Written by London Swaminathan
Date: 27 May 2017
Time uploaded in London: 8-16 am
Post No. 3945
Pictures are taken from various sources such as Face book, Wikipedia and newspapers; thanks.
contact: swami_48@yahoo.com
சிரிப்பு, புன்சிரிப்பு — ஆகிய இரண்டும் நல்ல பொருளிலும் ‘நகைப்பு’ என்பது கெட்ட பொருளிலும் பயன்படுத்தப்படுகிறது. சொல்லப்போனால் இரண்டிற்கும் பெரிய வேறுபாடு இல்லை. இடத்தைப் பொறுத்தே வேறு பாடு வருகிறது.
ஒரு பெண் காதல் தொனியில் ‘அவர் என்னைப் பார்த்து சிரித்தார்’ என்று தன் தோழியிடம் சொன்னால் அது பாராட்டுரை.
அதே பெண், போலிசிடமோ தனது சகோதரனிடமோ வேறு ‘ஒரு ஆண் தன்னைப் பார்த்துச் சிரித்தான்’ என்றால்– புகார் தோரணையில் சொன்னால் — அது குற்றச்சாட்டு!.
‘உன்னைப் பார்த்து ஊரே சிரிக்கும்’ என்றால் அது குறைகூறுதல். ஆனால் ‘சிரிப்பு உடம்புக்கு நல்லது’ என்று டாக்டர் சொன்னால் அது பாராட்டுரை.
ஆக நகைப்பும் சிரிப்பும் கூட இடத்துக்கு தக பொருளை மாற்றும் வல்லமை வாய்ந்தது.
ஆனால் புன்சிரிப்பு, குறைகளுக்கு அப்பாற்பட்டது. எப்போதும் நற்பொருளைப் பெற்றது.
கிளுகிளு சிரிப்பு, நமட்டுச் சிரிப்பு என்பதன் பொருளோ வேறு. நிற்க.
இடுக்கண் வருங்கால் நகுக!
வள்ளுவன் சொல்லுவதைக் கடைப்பிடிப்பது கொஞ்சம் கடினமே. கஷ்டம் வரும்போது சிரியுங்கள் என்கிறார் வள்ளுவர்.
யாருக்கு கஷ்டம் வரும்போது? — என்று கேட்கத் தோன்றுகிறது. எனக்கோ என் குடும்பத்தினருக்கோ கஷ்டம் வந்தால் நான் சிரிக்க முடியுமா?
எனது எதிரிக்கு கஷ்டம் வந்தால் வேண்டுமானால் சிரிக்கத்தோன்றும்
வீட்டிலோ, வெளியிலோ யாராவது வாழைப்பழத் தோலியில் சறுக்கி விழுந்தால் சிரிப்பு வரும்.
பொது மேடையில் யாருக்கேனும் ஆடை நழுவி விழுந்தால் சிரிப்பு வரும். இதே கஷ்டம் நமக்கு வந்தாலும் சிரியுங்கள் என்று வள்ளுவர் செப்புவார். அது அவரைப் போன்ற ரிஷிபுங்கவர், முனி புங்கவருக்குதான் சாத்தியம்
சிரிப்பு பற்றி வள்ளுவன் கூறும் குறள்கள் நிறையவே உள்ளன:
நக -187, 685, 829, 1173, 999, 824, 621, 784, 774, , 1094, 1095, 817
நகப்படுவர் (இகழப்படுவர்) -927, 1140, 271, 1040
இவ்வாறு குறைந்தது 16 குறள்களில் சிரிப்பு, நகைப்பு பற்றிப் பாடி இருப்பதால் தமிழர் வாழ்வில் சிரிப்பு எந்த அளவுக்கு ஆதிக்கம் செலுத்தி இருந்தது என்பது தெரியும்.
சம்ஸ்கிருத நாடகங்கள் எல்லாவற்றிலும் (விதூஷகன்) நகைச் சுவை நடிகர் உண்டு. முதல் காட்சியே சூத்ரதாரர் மற்றும் நகைச் சுவை நடிகருடந்தான் தோன்றும்
நூறு ஆண்டுகளுக்கு முன் தமிழில் நிறைய நாடகங்கள் வெளியாயின. அவற்றிலும் கூட முதல் காட்சி விதூஷகனுடனேயே துவங்கும். 2000 ஆண்டுகளுக்கு முன்னர் நாடகம் எழுதிய பாஷா, காளிதாசன், சூத்ரகன் ஆகியோர் எந்த அளவுக்கு நகைச் சுவைக்கு மதிப்பு கொடுத்தனர் என்பதைக் காணும் போது வள்ளுவன் ஏன் இப்படிப் பல குறள்களில் குரல் கொடுத்தான் என்பது தெள்ளிதின் விளங்கும்.
இதோ ஓரிரு உதாரணங்கள்:
இடுக்கண் வருங்கால் நகுக அதனை
அடுத்தூர்வது அஃதொப்பது இல் (குறள் 621)
ஒரு செயலைச் செய்கையில் தடங்கல் ஏற்பட்டால் அதை மனமகிழ்ச்சியுடன் ஏற்க வேண்டும். அந்த மகிழ்ச்சியை விட துன்பத்தை ஒழிக்க வேறு வழி அல்லது சாதனம் ஏதுமில்லை.
இன்னொரு குறளில்,
வஞ்சமனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்
ஐந்தும் அகத்தே நகும் (குறள் 271)
ஒருவன் ஒழுக்கம் உடையவன் போல பொய்யாக நடித்தால், அவனுள்ளே உறையும் பஞ்ச பூதங்களும் தமக்குள் நகும் (சிரிக்கும்)
காளிதாசனில் சிரிப்பும் புன்சிரிப்பும்
இனி உலகப் புகழ்பெற்ற காளிதாசன் காவியங்களில் சிரிப்பு பற்றி என்ன சொல்கிறார் என்பதைக் காண்போம். அவன் நாடகங்களில் நகைச் சுவை நடிகன் (விதூஷகன்) உண்டு. ஆயினும் சில உவமைகளை மட்டும் காண்போம்:
சிரிப்பின் வர்ணம் வெள்ளை; முத்துப் போன்ற பற்களைக் காட்டுவதால் இப்படி வர்ணத்தையும் சிரிப்பையும் தொடர்புபடுத்தி இருக்கலாம். தமிழிலும்கூட வெண்ணகை என்று சொல்லுவதுண்டு.
ருது சம்ஹாரம் என்ற காவியத்தில் வரும் பாடலில், வெள்ளை மல்லிகை மலர் நிறைந்த பூந்தோட்டத்தில், அந்த மல்லிகைப் பூக்கள் மலர்ந்து, பூத்துக் குலுங்கியது பெண்களின் விளையாட்டுச் சிரிப்பு போல இருந்ததாம் (6-23)
அஜன் என்ற மன்னன் புன் சிரிப்பை நெளியவிட்டபோது, அதன் அழகை அவன் வாய்க்குள் இருந்த பற்கள் அதிகரித்ததாம். இது சிவப்பு நிற இளம் துளிர்கள் மீது பனித்துளிகள் விழுந்தது போல இருந்ததாம். (ரகு வம்சம் 5-70).
பனித்துளிகள் = முத்துக்கள் = சிரிப்பு = வெள்ளை நிறம்
ஆனந்தக் கண்ணீர்!
ஒருவருக்கு மகிழ்ச்சி வந்தால் சிரிப்பு அல்லது புன் சிரிப்பு மூலம்தான் வெளியிட வேண்டும் என்பது அவசியமல்ல. ஆனந்தக் கண்ணீர் மூலமும் அதை வெளிப்படுத்தலாம். காளிதாசன் ஆனந்தக் கண்ணீர்த் துளிகள் பற்றி குறைந்தது இரண்டு இடங்களிலாவது குறிப்பிடுகிறான்
சூரியன் உத்தராயண காலமான ஆறு மாதங்களில் வடக்கில் சஞ்சரிப்பதால் பூமியின் வட பகுதியில் கோடை காலம் ஆகும். அப்போது இமய மலையின் பனி உருகி ஆறுகள் பெருக்கு எடுத்தோடும். இது ஒரு இயற்கை நிகழ்வு. தென் திசை அகத்தியனுக்கு உரியது. தென் திசையில் உள்ள அகத்திய நட்சத்திரம் மிகவும் புகழ் பெற்றது. சம்ஸ்கிருத கவிஞர்கள் தென் திசையைக் குறிக்க அகஸ்த்ய நட்சத்திரத்தைப் பயன்படுத்துவர். இதை வைத்து காளிதாசன் ரகுவம்ச காவியத்தில் (14-44) சொல்கிறான்:–
“அகஸ்திய திசையிலிருந்து சூரியன் வடதிசை வந்தவுடன் இமயமலை பனித்துளி என்னும் ஆனந்தக் கண்ணீரை வெளிவிடத் துவங்கியது. பிரிந்து சென்ற காதலன் திரும்பி வந்தவுடன், எப்படி அவனது அன்புக்காதலி ஆனந்தக் கண்ணீர் விடுவாளோ அது போல இது இருந்தது.”
சாகுந்தலம் என்னும் புகழ் பெற்ற நாடகத்திலும் நாலாவது காட்சியில் சகுந்தலைக்கு பிரியாவிடை கொடுக்கும் கண்வ முனிவர் ஆனந்தக் கண்ணீர் சொரிவதாக காளிதாசன் இயம்புவான்.
ஆக, புன் சிரிப்பு, நகைப்பு, சிரிப்பு,ஆனந்தக் கண்ணீர் என்ற பல வகைகளில் இந்திய இலக்கியம் மகிழ்ச்சியை வெளிக்காட்டுகின்றன.
–சுபம்–