Post No. 10,247
Date uploaded in London – 24 OCTOBER 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
திருநெல்வேலியிலிருந்து மாதந்தோறும் வெளியாகும் ஹெல்த்கேர் பத்திரிகையில் அக்டோபர் 2021 இதழில் பிரசுரமாகியுள்ள கட்டுரை!
நூறு ஆண்டு ஆயுளை ஆரோக்கியத்துடன் தரும் அதர்வ நிதி!
ச.நாகராஜன்
நவீன அல்லோபதி மருத்துவம் உலகை ஆண்டு வரும் இந்தக் காலத்தில் அது சமாளிக்க முடியாமல் திணறும் கொரானா போன்ற பிரச்சினைகளைக் கண்டு திகைக்கிறோம்.
நாளுக்கு ஒரு நாள் மாறுபட்ட கருத்துக்களையும் அறிக்கைகளையும் மருத்துவ ஆய்வுகள் வெளியிடுவதால் எது உண்மை எது பொய் என்று தெரியாமல் விழிக்கிறோம்.
வியாதிகளுக்குப் புதுப் பெயர்கள் கொடுக்கப்படுகின்றன, மருந்துகள் மாற்றப்படுகின்றன!
நம்மைப் பாதிக்க வரும் இயற்கைச் சீற்றங்களுக்கு – புயல்களுக்குப் புதுப் புது பெயர்கள் சூட்டுவது போல (சூட்டி மகிழ்வது போலவோ?!!) வைரஸுகளுக்கும் புதுப் புதுப் பெயர்கள் தரப்படுகின்றன. கோவிட், நிபா…..
இந்த நிலையில் தான் மேலை நாட்டு மருத்துவ முறை பற்றி ஆய்வு செய்து விமரிசித்த ஐயான் கென்னடியை நினைத்துப் பார்க்க வேண்டியிருக்கிறது.
நவீன மருத்துவமானது ஒரு எதிர்மறை அணுகுமுறையையே கடைப்பிடித்து வருகிறது. அது வியாதிகளின் நிவாரணம் பற்றியே முதலிடம் கொடுத்து வருகிறது. மனிதனின் ஆரோக்கியத்தை நிலை நிறுத்தி அதைப் பாதுகாத்து நீடித்து இருப்பதற்கு அது முதலிடம் கொடுக்கவில்லை.
இது தான் உண்மை.
ஐயான் கென்னடி (லீத் சொற்பொழிவுகள் 1980) தனது சொற்பொழிவில் கூறினார் இப்படி:-
“நவீன மருத்துவம் தவறான பாதையைத் தேர்ந்தெடுத்திருக்கிறது.உடல்நலக் குறைவு அல்லது வியாதி – இது தான் நவீன மருத்துவத்தின் மையக் கவலையாக உள்ளது. நவீன மருத்துவம் பற்றிய ஒரு புதிய மாடலை திருப்பவும் உருவாக்க எண்ணுவோமேயானால் ஆரோக்கியத்தைப் பாதுகாத்து அதற்கான வழிமுறைகளைக் காணும் ஒன்றையே தேர்ந்தெடுப்போம். ஆனால் இப்போது நம்மிடம் இருப்பது அதற்கு நேர் எதிரிடையான ஒன்று. அது உடைந்த சிறு சிறு துண்டுகளைப் பொறுக்க விரும்புவதைப் போல உள்ள ஒன்று தான். அது வியாதியைப் பற்றியே நினைக்கிறது, ஆரோக்கியத்தை அல்ல! ஒரு கணம் நினைத்துப் பார்த்தாலேயே போதும், இந்த முட்டாள்தனம் நமக்குப் புரிந்து விடும்.”
[Ian Kenndedy (Leith Lectures 1980) said :”Modern medicine has taken the wrong path. Illness or disease has become the central concern of modern medicine. If we start all over again to design a model for modern medicine, most of us, I am sure, would opt for a design which concerned itself far, far more with the pursuit and preservation of health, of well being. What we have instead is the very opposite : a system of medicine which reacts, which responds, which wants to pick up the broken pieces – a form of medicine, in short concerned with illness not health. A moment’s thought demonstrates the folly of this.”]
சரி, இதற்கு மாற்று ஏதாவது இருக்கிறதா என்று கேட்கும் போது தான் ஆயுர்வேதம் நம் முன்னே தலை நிமிர்ந்து நிற்கிறது.
ஆயுர்வேதம் இந்தியப் பண்பாட்டின் ஆணிவேரான வேதங்களின் அங்கங்களுள் ஒன்று. அது ஒரு ஆணோ, பெண்ணோ நூறு வயது எப்படி ஆரோக்கியமாக நிறைவாழ்வு வாழ முடியும், வாழ வேண்டும் என்பதை வலியுறுத்தி அதற்கான வழிமுறைகளைக் காண்பிக்கிறது.
அதர்வ வேதத்தில் காணப்படும் ஆயுர்வேத நெறிமுறைகள் அதர்வ நிதி என அழைக்கப்படுகிறது.
தேய்ந்து குறைந்து போகும் இதர செல்வங்களை விட நிஜமான செல்வம் ஆரோக்கியம் என்னும் செல்வம் அல்லவா. அது தானே உண்மையான நிதி –
அதர்வ நிதி!
அதர்வன் என்ற சொல் புத்திகூர்மையுடன் தொடர்பு கொண்ட ஒரு சொல்லாகும். வசிஷ்டர் என்ற பெரும் முனிவரே அதர்வ வேதத்தை நன்கு அறிந்த மகா முனிவர் ஆவார். இவரையே காளிதாஸன் அதர்வ நிதியின் களஞ்சியமாகக் குறிப்பிடுகிறான். ரிக், யஜூர், சாமம் ஆகிய மூன்று வேதங்கள் மனிதனின் வாழ்க்கை லக்ஷியத்தையும் அவனது எதிர்காலம் எப்படி அமைய வேண்டும் என்பதற்கான நெறிமுறைகளைக் கூறுகின்றன. ஆனால் அதர்வண வேதமோ இந்த வாழ்க்கையிலேயே இப்போது உயிரோடு இருக்கும் போதே எதிரிகளிடமிருந்து தன்னை எப்படிப் பாதுகாத்துக் கொள்வது என்பது பற்றியும் அரசர்கள், அவர்களது நீதி, வழிமுறைகள் ஆகியவை பற்றியும் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்வது எப்படி என்பது பற்றியும் எடுத்துரைக்கிறது. ஆனால் அதே சமயம் மனிதன் காண வேண்டிய மெய்ப்பொருள் எது என்ற தத்துவத்தையும் கூடவே அது சுட்டிக் காட்டி விளக்குகிறது.
அதர்வ வேதமே ஆயுர்வேத வைத்தியத்திற்கான ஆதார நூல். ஜுரங்களைப் போக்குவது எப்படி, தொழுநோயைத் தீர்ப்பது எப்படி, மஞ்சள் காமாலை உள்ளிட்ட நோய்களை உடனடியாகப் போக்குவது எப்படி, இருமல், தலையில் வழுக்கை விழுதல், கண் சமபந்தமான வியாதிகள் உடலில் ஆண்மைச் சக்தி குறைதல், எலும்பு முறிதல், பல்வேறு காயங்கள், விஷக்கடி,
உள்ளிட்டவற்றிற்கான தீர்வுகள் யாவை என்பன போன்றவற்றை ஆயுர்வேதம் தருகிறது. அற்புதமான எளிய அதிகச் செலவில்லாத, உடனுக்குடன் பயன் தரும் வழிமுறைகளை அது அற்புதமாக விவரிக்கிறது.
உடலை அக்கு வேறு ஆணி வேறாகப் பகுத்துப் பிரித்து ஆராய்ந்து அது உடலின் ஒவ்வொரு பாகத்தையும் அதன் செயலையும், செயல் திறனையும் நன்கு விளக்குகிறது. இந்த வகையில் உலகின் முதல் மருத்துவ நூலாக அதர்வண வேதமே – அது தந்துள்ள ஆயுர் வேதமே திகழ்கிறது.
கருப்பை, கருவின் தோற்றம், உடல் தூய்மை என்பன பற்றியெல்லாம் ஆயுர்வேதத்தில் விளக்கமாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
வேத ரிஷிகள் இயற்கை வைத்தியத்தையே முதன்மையாகக் கொண்டிருந்தனர். நீர், காற்று, சூரிய ஒளி, பூமி ஆகியவற்றைப் பயன்படுத்தி நூறு சதவிகித ஆரோக்கிய வாழ்வை உறுதிப்படுத்துவதற்கான வழிமுறைகள் ஆயுர்வேதத்தில் மட்டுமே உள்ளது.
உடலின் எந்த பாகத்தையும் எடுத்துக் கொள்ளுங்கள், ஆயுர்வேதத்தை அணுகுங்கள், அது தெள்ளத் தெளிவாக அனைத்தையும் பிட்டுப் பிட்டு வைக்கிறது.
பற்களா? – மேல் வரிசை, கீழ் வரிசை, ஈறு, பல் இடுக்குகள் என நுட்பமாக அதில் காணலாம். இதே போல இதயம், கணையம், கல்லீரல், நுரையீரல், ஜனன உறுப்புகள், தசை, எலும்பு, இரத்தம் என எதை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள் – அது பற்றித் தெளிவாக அது தகவல்களைத் தருகிறது.
துரதிர்ஷ்டவசமாக முகலாயப் படை எடுப்பாலும் பிரிட்டிஷாரின் ஆட்சிக்கு உட்பட்டதாலும் சிறுகச் சிறுக அதன் மஹிமை நமது நாட்டில் குறைக்கப்பட்டது; அதன் அருமை பெருமை மறைக்கப்பட்டது.
இன்றைய அல்லோபதி டாக்டர்கள் தங்கள் மருத்துவத்துடன் இதையும் சற்று நுணுகி ஆராய்ந்து இதன் அருமை பெருமைகளையும் அறிந்து, ஆயுர்வேத சிகிச்சை முறைகளையும் தங்கள் வழிமுறைகளில் இணைத்துக் கொண்டால் சில ஆண்டுகளிலேயே நமது டாக்டர்களினாலேயே ஆயுர்வேதம் ஒரு புத்துயிரைப் பெறும்; அனைவருக்கு எளிய, இனிய சிகிச்சையைத் தந்து செலவைக் குறைத்து, நீடித்த ஆரோக்கியமான வாழ்வைத் தரும். இதில் ஐயமில்லை. சிந்திப்போம், செயல்படுவோம்!
***
tags- அதர்வ நிதி, ஆயுர்வேதம்
You must be logged in to post a comment.