கீதையின் ஆறாவது கட்டளை! (Post No.7139)

Written by S Nagarajan

swami_48@yahoo.com

Date: 26 OCTOBER 2019
British Summer Time uploaded in London – 7-25 am


Post No. 7139

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.

கட்டுரை எண் : 7123 வெளியான தேதி : 22-10-2019 – கீதையின் ஐந்தாவது கட்டளை-யைத் தொடர்ந்து வருவது இந்தக் கட்டுரை

கீதையின் ஆறாவது கட்டளை!

ச.நாகராஜன்

ஜே.பி.வாஸ்வானி அவர்கள் கீதை ஏழு கட்டளைகளைத் தருவதாகக் கூறுகிறார்.

ஏழு கட்டளைகளுள் ஆறாவது கட்டளை இது :

 Thou Shalt Seek the Lowest Place

 நீ உனக்கென ஒரு தாழ்ந்த இடத்தை நாடு

இதைப் பற்றி அவர் தரும் விளக்க உரையில் சில முக்கியமான கருத்துக்களை இங்கே பார்ப்போம்:

அதிகாரத்தையும் விளம்பரத்தையும் தேடும் இந்த உலகின் இன்றைய நாளில் இது எவ்வளவு தூரம் சாத்தியமாகும்? விந்தை தான்!

அக்பரை கடவுள் என்று துதி பாடும் கூட்டம் பீர்பலிடம் வந்து, ‘அக்பர் கடவுள் தானே, அதை நீ ஒத்துக் கொள்கிறாயா?’ என்று கேட்டனர்.

பீர்பல் திட்டவட்டமாக அதை மறுத்து விட்டார்.

இது தான் சமயம் பீர்பலை ஒழித்துக் கட்ட என்று எண்ணிய அவர்கள் அக்பரிடம் சென்று, “நீங்கள் தாம் எம் கடவுள். ஆனால் பீர்பல் இதை ஒத்துக் கொள்ள மறுக்கிறார்” என்று கோள் மூட்டினர்.

அக்பர் உடனடியாக பீர்பலை அழைத்தார்.

“பீர்பல், இவர்கள் என்னைக் கடவுள் என்று எண்ணுகிறார்கள். நீர் அதை ஒத்துக் கொள்ள மாட்டேன் என்று கூறியது உண்மையா?” என்று கேட்டார்.

பீர்பல் ஆம் என்று தான் கூறியதை ஒத்துக் கொண்டார்.

அக்பர் கோபத்துடன், “ பீர்பல், நான் என் குடிமக்களுக்கு கடவுள். உமக்கு எம் மீது கொஞ்சம் கூட மரியாதையே இல்லையா?” என்று கேட்டார்.

பீர்பல் அக்பரை நோக்கிக் கூறினர் :”அரசே! தாங்கள் கடவுள் இல்லை என்று நான் கூறியது உண்மை தான்! ஏன் அப்படிக் கூறினேன்? தாங்கள் கடவுளுக்கும் ஒரு படி மேலே! அதனால் தான் நீங்கள் கடவுள் இல்லை என்று கூறினேன்”

பீர்பலைத் தண்டிக்க நினைத்தவர்கள் இந்தப் பதிலைக் கேட்டு திடுக்கிட்டனர்.

அக்பருக்கு ஒரே மகிழ்ச்சி. வியப்பு தாளவில்லை.

“சற்று விளக்கிக் கூறும்” என்று பீர்பலை நோக்கிக் கூறினார்.

பீர்பல் கூறினார்: “அரசே! கடவுளை எடுத்துக் கொள்ளுங்கள். நாம் எவ்வளவோ பேர் என்னென்ன தவறுகள் உண்டோ அவ்வளவையும் செய்கிறோம். ஆனால் அவரது சாம்ராஜ்யமான இந்தப் பூவுலகிலிருந்து ஒரு போதும் அவர் யாரையும் விரட்டி விடுவதில்லை.

ஆனால் தாங்களோ, எவனேனும் ஒருவன் தவறிழைத்து விட்டதாகத் தோன்றினால் அவனை உடனடியாகத் தண்டித்து விடுகிறீர்கள்; நாடு கடத்தி விடுகிறீர்கள்! தங்களின் அதிகாரம் எப்படிப்பட்டது, பாருங்கள்! தாங்கள் கடவுளுக்கும் ஒரு படி மேலே தானே இருக்கிறீர்கள்?!”

அக்பர் பெரும் புத்திசாலி.

பீர்பல் கூற வந்ததை நன்கு புரிந்து கொண்டார்.

அகம்பாவம் ஒருவனை எந்த அளவுக்குக் கொண்டு போய் விடும் என்பதை, தான் கடவுள் என்று கூறியதை ஒத்துக் கொண்டதாலேயே தெரிய வருகிறது என்பதை அவர் உணர்ந்து கொண்டார்.

பீர்பலை அவர் போற்றித் தன் நிலையை உணர வைத்ததைப் பாராட்டினார்.

மாமன்னர் அலெக்ஸாண்டர் மரணப்படுக்கையில் இருந்தார். அவரது அன்னைக்குத் துக்கம் தாளவில்லை. ஓவென்று அழுதார்.

அலெக்ஸாண்டர் அவரை அருகில் அழைத்தார். “தாயே! கவலைப்பட வேண்டாம். நான் இறந்த பிறகு என்னைப் புதைத்த பிறகு, வரும் பௌர்ணமியன்று என் கல்லறைக்கு வந்து அலெக்ஸாண்டர் என்று என்னைக் கூப்பிடுங்கள். நான் உங்களிடம் பேசுகிறேன்” என்றார்.

அலெக்ஸாண்டர் மரணமடைந்த பின்னர் அவர் கல்லறையில் புதைக்கப்பட்டார்.

முழுநிலா ஒளி வீசிப் பிரகாசிக்கும் பௌர்ணமியும் வந்தது.

கல்லறைக்கு ஓடோடி வந்த அலெக்ஸாண்டரின் தாயார், அவர் புதைக்கப்பட்ட இடத்திற்கு வந்து, “ஓ!அலெக்ஸாண்டர்” என்று கத்திக் கூப்பிட்டார்.

உடனடியாக நாலா புறங்களிலிருந்தும் ஏராளமான குரல்கள் எழும்பின:

“இங்கு நூற்றுக் கணக்கான அலெக்ஸாண்டர்கள் புதையுண்டு கிடக்கிறோம். எந்த அலெக்ஸாண்டரை நீங்கள் கூப்பிடுகிறீர்கள்? உங்களுக்கு யார் வேண்டும்?”

இது தான் உலகம்.

அக்பர் ஒரு நாள் பீர்பலுடன் விருந்துண்டார்.

“ஆஹா! பீர்பல்! கத்தரிக்காய் போல ஒரு கறிகாயை நான் கண்டதே இல்லை. என்ன ருசி? நீர் என்ன சொல்கிறீர்?” என்றார்.

“மன்னா! அது தான் உண்மை! எப்படிப்பட்ட கறிகாய் கத்தரிக்காய்! அதனால் தான் அதற்கு கிரீடம் போல ஒன்றை வைத்திருக்கிறான் கடவுள்”

பீர்பலின் இந்த பதிலால் அக்பருக்கு ஏக குஷி.

ஆனால் அன்று அவருக்கு ஜீரணம் ஆகவில்லை. பெரிதும் கஷ்டப்பட்டார்.

மறுநாள் பீர்பலிடம் அவர், “பீர்பல்! கத்தரிக்காய் போல ஒரு மோசமான கறிகாயை நான் பார்த்ததே இல்லை! நீர் என்ன சொல்கிறீர்” என்றார்.

“மன்னா! அது தான் பெரிய உண்மை! அதனால் தான் அதன் தலையில் ஆணி போன்ற ஒன்றை அடித்து சுற்றி வர முள்களை கடவுள் கொடுத்திருக்கிறார்” என்றா பீர்பல்.

அக்பருக்குக் கோபம் வந்து விட்டது. “பீர்பல்! நேற்று நீர் தான் கடவுள் அதற்குக் கிரீடம் கொடுத்திருக்கிறார். அது தான் பிரமாதமான காய் என்றீர். இன்று அப்படியே மாற்றிப் பேசுகிறீரே” என்றார் அக்பர்.

பீர்பல் மன்னனை நோக்கிக் கூறினார்: “ மன்னரே! எனக்கு நீங்கள் தான் எஜமானர். கத்தரிக்காய் இல்லை. நீங்கள் சொன்னதை மறுத்து இந்த எளியேன் பேசக் கூடாது. ஆனால் கத்தரிக்காயைப் பற்றி நான் என்ன வேண்டுமானாலும் பேசலாம். அது எனக்கு எஜமானன் இல்லை” என்றார்.

அக்பருக்கு பீர்பலின் எளிமை புரிந்து விட்டது.

எப்போதும் தன்னைத் தாழ்ந்த நிலையில் வைத்துக் கொள்ளும் பண்பு அவருக்குப் புரிந்து அவரை இன்னும் கொஞ்சம் அதிகமாகப் பிடிக்க ஆரம்பித்து விட்டது.

எளிமை என்றும் வெற்றி பெறும்!

***