்று சோழனது சேனாதிபதியாக வக்க பாகையில் தங்கி இருந்திருக்க வேண்டும். வில்லிப்புத்தூராரை பாரதம் பாடச் செய்த ஆட்கொண்டான் கொங்கு மண்டலத்தைச் சார்ந்தவரே என்று கொங்கு மண்டலச் சதகம் தனது 32ஆம் பாடலில் எடுத்துரைக்கிறது.
பாடல் இது தான்:
துன்னு மறைப்பொரு ளெல்லாம் பொதிந்து சுவை முதிர்ந்து
பன்னும் புகழ்பெறைந் தாம்வேத மென்னும் பாரதத்தைத்
தென்னன் மொழியிற் சொலச்செய்து கன்னடர்ச் செற்றதமிழ்
மன்னன் வலியனாட் கொண்டான் முனோர் கொங்குமண்டலமே
- கொங்கு மண்டலச் சதகம் பாடல் 32
பாடலின் பொருள் : வேதப் பொருள்கள் உள்ளமைந்தமையால்
ஐந்தாம் வேதம் என்று போற்றப்படும் பாரதக் கதையைத் தமிழில் வில்லிப்புத்தூராரைக் கொண்டு பாடச் செய்த ஆட்கொண்டானது முன்னோரும் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவர்களே!
சோழியர் எங்கு வசித்தாலும் அவரைச் சோழியர்கள் என்றே அழைப்பர்; தொண்டைமண்டலத்தார் எந்த மண்டலத்தில் வசித்தாலும் அவரைத் தொண்டை மண்டலத்தார் என்றே அழைப்பர். அது போல ஆட்கொண்டான் வக்க பாகையில் வசித்தாலும் அவர் கொங்கர் ஆதலால் கொங்கர் எங்கு வசித்தாலும் கொங்கர் என்று சொல்லப்படுதல் போல கொங்கர் என்றே அழைக்கப்படுகிறார்.
ஆட்கொண்டான் என்னும் உபகாரி கொங்கன் என்பதை வில்லிப்புத்தூராரின் மகனான வரந்தருவார் பாரதச் சிறப்புப் பாயிரத்தில் இப்படிக் கூறுகிறார்:-
எங்குமிவ னிசைபரப்பி வருநாளில் யாமுரைத்த விந்த நாட்டிற்
கொங்கர்குல வரபதியாட் கொண்டானென் றொருவண்மைக் குரிசி றோன்றி
வெங்கலியின் மூழ்காமற் கருநடப்போர் வெள்ளத்து விழாம னான்காஞ்
சங்கமென முச்சங்கத் தண்டமிழ்நூல் கலங்காமற் றலைகண் டானே
ஆற்றியவிச் செல்வத்தா லளகையைவேன் றிருங்கவினா லமர ருரை
மாற்றியபொற் றடமதில்சூழ் வக்கபா கையினறத்தின் வடிவம் போலத்
தோற்றியவக் கொங்கர்பிரான் சூழ்தமிழா னாட்கொண்டான் சுற்றத் தோடு
போற்றியவிப் புவிமுழுதுந் தன்றிருப்பேர் மொழிகொண்டே புரந்தா னம்மா
ஆட்கொண்டானைப் பற்றி இரட்டையர் பாடிய பாடல் ஒன்றும் உண்டு:
சாணர்க்கு முன்னிற்கு மாட்கொண்ட நாயகன் தமிழ்க்கொங்கர் கோன்
பாணுற்ற வரிவண்டு சேர்வக்கை நகராதி பக்கத்திலே
யூணுக்கு வாரா திருப்பாவி ருப்பாகி யுயர்வானிலே
வீணுக்கு நின்னாக மெலிகின்ற தெவ்வாறு வேண்டிங்களே.
ஆக தமிழில் பாரதம் உருவாகக் காரணம் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த ஆட்கொண்டான் என்னும் உபகாரி என்பது இச்சதகத்தால் விளங்குகிறது.
***