ஆதி சங்கரர் நூல் – 4 – ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி ஸ்தோத்ரம் (Post.7704)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No.7704

Date uploaded in London – – 17 March 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

ஆதி சங்கரர் அருளிய நூல்கள் – 1 – பஜகோவிந்தம் – கட்டுரை எண் 7579 – வெளியான தேதி 16-2-2020; ஆதி சங்கரர் அருளிய நூல்கள் – 2 – சிவானந்த லஹரி – கட்டுரை எண் 7611 – வெளியான தேதி 24-2-2020; ஆதி சங்கரர் அருளிய நூல்கள் – 3 – சௌந்தர்ய லஹரி – கட்டுரை எண் 7656 – வெளியான தேதி 6-3-2020

ஆதி சங்கரர் அருளிய நூல்கள் – 4 –ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி ஸ்தோத்ரம்

ச.நாகராஜன்

4. ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி ஸ்தோத்ரம்

பத்து சம்ஸ்கிருத ஸ்லோகங்களைக் கொண்ட ஸ்தோத்ரம் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி ஸ்தோத்ரம்.

‘நம இதம் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தயே’ என்று ஒவ்வொரு ஸ்லோகத்திலும் அமைந்திருப்பதால் இது  ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி ஸ்தோத்ரம் என்று வழங்கப்படுகிறது.

அத்வைத தத்துவத்தை மிக அழகாக விளக்கும் ஸ்தோத்ரம் இது.

இதற்கான ஆக்ஷேபணைகளையும் அதற்கான தகுந்த சமாதானங்களையும் அறிந்து கொள்வது எளிதான விஷயமல்ல.

ஆகவே இதற்கான அற்புதமான விரிவுரைகள் பல பெரியோர்களால் இயற்றப்பட்டுள்ளன.

ஸ்ரீ ஸுரேஸ்வாராசார்யாளால் இயற்றப்பட்ட மானஸோல்லாஸ வார்த்திகம் ஸ்லோக ரூபமாக அமைந்துள்ளது; அற்புதமானது; பிரசித்தி பெற்றது.

வார்த்திகம் என்பதற்கான லக்ஷணம் என்ன? மூலத்தில் கூறியதை விளக்குவது, அவசியம் இருந்தால் மூலத்தில் கூறாததையும் எடுத்துக் கூறி உண்மைப் பொருளை விளங்க வைப்பது, தவறிச் சொல்லப்பட்டிருப்பது போல காணப்படுவதை தெளிவு படுத்துவது – இதுவே வார்த்திக லக்ஷணமாகும்.

(உக்தானுக்ததுருக்தார்த்தம் வ்யக்தகாரி து வார்த்திகம் )

இந்த வார்த்திகம் பெரியது; சற்றுக் கடினமானது.

ஆகவே இந்த ஸ்தோத்ரத்திற்கு இன்னொரு உரையை ஸ்வயம்பிரகாச யதீந்திராள் இயற்றியருளினார். இந்த உரைக்குப் பெயர் லகு தத்வஸுதா.

இந்த இரண்டு உரைகளுக்கும் விளக்க உரைகள் ஏராளமாக நவீன காலத்தில் வந்துள்ளன.

‘ஹிதபாஷிணி’ என்ற பத்திரிகையின் ஆசிரியர் ஸ்ரீ ஆர். முத்துகிருஷ்ண சாஸ்திரிகள் தமிழில் லகுதத்வ ஸுதாவை ஒட்டி 1950 ஆம் ஆண்டு ஒரு விளக்க உரையை வெளியிட்டுள்ளார்.

இன்னொரு உரை ஆங்கிலத்தில் அமைந்துள்ள ஒன்றாகும். இதை எழுதியவர் D.S. சுப்பராமய்யா என்னும் பேராசிரியர். இவர் சர் சி,வி,ராமனுடன் அவரது ஆராய்ச்சியில் நெருங்கிய தொடர்பில் இருந்தவர். பங்களூர், சென்ட்ரல் காலேஜில் இயற்பியலை 30 ஆண்டுகளுக்கும் மேலாகக் கற்பித்து வந்தவர்.

ஆகவே இயல்பாகவே விஞ்ஞான அறிவும், கூடவே ஆழ்ந்த அத்வைத ஞானமும் இருந்ததால் இந்த ஸ்தோத்ரத்திற்கு இரு பாகங்களில் பெரிய உரையை விஞ்ஞான பூர்வமான உதாரணங்களுடனும் ஆதாரங்களுடனும் ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டார். முதல் பாகம் 1988இலும் இரண்டாம் பாகம் 1990ஆம் ஆண்டிலும் சிருங்கேரி ஜகத்குரு ஸ்ரீ அபிநவ வித்யா தீர்த்த மஹாஸ்வாமிகள் (சிருங்கேரி ஆசார்யாள்) அவர்கள் பூரண ஆசியுடன்  ஸ்ரீ சாரதா பீடத்தால் வெளியிடப்பட்டது. முதல் பாகம் – 722 + 33 பக்கங்கள் – முதல் நான்கு ஸ்லோகங்களின் விளக்கத்தை அளிக்கிறது இரண்டாம் பாகம் – 593 பக்கங்கள் – அடுத்த 6 ஸ்லோகங்களின் விளக்கத்தை அளிக்கிறது.

இன்னும் பலர் எழுதிய இது போன்ற பல விளக்கவுரைகள் உள்ளன. அவற்றை ஆழ்ந்து படித்தால் அத்வைதம் பற்றி நன்கு புரிந்து கொள்ளலாம்.

ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி ஸ்தோத்ரத்தின் முதல் ஸ்லோகம் இது:
விச்வம் தர்பணத்ருச்யமாநநாகரீதுல்யம் நிஜாந்தர்கதம்

    பச்யந்நாத்மநி மாயயா பஹிரிவோத்பூதம் யதாநித்ரயா |

யஸ்ஸாக்ஷாத்குருதே ப்ரபோதஸமயே ஸ்வாத்மாநமேவாத்வயம்

    தஸ்மை ஸ்ரீ குருமூர்தயே நம இதம் ஸ்ரீ தக்ஷிணாமூர்தயே ||

இதன் பதவுரை (‘ஹிதபாஷிணி’ ஆசிரியர் ஸ்ரீ ஆர். முத்துகிருஷ்ண சாஸ்திரிகள் எழுதியுள்ளபடி)

தர்பணத்ருச்யமாநநாகரீதுல்யம் – நிர்மலமான கண்ணாடியில் காணப்படும் மாநகரத்திற்குச் சமானமாயும்

நிஜாந்தர்கதம் – ஆத்ம ஸ்வரூபத்தினுடைய மத்தியில் கல்பிக்கப்பட்டிருக்கும்

விச்வம் – ஆகாயம் முதலான ப்ரபஞ்சத்தை

யதா – எப்படி

நித்ரயா – தூக்கத்தினால் ஸ்வப்னாவஸ்தையில் ஆந்திரமான ஸாக்ஷி சைன்யத்தில் பாஸிக்கிற வாசனாமயமான ப்ரபஞ்சத்தை வெளியுள்ளது போல

பச்யதி – பார்க்கிறானோ

ததா – அப்படியே

ஆத்மநி – ஆத்ம ஸ்வரூபத்தை விஷயமாயும்

மாயயா – அநாதியாயும், அசிந்த்யமாயுமுள்ள

பஹி: – வெளியில்

உத்பூதமிவ – உண்டான வஸ்து போல்

பச்யக் – பார்க்கிறவனாய்க் கொண்டு

ய:- எந்த ப்ரத்யகாத்மாவனது

ப்ரபோத ஸமயே – குருவினால் மஹாவாக்ய உபதேசம் செய்யப்பட்டும் ஸமயத்தில் அஹம் ப்ரஹ்மாஸ்மி என்ற அனுபவமானது ஏற்பட்டிருக்கும் காலத்தில்

அத்வயம் – ஆகாயம் என்ற த்வீதிய வஸ்து

ஸ்வாத்மாநமேவ – ஆகாயம் முதலான பிரபஞ்சத்திற்கு அதிஷ்டானமான ப்ரம்மத்தைக் காட்டிலும் வேறுபடாததாயும் சச்சிதானந்த ரூபமாயுள்ள ப்ரத்யகாத்மாவை

ஸாக்ஷாத்குருதே – சச்சிதானந்த ரூபமான ப்ரம்மமே நான் என்று யாதொரு விதமான ப்ரதிபந்தமில்லாமல், ப்ரமத்திற்கும், தனக்கும் அணுமாத்ரமான வ்யவதானம் இல்லாமல் செய்து  அனுபவிக்கின்றானோ

தஸ்மை – முன் சொல்லப்பட்ட வைபவத்தோடு கூடினதாயும்

ஸ்ரீ குருமூர்தயே – ப்ரம்ம தத்வத்தை ஸாக்ஷாத்கரித்துக் கொண்ட காரணத்தால் த்ரிவித பரிச்சேத சூன்யனாயும், ஞானோபதேஷ்டாவாயுமுள்ள புருஷன் எவனோ தத்ரூபமாக இருக்கிறவரா

ஸ்ரீ தக்ஷிணாமூர்தயே – தெற்கு முகமான சரீரத்தோடு கூடின பரம குருவின் பொருட்டு அல்லது மாயாசக்தியினால் சிருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரம் ஆகிய இவற்றைச் செய்வதில் சாமர்த்தியமுள்ளவராயும், ஆகார விசேஷமில்லாதவராயுமுள்ள பரப்ரம்மமாகிய பரம குருவின் பொருட்டு

இதம் – இந்த

நம: – நமஸ்காரமானது (ஆத்ம ஸ்வரூபத்தை பரமேஸ்வரனிடத்தில் ஐக்கியம் பண்ணுவதாக)

அஸ்து – இருக்கட்டும்.

முதலாவது ஸ்லோகத்தில் அனைத்து பிரபஞ்சமும் கண்ணாடியில் தோன்றும் பிரதிபிம்பம் போல ஆத்ம ஸ்வரூபத்திலேயே கற்பிதம் என்பது சொல்லப்படுகிறது.

இரண்டாவது ஸ்லோகத்தில் ஆத்மாவிற்கு அவயவங்கள் இல்லை என்றும் அது எங்கும் நிறைந்திருப்பது என்றும் கூறும் போது அதிலிருந்து பிரபஞ்சம் எப்படி உற்பத்தியாகும் என்ற ஆக்ஷேபத்திற்கு பதில் கூறி ஆத்மாவே ஜகத்தின் காரணம் என்பது உரைக்கப்படுகிறது.

மூன்றாவது ஸ்லோகத்தில் சூன்யத்திலிருந்தே ஜகத் உண்டாகிறது என்ற பௌத்தர்களின் வாதம் நிராகரிக்கப்படுகிறது.

நான்காவது ஸ்லோகத்தில் ஆத்மாவில் சத்தும் பிரகாசமும் இருப்பது போல ஜகத்திற்கும் சத்தும் பிரகாசமும் ஏன் இருக்கக் கூடாது என்ற கேள்விக்கு – சந்தேகத்திற்கு – விடை அளிக்கப்படுகிறது.

ஐந்தாவது ஸ்லோகத்தில் சிலர் பிராணனையும், இந்திரியங்களையும், புத்தியையும், ஆத்மா எனக் கருதுகின்றனர். இந்த மோகம் நீங்குவதற்கு பரமேஸ்வரனின் அனுக்ரஹம் தேவை என்பது சொல்லப்படுகிறது.

ஆறாவது ஸ்லோகத்தில் ஆத்ம ஸ்வரூபம் சூன்யமாகவே இருக்க வேண்டும் என்று கூறும் சூன்யவாதிகளின் கருத்து நிராகரிக்கப்பட்டு அதற்கான சமாதானம் சொல்லப்படுகிறது.

ஏழாவது ஸ்லோகத்தில் தேகம் முதலியவற்றிலிருந்து ஆத்ம ஸ்வரூபத்தை விவேசனம் செய்து அதற்கு பரமேஸ்வர சொரூபத்துடன் ஐக்கியம் போதிக்கப்படுகிறது.

எட்டாவது ஸ்லோகத்தில் பிரும்மம் தவிர வேறு ஒன்றும் இல்லையெனில் வித்யோபதேசம், குரு, சாஸ்திரம் ஆகியவை எதற்காக இருக்கிறது என்ற சந்தேகத்திற்கு விடை அளிக்கிறது. வித்யோபதேசம், குரு, சாஸ்திரம் ஆகியவற்றால் ஞானம் உண்டாகும். அதனால் கற்பனையில் உள்ள பிரபஞ்சம் நசிக்கும்; சச்சிதானந்தமான ஆத்ம ஸ்வரூபம் தெரியும் என்று பதில் அளிக்கப்படுகிறது.

ஒன்பதாவது ஸ்லோகத்தில் இந்த பிரும்ம ஞானத்தைப் பெற அஷ்டமூர்த்தி உபாஸனமே வழி என்று என்பது எடுத்துரைக்கப்படுகிறது.

பத்தாவது ஸ்லோகத்தில் இந்த ஸ்தோத்திரத்தை குரு முகமாக முறைப்படி கேட்பதாலும் இதன் அர்த்தத்தை அறிவுபூர்வமாக ஆராய்ச்சி செய்வதாலும், இதை தியானம் செய்வதாலும், பிறருக்கு எடுத்துக் கூறுவதாலும் உண்டாகும் பயன் விளக்கப்படுகிறது.

இதிலுள்ள ஒவ்வொரு வார்த்தைக்கும் ஆழ்ந்த பொருள் விளக்கம் தரப்படுவதோடு உள்ளார்ந்த அர்த்தத்தையும் விளக்கும் மானஸோல்லாஸ வார்த்திகம் படித்து சிந்திக்கப்பட வேண்டிய ஒரு நூல்.

இது தமிழிலும் கிடைக்கப் பெறுவது தமிழர்களின் நற்பாக்கியமே.

இது த.சுந்தரராஜ சர்மா பரிசோதித்து 1965ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட நூல்.

புத்தகத்தின் பெயர் : ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி ஸ்தோத்ரம். (மாநஸோல்லாஸத்தோடு) – பக்கங்கள் – 400

மாநஸோல்லாஸம் பற்றிய சிறு குறிப்பு:-

மாநஸோல்லாஸம் பத்து உல்லாஸங்களைத் தன்னுள் கொண்டது.

366 ½ ஸ்லோகங்களைக் கொண்டுள்ளது.

கீழ்க்கண்ட வினாக்களுக்கு இந்த நூல் அற்புதமான விளக்கங்களை அளிக்கிறது.

  1. இது உள்ளது, விளங்குகின்றது என்னும் வழக்குச் செல்லுகின்றது. அந்த உண்மையென்பதும், விளக்கம் என்பதும் எப்பொருளில் நிலைத்தவை? பொருள்கள் தோறும் நிலைத்தவையா? அல்லது எல்லாவற்றிற்கும் ஆத்மாவான ஈஸ்வரனிடத்து நிலைத்தவையா?
  2. ஈஸ்வரன் என்பவன் எப்படிப்பட்டவன்?
  3. ஜீவன் என்பவன் எப்படிப்பட்டவன்?
  4. எல்லாவற்றினுடைய ஆத்மா என்பவன் எப்படிப்பட்டவன்?
  5. ஜீவன் அதனை எப்படி அறியக் கூடும்?
  6. அதனை அறிவதற்குக் கருவி யாது?
  7. அதனை அறிவதனால் பயன் யாது?
  8. மேலும் ஜீவனும், ஈஸ்வரனும் ஒன்று என்பது எவ்வாறு ஆகும்?
  9. முற்றுமுணர்ந்தவனாய் எல்லாவற்றையும் செய்கின்ற ஈஸ்வரன் ஜீவனாக எப்படி ஆவான்?

இத்தனை கேள்விகளுக்கும் ஆசார்யர் முறைப்படி நல்ல பதில்களைக் கூறுகிறார்.

நூலின் பயன் என்ன என்பதையும் ஸ்ரீ ஸுரேஸ்வாராசார்யாள் மிகத் தெளிவாக பத்தாவது உல்லாஸத்தில் கூறுகிறார்; விளக்கமும் அளிக்கிறார்.

மோக்ஷத்தை வேண்டுவோர் அதைப் பெறுவர், அதற்கு இந்த ஸ்தோத்திரத்தை அர்த்தத்தோடு படித்து அதற்குத் தக நிற்க வேண்டும்.

வேண்டுவன அனைத்தும் இதை ஓதுவதால் கிடைக்கும். என்றாலும் அற்ப லாபம் அடைய விரும்பாமல் மஹாலாபத்திற்கே இதனை உபயோகிக்க வேண்டும்.

என்றாலும் கூட எண்ணாத பயனும் கூடவே கிடைக்கும் என்பதற்கு ஆசார்யாள் திருஷ்டாந்தமும் இப்படி அளிக்கிறார்:-

சமையலில் ஈடுபட்டிருப்பவனுக்குக் குளிர் முதலியன நீங்குதல் போல இடையிலுள்ள பயன்களும் இந்த ஸ்தோத்திரத்தினாலே எப்பொழுதும் அமைகின்றன.

ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி ஸ்தோத்ரம் அத்வைதத்தை உணர்ந்து பரமேஸ்வரனின் அருளுக்குப் பாத்திரமாக வழிகாட்டும் ஒரு அற்புத ஸ்தோத்ரம். சுருக்கமாகச் சொன்னால் மோக்ஷத்திற்கான பாதையைக் காட்டும் நூல் இது!

tags — தக்ஷிணாமூர்த்தி ஸ்தோத்ரம், ஆதி சங்கரர் நூல் 

***