Written by London swaminathan
Date: 18 March 2017
Time uploaded in London:- 18-48
Post No. 3736
Pictures are taken from various sources; thanks.
contact; swami_48@yahoo.com
இறந்துபோன முன்னோர்களுக்கு நீர்க்கடன் செலுத்தும் வழக்கம், ஆண்டுக்கு ஒரு முறை நினைவு கூறும் வழக்கம் அல்லது மீடியம் ஒருவர் மூலம் இறந்தோருடன் பேசும் வழக்கம் — இவை எல்லாம் உலகின் பல பகுதிகளில் உண்டு. ஆனால் எகிப்தியர்கள், இறந்தோருக்குக் கடிதம் எழுதினார்கள் என்றால் வியப்பாக இருக்கிறதல்லவா?
இதோ சில சுவையான விஷயங்கள்:–
நீத்தாருக்கு அவர்களுடைய உறவினர் எழுதிய கடிதங்கள், இறந்துபோனோரின் கல்லறைகளிலோ, சவப்பெட்டிகளிலோ இடப்பட்டன. இத்தகைய ஒரு கடிதம், பாரீஸிலுள்ள புகழ்பெற்ற லூவர் மியூசியத்தில் (Louvre Museum) உள்ளது. அதன் வாசகம்:
“இங்கே படுத்திருக்கும், ஓ, ஆசிரிஸின் (Chest of the Osiris) மாண்புமிகு மார்பே! (இறந்தவரின் பெயர் இது!) நான் சொல்வதைக் கேள். என்னுடைய செய்தியை அனுப்புக”
இதன் பொருள் என்னவென்றால் கடிதம் எழுதியோர், பதில் கடிதம் எதிர்பார்க்கவில்லை. ஆனால் தன்னுடைய கனவில் தோன்றி, தனது ஆசை, விருப்பத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்பதாகும். இவ்வித நம்பிக்கை எகிப்தில், கிரேக்கர்களின் (Hellenistic Egypt) ஆட்சிக் காலத்தில் இருந்தது. அவர்கள் ஒரு கோவிலில் போய் தூங்குவார்கள். அப்பொழுது வரும் கனவு மூலம் அவர்களுக்கு நோய் குணமாகும் அல்லது நினைத்தது நடக்கும். குறிப்பாக இம்ஹோதேப் (மஹாதேவ் Imhotep) கோவிலில் போய்த் தூங்குவார்கள்.
இம்ஹோதேப் ( IMHOTEP மஹாதேவன்) என்பவர் மூன்றாவத் வம்ச ஆட்சிக்காலத்தில் வசித்த கட்டிடக் கலை நிபுணர்; கோவில் அதிகாரி. இவரது காலம் கி.மு2667- 2648. இவரை இந்தியாவின் சாணக்கியரோடு ஒப்பிடலாம். பிற்காலத்தில் நாம் வியாச மஹரிஷியைக் கடவுள் ஆக்கியது போல இமதேவனை அல்லது மஹா தேவனைக் கடவுள் ஆக்கிவிட்டனர். ஆகையால் தான் இவருடைய கோவிலில் தூங்கி, கனவுக்காகக் காத்திருந்தனர்.
ஆசிரிஸ் (OSIRIS) என்னும் கடவுள் பாதாள உலகின் அரசன். இறந்தோருக்கு நீதி வழங்கும் எம தர்மராஜன். நாம் கடவுளின் பெயர்களைச் சூட்டிக்கொள்வது போல எகிப்தியர்களும் குழந்தைகளுக்குக் கடவுளின் பெயர்களைச் சூட்டுவர். வெறும் பெயரை வைக்காமல் நாம் சிவ+ப்ரியா, கண்ண+தாசன் என்றெல்லாம் வைப்பது போல அவர்கள் ஆசிரிஸின் மார்பு, கண், பிரியன் என்றெல்லாம் பெயர் வைப்பர்!
இதுவரை 20 கடிதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பெர்லினில் ஒரு கிண்ணத்தில் இப்படி ஒரு கடிதம் எழுதப்பட்டிருந்தது. அந்தக் கிண்ணம் இரண்டாவது உலக மஹா யுத்ததின்போது அழிந்துபோனது. அந்தக் கிண்ணத்தில் , இறந்து போனவருக்கு உணவு முதலியவற்றை வைத்து கல்லறையில் இறக்கிவிடுவர்.
இன்னொரு விந்தை என்னவென்றால் இந்தக் கடிதங்களில்—- அனுப்புவோர் பெயர், விலாசம் ஆகியன கூட இருக்கும். வழக்கமாக நாம் குசலம் (நலம்) விசாரிப்பதுபோல இறந்தவரையும் நலம் விசாரிப்பர். “எப்படி இருக்கிறீர்கள்? மேற்கு திசை உங்களை நன்றாகக் கவனித்துக் கொள்கிறதா? உங்கள் விருப்பங்களை நிறைவேற்றுகிறதா?”
அது என்ன மேற்குதிசை?
இந்துக்களுக்கு, இறந்தோர் செல்லும் திசை தெற்கு. வேதங்களிலும், சங்கத் தமிழ் நூலகளிலும், திருக்குறளிலும் இது எழுதப்பட்டுள்ளது (தென்புலத்தார்). ஆனால் எகிப்தியர்களுக்கு இறந்தோர் செல்லும் திசை சூரிய அஸ்தமன திசை யான மேற்கு.
நாம், “அன்புள்ள நண்பா! நீ நலமா? நலம் அறிய நனி அவா” என்றெல்லாம் உபசாரத்துக்காக எழுதுகிறோம். அவர்கள் இப்படி எழுதவில்லை. உண்மையில் சீரியஸாக எழுதினர்.
அது எப்படித் தெரியும்?
மரணப் புத்தகத்தில் 148 ஆவது உச்சாடனமும் 190ஆவது உச்சாடனமும் (Spells 148 and 190 of the Book of the Dead) விரிவான விளக்கங்களை அளிக்கின்றன. அதாவது இறந்தோரின் ஆவி, அதன் நிலையை உங்களுக்குத் தெரிவிக்குமாம்.
பெரும்பாலான வேண்டுகோள்கள் தன்னுடைய குடும்பத்தை, தீய சக்திகளிடமிருந்து காப்பாற்ற வேணும் என்றே எழுதப்பட்டுள்ளது. பாதாள உலக நீதிமன்றத்தில் தனக்காக வாதாடும் படியும் இறந்தோருக்கு மனுப்போடுவர். லூவர் மியூசியத்திலுள்ள ஒரு கடிதம் சொல்கிறது: “இதோ பார்! நீ பூவுலகில் நல்லவனாய் இருந்தாய் ஆகையால் எமலோகத்திலும் உனக்கு நல்ல செல்வாக்கு இருக்கும்”.
குடும்பத்தில் யாருக்கோ பேய் பிடித்த விஷயம், சொத்துப் பிரிவினை விஷயம், தான் செய்த தவறுகள், குடும்பத்தில் யாருக்கோ குழந்தை பிறக்காத குறை என்றெல்லாம் பல்வேறு விஷயங்களை விஸ்தாரமாக எழுதுவர். சில கடிதங்கள் நாம் டெலிபோனில் அரட்டை அடிப்பது போல இருக்கும்!
“இதோ பார்; நீ என்னிடம் எவ்வளவு கோழிக்கறி கேட்டாய்; அப்போது நான் அன்பாகக் கொடுத்தேனே, அம்மா! இப்பொழுது உன் பிள்ளை இங்கே காயம் பட்டிருப்பதை நீ பொறுப்பாயோ? “ என்றெல்லாம் உணர்ச்சிவசமாக கடிதம் எழுதுவர்.
தன் சார்பில் பாதாள உலகில், ஆஸிரிஸின் நீதி மன்றத்தில் வாதாட வேண்டும் என்று மன்றாடுவர்
சிகாகோ மியூசியத்தில் ஒரு ஜாடி இருக்கிறது. அதிலுள்ள வாசகம்: “எனக்கு நல்ல ஆரோ க்கியமான ஆண்பிள்ளை பிறக்கட்டும்; ஏனெனில் நீ ஒரு நல்ல ஆவி”.
ஹாலந்தில் லெய்டென் மியூசியத்தில் ஒரு கடிதம் மனைவி மீது வசை மாறி பொழிகிறது. இது 19ஆவது வம்ச (19th Dynasty) காலத்திய கடிதம். பேப்பரில் (பபைரஸ் புல்) எழுதப்பட்டுள்ளது. “ஏண்டி பேயே! நீ உயீரோடிருந்தபோது நான் உன்னை எவ்வளவு நன்றாகக் கவனித்தேன்.அதையெல்லாம் மறந்துவிட்டு இப்பொழுது எனக்கு கவலையைக் கொடுத்திருக்கிறாயே? என் மனம் பரிதவிக்கிறதே! நான் உனக்கு என்னடி கெடுதல் செய்தேன்?”
இந்தக் கடைசி வாசகம் திரும்பத் திரும்ப வருகிறது. (பரிதாபத்துக்குரிய கணவன்!!)
எகிப்தியர் நம்பிக்கையும் இந்துக்கள் நம்பிக்கையும்
கிட்டத்தட்ட இந்துக்கள் திதி, சிரார்த்தம், தர்ப்பணம் செய்வது எதற்காக, அப்படிச் செய்யாவிடில் குடும்பத்தில் என்ன என்ன நிகழும் என்று சொல்வதெல்லாம் அந்தக் கடிதங்களில் காணப்படுகிறது. பித்ருக்களின் (இறந்துபோனோர்) நல்லாசி இல்லவிடில் குடும்பத்தில் பல கெடுதல்கள் வரும் என்பது இந்துக்களின் நம்பிக்கை. பிராமணர் அல்லாதோரும் கூட ஆண்டூக்கு இரு முறை ஆடி அமாவாசை, தை அமாவாசை போன்ற காலங்களில் நீர்க்கடன் செலுத்துகின்றனர். வீட்டில் இறந்துபோன தாய் தந்தையர், தாத்தா பாட்டி ஆகியோரின் படங்களை வைத்து மரியாதையுடன் வணக்கம் செலுத்துகின்றனர்.
இறந்து போன ஆவிகள் ஒரு கல்லறையிலிருந்து இன்னொரு கல்லறைக்கும், நாம் வசிக்கும் உலகிற்கும் கின்னரர் ரூபத்தில் (மனிதமுகம்+ பறவை உடல் = பா Ba என்று பெயர்) வரமுடியும் என்று எகிப்தியர் நம்ம்பினர். நாம் சிராத்த, திதி தினங் ளில் இறந்தோர் ஆவி வருவதாக எண்ணுகிறோம். பிராமணர்கள் வருடத்திற்கு 90 முறைக்கு மேலாகத் தர்ப்பணம் செய்ய வேண்டும். ஒவ்வொரு முறையும் தர்ப்பைப் புல்லிலான கூர்ச்சத்தை வைத்து இறந்த முன்னோரின் ஏழு தலை முறைகளை ஆவாஹனம் செய்வர் (எழுந்தருளும் படி இறைஞ்சுவர்; எள்ளும் நீரும் இரைத்த பின்னர். உங்கள் இருப்பிடத்திற்கு வந்த வழியாகவே சுகமாகத் திரும்பிச் செல்லுங்கள் என்று பக்தியோடு வேண்டுவர். ஆக இந்துக்களும் அவர்கள் இப்படி பூலோகத்துக்கு வந்து செல்ல முடியும் என்று நம்புகின்றனர். யார் யார் யாருக்கெல்லாம் உறவினர இப்படி நீத்தார் கடன் செய்ய இயலவில்லையோ அவர்களுக்கும் சேர்த்து நான் எள்ளும் நீரும் அளிக்கிறேன் என்று சொல்லி நிறைவு செய்வர். இப்படி எல்லோர் நலனுக்கும் சேர்த்துப் பிரார்த்திப்பதால் (லோகாஸ் சமஸ்தோ சுகினோ பவந்து) அந்தக் காலத்தில் மன்னர்கள் பிராமணர்களுக்கு வாரி வழங்கினர்.
எகிப்தியர், இறந்தோர் பற்றி எழுதியதை எல்லாம் வால்யூம் வால்யூமாக எழுதலாம். இன்னும் பல கட்டுரைகளில் மரணப் புத்தகம் (Book of the Dead), பேய் (Exorcism) ஓட்டல், பிரமிடுச் சுவர் வாசகங்கள் (Pyramid Texts) , மேலும் சில இறந்தோருக்கான (Letters to the Dead) கடிதங்கள் பற்றிச் சொல்லுவேன்.
-சுபம்–
You must be logged in to post a comment.