கொடுங்கோலன் கஜினி முகமதுவுக்கு ஆந்தைகள் கற்பித்த பாடம் (Post 2636)

owl story

Compiled by london swaminathan

 

Date: 16 March 2016

 

Post No. 2636

 

Time uploaded in London :–  காலை 5-56

 

(Thanks for the Pictures; they are taken from various sources)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

இந்தியாவை ஆண்ட வெளிநாட்டினர் செய்த அக்கிரமங்களை மஹா கவி பாரதி ஒரே வரியில் சொல்லிவிட்டார்: “ ஆயிரம் ஆண்டு அன்பிலா அந்நியர் ஆட்சி” என்று. அப்படிப்பட்ட அன்பில்லாத கொடுங்கோலர்களில் மிகக் கொடியவர்கள் கஜினி முகமதுவும் அவுரங்கசீப்பும் ஆவர். இந்தியாவின் செல்வத்தைக் கொள்ளையடித்ததோடு நிற்காமல், 12 ஜோதிர்லிங்க தலங்களில் ஒன்றான சோமநாதபுரத்தில் இருந்த 15 அடி உயர சிவலிங்கத்தை சுக்கு நூறாக உடைத்த மதவெறியன் கஜினி முகமது. அவன்கூட ஆந்தைகளிடம் பாடம் கற்று அடங்கி ஒடுங்கிய ஒரு சம்பவம் இதோ:-

 

கஜினி நகருக்கு மேற்கே தொலைதூரத்திலுள்ள கிராமங்களை முகமதுவின் படை வீரர்கள் அழித்து நாசமாக்கி வந்தனர். ஆடுமாடுகளைக் கொள்ளையடிப்பது, பயிர்பச்சைகளை அழிப்பது அகியவற்றில் ஈடுபட்டதால் கிராம மக்கள் ஓடி ஒளிந்தனர். கிராமங்கள் எல்லாம் பாழடைந்த திடல்களாகிவிட்டன.

 

கஜினி முகமதுவிடம் மந்திரியாக வேலை பார்த்த ஒருவருக்கு தெய்வ பக்தி இருந்தது. “இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பாரிலானும் கெடும்” என்பது வள்ளுவன் குறள். ஆகையால் தன் கடமை கஜினி முகமதுவிடம் சொல்லி அட்டூழியங்களை நிறுத்துவதே என்று உறுதி பூண்டார். அவருக்கு பீர் என்ற முஸ்லீம் சந்யாசி பறவைகளின் பாஷையைக் கற்பித்திருந்தார். இது விஷயம், கஜினி முகமதுவுக்கும் தெரியும். ஒரு நாள் இருவரும் வேட்டையாடப் போனார்கள்.

 

இருவரும் மாலையில் திரும்பிவருகையில் ஒரு மரத்தின் மீது இரண்டு ஆந்தைகள் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தன. கஜினி முகமது, குதிரைகளை நிறுத்தச் சொல்லி, மந்திரியிடம் சொன்னார்:

உனக்குத்தான் பறவைகளின் மொழி தெரியுமே! அவைகள் என்ன பேசிக்கொள்கின்றன? என்று கேட்டார்.

அமைச்சரும் அதை உற்றுக் கேட்பதுபோல கொஞ்ச நேரம் பாவனை செய்தார். பின்னர் வந்து, “அரசே அவைகள் பேசுவதைச் சொல்வதற்குத் தயக்கமாக இருக்கிறது. அது உங்களுக்கு உகந்ததல்ல” என்றார்.

கஜினி முகமது அதைச் சொல்லும்படி வலியுறுத்தவே, “நான் சொல்கிறேன். ஆனால் கோபத்தில் என்னைக் கொன்று விடக்கூடாது” என்று சொன்னார். கஜினி முகமதுவும் ஒரு தீங்கும் வராது என்று உறுதி கூறியவுடன் அமைச்சர் (மந்திரி) சொன்னார்:

அந்த ஆந்தைகளில் ஒன்று ஆண், மற்றொன்று பெண். அவைகள் இரண்டும் கல்யாணப் பேச்சில் ஈடுபட்டுள்ளன. ஒரு ஆந்தையின் பையனை மற்றொரு ஆந்தையின் பெண்ணுக்கு மணம் முடிப்பதைப் பற்றி பேசுகையில் ஆணின் தந்தை (ஆந்தை) சொன்னது: “இதோ பார் உன் பெண்ணை என் பையனுக்குத் திருமணம் செய்யத் தயார்தான். ஆனால் பெண்ணுடன் எனக்கு 50 பாழான கிராமங்களைச் சீதனமாக அனுப்ப வேண்டும்” என்றது. அதற்குப் பெண்ணின் தாயார் “நமது சுல்தான் ஆட்சியில் இருக்கும் வரை பாழாய்ப்போகும் கிராமங்களுக்கு என்ன குறை? 50 என்ன 500 கிராமங்களை வேண்டுமானாலும் தருவேன்” என்றது

கஜினி முகமது இதைக் கேட்டுவிட்டு வெட்கித் தலை குனிந்தான்.

-சுபம்-