மர்ம எண் 8-ம், உலகிலேயே பழைய பெண்கள் பெயர்களும்!

saraswati

Written  by London Swaminathan

Research Article No. 1965

Dated 1 July 2015.

Uploaded at London time : 5-45 am

ரிக் வேதம் உலகிலேயே பழைய நூல் என்பதில் யாருக்கும் இருவேறு கருத்து இரா. மாக்ஸ்முல்லர் இதை யாரும் கி.மு.1200-க்குக் கீழே கொண்டு வரமுடியாது. உலகில் எந்த சக்தியும் இதன் காலத்தைக் கணிப்பது அரிது என்று கடைசியாகச் சொல்லிவிட்டு இறந்து போனார். ஏ.சி.தாஸ் என்பவர் வேத காலம் கி.மு.25,000 என்றும் எஸ்.வி.வெங்கடேஸ்வரா கி.மு.11,000 என்றும் பாலகங்காதர திலகர், ஜெர்மன் ஆராய்ச்சியாளர் ஹெர்மன் ஜாகோபி ஆகியோர் கி.மு 4500-க்கும் முன் என்றும், வீபர் கி.மு 2780 என்றும், ஹாக் கி.மு.2400 என்றும், விண்டர்நீட்ஸ் கி.மு.2000 என்றும், பர்ஜிட்டர் கி.மு.2050 என்றும்,மக்டொனெல், கீத் கி.மு.1400 என்றும், மைகேல் விட்சல் கி.மு.1700 என்றும், ஸ்ரீகாந்த் தலகரி கி.மு.2000க்கு முன் என்றும் செப்புவர்.

ரிக் வேதத்தில் மிகப் பழைய விஷயங்கள் ரகசிய சங்கேத மொழிகளில் சொல்லப்பட்டிருக்கின்றன. ஒரு சிறிய ரகசிய விஷயத்தைப் பார்ப்போம். ஆப்ரி சூக்தம் என்று ஒவ்வொரு மண்டலத்திலும் ஒரு துதி உண்டு. இது அக்னி தேவனை நோக்கிப் பாடப்பட்டாலும்  பல தெய்வங்களின் பெயர்களும் அடிபடுகின்றன. யாக, யக்ஞத்தில் பயன்படுத்தும் புனிதப் பொருட்களைப் போற்றும் துதியெனவும் அறிஞர் பெருமக்கள் மொழிவர். இதில் வியப்பான விஷயம் என்னவென்றால் அந்தத் துதியில் சரியாக எட்டாவது பத்தியில் மூன்று பெண் தெய்வங்களின் பெயர்கள் வருகின்றன. ஏன் எட்டாவது பத்தியில் இப்படிப் பாடுகிறார்கள்? எட்டு எண்ணுக்கும் இந்தப் பெண் தெய்வங்களுக்கும் என்ன தொடர்பு? அவர்களுக்கும் நியுமெராலஜி NEUMEROLOGY (எண் ஜோதிடம்) தெரியுமா? அல்லது பாணினிக்கும் முன்னால் சம்ஸ்கிருத இலக்கணம் எழுதியோர் ஏதேனும் விதி இயற்றி இப்படிப் பாடச் சொன்னாரா? என்பதெல்லாம் மர்மமாக உள்ளது.

சம்பந்தர் பாடிய தேவார பதிகத்தில் ராவணன் கர்வத்தை ஒடுக்கியது ஒவ்வொரு பதிகத்திலும் ஒரு குறிப்பிட்ட எண் பத்தியில் வரும், பதிகத்தின் பலன் கடைசியாக வரும் என்று நமக்குத் தெரியும். ஆனால் ரிக் வேதம் என்பது 450-க்கும் மேலான கவிஞர்கள் வாய்மொழியாக வந்தது. அவ்வளவு பேரும் ஒரே காலத்தில் வாழ்ந்த புலவர் பெருமக்கள் அல்ல. 500 ஆண்டுக் கால எல்லைக்குள் வாழ்ந்தவர்கள். அவ்வளவு நீண்ட காலத்தில் பாடிய ஒவ்வொரு குடும்பத் தலைமை ரிஷியும் (புலவர்) எப்படி எட்டாவது பத்தியில் இதைச் சொன்னார்கள்? ஏன்? என்ற மர்மம் நீடிக்கிறது. இப்படி ஒரு பாணி (ஸ்டைல்) வகுக்கப் படவேண்டுமானால் அதற்கு பல நூறு வருடங்களுக்கு முன்னேயே பாடத் துவங்கினாலன்றோ இப்படி ஒரு நெறிமுறை உருவாகும்!

“இலக்கியம் இன்றேல் இலக்கணம் இல்லை” என்பது—ஆன்றோர் வாக்கு ஆயிற்றே!! ஆகையால் வேதங்களுக்குப் பின்னால்தான் இலக்கணம் வரமுடியும்.

(ரிக் வேதம் என்பது பத்து மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அதில் ஆயிரத்துக்கும் மேலான துதிகள் உள்ளன. 10 மண்டலங் களில் ஆறு மண்டலங்கள் ஒரே ரிஷியின் வம்சத்தில் வந்தோர் பாடிய பாடல்களாக வியாசர் தொகுத்து தந்திருக்கிறார். இவற்றை குடும்ப (மண்டலம் 2–7) மண்டலங்கள் எனலாம்.

sarasvati-map-crop

இன்னும் ஒரு அதிசயம்!

யார் அந்த மூன்று பெண் தெய்வங்கள்?

சரஸ்வதி, பாரதி, ஈலா; ஒரே ஒரு இடத்தில் பாரதிக்குப் பதிலாக மாஹி (SARASVATI, BHARATI, ILA).

இதில் என்ன அதிசயங்கள் இருக்கின்றன என்று கண்போம். நமது வேதங்களைப் படித்த வெளிநாட்டுகாரகள் உள் நோகத்துடன் எழுதியதால் பல விஷயங்கள் அவர்களுக்குப் புரியவில்லை. வேத கால மக்கள், ஆண் தெய்வங்களை வணங்கினர், நாகரீகமற்ற பழங்குடி மக்கள் பெண் தெய்வங்களை வணங்கினர் என்று உளறிவிட்டுப் போய்விட்டனர். அவர்கள் உளரியதெல்லாம் ஆங்கிலத்தில் இருந்தவுடன் நம்மவர்கள் அதைப் பார்த்து, அட! அம்மாடியோவ்! இது ஆங்கில மொழியாயிற்றே, ஆகவே அவன் அறிஞன்தான் என்று தப்புக் கணக்குப் போட்டுவிட்டனர். உண்மையில் இன்று வரை தொடர்ந்து பெண் தெய்வங்களை வணங்குவது உலகில் இந்துக்கள் மட்டுமே. அருள் சுரக்கும் பூமி, நதிகள் ஆகிய அத்தனைக்கும் பெண்கள் பெயரையே சூட்டினர். எல்லா நல்ல குணங்களையும் சம்ஸ்கிருத மொழியில் பெண்மை வடிவத்தில் கண்டனர் (கருணா, பிரேமா, சத்யா, சுகுணா, சுகந்தா).

சரஸ்வதி என்னும் நதி வேத காலத்தில் ஓடிய பிரம்மாண்டமான நதி. அது வறட்சியினாலோ, நில அதிர்ச்சியினாலோ மண்ணில் புதைந்து மறைந்த பின்னரே கங்கை, சிந்து ஆகியன பிரபலமாயின. சரஸ்வதி நதியின் நீர் உயிர் கொடுப்பது போல, சரஸ்வதி என்னும் தெய்வம் உள்ளத்துக்கு உரமூட்டியது. தெய்வமாகவும், தாயாகவும், மொழியாகவும் வணங்கப்பட்டவள் சரஸ்வதி. உலகிலுள்ள பழைய நாகரீக பெண் தெய்வங்கள் எல்லாம் மியூசியங்களில் கண்ணாடிப் பெட்டிக்குள் அடைபட்டுப் போயின. சரஸ்வதியோ இந்து கலாசாரம் பரவிய நாடுகளில் எல்லாம் மக்களின் உள்ளத்தில் உறைகிறாள் இன்றும்!

இதைவிட உலக அதிசயம்! இமயம் முதல், இலங்கையின் தென் கோடி கண்டி/கதிர்காமம் வரை இன்றும் சரஸ்வதி பாரதி, ஈலா பெயர்கள் பயன்படுத்தப் படுகின்றன. ஈலா என்பது, குஜராத்தி இந்துக்கள் அதிகம் வைக்கும் பெயர். நாம் சரஸ்வதி என்போம். சிருங்கேரி சங்கராச்சார்யார் பெயர்கள் எல்லாம் பாரதி என்றும் காஞ்சி சங்கராசார்யார்கள் பெயர்கள் எல்லாம் சரஸ்வதி என்றும் முடியும்.

gold-number-8

இதைவிட பெரிய அதிசயம்!

யதுகுல (யாதவர்) மக்கள் ஆடுமாடு மேய்த்துக் கொண்டு மத்தியக் கிழக்கு நாடுகளுக்குச் சென்று யூதர் ஆயினர். யது = யூத (Yadu = Yuda= Juda). நாம் ‘ய’ (Y) என்றால் மற்றவர்கள் மொழியில் ‘ஜ’ (J) ஆகும். அவர்கள் யேசு என்றால், உலகம் அதை ஜீஸஸ் என்று சொல்லும். ஆகையால் ஜூடாயிஸம் (யூத மதம்) என்றனர். அவர்களில் மூத்தவர் ஆப்ரஹ்ம (ஆபிரகாம்) அவருடைய மனைவி பெயர் சரஸ்வதி (சாரா). ஆக அவர்களும் கூட, பிரம்மாவின் பெயரையும் அவர் மனைவி சரஸ்வதி பெயரையும் வைத்துக் கொண்டனர். நாம் சரஸ்வதியை செல்லமாக சச்சு அல்லது சரசு என்போம். அவர்கள் ஸாரா என்பர்.

(ஜ, ய என்னும் எழுத்துக்கள், ர, ல என்னும் எழுத்துக்கள் உரு மாறுவது பற்றி காஞ்சி பரமாசார்ய ஸ்வாமிகள் ஆற்றிய சொற்பொழிவையும் படித்துப் பயன் பெறுக. அவர் மிகப்பெரிய மொழியியல் அறிஞர். அவர் மட்டும் சங்கராசார்யார் ஆகாமல் மொழியியல் அறிஞர் ஆகியிருந்தால் மேல்நாட்டு மொழியியல் கொள்கைகள் எல்லாம் இவ்வளவு நேரம் குப்பைத் தொட்டிக்குள் போயிருக்கும். யூத மதத்தில் வேத மந்திரம் இருப்பதை எடுத்துக் காட்டி “ரப்பைகளையே” வியக்கவைத்தவர். ரப்பை= யூத மத சாஸ்திரிகள்).

இன்னும் ஒரு எடுத்துக்காட்டு: ரிக் வேத துதிகளில் எட்டாம் பத்தியில் வரும் ஈலா என்பது மத்தியக் கிழக்கில் ILA இலா, IDA இடா என்ற தெய்வங்களின் பெயராக உரு மாறியது.

ஆப்ரி APRI SUKTA சூக்தம் வரும் இடங்கள்:

ரிக் வேதம்: RV 3-4-8; 7-2-8; 2-3-8, 1-13-8/9; 1-188-8; 5-5-8; 9-5-8; 10-70-8;10-110-8. (எட்டு என்பதைக் கவனிக்க)

மூன்று தேவியர் வரும் யஜூர் வேதப் பாடல்கள்:

Yajur Veda 28-18; 27-17; 20-43 and several other places.

R veda

ஆப்ரி சூக்தம் பற்றி ஒரு சர்ச்சை!

இலக்கிய விஷயங்களில் எல்லாவற்றிலும் முதன்மை வகிப்பது சம்ஸ்கிருதமே! உலகின் முதல் GRAMMAR இலக்கண நூல், முதல் காம EROTICS சாஸ்திரம், முதல் DICTIONARY அகராதி, நிகண்டு, மொழியியல் LINGUISTICS  ஆராய்ச்சி, மொழியியல் ஆய்வு, சொற்பிறப்பியல் ETYMOLOGY ஆய்வு, நூல் யாத்தல், பெண் கவிஞர்களின் பங்கு பணி, பெண்களுக்கான முதல் SYLLABUS சிலபஸ் (64 கலைகள்), முதல் நாட்டிய சாத்திர நூல், சங்கீத சாத்திர நூல், முதல் THESARUS நிகண்டு — முதலிய எல்லாவற்றிலும் சம்ஸ்கிருதமே உலகில் முதன்மை வகிக்கிறது. இதே போல புத்தகங்களுக்கு இண்டெக்ஸ் INDEX போடுவதிலும் சம்ஸ்கிருதமே FIRST! அதாவது முதல்! அணுக்ரமணி என்ற வேத இண்டெக்ஸில் எல்லா புலவர் பெயர்களும் உள்ளன.

இந்த இண்டெக்ஸில் ஆப்ரி சூக்தங்களை இயற்றிய வெவ்வேறு பெயர்களைப் பார்த்த ப்ளூம்ஸ்பீல்டு என்பார், “ பாருங்கள் இரண்டு மண்டலங்களில் ஒரே மாதிரி ஆப்ரி சூக்தங்கள் உள்ளன. ஆனால் வசிட்டர், விஸ்வாமித்திரர் என்று இரண்டு பெயர்களை அணுக்ரமணி கூறுகிறது. ஆகாயால் அணுக்ரமணி பிழையுடைத்து என்று நீண்ட ஆராய்ச்சிக் கட்டுரை எழுதினார். ஆனல் பிற்காலத்தில் வந்தவர்கள் அது ஒரு அரைவேக்காட்டுத் HALF BAKED தனமான வாதம் என்பதை ஆதாரங்களுடன் காட்டினர்.

கிரேக்க கவிதைகளில் ஒரே வரி பல முறை வருகிறது. பாதி வரி பல முறை வருகிறது. ஒரே உவமை பலமுறை வருகிறது; சில சொற்றொடர்களை எல்லோரும் அடிக்கடி பயன்படுத்துகின்றனர் என்று கிலபர்ட் மர்ரே GILBERT MURRAY  என்பவர் எடுத்துக் காட்டினார். இதை தனது புத்தகத்தில் மேற்கோள் காட்டிய இந்திய வேத அறிஞர் ஸ்ரீகாந்த் தலகரி SHRIKANT G.TALAGERI  என்பார், இந்த் ஆப்ரி சூக்தங்களைப் பயன்படுத்தி ரிக் வேதத்தின் பத்து மண்டலங்களைக் கால வரிசைப் படுத்தியிருக்கிறார்.

book05

தமிழில் மீண்டும் மீண்டும் வரும் வரிகள்

இந்திய வரலாற்றை அல்லது பண்பாட்டை எழுதப் புகுவோருக்கு பாரத மாதாவின் இரு கண்காளான தமிழும் சம்ஸ்கிருதமும் தெரியாவிடில் தப்பும் தவறுமாக பிதற்றத் துவங்கி விடுவார்கள். தமிழில் ஏராளமான வரிகள் திரும்பத் திரும்ப வரும்

ஐங்குறு நூறு என்னும் 500 பாடல் தொகுப்பில் நூற்றுக்கும் மேலான வரிகளை எல்லா புலவர்களும் பயன்படுத்துவர்.

புற நானூற்றில் பல் சான்றீரே! என்ற வரிகள் இரண்டு பாடல்களில் வரும். சேண் விளங்கு முதலிய சொற்றொடர்களைப் பலரும் பயன்படுத்துவர். இது வாய்மொழி இலக்கியம் துவங்கிய காலத்தில் எல்லா மொழிகளிலும் உண்டு.

ஆனால் தொல்காப்பியர் போல எவரும் இலக்கண நூலில் இப்ப்டிச் செய்ததில்லை. தொல்காப்பியத்தில் ஒரே பத்தியில் தேவையில்லாமல் ஒரு வரியை ஆறு முறை (பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே) கூறியிருக்கிறார் ஒல்காப்புகழ் தொல்காப்பியர்.ஏதோ நர்சரி ரைம் Nursery Rhyme போலப் பாடிவிட்டார். “என்ப”, “மொழிப” போன்ற சொற்களை 287 முறை சொல்கிறார். ஒரே சூத்திரத்தில் (சூத்திரம் 1568) ‘என்றலும்’ என்பதை ஆறு முறை சொல்லுவார்’ இன்னும் ஒரு இடத்தில் ஒரே சூத்திரத்தில் ‘அறிவதுவே’ என்பதை ஏழு முறை சொல்லுவார் (சூத்திரம் 1526). அதாவது சொற்செட்டு என்பது அவருக்கில்லை. பாணினிக்கும் இவருக்கும் இடைவெளி 1000 மைல் என்றால் மிகையில்லை!!