ஆஷ் கொலை வழக்கு: பாரதியார் நூல்கள் – PART 42 (Post No.4364)

Written by S.NAGARAJAN

 

 

Date: 4 NOVEMBER 2017

 

Time uploaded in London- 6-18

 

 

Post No. 4364

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

 

பாரதி இயல்

 

மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 42

ஆஷ் கொலை வழக்கு – ரகமி எழுதியுள்ள ஆய்வுத் தொடர்

 

ச.நாகராஜன்

 

 

மஹாகவி பாரதியாரின் வாழ்க்கை பன்முகப் பரிமாணம் கொண்ட ஒன்று. சிறு வயதிலேயே அவர் மறைந்தார் எனினும் அவர் வாழ்க்கையில் அவர் சகோதரி நிவேதிதா, பால கங்காதர திலகர், மஹாத்மா காந்திஜி, அரவிந்தர், வ.உ.சி., வ.வே.சு. ஐயர் போன்ற ஏராளமான சரித்திரம் படைத்த பல பெரியோர்களைச் சந்தித்தார்.

சுதந்திரம் அடையத் தீவிரமாக உழைத்த புரட்சிவாதிகளிலிருந்து அஹிம்சை போதித்த காந்தி மகான் வரை அவரது வாழ்க்கை அனைவரையும் கண்டது. ஆனால் எதிலும் ஒரு சமச்சீர் தன்மையைக் கொண்டிருந்தார் அவர். அது தான் அவர் வாழ்க்கையில் நாம் காணும் ஒரு அற்புதம்.

இந்த வகையில் ஆஷ் கொலை வழக்கில் அவரும் சம்பந்தப்படுத்தப்பட்டார் என்பது சரித்திரம் தரும் தகவல்.

 

 

பழம் பெரும் எழுத்தாளரான ரகமி (முழுப்பெயர் ரங்கஸ்வாமி) தன் நேரம் உழைப்பு ஆகியவற்றை அர்ப்பணித்து ஆஷ் கொலை வழக்கு பற்றி முழுதும் ஆராய்ந்தார்.

 

 

அதன் அடிப்படையில் தினமணி கதிர் வார இதழில் 3-6-1984 தொடங்கி ஒரு நெடுந்தொடரை எழுதினார். இந்தத் தொடர் புத்தக வடிவில் வெளியிடப்படவில்லை என்றே எண்ணுகிறேன்.

(கதிர் வார இதழிலிருந்து தொகுத்து வைத்துள்ள கட்டுரைகள் என்னிடம் பத்திரமாக உள்ளன.)

*

அந்த நூலிலிருந்து பாரதியார் பற்றிய சில முக்கியப் பகுதிகளை  மட்டும் இங்கு தருகிறேன்.

 

1911ஆம் ஆண்டு ஜூன் 17ஆம் தேதியன்று கலெக்டர் ஆஷ் என்பவரை வாஞ்சி ஐயர் மணியாச்சி ஜங்ஷனில் சுட்டுக் கொலை செய்தார்.

 

1911, செப்டம்பர் 11ஆம் தேதி, சனிக்கிழமையன்று (இது பின்னால் பார்க்கும் போது – செப்டம்பர் 11 – பாரதி மறைவு நாளாக அமைகிறது!) ஆஷ் கொலை சதி வழக்கு கேஸின் முதல் நாள் விசாரணை துவங்கியது.

 

14 பேர்கள் குற்றம் சாட்டப்பட்டு நிறுத்தப்பட்டனர். அனைவரும் தங்கள் மீது சாட்டப்பட்ட குற்றத்தை மறுத்தனர்.

 

பப்ளிக் பிராசிக்யூடர் நேபியர் தனது வாதத்தை முன் வைத்துக் கூறுகையில், “ திருநெல்வேலி கலெக்டர் ஆஷின் கொலைக்கு சதித் திட்டங்கள் புதுவையிலிருந்து ஆரம்பமாகியது என்று சொல்வதற்கு ஏற்றாற் போல, முதல் குற்றவாளி நீலகண்டன் புதுவையில் கவி பாரதியார் நடத்திய ‘இந்தியா’ பத்திரிகையில் சம்பந்தப்பட்ட பின் ‘விஜயா’ மற்றும் ‘சூரியோதயம்’ பத்திரிகைகளில் வேலை செய்த போது, அவைகள் சர்க்காரால் தடுக்கப்படவே, பின்னர் அவர், ‘கர்மயோகி’, ‘பால பாரதா’, தர்மா’ பத்திரிகைகளில் கட்டுரைகளை எழுதி வந்தார்.

 

 

புதுவையிலிருந்த தீவிரவாதிகளுடன் நீலகண்டனும், கொலையாளி வாஞ்சியும் நெருங்கிப் பழகினர். இதில் வி.வி.எஸ் ஐயர், சுப்பிரமணிய பாரதி, மண்டயம் ஸ்ரீனிவாசாச்சாரி, நாகசாமி இவர்கள் பிரிட்டிஷ் கவர்ன்மெண்டிற்கு விரோதமான அபிப்ராயங்கள் கொண்டிருந்தனர். இதனால் இவர்கள் விலாசங்களுக்கு வரும் கடிதங்கள் வெளிநாட்டுப் பிரசுரங்களைப் பரிசீலனை செய்த பிறகே அவர்களிடம் பட்டுவாடா செய்யும்படி புதுவை போஸ்ட்மாஸ்டர் எம்.கே.ஸ்ரீநிவாசய்யங்காருக்கு, கிரிமினல் இன்வெஸ்டிகேஷன் அதிகாரிகள் உத்திரவு செய்திருந்தனர். இதன்படியே எல்லாக் கடிதங்களும் பரிசீலனை செய்தே அவர்களிடம் டெலிவரியும் செய்யப்பட்டு வந்தது. சில சமயங்களில் சுப்ரமண்ய பாரதியாரே தன் பெயருக்கு வரும் தபால்களை வாங்குவதற்காக தபாலாபீசுக்கு வந்து விடுவார். அவர் சற்று முன் கோபக்காரர். தபால்கள் பரிசீலனை செய்து சற்று தாமதமாகப் பட்டுவாடா செய்வதையும் பொறுக்காமல் கோபித்துக் கொண்டு, “சீ.. சீ..! கேவலம் நாயும் கூட இந்தப் பிழைப்புப் பிழைக்குமே” என்று சொல்வதுண்டு.

 

 

இந்தச் சம்பவம் நடந்து சில நாட்கள் கழித்துப் புதுவைக் கடற்கரையில் வி.வி.எஸ். ஐயர், சுப்பிரமணிய பாரதி, மண்டயம் ஸ்ரீநிவாசாச்சாரி, வாஞ்சி இவர்கள் கும்பலாகப் பேசிக் கொண்டிருந்தனர். எதிர்பாராதவிதமாகத் திடீரென இவர்களைச் சந்தித்த போஸ்ட்மாஸ்டர் ஸ்ரீநிவாசய்யங்காரிடம் வி.வி.எஸ் ஐயர் தங்கள் பெயருக்கும் வரும் நிருபங்களைத் தாமதிக்காமல் உடனுக்குடன் டெலிவரி செய்ய வேண்டுமென்று சாதாரணமாகக் கூறினார். பக்கத்திலிருந்த வாஞ்சி, “எதற்காக நாம் போஸ்ட்மாஸ்டரிடம் கெஞ்சிக் கேடக வேண்டும்? அவர் ஒழுங்காகத் தபால்களைத் தாமதிக்காமல் தந்தால் அவருக்குத் தான் நல்லது. இத்தனையும் மீறி அவர் தாமதித்தால், நாம் அவரையே இந்த ஊரிலேயே தீர்த்துக் கட்டி விட்டால் போச்சு!” என மிக்க ஆத்திரத்தோடு சொன்னான்.”

 

நேபியரின் வாதம் இப்படி நீள்கிறது. (ஆஷ் கொலை வழக்கு -அத்தியாயம் 3)

 

*

 

பின்னால் நீலகண்ட பிரம்மசாரி என்று  அழைக்கப்பட்ட நீலகண்டன் (முதல் குற்றவாளி) தன் வாழ்க்கையில் வெறுப்புற்றதைக் குறிப்பிட்டு தன் ஸ்டேட்மெண்டில் கூறியது:

“கடைசியில் புதுவைக்குச் சென்று அங்கு நான் பழகிய தீவிரவாதி நண்பர்களிடமெல்லாம் என் நிலைமையைக் கூறினேன். எனக்குத் தகுந்த ஆதரவு இல்லை. மன விரக்தியடைந்த நான் சிலகாலம் ஹரித்துவாரத்திற்குச் சென்று  சிவனேயென அமைதியாக இருக்க எண்ணி என்னுடன் கூட வரும்படி கவி சுப்ரமணிய பாரதியாரைக் கூப்பிட்டேன். அவரும் என்னுடைய நிலைமையில் இருப்பதாகக் கூறினதும் நான் அவரையே என்னுடன் வட நாட்டிற்கு வந்து விடு என்றழைத்தேன். அதற்கு அவர் தன் பேரில் சென்னையில் ஏதேனும் புது வாரண்டுகள் பிறந்து அவைகள் பெண்டிங்கிலிருக்கிறதா என்ற விவரமறிந்து பின்னர் முடிவு கூறுவதாகச் சொல்லி, சென்னை போலீஸ் கமிஷனருக்கே பகிரங்கமாகக் கடிதம் எழுதிக் கேட்டார்.

 

 

போலீஸ் கமிஷனரிடமிருந்து வந்த பதிலில் வாரண்டுகள் ஒன்றும் புதிதாகப் பிறப்பிக்கப்படவில்லை என்று வந்ததும், அவருடைய குடும்ப நிலையின் காரணமாகத் என்னுடன் வட இந்தியாவுக்கு வரவில்லை.” (ஆஷ் கொலை வழக்கு -அத்தியாயம் 3)

 

*

 

கொலைவழக்கின் தொடர்ச்சியாக பிராசிகியூஷன் சாட்சியாக முன்சீப் பரமேஸ்வரய்யர் விசாரிக்கப்பட்டார். அவர் கூறியது:

“ போன வருஷம் ஜூலையில் நான் செங்கோட்டையில் மாஜிஸ்டிரேட்டாக இருந்தேன். கலெக்டர் ஆஷ் கொலை விஷயமாகப் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரய்யரும், மதுரை இன்ஸ்பெக்டருமாகச் சேர்ந்து வாஞ்சியின் வீட்டைச் சோதனையிட்டபோது கூட இருந்தவன். துண்டுப் பிரசுரங்களைக் கைப்பற்றினோம்.

 

 

கிடைத்த அக்கடிதங்கள் மூலம் செங்கோட்டையிலுள்ள ‘சாவடி’ அருணாசலம் பிள்ளையின் வீட்டையும் சோதனையிட்டோம்.அங்கு ‘ஜென்ம பூமி’ புத்தகங்களும், சில பாடல்கள் அச்சடித்திருந்த நோட்டீஸ்களும் அகப்பட்டன. அப்பாடல்களில் கலெக்டர் விஞ்சை வெறி பிடித்தவன் போல சுதேசி மக்களை மதிப்பின்றிப் பேசுவதாக வெளியிட்டிருந்தது. சுதந்திரம் கேட்கும் பாரதவாசிக்கு ஆங்கிலேயன் கேட்கும் முறையில் கலெக்டர் விஞ்ச், வ.உ.சிதம்பரம் பிள்ளையைக் கேட்பது போல எழுதப்பட்டிருந்தது. நந்தன் சரித்திரத்தில் நந்தனுடைய சிதம்பர வாஞ்சையைப் பற்றி மற்றவர்கள் வந்து சொல்லக் கேட்டு, வேதியர் மகா கோபங்கொண்டு நதந்னை நோக்கிச் சொல்கிறார்: “சேரி முற்றுஞ் சிவபக்தி பண்ணும்படி வீட்டையாம் அடியிட்டையாம்” என்பது முதலான வார்த்தைகள் கூறிப் பயமுறுத்துகிறார். இதன் குறிப்பைத் தழுவி திருநெல்வேலி கலெக்டராகிய விஞ்ச், சிதம்பரம் பிள்ளைக்குக் கூறும் வரி இது

 

 

“நாட்டிலெங்கும் சுதந்திர வாஞ்சையை நாட்டினாய் -கனல்

மூட்டினாய்”

 

பயமுறுத்திக் கேட்கும் கண்ணிகள் எழுதப்பட்டிருந்தன. இதற்குப் பதில் கூறுவது போல் கலெக்டர் விஞ்சுக்கு ஸ்ரீ சிதம்பரம் பிள்ளை கூறும் மறுமொழியாக உள்ளது: “சொந்த நாட்டிற் பரர்க்கடிமை செய்தே துஞ்சிடோம் – இனி -அஞ்சிடோம்”  என்று கூறியிருந்தது.

மூன்றாவதாக  சுயராஜ்யம் கேட்கும் பாரதவாசிக்கு  ஆங்கிலேய உத்தியோகஸ்தன்  சொல்கிறான்.

 

 

நந்தனார் சரித்திரத்திலுள்ள , :மாடு தின்னும் புலையா – உனக்கு

மார்கழித் திருநாளா?” என்று வரும் வர்ண மெட்டில் உள்ளது.

‘தொண்டு செய்யுமடிமை  – உனக்கு

சுதந்திர நினைவோடா?” என்னும் பாடலையும் சேர்த்து இம்மூன்று பாடல்களுக்கும் எக்ஸிபிட் நம்பர் கொடுத்து கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது” என்றார்.

 

 

அச்சமயம் சீஃப் ஜஸ்டிஸ் அம்மூன்று பாடல்களையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து விளக்கம் கேட்டார். அம்மூன்று பாடல்களும் ஏற்கனவே ஆங்கிலத்தில் மொழி பெயர்த்திருப்பதைப் பப்ளிக் பிராசிகியூடர் நேப்பியர் கோர்ட்டில் எடுத்துக் காட்டினார். அதனை பப்ளிக் கோர்ட்டில் படிக்கும்படி உத்தரவிட இரண்டு பேர்கள் படித்தனர்.

 

ஒருவர் தமிழில் ஒரு வரியைப் படிக்க, இதற்குச் சரியான மொழிபெயர்ப்புடன், விளக்கத்தையும் மற்றொருவர்  ஆங்கிலத்தில் கூறினார்.

 

இம்மூன்று பாடல்களையும் படித்து முடிக்க  சுமார் ஒன்றரை மணி நேரமாயிற்று. கோர்ட்டு முடிவதற்கும் மாலை மணி 5 ஆவதற்கும் சரியாக இருந்தது. இத்துடன் கோர்ட்டு கலைந்தது. (ஆஷ் கொலை வழக்கு -அத்தியாயம் 7)

 

*

 

 

நீலகண்ட பிரம்மச்சாரி மாடசாமி பற்றிக் கூறும் தகவல்கள் சுவையானவை. மாடசாமி தப்பிப் போனவர் போனவரே. அவரைப் பற்றி இன்று வரை ஒரு தகவலும் யாருக்கும் தெரியாது!

 

நீலகண்ட பிரம்மச்சாரி தனது வாக்குமூலத்தில், :நான் மறுபையும் புதுவைக்குச் சென்று நான் எழுதிய கட்டுரைகளை கவி சுப்பிரமணிய பாரதியிடம் காட்டினேன். அவர் அவைகளை அப்படியே பிரசுரிக்க வேண்டாமென்று சொல்லி அதில் சிலவற்றைத் திருத்தித் தந்ததை புதுவையிலிருந்து வரும் பேப்பர்களுக்குக் கொடுத்து விட்டு மிகுதி கட்டுரைகளை புத்தகமாக வெளியிடச் சென்னையில் “கார்டியன்” பிரஸ்ஸில் கொடுத்தேன்’ என்கிறார் (ஆஷ் கொலை வழக்கு -அத்தியாயம் 9)

*

இப்படி ஆஷ் கொலை வழக்கு முழுவதும் சுவைபட நூலில் கூறப்பட்டிருக்கிறது.

 

அனைத்து ஆவணங்களையும் முறைப்படி ஆராய்ந்து அதை சுவை மிகுந்த சரித்திர நூலாக்கித் தருகிறார் ரகமி.

பாரதியார் பற்றிய பல விவரங்களை இதில் காண முடிகிறது.

ஆனால் கோர்ட் சாட்சியங்கள் என்பதால் இவற்றைப் பல்வேறு இதர பாரதி பற்றிய நூல்களுடன் ஒப்பிட்டு கொள்வன கொண்டு நீக்குவன நீக்கலாம்.

 

நூலை எழுதி பாரதி இயலுக்கு ஒரு அரிய சேவையை செய்துள்ள ரகமியை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

சுதந்திரப் போரில் தென்னக எழுச்சியையும் உச்சத்தையும் தொட்டுக் காட்டும் நூலாகவும் இது அமைகிறது.

 

பாரதி அன்பர்களுக்குச் சுவை பயக்கும் நூலாக இது இருப்பதால், உடனடியாக இதைத் தங்கள் பட்டியலில் இதை இணைக்க வேண்டுவது அவசியமான ஒன்று.

****