Research Article by London swaminathan
Date: 21 February 2016
Post No. 2561
Time uploaded in London :– 7-00 AM
( Thanks for the Pictures )
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
Please go to swamiindology.blogspot.com
OR
tamilandvedas.com
For 2500 more articles and research papers.
வடதுருவப் பிரதேசம் ஆர்க்டிக் வட்டத்துக்குள் இருக்கிறது. பூமியின் தென் கோளார்த்ததிலுள்ள அண்டார்ட்டிக் பிரதேசம் தென் துருவத்தில் உள்ளது. இந்த இரண்டு பனிக்கட்டிப் பிரதேசங்களிலும் பெட்ரோலியம் மற்றும் பல கனிம வளங்கள் இருக்கின்றன. ஆனால் அண்டார்ட்டிகாவின் இயற்கை அமைப்பைக் கெடுத்துவிடக் கூடாதென்பதற்காக எல்லா நாடுகளும் சில கட்டுப்பாடுகளை ஏற்றுள்ளன. ஆர்டிக் பிரதேசத்தில் கட்டுப்பாடுகள் குறைவு. ஏனெனில் அது ஏற்கனவே, கனடா, அமெரிக்கா, நார்வே, பின்லாந்து, சுவீடன், ரஷ்யா முதலிய நாடுகளின் நில எல்கைக்குள் வந்துவிட்டது.
கனடா நாட்டின் எல்லைக்குட்பட்ட ஆர்டிக் பிரதேசத்தில் பனிக்கட்டிக்கடியில் நல்ல தரமான வைரங்கள் கிடைக்கின்றன. அதை வெட்டி எடுத்து பயன்படுத்தும் முறை பற்றிய சுவையான விவரங்கள் இதோ:–
கனடாவின் வடமேற்குப் பிராந்தியத்தில் (Northwest Territories) வெப்ப நிலை மைனஸ் 35 (செல்ஸியஸ்) டிகிரிக்குப் போய்விடுகிறது. குளிர்காற்று வீசுகையில் மைனஸ் 70 டிகிரிக்கும் கீழே போய்விடும். அதாவது மனிதர்கள் வேலையே செய்யமுடியாது. மைனஸ் 30 டிகிரியில் யாரும் ஐந்து நிமிடத்துக்கு மேல் வேலை செய்ய இயலாது. இதனால் இரண்டிரண்டு பேராக சுரங்கத்துக்குச் செல்லுவர். ஒரு சூப்பர்வைசர் ஸ்டாப் வாட்ச் (Stop watch) வைத்து ஐந்து நிமிடம் ஆனவுடன் வேலையை நிறுத்தச் சொல்லுவார். இந்த இடத்துக்குப் பெயர் ஸ்நாப் லேக் (Snap Lake Diamond mine) வைரச் சுரங்கம். இதை வைரத் தொழிலில் உலகில் முன்னணியில் நிற்கும் டிபியர்ஸ் நடத்துகிறது.
கனடாவின் ரியோ டிந்தோ (Rio Tinto) கம்பெனி வைத்திருக்கும் வைரச் சுரங்கம் நீருக்கடியில் இருக்கிறது. அக்டோபர் முதல் ஜூலை வரை பனிக்கட்டியால் சூழப்பட்டுவிடும். இந்தச் சுரங்கத்தின் பெயர் டையாவிக் (Diavik Mine) சுரங்கம். இது இருக்குமிடத்தில் மரங்களே இல்லாததால் அந்த இடத்தை (Barren Lands) பேர்ரன் லண்ட்ஸ் (வறட்டுப் பகுதி) என்பர்.
இந்த சுரங்கங்களுக்கு பக்கத்தில் ஊர்களே கிடையாது. நூறு மைலுக்கு அப்பால்தான் நகரங்கள் உள்ளன. அதாவது மனிதர்கள் வசிக்குமிடத்தில் வைரங்கள் கிடைப்பதில்லை!
வரவர வைரம் கிடைப்பது அரிதாகி வருகிறது. இதனால் பிரபல வைரக் கம்பெனிகள் ஜிம்பாப்வே நாட்டில் (ஆப்பிரிக்க நாடு) வைர வியாபாரத்துக்கு மூடு விழா நடத்திவிட்டன.
வைரத்தைக் கண்டுபிடிக்க பல கோடி டாலர் செலவிட்டும் பயனில்லை. கிடைக்கும் என்று உத்தரவாதம் எதுவும் கிடையாது. கிடைத்தாலும் அது கட்டுபடியாகக் கூடிய செலவில் எடுக்கப்படுமா என்பது கேள்விக்குறியே.
வைரக் கற்களுக்கு ஆசைப்பட்டு 2000 முதல் 2014 ஆம் ஆண்டுவரை 700 கோடி டாலரைப் பலரும் முதலீடு செய்தனர் என்றும் பெரிய கண்டுபிடிப்புகள் எதுவும் நிகழ்வில்லை என்றும் டி பியர்ஸ் ஆய்வு காட்டுகிறது.
கடந்த 140 வருடங்களில் வைரத்துக்கு ஆசைப்பட்டு 7000 இடங்களைத் தோண்டினரென்றும், அவைகளில் 1000ல் மட்டுமே வைரங்கள் இருந்தனவென்றும் டிபியர்ஸ் (De Beers) கூறுகிறது. அதிலும் 60 சுரங்கங்களே, கட்டுபடியாகக் கூடிய விலயில் வைரங்களை உற்பத்தி செய்தன (வைரக் கற்களில் தரம் குறைந்த வைரங்களே அதிகம் கிடைக்கின்றன. இவைகளைப் பல்வேறு கருவிகளில் பயன்படுத்துவர்; நல்ல ஜாதி வைரங்கள் மட்டுமே நகைகளுக்குகந்தவை.)
சில இடங்களில் வைரம் எடுப்பது கடினம்; செலவும் அதிகமாகும். டையாவிக் சுரங்கம், ஏரியின் தண்ணீருக்கடியில் இருப்பதால் மிகவும் கஷ்டபட்டு வைரத்தை எடுக்கின்றனர்.
ஒரு குறிப்பிட்ட சுரங்கம் வருடத்தில் இரண்டு மாதம் (Ekati Diamond Mine) மட்டுமே திறந்திருக்கும்!
இரண்டு கம்பெனிகளும் சுமார் 1300 பேரை வேலைக்கு வைத்துள்ளன.
“இயற்கை அன்னை தனது பொக்கிஷங்களை கண்காணாத இடத்தில், தொலைவில் ஒளித்து வைக்கிறாள்” என்று ரியோ டிண்டோ கம்பெனியின் நிர்வாக இயக்குனர் ஜீன் மார்க் சொல்கிறார்.
டையாவிக் என்னுமிடத்தில் ஆண்டுக்கு 60 லட்சம் காரட் முதல் 70 லட்சம் காரட் வரை வைரங்கள் தோண்டி எடுக்கப்படுகின்றன. இவைகளில் நிறைய வைரங்கள், நகைக்கு எற்ற உயர் ஜாதி வைரங்களாம்.
இரண்டு கம்பெனிகளும் புறச்சூழல் பாதுகாப்பு விதிகளை மீறாமலிருக்க கண்காணிப்புக் குழுக்கள் (Environmental Monitoring Agency) உள்ளன. அவ்வபோது நீர், மீன், கரடி இவைகளைப் பிடித்து விஞ்ஞான சோதனை நடத்தி ஏதேனும் மாறுதல் ஏற்படுகிறதா என்றும் கண்காணித்து வருகின்றனர்.
மேலும் பனிக்கட்டிப் பகுதியில் வாழும் பழங்குடி மக்கள் சில இடங்களைப் புனிதமாகக் கருதுவதால் அங்கும் ஆராய்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
சென்ற ஆண்டு டிபியர்ஸ் உற்பத்தி செய்த 36 மில்லியன் காரட் வைரத்தில் 2 மில்லியன் மட்டுமே கனடாவிலிருந்து வந்தன.
தென் ஆப்பிரிக்கா, பாட்ஸ்வானா ஆகிய நாடுகளின் வைர உற்பத்தி யைவிட கனடாவில் குறைவு என்றாலும், வைரத்தின் தரம் மிகவும் அதிகமென்று டிபியர்ஸ் அதிகாரி லைனட் கூல்ட் கூறினார். உலகின் மிகச் (Exquisite diamonds) சிறந்த, விலையுயர்ந்த வைரங்களில் பல, கனடிய ஆர்டிக் பிரதேசத்தில் கிடைத்தவைதான்” என்றும் கூல்ட் கூறினார்.
–சுபம்–
You must be logged in to post a comment.