
Translated by London swaminathan
Date: 18 February 2016
Post No. 2551
Time uploaded in London :– 6-07 AM
( Thanks for the Pictures )
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact swami_48@yahoo.com)
மழைக் காலம் வந்தது. ஆற்றில் வெள்ளம் கரை புரண்டோடியது. எல்லா ஓடைகளும் தண்ணீரைக் கொண்டுவந்து கொட்டின. மறு கரையே தெரியாத அளவுக்குப் பரந்து ஓடியது. அக்கரையில் நின்ற பசுமாட்டுக்கும் வீட்டுக்கும் இடையே வித்தியாசம் சொல்ல முடியாத அளவுக்குச் சின்னதாகத் தெரிந்தது. ஆற்றுக்கு ஒரே குஷி! நேராக சமுத்திரதுக்குச் சென்றது. இது வரை தன்னைவிட சிற்றோடை களையே கண்ட, அந்த ஆற்றுக்கு சமுத்திரத்தைப் பார்த்த மாத்திரத்தில் ஒரே மலைப்பு, திகைப்பு. ஆர்ப்பரிக்கும் கடலைக் கண் சிமிட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தது.

ஆறு சொன்னது:
“அரை வேக்காடுகளுக்கு முழு உண்மை தெரியாது என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். என் விஷயத்தில் அது உண்மையாகிவிட்டது. கடந்தகாலத்தில் கன்பூசியஸின் கல்வி அறிவையும், ‘போ’வின் வீரதீரத்தையும் குறைகூறுவதைக் கேட்டிருக்கிறேன். இப்போது விரிந்து பரந்த உன்னைக் கண்டவுடன் என்னால் நம்ப முடியவில்லை. உன்னை மட்டும் நான் இன்று கண்டிருக்காவிட்டால், என் சிற்றறிவைக் கண்டு, விஷயம் தெரிந்தோர் என்னைப் பார்த்துப் பரிகசித்திருப்பார்கள்.
இதற்கு சமுத்திரம் பதில் சொன்னது:
“கிணற்றுத் தவளையிடம் போய் சமுத்திரத்தைப் பற்றிப் பேசினால் புரியுமா? கோடைகால ஈக்களிடம் போய், பனிக்கட்டி பற்றி பேசினால் அதுகளுக்கு விளங்குமா? அதிகம் படித்தவனிடம் சட்டம் பற்றிப் பேசினால் அவனுக்கு என்ன தெரியும்? இப்போது நீ, என்னைப் பார்த்துவிட்டதால், உனக்கு பெரியது, சிறியது தெரியும். இனிமேல் நான் உன்னிடம் பெரிய கொள்கைகளை எடுத்துரைக்கலாம். உலகில் சமுத்திரத்தை விடப்பெரியது கிடையாது. உலகிலுள்ள எல்லா நதிகளும் இதில் விழுகின்றன. ஆனால் கடல் நிரம்பி வழிந்ததே இல்லை. இதிலிருந்து எவ்வளவோ தண்ணீர் வெளியேறினாலும் இதற்கு வெள்ளம், வறட்சி என்ற பிரச்சனையே இல்லை. எல்லா ஆறுகளையும் ஓடைகளையும் விடப் பெரியது. ஆயினும் நான் என்னைப் பற்றி பெருமை பேசுவதில்லை. எனது உருவத்தை இந்தப் பிரபஞ்சம் எனக்கு அளித்துள்ளது. ஆக்க சக்தி, அழிவு சக்தி என்னும் பிரபஞ்சம் முழுதும் பரவிய கொள்கையிலிருந்து எனக்கு சக்தி கிடைக்கிறது. நான், பெரிய பூமியில் ஒரு கூழாங்கல்லைப் போன்றவன்; பெரிய மலையில் ஒரு சின்னப் புதர் போன்றவன். மனிதனைக்கூட ஒரு முடியின் (மயிர்)நுனிதான் என்று ஒப்பிடுகிறார்கள்.
அளவுகளுக்கு, உருவங்களுக்கு எல்லையே கிடையாது. காலம் எல்லையற்றது. நிலைமைகள் மாறிக்கொண்டே இருக்கும். நாம் இடக்கூடிய பெயர்களும் முடிவானவை அல்ல. இப்படி இருக்கையில் ஒரு முடியின் நுனிதான் அளவில் சிறியது என்றோ பிரபஞ்சம்தான் மிகவும் வியாபகமானது என்றும் எப்படிச் சொல்ல முடியும்?”

–சுபம்-
You must be logged in to post a comment.